நீளிடைப் படுதலு மொல்லும் யாழநின் (1) வாளிடைப் படுத்த வயங்கீ ரோதி நாளணி சிதைத்தலு முண்டென நயவந்து கேள்வி யந்தணர் கடவும் வேள்வி யாவியி னுயிர்க்குமென் னெஞ்சே எ - து : காதலர் நம்மிடத்துக் காதலின்று நீங்கினரோ? அன்றிக் காதலுண்டாயிருக்க ஒரு தூதொடு கூறி வரவிடும் வார்த்தையைச் சிறிது மறந்தாரோ? அவர் நம்மிடத்து நிகழ்த்துங் காதலையும் நாம் இறந்துபடாமலிருந்து காண்பேமோ? நம்மை இங்ஙனந் துறந்தவர் அவ்விடங்களிலே அவ்விடங்களிலே இருந்தே விடுவரோ? இவற்றுண் முடியுங் காரியம் எதுதானென்று தலைவிகூற, அதுகேட்டதோழி, (2) புணர்ந்தவர் சேயிடத்தே பிரிந்திருத்தலும் உலகத்துக்குப் பொருந்தும். அவர் வருவதற்கு முன்பே கத்திரிகை இடையிட்ட விளங்குகின்ற நெய்த்த ஓதியினையுடையாய்! என் நெஞ்சு அவர் குறித்தநாள் வந்து நின்னழகைக் கெடுத்தலுமுண்டென்று கருதி நூற்கேள்வியினையுடைய அந்தணர் விருப்பம் வந்து செலுத்தும் யாகத்திடத்துப் புகைபோலே நெட்டுயிர்ப்புக் கொள்ளாநிற்கும்; இதுகாண் யானுறுகின்ற வருத்தமெனத் தானும் ஆற்றாளாய்க்கூறி ஆற்றுவித்தாள்; எ - று. இது தோழி கூற்றிற் (3) ''பிறவும்'' என்பதனாற் கொள்க. இதனால், தோழிக்கும் தலைவிக்கும் சூழ்ச்சி தோன்றிற்று. இது தரவின்கண்ணே 'செவ்வியும்வந்தன்று' என வழியசை புணர்ந்த சொற்சீரடியும் (4) 'பாஅய்ப்பாஅய்ப் பசந்தன்று நுதல், சாஅய்ச்சாஅய் நெகிழ்ந்தன தோள்' என முட்டடியின்றிக் குறைவுசீர்த்தாகிய சொற்சீரடியும் வந்து கலிவெண்பாவின் வேறுபட்ட கொச்சகம். ( 35 ) 1 பாலைக்கலி முற்றும்.
1. கலி : 32 : 1 - 3, அடிகளையும் அவற்றின் குறிப்பையும் பார்க்க. 2. ''மகளிர், தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர நீத்தலு, நீள்சுரம் போகியார் வல்லைவந் தளித்தலு, மூழ்செய் திரவும் பகலும்போல் வேறாகி, வீழ்வார்கட் டோன்றுந் தடுமாற்ற ஞாலத்துள், வாழ்வார்கட் கெல்லாம் வரும்''. கலி. 145 : 13 - 17. 3. தொல். கற். சூ. 9. 4. தொல். செய். 155-ஆம் சூத்திரத்தினுரையில் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் இவ்வாறே கூறியிருக்கின்றனர். (பிரதிபேதம்) 1 பாலை முற்றும், நச்சினார்க்கினியார் கூறிய பாலை நிலத்திலுரை முடிந்தது.
|