எ - து: ஐயனே, நீ 1செய்கின்ற காரியத்திடத்தே செல்லுதலை மனத்தான் நிகழ்த்துகையினாலே நின்னுடைய கையாலே எழுதி வழித்த வலிதாகிய வில்லினாணைத் தடவாநின்றாய்; எ - று. யாழ, அசை. உளர்தியென்னும் முன்னிலைவினை, விகாரத்தால் நீண்டது. இவட்கே, (1)செய்வுறு (2) 2மண்டில (3)மையாப் பதுபோன் (4) மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே எ - து: இக்காலத்து இவளுக்கு மறுவறச்செய்தலுறுகின்றதொரு மதியிடத்தே மேகம் பரக்கின்ற தன்மைபோல மறுவில்லாத ஒளியையுடைய முகத்தே பசப்புப் பரவாநிற்கும்; எ - று. செய்வுறு மண்டிலம், இல்பொரு ளுவமை.
1. (அ) "செய்வுறு நன்கலம்" (ஆ) "செய்வுறு பாவைக்கு" புறம். 6, 243: (இ) "செய்வுறு திவவின் முருகு. 140. 2. "பனி கொண் மா மதி போற் பசப் பூரயான், றனிய ளாவது தக்கதுவோ" சீவக. 1510. என வருதலும் ஈண்டுக் கருதத்தக்கது. 3. (அ) மையாத்த லென்பதற்கு மயங்கல் என்று (குறள். 1112.) பரிமேலழகர் பொருள் செய்திருக்கின்றனர். இச்சொல்லுக்கு மேகம் பரத்தலென்று இங்கே பொருள் செய்திருத்தலை நோக்கின் இது மை பாப்பது, மை பரப்பது என இருக்கவேண்டுமென்று தோற்றுகிறது. அவ்வாறே ஒரு பிரதியில் பேதமும் உள்ளது. ஆனாலும் (ஆ) "காண்மை யாத்த வென்முகத்தை" (இ) "திருவுருத் தேசுநோக்கிச் செங்கதி ரொளிமையாக்கு, மொருபுடை" (ஈ) "மீனொளி மையாப்ப" (உ) "பரிதிமுன்னர் வெண்கதிரென மையாக்கும், பேறிருங் கிரணக்கற்றை" (ஊ) "வெய்யவற் கொளிமையாந்து வேறுபட் டிருந்தசெந்தீ" என்னுமிடங்களிலும் மற்றும் பல விடங்களிலும் கச்சியப்ப முனிவர் இச்சொல்லை மழுங்குதலென்ற பொருளிற் பிரயோகித் திருத்தலாலும் இங்கு அப்பொருள்கொள்ளினும் ஒருவாறு பொருந்துமாதலாலும் மையாத்தலென்றே கொள்ளப்பட்டது. 4. (அ) வாண்முகம் பசப்பூர்தல் கலி. 100: 18. (ஆ) பசப்பு நிற வேறுபாட்டை யுணர்த்துதற்கு, ‘மையில் வாண்முகம் பசப் பூரும்மே’ என்பதும். (தொல். உரி. சூ. 11. சே. சூ. 10. நச். இ - வி. சூ. 290.) (இ) இல்லென்கிளவி இன்மை செப்பு மிடத்து ஐகார ஆகாரங்களைப் பெறாது இயற்கையாய் வருதற்கு ‘மையில் வாண்முகம்’ என்பதும் தொல். புள்ளி. சூ. 77. நச். (ஈ) வாளென்பது ஒளியையுணர்த்துதற்கு, 'வாண்முகம்' என்பதும் தொல். உரி. சூ. 71. சே. மேற்கோள். (பிரதிபேதம்) 1 செல்கின்ற, 2 மண்டலமைபாப்பதுபோல்.
|