(1) யாழ்வரைத் தங்கி யாங்குத் தாழ்புநின் றொல்கவின் றொலைத லஞ்சியென் சொல்வரைத் தங்கினர் காத லோரே எ - து: என்று யான் நினக்குக் கூறும்படியாக, இவள் பொலிவழிவினைத் தன்னிடத்தே கொண்டு வருந்தவும், நீ பொருள் தேடப்பிரிகின்றது உனக்கு அன்பு அல்லவென்று யான் சொல்ல, அச்சொல்வரைத் தங்காத காதலோர், பின்னர் நினது இயற்கைநலந் தொலைதலைக் கூற, அச்சொற்கு அஞ்சி, பரிக்கோலாற் குத்தவுந் தன்னெறியில் நில்லாத செலவுகடியகளிற் றொருத்தல் மெல்லிய யாழோசையின் எல்லையிலே தங்கினாற்போல, அன்புற்றுத் தாழ்ந்து, குற்றேவன் மகளாகிய என் கூற்றின் எல்லையிலே தங்கிப் போகாதொழிந்தார்காண்; எ - று. தோழி தான் செலவழுங்குவித்தமை கூறலின், கூறவென்பதனைத் தொலைதலோடுங் கூட்டுக. தங்கினர் என்பதனால் தங்காமையும் வந்தது.
1. யானை யாழோசையி னெல்லையிலே தங்குமென்பதனை (அ) ‘‘அணியிழை மகளிரும் யானையும் வணக்கு, மணியொலி வீணை’’ (1) 35: 100-101. (ஆ) ‘‘வார்கவுள்யானை வணக்குதற்கியைந்த, வீணைவிச்சையொடு விழுக்குடிப் பிறவரிது’’ (3) 6. 114-5. என்னும் பெருங்கதையும் அந்நூல் (4) 3. யாழ்பெற்றதில் (இ) அருஞ்சுகன் செய்தியிலுள்ள வீணைவரலாற்றைக்கூறும் 66-107. ஆம் அடிகளும் (ஈ) ‘‘மகரயாழ் வல்லமைந்த னொருவனைக் கண்டமத்தப், புகர்முகக் களிற்றின் மன்னன் முனிவனை வணங்கி’’ மேரு. 8. வச்சிராயுதனுத்தரம் புக்க. 31. (உ) ‘‘ஐம்புலவேழத்தின் வெந்தொழி லவியக், கருணை வீணை காமுறத் தழீஇ’’ ஞானாமிர்தம். 4: (ஊ) ‘‘ஆடகத்தியன் மேனிலை மிசையணங் கனையார், மாடகத்தனி யாழிசைக் குவந்துறும் வான, நாடகத்து வெண்களிற்றினை நளினமென் மலர்ப்பூம், பாடகத்தடி நடையினாற் பருவர லுறுப்பார்’’ காஞ்சிப். திருநகரப். 80. (எ) ‘‘நிலவுவெண்கரி வணக்கிய நிகரில் யாழ்தழுவி, மலரு மின்னிசை யெழுப்புவர் மேனிலமகளிர்’’ தணிகை. திருநகரப். 125. என்பவைகளும். (ஏ) ‘‘இசையினி லிவட்குத்தோற்றாம் யானையால் வேறுமென்னி, னிசைவதொன்றன்று கண்டீர்’’ சீவக. 748 என்பதன் விசேடவுரையில் ‘யானைநாதத்திற் றோற்றுதலின் அதற்கு வணங்குத லியல்பு’ என்று நச். எழுதியிருத்தலும் வற்புறுத்தும். (ஐ) யாழென்பது வீணைக்கும், வேறோரிசைக்கருவிக்கும் பெயராம்.
|