எ - து: தோழி; இவ்விளவேனில் குளிர்ந்த அருவியின் அருகேநின்ற நறிய முல்லையினது மகளிரெயிற்றையொக்கும்பூக்களை நும்முடைய கமழ்கின்ற கொத்தாகிய மயிருக்கு நிறையக் கொய்துகொண்மினென்று கூறாநிற்கும்; அது வேயுமன்றி உலகத்திற் பசந்தவருடைய வருத்தத்தையுடைய காமநோயையுந் தனக்குப் பகையென்று கருதிப் போக்கி விசேடித்து நம்முடைய இனிய உயிரை உண்டாக்கும் மருந்துமாய் நாம் துயரறுதற்குக்காரணமான வார்த்தையோடே நாம் முயங்கிய காதலருடைய தூதாய் வந்தது; ஆதலால் இனி அக்காலத்திற்கு விருந்தானவற்றை நாஞ்செய்வேமென ஆற்றுவித்தாள். பின்னிய காதலர் தூதென மாறுக. பசந்தவர்நோயைத்தணித்து என்பதனாலும் நம் மின்னுயிரைச்செய்யு மருந்தாகி என்பதனாலும் தலைவி காலங்கண்டுவருந்தினமை பெற்றாம்; இளவேனிற்கண்வருவலெனக் கூறிப்பிரிந்தவர் தப்பாரென்பதுபற்றி அவர் வார்த்தையோடே தூதாய் வந்ததென்றாள் கொள்ளுமென்னும் உம்மீறு பன்மையுணர்த்தி முன்னிலையாய்நிற்றல் "இர்ஈர் மின்" (1) என்பதனுட்கூறினாம். இதனால், தலைவிக்குப் புணர்வாகிய உவகை பிறந்தது. இது தனிச்சொல்லும் அடக்கியலுமின்றிச் சுரிதகம் பெற்று அடிநிமிர்ந் தோடிய கொச்சகக்கலிப்பா. (31) 33 | வீறுசான் ஞாலத்து வியலணி காணிய யாறுகண் விழித்தபோற் கயநந்திக் கவின்பெற மணிபுரை வயங்கலுட் டுப்பெறிந் தவைபோலப் பிணிவிடு முருக்கித ழணிகயத் துதிர்ந்துகத் | 5 | துணிகய நிழனோக்கித் துதைபுடன் வண்டார்ப்ப மணிபோல வரும்பூழ்த்து மரமெல்லா மலர்வேயக் காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது தாதவிழ் வேனிலோ வந்தன்று வாரார்நம் போதெழி லுண்கண் புலம்ப நீத்தவர்; | 10 | எரியுரு வுறழ விலவ மலரப் பொரியுரு வுறழப் புன்குபூ வுதிரப் புதுமலர்க் கோங்கம் பொன்னெனத் தாதூழ்ப்பத தமியார்ப் புறத்தெறிந் தெள்ளி முனியவந் தார்ப்பது போலும் பொழுதென் னணிநலம் போர்ப்பது போலும் பசப்பு; |
1. தொல். வினை. சூ. 27.
|