144

போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா லிளவேனின் மேதக.

எ - து: நீர்பொருகின்ற கரையினிற்கும் (1) ஒரு பூங்குழையையுடைய (2) நம்பி மூத்தபிரானைப்போலப் பூங்கொத்துக்கள் பொருந்தின வெண்கடம்பும் பருதியாகிய அழகிய செல்வனைப்போல அரும்புகள் அலர்ந்த செருந்தியும் சுறவையுடைத்தாகிய கொடியினையுடைய காமனைப்போல மிஞிறுகள் ஆரவாரித் தற்கிடமாகிய காஞ்சியும் (3) அவன் தம்பி சாமனைப்போல நிறம் விளங்கிப் பூக்கள் நெருங்கின ஞாழலும் இடபத்தினையுடைய கொடியினையுடைய இறை வனைப்போலப் பூக்கள் காலத்தை எதிர்கொண்ட இலவமும், தமக்குக் குற்றந் தீர்ந்த தலைமையினையுடைய ஐவர்களுடைய நிறத்தின்றன்மைபோல, அக்கரை யிடத்துப் பூக்கள் விரிந்த பிற மரங்களோடே அழகுபெற, பிரிந்தார்க்கு நோவு பொருந்த, கூடியிருந்தார்க்குப் பெருமைபொருந்த இளவேனில் வந்துற்றது; எ-று.

மீனிலேறு. ஆனிலேறு. மிஞிறார்க்குங்காஞ்சி, இடத்துநிகழ் பொருளின் றொழில் இடத்தின்மேலே நின்றது. ஏனோன், ஏனையோனின் விகாரம். ஆங்கென்றது அக்கரையை, கரை மராமுஞ் செருந்தியுங் காஞ்சியும் ஞாழலும் இலவமும் பிறமரங்களோடே கவின்பெறவென் இடத்துநிகழ் பொருளின் றொழில் இடத்துமேல் ஏற்றலுமென்று.

இது தரவு.


1. நம்பி மூத்தபிரான் - (கண்ணன் தமையன்) பலராமன்: இவன் ஒரு குழையினனென்பது கலி. 105 'ஒரு குழையவன்' என்புழி விளக்கப் பெறும்.

2. பலராமன் 'நம்பிமூத்தபிரான்' என வழங்கப்படுதலை, புறம் 56. வலியொத்தீயே வாலியோனை என்னுமிடத்து வாலியோனென்றது நம்பி மூத்தபிரானை யென்றெழுதிய உரையும், பாகவதத்து, நம்பி மூத்தபிரான் கோகுலமடைந்த வத்தியாயம், நம்பி மூத்தபிரான் றீர்த்த யாத்திரைசெய்த வத்தியாயம் என்ற தலைப்புப்பெயரும் வலியுறுத்தும்.

3. காமனுக்குத் தம்பி ஒருவ னுண்டென்பதும் அவன் பெயர் சாமனென்பதும் (அ) "கவர்கணைச் சாமனார் தம்முன் செலவு காண்க" கலி. 94: 33 - 4 (ஆ) "காமனுஞ் சாமனுங்கலந்த காட்சிய", (இ) "காமன்றம்பியிற் காளை கிடந்தபின்" சீவக. 43, 1715. (ஈ) "அனங்கதேவா, வுய்யவு மாங்கொலோ வென்று சொல்லி யுன்னையு மும்பியை யுந்தொழுதேன்" நாச்சியார் திருமொழி. 1. 'தையொரு திங்கள்'. (உ) "காமனுஞ் சாமன்றானு, முனிவர்தம் வடிவங்கொண்ட முறைமையதாகுமென்ன" இராமா. அசுவமேத. 147. (ஊ) "காமனுஞ் சாமனு மெனக்கவி னமைந்தார்" பிரமோத்தா. சீமந்தனி. 4. (எ) "சாமனிலுங் காமனிலுந் தயங்குமெய்யோன்" வில்லி. அருச்சுனன் றீர்த்த. 27. என்பவற்றால் அறியலாகும். (ஏ) காமன் சாமனென்பவர்களின் வரலாறு பிரத்தியும்ந சரிதமென்னும் சைனநூலால் தெரிகின்றதென்பர், உ.வே. சாமிநாதையரவர்கள்; சீவக. 43. விசேடக்.

`