126

தலைவன் செய்யும் தொழிலாவன; ஐவகையாக முடியாமல் தான் வேண்டியவாறே கோலங்கள் செய்துமுடித்தலும் அக் (1) கூந்தலணையிற் றுயிலுதன் முதலியனவுமாம்.

(15). (2) குளனணி தாமரைப் பாசரும் பேய்க்கு
(3) மிளமுலை பாராட்டி னாய்மற்றெம் மார்பிற்
(4) றளர்முலை பாராட் டினையோ வைய

எ - து: ஐய, குளம் அழகுபெறுதற்குக் காரணமான தாமரையினது பசிய அரும்பையொக்கும் எம்முடைய ஊற்றின்பம் மிகவுமில்லாத இளமுலையை இதற்கு முன்பு பாராட்டிவிட்டாய்; அப்பருவம் ஒழிந்து ஊற்றின்பத்தை மிகவுமுடைய நீக்கம் அறியாத ஏந்தின நிலைமை சிறிதுசாய்ந்த முலையினையுடைய மிக்க இளமைப்பருவமெல்லாம் முற்றப் பாராட்டிவிட்டாயோ? அது செய்திலையே; எ - று.

இவை மூன்றும், தாழிசை.

இத்தாழிசையின் கருத்தான் முற்பட்டவற்றிற்கும் யாங்கூறியதே பொருளென்றுணர்க.

எனவாங்கு, அசை.

இது தனிச்சொல்.

(19). (5) அடர்பொ னவிரேய்க்கு மவ்வரி வாடச்
சுடர்காய் சுரம்போகு நும்மையா மெங்கட்
படர்கூற நின்றது முண்டோ (6) தொடர்கூரத்
துவ்வாமை வந்தக் கடை

1. கூந்தலணையிற்றுயிலுதல் கலி 104: அடிக்குறிப்புப்பார்க்க.

2. (அ) "குளத்துக் கணியென்ப தாமரை" நான், 11 (ஆ) "குளனணி தாமரை" மணி. 15: 75 (இ) "தண்கய மருங்கிற் றாமரைபோல, வண்ணன் மூதூர்க் கணியெனத் தோன்றி" பெருங். (1) 36: 19 - 20. (ஈ) "பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தன" கம்ப. வருணனைவழி, 32. (உ) "புண்டரிக மோடுபல பூத்திர ளணிந்து, கண்டவர்க ணெஞ்சுகட வாததொர் வனப்புக், கொண்டு குளிர் தூங்கு தடம்" விநாயக, சோமகாந்தன்வனம் 22 (ஊ) "அலரணியா நீர் நிலைபோல்.............அடிகளையடியே னீத்திருத்த லழகேயோ" திருவானைக்கா. சம்புமுனிதவ 40.

3. "இவைபா ராட்டிய பருவமு முளவே" அகம். 26

4. "தளர்முலை பாராட்டி" ஐந் - யெழ. 47.

5. "அடர்பொ னவிரேய்க்கு மவ்வரி வாட" என்பது அரியென்பது நிறத்தின்கண் வந்ததற்கு மேற்கோள், தொல். உரி. சூ. 73. 'கூறிய கிளவி'தெய். 'அவ்வரிவாட' நற், 358.

6. "தொடர்கூரத், துவ்வாமை வந்தக்கடை" என்பது வினையெச்சங்களுள், கடையீறு இறந்தகாலம் பற்றிவருதற்கு மேற்கோள் தொல், வினை சூ, 32, சேனா; சூ, 31, கல்; சூ, 32 நச். நன். வினை. சூ, 24, இரா, இ - வி, சூ, 246, துவ்வாமை யென்னும் மறைக்கு, துவ்வுதல் உடம்பாட்டுச் சொல்லென்பதனை "நெடுவான் பேகந், துவ்வுதல்யான் விழைந்திலேன்" என்பதனானும் உணர்க.