(17). | (1) | நுண்ணெழின்மாமைச் சுணங்கணி யாகந்தங் | | (2) | கண்ணொடுதொடுத்தென நோக்கியு மமையாரென் | | (3) | னொண்ணுத னீவுவர்காதலர் 1மற்றவ ரெண்ணுவ தெவன்கொலறியே னென்னும |
எ - து: காதலர், கூரிய அழகினையும் மாமை நிறத்தினையுமுடைய சணங்குபரந்த மார்பம் தங்கண்ணோடு எதிராக வைத்துக் கட்டினதென்று யாங் கூறும்படி இமையாமற் பார்த்தும் வேட்கை தணியாராய் என்னுடைய ஒள்ளிய நுதலைப் புணர்ச்சியால் அரும்பிய வியரைத் துடைப்பர். பின்னை, அவர் சூழ்கின்ற காரியம் எத்தன்மையதுகொல்? அதனை யான் அறியேனென்று கூறாநிற்கும்; எ - று. தொடுத்தது, தொடுத்தென விகாரமாயிற்று. இவை மூன்றும், தாழிசை.
1. ‘‘நுண்ணெழின்......எண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்’’ என்பது, (அ) அந்தமில்லாதசிறப்பினாகிய (அந்தமில் சிறப்பென்பது மேன்மேலுஞ் சிறப்புச்செய்தல்) இன்பத்திடத்து உள்ளுறைப் பொருண்மை வருவதற்கும் (தொல். பொருளியல், சூ. 47 ‘அந்தமில்’ இள.) (ஆ) தலைவன்க ணிகழ்ந்த மிக்கதலையளி வஞ்சமென்று தலைவி உட்கொண்டு பிரியுங்கொல்லென நினைத்தற்கு நிமித்தமானதற்கும் (தொல். அகத். சூ. 43. நச்.) (இ) தோழிக்குக் கூறியது கொண்டு கூறியதற்கும் (தொல். கற். சூ. 6. நச்.) மேற்கோள். (ஈ) தலைவன் தலைவியைப் பாராட்டுதலாகிய கிழவி பாராட்டென்பது, ‘யாம் செய்யக்கருதிய பொருட்கு இவள் இடையூறாவள்கொல்’ என்று தலைவன் அஞ்சியதனையும் அவன் அதற்குப் பிரிகின்றதனையும், தலைவிக்கு, அறிவிக்கு மென்பதற்கு இப்பகுதியை மேற்கோள் காட்டி, தலைவன் கழிபெருநல்கலால் தலைவி அவற்றை யுணர்ந்தாளென்றுகூறி அன்பாலன்றிப் பொருள்காரணத்தால் பாராட்டினமையானும் (தலைவற்கும்) அதனைச் செவ்வனங் கொள்ளாது பிறழக் கோடலானும் (தலைவிக்கும்) இருவர்க்கும் வழுவாமென்று அமைத்தாரென்பர், நச். தொல். பொருளியல், சூ. 38. 2. (அ) ‘‘கண்ணொடு தொடுத்தென நோக்கி’’ காசி. தேவி தக்கன் வேள்விச் சாலையடைந்த. 12. கூர்ம. பார்வதி தோற்றமுரைத்த. 4. (ஆ) ‘‘கண்ணொடு பிணித்தா லென்ன வியப்புறக் களித்து நோக்கும் ........வேலான்’’ நைடதம். நளன்றூதுப். 88. 3. தலைவி தலைவன் குறிப்புக்கண்டு ஐயப்படுதலாகிய ஐயஞ்செய்தலென்னு மெய்ப்பாட்டிற்கு, ‘‘ஒண்ணுத னீவுவர் காதலர் மற்றவ, ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்’’ என்பது மேற்கோள். தொல். மெய்ப்பா. சூ. 22. ‘இன்பத்தை’ இளம். (பிரதிபேதம்) 1 மற்றவர் கண்ணுவதெவன்கொலோ.
|