15

முடன்றக்கான் (1) முகம்போலவொண்கதிர் தெறுதலிற்

(2)

சீறருங் கணிச்சியோன் (3)சினவலி னவ்வெயி

லேறுபெற்றுதிர் வனபோல்வரைபிளந் தியங்குந

ராறுகெட விலங்கிய வழலவிராரிடை

(4) 

மறப்பருங் 1காதலினிவளீண் டொழிய

(5)

விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் 2றைஇய

எ - து: இறைவன் உலகுகளைப் படைக்கக் கருதிய இடத்தே, அப்படைத்தற் றொழிலைச்செய்தற்குரியனாய்த் தோன்றிய முதியவனாகிய அயன் முதலாகத் தேவர் வந்து 3தம்மெல்லைகொள்ளாத அவுணருடைய வலியைக் 4கெடுத்தற்கு இரக்கையினாலே, (6) கூற்றினைப்போலச் சினந்து வஞ்சனையைச் செய்கின்ற அவுணரை, வஞ்சியாது எதிர்நின்று அடுகின்ற வலியுடனே, மூன்று கண்ணையுடைய இறைவன் மூன்றெயிலையுங் கோபிக்க, அவன்முகம் தெறுமாறுபோல, ஒள்ளியஞாயிறு சுடுகையினாலே, வரைபிளந்து பிறராற் சீறுதற்


1. ‘‘குழவிஞாயிற் றெழிலிகந்தெள்ளுந், திருமுகமருங்கிற் செருமீக்கூரி’’ பெருங். (1) 55: 4-5. எனவும், ‘‘ஊழியிற்சினவும், பருதிமண்டிலமெனப் பொலி முகத்தினன்’’ கம்ப. வருணனைவழி. 15. எனவும் சினக் குறிப்பையுடைய உதயனன் முகத்திற்கும் இராமன்முகத்திற்கும் ஞாயிற்றை உவமைகூறியிருத்தல் இங்கே அறிதற்பாலது.

2. ‘‘சீறருங்.......ஆரிடை’’ என்பது, குறிஞ்சி முறைமை திரிந்து பாலையாதலுக்கு மேற்கோள். சிலப். (11) 60-67.

3. கோபித்தலுக்குச் சினத்தலென்னும் பெயரன்றியும் சினவலென்றும் பெயருண்மையை, ‘‘சினவ லோம்புமின்’’ எனவருதலாலுமறிக.

4. ‘‘மறப்பருங்காதலிவ ளீண்டொழிய, விறப்பத்துணிந்தனிர் கேண்மின் மற்றைஇய’’ என்பது முன்னிலை சுட்டியவொருமைக்கிளவி ஆற்றுப்படையல்லாதவழியும் பலரில்வழியும் போற்றாமற் பன்மையொடு கூறப்படுதற்கு மேற்கோள். தொல். எச்ச. சூ. 63. ‘முன்னிலை’ தெய்வ.

5. ‘‘இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைஇய’’ என்பது பால்வழு வமைதிக்கு மேற்கோள். தொல். எச்ச. சூ. 65 நச்; நேமி. சொல். 70. இ - வி சூ. 300.

6. (அ) ‘‘கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற்றலையே’’ (ஆ) ‘‘காலனனைய கடுஞ்சின முன்ப’’ பதிற். 14; 39. (இ) ‘‘கூற்றொத்தீயே மாற்றருஞ் சீற்றம்’’ புறம். 56. (ஈ) ‘‘காலன் கிளர்ந்தாலும் போல்வார்’’ பு-வெ. கரந்தை. 2.
(உ) ‘‘மாற்றருஞ் சீற்றத்திற் கூற்றுவனே‘‘ கனாநூல். 15.

(பிரதிபேதம்) 1. காதலிவள், 2. ஐய, 3. இரக்கையினாலே தம்மேவலை, 4. கெடுத்தற்குச் சினத்துக் கூற்றனைப்போலும் வஞ்சனையை.