204

காரணமாக ''மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல்வேறு கவர்பொரு ணாட்டத்தான்'' (1) தலைமகட்குத் தோழிகூறியது.

இதன் பொருள்.

1கயத்திடத்து நீலமலர்போலும் மையுண்கண்ணினையுடையாய்! யான் கூறகின்றதனை நின் மனத்தான் ஆராய்ந்துபாராய், தனக்கு ஒப்பில்லாதான் வலியையுடைய யானைமுதலியவற்றின் அடியைத் தேடுவான்போலே கட்டுதன் மாட்சிமைப்பட்ட கண்ணியையுடையனாய் வில்லையுடையனாய்வரும்; அங்ஙனம் வந்து என்னைப் பார்த்துத் தான் உற்ற நோயை (2) மிகவுங் குறிப்பாலே யான் உணரக் காட்டுவதன்றிக் கூற்றாற் கூறானாய்ப் பலநாளும் மீண்டும் போம்; அதுகண்டு அவனேயன்றி அவனிடத்து மிகவும் உறவில்லாத யானும் அவன் என்செய்கின்றானென்னும் நினைவுமிக்குத் துயில்பெறேனாய் வருத்தத்திலே விழுந்து அழுந்துவேன்; அவ்விடத்து அவனாயிற் றன்குறையை நம்மெதிர்நின்று கூறுதலைச் செலுத்தான்; நமக்காயின் நின்வருத்தத்திற்கு யாமும் வருந்தினேமென்று கூறுதல் பெண்டன்மையன்று; இங்ஙனம் நின்ற இதனைச் சிறிது நெஞ்சால் ஆராயானாய் இறந்துபடுதலுமுண்டாமென்று கருதி, இடையிலே ஒருநாளிலே என்றோள்கள் மெலிந்து யானுற்ற வருத்தத்தாலே துணியாத தொன்றைத் துணிதலைச்செய்து ஒரு நாணமில்லாமையைச் செய்தேன்; அஃதியாதெனின், நறிய நுதலினையுடையாய், தினைப்புனங்களில் இனமாகிய கிளியை 2 விழாமல் ஓட்டி யாம் பாதுகாக்கும் புனத்துக்கு அயலிலிட்ட ஊசலை ஏறி ஆடநிற்க, ஒருநாள் வந்தவனை ஐயனே, சிறிதுபொழுது என்னை ஊசலாட்டுவாயாக வெனச்சொல்ல, அவனும் அதற்குடம்பட்டுத் தையால் , நீ கூறியது நன்றென்று ஊசலாட்டாநிற்க, அவன் மார்பின்கண்ணே கை நெகிழ்ந்து வீழ்ந்தேனாக அவன் கருதும்படி பொய்யுண்டாக வீழ்ந்தேன்; அதனை அவன் உண்மையாகக் 3கருதி, விரைய அப்பொழுதேஎன்னையெடுத்து அணைத்துக்கொண்டான்; அவ்விடத்தே என்மெய்வருத்தத்தை யான் அறிந்து மயக்கம் நீங்கி எழுந்திருப்பேனாயின், பின்னைப் பிறர் அறிவரென்று கருதி விரைய ஒண்குழாய், நீபோவென்று கூறிவிடுங் குணத்தாலே நம்மேலே ஒரு (3) கண்ணோட்டமுடையனாயிருந்தான்; 4அதனாலே அவன்மேலே மெய்ம்மறந்தேன்போலே கிடந்தேன்; இதுகாண்; எ - று.


1. தொல். கள. சூ. 23.

2. ''கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்களென்ன பயனுமில'' குறள். 1100.

3. (அ) ''கண்ணென்னாம் கண்ணோட்டமில்லாத கண்'' (ஆ) ''கண்ணிற்கணிகலங் கண்ணோட்டம்'' குறள். 573, 575. (இ) ''கண்ணுக்குப் புனைமணிப்பூன் கண்ணோட்ட மென்பதெல்லாங் கருணையன்றோ'' வில்லி. அருச்சுனன்றவ. 43.

(பிரதிபேதம்) 1கயத்திடத்தின், 2வீழாமல், 3கருதி அப்பொழுதே விரய, 4அதனாலேமெய்.