91

எ - து: இனியதுயிலையுடைய அணையையொத்ததும் அழகியமூங்கிலை யொத்த பெருமையை யுடையதுமான மெல்லிய தோளினையும் எழுச்சியையுடைய நீலத்தினுடைய உயர்ந்த அழகினையுடைய இரண்டாகிய மலர் போலும் அகன்ற மையுண் கண்ணினையும் மணத்தையுடைய மௌவன் முகையை யொத்த வண்டுகள் விரும்பின நேரிதாகிய ஒழுங்கினையுடைய வெள்ளிய பல்லினையும் மணம் நாறுகின்ற நறியதாகிய நுதலினையும் மழை விரும்பின கரிதாகிய மயிரினையும் ஆகத்திடத்தே பெருத்த முலையினையும் அகன்ற வல்குலினையும் சிலவாகிய நிரைத்த வாலிய வளையினையுமுடைய செய்யோளேயென்று பலபலவாகிய புனைந்துரைகளாற் பண்டையிற்காட்டிற் கொண்டாடி இங்ஙனம் இனிய மொழிகளைக்கூறி என்னை வருத்தத்தே செலுத்துகின்ற தன்மை எம்மிடத்து வெறுப்பாகுதலை இப்பொழுதறிந்தேன் ; எ - று.

மருள், உவமவுருபு.

"நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற், புகழ்தகை வரையார் கற்பினுள்ளே," (1) என்பதனால், போக்கின்கண்தலைவன் தலைவியைப் புகழ்ந்து கூறினான்.

இது தரவு.

(10). (2)  பொருளல்லாற் பொருளுமுண்டோவென யாழநின்
(3) மருளிகொண்மடநோக்க மயக்கப்பட் டயர்த்தாயோ

எ - து: மயக்கங்கொண்ட அறியாமையையுடைய நின்னறிவு பொரு ளல்லது நன்குமதிக்கும் பொருளும் வேறுண்டோவென்று நின்னை மயக்கப் பட்டு அன்பை மறந்தாயோ; எ - று.


1. தொல். பொருளியல். சூ. 34.

2. (அ) "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும், பொருளல்ல தில்லை பொருள்" குறள். 751. (ஆ) "வென்றி யாக்கலுமேதக வாக்கலுங், குன்றினார்களைக் குன்றென வாக்கலு, மன்றி யுங்கல்வி யோடழ காக்கலும், பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே" சீவக, 1922. (இ) "அளப்பரும் விஞ்சையே யன்றி மேன்மையு, முளப்படு தன்மையு முயர்ந்த சீர்த்தியுங், கொளப்படு கொற்றமும் பிறவுங் கூட்டலால், வளத்தினிற் சிறந்தது மற்றொன் றில்லையே" கந்த............... (ஈ) "பூரியர் தமைவேந் தாக்கும் புவிபுரப் பிக்குந் துய்க்குஞ், சீரிய வுண்டி சேர்க்குந் தேவர்த முலகம் போக்குங், காரிய மனைத்துங் கூட்டுங் கருதலர் தம்மை வாட்டுங், கூரிய திதன்மே லில்லை கொழும் பொனீர் கொண்மி னென்றார்," உத்தர, அசுவமேத, 163, என்பவைகளும் (உ) இந்நூல், பக், 53: 1, குறிப்பும். (ஊ) இந்நூல் 72: 1, குறிப்பும் இங்கே அறிதற்பாலன.

3. "மருளி நெஞ்ச மயங்கலுங் காண்பல்" கலி, 122: 15, "மருளி யாயம்" "மருளி மாவும் வெருளிப் பிணையும்" பெருங். (1) 34: 170; (2) 15: 31,