108

காரணமான நீர் நிறைந்த தடம் அந்நீர் நாடோறுங் குறையுமாறு போல நாடோறுங் குறையும் இளமையும் இவளுடன் நிலைபெறுமோ எ-று.

அளவு, அளவையெனப் பெயர்த் திரிசொல்லாய் நின்றது.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு, எ-து: அசை.

இது தனிச்சொல்.

18 

பொருந்தியான்றான்வேட்ட பொருள்வயி னினைந்தசொற்
(1)றிருந்தியயாக்கையுண் மருத்துவ னூட்டிய
மருந்துபோன்மருந்தாகி மனனுவப்பப்
பெரும்பெயர் மீளி பெயர்ந்தனன்செலவே

எ - து: பெரிய புகழையுடைய (2) மீளி, யான் தன்னைப் பொருந்தித் தான் விரும்பிய அறம்பொரு ளின்பமாகிய பொருளிடத்தே யான் அறன் உண்டாக நினைத்ததனாற் பிறந்த சொல், நல்வினையாற் றிருந்திய யாக்கையின் கண்ணே மருத்துவன் நுகர்வித்த மருந்துபோலே நல்ல மருந்தாகி, தன் மனமகிழுகையினாலே போக்கைத் தவிர்ந்தான்; 1எ - று.

இதனால், தலைவிக்குப் புணர்வென்னும் உவகையும் தலைவற்கு அசைவும் பிறந்தன.

இது முன்னர்ப் பாட்டிற் கூறியவாறே வந்து சுரிதகம் தரவோடொத்து வந்த ஒத்தாழிசைக்கலி. (16)

(18). (3)அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப்
(4) பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ

1. "பழவினையானுங் காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள்வரும்; அவற்றுள், பழ வினையான் வருவன அதன் கழிவின்கணல்லது தீராமையின் அவை யொழித்து ஏனைக் காரணங்களான் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின்றிறங் கூறுகின்றார்" என்னும் குறள். 95. ம் அதிகாரத்தி்ன் அவதாரிகை ஈண்டு அறிதற்பாலது. 

2. மீளியென்பது பருவங்குறித்தும் ஆண்பால்குறித்தும் வரும்பெயராய் நில்லாது ஈண்டுப்பாலைநிலத்தலைவ னென்னும் பொருட்டாய் நின்றது.

3. இச்செய்யுள் தொல். அகத். சூ, 44, நச: செய். சூ, 153. பே. நச். இவற்றில் மேற்கோள். இந்நூற் பக்கம் 110:2, 111:2 குறிப்புக்கள் பார்க்க. "அரும்பொரு ணசைஇப் பிரிந்துறை வவ்வி" என்பது (அகம், 191 : 11.) ஒப்புநோக்கற்பாலது.

4. இகரவீறு முன்னிலை யொருமை எதிர் மறை வினைமுற்றாய் வருதற்கு "பிரிந்துறை சூழாதி" என்பது மேற்கோள். தொல். வினை. சூ. 26. நச்; இ-வி. சூ. 238.

(பிரதிபேதம்) 1 என ஆற்றுவித்தாள்.