(1) மேனின்று மெய்கூறுங் கேளிர்போ னீசெல்லுங் (2) கானந் தகைப்ப செலவு. எ - து: யாம் நினக்குக் காரியஞ் சொல்லவும், எம்முடைய கூற்றுக்களை நெஞ்சாற் கொள்ளாயாயினாய். இனி இவளைப்போலே, (3) கண்டார்க்கு அருள் வருதற்குக் காரணமானவையிற்றை மேன்மேலே காட்டி, உனக்கு (4) மேலாய்நின்று உண்மைகூறிக்கழறுங் கேளிரைப்போல நின்போக்கைத் தடுப்பன நீ செல்லுங் காடு; எ - று. இது சுரிதகம். எம கொள்ளாயாயினையெனத் தலைவற்கு நிகழ்ந்த விரைவு கண்டு தோழிக்கு அச்சம் பிறந்தது. இதனால், தலைவற்கு இழிபு பிறந்தது. (5) தகைப்ப என்றது 1அன்சாரியை பெறாது நின்ற அகரவீற்றுப் பல வறிசொல்.
1. தாய்போற்கழறி யென்பதற்கு ‘மேல்நின்று மெய்கூறுங்கேளிர்’ ஆகிய தாயரைப்போலக் கழறியென்று இங்குள்ள சொற்களை முதற்பெய்து பொருளெழுதி யிருத்தல் ஈண்டு அறியத்தக்கது. தொல். கற். சூ. 32. நச். 2. ‘‘வேறு பல்லருஞ்சுரம்’’ ஐங். 385. ‘‘கடுமையகாடு’’ கலி. 6. 3. அருளென்பதற்கு ‘ஒன்றின் துயர்கண்டாற் காரணமின்றித் தோன்றும் இரக்கம்’ என்று புறநானூற்றுரை யாசிரியரும், ‘வருத்தமுற்றார் மேற்செல்வது’ என்று பரிமேலழகரும் எழுதியிருக்கும் விளக்கம் ஈண்டு அறிதற்பாலன. 4. கழறுதல் கேளிர்மரபு, (அ) ‘‘இடிக்குங் கேளிர்’’ குறுந். 58. (ஆ) ‘‘நட்டல் மிகுதிக்கண,் மேற்சென் றிடித்தற் பொருட்டு” (இ) ‘‘இடிப்பாரையில்லாத வேமராமன்னன், .....கெடும் குறள். 784, 448. (ஈ) ‘‘களிக்கின்றோயை, அடுக்குமீ தடாதென் றான்ற வேதுவோடறிவு காட்டி, இடிக்குநரில்லை’’ ........ என்பவையும் (உ) ‘‘நட்டாரைக் கழறுவார்க்கு, தாம் செம்மையுடைய ராதல் வேண்டுமென்னும்’’ பரிமேலழகர் கருத்தும். இங்கு அறிதற்பாலன. 5. (அ) ‘கானந்தகைப்ப செலவு’’ என்பது அன்பெறாது எதிர்காலத்துப் பகர மூர்ந்துநின்ற அகரவீற்று வினைச்சொல்லுக்கு மேற்கோள்; தொல். கிளவி. சூ. 9. சே. ந. (ஆ) இதனை, பகர விறுதி அஃறிணைக் கண்ணும் வந்ததென்று சிலர் எடுத்துக் காட்டியது தவறென்று மறுத்து, தாழிசை மூன்றனுள்ளும் தகைப்பன என ஓதியவண்ணம் சுரிதகத்துக் கண்ணும் ஓதின் வண்ணங் கெடுமென்று அதனைக் குறைக்கும் வழிக் குறைத்துத் தகைப்பவென ஓதினாரென்பர் தெய்; தொல். கிளவி. சூ. 7. (இ) ‘‘பன்மா பரந்த புலம்’’ என்புழி, ‘பரந்தன வென்பது பரந்தவென நின்றது’ பதிற். 84: 9. என, அதன் உரைகாரர் எழுதியிருப்பதும் இங்கே நோக்கத்தக்கது. (பிரதிபேதம்) 1. அன்பெருது
|