செல்வமென்றது துறவறத்திற் சேறற்குக் கற்ற கல்வியை. அது (1) வானப்பிரத்தம். "உண்டற் குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலு மரபே." (2) என்பதனான் உண்ணப்பட்டென்றார். இதனுட் சொல்வழுவன்றி, "செய்யாமரபிற் றொழிற்படுத் தடக்கலும்" (3) அமைத்தார். (14). | (4)பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ தீங்கதிர் மதியேய்க்குந் திருமுக மம்முகம் பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால் |
எ - து: இவளுடைய திருமுகம் இனிய கிரணங்களையுடைய திங்களை யொக்கும்; அந்த முகம் பாம்பு சேர்ந்த திங்களைப்போலப் பசப்புப் பரந்து கெட்டக்கால் மெய்ப்பொருளுணர்ந்தோரை நினைந்து நீசென்று அவரிடத்துக் கற்ற பொய்யற்ற நூற்கேள்விகளாலே முன்பு மனத்திற் றங்கிய மாசற்ற விரதங்களாலே மீட்டல்பொருந்துமோ; எ - று.
1. வானப்பிரத்தமென்பது : மனைவியுடனாவது தனித்தாவது தவஞ் செய்துகொண்டு காட்டில் இருத்தல். 2. (தொல். பொருளியல், சூ. 18. ‘உண்டற்குரிய’ இளம்; சூ. 19 நச்.) இதனுரையில் உண்டற் றொழிலுக் குரியவல்லாத பொருளை உண்டனவாகக்கூறலு மரபென்பதற்கு, "பசலையா லுணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்" என்பது மேற்கோள். 3. தொல். பொருளி. சூ. 2. 4. "பொய்யற்ற கேள்வியாற்.....................லொல்வதோ" என்பதனை (அ) அந்தணர் முதலிய மூவரும் இல்லறம் நிகழ்த்துகின்ற காலத்தே மேல்வரும் துறவற நிகழ்த்துவதற்காக அவ்வறத்தைக் கூறு நூல்களை யுங்கற்று அதன்பின்னர்த் தத்துவங்களை உணர்ந்து மெய்யுணர வேண்டுதலின் அவர்க்கு ஓதற்பிரிவு சிறந்ததென்று கூறி அதற்கும் (தொல். அகத். சூ. 26). (ஆ) ஓதற்குப் பிரிவலெனக் கேட்ட தோழி கூறியதற்கும் (தொல். அகத். சூ. 44) (இ) "அந்தரத்........வழிகெட வொழுகுதற்கும் (இது முன்புபோலக் குற்றஞ்சான்ற பொருளை வழுவமைத்துக்கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம். மையற்ற படிவமெனத் தலைவன் கூறியதனைத் தோழி கூறியவாறு காண்க) (தொல். கற்பியல், சூ. 5) மேற்கோள் காட்டினர்; நச். (ஈ) “பொய்யில் கேள்விப் புலமையினோர்" (உ) "உண்ட பேதைமை மயக்கற வேறுபட் டுருவங், கொண்டு மெய்யுணர் பவன்கழல் கூடிய தொப்பப், பண்டை வண்ணமாய் நின்றனள்" கம்பர். பாயிரம். 6 அகலிகை. 71.
|