17

11. (1) தொலைவாகி யிரந்தோர்க்கொன் றீயாமை 1யிழிவென
மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ
நிலைஇய கற்பினா ணீநீப்பின் வாழாதாண்
முலையாகம் பிரியாமை பொருளாயி னல்லதை

எ - து: முன்பு உண்டானபொருள்களெல்லாம் கொடுத்துத்தொலைந்து, பின்பு இல்லையாய், வந்து இரந்தவர்களுக்குச் சிறிதுங் கொடாதிருத்தல் இழிவாமென்று கூறி, மலையைக் கடந்துபோய்த் தேடுதலைக் கருதின (2) பொருள் நன்கு மதிக்கும் பொருளாயினும், யான் வருந்துணையும் ஆற்றியிருவென்று ஆற்றுவித்த கூற்றிலே நிலைபெற்ற கற்பனையை முன்பு உடையவள் நீ நீப்பின் இளமைச்செவ்வி முதிர்வினாலே உயிர் வாழாதாளாயினாள்; இனி அவளுடைய, நிரம்பிய முயக்கத்தை விரும்புகின்ற முலையினையுடைய மார்பைப் பிரியாதிருத்தல் நின் மனத்திற்குப் பொருளாயிருக்குமாயின், அதுவே பொருளாவதல்லது, பிரிகின்றது பொருளாகுமோ? எ - று.

தொலைவு, முன்பு உண்டாய்ப் பின்பு 2இல்லையாதலாம்.

15. (3) இல்லென விரந்தோர்க்கொன் றீயாமை யிழிவெனக்
கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ

1. ‘ஈதா கொடுவென’ என்னுஞ் சூத்திரவுரையில் இவ்வுரையாசிரியர், ‘‘இவைமூன்றும் (ஈ, தா, கொடு என்பவை) இல்லென இரப்போர்க்கும் இடனின்றி இரப்போர்க்கும் தொலைவாகி இரப்போர்க்கும் உரியவென்று உணர்க’’ என இத்தாழிசை முதலடிகளிலுள்ள சொற்களை அமைத்திருத்தல் ஈண்டு அறிதற்பாலது. தொல். எச்ச. சூ. 48.

2. கலி. 14. இன். 10. ஆம் அடிக்குறிப்பில் ஈண்டைக்கு இயைவன ஒப்புநோக்குக.

3. (அ) ‘‘இல்லெனமறுக்குஞ் சிறுமையுமிலனே’’ (ஆ) ‘‘ஈயெனவிரத்தலிழிந்தன் றதனெதி, ரீயேனென்ற லதனினு மிழிந்தன்று’’ புறம். 180 : 204. (இ) ‘‘அன்னவை பிறவு, மடம்பட வந்த தோழிக் கண்ணும்’’ என்புழி, கற்பின்கட் டோழிகூற்று நிகழ்ந்ததற்கு ‘‘இல்லென.....பொருளாகுமோ’’ என்பதனை மேற்கோள் காட்டி, ‘‘தோழி இந்நிகரன கூறிய வழித் தலைவன்கூற்று நிகழும்; இவ்வழிக் கூறுங் கூற்றுக் காமமாகத் தோன்றாது பொருளாகத் தோன்றும்; காமத்திற்கு மாறாகக் கூறவேண்டுதலின்’’ என்பர். இளம். தொல். கற். சூ. 5. (ஈ) தலைவன், தலைவிமுன்னர்த் தன்னைப் புகழுங்கூற்றிற்கு ‘‘இல்லென விரந்தோர்க் கொன்றீயாமை யிழிவு’’ என்பதை மேற்கோள் காட்டி, ‘‘இவ்வாறு கூறவே, அவன் ‘யான் செய்யேன்’ எனத் தன்னைப் புகழ்ந்த வாறாம்’’ என விளக்குவர், இளம். இதனைப் பின்பற்றுவர், நச். தொல். கற். சூ. 40. (உ) ‘‘ஈதலாவது இல்லென விரந்தோர்க்குக் கொடுத்தல்” தொல். புறத். சூ. 16. இளம்.

(பிரதிபேதம்) 1. இளிவு, (இச்செய்யுளின் மூலமுரை முழுவதினும்), 2. இல்லையாதல்.