156

(8). (1) விரிந்தானா மலராயின் விளித்தாலுங் குயிலாயிற்
பிரிந்துள்ளா ரவராயிற் பேதுறூஉம் பொழுதாயி
(2) னரும்பட ரவலநோ யாற்றுவ ளென்னாது
வருந்தநோய் மிகுமாயின் வணங்கிறை யளியென்னோ

எ - து: மலர்கள் அலர்ந்து, அமையாவாயின், குயில்கள் தம் பெடையை அழைத்துக் கூவுமாயின், நந்தலைவர் நம்மைப் பிரிந்து நினையாராயின், இள வேனிற்காலம் மயக்கமுறுத்துமாயின், அரிய நினைவையுடைய அவலத்தைச் செய்யுங் காமநோய்க்கு இவள் ஆற்றுவளென்று கருதாது இவள் இறந்துபடுவ ளென்று நீ வருந்தும்படி எனக்குக்காமநோய்மிகுமாயின், வணங்கின இறையை யுடையாய்! நம்மாட்டு அவர்செய்யும் அளி என்னபயன் தரும்? எ-று.

12புதலவை மலராயிற் பொங்கரின வண்டாயி
னயலதை யலராயி னகன்றுள்ளா ரவராயின்
மதலையி னெஞ்சொடு மதனில ளென்னாது
நுதலூரும் பசப்பாயி னுணங்கிறை யளியென்னோ

எ - து: மலர்கள் 1சிறுதூற்றினவையாயின், வண்டுகள் சோலையிடத்தன வாயின், அலர் அயலாரிடத்ததாயின், நந்தலைவர் நம்மைப் பிரிந்து நினையா ராயின், பசப்பு ஒரு பற்றில்லாத நெஞ்சுடனே தானும் வலியளல்லளென்று கருதாதே நுதலிடத்தே பரக்குமாயின், அசைகின்ற இறையினையுடையாய்! நம்மாட்டு அவர்செய்யும் அளி என்னபயன் தரும்? எ - று.

16தோயின வறலாயிற் சுரும்பார்க்குஞ் சினையாயின்
மாவின தளிராயின் மறந்துள்ளா ரவராயிற்
பூவெழி லிழந்தகண் புலம்புகொண் டமையாது
(3) பாயனோய் மிகுமாயிற் பைந்தொடி யளியென்னோ

எ - து. அற்றுவருதலையுடைய நீர் மணலிடத்தே செறிந்தனவாயின், கொம்பிற் பூக்களிலே சுரும்பு ஆராவாரிக்குமாயின், தளிர் மாவிடத்தனவாயின், நந்தலைவர் நம்மை மறந்து நினையாராயின், பூவினது அழகை இழந்த கண்கள் உறக்கத்தைக்கொண்டு ஆற்றியிராமற் றனிமையால் உண்டான நோய் மிகுமாயின், பசிய தொடியினையுடையாய்! நம்மாட்டு அவர்செய்யும் அளி என்ன பயன் தரும்? எ - று.

ஒகாரங்கள் எதிர்மறையாதலிற் பயன் தராதென நின்றது.
இவை மூன்றும், தாழிசை.


1. " விரிந்தானா மலராயின் விளித்தாலுங் குயிலாயின்" என்பது பொழிப்பியைபுத் தொடைக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 96. நச்.

2. "அரும்பட ரவலம்" ஐங்குறு. 485.

3. பாயல் - உறக்கம்: கலி. 10 : 10, 24 : 7, 37 : 6, 87 : 16, 134 : 8, 145: 24.

(பிரதிபேதம்) 1 சிறுதூற்றிலவை.