காதலிற் புரிவமர் புணர்ச்சியுந் தருமெனப் எ - து: (1) முற்பிறப்பில் இருவர்க்கும் உண்டான காதலினாலே இப்பிறப்பில் மனம் பொருந்துதல் அமர்ந்த கூட்டத்தினையுந் தருமென்று நமக்குக் கூறி ; எ - று. "துன்புறு பொழுதினு மெல்லாங் கிழவன், வன்புறுத் தல்லது சேற லில்லை" (2) என்பதனாற் றலைவன் வற்புறுத்திச் செல்கின்றமை இதனாற் பெற்றாம். (3) 1பிரிவெண்ணிப் பொருள்வயிற் 2சென்றநங் காதலர் (4) வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி எ - து: பொருள் வயிற்பிரிவை நன்றென்றெண்ணிப் போன நம்முடைய காதலர் வருவர்போல இருந்தது ; விளங்குகின்ற பூணினையுடையாய், யான் அவர் வர வினைத் துணிவல் ; இப்பொழுது அதற்குக் காரணம் கேள் ; எ - று.
1. "அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும், .........புதுவதன்றே" என்பதும், மணிமேகலையிற் கூறப்பெற்ற விசாகை தருமதத்தர் வரலாறும் இந்நூற் பக்கம் 18, 1. குறிப்பிலுள்ளவைகளும் இங்கு நோக்கத்தக்கன. 2. தொல். கற்பியல். சூ. 43. 3. "பிரிவெண்ணிப்..........வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல் யான் கேஎளினி" என்பது கொல்லென்னும் இடைச் சொல் அசை நிலையாய் வருதற்கு மேற்கோள். நன். இடை. சூ. 16. மயிலை, வி, இரா. இ - வி. சூ. 269. 4. (அ) உயிரும் உயிர் மெய்யும் தமக்குக் கூறிய மாத்திரையை இறந்தொலித்தல் நால் வகைச் செய்யுட்கண்ணு முண்டென்றுகூறிக் கலிப்பாவில் மாத்திரை இறந்தொலித்தற்கு, 'வருவர் கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி' என்பதை மேற்கோள் காட்டி இதில் ழகரஆகாரமும் ககர ஏகாரமும் மாத்திரை யிறந்தொலித்த வாறுணர்கவெனபர், நச்; தொல். நூன்மரபு. சூ. 33. அன்றியும் (ஆ) குறுமையு நெடுமையு மென்னும். தொல். மொழி. 17-ஆம் சூத்திரவுரையிலும் "அவற்றுள், மாத்திரையளவும்" என்னும் தொல். செய். 2-ஆம் சூத்திரவுரையிலும் "வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி" "கடியவே கனங்குழா அய் காடென்றா ரக்காட்டுள்" என்பவற்றை மேற்கோள் காட்டி, குற்றெழுத்துக்க ளெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்தற்குக் கூடியவாறு உணர்க வென்றும் குற்றெழுத்து ளெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்து விராஅய் நின்றவாறு காண்க வென்றும் கூறுவர். (பிரதிபேதம்) 1 பிரிவுள்ளி, 2 பெயர்ந்தநங்.
|