67

பொழுது நீட்டிப்பினும் அத்துணை நீக்கத்துக்கு அஞ்சிக் கலங்குகின்றவள் யாம் இவளைப் பிரிகின்றேமென்னும் வெறுப்பின்றி முயன்று தேடும் பொருள் காரணமாக நீ போவையென்று யான் கூறக்கேட்பின் நீரையுடையனவாகிய கண்கள் மிகவும் உறக்கத்தைப் பொருந்தாவாய் நினைவு மிகுவாளோ? இறந்துபடுவாளே; எ - று.

(16). பொருணோக்கிப் பிரிந்துநீ போகுதி யெனக்கேட்பின்
மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர்கிற் பாண்மன்னோ
விருணோக்க மிடையின்றி யீரத்தி னியன்றநின்
னருணோக்க மழியினு மவலங்கொண் டழிபவள்

எ - து; மனத்திற்கு இருளைத் தருகின்ற பார்வை இடையின்றி 1அரு ளிடத்துச் சென்றபார்வை நீங்கினும் வருத்தங்கொண்டு நெஞ்சழிபவள் நீ பொருளை நன்றென்று கருதித் தன்னைப்பிரிந்து அவ்விடத்தே போவையென்று யான் கூறக் கேட்பின், கண்டார் மருளும் அழகுகெட்டு மிகவும் மயக்கம் மிகுவாளோ? இறந்துபடுவாளே; எ - று.

இவை மூன்றும், தாழிசை.

எனவாங்கு, அசை.

இது தனிச் சொல்.

(21).வினைவெஃகி (1) நீசெலின் விடுமிவ ளுயிரெனப்
புனையிழாய் நின்னிலை யான்கூறப் பையென
நிலவுவே னெடுந்தகை நீளிடைச்
செலவொழிந் தனனாற் செறிகநின் வளையே

எ - து; புனைந்த பூணினையுடையாய்! இவளுடைய உயிர் நீ பொருளைத் தேடுதலை விரும்பிப் போகின், தானும்போமென்று நின் பிரிவாற்றாமையை யான் சொல்ல, புகழ்ச்சி நிலைபெறும் வேலினையுடைய நெடிய தகையினையுடையான் நீண்ட வழியிடத்துப் போக்கைப் பையெனத் தவிர்ந்தனன்; இனி நின் 2வளைகள் கழலாதிருப்பனவாக; எ - று.

ஆல், அசை.

இதனால், தலைவிக்குப் புணர்வென்னும் உவகையும் தலைவற்கு இழிவும் தோழிக்கு அச்சமும் பிறந்தன.

இது சுரிதகம்.

இஃது ஏழடித்தரவும் நான்கடித் தாழிசையும் அசைநிலையான அடை நிலைக்கிளவியும் நான்கடிச் சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலி. (9)


1. "எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வ, தந்நாள் கொண் டிறக்குமிவ ளரும்பெறலுயிரே” கலி. 5: 18 - 9. "நின்னின், றிமைப்புவரை வாழாண் மடவோள்" கலி. 21 : 12 - 3.

(பிரதிபேதம்) 1 அவளிடத்துச் சென்ற, 2 வளை கழலாதிருப்பன.