16
அ
நவதாரணையுள் ஒன்று. அவ்வொன்பதாவன : நாமம், அக்கரம், செய்யுள், சதுரங்கம், சித்திரம், வயிரம், வாயு, நிறைவு குறைவாகிய ஒண்பொருள், வத்து என்னும் தாரணைகள்.
இதனை உரு அக்கர சங்கேதங்களால் இடம்பட அறிந்து தரித்து, அனுலோமமாகவும், பிரதிலோமமாகவும் பிறவாறாக வும் சொல்லும் திறம் தாரணை நூலுள் கூறப்பட்டது. அந்நூல் இக்காலத்து வழக்கு ஒழிந்தது. (யா. வி. 96. பக். 555)
செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும், நிரைநேர்நிரை யென வருவதும் ஆகிய செய்யுட் கணம். புளிமாங்கனி எனும் வாய்பாடு பெறும் இச்சீர் நோய் பயக்கும்.
அக்கினிகணம், நெருப்புக்கணம், தீக்கணம், அனற்கணம் எனப் பரியாயப் பெயரால் இக்கணம் பல பாட்டியல்களில் சுட்டப் பெறும். இதற்குரிய நாண்மீன் கார்த்திகை என்ப.(பன். பாட்.111)
அகத்திய முனிவரால் இயற்றப்பட்ட இயல் இசை நாடகம் என்னும் முத்திறத்து இலக்கண நூல்; எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திற இலக்கணக் கூறுபாடும் தம்முள் விரவ இயற்பகுதி யாக்கப்பட்டது என்ப. தொல்காப்பியத் திற்கு இதுவும் முதல்நூல்.
“தானே தலைவனாகிய அம்முனைவனை வழிபட்டுத் தலைவ ராயினார் அவனருளால் அவன் கண்ட இயற்கை முதல் நூலின் வழித்தாகப் பிண்டம் படலம் சூத்திரம் எனச் செயற்கை நலம் தோன்றச் செய்த நூல் செயற்கைமுதல் நூலாம். கலச யோனி யாகிய ஆசிரியன் அகத்தியன், முனைவனாகிய திரிபுரம் எரித்த விரிசடைக் கடவு ளிடத்துத் தமிழின் இயற்கை முதல்நூல் உணர்ந்து, பின்னர் அதன் பொருளைக் குன்றெறிந்த முருக வேளிடத்துக் கேட்டுத் தெளிந்து, முத்தமிழ் இலக்கணமும் முப்பொருளும் ஆதியில் முற்றக் கூறினான் ஆகலின், அவன் அருளிச் செய்த சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இரு நூலும் தமிழிற்குச் செயற்கைமுதல்நூல் ஆயின.” (பா. வி. பக். 97)
அகத்தியத்தைச் செயற்கைமுதல்நூல் என்பர் ஆசிரியர் அரசஞ்சண்முகனார்.
தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்தில ராகலின், தலைவர்வழிநின்று தலைவனாகிய அகத்தியனான் செய்யப்பட்டதும் முதல்நூல்; அகத்தியமே முற்காலத்து முதல்நூல். (தொ. பொ. 649 பேரா)
பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டம் உளது என்பது. அது முதல்நூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையும் அடக்கி நிற்றலின். (தொ. பொ. 484 பேரா.)
முத்தமிழ் அகத்திய முதல்நூல் ஆசிரியன் அமர முனிவன் அகத்தியன். குடத்தில் தோன்றிய காரணத்தான் கும்பமுனி, கும்பசம்பவன் முதலாய பெயர் அவனுக்கு வழங்கின. குறுமுனி, தமிழ்முனி முதலாய பிற பெயரும் வழங்கும். அவனே தேவஇருடிகளுள் சிறந்தவன் எனப் புராணம் கூறும். அவன் புகழ் கூறாத புராண இதிகாசம் இல்லை; தேவரும் முனிவரும் இல்லை.
நகுடனை இந்திரபதத்தினின்றும் இழிந்து பூமியிற் சர்ப்பம் ஆகுமாறு சபித்தமை; பன்னீர்யாண்டு பொதியின்கண் இருந்து வேள்விசெய்து, இந்திரன் முதலாய தேவர் ஏலாமல் மழைவளம் தடுப்பவே, தன் தவவலியான் பலவளனும் படைத்து, நான்முகன் முதலாய மூவர்க்கும் வித்தினைக் கொண்டு அவிஅளித்தமை; உயிர்க்கொலை வேள்வி புலைவினை ஆகா அறவினையே ஆயினும், கடையாய வேள்வி என்றும், அல்லாத வேள்வியே உத்தம வேள்வி என்றும் கூறித் தேவர்க்கு வரம் அளித்த அருந்தவக் கொள்கை யுடைமை; வாதாபி இல்வலன் என்னும் அசுரர் இருவரையும் தனது தவவலியான் அழித்தமை; தேவர்கள் வேண்டத் தென்திசைப் போந்து, மேருத் தாழ்ந்து தெற்கு உயர்ந்த நிலையைச் சமம் செய்தமை; இராமன் இலங்கை சென்ற காலத்திற்கு முன்னும், பரசுராமனை அஞ்சி ஒளித்த காந்தன் காலத்திற்கு முன்னும், காவிரி யுற்பத்திக்கு முன்னும், எனக் கருதப்படும் பண்டைக் காலத்தே தென்திசை மலயத்திற்குப் போந்திருந்தபோது தமிழ் முதல்நூல் அளித்தமை - முதலா யின அகத்தியன் பெருமைகள். (பா. வி. பக். 98-101)
கம்பராமாயணம் அகத்தியப் படலத்துள் தொடக்கக்கவிகள் அகத்தியன் பெருமைகளைப் பாரிப்பன.
அகத்தியன் என்னும் சொல், உயர்வுபற்றிய ஆரைக்கிளவி பெற்று அகத்தியனார் என முடிந்தது.
‘அகத்தியன்’ - காண்க.
அகத்தியனார்க்கு மாணாக்கர் பன்னிருவர். அவர்களாவார் தொல்காப்பியனும், அதங்கோட்டாசானும், துராலிங்கனும், செம்பூட்சேயும், வையாவிகனும், வாய்ப்பியனும், பனம்பார னும், கழாரம்பனும், அவிநயனும், காக்கைபாடினியும், நற்றத்தனும், வாமனனும் என்ப. (பா. வி. பக். 104)
அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம். இரு வகைப் பட்ட முதற்பொருளும் பதினான்கு வகைப்பட்ட கருப் பொருளும் பத்துவகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பு ஒழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூறாக, திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட 12 அகப்பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப் பொருட் கோவை என்றவாறு. (இ. வி. பாட். 56 உரை)
அவ்வுறுப்புப் பன்னிரண்டாவன திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடன், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், திணைவகை, துறை என்பன. (ந. அ. 211)
இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள், தமிழ்நெறிவிளக்கப் பகுதி, களவியற் காரிகை என்பனவும், தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், சாமிநாதம், முத்து வீரியம் என்பவற்றிற் காணப் படும் அகப்பொருட் பகுதிப் படலங்களும் ஆம். திருக் கோவையார் உரையில் பேராசிரியர் அமைத்துள்ள அகப் பொருள் நூற்பாக்களும் அகப்பொருள் தொடர்பான நூலினவே. (நூல் - இலக்கணம்)
இஃது அகப்பொருள் பற்றிய தனி இலக்கணநூல்; நாற் கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. இதன்கண் அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழி பியல் என ஐந்து இயல்கள் உள. இதன்கண்ணுள்ள நூற்பாக் களின் எண்ணிக்கை 252. தொல்காப்பியத்துக்குப் பின்னர் இறையனார் அகப்பொருள் சுருக்கநூலாக அமைய, அகப் பொருள் பற்றிப் பிற்காலத்து எழுந்த விரிவானநூல் இதுவே. அகப்பொருளைத் தொடர்நிலைச்செய்யுளாகக் கொள்வதற் கேற்ப, இதன்கண் கிளவிகள் தொடர்புறக் கூறப்பட்டுள்ளன. இன்று தமிழில் வழங்கப்படும் அகப்பொருள் நூல்களுள் பெருவரவிற்றாக நிலவுவது இதுவே. கற்பியல் முடிய, தஞ்சைவாணன்கோவை கிளவிகட்கு எடுத்துக்காட்டாகத் தொடர்ந்து வருகிறது. ‘நம்பி அகப்பொருள்’ என்று இந்நூல் பெருவரவிற்றாகப் பெயர் கூறப்படும் இதன் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.
வித்தார கவி; அகலமுற (-விரிவாக)ப் பாடப்படுவதால் இஃது அகலக்கவி என்னும் பெயர்த்தாயிற்று. தொடர்நிலைப் பாட்டு எனவும், பல அடியால் நடக்கும் தனிப்பாட்டு எனவும் இக்கவி இருவகைத்தாம். (இ. வி. பாட். 7)
இது விருத்தக் கவிதை, அகலப்பா, அகலம் என்றும் வழங்கப் படும்.
‘குண்டலகேசியும் உதயணன்கதையும் முதலாக உடைய வற்றுள் தெரியாத சொல்லும் பொருளும் வந்தன எனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது என்பது’
(வீ.சோ. 146. உரை)
அகலக்கவியுள், அகப்பொருளைக் கூறும் ஆசிரியப் பாவினுள் வஞ்சியடி உறல் ஆகாது. அவ்வகப்பொருளின் கண் அன்றி ஏனைய பொருள்மேல் பெரும்பான்மையும் கலி வாரா; வஞ்சிப்பாத் தொகைபெற்று நிற்கப் பெறாமல், தனித்துச் சொல்லப்படும். (இ. வி. பாட். 115)
மங்கலம் சொல் முதலாகக் கூறப்பட்ட பத்துவகைப் பொருத்த இலக்கணத்தில் குறைவின்றி, பலவகையாலும் தெளிந்த மூவசைச்சீர் முதலாக அகலக்கவி பாடப்படும். உண்டிப் பொருத்தத்தில் விலக்கிய நச்சுஎழுத்தும், கதிப் பொருத்தத்தில் விலக்கிய எழுத்தும் எடுத்த மங்கலச்சொல் லில் வருமாயின் அமுதமாய் அமைவுடையனவாம். (இ. வி. பாட். 44)
பொருள், இடம், காலம், தொழில், உறுப்பு, எல்லை (-அளவு), செய்தோன் பெயர், செய்வித்தோன் பெயர் என்னும் இவற்றால் அகலக்கவி பெயர்பெறும். இவற்றுக்கு முறையே ஆசாரக் கோவையும், மதுரைக்காஞ்சியும், வேனில் விருத்த மும், யானைத் தொழிலும், பயோதரப்பத்தும், குமரேச சதகமும், கல்லாடமும் பாண்டிக்கோவையும் உதாரணமாகக் கொள்க. (இ. வி. பாட். 116)
ஒண்மையான் புலவன் உரைத்த அகலக்கவியைக் கொடை முதலிய வரிசைசெய்து புனைந்து கொள்பவர் “பெரிய புகழாலும் உருவத்தாலும் முறையே நிறைமதியும் இளஞாயி றும் இவராவார்!”எனச் சிறப்புற்று, இவ்வுலகில் புகழுடம் பான் நிலைபெற்றுத் தலைமை எய்தி நிலவுவர்.
‘உருவும் புகழும் ஆகுவிர் நீர்’ (புறநா. 6) என்றார் பிறரும். ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துப என்பதம் செய்வினை முடித்தே’ (புறநா. 27) என மறுமைப்பயன் மிகுதி கூறப்பட்டவாறு காண்க. (இ. வி. பாட். 180)
அகலக்கவி பாடுவோனும் அகலக்கவியாம். வித்தார கவி, அகலக்கவி என்பன ஒரு பொருட்கிளவி.
(வெண்பாப். செய். 5. உரை)
அகலக்கவி; அது காண்க.
அகலம் - (1) அகலஉரை (2) அகலக்கவி. இரண்டு திறமும் தனியே காண்க.
ஆண் பெண் எனும் இருபாலாருடைய அங்கங்களாகிய உறுப்புக்கள் அனைத்தையும், ஓருறுப்பில் அடங்கும் சிறு பகுதிகளையும்கூட விடாமல், உள்ளங்கால், விரல், நகம் என்பன உட்பட, வெண்பாவாலோ வெளிவிருத்தத்தாலோ, கடவுளர்க்காயின் பாதாதி கேசம் - மக்கட்காயின் கேசாதி பாதம் - என்னும் முறை பிறழாமல், அந்தாதித் தொடை அமையப் பாடுவது இப்பிரபந்தம். (இ. வி. பாட். 75)
நாவுக்கரசர் அருளிய திருவங்கமாலை (தே. 4 : 9 ஆம் பதிகம்.)
இஃது யாப்பருங்கலத்துள் உறுப்பியலில் முதலாவது பகுதி. இதன்கண் நேரசை நிரையசை யென்னும் அசைவகையும், தனிக்குறில் நேரசையாகாத இடங்களும், ஐகாரக் குறுக்கம் இணைந்த நிரையசை வருமாறும் இடம் பெறும்.
இஃது ஒரு தருக்க நூல்; அஞ்சனம் என்றும் கூறப்படும். இக்காலத்து வழக்கு இறந்தது. (யா. வி. பக். 583)
இது வேதாந்தபரமாகத் தத்துவராயர் பாடிய பரணிப் பிரபந்தம் (தக்க. பக். 153). பாசவதைப்பரணி, மோகவதைப் பரணி, என்பனவும் தத்துவத்தையுட்கொண்டு பாடப்பட்ட பரணிப் பிரபந்தங்கள் (கஞ்சவதைப் பரணி, இரணியன் வதைப் பரணி முதலியன வேறுபட்டவை.) (L)
நிலக்கணம், நீர்க்கணம், சந்திரகணம், இந்திரகணம் அல்லது இயமான கணம், சூரிய கணம், தீக்கணம், வாயு கணம், ஆகாய கணம் என எண்வகையுடையனவும், நல்லவும் தீயவுமாய் வருவனவும் ஆகிய நூல் முதற்சீர்கள்.
முதற்சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள், இறுதிக்கண் நின்றது கணம். (இ. வி. பாட். 10)
எட்டு உறுப்புக்களைக் கொண்ட கூட்டம். ‘உருவ மெலாம் பூத உபாதாய சுத்தாட்டக உருவம் என்னின்’ (சி. சி. புர. சௌத். மறு 17)
பாடல்கள் எட்டனையுடைய தொகுதி பெரும்பான்மையும் அட்டகம் எனப்படுகிறது. ஆதிசங்கரர் அருளிய குருவஷ்டகம் காண்க. (L)
வேதங்களின் உட்பிரிவாகிய அஷ்டகங்களின் பகுதியாகிய வருக்கங்களின் முதல்நினைப்பைத் தொடர்புபடுத்திச் சொல்லும் கோவை. இதற்கு அநுக்ரமணிகா என்ற பெயரும் உண்டு. யாப்பருங்கலக்காரிகை முதல்நினைப்புச் சூத்திரங் களை உடையது என்பதைக் குறிக்க வந்த உரையாசிரியர் குணசாகரர், ‘அருமறை யகத்து அட்டகஓத்தின் வருக்கக் கோவை போல’ என உவமை எடுத்துரைத்தார். (யா. கா. பாயிரம். 1 உரை)
கடவுளைப் பாடி, அக்கடவுள் காக்க எனக் கவி எட்டால் பொருளுற அகவல் விருத்தத்தால் பாடப்படும் பிரபந்தம்.
(இ. வி. பாட். 83)
யாப்பருங்கலநூலுள் முதலாவதாகிய உறுப்பியலுள் ஐந்தாவதாக வரும் ஓத்து.
இது நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது; பாக்களின் அடிகள் பற்றிய செய்தியைக் குறிப்பிடுவது. இதன் நூற்பாக் கள் ஆசிரிய யாப்பில் அமைந்தவை. இந்நூற்பாக்களுள் ஒன்றே இதுபோது கிட்டியுள்ளது. (யா. வி. பக். 367.)
சிலப்பதிகார உரையாசிரியருள் தலையாயவர். இவர் உரை 19 காதைகள் முடியக் கிட்டியுள்ளது. எஞ்சிய காதைகட்கும் இவர் உரை வரைந்திருந்தமைக்கு அகச்சான்று உளது. முத்தமிழிலும் இவரது பெரும்புலமையை அரங்கேற்று காதை முதலியவற்றில் காணலாம். இவர் காலம் 13ஆம் நூற்றாண்டு; நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது என்ப. ‘கானல்வரி’க்கு இவர் இயற்றிய உரை இக்காலத்துக் கிட்டவில்லை.
யாப்பருங்கலம் 95ஆம் சூத்திரத்து அகலவுரையுள் குறிக்கப் பட்டுள்ள நூல்களுள் ஒன்று. அணிகலன்களை அமைக்குமா றும் அவை பூணுமாறும் பற்றிய நாள் முதலாய விசேடங் களை இந்நூல் விளக்குவது. இந்நூல் முதலாயவற்றுள் நிகழும் மறைப்பொருள் உபதேசத்தை வல்லார்வாய்க் கேட்டுணர்க என்பது உரை. இந்நூல் இக்காலத்து இறந்தது. (யா. வி. பக். 491)
தண்டியலங்காரத்துககு முற்பட்ட நூல். இதன்கண் தனிநிலை தொடர்நிலைச் செய்யுள் பற்றியும், இருது வருணனை பற்றியும் கூறப்பட்ட செய்தி யாப்பருங்கல விருத்தியுரையுள் எடுத்தாளப்பட்டுள்ளது. (பக். 566, 573) இனி, சிலப்பதிகார உரையுள் அடியார்க்குநல்லார் அணியியல் என்ற நூல் மேற்கோளாகக் காட்டிய ‘உரையும் பாட்டும் விரவியும் வருமே’ ‘உதாரம் என்பது ஓதிய செய்யுளின், குறிப்பின் ஒரு பொருள் நெறிப்படத் தோன்றல்’ என்ற இரண்டு நூற்பாக் களும் தண்டியலங்காரத்துள (11, 21). அதனை நோக்கின் அணியியல் நூற்பாக்கள் சில தண்டியலங்காரத்தில் ‘தானெடுத்து மொழிதலாகக்’ கொள்ளப்பட்டிருத்தல் கூடும் என்பது புலனாகிறது.
அணியியல் என்ற நூலை இயற்றியவர். இவ்வாசிரியர் தம் நூற்பாக்களில் செய்யுள்நடைபற்றிக் கூறுவதோடு, எடுத்துக் காட்டுக்களும் தந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
(யா. க. 23, 57 உரை பக். 105, 229)
நூற்பிரிவு. அத்தியாயம், படலம், இலம்பகம், சருக்கம், காண்டம், பரிச்சேதம் என்பன ஒருபொருட் கிளவிகள் (பிங்.2068)
பன்னிரண்டு உயிரும், கஙசஞடண என்னும் ஆறு ஒற்றும், மறையோர் வருணத்திற்குரிய எழுத்தாம். ஒற்று எனப் பொதுப்படக் கூறினும் உயிரொடு கூடிய மெய் என்றே கொள்ளப்படும். (இ. வி. பாட். 14)
செய்யுட்கணத்து ஒன்று இது. இதற்குரிய நாள் புனர்பூசம்; பயன் வாழ்நாள் நீக்கம். ஆதலின் ஆகாயகணமாகிய இதற்குரிய ‘கருவிளங்காய்’ முதற்பாடலின் முதற்சீராக வைத்துப் பாடார். (இ. வி. பாட். 40 உரை)
1) அந்தாதித்தொடை; அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும் அசையானும் சீரானும் அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (யா. கா.7)
2) ஒரு பிரபந்தம். ‘அந்தாதி மேலிட் டறிவித்தேன்’ (திவ். இயற். - நான். 1) இது பதிற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நூற்றந்தாதி என்றாற்போலத் தன்கண் அமைந்த பாடல் எண்ணிக்கை கொண்டு பெயரிடப்படும். அந்தாதிப் பிரபந் தத்துக்கு வெண்பாவும் கட்டளைக்கலித்துறையுமே சிறப்பாக உரிமையுடையன. (இ. வி. பாட். 82, வெண். பாட். செய். 9)
அனுபவ ஞானம் (வேதா. சூ. 151). முருகனுடன் தாம் கண்ட அநுபவஞானத்தை அருணகிரிநாதர் பாடியது, கந்தர் அநுபூதி என்னும் தோத்திரநூல். (L)
அனுராகமாலை காண்க. (இ. வி. பாட். 104)
திருநேரிசை - அறுசீர் விருத்தம்; திருவிருத்தம் - கட்டளைக் கலித்துறை; திருக்குறுந்தொகை - கலிவிருத்தம்; திருத்தாண் டகம் - எண்சீர் விருத்தம்; பழமொழியாப்பு - பழமொழியை இறுதியில் கொண்ட அறுசீர் விருத்தம்; சரக்கறைத் திரு விருத்தம் - கட்டளைக் கலித்துறையாலமைந்த வருக்கமாலை; இவையன்றித் கலித்தாழிசைப் பதிகம் இரண்டும் (iv3, 4) ஆசிரியத்துறைப் பதிகம் ஒன்றும் (iv.20) சிறப்பாக அமைந்தன. நான்காம் திருமுறைத் தொடக்கத்தில் பலவகை அறுசீர் விருத்தங்களும் தரவு கொச்சகமும் கலிவிருத்தமும் ஈரடிக் கலித்தாழிசையும் (அங்கமாலைப் பதிகம்) எனப் பலதிற யாப்புக் காணலாம். (இலக். தொகை. முன். பக். 83-85)
1) சந்திரன் (கலி. 80) (2) அம்புலிப்பருவம் (L)
பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஏழாம்பருவம் இது சாம தான பேத தண்டங்கள் அமைத்துப் பாடப்படுவது.
பாட்டின் உட்பொருள் (சங். அக.) (L)
அம்மானை ஆட்டத்தில் பாடும் பாட்டு. ‘சிறுபான்மை பாவைப்பாட்டும் அம்மானைப்பாட்டும் முதலாயின நான்கடியின் இகந்து வருவன ஆயின, (தொ. பொ. 461 பேரா.)
அம்மானைப்பாட்டு இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃது ஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல் அடுக்கிவரும்.
‘வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை
ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை
சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை’ - முதலிய 4 பாடல்
(சிலப். 29 : 16-19)
இப்பாடல் அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடி இறுதிச்சீர்க்கும் அடுத்த அடி முதற்சீர்கும் தளைகோடல் கூடாது.
‘வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை
வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்திக் கெட்டும்’ (சிலப். 29 : 18)
முதலடியும் அடுத்த அடியும் தளைகொள்ளின் கலித்தளை வருதல் காண்க.
1) அம்மானையாட்டம் (இ.வி. 807) 2) அம்மானை ஆடும் கருவி : ‘அம்மானை ஆடி அருளே, (மீனாட்சி அம்மானை 1) 3) ஒருவகைப்பாடல் (திருவாசகம் 8) 4) அம்மானைப் பருவம் ஆகிய பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் நிகழ்வது 5) கலம்பகஉறுப்பு. (இ. வி. 812)
ஐந்தடிக் கலிப்பாப் போன்ற யாப்பில், 2ஆம் 4 ஆம் அடி ஈற்றில் தன்பெயர் குலவப் பாடப்படும் அம்மானைப் பாட்டில், சொல்லுதல் - மறுத்தல் - விடை - யென்னும் மூன் றும் அமையும். ஈற்றில் வரும் விடைமொழியுள் இருபொருள் படச் சிலேடை அமைதல் இயல்பு. முப்பொருள் நாற்பொருள் படச் சிலேடை மொழியின் சிறப்பு மிகும். கலிப்பா வரையறை யாகக் கூட்டியும், எதுகையின்றித் தனித்தனியே சேர்த்தும், காதை அம்மானை என்று சிலர் பாடினர். கொச்சகச் சீர்களால் பாடும் அம்மானை இழிவுடையது. (அறுவகை. யாப்பிலக்கணம் 29-32)
திருவாசகத்திலுள்ள அம்மானைப் பாடல் வெண்டளை பிறழா அடிகளைக் கொண்டு, முதலடிக்கும் அடுத்த அடிக் கும் தளை கோடல் இன்றி ஓரெதுகையான் ஆறடியான் முற்றுப்பெற்று இறுதியில் அம்மானாய் என்ற சொல்லுடன் முடிவது. திருவாசகப் பகுதியாகிய திருஅம்மானையில் 20 பாடல்கள் உள்ளன.
எ-டு : ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து
கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி
வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்ப்புக்குச் சிற்றம் பலமன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதும்காண்
அம்மானாய்’
பெண்பாற் பிள்ளைத்தமிழில் உள்ள அம்மானைப் பருவத்துப் பாடல்கள் ஆசிரியவிருத்தங்களாக அமைவன.
மங்கையர் மூவர் அம்மானை ஆடுவர். முதலாமவள் பிரபந்தத் தலைவனுடைய சிறப்பைக் கூறுவாள். இரண்டாமவள் அதன்கண் ஐயுற்று ஒரு வினாவினை எழுப்புவாள். மூன்றா மவள் அவ்வையத்தை அறுத்து மொழிகையில், சிலேடை வாய்பாடு நயம் செய்யும். இவ்வாறு பாடும் அம்மானை என்னும் பாடல் கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.
“திருவரங்கப் பெருமானே எல்லாப் பொருளுமானவர்; அவர் ஆண் பெண் அலி அல்லர்” என்றாள் முதலாமவள். “அங்ங னம் ஆயின் அவர் சீதையை மனைவியாகக் கொண்டது யாங்கனம்?” என்று வினாவினாள் இரண்டாமவள். “சீதையை மனைவியாகக் கொண்டது ஒரு சாபத்தினால்” என்றாள் மூன்றாமவள். ‘சாபம்’ என்பது பிருகு முனிவரிட்ட சாபம் எனவும், சிவபெருமானுடைய வில் எனவும் இரு பொருள்படும். (சிவதனுசை முறித்ததால் இராமன் சீதையை மணந்தமை வெளிப்படை.) (திருவரங். 26)
2, 4, 5 ஆம் அடிகளில் அம்மானை என்ற சொல் ஈற்றில் அமைய வரும். அம்மானை 5 அடிக் கலிப்பாப் போல்வது. அதனில் சொல்லலும் மறுத்தலும் விடையும் அமையும். அம்மானையின் விடைமொழி சிலேடையாக அமையும். ஓரடியெதுகையின்றி இரண்டிரண்டடி எதுகையுடைய கலிப்பாவாக அம்மானைப்பாடல் அமைதலு முண்டு. கொச்சகச்சீரால் பாடும் அம்மானை இழிபுடையது. (அறுவகை. யாப்பு. 31, 32)
சந்த ஆசிரிய விருத்தமாகப் பாடப்படும் அம்மானைப் பருவம் பெண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் நிகழும். ஈற்றடி அம்மானை ஆடியருளே போன்ற வாய்பாட்டால் முடியும்.
பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தனுள் எட்டா வது. முன்னர் உள்ள ‘அம்மானை’ காண்க.
மகளிர் அம்மானை ஆடும்போது பாடும் ஒருவகையான இசைப்பாடல். இஃது ஐந்தடிப் பாடலாக நிகழும்.
(சிலப். 29 : 17 - 20)
வெண்டளை பயின்ற அளவடியால் நிகழும் இப்பாடல்களில் இரண்டு நான்கு ஐந்தாமடிகளின் இறுதிச்சீர் அம்மானை என முடிவுறும். இரண்டாமடி மூன்றாமடியிலும் அந்தாதித்து வரும்.
எ-டு : ‘வீங்குநீர்
வேலி உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்கரணம் காத்த
உரவோன்யார் அம்மானை?
ஓங்கரணம் காத்த உரவோன்
உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த
சோழன்காண் அம்மானை!
சோழன் பூம்புகார் பாடலோர் அம்மானை!’ (சிலப். 29: 17)
யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய செய்யுள் இலக்கணநூல்களை இயற்றியவர். யாப்பருங்கல நூற்பாயிரத் தில், ‘அளப்பருங் கடற்பெயர் அருந்தவத் தோனே’ என்னும் அடி, இவரது பெயரினைக் குறிப்பாற் சுட்டும். இவர் சமண சமயத்தவர் என்பது இந்நூல்களின் சிறப்புப் பாயிரத்தில் போதரும். இவரது காலம் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்ப.
இஃது ஒரு காவியம். “சிந்தாமணி சூளாமணி போல்வதொரு காப்பியம் அமிர்தபதி. இதன் முதற்பாட்டு வண்ணத்தான் அமைந்தது. நேரசை முதலாக வருவதால் இப்பாடலின் ஒவ்வோரடியும் பதினான்கு எழுத்துடையது.” என்ற செய்தி யாப்பருங்கல விருத்தியுரையில் போதரும்.(யா. வி. பக். 520, 521)
காப்பியத்தின் முதற்செய்யுள் முதல்மொழியிலும், தசாங்கத் தயலிலும் வருதற்குரிய மங்கல எழுத்து அமுத எழுத்தாம். க ச த ப ந ம வ - என்னும் ஏழொடும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் என்னும் நான்கு உயிர்எழுத்தும் முன்மொழிக்கு ஆம் அமுத எழுத்துக்கள். (இ. வி. பாட். 19, 21)
‘அமுதவெழுத்து’க் காண்க.
இன்று இறந்துபட்ட கணிதநூல்களுள் ஒன்று. பதினாறு வரி கருமம், ஆறு கலாச வருணம், இரண்டு பிரகரணச்சாதி, முதகுப்பையும் ஐங்குப்பையும் என்ற இப்பரிகருமம், மிச்சிரகம் முதலிய பண்டைக் கணிதம் பற்றிய செய்திகளை எடுத்துக் கூறுவது. அவினந்தமாலை, வருத்தமானம் முதலியனவும் அரசசட்டம் போன்றவையே. (யா. வி. பக். 569)
கி.பி. 1868 முதல் 1911 வரை 43 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த பெரும்புலவர்; தந்தையார் அரசுப்பிள்ளையாதலின், அரசஞ் சண்முகன் என்று தந்தையது பெயருடன் தமது இயற் பெயரையும் கொண்டார்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் துறை போயவர்; வடமொழிப் புலமையும் உடையவர்; நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்; பண்டைய உரையாசிரியர் களிடம் பெருமதிப்புக் கொண்டவர்; நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர். கவிதைபாடும் சிறப்பும் அவர்பாலுண்டு. இவர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்கள் முருகக் கடவுள் கலம்பகம், இன்னிசை இருநூறு, பஞ்ச தந்திர வெண்பா, மதுரைச் சிலேடை வெண்பா, மதுரை மீனாட்சி யம்மை சந்தத் திருவடிமாலை, திருவள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முகவிருத்தி, தொல்காப்பியப் பாயிரம் சண்முக விருத்தி, ஆகுபெயர் அன்மொழித் தொகை ஆராய்ச்சி என்பன. இவற்றுள் இன்று திருக்குறள் சண்முக விருத்தி காணப்பட்டிலது. இவரெழுதிய வேறுசில நூல் களும் இதுபோது கிட்டில. திருக்குறளும் தொல்காப்பிய முமே இவரது புலமைக்கு இருகண்கள் எனலாம். தொல் காப்பியச் சண்முக விருத்தியை நல்வினையின்மையால் தமிழ்நாடு இழந்துவிட்டது.
ஆசிரியப்பா. ஆற்றுப்படை அரசர்பாவால் பாடப்படுவது என, இப்பெயர் இச்சூத்திரத்தே ஆட்சிபெற்றுள்ளமை காண்க. (இ. வி. பாட். 113)
த,ந,ப,ம,ய,ர என்னும் ஆறும் அரசர்க்கு உரியன. (மெய்யெழுத் தன்றி உயிர்மெய்யே கொள்ளப்படும்) (இ. வி. பாட். 15)
இஃது ஒரு பிரபந்தவகை. “பாவாலும் பொருளாலும் அள வாலும் பிறகாரணத்தாலும் பிரபந்தங்கள் வேறுபடப் பெயர் பெறுவன உள” என்னும் இச்சூத்திரத்துள், பிற காரணத்தால் பெயர் பெறும் நூல்களுள் ஒன்றாக ‘அரசன் விருத்தம்’ இடம் பெறுகிறது. (தொ. வி. 283 உரை)
அரசனைச் சார்ந்துவரும் இலக்கியங்களில் அரசன் விருத்த மும் ஒன்று: மலை, நீர், நாடு, நிலம் ஆகியவற்றின் வருணனை களும், அரசனுடைய தோள்மங்கலம், வாள்மங்கலம் ஆகியனவும், பத்துக் கலித்துறையும் முப்பது விருத்தமும் கலித்தாழிசையுமாகிய யாப்பினால் பாடி முடிப்பதொரு பிரபந்தம். இது முடிபுனைந்த வேந்தர்க்கு ஆம். (நவ. பாட். மிகைச் செய்யுள்கள் - 1 சது. 5)
கழுத்திற் கத்திகட்டி எதிரி கொடுக்கும் சமத்திக்கு இணங்கப் பாடுதல் (சமத்தி - சமஸ்யை) (L)
இருபது வயது முதல் இருபத்தைந்து வயது ஈறாக உள்ள பெண். (பிங். 941); [இச்சொல் பொதுப்படப் பெண் என்றும் பொருள்படும் (பிங். 945)]. (இ. வி. பாட். 102)
குறள்வெண்பாவால் இயன்ற சமண மதத்து நீதிநூல். (L)
அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றின் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் மறைப்பொருள் உபதேசம் காணப்படுவதாயும் அது வல்லார்வாய்க் கேட்டு உணரத் தக்கதாயும் யாப்பருங்கல விருத்தி கூறுகிறது. இந்நூல் இப்போது வழக்கில் இல்லை. (யா. வி. பக். 491)
நூல் ஆராய்ச்சியையே விளையாட்டாக உடையவன். ‘அருங்கலை விநோதன் அமராபரணன்’ (நன். சிறப். 4) (L)
வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தனையும் அந்தாதியாகப் பாடும் பிரபந்தம். (இ. வி. யாப். 84).
ஒற்றெழுத்தும் ஆய்தமும் அலிஎழுத்து எனப்படும். (வெண்பாப். 7)
ஆயின், பிங்கலந்தை நிகண்டு அலியெழுத்தென மெய் யெழுத்தினைக் குறிக்கிறது. (1360)
பௌத்த முனிவருள் ஒருவன். அவன்பால் அகத்தியன் பாடம் கேட்டுத் தண்டமிழ் இலக்கணம் வகுத்தான் என்னும் வீர சோழியம். (பாயிரம் 2)
இஃது ஒரு காலத்தே எழுத்துச் சொற் பொருள் என்ற மூன்றனையும் விளக்கிய பெருநூலாக வழங்கியதுபோலும். அவிநயம் என்ற நூலின் யாப்புப் பகுதியினின்று 63 நூற் பாக்கள் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுள் இடம் பெற்றன. இந்நூற்கு இராசபவித்திர பல்லவதரையன் உரை வரைந்த செய்தி நன்னூல் மயிலைநாதருரையால் (சூ. 359) புலப்படுகிறது. தளைச் செய்திகள் சில, தொடைச் செய்திகள் சில, ஆசிரியத்தாழிசை - வஞ்சிவிருத்தம்- போல்வன நீங்கலாக ஏனைய யாப்புப் பற்றிய செய்திகள் பலவும் மேற்கூறிய 63 நூற்பா வாயிலாகப் பெறப்படுகின்றன. இதன் ஆசிரியர் அவிநயனார். ஆசிரியனது இயற்பெயரால் பெயர்பெற்றது இந்நூல். (யா. வி. பக். 21, 25, 27 முதலியன)
அவிநய நூலாசிரியர்.
கணித நூலுள் ஒன்று; பதினாறு வரிகருமம், ஆறு கலாச வருணம், இரண்டு பிரகரணச் சாதி, முதகுப்பை ஐங்குப்பை என்ற பரிகருமம், மிச்சிரகம் முதலாகிய எட்டு அதிகாரம் முதலாய பண்டைக் கணிதம் பற்றிய செய்திகளை எடுத்துக் கூறுவது. (யா. வி.பக். 569)
அவை - சபை; நல்லவை, தீயவை, குறையவை, நிறையவை என்ற நான்கும் சபை. (யா. க. 96 உரை. பக். 553)
சபை வணக்கம். இது ஸபாஸ்தவம், விநயப்பிரசாரம் எனவும் கூறப்படும். (சீவக. 647 அடிக்)
அவையினர்க்கு வழிபடுகிளவி கூறுதல். இஃது அவையடக்கு, அவையடக்கியல் எனவும் பெயர் பெறும். (சீவக. 4 உரை)
‘அவையடக்கம்’ காண்க.
1) பண்டிதர் கூட்டம் 2) நியாயம் உரைக்கும் சபையோர் - ‘சிறந்த கொள்கை அறங்கூறவையமும்’ (மதுரைக் 492) 3 சபாமண்டபம் : ‘வாய்மை யிகழ்ந்துளான் அவையத்தை முன்னீறு செய்து’ (கந்த. சதமுக. 21) (L)
அவையின் அமைதியாவது, நல்லோர் இருந்த நல்லவையும், தீயோர் இருந்த தீயவையும் எனக் கொள்க (வீ. சோ. 181 உரை)
இவர் பாடிய 32 பாடல்களும் கலித்தாழிசையை ஒத்த ஒருவகைச் சிந்து அமைப்பின. பாடல், நான்கு அடிகளும் தம்முள் அடியெதுகை பெற்று ஈற்றடி நீண்டிசைத்து ‘என் கண்ணம்மா’ என்ற தனிச்சொல் பெற்று வருகிறது; ஈற்றடி நீண்டிசைப்பதால் கலித்தாழிசை போல்வது. கலித்தாழி சையினின்றே பிற்காலத்துச் சிந்துயாப்புத் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர். (இலக்கணத். முன். பக். 102, 103)
பஞ்சமரபு என்னும் நூலின் ஆசிரியர். (சிலப். 6 : 35 உரை)
சிந்தம் என்ற இந்நூல் அறிவுடை நம்பி என்பவரால் இயற்றப் பட்டது. இது செவியறிவுறூஉ என்னும் புறத்துறை பற்றியது. இது நீண்ட பாடல் வடிவிற்று; தூங்கலோசைத்தாய்ச் சுரிதகத்தின் அருகு தனிச்சொல்லின்றி முழுதும் இருசீரடியா யமைந்தது. இது வஞ்சிப்பாப் போன்றது எனினும், வஞ்சிப்பா ஆகாது. செவியறிவுறூஉ ஆனது ஆசிரியம் வெண்பா மருட்பா என்ற பாக்களாலேயே பாடப்படல் வேண்டும் என்ற வரையறை யுண்டு ஆதலின், இதனை வஞ்சியடியால் வந்து பொருள் உறுப்பு அழிந்தமை பற்றி ‘உறுப்பழி செய்யுள்’ என்க. (யா. வி. பக். 372)
இவ்விரு நூல்களையும் இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவற்றில் யாப்புப் பற்றிய செய்தியே யுள. எழுத்து முதலிய ஐந்திலக்கணத்துடன் புலமையிலக் கணத்தையும் கூறும் நூல் அறுவகை இலக்கணம். இதனால் பெயர்க் காரணம் புலனாகும். இந்நூலில் 786 நூற்பாக்கள் உள்ளன. பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமும் இத் தொகையுள் அடங்கும்.
ஏழாம் இலக்கணம் அறுவகை இலக்கணத்திற்கு ஓர் அங்கமாய் அவற்றது புறநடையாக அமைகிறது. பாயிரமும் நூல் இறுதி வெண்பாவும் தவிர 318 நூற்பாக்கள் இதன் கண்ணுள்ளன. புணர்ப்பு இயல்பு, சொன்னிலை இயல்பு, பெயர்ச்சொல் இயல்பு, விபத்தி இயல்பு, ஒற்றுமை இயல்பு, வினைச்சொல் இயல்பு, இடைச்சொல் இயல்பு, உரிச்சொல் இயல்பு, பொருள் இயல்பு, யாப்பு இயல்பு, அணி இயல்பு, புலமை இயல்பு என்னும் இவற்றுடன் தவஇயல்பு என்ப தொன்றும் சேர 13 பிரிவுகளை யுடையது இந்நூல். புணர்ப் பியல்பும் சொன்னிலையியல்பும் பற்றியே பெரும்பாலான நூற்பாக்கள் அமைந்துள்ளன.
தலைவன் கனவின்கண் ஒருத்தியைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து இனிமையுறப் புணர்ந்ததைத் தன் உயிர்ப்பாங்கற்கு உரைத்ததாக நேரிசைக் கலிவெண்பாவில் பாடுவதொரு பிரபந்தம். (இ. வி. பாட். 104)
அட்டகம்; அது காண்க.
ஆ
நூலின் முதற்பாடல் முதற்சீர்க்குப் பொருத்தமற்ற கணங் களுள் ஒன்று. அது பாட்டுடைத் தலைவன் வாழ்நாளைக் குறைக்கும் என்பர் மாமூலனார். இஃது ‘அந்தரகணம்’ எனவும்படும். அது காண்க. (இ. வி. பாட். 40 உரை)
4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 நிலங்களையுடைய குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என்ற எல்லா அடிகளும் ஆசிரியப்பாவிற்கு உரியவாதல் உண்டு. எல்லாப் பொருள்மேலும் ஆசிரியம் வரும். எல்லா நிலமும் அடிப் படுத்தலும் எல்லாப் பொருள்மேலும் நண்ணுதலும் அரசர்க்கும் உரியன. ஆதலின் ஆசிரியம் அரசர்பா ஆகும். (யா. க. 74 உரை மேற்)
“இவ்வெழுத்தாலே பாடுக, இச்சொல்லாலே பாடுக, இப்பொருளாலே பாடுக, இவ்யாப்பாலே பாடுக, இவ் வலங்காரத்தாலே பாடுக” என்று ஒருவன் சொன்ன உள்ளுறைக்கு அவனெதிரே அப்பொழுதே பாடுவது. ஆசுகவி பாடும் புலவனும் ஆசுகவியாம். இவற்றில் இரண்டும் மூன்றும் அகப்படப் பாடுதல் சிறப்புடைத்து என்ப. மிக்க புலமைத் திறனோடு இறையருள் வாய்த்தவற்கே இவ்வாறு பாடுதல் கூடுதலின், இக்கவி முதல்வகையாகக் கூறப்பட்டது. (வெண்பாப். செய். 2., இ.வி.பாட் 4)
அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றைக் கூறிய நூல்களின் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்பட வேண்டுவது. (யா. வி. பக். 491)
அ இ உ எ ஒ என்னும் குற்றெழுத்து ஐந்தும் ஆம்.
(இ. வி. பாட். 13)
‘ஆண்பாற் பிள்ளைத்தமிழ்’ காண்க.
தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று; சிவ பெருமான் நீங்கலான ஆண்பாற்கடவுளரையோ ஆடவருள் மிக்காரையோ குழவியாகக் கருதி அதன்மேலேற்றிக் கூறும் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்னும் பருவங்கள் பத்தும் பருவத்திற்குப் பத்துப்பாடலாக ஆசிரியவிருத்தத்தாலும் சந்தவிருத்தத்தாலும் பாடப்பெறுவது இத்தொடர்நிலைச் செய்யுள். காப்புப் பருவத்துள் பத்துப்பாடல் மேலும் சில கூடப்பெறுதலும் உண்டு. முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் ஓர் எடுத்துக்காட்டு. (இ. வி. பாட் 46, 47)
அஃதாவது ஆண்பாற் பிள்ளைத்தமிழ். தெய்வக்காப்புப் பருவம் இரண்டாம் திங்களிலும், செங்கீரை ஐந்தாம் திங்களிலும், தால் ஏழாம் திங்களிலும், இன்னமுதூட்டல் எட்டாம் திங்களிலும், சப்பாணி ஒன்பதாந் திங்களிலும், முத்தம் பத்தாம் திங்களிலும் வருகை ஓராண்டு நிறைவிலும், அம்புலி காட்டல் பதினாறாம் திங்களிலும், சிறுபறைகொட் டல் இரண்டாம் ஆண்டிலும், சிற்றில் சிதைத்தல் மூன்றாம் ஆண்டிலும், சிறுதேர் உருட்டல் நாலாம் ஆண்டிலும், இவ்வாறாகப் பன்னீராண்டுவரை பிள்ளைப்பாட்டுப் பாடப்பெறும். (திவா. பக். 309)
இதனைச் சிறிது வேறுபடக் கூறுதலுமுண்டு. (பிங். 1368)
உயிரெழுத்து. (பிங். 1358)
வேதாங்கமாகிய கற்பத்தைப் பற்றிய ஒரு வடநூல். ‘போதா யனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும்’ (தொ. பொ. 75 நச்.)
ஆத்திரைய கோத்திரத்திற் பிறந்த இவர் தொல்காப்பியம் முதலிய நூற்குப் பொருந்த பொதுப்பாயிரம் செய்த ஆசிரியர். (தொ. பொ. 653 பேரா.)
இப்பொதுப் பாயிரத்தில் ஈவோன்தன்மை, ஈதல் இயற்கை, கொள்வோன்தன்மை, கோடல்மரபு என்ற நான்கும் விரித் துரைக்கப்பட்டுள்ளன. இப்பொதுப்பாயிரத்துக்கு அரசஞ் சண்முகனார் தம் பேரறிவுடைமை தோன்ற விருத்தியுரை செய்துள்ளார்.
தமிழில் முத்தமிழிலக்கணமாகிய அகத்தியத்தைத் தன் பெயரால் வழங்கிய அகத்தியனே ஆதிப்புலவன் எனப்படு வான்.
ஆதிவாயிலார் என்னும் புலவர் இந்திரகாளியம் என்னும் இசைநூலை இயற்றினார் என்ப. (சிலப். அடியார்க்குநல்லார் உரைப் பாயிரம்). அடியார்க்குநல்லார்தம் அரங்கேற்றுக் காதை யுரைக்கு இவ்விசைநூல் மேற்கோளாக உதவிற்று.
எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும் போந்த வீரனது சிறப்பினை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தம். (தொ. வி. 283 உரை)
ஆடை நூல் போல், அறம்பொருளின்பம் வீடு என்பவற்றைக் கூறிய நூல்களின் சார்பாக அமைந்த வொருநூல். இதன்கண் கிடக்கும் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுணரத் தக்கது. (யா. வி. பக். 491)
முதல்நூலால் பெயர் பெற்றதாகிய ஒரு பண்டைய நூல் இது.
(நன். 49 மயிலை.)
பத்துப்பாட்டுள் இறுதிப்பாட்டாகிய மலைபடுகடாத்தில் 145 ஆம் அடியாகிய ‘தீயி னன்ன ஒண்செங் காந்தள்’ என்றற்கு உரை வரையுமிடத்தே, “இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோடு அடுத்த தன்மையின் ஆனந்தமாய், பாடினாரும் பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையா சிரியர் கூறினாரால் எனின், அவர் அறியாது கூறினார்................. சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினும் கொள்ளா ரென மறுக்க” என்று நச்சினார்க்கினியர் குறித்த செய்திக் கண், ‘ஆளவந்த பிள்ளையாசிரியர்’ என்பார் பெயர் காணப்படுகிறது. ஆளவந்த பிள்ளையாசிரியர் நச்சினார்க் கினியர்க்கு முற்பட்ட காலத்தவராய், தொல்காப்பியத்தி லன்றிப் பின்னுள்ளோர் செய்த நூல்மரபு பற்றிய நூல்களில் தேர்ச்சி யுடையராய் இருந்தவர் என்பதும்; எழுத்து முதலிய ஆறு வகை ஆனந்தக் குற்றங்களும் பற்றி இலக்கியம் பாட்டின் பாடிய புலவனுக்கும் பாடப்பட்ட பாட்டுடைத் தலைமக னுக்கும் ஏதமுண்டாம் என்று துணிந்தவர் என்பதும்; யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் கொண்ட கருத்தே தம் கருத்தாதலின், பொருளானந்தம் நிகழ வந்தனவாக அவ்வுரை யாசிரியர் குறித்த மலைபடு. 145-150 அடிகளிடையே, 145 ஆம் அடிக்கண், ‘இயற்பெயர் மருங்கின் மங்கல மழிய’த் ‘தீயினன்ன ஒண்செங் காந்தள்’ என்று நன்னன் என்னும் பாட்டுடைத் தலைவனது பெயர் தீயோடு அடுத்து வந்த தன்மையால் சொல்லானந்தக் குற்றம் வந்துற்றமையால் பாடிய புலவனும் பாட்டுடைத் தலைவனும் இறந்துபட்டனர் என்ற துணிவுடையார் என்பதும் புலப்படுகின்றன. இவ் வானந்தக் குற்றங்களைச் சொல்லியவர் குணசாகரர் போன்ற சமணப்புலவர் சிலரே.
“பண்டை நூலாகிய தொல்காப்பியம் முதலியவற்றுள் அவை காணப்படாமையின், சங்கச் சான்றோர் பாடலுள் அவை வரினும் குற்றம் உடையன அல்ல, அப்பாடல்கள்; அன்றியும், இப்பாடற் பகுதிக்கண் ‘நன்னன்’ என்பது சொல்லன்றி ‘அன்ன’ என்பதே சொல்லாதலானும், ‘நன்ன’ என விளிக்கப்பட்ட விடத்தே “தீப்போன்ற நன்ன!” என்று பொருள்படுமாயினும், ஆண்டுப் படர்க்கையாக வரும் செய்திக்கண் முன்னிலைச் சொல் வருதற்கு இயைபு இன்மையானும், இவ்வானந்தக் குற்றம் இவ்வடிக்கண் வந்தது என்று சொல்லற்கு இடனில்லை” என்பது நச்சினார்க் கினியரது மறுத்துரை.
அகத்தியனார் இயற்றிய முத்தமிழ் நூலாகிய அகத்தியத்துள் இப்பெயருடைய இயல் ஒன்று உளதாகவும், அதன்கண் எழுத்தானந்தம் சொல்லானந்தம் பொருளானந்தம் யாப் பானந்தம் தூக்கானந்தம் தொடையானந்தம் ஆனந்தப்பை யுள் முதலிய குற்றங்கள் கூறப்பட்டுள்ளவாகவும் யாப்பருங் கல விருத்தி கூறும். (யா. வி. பக். 45 முதலியன)
இங்ஙனம் ஆனந்தஓத்து என்று இயலொன்று அகத்தியனா ரால் இயற்றப்பட்டதென்பது பொருந்தாக் கூற்று என்பது பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோர்தம் கருத்து.
(தொ. பொ. 312 பேரா.) (மலைபடு. 145 நச்.)
இ
1) பாட்டுடைத் தலைவன் கருத்தினை விளக்கும் பாடல்
2) இனிமை தரும் கவி பாடுவோன் (L)
இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை என்னும் நூல் தன்கண் பயிலும் எடுத்துக்காட்டுக்களுக்கு முதல்நினைப்பு உணர்த்தும் நூற்பாக்களை யுடையது; இயல்தோறும் செய்யுள்களுக்கு முதல்நினைப்பு உணர்த்தும் நூற்பாக்களை யும் அவ்வப்பகுதி இறுதிதோறும் உடையது. அதுபோலவே யாப்பருங்கலக்காரிகையும் உதாரணப்பாடல்கட்கும் இயல் தோறும் காரிகைச்சூத்திரங்கட்கும் முதல்நினைப்புணர்த்தும் காரிகைகளைத் தன்னகத்தே கொண்டது. முதல்நினைப்பு ஓதிய யாப்பருங்கலக்காரிகையாகிய நூலுக்கு இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை எடுத்துக்காட்டாக உரையாசிரியர் குணசாகரரால் எடுத்துக்காட்டப்படுகிறது. (யா. கா. 1 உரை)
இஃது ஓர் இசைத்தமிழ் இலக்கணநூல். இடைச் சங்கத் தார்க்கு நூலாக இருந்தவற்றுள் இதனையும் ஒன்றாக இறை யனார் அகப்பொருள் உரை எண்ணும். இந்நூல் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் காலம் வரை இருந்து இறந்தது போலும். இது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன் பொருட்டுச் செய்த இடைச்சங்கத்து வழிநூல் என்ப. (சிலப். அடியார்க்.உரை)
‘முந்து நூல்’ எனப்பட்டவற்றுள் இசை நுணுக்கமும் ஒன்றாக உரைக்கப்படும். (தொ. சிறப். நச்.)
ஆதியின் முனைவன் தமருகத்தினின்று ஆரியத்திற்கு முதல் நூலாக மாகேச்சுர சூத்திரம் தோன்றினாற் போல, அக்காலத் தில் தானே அவனது வாயினின்று தமிழிற்கு முதல்நூலாக முப்பத்து மூன்று சொற்கள் தோன்றின. அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டன. அவை நுணுகி ஆராய்ந்த விடத்தே, இயல் இசை நாடகம் எனும் முத்தமிழிலக்கணமும் முப்பொருளும் முற்றத் தோன்றும் இயல்பினவாயிருந்தமை யால், அச்சூத்திரங்கட்கு ‘இசை நுணுக்கம்’ எனப் பெயர் வழங்கிற்று. இசை என்பது சொல். அதுவே தமிழிற்கு இயற்கை முதல்நூல் எனப்படும். இசைநுணுக்கம் என்னும் பெயரான் இசைத்தமிழே கூறுவதாகிய நூலொன்றுமுண்டு. அது சிகண்டி ஆசிரியனால் சாரகுமாரன் பொருட்டுச் செய்த இடைச்சங்க காலத்து வழிநூல். (பா. வி. பக். 96, 97)
இசையிலக்கணம் கூறும் ஒருநூல். (சீவக. 658 நச்.)
எழுத்தல்லாத முற்கு, வீளை முதலாயின செய்யுளில் வந்தால் அவை செய்யுள்நடை அழியாமல் அசை சீர் தளை முதலா யின பிழையாமல் கொண்டு வழங்கப்படும். இடைக்காடனார் பாடிய ஊசிமுறி இவ்வகைய எழுத்தல்லாத ஓசை செய்யுள் நடை அழியாவாறு எழுதப்பட்ட யாப்பினை உடையது. விட்டி சைக்கும் தற்சுட்டுக் குறிப்புச்சொற்கும் இவர் பாடலே எடுத்துக் காட்டாக வுள்ளது. (யா. வி. பக். 396, 153)
கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைப் பாடல்களிடை இதுவும் ஒன்று. தெருவிடை மோர் விற்றுக் கொண்டு செல்லும் இடைக்குலக் கன்னியின் எழில் நலம் தன் உள்ளத்தை வருத்திய செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக் கூறும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல் இது.
(மதுரைக் கல. 63)
வெண்பாவும் அகவலும், வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாக இணைத்து, வெண்பாஅகவல் இணை மணி மாலை, வெண்பாக்கலித்துறை இணைமணிமாலை என நூறு நூறு அந்தாதித்தொடையாக வரப் பாடுவது இணை மணிமாலை என்னும் பிரபந்தத்து இலக்கணமாம். முதற் பாடலின் முதற்சீரும் இறுதிப் பாடலின் இறுதிச்சீரும் மண்டலித்து வருதல் அந்தாதித் தொடையால் அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். (இ. வி.பாட். 58)
செய்யுட் கணங்களுள் ஒன்று. இதனைச் சுவர்க்க கணம் என்றும் கூறுப. கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப் பாகக் கொள்ளப்படும். முற்றும் நேராகிய தேமாங்காய் இந்திர கணமாம். இதற்குரிய நாள் பரணி என்றார் இந்திர காளியர். இதன் பலன் பெருக்கம் செய்தல் என்றார் மாமூலர். இன்பம் செய்தல் என்றார் இந்திரகாளியர். ஆகவே முதற் சீர்க்கு எடுத்த சீர்களுள் இதுவும் ஒன்று.(இ.வி.பாட். 40 உரை)
இஃது ஓர் இசைத்தமிழ்நூல்; யாமளேந்திரரால் இயற்றப் பட்டது. (சிலப். பதிகம்.அடியார்க். உரை)
சுவர்க்க கணம் எனவும், இந்திர கணம் எனவும், சொல்லப் பெறும். பாடப்படும் முதற்பாடலின் முதற்சீர் தேமாங்காய் என்ற வாய்பாட்டால் நிகழ்வது. இதற்குரிய நாள் பரணி யாகும். (இ. வி. பாட். 40 உரை)
பொருளானன்றி ஓசையான் முதற்பாடலின் அந்தம் அடுத்த பாடலின் ஆதியாக வருவது.
எ-டு : ‘புரிவதும் புகைபூவே’ என முதற்பாடல் முடிய, அடுத்த பாடல் ‘மதுவார் தண்ணந் துழாயான்’ என மகர வருக்க ஒசையில் தொடங்கும் அந்தாதிவகை இயலிசை அந்தாதி எனப்படும். (ஈ.டு 1:6:2 ஜீயர் அரும்பதவுரை)
இது பொருளிசை அந்தாதிக்கு மறுதலையானது. (பூவின் ஆகுபெயராக மது வந்தமையால் இஃது ஆகுபெயரந்தாதி யாம்.)
தொடர்நிலைச் செய்யுளின் முதற்சீர் தேமா புளிமா வாகிய நேரீற்று இயற்சீரும், கூவிளம் கருவிளமாகிய நிரையீற்று இயற்சீருமாயிருப்பின் அவற்றுக்கும் பின்வருமாறு கணம் கூறப்படும்:
சீர் கணம் தெய்வம்
தேமா சுவர்க்கம் பிரமன்
புளிமா சந்திரன் இலக்குமி
கூவிளம் நீர் கருடன்
கருவிளம் நிலம் சுரபி (இ.வி.பாட். 42)
இயலிசைநாடகம் என்னும் முத்தமிழுள் முதலாயது. இசை யும் நாடகமும் நீங்கலான ஏனைய இலக்கிய இலக்கணங்கள் செய்யுளும் உரைநடையுமாக இயல்வன இயலுள் அடங்கும்.
இறந்தவர்மீது வருந்திப் பாடும் சரமகவி. (L)
பத்து வெண்பாவும் பத்து அகவலும், ஒரு பாவினை அடுத்து மற்றொருபா வருமாறு அந்தாதித்தொடையால் மண்டலித்து வரப் பாடுவதொரு பிரபந்தம். இவ்விலக்கணம் சாமிநாதத் தில் மாத்திரமே காணப்படுகிறது. (சாமி. 169)
முதலில் வெண்பாவும் அடுத்துக் கலித்துறையும் அடுத்து வெண்பாவும் கலித்துறையுமாக. இவ்வாறு அந்தாதித் தொடையான் இருபது பாடல் பாடப்படும் பிரபந்தம். முதற் பாடலுடன் இறுதிப் பாடல் மண்டலித்து வரும்.
(இ. வி. பாட். 59)
வடமொழிவழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் சந்தங்கள் தாண்டகங்கள் இவற்றின் பலவகைகளுடைய இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. (யா. வி. பக். 523)
அவிநயனார் இயற்றிய அவிநயநூல் உரையாசிரியர். ‘பெயர் வினை யும்மை’ (நன். 359) என்னும் சூத்திரத்துள் கூறிய பத்துவகை எச்சங்கட்கும் இராச பவித்திரப் பல்லவதரையர் மொழிந்தவாறு மயிலைநாதர் உரை கூறினார். ‘இந்தப் பத்தெச்சமும் புவிபுகழ் புலமை அவிநயநூலுள் தண்டலம் கிழவன் தகைவரு நேமி எண்டிசை நிறை பெயர் இராச பவித்திரப் பல்லவதரையன் பகர்ச்சி என்றறிக’ என்பது அவர் உரை.
வெண்பாவிற்கு உரிய இராசி கடகம், விருச்சிகம், மீனம் என்பன. ஆசிரியப்பாவிற்குரிய இராசி மேடம், சிங்கம், வேணு (வில்) என்பன. கலிப்பாவிற்கு உரிய இராசி மிதுனம், துலாம், கும்பம் என்பன. ஏனைய வஞ்சிப்பாவிற்குரிய இராசி இடபம், கன்னி, மகரம் என்பன. (இ. வி. பாட். 122)
கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் என்பன. (விதான. கடிமண உரை)
19ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்த இயற்றமிழ் ஆசிரியர். இவர் நாற்பது வயதுக்குப் பின்னரேயே கற்றுப் புலமைப் பெற்றார் என்பர். இவருடைய ஆசிரியர் சிவஞான முனிவருடைய மாணவருள் ஒருவராகிய சோமசுந்தரக் கவிராயர் (முனிவருடைய மாணாக்கர் பரம்பரையைச் சார்ந்த வராகச் சோமசுந்தரக் கவிராயர் இருத்தலும் கூடும்) இவருடைய மாணாக்கர்களாக விசாகப்பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர், டாக்டர் போப்பையர் முதலி யோர் சிறப்பாகக் குறிக்கப்பெறுகின்றனர். நாயுடு வகுப் பினைச் சேர்ந்த இவர் இயற்பெயர் இராமாநுசர் என்பது. ஆசுகவிபாடும் ஆற்றல் கைவரப்பெற்றவர் என்பது இவரது வரலாற்றில் காணப்படும். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, திருக்குறள், நன்னூல் இவற்றுக்கு இவர் உரை இயற்றியுள்ளார். திருவேங்கட அனுபூதி, பார்த்தசாரதி பதம் புனை பாமாலை, வரதராசர் பதிற்றுப்பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் பஞ்சரத்தின மாலிகை, இலக்கணச் சுருக்கம் என்பன இவரியற்றிய நூல்களாம். குடாரம் என்ற மறுப்பு நூலொன்றும் ஆத்தும போதப் பிரகாசிகை என்னும் வடமொழியினின்றும் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒன்றும் இவரால் ஆக்கப்பட்டவையாக அறிய முடிகிறது. இவ ருடைய பேருதவி, தாம் ‘ஆங்கிலம் - தமிழ்அகராதி’ தொகுக்கப் பெரிதும் பயன்பட்டதாக வின்ஸ்லோ அவ்வக ராதி முன்னுரையில் குறித்துள்ளார். இவர் 1853இல் உயிர் நீத்ததாகத் தெரிகிறது.
கம்பர் இயற்றிய இராமாவதாரப் பெருங்காப்பியத்திற்கு மிக முற்பட்டுத் தமிழில் பல அடியான் வந்த பஃறொடை வெண் பாக்களையும் உள்ளடக்கிய ‘இராமாயணம்’ என்ற பெருங் காப்பிய நூல் இருந்தமை யா.க. விருத்தி உரையினால் உணரப்படுகிறது. (யா. வி. பக். 250)
சிறிய பாவகை; ‘ஏகபாதம் தமிழிருக்குக் குறள் சாத்தி’ (பெரியபு. திருஞான. 276); இரு சீரான் இயன்ற அடி உடைய பாட்டுத் ‘திருவிருக்குக் குறள்’ எனச் சம்பந்தர் தேவாரத்துள் ளும் திருவாய்மொழியுள்ளும் காணப்படும்.
‘அரனை உள்குவீர்
பிரம னூருளெம்
பரனை யேமனம்
பரவி உய்ம்மினே’ (தே. I - 90-1)
இவ்விருக்குக் குறளின்கண், குறளடியில் சீர் இயற்சீராகவே வந்தவாறு.
பிரபந்தவகைகளுள் ஒன்று, பத்து வெண்பாவும் பத்து அகவலும் அந்தாதித் தொடையாக இருபது இணைந்து வருவது. முதலும் இறுதியும் பாடல் மண்டலிக்கும். (இ. வி. பாட். 62)
17ஆம் நூற்றாண்டில் சாமிநாத தேசிகரால் சொல்லிலக் கணம் பற்றிய பல இலக்கண நூல்களிலும் உரைகளிலும் இலைமறை காய்போலப் பொதிந்து கிடந்த அருஞ்செய் திகள் பலவும் தொகுத்துரைக்கப்பட்ட அரிய இலக்கணநூல். இந்நூல், பாயிரமாக அமைந்த 12 நூற்பாக்களொடு, வேற்று மையியல், வினையியல், ஒழிபியல் என்னும் முப்பகுப்புக் களையுடையது. நூற்பா 131. இலக்கண விளக்கம், பிரயோக விவேகம் என்னும் இருநூல்கட்கும் இந்நூல் பிற்பட்டது, அவ்விரண்டற்கும் அவ்வவ்வாசிரியரே உரையும் வரைந்தாற் போல, இந்நூலுக்கும் இவ்வாசிரியர் உரை வரைந்துள்ளார். தமிழ்நூலார் பல வடமொழி இலக்கணச் செய்திகளை யுணர இந்நூல் பெரிதும் துணைசெய்யும். இந்நூற்பயிற்சி பிரயோகவிவேகம் பயிலுதற்குப் பெரிதும் துணைசெய்வது. தஞ்சைச் சரசுவதிமகால் பதிப்பு மிக விழுமியது. அதன்கண் விளக்கவுரை அறிஞர்க்கு விருந்தூட்டவல்லது.
வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கணவிளக்கத்து எழுத் ததிகார சொல்லதிகாரங்களுள் சில சூத்திரக் கருத்துக்களை மறுத்த தமது உரைக்குச் சிவஞான முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளி என்று பெயரிட்டார். இலக்கணம் ஆகிய விளக்கை அணைந்து போமாறு வீசிய சூறைக்காற்று என்பதே பொருள். இச்சூறாவளி மறுப்புரை பொருந்தாமை அரசஞ் சண்முகனார் உரை முதலியவற்றால் தஞ்சைச் சரசுவதி மகால் இலக்கண விளக்க எழுத்ததிகார சொல்லதி காரப் பதிப்பில் ஐயம் திரிபறப் புலப்படுத்தப்பட்டுள்ளமை தமிழறிஞர்தம் நடுவுநிலை ஆய்வுக்கொரு கலங்கரை விளக்கம் போல உதவும்.
பாட்டின்கண்ணவாகிய இலக்கணம், நூலின்கண்ணவாகிய இலக்கணம், உரையின்கண்ணவாகிய இலக்கணம், பிசியின் கண்ணவாகிய இலக்கணம், முதுசொற்கண்ணவாகிய இலக்கணம், மந்திரவாய்மைக்கண்ணவாகிய இலக்கணம். குறிப்புமொழிக்கண்ணவாகிய இலக்கணம், வழக்கும் செய்யுளுமாகிய ஈரிடத்தும் நடக்கும் இருவகை மரபின் இலக்கணம், நால்வகை வருணத்து இலக்கணம், நாற்புலவர் இலக்கணம், அவை இலக்கணம், அகலக்கவி செய்து கொடுப்போர் இலக்கணம், அதனைக் கொள்வோர் இலக்கணம் ஆகிய பதினான்கனோடும் ஏற்பன பிறவும் ஆம். பிற இலக்கணமாவன நான்குபாவிற்கும் வருண உரிமையும், நில உரிமையும், நிற உரிமையும், நாள் உரிமையும் இராசி உரிமையும் கோள் உரிமையும் அக்கோள்கட்கு உரிய பூவும் சாந்தும் கலையும், அகலக் கவியைக் கொள்ளும் ஓரையும் என்றவாறு.
பதினேழாம் நூற்றாண்டினரான பெரும் புலவர் வைத்திய நாத தேசிகரால் எழுத்தும் சொல்லும் பொருளும் பற்றி இயற்றப்பட்ட சீரிய இலக்கண நூல். ‘குட்டித் தொல்காப்பி யம்’ என இது வழங்கப் பெறுதலே இதன் பெருமைக்குச் சான்று. நூல் ஆசிரியரே உரையாசிரியரும் ஆவர். இதன்கண் 941 நூற்பாக்கள் உள.
இந்நூலின் மிக விழுமிய பதிப்புத் தஞ்சைச் சரசுவதி மகால் வெளியீடு. அரிய விளக்கமும் ஆராய்ச்சியுமுடைய அதனைப் பின்பற்றியே கழகப்பதிப்பு முதலாகப் பிற வெளிவந்துள்ளன.
இந்நூலின் பெருமையினைக் குறைக்க இலக்கண விளக்கச் சூறாவளி என்ற கண்டனநூல் அடுத்த நூற்றாண்டில் வெளி யிடப்பட்டது. ஆயினும் இந்நூலின் பெருமை குன்றாது இன்றும் நின்று நிலவுகிறது.
பெருங்காப்பியத்துள் உட்பிரிவு. சீவகசிந்தாமணியுள் நாமகள் இலம்பகம் முதலாக வருதல் காண்க. (தண்டி. 8)
நூற்பாவுள் வரும் மிகையான சொல். அதனால் சில கருத் துக்களை வருவித்துரைப்பது உரையாசிரியர்தம் கொள்கை.
ஐந்து வயதுக்குட்பட்ட இளம்பாலார்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். அகநா. 102ஆம் பாடல் பாடிய ஆசிரியர் இளம் பாலாசிரியன் சேந்தங்கூத்தன் எனப்பட்டார். (L)
தொல்காப்பியத்திற்கு முதலாக உரை வரைந்த பெரியார்; இவரைப் பெயர் சுட்டாமல் உரையாசிரியர் என்றே வழங்கு வர். இளம்பூரண அடிகள் என்றும் கூறுப. இவரது காலம் 12 ஆம் நூற்றாண்டென்ப. ‘உளங்கூர் கேள்வி இளம்பூரணர் என்னும் ஏதமில் மாதவர்’ என்று மயிலைநாதரால் போற்றப் படுபவர். (நன். 359 மயிலை.)
குறுந்தொகை இரண்டாம் பாடலை இயற்றிய கடைச்சங்கப் புலவர். இறையனார் சிவபெருமானையே குறிப்பதாகக் கொண்டு புராண வழக்கொடு தொடர்புறுத்திக் கூறவும்படும். ‘அன்பின் ஐந்திணை’ முதலாகத் தொடங்கும் 60 சூத்திரங் களையும் கொண்ட அகப்பொருள் நூல் இறையனார் அகப்பொருள் எனவும் இறையனார் களவியல் எனவும் பெயர் வழங்கப்படுகிறது.
இறைவன் அருளியதால் பிற்காலத்தே தோன்றினும் இதனை முதல்நூலே என்பர். (தொ. பொ. 649 பேரா. உரை)
கடைச்சங்க காலத்தை ஒட்டி எழுந்ததோர் அகப்பொருட் சுருக்கநூல். இதன்கண் 60 நூற்பாக்கள் உள்ளன. அவற்றுள் களவு பற்றியன 33; கற்புப் பற்றியன 27. இந்நூலில் களவு பற்றிய பகுதி மிக்கிருத்தலின் அம்மிகுதி பற்றியே இந்நூலை இறைய னார் களவியல் என்றும் கூறுவர். இதனை இயற்றியவர் சிவபெருமானே என்பது முன்னோர் கருத்து. இறையனார் என்ற புலவரது படைப்பு இஃது என்பது இக்காலத்தார் துணிபு. 60 அழகிய நூற்பாக்களைக் கொண்ட இந்நூலுக்கு விரிவான சிறந்த உரை ஒன்றுளது. கடைச்சங்க காலத்தை யொட்டிய இந்நூலுக்கு வரையப்பட்ட உரைப்பகுதிகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிக் கோவையோடு இணைக்கப்பட்டமைந்த உரையே இப்போது காணப்படு கிறது. தமிழில் இப்போது காணப்படும் உரைகளில் இது பழமையானது. (உரையாசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் என்பது தொன்றுதொட்டுத் துணியப்பட் டமை தொ.பொ. 649 பேரா. உரையாலும் அறியலாகும்.)
இந்நூற் கருத்துக்கள் சில தொல்காப்பியத்துடன் மாறு பட்டிருப்பினும் கற்க வேண்டிய சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. இஃது இறைவன் அருளியதாதலின் பிற்காலத்தே தோன்றினும் இது முதல்நூலேயாம் என்பது தொல்லா சிரியர் துணிவு (தொல். பொ. 649 பேரா. உரை)
இறையனார் அகப்பொருள் உரையில் ‘இந்நூல் செய்தான் யாரோ எனின், மால்வரை புரையும் மாடக் கூடல் ஆலவா யில் பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங்கண்ணி யாக வுடைய அழலவிர்சோதி அருமறைக் கடவுள் என்பது’ என்று காணப்படும் தொடரால் இந்நூலை ஆலவாய்ப் பெருமான் அடிகளே இயற்றியருளினார் என்பது முன்னை யோர் கோட்பாடு. (இறை. அ. 1 உரை) அரசஞ் சண்முகனா ரும் இக்கருத்தினரே. (பா. வி. பக். 90)
இறையனார் அகப்பொருள் உரை -
இவ்வுரை சொற்பொருள் நலம் சான்றது. மோனை எதுகை நயம்படச் சிலவிடத்தே நெடிய தொடராக நிகழ்வது; உவமைகள் பல இடையிடையே மிடையப் பெற்றது. இதனை இயற்றியவர் நக்கீரர். இவர் சங்ககாலப் புலவர் அல்லர் என்பதும் அப்பெயரிய பிற்காலத்தொருவரே என்பதும் இக்காலத்து ஆய்வாளரின் துணிபு. இன்று காணப்படும் உரைகளில் இதுவே பழமை மிக்கது என்பது தெளிவு.
இன்கவி -
1. மதுரகவி 2. மதுரகவிபாடும் புலவன் (யா. வி. பக். 551)
இன்பசாகரம் -
ஒரு காமநூல். (தத்துவப் 155 உரை.) (L)
இன்பமடல் -
பவனிக்காதல், இன்பமடல், விரகமாலை என்னுமிவை தம்முள் சிறிது வேறுபாடுடையன. தனது காமமிகுதியைத் தலைவி கூறுவதாக அமையும் பிரபந்தம் இன்பமடலாம். (சாமி. 168)
இன்மணியாரம் -
நாட்டியத்திற்குரிய நடச்செய்யுள்களாகிய வரி, குரவை, மதலை, மேடம், முரி, தாழிசை, முன்னிலை வாழ்த்து, தேவபாணி, சிற்றிசை, நேரிசை, பாவைப்பாட்டு, மடல் போல்வன ‘இன்மணியாரம்’ என்ற நாட்டிய நூலால் அறியப்படும் என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. (யா. வி. பக். 583)
இன்னிசைமாலை -
அகப்பொருள்பற்றிய ஓர் இலக்கியம். கள. கா. பக். 24 (L)
உ
அமுத எழுத்தும் நச்செழுத்தும் செய்யுள் முதன்மொழிக் கேயன்றித் தசாங்கத்தயலிலும் வருதலும் வாராமையும் முறையே பொருந்தும். (இ. வி. பாட். 210)
க ச த ப ந ம வ என்னும் மெய் ஏழோடும் அகரமும் இகரமும் உகரமும் எகரமும் என்னும் நான்கு உயிரும் செய்யுள் முதல் மொழிக்கு அமைதல் அமுத எழுத்தாகிய உண்டிப் பொருத் தம் ஆம். ய ர ல ள என்னும் ஒற்றினை ஊர்ந்த ஆகாரமும் ஓகாரமும், அவ்வொற்றுக்களும், ஆய்தமும், மகரக்குறுக்க மும் செய்யுள் முதல்மொழிக்கு ஆகா நச்செழுத்து ஆதலின், அவை நீக்கப்படும். மங்கலமாக எடுத்த மொழிக்கண் இவ் வெழுத்துக்கள் வரின், அவை குற்றமுடைய அல்ல. இவ் வுண்டிப் பொருத்தம் தசாங்கத்தயலிலும் அமையும்.
(இ. வி. பாட். 19, 20, 21)
இயைபு என்னும் வனப்பிற்கு எடுத்துக்காட்டாக, னகர ஈற்றான் இற்றுப் பொருள் தொடர்ந்த இலக்கியமாக உதயணன் கதை உரைக்கப்பட்டுள்ளது. (தொ. செய். 240 பேரா., நச்.)
சிறுமியர் விளையாட்டாகிய ‘உந்தி பறத்தல்’ என்பதனை அடியாகக் கொண்டு சிறந்த தத்துவக் கருத்துக்களை மூன்றடிப் பாடலாகப் பல புனைந்து பாடும் பிரபந்த விசேடம். பாட்டின் இறுதியிரண்டடியும் ‘உந்தி பற’ என முடியும். மாணிக்கவாசகர் அருளிய ‘திருவுந்தியார்’, சித்தாந்த சாத்திரங்கள் பதினான்களுள் ஒன்றாகிய ‘திருவுந்தியார்’ என்பன எடுத்துக்காட்டுக்களாம். அவற்றது பெருமை கருதித் ‘திரு’ என முன்னும் அடைமொழி கூடிற்று; விகுதியாக ஆரைக்கிளவி ‘நாலடியார்’ போலப் புணர்ந்தது.
க கா கி கீ - திருவோணம்
கு கூ - திருவாதிரை
கெ கே கை - புனர்பூசம்
கொ கோ கௌ - பூசம்
ச சா சி சீ - ரேவதி
சு சூ செ சே சை - அசுவினி
சொ சோ சௌ - பரணி
ஞா ஞி ஞெ ஞொ - அவிட்டம்
த தா - சுவாதி
தி தீ து தூ தெ தே தை - விசாகம்
தொ தோ தௌ - சதயம்
ந நா நி நீ நு நூ - அனுடம்
நெ நே நை - கேட்டை
நொ நோ நௌ - பூரட்டாதி
ப பா பி பீ - உத்தரம்
பு பூ - அத்தம்
பெ பே பை பொ போ பௌ - சித்திரை
ம மா மி மீ மு மூ - மகம்
மெ மே மை - ஆயிலியம்
மொ மோ மௌ - பூரம்
யா - உத்தரட்டாதி
யூ, யோ - மூலம்
வ வா வி வீ - உரோகிணி
வெ வே வை வெள - மிருக சீரிடம்
இவ்வாறு உயிர்மெய் வருக்கஎழுத்துக்கட்கு உரிய நாள்கள் கொள்ளப்படும். (இ. வி. பாட். 27-35)
நிகண்டு நூல்; ‘பிங்கலம் முதலான............... உரிச்சொற் பனுவல் களுள்’ (மயிலை.) நிகண்டு நூல்களைத் தமிழ்நூலார் உரிச் சொல் பனுவல் என்றலே முறை. பிற்காலத்து ‘உரிச்சொல் நிகண்டு’ என ஒருபொருட்பன்மொழியாகப் பெயர் வழங்கலாயிற்று. (நன். 459)
காங்கேயர் இயற்றிய வெண்பாவான் அமைந்த ஒரு நிகண்டு நூல். (நிகண்டு - கூட்டம்.) (L)
ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவரால் இயற்றப் பட்ட வடமொழி இலக்கண நூல். இது பாணினியின் சூத்திரங் கட்கு உரை போல அமைவது. ‘நீதகஸ்லோகம்’ என்ற முதல் நினைப்புச் சூத்திரம் இந்நூலுக்குண்டு. யாப்பருங்கலக் காரிகை முதல்நினைப்புக்காரிகைகளை யுடையது என்ப தனைக் குறிக்குமிடத்தே, உரையாசிரியர் குணசாகரர் ‘உரூபாவதாரத்திற்கு நீதகச்சுலோகமே போலவும்’ என உதாரணம் கூறுகிறார். (யா.கா. பாயிரம் உரை)
1. உரையாசிரியன்மார்
2. இளம்பூரணர்; ‘உரையாசிரியரும் உயர்திணை எனப்பட்ட பகுப்பை விரிப்புழி.....................’ (தொல்.சொல். 2 சேனா) (L)
உரைகாரன்; ‘நூல் உரை போதகாசிரியர் மூவரும்’ (இ. கொ. 6 : 23) (L)
உலக்கையால் நெல் முதலியவற்றைக் குற்றும்போது பாடும் ஒருவகை இசைப்பாடல் வள்ளைப்பாட்டு. இப்பாட்டுள் ஒரு தலைமகனது வீரம் முதலியவை இடம் பெறும்.
சிலப்பதிகாரத்துள் வாழ்த்துக்காதைக்கண் ‘தீங்கரும்பு நல்லுலக்கையாக’ முதலான பாடல் மூன்றும் வள்ளைப் பாட்டு. கலித்தொகையிலும் (41, 42, 43) வள்ளைப்பாட்டு இடைநிலைப் பாடல்களாக வந்துள்ளது.
இளமைப் பருவமுற்ற தலைமகனைக் குலத்தானும் குடிப் பிறப்பானும் மங்கலங்களானும் பரம்பரையானும் இன்னான் என்பது தோன்றக் கூறி, பெரும்பாலும் அணிகலன்களான் அலங்கரித்துக்கொண்டுள்ள மகளிர் நெருங்கிய அழகிய பரத்தையர் வீதியிடத்து அன்னோன் பவனி வரப் பேதை முதலிய ஏழ் பருவ மானார் கண்டு தொழ உலாவந்ததனைப் பாடுவது இப்பிரபந்தம் ஆம். நேரிசைக் கலிவெண்பாவால் இவ்விரண்டடி ஓரெதுகையாய்த் தனிச்சீர் பெற்றுவர இது பாடப்படும். இவ்விரண்டடியாகிய இவ்வமைப்புக் ‘கண்ணி’ எனப்படும். (இ.வி.பாட். 98)
எ-டு : விக்கிரமசோழனுலா
ஐந்து முதல் ஏழ் ஆண்டு அளவும் பேதை; எட்டு முதல் பதினோர் ஆண்டு அளவும் பெதும்பை; பன்னிரண்டு பதின் மூன்று ஆண்டு அளவும் மங்கை; பதினான்கு முதல் பத் தொன்பது ஆண்டு அளவும் மடந்தை; அதன்மேல் ஆறாண்டு அளவும் அரிவை; இருபத்தாறுமுதல் முப்பத்தோர் ஆண்டு அளவும் தெரிவை; முப்பத்திரண்டு முதல் நாற்பது ஆண்டு அளவும் பேரிளம்பெண். இவ்வாறு ஏழு பருவ உலாமகட்கு வயது எல்லை சொல்லப்படும்.
இவ்வயது எல்லை பாட்டியல் நூல்களில் சிறிதுசிறிது வேறுபடும்.
பன்.பாட் வெண்.பாட் நவ.பாட். சித.பாட் பி.ம
பேதை-ஆண்டு5 -8 5 -7
5 -6 7 வயது
7வயதளவு
வரை
பெதும்பை - ” 9 - 10 8 - 11 7 - 10 8 -11 8 - 11
மங்கை - ” 11 - 14 12 11, 12 12 - 13 12 - 13
மடந்தை - ” 15 - 18 13 - 18 13 - 18 14 - 19 14 - 19
அரிவை ” 19 - 24 19 - 25 19 - 24 20 - 25 20 - 25
தெரிவை ” 25 - 29 26 - 31 25 - 30 26 -31 26 - 30
பேரிளம்
பெண் ” 30 - 36 32 - 40 31 - 40 32 - 40 31 - 40
(இ. வி. பாட். 99 - 103)
கனவின்கண் ஒரு பெண்ணைக் கண்டு கலவியின்பம் நுகர்ந் தோன், விழித்தபின், “அவள் பொருட்டாக மடலூர்வேன்” என்று கலிவெண்பாவால் சாற்றுதல் உலாமடலாம். இதுவும் உலாப் போல இவ்விரண்டடி ஓரெதுகையாய்த் தனிச்சொல் பெற்று நேரிசைக்கலி வெண்பாவால் அமைவது.
(இ. வி. பாட். 97)
இஃது ‘ஆடைநூல்’ போலத் தன்கண் உள்ள மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுணரத்தக்கது.
(யா. வி. பக். 491)
மாற்றாரது ஊர்ப்புறம் சூழ உழிஞைப்பூமாலை சூடிப் படை வளைப்பதைக் கூறும் பிரபந்தம். மாலை யெனவே அந்தாதி யாகப் பாடல்கள் வரத் தொடுக்கப்படும் என்பது; மண்ட லித்து வருதலும் கொள்ளப்படும். (தொ. வி. 283 உரை)
உழவுச் செய்திகளைக் கூறும் பிரபந்தவகை. கடவுள் வணக்கம், மூத்த பள்ளி - இளையபள்ளி - குடும்பன் - வரவோடு அவன் பெருமை கூறல், முறையே அவர் வரலாறு, நாட்டுவளன் முதலான உறுப்புக்கள் உற, பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்ற, சிந்தும் விருத்தமும் வரப் பாடுவது என, முக்கூடற் பள்ளினை இலக்கியமாகக் கொண்டு சதுரகராதி இப்பிரபந்த இலக்கணம் கூறும்.
வேந்தனைப் பெயர் கூறி அவன் வாழ்க என்று தொடங்கி வயலுள் நிகழும் தொழில்களை ஒருசேரத் தான் உணர்ந்த னள் எனப் பாடும் பத்துப்பாடல் தொகுப்பு உழத்திப்பாட் டாம். (பன். பாட். 335)
ஆசுகவிக்குக் கொடுக்கும் சமதியை. ‘ஒருவன் நேர்கொடுத்த உள்ளுறைக்கப்போது உரைப்பதனை ஆசென்றார்’ (வெண்பாப் செய். 2) (L)
திருமாலின் பிறப்புப் பத்தனையும் அகவல்விருத்தத்தால் அந்தாதித்தொடையுறப் பத்துப்பாடல் பாடும் பிரபந்தம்.
(இ. வி. பாட். 108. )
திருமாலின் தசாவதாரமும் தோன்ற வாழ்த்திப் பாட்டுடைத் தலைவனைக் காக்குமாறு வேண்டி அகவல் விருத்தம் பத்துப் பாடுவது இதன் இலக்கணமாகப் பன்னிருபாட்டியல் (298) பகரும்.
ஊ
பிரபந்தத் தலைவன் தன்தேவிமாரோடு ஊஞ்சலாடுதலைப் புகழ்ந்து பாடும் ஊசல் என்ற துறை கலம்பக உறுப்புக்களுள் ஒன்று.
“யான் பற்பல பிறப்புக்களிலும் உருவம் மாறிப் பிறந்தும் செத்தும் பிறவித்துயரில் ஊசலாடும் செயல் நீங்குமாறு, என் நெஞ்சையே பலகையாகவும் கருணை என்பதனையே ஊஞ் சலைத் தொங்கவிடும் கயிறாகவும் கொண்டு, திருத்துழாய் மாலையும் காதுகளில் அணிந்த மகரகுண்டலங்களும் அசையு மாறு, திருமகளோடும் நிலமகளோடும் திருவரங்கப்பெரு மான் ஊஞ்சல் ஆடுக!” (திருவரங்கக். 58) என்றாற் போலப் பாடுவது.
1. ஆசிரிய விருத்தத் தாலாவது கலித்தாழிசையாலாவது, சுற்றத் தோடும் பொலிக எனக் கூறி ‘ஆடீர் ஊசல்!’ ‘ஆடோமோ ஊசல்!’ எனச் செய்யுள்தோறும் முடிக்கும் சொல் வரப் பாடும் பிரபந்தம். (இ. வி. பாட். 85)
2. கலம்பக உறுப்புக்களுள் ஓர் உறுப்பாவது ‘ஊசல்’
(இ. வி. பாட். 52.)
3. பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் ‘ஊசல்’ என்பது இறுதிப்பருவம். (இ. வி. பாட். 47)
வெண்டளை வழுவாது வரும் தரவுகொச்சகயாப்பினால், ‘ஆடாமோ ஊசல்!’, ‘ஆடீர் ஊசல்!’ என்று ஊசலை வருணித்து, அசைவது போன்ற இசை பொருந்தப் பாடுவது ஊசற்பாட்டாம். (தென். இசைப். 15)
பெண்பாற் பிள்ளைத்தமிழின் இறுதிப்பருவம்; ஆசிரியச் சந்த விருத்தம் பத்துடையதாக, ‘ஊசல் ஆடியருளே’ முதலிய வாய்பாடு இறுதிக்கண் முடியப் பாடப்பெறும்.
(இ. வி. பாட். 47)
இடைக்காடனார் என்ற புலவர் எழுத்தொலி அல்லாத ஓசை அணுகரணம், விட்டிசை முதலியவற்றைப் பெரும்பாலன வாக அமைத்துப் பாடிய நூல் ஊசிமுறி எனப்பட்டுள்ளது. எழுத்து வடிவில் அமைக்க முடியாத பாடல்கள் எழுத்தாணி கொண்டு எழுத மறுப்பது பற்றி ஊசி பயன்படாமை கருதி ஊசிமுறி எனப்பட்டது இந்நூல். (யா. வி. பக். 396)
ஊஞ்சல் ஆடும்போது பாடும் பாட்டு; ஊசல்வரி, ஊசற்சீர் என்பனவும் அது.
பாட்டுடைத்தலைவன் ஊரினைச் சார இன்னிசைவெண் பாவால் தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடிச் சிறப்பிக்கும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 65)
பாட்டுடைத்தலைவனது ஊரைச் சார்ந்து வர நேரிசை வெண்பாவால் தொண்ணூறேனும், எழுபதேனும், ஐம்பதே னும் பாடிச் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 70)
தலைவனது ஊரை விருத்தச்செய்யுள் பத்தினாற் பாடிச் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 93)
எ
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்னும் மாலைகள். (பிங். 734)
எச்சரிக்கை என்று ஈற்றடியில் முடியும் பலபாடல்களால் இயன்ற பிரபந்தமும் உண்டு. இரு பெரும்பாலும் கோயில் களில் இறைவன் சந்நிதியில் பாடப்படும். (இ. வி.பாட்.பிற். 7)
திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை யாவன. நேரிசைவெண்பா, ஆசிரியப்பா, கலிவெண்பா, கலித்தாழிசை, கலிநிலைத்துறை, கலிவிருத்தம், (6, 8, 12, சீர்) ஆசிரிய விருத்தம், 4, 6, 8 அடிகளால் வரும் தரவு கொச்சகம், பலவகைச் சீர்களாலாகிய அடக்கலப்பத்துப் பதிகம், கட்டளைக் கலித்துறை என்பன இத்திருமுறையில் பயில்வன.
திருக்கோவையார் முழுதும் கட்டளைக் கலித்துறை. திருவெம்பாவை, வெண்டளையான் வந்த இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா.
திருவம்மானை திருப்பொன்னூசல் இவை ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா.
பாட்டுடைத் தலைவனின் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரம் அளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ்வெண்ணால் பெயர் பெற்று நடக்கும் எண் செய்யுள் ஆகும். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பன. (இ. வி. பாட். 88)
12 உயிரெழுத்துக்களையும் நான்முகன் படைத்தான்; 18 மெய்களையும் இரண்டிரண்டாக முறையே அரன், அரி, முருகன், இந்திரன், ஆதித்தன், சந்திரன், இமயன், வருணன், குபேரன் ஆகிய ஒன்பதின்மரும் படைத்தனர். (இ.வி. பாட். 18)
மந்திர வகையால் தகடுகளில் எழுத்துக்களைப் பொறிக்கும் திறத்தை வெளியிடும் ஒருவகையான வெண்பாநூல். இதனைப் புட்கரனார் என்பவர் இயற்றினர் என்பர்.
‘வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை
நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல்
உட்சக் கரவடத் துட்புள்ளி என்பதே
புட்கரனார் கண்ட புணர்ப்பு’
இது மந்திர நூலுள் புட்கரனார் கண்ட எழுத்துக் குறி வெண்பா. இவ்வாறு வருவதை யாப்பருங்கலம் 93ஆம் சூத்திர மாகிய புறனடையாற் கொள்ளுவர் உரையாசிரியர். இது சவலை வெண்பாவில் அடங்கும். (யா. வி. பக். 371)
முதற்சீர் எழுத்தினை எண்ணுமிடத்து வியனிலை ஆகிய மூன் றெழுத்தும் ஐந்தெழுத்தும் ஏழெழுத்தும் ஒன்பதெழுத்தும் பொருத்தமுடையனவாம். சமனிலையாகிய நான்கெழுத்தும் ஆறெழுத்தும் எட்டெழுத்தும் பொருந்தாவாம். ஒற்றெழுத் தும் உடன் எண்ணப்படும். (இ. வி. பாட்., 24; பன்.பாட். 14)
ஏ
பிற்காலத்துப் பிரபந்தங்களில் ஒன்று. பள்ளியர் இருவர் தம்முள் தத்தம் மரபு முதலியன கூறி ஏசுவதாகப் பாடப் படுவது.
பொன்னேர் பூட்டி நின்றோர் பாடும் ஒருவகையான மங்கலப் பாட்டு. இஃது இசைப்பாடல். (சிலப். 10 : 135)
ஒரு கணித நூல். (குறள். 392 பரி. உரை)
ஏலப்பாட்டு -
கப்பற்பாட்டு. படகு செல்லும்போது படகோட்டிகள் ‘ஏலேலம்’ என்று முடியும் தொடர்களையுடைய இசைப் பாட்டுக்களைப் பாடுவர். அவை ஏலப்பாட்டு எனப்படும். (L)
ஏழாம் இலக்கணம் -
அறுவகை இலக்கணம் இயற்றிய தண்டபாணி சுவாமிகளால் இயற்றப்பட்ட பிறிதோர் இலக்கணநூல் இது. இஃது அறுவகை இலக்கணத்திற்குப் புறனடையாக அமைந்துள் ளது. முதற்கண் பாயிரம் பற்றிய செய்யுள்கள் ஏழும், இறுதி யில் யாப்பியல்பு பற்றிய நூற்பாக்கள் பதினாறும் இந்நூலுள் காணப்படுகின்றன.
வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் என்னும் இவற்றின் தளையிடையே சிறுபான்மை வண்ணத்தில் ‘தய்ய தன்னவே தன’ ஆம். வெண்டளை பிழையாக் கலி புரவலர் குலம்; விருத்தம் வணிகச் சாதி; மூன்றசைச்சீர்க் கொச்சகக் கலிப்பா வேளாண் சாதி; பதம், சிந்து ஆதிய பாணர் சாதி; தூநிலை வண்ணம் கற்புடைமகள்; எதுகை மோனைகள் அளவின்றி யும் பிழைபடவும் பாடுதல் பீடு அழிமகள்; பழமை குறையுள தேல் களைக; புதுமை நிறைவுளதேல் கொள்க. இவை இந்நூலிற் காணும் விசேடச் செய்திகள்.
ஏழு பெண்பருவம் -
பெண்மக்கட்குரிய எழுவகைப் பருவம் (திவா. பக். 36) அவை பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண் - என்பன.
ஏழு பெண்பருவ வயது:
5 முதல் 7 ஆண்டு அளவும் பேதை,
8 முதல் 11 ஆணடு அளவும் பெதும்பை,
12 , 13 ஆண்டு அளவினள் மங்கை,
14 முதல் 19 ஆண்டு அளவும் மடந்தை,
20 முதல் 25 ஆண்டு அளவும் அரிவை,
26 முதல் 32 ஆண்டு அளவும் தெரிவை
33 முதல் 40 ஆண்டு அளவும் பேரிளம்பெண். (இ. வி. பாட். 99-103)
ஏற்றம் இறைப்போர் தாம் செயற்படும்போது பாடும் இசைப்பாட்டு வகை. 96 வகைப் பிரபந்தத்துள் அடங்காதது. (இ. வி. பாட். பக். 505)
மகம், பூரம், உத்தரம், அத்தம், சித்திரை சுவாதி விசாகம் என்ற ஏழ்நாளும் ஆசிரியப்பாவிற்கு உரியன.
அநுடம், கேட்டை, மூலம், பூராடம், உத்தராடம், திரு வோணம், அவிட்டம் என்ற ஏழ்நாளும் கலிப்பாவிற்கு உரியன.
சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி, அசுவினி பரணி என்ற ஆறு நாளும் வஞ்சிப்பாவிற்குரியன.
வெண்பா நீங்கலான மூன்றுபாவும் ஏனைய எனப்பட்டன. அவ்வெண்பாவுக்கு நாள் உரிமையினைத் தனித்தலைப்பிற் காண்க. (கார்த்திகை........ ஆயிலியம்) (இ. வி. பாட். 121)
ஐ
புணர்தல் முதலிய ஐந்து திணையினையும் தெரித்துக் கூறும் பிரபந்தம். (இ. வி. பாட். 89)
ஐந்திரம் -
இந்திரனால் இயற்றப்பட்ட வடமொழி இலக்கணமாகிய ஐந்திரவியாகரணம்; ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ (தொ. பாயிரம்)
ஐம்படை விருத்தம் -
திருமாலின் ஐந்து ஆயுதங்களாகிய சக்கரம், வில், வாள், சங்கு, தண்டு என்னும் இவற்றை அகவல்விருத்தத்தால் பாடும் பிரபந்தவகை. (பன்.பாட். 29)
ஐயனாரிதனார் -
புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஆசிரியர்; சேரர் பரம்பரையில் வந்தவர்; தமிழ் நூல்களிற் சிறந்த புலமை மிக்கவர்; சிவபெருமானிடம் ஈடுபாடுடையவர்; சேர மரபினராயினும் சோழ பாண்டியர்களையும் ஒப்பச் சிறப்பித் துள்ளமை இவர்தம் நடுநிலைமை மனப்பான்மையைக் காட்டுவது; சைவ சமயத்தவராயினும், திருமாலையும் உரிய இடத்தே போற்றியுள்ளமை இவர்தம் சமயத்துறைப் பொறையினைக் காட்டும்.
பன்னிருபடலத்தை முதல்நூலாகக் கொண்டு ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றினார். சூத்திரம் கொளு மேற்கோள்பாடல்கள் யாவும் இவர் இயற்றியவையே. இவரியற்றிய புறப்பொருள் வெண்பாமாலையை ஒத்த புறப் பொருள்நூல் தமிழில் பிறிதொன்று தோன்றி நிலைத்திலது.
ஐயனாரிதனார் என்பது திருவிடைக்கழியைச் சார்ந்த குராஞ் சேரியிலுள்ள சாஸ்தாவின் பெயர். ஆரித கோத்திரத்தைச் சார்ந்தவர் ஆதலின் ஐயன் ஆரிதனார் எனப்பட்டார் என்பதும் ஒன்று.
இவர்காலம் 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
ஒ
ஒயில் எனப்பட்ட ஒருவகைக் கூத்து ஒயிலாட்டம் எனவும் பெறும். அக்கூத்துடன் பாடும் கும்மிப்பாட்டும் கூடியது ஒயில் கும்மியாம். கும்மி என்பது பெண்கள் ஆட்டம் எனினும், ஒயில் கும்மி ஆடவர்க்கே உரியது. யாதேனும் ஒரு பழங்கதை அல்லது வரலாறு பற்றி இசையுடன் இளை ஞர்கள் இரவு முழுவதும் இக்கூத்தினைப் பாடியாடும் வழக்கம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது. தைப் பொங்கல்நாளில் இக்கூத்துச் சிறப்புற இடம்பெறும். இருவரிசையாக ஒத்த எண்ணிக்கையில் இளைஞர்கள் தலைப்பாகை முதலிய கோலத்துடன் கைக்குட்டை ஏந்திய வாறே பாடியாடுவர். வள்ளியம்மை ஒயில்கும்மி, சிறுத் தொண்டர் ஒயில்கும்மி எனப் பலவுள. பாட்டின் சந்தம் வேறுபடுமிடத்து ஆட்டமும் வேறுபடும். நாடோடிக் கூத்துக்களில் ஒயில்கும்மி சிறந்ததொன்று.
அகப்பொருள் துறை ஏதேனும் ஒன்று பற்றிப் பல கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் இயற்றப்படுவதொரு பிரபந்தம் இது. பொன்னாங்கால் அமிர்தகவிராயர் என்பார் ‘நாணிக்- கண் புதைத்தல்’ என்னும் அகப்பொருட் கிளவிபட, தளவாய் இரகுநாத சேதுபதியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு 400 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஒரு துறைக்கோவை பாடியுள்ளார். கவிராயர்காலம் 17ஆம் நூற்றாண்டு. அக்கோவையுள் 311-399 வரையுள்ள 89 பாடல்கள் கிடைத்தில. ‘நாணிக் கண்புதைத்தல்’ என்னும் இத் துறைப்படவே, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘திராவிடக் கவிமணி’ முத்துசாமி ஐயர் என்னும் பெரும் புலவர் ‘திருவள்ளுவர் ஒருதுறைக்கோவை’ 133 பாடல்களால் பாடியுள்ளார். ‘நாணிப் புறங்காட்டல்’ ஒருதுறைக்கோவை 100 பாடல்களால் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில், வரகவி மு. கணபதியாப்பிள்ளையவர்களால் இயற்றப்பட்டு அச்சிடப்பெற்று வெளியாகியது. மற்றும், வெறிவிலக்கல் - பாலனைப் பழித்தல் - முதலிய துறைப்படவும் 19ஆம் நூற் றாண்டில் பாடப்பட்ட ஒரு துறைக்கோவைப் பிரபந்தங்கள் சிலவுள. பாடல் எண்ணிக்கை வரையறையின்றி இப்பிரபந்தம் அமைவதுபோலும்.
மேற்போக்காக நோக்கின் ஒரு புறப்பொருள் துறையும், கூர்த்து நோக்கின் அகப்பொருட்கிளவி ஒன்றும் சிலேடை வகையால் தோன்றப் பாடல்கள் அமையும் இப்பிரபந்தம் பாடுதல் பெரும்புலமை வித்தகர்க்கே இயல்வதொன்று. ஆதலின் கோவைப் பிரபந்தம் பலவாகக் காணப்படுதல் போல, இவ்வொருதுறைக் கோவைப் பிரபந்தம் பல்கிக் காணப்படுவதில்லை.
அகவல் வெண்பா கலித்துறை என்பவற்றுள் ஏதேனும் ஒருபாவினால் பத்துப்பாடல் அந்தாதித்தொடையுறப் பாடப்படும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 63)
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது 10 அகவல்களால் ஆகியது.
பல சந்தம் கூடிய பதினாறு கலைவகுப்பானாகிய முப்பது எண்ணால் அந்தாதித் தொடையாக அமையும் பிரபந்தமாம்.
(இ. வி. பாட். 64)
ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பலசந்த வகுப்புக்கள் அந்தாதியாக 30 செய்யுள் பாடுவது. ‘ஒலியலந்தாதி’ என்பதும் அது. (வெண்பாப். செய். 13)
16 கலை ஓரடியாக வைத்து இங்ஙனம் நாலடிக்கு 64 கலைவகுத்துப் பல சந்தமாக வண்ணமும் கலைவைப்பும் தவறாமல் அந்தாதித்து வர 30 செய்யுள் பாடுவது; சிறு பான்மை எட்டுக்கலையானும் வரப்பெறும்; அன்றியும், வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பப்பத் தாக அந்தாதித்துப் பாடுவதும் ஆம். (தொ. வி. 283 உரை)
‘ஒலிஅந்தாதி’ காண்க.
இருபத்தெட்டுத் திருப்பதிகங்களையுடைய திருஇசைப்பா வும், சேந்தனாரின் திருப்பல்லாண்டுமாக அமைந்தது ஒன்பதாம் திருமுறை. திருமாளிகைத் தேவரின் ‘உறவாகிய’, எனும் கோயிற் பதிகம் பன்னிரண்டு ஆசிரியத் துறையால் அமைந்தது. திருஆலிஅமுதனாரின் பாதாதிகேசம் ஏறக் குறைய ஆசிரியத் துறை அமைப்பினையுடைய யாப்பிற்று. திருவாலியமுதனாரின் ‘பவளமால் வரை’ எனும் கோயில் பதிகப்பாடல் அறுசீர் எழுசீரடிகள் விரவியது போன்ற அமைப்பிற்று. சேதிராயரின் கோயில்பதிகப் பாடல் சில ஈற்றடியில் முச்சீர் பெற்றுப் பொதுக் கலிவிருத்தயாப்பின் மாறுபட்டன. இவையெல்லாம் இசை முதன்மைக் காரணம் பற்றிப் புகுந்த யாப்புச் சிதைவுகள் ஆதல் கூடும். பிற வேறுபடாத யாப்பின. (இலக்கணத். முன். பக். 88)
வில்விருத்தம், வாள்விருத்தம், வேல்விருத்தம், செங்கோல் விருத்தம், யானைவிருத்தம், குதிரைவிருத்தம், நாட்டுவிருத் தம், ஊர்விருத்தம், கொடைவிருத்தம் என்பன. இவை ஒவ்வொன்றும் அகவல் விருத்தம் பத்தால் பாடப்பெறும். (இ. வி. பாட். 93; பன்.பாட். 290)
ஓ
ஓடம் ஓட்டுகையில் பாடப்படுவது; கப்பற்பாட்டு என்பதும் அது. (L)
அகரமும் இகரமும் உகரமும் எகரமும் ஒகரமும் தத்தம் இன எழுத்துக்களுடன் சார்த்தி, ஐகாரம் இகரத்தொடும் ஒளகாரம் உகரத்தொடும் சார்த்தி ஐவகை ஆக்கி, ஆதித்தன் உதயம் தொடங்கி நன்பகலின் முடிவுவரை ஓர் ஆறு ஆறாக வகுத்தவற்றுள் முன் நின்ற ஓரை மூன்றில் அகலக் கவியைப் புனைந்து இன்புறுதல் முறை. அகலக்கவியின் முதலெழுத்து உயிர்மெய்யாயினும் அதன்கண் உயிரே கொள்ளப்படும். ஏனைய இரண்டு ஓரையும் ஆகா என்பது.
அ. ஆ - உதயம் தொடங்கி முதல் 6 நாழிகை முடிய; 1-3 நாழிகை ஏற்றன.
இ ஈ ஐ 7 முதல் 12 நாழிகை முடிய; 7 - 9 நாழிகை ஏற்றன.
உ ஊ ஒள 13 முதல் 18 நாழிகை முடிய; 13 - 15 நாழிகை ஏற்றன.
எ ஏ 19 முதல் 24 நாழிகை முடிய; 19-21 நாழிகை ஏற்றன.
ஒ ஓ 25 முதல் 30 நாழிகை முடிய; 25- 27 நாழிகை ஏற்றன.
ஒவ்வொரு பகுப்பிற்கும் உரிய அவ்வாறு நாழிகைகளில் முதல் மும்மூன்று நாழிகைகளே ஏற்றனவாம். (இ.வி. பாட். 177)
சீட்டுக் கவியாகிய ஓலைப்பாசுரம். (நன். 53). ‘ஓலைப் பாயிரம்’ (தொ.பொ. 461, பேரா.) என்பதும், ஓலைத்தூக்கு என்பதும் ஓலைப் பாசுரத்தோடு ஒத்த ஒருபொருட்கிளவிகள். (நன். 53) (L)
கடிதச் செய்தி. ‘வருக என்னுமளவும் ஓலைப்பாசுரம்’
(சீவக. 2147 உரை) (L)
‘ஓலைப் பாசுரம்’ காண்க. ‘ஓலைப்பாயிரமும் முதலாயின வெல்லாம்’. (தொ. பொ. 461 பேரா. )
கடிதத் தொடக்கத் தெழுதும் வணக்கம். (சிலப். 13 : 67 உரை) (L)
ஓவியமுறை பற்றிக் கூறுவதொரு நூல். ‘ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்’ (மணி. 2 : 31.) (L)
க
ஒரு பழைய நாடக நூல். (தொ. பொ. 492 பேரா.)
பண்ணத்திக்கு இஃது எடுத்துக்காட்டாகும்.
கொற்றவைக்குப் பலியாக மறவர்கள் வீழ்த்தும் கடாவினது நிலையை யுரைக்கும் பிரபந்தம்.
வடதிசையில் கோவில் கொண்ட கன்னியாகிய கொற்றவைக்கு மன்னர் வீழ்த்தும் கடாவினது நிலையை யுரைக்கும் பிரபந்தம்.
வெற்றிபெற வேண்டியோ, வெற்றி பெற்றமைக்குக் கொடை நேர்ந்தோ எருமைக்கடாவை வீழ்த்தும் திறத்தைப் பலபட உரைப்பது. யாப்பு வரையாமையால், பெரும்பான்மையும் ஆசிரிய விருத்தத்தால் பாடப்படுவதாகக் கொள்க. (பன். பாட்.326,327)
கடிகை வெண்பா -
அரசர் கடவுளர் முதலியோர் தம் அருஞ்செயல்கள் ஒரு கடிகை (-நாழிகை)ப் பொழுதில் நிகழ்ந்தனவாகக் கூறும் பிரபந்த விசேடம். (தொ.வி.283 உரை)
கடிய நன்னியம்
இது கடிய நன்னியார் என்பவரால் இயற்றப்பட்ட யாப்பு நூல். கைக்கிளை மருட்பாப் பற்றி இவர் இயற்றிய இரண்டு நூற்பாவும், கைக்கிளை ஆசிரியப்பாப் பற்றி இவர் இயற்றிய ஒரு நூற்பாவும் ஆகிய மூன்றே இதுபோது கிட்டியுள்ளன. கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியப்பா நிகழுமிடத்தே ஈற்றயலடி முச்சீரான் வரப்பெறாது நாற்சீராக வரப்பெறும் என்பது ஒரு நூற்பாக் கருத்து. (யா. வி. பக். 270, 215, 270)
கடைக்காப்பு -
பதிகத்தின் இறுதி முத்திரைப்பாட்டு. ‘திருப்பதிகம் நிறை வித்துத் திருக்கடைக்காப்புச் சாத்தி’ (பெரியபு. திருஞான. 80) (L)
கடைதிறப்பு -
கதவு திறக்கை. பரணிப் பிரபந்தத்தின் உறுப்புக்களுளொன்று (இ. வி. பாட். 79) (L)
கடைமூன்று உயிர்களின் நாள் -
ஒ, ஓ, ஒள என்னும் இக்கடை மூன்று உயிரெழுத்துக்களுக்கு உரிய நாள் உத்தராடம் ஆம். (இ. வி. பாட். 26)
கண்படைநிலை
‘கண்படை கண்ணிய கண்படைநிலை’ (தொ. பொ. 90) என்னும் தொல்காப்பியத் துறைப் பொருளையுட்கொண்டு பாடப்படும் ஒரு பிரபந்தம்; சதுரகராதி சுட்டும் 28ஆம் பிரபந்தம்.
கணக்கியல் -
இந்நூல் எழுத்துக்களின் பிறப்பிடம் பற்றி விரித்துக் கூற எழுந்ததாம். இதன் நூற்பா ஒன்று மெய்யெழுத்துக்களின் பொதுப்பிறப்பைச் சுட்டுகிறது. (யா. வி. பக். 69)
கணக்கு -
கணக்காவது நூல். மேற்கணக்கு எனவும், கீழ்க்கணக்கு எனவும் அஃது இருவகைப்படும்.
அகவல் கலிப்பா பரிபாடல் என்னும் இவ்யாப்பால் ஐம்பது முதல் ஐந்நூறு பா எல்லையாக மிகுத்துடன் தொகுப்பன மேற் கணக்காம்; வெண்பாவும் அவ்வாறு தொகுக்கப்படின் கீழ்க் கணக்காம். அடிநிமிர்பு இன்றிச் சில அடிகளாக வெண்டளை யாப்பில் அறம்பொருள் இன்பம் பற்றி அடுக்கி அவ்வத்திறம்பட உரைப்பது கீழ்க்கணக்கின் முழுமை இலக்கணம். (பன். பாட்.344-348)
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் மேற்கணக்கு ஆவன; அறம்பொருள் இன்பம் பற்றிய சங்க மருவிய நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு என்றே வழங்கப்படுவன காண்க.
கணப்பொருத்தம் -
செய்யுள் முதல்சீர்க்குப் பொருத்தவகை பத்தனுள் ஒன்று.
ஆதியினும் இடையினும் இறுதியினும் முற்றினும் நேரசையும் நிரையசையுமாய் வரின், ஆதிநேர் நீர்க்கணம் எனவும், இடைநேர் தீக்கணம் எனவும், இறுதிநேர் ஆகாய கணம் எனவும், முற்றும் நேர் சுவர்க்ககணம் எனவும், ஆதிநிரை சந்திர கணம் எனவும், இடைநிரை சூரியகணம் எனவும், இறுதிநிரை வாயுகணம் என வும், முற்றும்நிரை பூகணம் எனவும் ஆகும். இவற்றுள், முற்று நேரும் முற்றுநிரையும் ஆதிநேரும் ஆதிநிரையும் முதற்சீர்க்குப் பொருத்தம் உடையனவாம்.
கணப்பொருத்தம் மூவசைச்சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப் படும். (இ. வி. பாட்.40)
கணிகம் -
இது கலம்பகத்துள் காணப்படும் பலதுறைக் கவிகளிடை ஒன்று. (வீ.சோ. 183 உரை) கணநேரத்தில், சித்துக்களில் வல்லவர் தமது திறமையைப் பல்லாற்றானும் வெளிப்படுத்து வதாகக் கூறும் கருத்தமைந்த பாடல் இது. இதனைக் கலம்பக உறுப்புக்களுள் ஒன்றாகிய ‘சித்து’ என்று கூறுவர்.
கதி நால்வகை -
தேவர் கதி, மக்கள் கதி, விலங்கு கதி, நரகர் கதி என்பன. இக்கதி நான்கும் எழுத்துக்கட்குக் கொள்ளப்படும். செய்யுள் முதன் மொழிக்கு முதலிரு கதியும் பொருந்தும்; ஏனையிரண்டும் விலக்கப்படும். (இ. வி. பாட். 38, 39)
கதிப் பொருத்தம் -
செய்யுள் முதல்மொழிக்குப் பொருந்தும் கதிகள் தேவர் கதியும், மக்கட்கதியும் ஆம். தேவர்கதிக்குரிய எழுத்துக்கள் அ இ உ எ என்னும் குற்றுயிரும், க் ச் ட் த் ப் என்னும் மெய்களை உயிர் ஊர்ந்த உயிர்மெய்யும் ஆம்; மக்கட்கதிக்குரிய எழுத் துக்கள் ஆ ஈ ஊ ஏ என்னும் நெட்டுயிரும், ங் ஞ் ண் ந் ம் என்னும் மெய்களை உயிர் ஊர்ந்த உயிர்மெய்யும் ஆம். இவ் வுயிர்மெய்களுள்ளும் மொழிமுதற்கண் வரும் ஆற்றலில்லாத ஙகர டகர ணகரங்கள் நீங்கலான பிறவே கொள்ளப்படும் என்பது. (இ. வி. பாட். 38)
கந்துகவரி -
மகளிர் பந்தாடும்போது பாடும் பாடல் வகை. சிலப்பதி காரத்துள் வஞ்சிமகளிர் பாண்டியனைத் ‘தேவர்ஆர மார் பன்வாழ்க என்றுபந்த டித்துமே’ என வாழ்த்திப் பந்தாடு வதாக இவ்வரி நிகழ்கிறது.
கந்துகம் - பந்து; வரி - ஒருவகை இசைப்பாடல். (சிலப். 29 பாடல் 20-22.)
கப்பற்பாட்டு -
கப்பற்காரர் பாடும் ஓடப்பாடல் (L)
கம்பராமாயண யாப்பு -
பலவகைக் கலிவிருத்தம், வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம், கலிநிலைத்துறை, அறுசீர் எழுசீர் எண்சீர் ஆசிரிய விருத் தங்கள், பெரும்பான்மையும் வெண்டளை பயின்றுவந்த தரவு கொச்சகம் என்பன.
கலிவிருத்தம் 5094. இவற்றுள் 86 தரவு கொச்சகம் போன்ற யாப்பு.
அறுசீர் ஆசிரிய விருத்தம் 3195
எழுசீர் ஆசிரிய விருத்தம் 178
எண்சீர் ஆசிரிய விருத்தம் 6
கலிநிலைத்துறை 1805
வஞ்சி விருத்தம் 294
வஞ்சித்துறை 4
இலக்கணத் முன். பக். 95, 96
பல நூல்களது வகைமையாலும், மதியது பெருமையாலும், கற்றார் வியக்கும் வண்ணம், கல்லாத நூல்களையும் உய்த் துரைக்கும் கருத்துடைய புலவன். (யா.வி.பக். 552; வீ.சோ. 181 உரை)
நிறைந்த கல்விப் பயிற்சியானும் அக்கல்விப் பயிற்சியால் தெளிந்த அறிவானும், முன்னர்க் கற்றுவல்லோர் கூறிய பொருளை ஞாபகத்தானும் செம்பொருள் நடையானும் நேரிட்டு எந்நூற் பொருளையும் விரித்துச் சொல்ல வல்லோன். (இ. வி. பாட். 171)
நாகங்களின் குலங்களை வகைப்படுத்திக் கூறும் செய்யுள் பலகொண்ட இந்நூலுள் எதிர்நிரல்நிறைப் பொருள்கோ ளும் பலஇடங்களில் உண்டு என்பது யாப்பருங்கல விருத் தியுரைச் செய்தி. (யா. வி. பக். 382)
இது கன்னடமொழியில் பண்டு வழங்கிய யாப்பிலக்கண நூல். இதன்கண் மகடூஉ முன்னிலையும் அவையடக்கச் செய்யுளும் காணப்பட்டன. இது குணகாங்கி எனவும், குணகாங்கியம் எனவும் வழங்கப்பட்டது. இது குணகங்கன் என்ற கன்னட அரசன் ஆக்குவித்த யாப்புநூல் போலும்.
(யா. வி. பக். 523; யா. கா. பாயிர உரை.)
நாடு அறி சொற்பொருள் பயக்குமாறு பிழையாமல் வாசகம் செய்யும் வகை.
வரலாறு :
‘மனையிற்கு நன்று’
‘முதுபோக்குத் தீது’
‘முதுபோக்கே அன்று’
‘பெருமூர்க்குத் தீது’
என்பனவாம். (யா. வி. பக். 550)
‘கல்லாடம்’ என்னும் அகப்பொருளின் இலக்கியத்தை இயற்றிய ஆசிரியர். நூறு அகவற்பாடலால் ஆகிய இந்நூல் திருக்கோவையார் குறிப்பிடும் அகப்பொருள் கிளவிகளை உட்கொண்டு சிவபெருமான் பெருமையை இடைமடுத்துப் பாடப்பட்டது; கடிய நடை உடையது.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் நச்சினார்க்கினியர் உரைகளைப் பெரும்பான்மையும் உட் கொண்டு, வேண்டும் விகற்பம் கூறி உரை எழுதிய கல்லாடர், கல்லாடம் என்ற நூல் இயற்றிய கல்லாடரின் வேறானவர்.
சங்க காலத்துக் கல்லாடனார் என்ற நல்லிசைப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பாடல்கள் எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ளன.
தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதுமாகக் கலம்பகப் பாடல் தொகை பெறும். அந்தணரைத் தேவர்க்கு ஒப்பவும், குறுநில மன்னரை அரசர்க்கு ஒப்பவும் பாடப்பெறும்.
இத்தொகை பன். பாட் 214, வெண். பாட் 12, நவ. பாட். 34, சிதம். பாட். 30, மு. வீ. யா. ஒ. 80 இவற்றிலும் காணப்படும். (இ. வி. பாட். 53)
1. ‘கலவை; ‘கலம்பகம் புனைந்த, அலங்கலந் தொடையல்’
(திவ். திருப்பள்ளி. 5)
2. குழப்பம்
3. ஒரு கணித நூல் (கணக்கதி. 5 உரை) (L)
4. ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் முதற்கவி உறுப்பாக முற்கூறப்பட்டு, கலவையின் புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார்,தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் (கொற்றியார், பிச்சியார், இடைச்சியார், வலைச்சியார் என்பன காலத்தான் மருவிப் போந்தன.) ஆகிய பதினெட்டுப் பொருட்கூற்று உறுப்புக்களும் இயையுமாறு பிற்கூறப்பட்டு, மடக்கும் மருட்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஆசிரியவிருத்தமும் கலிவிருத்தமும் கலித்தா ழிசையும், வஞ்சி விருத்தமும் வஞ்சித்துறையும், வெண்துறை யும் ஆகிய கவிக் கூறுகளும் உடைத்தாய், இடையிடை வெண்பாவும், கலித்துறையும் பாடப்பட்டு, அந்தாதித் தொடை முற்றும் உற இறுதியும் முதலும் மண்டலித்துப் பாடுவதொரு பிரபந்தம். (இ. வி. பாட். 52.)
1. பல பூக் கலந்த மாலை; ‘கலம்பக மாலையைப் பணியாக’ (ஈடு. அவ.)
2. கலம்பகம் தான் ஒருபோகும் அம்மானையும் ஊசலும் இன்றி ஏனை உறுப்புக்கள் எல்லாம் வரப் பாடுவது கலம்பகமாலை என்னும் இலக்கண விளக்கம் (பாட். 54). ஒரு போகினையும் அம்மானையையும் நீக்கி, வெண்பாமுதலாக எல்லா உறுப்பானும் குறைவின்றி வருவது இப்பிரபந்தம் என்னும் பன்னிரு பாட்டியல் (960). ஊசலையும் நீக்கி வருதல் வேண்டும் என்னும் செய்தி பிற பாட்டியல் எல்லாவற்றிலும் காணப்படுகிறது. கலம்பக மாலை ‘பன்மணிமாலை’ எனவும் படும்.
ஒலிஅந்தாதியைப் போல வண்ணப்பாக்கள் முப்பது கொண்டதாய்ப் பாடல்தோறும் 32 கலைகளை உடையது கலி அந்தாதியாம். கலித்தல் - மிகுதல் ஆதலால், ஒலி அந்தாதியின் மிகுந்த கலைகளையுடைய இப்பிரபந்தம் கலிஅந்தாதி எனப்பட்டது. இப்பாடல்களில் வெண்கலியும் சிறுபான்மை வரும். வெண்கலி வரும் காரணத்தால் இது கலி அந்தாதி எனப்பட்டது என்பதும் ஆம். ‘வண்ணப்பா’ இலக்கணம் அத்தலைப்பில் காண்க.
ஒவ்வோரடியிலுள்ள எட்டுக் கலைகளில் முதல் நான்கு கலைகள் ஓரொலியாகவும் பின் நான்கு கலைகள் வேற்றொலியாகவும் கலி அந்தாதியில் அமைதலும் கூடும். (பன். பாட். 265, 266, 268)
சந்தக் குழிப்புக்கள் - தத்த, தாத்த, தந்த, தாந்த, தன, தான, தன்ன, தய்ய என்ற எட்டு.
இவை ஈறு நீண்டு தத்தா, தாத்தா, தந்தா, தாந்தா, தனா, தானா, தன்னா, தய்யா - எனவரும் எட்டுடன் பதினாறு.
இப்பதினாறன்மேல் ன, னா என்னும் உயிர்மெய்கள் தனித்து வரினும் அவை த், ம் என்ற ஈற்றுக்களொடு கூடிவரினும், இவ் வொற்றுக்கள் தனித்து வரினும் அவை அரைச்சந்தமாம்.
எ-டு : தந்தனத், தந்தனாத், தந்தனம், தந்தனாம், தந்தத், தந்தம்.
தந்த : முழுச்சந்தம்; னத்; அரைச் சந்தம்; தந்தனத் ; ஒன்றரைச் சந்தம்.
இங்ஙனமே ஏனையவும் கொள்ளப்படும்.
சந்தங்கள் சில சேர்ந்து அமைவது ஒரு துள்ளல் (தந்தன தந்தன) துள்ளல் மூன்று கொண்டது ஒரு குழிப்பு (தந்தன, தந்தன, தந்தன, தந்தன, தந்தன தந்தன)
ஒரு குழிப்பும் ஒரு சிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்தது ஒரு கலை. (தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன தனதான)
தொங்கல்துள்ளல் குழிப்புத்துள்ளலில் சிறிது வேறு பட்டுள்ளமை காண்க.
கலை எட்டுக் கொண்டது ஒருவண்ணம்.
அங்ஙனம் அடி தொறும் எட்டுக் கலைகள் கொண்ட நான் - கடிப்பாக்கள் முப்பது அந்தாதியாக அமைவது கலி அந்தாதியாம்.
(பன். பாட். 265)
இந்நால்வரும் புலவர் எனப்படுவர். விளக்கம் தனித்தனித் தலைப்புள் காண்க. (இ. வி. பாட். 169)
1) புலவனாகச் சங்கத்தாரால் கொள்ளப்படுதல். ‘அவருட் கவியரங்க கேறினார் மூவர் பாண்டியர் என்ப’. (இறை. அ.1. உரை)
2) கழகத்தோரால் நூல் ஏற்றுக்கொள்ளப்படுதல். (L)
உருவக அணி, உவமை அணி முதலாக வாழ்த்து ஈறாக எய்திய இருபத்தெட்டு அலங்காரத்தாலும் எழுத்துச் சொற்பொருள் யாப்பு நெறியாலும் குற்றமறச் செய்யும் பாவலன், அவையும் அரசும் அறியப் பாடுவோன், முத்தமிழ் வல்லோன், நாற்கவி பாடுவோன், உத்தமச் சாதியிற் பிறந்தோன், உறுப்புக் குறையாது ஒழுக்கமொடு புணர்ந்தோன், முப்பது முதலாக எழுபது ஈறாய பிராயமுடையோன் ஆகிய இத்தகைய கவிஞன் பாடிய செய்யுளைக் கொள்ளுமுறையாவது: தோரணம் நாட்டித் துகிற்கொடியை எடுத்து, முரசொலிப் பவும் மறையோர் வாழ்த்தவும், அழகிய பூத்தொழிலுடைய கலிங்கத்தினைத் தரைமீது பரப்பி, பல தானியமுளைகள் தோன்றிய பாலிகைகளும் விளக்கும் பூரண கும்பமும் பிறவும் மங்கலப்பொருளாக எடுத்து, விதானித்துப் படுத்த தூண் நிரைகள் அமைந்த பந்தரின்கீழ்ப் பலசுற்றமும் நெருங்க, பாவையர் பல்லாண்டிசைப்ப, அக்கவிஞனை அவ் வள மனைக்கண் அழைத்துக் கொண்டுவந்து, தான் உடுத்துச் சூடுவதன் மேலும், அவனையும் வெண்துகில் உடுப்பித்து வெண்பூச் சூடுவித்துப் புரவலன் தன் தவிசின் மீது இருத்தித் தான் அயலில் இருந்து அம்மங்கலச் செய்யுளை மகிழ்ந்து கேட்டு, அவனுக்குப் பொன்னும் ஆடையும் பூணும் கடகமும் என்றின்னவற்றை அவன் வேண்டுவன பிறவற்றோடும் அளித்து, ஏழடி நிலம் புலவன்பின் போய் மீளுதல் அவ னுக்குக் கடனாவது. (பிங். 1370)
இனி, அகலக் கவிகொள்ளு முறையாக இலக்கண விளக்கம் (பாட். 179) இயம்பும் செய்திகள் வருமாறு :
நல்லாசிரியனுக்கு அமைந்த நற்குணங்களை எய்திய புலவ னால் செய்யப்பட்ட செய்யுளை, நல்லவை நிறையவை ஆகிய மன்றின்கண், ஒளிகிளர் அழகிய விளக்கத்தினோடும் ஏனை எழுவகை மங்கலங்களும் பொலிய, நான்மறையோர் ஆசி கூற, நாலவிட்ட பூமாலைகள் நறுமணம் செய்ய, பலவகை வாத்தியத் தொகுதிகள் ஒலிக்க, அஞ்சொல் மடவார்கள் செஞ்சொல்லால் வாழ்த்தெடுப்ப, பாமகளைப் புணரும் திறத் தாலே வெண்துகிலும் வெண்மலர்மாலையும் வெண்முத்து மாலையும் அலங்கரித்துக்கொண்டு, விசித்திரத்தவிசின் இருந்து, அப் புலவனுக்கும் அன்னதோர் தவிசு இட்டு, எண்திசையில் உள்ளாரும் துதிக்கத் தண்டமிழ்ப்பாமாலை சூடி, மருதநிலத்து உளவாகிய வளம் மாறாத ஊரும், பெரிய ஆபரணமும், பொன்னும், களிறும், பண் அமை இரதமும், குதிரையும் ஆகியவற்றை அப்புலவற்குப் பரிசிலாகக் கொடுத்து ஏழடி புலவன் பின்போய் மீளுதல் தமிழ் நாட்ட கத்தே அகலக்கவியைக் கொள்வோர்க்கு வகுக்கப்பட்ட உரிமைத் திறமாம் என்ப.
கவிப் புலவன் - அகலக் கவிபாடுவோன். கற்கப்படும் ஆசிரிய ருக்கு ஓதிய குலம் முதலாய எண்வகை முறையும் எய்தி, ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் கவி நான்கும் பாடும் தன்மையுடனே, இயலிசை நாடகம் என்னும் முத்தமிழ் வழக்கினையும் முற்ற உணர்ந்து, இருபது முதல் எழுபது வயதின் மிகாதிருக்கும் மாட்சிமையுடையோனே அகலக்கவி பாடும் ஆற்றலோன் ஆவான். (இ. வி. பாட். 178)
கவிதையினைப் பெண்ணாக உருவகித்து அதன் இலக்க ணத்தைப் பிரபந்த மரபியல் கூறுகிறது.
மதுரம் கனிந்த சொல்லும் இலக்கிய நலம் சான்ற நாவும் ஆகிய இருபாலும், இலக்கணம் சுரப்பக் கலவி நிகழ்த்தலால், தோன்றிய கருவில் எழுத்தாகிய குழவி பிறக்கிறது. அக்குழவி தான் (அசையாகிய) சேயாக முற்றி, சுவை கலந்து சிறந்த முச்சீரில் தவழ்ந்து கவிதையாக வளர்தலால் தமிழ்க்குலப் பெண் என்று சாற்றுதல் தகும்.
இக் கவிதையாம் குலமகட்கு உறவு கூறப்புகின் புலவனே தந்தை; பொருட்செல்வம் இல்லா வறுமையே தாய்; அக் கவிதைப் பொருளை அணிநயம் பட விரித்து உரைப்பக் கேட்பவரே மாதவர்; அவைமாந்தர் மனம் கொள்ளக் கவிதையைச் சந்தமுறப் படித்து அச்சந்தப் பொருளை உணரச் செய்பவனே தமையன்; அவ் அவைமாந்தரிடையே அக் கவிதையை நயந்தும் வியந்தும் போற்றி ஏற்றுக் கொள்பவரே உறவின் வந்த சுற்றத்தார்; அதனை மனம் மகிழ்ந்து கேட்டு அக்கவி பாடிய புலவனுக்கு உவகையொடு பரிசு கொடுப் போனே அக்கவிமகளுக்குக் கணவன் ஆவான். (பி. ம. 32, 33)
கவிமணியின் ஐந்து கவிதைநூல்களிலும் 1410 பாடல்கள் உள. அகவற்பாக்களும், அறுசீர் ஆசிரிய விருத்தம் - எழுசீர் ஆசிரிய விருத்தம் - எண்சீர் ஆசிரிய விருத்தம் - ஆகிய மூவகை ஆசிரிய விருத்தங்களும், எண்சீர் - எழுசீர் - அறுசீர் - நாற்சீர் - அடிபடநிகழும் தாழிசைகளும், பல்லவி - அனுபல்லவி - சரணம் - ஆகிய மூவுறுப்பும், பல்லவி - சரணம் - ஆகிய ஈருறுப் பும்பெற்ற கீர்த்தனங்களும், வெண்பா - கலிவிருத்தம் - கலித் துறை - தரவுகொச்சகம் - போன்ற பிறவும் இக்கவிஞரது யாப்பில் இடம் பெற்றுள்ளன. இவர் கையாண்ட சிறப்புற்ற கவிதை வடிவம் சிந்து ஆகும். (இலக்கணத். முன். பக். 114 - 116)
ஆசு, மதுரம், சித்திரம், அகலம் என்னும் நால்வகைப் பாடல் களில் ஒருவகையோ பலவகையோ யாவுமோ பாடும் ஆற்ற லுடையான் கவியாவான். அவன் எவ்வகையிற் சிறந்தானோ அவ்வகையால் அடையடுத்து, ஆசுகவி மதுரகவி சித்திரகவி அகலக்கவி (-வித்தார கவி) என்று சிறப்பிக்கப்படுவான்.
(இ. வி. பாட். 170)
பெண்பாற்பிள்ளைத் தமிழிற்குரிய பத்துப் பருவங்களுள் ஒன்று; கழற்சிக்காய் கொண்டு ஆடுவதை வருணித்துக் கூறுவது.
பிறனொருவனது பாட்டைத் தனதென்று காட்டுபவன் (L)
ஒருவனுக்காகப் பாடிய பாட்டை மற்றொருவனுக்குக் கொடுப்போன். (வெண்பாப். செய். 48 உரை)
இறந்துபட்ட தலைச்சங்க நூலுள் ஒன்று. (இறை. அ. 1 உரை)
இது தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் மூன்றாவது இயல். அகத்திணையியலின்கண் கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை ஓதி, அவற்றின் புறத்தே நிகழும் எழுதிணைகளும் புறத்திணையியலில் ஓதினார். அகத்திணை ஏழனுள்ளும் ஒருதலை வேட்கை ஆகிய கைக்கிளையும் ஒப்பில் கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவர் அன்பும் ஒத்த நிலைமையவாகிய நடுவண் ஐந்திணைக்கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் ஆகிய உரிப்பொருள்கள் களவு கற்பு எனும் இருவகைக் கைக்கோளிலும் நிகழுமாதலின், களவா கிய ஒழுக்கம் இம்மூன்றாம் இயலில் கூறப்படுகிறது. இதன்கண், தலைவனும் தலைவியும் விதிவயத்தால் ஒருவரை ஒருவர் காண்பது முதலாகக் களவு வெளிப்படும் துணையும் உள்ள செய்திகள் கூறப்படுகின்றன. இதன்கண் 50 சூத்தி ரங்கள் (நச். உரைப்படி) உள்ளன.
தானே தலைவனாகிய முனைவனான் செயற்கைநலம் தோன்றச் செய்யப்பட்ட நூல்கள் ஆலவாய்ப் பெருமானடிகள் செய்த களவியல் போல்வன. அகத்தியம் தொல்காப்பியம் முதலிய நூல் தோன்றிய பிற்காலத்தே களவியல் செய்யப்படினும், இயற்கைநூலின் வழித்தாகவோ செயற்கை நூலின் வழித் தாகவோ செய்யப்படாமையின், முனைவன் அருளிய முதல் நூல் எனவே அது சான்றோரால் கொள்ளப்பட்டது. (பா. வி. பக். 98) (தொ. பொ. சூ. 649 பேரா.)
அகப்பொருள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் இந்நூல் அந்தாதிக் தொடையால் அமைந்த கலித்துறை நூற்பாக் களால் ஆகியது. இந்நூல் முதல் நடு இறுதியாகிய மூவிடத் தும் சிதைந்துள்ளது. இறையறார் களவியற்கு அங்கமாவது.
பாலைக்கருப்பொருள் பற்றிய கலித்துறையே, இதுபோது கிட்டியுள்ளவற்றுள் முதலாவது. உடன்போக்குவரையுமே இன்று கிட்டியுள்ளது. சுருக்கமான உரை துறை விளக்கம் தருகிறது. உதாரணப்பாடல்களாகப் பாண்டிக்கோவை, திருக்கோவையார், பழம்பாடல்கள் ஆகியவையே அமைந் துள்ளன. இந்நூல் தமிழ்நெறி விளக்கத்தோடு பெரிதும் தொடர்புடையதாக உள்ளது. ‘களவியற்காரிகை’ என்ற நூற்பெயர்தானும் பதிப்பாசிரியர் இட்ட பெயரேயாம். அகப்பொருட் செய்திகள் பலவற்றை எடுத்துக்கூறும் இந்நூல் இந்நிலையிலும் ஓளரவு பயன்படுகிறது. தமிழ்ப் பேரறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் பரிசோதித்து வெளியிட்ட பதிப்பு 1931 ஆம் ஆண்டு வெளிவந்தது.
கட்குடியர் தாம் குடிக்கும் கள்ளின் பெருமையைச் சிறப் பித்துக் கூறுவதாக அமையும் இத்துறை கலம்பக உறுப்புக் களுள் ஒன்று.
“புத்தர்களே! அரங்கநாதனை வழிபடும் கட்குடியர் யாம். மனத்தில் பெருமகிழ்வு தரும் களிப்பு வந்து சேர்ந்தது. யாங்கள் செய்கின்ற துர்க்கை பூசையே வேள்விகளில் சிறந்தது. வானுலகத்தேவர் அருந்தும் அமிர்தமும் கள் போன்று வெண்ணிறத்ததுதான். சாதிகளைக் கொள்ளாத மனிதர்கள் உலகத்தில் இல்லையே; மந்திரத்துக்கு வசப்படாத தேவரும் வானுலகில் இல்லை; வடிவம் இல்லாத பொருள் கள் அண்டகோளத்துக்குட்பட்ட எவ்வுலகிலும் இல்லை. ஆதலின் சாதி, மந்திரம், வடிவு - இவை மிக இன்றியமை யாதவை. இவையெல்லாம் நாங்கள் குடிக்கும் கள்ளுக்குப் பெயர் ஆதலின், கள்ளின் பெருமையை அறிக!” என்று கட்குடியர், கட்குடியை வெறுக்கும் பௌத்தர்களிடம் கூறுதல். (திருவரங். 65)
கட்குடியர் உண்டு குடித்து மகிழ்வதைச் சிறப்பித்துப் பாடும் வண்ணப்பாட்டு. (L)
இது தொல்காப்பியப் பொருளதிகாரத்து நான்காம் இயலாகும். இதன்கண், முன்பு களவொழுக்கம் நிகழ்த்திய தலைவன் கரணமொடு புணரத் தலைவியை மணப்பது முதல் காமத்தில் பற்றறுத்து இருவரும் வீட்டின்பத்திற்குப் பாதுகாவலான செயல்களில் ஈடுபடுவதுகாறும் உள்ள செய்திகள். 53 சூத்திரங்களில் (நச்) கூறப்பட்டுள்ளன.
இறையனார் களவியலில் 34 முதல் 60 முடிய உள்ள நூற்பாக்கள் கற்பியற் பகுதியாம். நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள், இலக்கண விளக்க அகத்திணையியல் முதலிய நூல்களிலும் கற்பியற் பகுதிகள் உள.
காரைச் சித்தர் இயற்றியது. ஒரு சீரடி நான்காலமைந்த செய்யுளொன்று இதன்கண் உள்ளது. (யா. வி. பக். )
கனாப் பயன்களைப் பற்றி, 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமணராகிய பொன்னவன் என்ற புலவர் இயற்றிய நூல். அம்பரில் இருந்த கணபுரத்தேவன் விரும்பியவாறு இந்நூல் இயற்றப் பட்டது என்ப. சிலப்பதிகாரம் 15 : 106ஆம் அடியுள் கனாநூல் பற்றி அடியார்க்குநல்லாரது உரைக்குறிப்பு நிகழ்வதால், இப்பெயரிய நூல் அவர் காலத்துக்கு முற்பட்ட தொன்றாயிருத்தல் வேண்டும்; பொன்னவன் இயற்றியது அதன் வழிநூலாதல் கூடும். (L)
தொல்காப்பியனார் தோன்ற விரித்துரைத்த யாப்பிலக்கணத் தைப் பல்காயனார் வகுத்துரைப்பவே, நல்யாப்பினைக் கற்றார் மதிக்கும் கலைவல்ல காக்கைபாடினியார், அவ் விலக்கணத்தைத் தம் நூலுள் தொகுத்துரைத்தார். காக்கை பாடினியார் பெயரானே, அந்நூல் காக்கைபாடினியம் என வழங்கப்படுவதாயிற்று.
தொல்காப்பியனார்தம் ஒருசாலை மாணாக்கர் எனக் கூறப்படும் பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பெற்ற இவ்வியாப்புநூல் அகவல்நூற்பாக்களால் ஆகியது. யாப்பருங்கலம் முதலிய பிற்கால நூல்கள் இதனை அடி யொற்றியே எழுந்தன. இதன் நூற்பாக்கள் 73 யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றில் இடம் பெற்றுள. இவற்றுள் எதுகை முதலிய தொடை இலக்கணம், ஆசிரிய வகைகள் சில, ஆசிரியத் தாழிசை, கலிவகைகள் சில, வஞ்சி விருத்தம் - முதலிய சில நீங்கலான எல்லாச் செய்திகளும் காணப்படுகின்றன. (யா. வி. பக். 19 முதலியன.)
இலக்கண விளக்கம் - செய்யுளியல் ‘பிற்சேர்க்கை’ காண்க.
காக்கைபாடினியம் இயற்றிய ஆசிரியர்; தொல்காப்பியனார் தம் ஒரு சாலை மாணாக்கர் எனக் கருதப்படுபவர். (பா. வி. பக். 104)
காஞ்சிமாலை சூடிப் பகைவரைத் தடுத்தற்கு எதிரூன்றி நிற்றலைக் கூறும் பிரபந்தம். (தொ. வி. 283 உரை)
தொடர்நிலைச்செய்யுளின் நூலுட் பெரும்பிரிவு. கம்பரா மாயணத்துள் - பாலகாண்டம் முதலியன.
1) காதல் பொருட்டாகிய பிரபந்த விசேடம். ‘கூளப்ப நாயக்கண் காதல்’ ஓர் எடுத்துக்காட்டு. இது கலிவெண்பா வால் தலைவன் தசாங்கம் முதலியனவும் அவன் முன்னோர் சிறப்பும் அவன் பவனி வந்தபோது அவனால் விரும்பப்பட்ட தலைமகள் சிறப்பும் பின் அவன் அவளைக் கூடி மகிழ்ந்த சிறப்பும் ஆகிய செய்திகளைக் குறிப்பிடுவதாகும்.
2) தான் கொண்ட ஆசையை இரண்டுஅடிக் கண்ணியாகக் கொண்டு பாடுதல் காதல் ஆகும். (சாமி. 171 உரை)
1. எடுத்த நூற்பொருள் இனிது முடிதற்பொருட்டு நூலின் தொடக்கத்தில் செய்யும் தெய்வ வணக்கம். 2. பிள்ளைத் தமிழாகிய பிரபந்தத்துள் பத்துப்பருவங்களில், “குழவியைக் கடவுள் காக்க!” என முதற்கண் வைக்கப்படும் பருவம். (L)
மங்கலம் பொலியும் செங்கண் மாயோன் சங்கு சக்கரங் களைத் தரித்தலானும் காத்தல்கடவுள் ஆகலானும் பூமடந் தையைப் புணர்தலானும் அவனை முற்கூறி, கங்கை பிறை கொன்றை முதலியவற்றைப் புனைந்த உமையோர்பாகன் என்று சிவபிரானைப் புகழ்ந்து கூறி, முழுதுலகு ஈன்ற பழுதறும் இமயமால் வரைச் செல்வியாம் பார்வதிதேவியை விருப்ப மாகக் கூறி, நாமகள் கேள்வனாம் அயனைப் புகழ்ந்து கூறி, கறுத்த மேகவாகனனாம் இந்திரனை அதன்பின் புகழ்ந்து கூறி, ஒற்றைக் கொம்பனாம் விநாயகனைப் புகழ்ந்து கூறி, வீரத்தன்மை பொருந்திய வேலனைப் புகழ்ந்து கூறி, சத்த மாதர்களைப் புகழ்ந்து கூறி, வாணியாம் கலைமடந்தையைப் புகழ்ந்து கூறி, பதினொரு கோடி உருத்திரர், பன்னிரண்டு கோடி ஆதித்தர், இரண்டு கோடி மருத்துவர், எட்டுக் கோடி வசுக்கள் இவர்களைப் புகழ்ந்து கூறி, ஏனைய காரி முதலிய தேவரையும் பிள்ளையைப் பாதுகாத்தற் பொருட்டுக் காப்புக் கூறப்படும்.
இக்கடவுளர் முறைவைப்பில் சில மாறுதல் உண்டு.
(இ. வி. பாட். 48)
பிள்ளைத்தமிழாகிய பிரபந்தம் பாடும் பருவங்களுள் முதலாவது. இப்பருவம் பாடுங்கால் ஒன்பது பாட்டானும் பதினொரு பாட்டானும் பாடுதல்வேண்டும்.
பருவங்கள் பத்தும் தம்மில் ஒப்பக் கொண்டு பாடுமிடத்து ஒற்றைப்படப் பாடுதல் சிறப்புடைத்து; இரட்டிக்கப் பாடுமிடத்து ஓசைபெயர்த்துப் பாடப்படும்.
காப்பு முதற்கண் எடுத்த அகவல் விருத்தம் நான்கடிக்கும் எழுத்து ஒப்பப்பாடுதல் வேண்டும் என்பது பன்னிரு பாட்டியல் விதி (191)
கடவுளர் பலரைப் பாடுமிடத்துப் பாடல் எண்ணிக்கை வரையறைப்படாது வருதலும் கொள்க. (இ.வி. பாட். 51)
கடவுள் காத்தலாக மூன்று கவியானும் ஐந்து கவியானும் ஏழு கவியானும் அந்தாதித்தொடையுறப் பாடும் பிரபந்தம்.
(இ. வி. பாட். 72)
அறம் பொருள் இன்பம் என முப்பாலாக அமைந்த திருக் குறளில் இறுதியாக அமைந்திருக்கும் இப்பகுதி 25 அதிகாரங் களை யுடையது. ‘தகையணங்குறுத்தல்’ முதலாக ‘ஊடலு- வகை’ ஈறாக அவை அமைந்தவை. இங்கு இன்பம் என்பது காமவின்பத்தினை; அஃதாவது ஒருகாலத்து ஒரு பொருளான் ஐம்பொறியும் நுகர்தற் சிறப்புடையது. இக்காமத்துப்பாலைக் களவு ஏழு அதிகாரங்களானும் கற்புப் பதினெட்டு அதிகாரங் களானும் பாகுபடுத்துப் பெரும்பான்மை பற்றிப் புணர்ச்சி யைக் களவென்றும், பிரிவினைக் கற்பென்றும் கூறுகிறார். (பரிமே. தோற்று. உரை.)
பதினோராம் நூற்றாண்டில் அமிதசாகரர் என்னும் சமணப் புலவரால் இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கண நூல். அவர் இயற்றிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய், அலங்காரம் உடைத்தாக, காரிகை யென்னும் கட்டளைக் கலித்துறை யாப்பிற்றாக, மகடூஉ முன்னிலை பெரும்பான்மை யும் பயில இந்நூல் அமைந்தது. யாப்பருங்கலக் காரிகை என்னும் முழுப்பெயர்த்தாகிய இந்நூலுள் உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என மூன்று இயல்களும், அவற்றுள் முறையே 18, 16, 10 ஆகிய காரிகைச் சூத்திரங்களும், நூல் தொடக்கத்தே தற்சிறப்புப் பாயிரம் ஒன்றும் அவையடக்கம் இரண்டும் ஆகிய காரிகைகளும் உள.
பிற்காலத்தே யாப்புப் பயில்வார்க்குப் பெரிதும் துணையாகப் பயிலப்பட்ட இந்நூற்சிறப்புக் ‘காரிகை கற்றுக்கவிபாடு’ என்னும் தொடரால் புலனாம். இந்நூற்கு உரையாசிரியர் குணசாகரர் என்பார். அவரே யாப்பருங்கல விருத்தியுரைகார ரும் ஆவார் என்பது ஒரு சாரார் கூற்று.
காரிகை - அழகு, கட்டளைக் கலித்துறை, மகடூஉ எனப் பல பொருள்படும்.
தற்சிறப்புப் பாயிரமும் அவையடக்கமும் நீங்கலாக அமைந்த 44 கட்டளைக் கலித்துறைகள் உதாரண முதல்நினைப்புக் காரிகைகளும் உள்ளிட்டன. இந்நூற்கு யாப்பருங்கலப் புறனடை என்ற பெயரும் உண்டு.
வடமொழியில் உரைநடையில் வரையப்படும் நூலுக்குக் காரிகை என்பது பெயர். தமிழில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமையும் சூத்திரங்கள் காரிகை எனப்படும்.
எ-டு : வீரசோழியத்துள் காரிகை
இவர் பொய்கையாரோடு சேர்ந்து பாடிய பாடலொன்று இரண்டாமடி குறைந்து ஆரிடப்போலி வெண்பாவாக எடுத்துக் காட்டப்படுகிறது. (யா. வி. பக். 371)
இவருடைய மூத்த திருப்பதிகங்கள் அறுசீர் ஆசிரிய விருத் தத்தைச் சாரும். திரு இரட்டை மணி மாலை 10 வெண்பா, 10 கட்டளைக் கலித்துறை ஆகும். அற்புதத்திருவந்தாதி வெண்பா ஆகும். இவை பதினோராம் திருமுறையைச் சார்ந்தன.
தருக்கம் பற்றிய நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 583)
அகப்பொருள் புறப்பொருள் தொடர்பான கூற்றுக்கள் பற்றி அமைந்த பாடல்கள் கிளவிக்கவி என்ற பெயரால் பல திறப்படும் என வீரசோழிய இறுதி நூற்பாக்காரிகை சொல்லும். (வீ. சோ. 183)
அகப்பொருள் நூல்களில் பல கூற்றுக்களின் தொகுப்பாய் ஒருமுறையில் அடங்கும் இயற்கைப் புணர்ச்சி போன்ற சந்தருப்பங்களை இடம் எனவும் கிளவித் தொகை எனவும் கிளவிக் கொத்து எனவும் கூறுவர். (கோவை. பாயி. பேரா. உரை)
அகப்பொருட் கோவைநூல் கிளவிக்கோவை எனவும் கூறப் படும். (கோவை. 4. பேரா.உரை) கிளவி - கூற்று (நிகழும் சந்தகுப்பம்); கோவை - தொகுப்பு.
கிளியை விளித்துக் கண்ணியமைப்பில் பாடப்படும் நூல்; பெரும்பான்மையும் அகப்பொருட் செய்தி பற்றியது. பாரதியார் பாடிய கிளிக்கண்ணிகள் உலகியற்செய்திகளைக் கூறுவனவாக உள. பலசீர்களையுடைய ஒத்த இவ்விரண்டடி அமைப்பினை யுடையவை அவை; தனிச்சீராக ‘கிளியே’ என்ற விளி நிகழும்.
‘கீதா’ என்ற வடசொற்குப் பொருள் பாடப்பட்டது என்பது. தத்துவநூல் சிலவும் இப்பெயரால் வழங்கப்பட்டன. மகாபாரதத்தில் போர்முனையில் கண்ணபிரான் பார்த்த னுக்கு அருளிய பகவத்கீதையே சிறப்பாகக் கீதை எனப்படும். உபதேசங்களாக வரும் தத்துவ உரையாடல்கள் மகாபாரதத் தில் கீதை எனப்படுகின்றன; அனுகீதை, உத்தரகீதை என்பன வேயன்றி, மங்கி கீதை, சமியாக கீதை முதலாக வருவன காண்க. கடவுளர் தம் அடியார்க்கு உபதேசித்த தத்துவங்கள் பிற புராணங்களிற் காணப்படுவன சிலவும் கீதை எனப்படு கின்றன. தேவிகீதை, சிவகீதை, ராமகீதை கணேசகீதை, சூதகீதை முதலாகச் சொல்லப்படுவன உள. வேதாந்தம் முதலிய மதங்களின் கொள்கைகளை விளக்குவனவாகச் சுருதிகீதை என்பது முதலாக சில உள. சீக்கிய மதக்கொள் கையை விளக்கும் நானக்கீதையும் தோன்றிற்று.
‘கீர்த்தனை’ காண்க.
பல்லவம், அதன் இருபங்கு அநுபல்லவம், அதன் இருபங்கு சரணம் - இவற்றொடு தாளம் பிழையாமல் அமைந்து, பேரின்பம் தருவது கீர்த்தனையாம். அனுபல்லவமும் சரணமும் அளவிற் கூடியும் வரும்; ஆயின் தாளம் குழம்பாது. யாவரும் அறிவுறும் பொருண்மை பற்றியே கீர்த்தனை நிகழும். (அறுவகை. நாடகத்தமிழியல்பு. 1,2)
அடிநிமிர்வில்லாச் செய்யுள் பலவற்றால் அறம்பொரு ளின்பங்களைப் பற்றிக் கூறும் நூல்வகை. (பன்னிரு. 346)
கும்பகோணத்தில் வாழ்ந்த அடியார் பகவர் என்பார். இவர் இயற்றிய செய்யுள் நூல் ‘வாசுதேவனார் சிந்தம்’ என்பது. இவர் பாடல்கள் ஆரிடச்செய்யுளின் பாற்படும். உலகியல் செய்யுட்கு ஓதிய உறுப்புக்கள் சில மிக்கும் குறைந்தும் இப்பாடல்கள் காணப்பட்டன. இந்நூல் இக்காலத்தில் இல்லை. (யா. வி. பக். 369)
சொற்குற்றத்தால் பாட்டுடைத் தலைமகன் உடலுக்கு ஊனம் உண்டாம். பொருட் குற்றத்தால் உயிர்க்கு ஊனம் ஆதலின் பொருட்குற்றம் தவிர்தல் சிறப்புடைத்து. “சொற்பொருள் புலப்படினன்றே, அக்குற்றம் தவிர்க்கப்படும்? குண்டலகேசியில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தனவால்” என்னும் வினாவை எழுப்பி, உரைகாரர் விடை கூறுவார்: “அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லது ஆகாது; அன்றியும், அவை செய்த காலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருத்தல் கூடும் எனினும் அமையும் எனக் கொள்க.” (வீ. சோ. 146 உரை)
குண்டலகேசி என்பாளது தோற்றமும் தொழிலும் போல் வன சொன்ன காப்பியம் அவள் பெயரால் குண்டலகேசி எனப்பட்டது. (யா. வி. பக். 39)
குண்டலகேசியின் முதற்பாடல் வண்ணத்தால் வருவதாய் நேரசையால் தொடங்கியதால் அடிதோறும் பதினான்கு எழுத்துடையது. (யா. வி. பக். 520)
தருக்க நூல்களில் ஒன்று. (யா. வி. பக். 583)
இது குணகாங்கியம் எனவும் வழங்கப்படும்; கன்னடமொழி யாப்பு நூல். இதன் சூத்திரங்களில் அவையடக்கமாக ஒரு சூத்திரம் இருந்தமையும், இதன் சூத்திரங்கள் பல மகடூஉ முன்னிலையுடையனவாய் அமைந்தமையும், யாப்பருங்கலக் காரிகையது பாயிரவுரையால் அறியப்படுகின்றன. இதன்கண், சந்தச் செய்யுள்கள், தாண்டகச் செய்யுள்கள் என்னுமிவற்றின் இலக்கணங்கள் விரிவாக ஓதப்பட்டிருந்தன. (யா. வி. பக். 523)
யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்னும் இவ் விரண்டு யாப்புநூல்கட்கும் உரைவரைந்த வித்தகர். இவ் விரண்டற்கும் நூலாசிரியர் ஆகிய அமிதசாகரர்தம் மாணாக்கர் இவர். தம்முடைய ஞானாசிரியா ஆகிய குண சாகரர்தம் பெயரையே அமிதசாகரர் தம் தலைமாணாக்க ராகிய இவர்க்குச் சூட்டினார் என்ப. யாப்பருங்கலத்திற்குப் பேருரையும், யாப்பருங்கலக்காரிகைக்குச் சிற்றுரையும் குணசாகரர் இயற்றியுள்ளார். இப்பேருரைச் சிறப்பால் யாப்பருங்கலம் ‘யாப்பருங்கலவிருத்தி’ என்றே சுட்டப்பெறு கிறது. கலத்திற்கு விருத்தியுரை கண்டபின்னரே, குணசாகரர் காரிகைக்குச் சிற்றுரை இயற்றினார் எனத் துணியலாம்.
யாப்பருங்கலக் காரிகைக்கு மாத்திரமே உரைகண்டவர் குணசாகரர் என்றொரு கருத்தும் உண்டு. பேருரை சிற்றுரை கட்கிடையே காணப்படும் சில கருத்து வேறுபாட்டால் உரையாசிரியன்மார் வெவ்வேறாதல் வேண்டும் என்ப.
பண்டை நாடகத்தமிழ் நூல்களுள் ஒன்று.
(சிலப். 3 : 12 அடியார்க். உரை)
பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவர்; சமணப்பெரியார்; நேமிநாதம் என்ற பெயரை உடையதாய், எழுத்து சொல் என்ற ஈரதிகாரங்களை உடைய சின்னூல் என்ற இலக்கண நூலினையும் வெண்பாப் பாட்டியலையும் வெண்பாயாப்பில் இயற்றியவர். இவருடைய நேமிநாதத்தின் உரை வயிரமேக விருத்தி எனப்படும். நேமிநாதச் சொல்லதிகாரம் தொல்காப் பியச் சொல்லதிகாரச் சுருக்கமாய் அமைந்துள்ளது.
வெண்டளை மிக்க எழுசீரடி யிரண்டால் பெரும்பான்மை அமையும் பாடல்கள்; ஏழாம்சீர் விளங்காய் ஆதல் பெரும் பான்மை. அடியெதுகையும், அடிதோறும் முதலாம் ஐந்தாம் சீர்களில் மோனையும் காணப்படும்.
சித்தர் பாடல்களில் காணப்படும் புது யாப்பு வகைகளுள் ஒன்று. (இலக்கணத். முன். பக்.101)
எ-டு :
அ) பெரிய திருமொழி 2 - 9 - 1
‘சொல்லுவன் சொற்பொருள்’
ஆ) திருவாசகம் - அன்னைப்பத்து.
குரவையெனினும் அமையும்; கூத்துவகை ஏழனுள் ஒன்று.
எழில் மிக்க மாதர் எழுவரோ எண்மரோ ஒன்பதின்மரோ இணைந்து ஒருவர் மற்றவர் கையினைக் கோத்துக்கொண்டு, காமமும் வெற்றியும் பொருளாகப் பெற்ற இன்பம் ஊட்டும் இனிய இசையுடன் பாடிக்கொண்டே ஆடும் கூத்து. (நாடக. 202)
ஒரு வட்டத்தின் பன்னிருகோணப் பகுதியிலும் பொருந்து மாறு மாதர் எழுவர் வட்டமாய்க் கைகோத்து இணைந்தும் மாறி மாறி ஓடிச் சென்று கைகோத்து இணைந்தும் எழு வகைப் பண்களையும் கொட்டும் பண்ணும் ஒட்டுமாறு பாடி ஆடுவதற்கு ஏற்குமாறு, நாற்சீரடி மூன்று தாழிசையாக ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரவும், நாற்சீரடி நான்கு இடைமடக்காக வரவும், வழிபடுகடவுளை முன்னிலைப்படுத் தியும் படர்க்கையாகத் தனியே நிறுத்தியும் வழுத்துவதாகப் பாடுவது குரவைப் பாட்டு எனப்படும். (பன்னிரு கோணப் பகுதியும் மேடம், இடபம் முதலாகப் பன்னிரண்டு இராசிப் பெயர்பெறும். குரல் துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் எனப் பண்கள் ஏழன் பெயர் பூண்ட மாதர் எழுவர் முறையே இடபம், கற்கடகம், சிங்கம், துலாம், தனு, கும்பம், மீனம் இவற்றுக் கோணங்களில் நின்று கைகோத்து வட்டமாக நிற்பர்) (தென். இசைப். 12)
குவலயானந்தம் -
வடமொழியுள் ஓர் அணியிலக்கண நூல். பொருளணியை மாத்திரம் தேர்ந்துகொண்டு காளிதாசர் உவமையணிமுதல் ஏதுவணி ஈறாக நூறு அணிகள் விளங்க இலக்கண இலக்கியம் அமைந்த சுலோகங்களாகச் ‘சந்திராலோகம்’ என வடமொழி அலங்கார நூல் ஒன்று யாத்தார். அந் நூலுக்கு 17ஆம் நூற்றாண்டினராகிய அப்பையதீக்ஷிதர் உரை வரைந்தும், அந்நூறு அலங்காரங்கள் மேலும் இரஸவதலங் காரம் முதலாக ஏகவாசகாநுப்பிரவேசஸங்கராலங்காரம் ஈறாக இருபது அலங்காரங்களைச் சேர்த்தும் ‘குவலயானந் தம்’ எனப் பெயரிய நூலாக முடித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த எட்டயபுரம் சம°தானாதிபதி ஜகத்வீர ராமகுமார எட்டப்ப மகாராஜா ஐயன் அவர்கள் தமது சம°தான வடமொழிப் பண்டிதராம் சங்கரநாராயணசா°திரிகளைக் கொண்டு குவலயானந் தத்தை 1889ஆம் ஆண்டு தெளிவுறத் தமிழில் மொழிபெயர்த் தார்; தமது சம°தானத் தமிழ் வித்துவான் முகவூர் மீனாட்சி சுந்தர கவிராயர் அவர்களால் சுலோகங்களின் மொழி பெயர்ப்புக்களைச் செய்யுள்களாக அமைப்பித்தார். இவ்வா றாகத் தமிழில் குவலயானந்தம் என்னும் இவ்வணிநூல் கட்டளைக்கலித்துறை நூற்பாக்களொடு நூற்றிருபது அணிகளை விளக்குகிறது. அணிவகைகளுக்கு எடுத்துக்காட் டாக வெண்பா, விருத்தம் முதலாகப் பல யாப்பினவாகிய செய்யுள்கள் காணப்படுகின்றன.
மாணிக்கவாசகர் என்ற புலவரால் இயற்றப்பட்டு, உறுப் பியல், அணியியல் சித்திரஇயல் என்ற மூன்று இயல்களை உடைத்தாய் முறையே 150, 120, 29 சூத்திரங்களை உடைய குவலயானந்தம் என்ற நூலும் உள்ளது.
குழமகன் -
மகளிர் தம் கையிற் கொண்ட இளமைத்தன்மையுடைய குழமகனைக் கலிவெண்பாவினால் புகழ்ந்துபாடும் பிரபந்த வகை. (குழமகன் - ஆண்குழந்தை) (இ. வி. பாட். 110)
குழமணிதூரம் -
வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிக்கொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக் கூத்து. (பெரியதி. 10-3-3)
முன்மொழிக்கு இன்றியமையாப் பொருத்தம் பத்தும் இயற் பெயரிடத்து நன்மையைப் பயக்கும் எழுத்தும் சொல்லும் பொருளும் உணர்ந்து நுட்பத்தால் புலவன் உரைத்த அகலக் கவியைக் கொடை முதலிய வரிசை செய்து புனைந்தோர், “பெரிய புகழானும் உருவத்தானும் முறையே நிறைமதியும் இளஞாயிறும் இவராம்” எனச் சிறப்புற்று இவ்வுலகில் புகழுடம்பான் நிலைபெற்றுத் தலைமை எய்தியிருப்பர்.
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி, எய்துப’ (புறநா.27) என்றதனால் இருமைப்பய னும் எய்துவர் என்பது. (இ. வி. பாட். 180)
தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப் பற்றிக் குறத்தி குறிசொல்வதைக் கூறும் ஒரு பிரபந்தம். ‘குறவஞ்சி’ காண்க.
(தொ. வி. 283)
கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் இஃது ஒன்று. தலைவியின் உடலும் மனமும் வாடியமை கண்ட செவிலி, அவள் தலைவனொடு நிகழ்த்தும் களவொழுக்கம் பற்றி அறியாது, ஏதோ தெய்வக்குற்றத்தால் அவள் உடல் வாட்டமுற்றுள்ளதோ என்ற எண்ணத்தால் குறத்தி ஒருத்தியை அழைத்துத் தலைவியின் மனநிலையைக் குறியால் அறிந்து சொல்லும்படி வினவ, குறத்தி தான் குறிசொல்லுமுகத்தான் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள அன்பினை எடுத்துக்கூறித் தலைவி விரைவின் அவனை மணக்கும் வாய்ப்புப் பெறுவாள் என்று கூறும் அகப்புற மாய்ச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பட்ட பாடல் இது.
“முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறவல்ல குறத்தி நான். நீ மனத்துள் எதனை நினைத்தாயோ அதனைக் கூறவல்லேன். என் சிறுகுழந்தையின் தலையில் எண்ணெய் வாரு; ஒரு பழைய புடவையை எனக்குக் கொண்டுவந்து கொடு. அழகிய மலர்போன்ற கையை யுடைய தலைவி! நின்முலைக்கண்ணின் குறி நன்றாக உள்ளது. ஆதலின் நீ உலகம் முழுதும் மகிழும்படி நாளையே திருவரங்கநாதனாகிய நின்நாயகனை அடைவாய்!” (திருவரங்கக். 69)
குறத்திஒருத்தி தலைவியை நோக்கிக் குறிசொல்வதாக அமையும் இவ்வுறுப்புக் கலம்பகம் என்ற பிரபந்தத்து நிகழும் 18 உறுப்புக்களுள் ஒன்று. (இ. வி. பாட்.52)
குறத்தி தலைவிக்குக் குறிசொல்வதாகக் கூறும் குறம் என்ற சிறு பிரபந்தமும் ஒன்று.
எ-டு : மீனாட்சியம்மை குறம்.
நவநீதப்பாட்டியல் கூறும் குறவஞ்சியிலக்கணம் வீரமாமுனி வரது சதுர அகராதியுள் குறத்திப்பாட்டின் இலக்கணமாகக் காணப்படுகிறது.
தலைவன் பவனிவரவு, மகளிர் காமுறுதல், மோகினிவரவு, உலாப்போந்த தலைவனைக் கண்டு மயங்கல், திங்கள், தென்றல் முதலிய உவாலம்பனம், பாங்கி, “உற்றது என்?” என வினவல், தலைவி பாங்கியோடு உற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியொடு தலைவன் அடையாளம் கூறல், குறத்தி வரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலிய வினவல், குறத்தி மலைவளம் நாட்டுவளம் முதலிய கூறல், தலைவனுடைய தலவளம் கிளைவளம் முதலிய கூறல், குறிசொல்லி வந்தமை கூறல், தலைவி குறத்தியை வினவல், குறத்தி தெய்வம் பராவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல், தலைவி பரிசில் உதவி விடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணி குத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தி அடையாளம் கூறல், குறத்தியைக் கண்ணுறல், குறவன் அணி முதலிய கண்டு ஐயுற்று வினவலும் ஆட்டாண்டு குறத்தி விடைகூறலுமாகக் கூறல் - எனப் பெரும்பான்மையும் இவ்வகை உறுப்புக்களால், அகவல் வெண்பா தரவுகொச்சகம் கலித் துறை கலிவிருத்தம் கழிநெடில் விருத்தம் என்ற இச்செய்யுள் இடையிடைக் கூறிச் சிந்து முதலிய நாடகத் தமிழால் நிகழும் பிரபந்தவகை. (நவ. பாட். 20-22)
பாவினங்களுள் சமக்கிரதமும் வேற்றுப்பாடையும் விரவி வர அமைந்த இலக்கியங்களுள் ஒன்று. (யா. வி. பக். 491)
போலிச் சதுரப்பாட்டினைப் பேசி, பலகாலும் நகைத்தலைச் செய்து, பக்கத்திருப்பாரிடம் பேச்சு நிகழ்த்தி, தமக்கொரு தலைமையின்றி அஃதுள்ளது போல நடிப்பு நிகழ்த்தி, நல்ல நூற்பொருளை ஏடு விரித்து நோக்காமல், மாறுபாட்டைத் தம்முள் பெருக்கிக்கொண்டு, அறம் துறந்து, மறைவான சொற்செயல்களால் பொல்லாங்கு விளைத்துப் பொய்யே கூறுவது குறைஅவை. குறைபாடுற்றார் கூடிய அவை குறை யவை எனப்பட்டது. நிறையவைக்கு மறுதலையாயது குறைஅவை. அவையினரது குணக்குறைபாடு அவைமீது ஏற்றப்பட்டது. (நவ. பாட். 89)
பண்டு தோன்றிய நாடகத்தமிழ் நூல்; அபிநயத்தைப் பற்றிய இந்நூற்பெயர் நச்சினார்க்கினியர் உரையுள் காணப்படுகிறது.
(சீவக. 124)
நால்வகை ஆற்றுப்படையுள் ஒன்று. (ஏனைய மூன்றுமாவன: பாணாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, விறலியாற்றுப் படை என்பன.) வள்ளல்ஒருவனிடம் பரிசில் பெற்று மீளும் ஒரு கூத்தன், தான் வழியிற் கண்ட ஓர் ஏழைக் கூத்தனை நோக்கித் தனக்கு நிறைய வழங்கிய வள்ளலிடம் அவனும் சென்றால் வறுமை தீரப் பரிசில் பெற்று வாழலாம் எனக்கூறி, அவனை அவ்வழியில் செல்லுமாறு கூறுதல். ஆறு - வழி; படை - படுத்துதல்; தான் சென்றவழிக்கண் அவனும் சென்று பரிசில் பெறுமாறு செலுத்துதல் ஆற்றுப்படைப் பிரபந்தம் என்பது. (பு. வெ. மா. 9 : 29)
கலிவெண்பாவால் ஒருவரை முடி முதல் அடியளவும் வருணித்துக் கூறும் ஒரு பிரபந்தம். மக்களில் ஆண்பாலரை யும் பெண்பாலரையும் கேசம் முதல் அடிவரை பாடுதலே முறை. தெய்வங்களைப் பாதாதி கேசமாகப் பாடவேண்டும் என்ப. (இ. வி. பாட்.111)
ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் பாடுவது கைக்கிளைச் செய்யுளாம்.
பிரபந்த மரபு, பன்னிரு பாட்டியல் இவை கைக்கிளைமாலை எனச் சுட்டுதலின் (பி.ம.30, பன்.பாட்.295), பாடல்கள் அந்தாதித் தொடையுற வருதல் வேண்டும்போலும்.
ஒருதலைக் காமத்தினை முப்பத்திரண்டு வெண்பாவாற் பாடுதலும் கைக்கிளைப் பிரபந்தம் என்ப. (மு. வீ. யா. ஒ. 149; தொ. வி. 283 உரை)
கையனார் யாப்புநூல் -
கையனார் என்பவர் இயற்றிய இந்நூற்கருத்துக்கள் யாப் பருங்கல விருத்தியுள் மேற்கோளாக எடுத்தியம்பப் பெற்றுள. மெய்யின் மாத்திரை அரை என்பது, ஆய்தம் சொற்களில் அமையும் இடம், இயைபுத்தொடைக்கு எட்டுவிகற்பங்கள், நேரிசை ஆசிரியப் பாவிற்கு எடுத்துக்காட்டு, இடைப்புணர் முரணுக்கு எடுத்துக்காட்டு ஆகிய கையனார் யாப்புச் செய்திகள் அதன்கண் இடம் பெறுகின்றன.
“நாற்சீரடிக்கண் முதல் அயற்சீர்க்கண் தொடை இல்லதனைக் கீழ்க்கதுவாய் எனவும், ஈற்றயற்சீர்க்கண் தொடையில்லதனை மேற்கதுவாய் எனவும் வேண்டினார் கையனார் முதலிய ஒரு சார் ஆசிரியர்” என யாப்பருங்கலக்காரிகையுரை கையனார் யாப்பு நூற் செய்தியைச் சுட்டுகிறது. (யா. வி. பக். 23, 27, 138, 159; யா. கா. 19. உரை)
கொற்றியார் -
கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் இஃது ஒன்று. சிறந்த வைணவஅடியவர் வேடம் பூண்டு வைணவநாமத்தை நெற்றி முதலான உறுப்புக்களில் தரித்துக்கொண்டு பிச்சையேற்க இல்லம்தோறும் வரும் இளம்பெண் ஒருத்தியின் வனப்பில் தனதுள்ளத்தைச் செல விட்ட காமுகன் ஒருவன் அவளது வடிவழகு தன்னை வருத்து வதாக எடுத்துக்கூறும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல்.
எ-டு : மதுரைக்கலம்பகம். (பாடல். 36)
கோள் உரிமை -
சந்திரனும் பிரகற்பதியும் வெண்பாவிற்கு உரியோர்; ஆதித்த னும் செவ்வாயும் ஆசிரியப்பாவிற்கு உரியோர்; புதனும் சனியும் கலிப்பாவிற்கு உரியோர்; சுக்கிரனும் இராகுகேது வாகிய பாம்பிரண்டும் வஞ்சிப்பாவிற்கு உரியோர். (இ. வி. பாட். 123)
ச
சக்கரமாற்று -
சீகாழியின் பன்னிருபெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒருபாடலின் இறுதியிற்கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு பாடிய சம்பந்தர் தேவாரப் பதிகம். (இரண்டாந்திருமுறை - பதிகம் 73)
சங்கயாப்பு -
உயிர், குறில், நெடில், மாத்திரை அளவு, அரை மாத்திரை அளவு, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் புள்ளி பெறுதல், நேரசை நிரையசை, தொடர்வகை, வெண்பாஓசை, ஆசிரி யப்பாவின் ஓசை, கலிப்பாவகை, பாக்களின் அடிவரையறை முதலியன பற்றிய செய்திகளுக்கு இந்நூலின் சூத்திரங்கள் பதினான்கு யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்பட் டுள்ளன. (யா. வி. பக். 53 முதலாயின)
சங்கர நமச்சிவாயர் -
நன்னூலுக்கு விருத்தியுரை கண்டவர். இவரது ஊர் திருநெல் வேலி. இவர் வாழ்ந்த இடம் தடிவீரையன் கோயில் தெரு என்றும், இவரது குலம் பாண்டிநாட்டு வேளாளர் குலம் என்றும் டாக்டர் ஐயரவர்கள் குறிப்பிட்டுள்ளார். நெல்லை ஈசான மடத்திலிருந்த இலக்கணக்கொத்துச் சாமிநாத தேசிகரிடம் இவர் இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றார். ‘நன்னூலுக்குச் சிறந்ததோர் உரை செய்திடுக’ என்று தம் ஆசிரியர் பணித்தமையாலும், ஊற்றுமலை மருதப்பதேவரது வேண்டுகோளாலும் இவர் இவ்விருத்தியுரை வரைந்தமை அகச்சான்றுகளால் புலப்படுகிறது. தம் ஆசிரியர் போலவே இவரும் தொல்காப்பியம் திருக்குறள் திருக்கோவையார் என்னும் இம்மூன்றிலும் தக்க புலமையும் ஈடுபாடும் கொண் டிருந்தமை உரை வாயிலாக உணரப்படும். இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு. அடுத்துத் தோன்றிய வடமொழி தென் மொழி இரண்டிலும் புலமை நிரம்பிய மாதவச் சிவஞான முனிவர் இவரது புத்துரையை மேலும் புதுக்கிப் புத்தம் புத்துரை ஆக்கியமையே இவரது உரைமாட்சிக்கொரு சான்று என்பர் டாக்டர் ஐயரவர்கள்.
சச்சபுட வெண்பா -
அங்கப் பிரமாணமாகிய சச்சபுடம் முதலிய 108 தாளங்களையும் விளக்கும் தாளநூல் இதனை அகத்தியமுனிவர் இயற்றியதாக நூலின் இறுதி வெண்பா கூறுகிறது. இந்நூலில் 210 வெண் பாக்கள் உள்ளன. ‘மறைகும்பமுனி சொற்றான் மிளிரிய; இருநூற்றொரு பதாம்’ என்பது இறுதிப்பாடலின் இறுதிப் பகுதி அடிகள்.
விரும்பத்தகும் அகப்பொருள் ஒன்றன்மேலாவது புறப்பொ ருள் ஒன்றன்மேலாவது கற்பித்து நூறுகவி பாடுவதொரு பிரபந்தம். இதன் பாடல்களின் ஈற்றடிதோறும் பாட்டுடைத் தலைவன் பெயர் வருதல் பெருவழக்கு. (இ. வி. பாட். 87)
பொருள் இடம் காலம் தொழில் என்னும் இவை பற்றி வெண்பா அல்லது கலித்துறை யாப்பால், சதகம் பாடப் பெறும் என்னும் பிரபந்த மரபியல் (34). (சதகம் அந்தாதியாக முதலும் இறுதியும் மண்டலித்து வருதல் சிறப்புடைத்து என்ப.)
பெயரகராதி தொகையகராதி பொருளகராதி தொடையக ராதி என்ற நாற்பிரிவுகள் உடையதாக, 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட அகராதி.
ஞானசாரியம், சயதேவம், மிச்சாகிருதி, பிங்கலம், மாபிங் கலம், இரணமாமஞ்சுடை, சந்திர கோடிச் சந்தம், குணகாங்கி என்னும் கருநாடகச் சந்தம், வாஞ்சியார் செய்த வடுகச்சந்தம், மாபுராணம் முதலிய தமிழ்நூல்கள் ஆகியனவாம். (யா. வி. பக். 523)
நூல் முதற்சீரில் அமையுமாறு புளிமாங்காய் என்னும் வாய் பாடு. பற்றி வரும் கணம். இதற்குரிய நாள் மிருகசீரிடம். இதன் பயன் வாழ்நாள். தருதல். (சீர்த்தி பயத்தல் என்னும் பன்னிரு பாட்டியல்). (இ. வி. பாட். 40 உரை)
சந்தம், தாண்டகம் என்ற பாக்களின் பல பகுப்புக்களையும் வகுத்துக் கூறி விளக்கும் வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று.
(யா. வி. பக். 486)
‘குவலயானந்தம்’ காண்க.
19ஆம் நூற்றாண்டில் சந்திராலோகம் முத்துசாமி ஐயங்கார் அவர்களால் தமிழில் நூற்பா யாப்பில் மொழிபெயர்க்கப் பட்டது.
சந்தோவிசிதி -
சந்தோபிசிதி; பிங்கலம், மாபிங்கலம், சயதேவம், ஞானா சிரியம், சந்திரகோடிச் சந்தம், மயூரத்திரிசந்தம், மேடகத் திரிசந்தம் முதலிய நூல்கள் சந்தோபிசிதிகள் எனப்படும். இவை எழுத்தொலி பற்றியன. (யா. வி. பக். 486)
வேதங்களின் சந்தங்களை யுணர்த்தும் நூல். (L)
சப்பாணிப் பருவம் -
பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்துக்குரிய பத்துப் பருவங்களுள் ஒன்று; குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம். ‘சப்பாணி கொட்டியருளே’, ‘கொட்டுக சப்பாணி’ என்றாற்போன்று இப்பாடல் முடியும். சக + பாணி - சப்பாணியாயிற்று இருகைகளையும் சேர்த்தல் என்னும் பொருளது.
சம்பந்தப் பாட்டியல் -
வரையறுத்த பாட்டியல் என்பது சம்பந்தப்பாட்டியல் எனச் சிலபிரதிகளில் காணப்படுவதாகத் தெரிகிறது. சம்பந்தப் பாட்டியல் என்பது சம்பந்த மாமுனிவன் செய்வித்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பந்த மாமுனி பாதமலர் இறைஞ்சி நிகழ்த்துகின்றேன்’ என்ற பாடல் இதற்குச் சான்றாம். இது மங்கலம் முதலிய 10 பொருத்தங்களில் மங்கலத்தை மாத்திரம் ஒன்பது விருத்தங்களில் கூறுவது.
சம்பந்தர் தேவாரயாப்பு -
கலிவிருத்தம், ஆசிரியவிருத்தம், கலித்துறை, கொச்சகங்கள், ஆசிரியத் துறை, வஞ்சி விருத்தம், வஞ்சித் துறை, குறட் டாழிசை, நாலடிமேல் வைப்பு, ஈரடிமேல் வைப்பு, இணைக் குறள் ஆசிரியம் என்பன. சம்பந்தர் பாடிய 385 பதிகங்களில் இவ்யாப்புக்கள் முறையே 106, 88, 79, 54, 27, 13, 9, 3, 3, 2, 1 ஆகிய பதிகங்களாம். இவற்றுள் திருவியமகம் 4, திருச்சக்கர மாற்று 2, ஏகபாதம் 1, எழு கூற்றிருக்கை 1, திருக்கோமூத்திரி 1, திருமாலைமாற்று 1 - ஆகிய சித்திரகவிப்பதிகங்களும், மொழி மாற்றுப்பொருள்கோள் நிலையில் வரும் பதிகம் ஒன்றும் உள்ளன.
இவற்றுள் மேல்வைப்பும் சித்திரகவியும் சம்பந்தர் புகுத்தி யருளிய புதுமை யாப்புக்களாம். (இலக்கணத். முன். பக். 81, 82)
இந்திரசாலம் முதலிய மாயவித்தை வல்லுநர் தம் சிறப் பினைத் தாமே எடுத்துக் கூறுவதாகச் செய்யும் இவ்வுறுப்புக் கலம்பகத்துள் நிகழ்வது.
“இதுவரை காணாத புதுமைபல காட்டுவேன்; அட்டமா நாகங்களையும் படமெடுத்து ஆடச் செய்வேன்; கடலைப் பருகுவேன்; மேருவைச் சிறிய கடுகினுள் அடைத்து வைப்பேன்; அண்ட முகட்டை அடையுமாறு பேரொலி எழுப்புவேன்; இரவைப் பகலாகவும், பகலை இரவாகவும் மாறிவரச் செய்வேன்; ஆகாயம் முழுதையும் மறைப்பேன்; ஏழுலகங் களையும் எடுப்பேன்; இவையெல்லாம் எனக்கு எளிய செயல்; திருமாலாகிய அரங்கநாதனுடைய சக்கர முத்திரை தன்மீது பொறிக்கப்பெறாத ஒரு தெய்வத்தைத் தேடிக் கொண்டுவந்து உங்கள் முன்னே விடுவேன்” (திருவரங். 49) என்றாற் போன்ற இந்திரசால வித்தை பற்றிய செய்தி கூறுவது.
சமக்கிருதமும் வேற்றுப்பாடையும் விரவிய பாவினம் அல கிட்டுப் பாச் சார்த்தி வழங்கப்படும். அவை குறுவேட்டுவச் செய்யுளும் உலோக விலாசனியும் பெருவளநல்லூர்ப் பாசாண்டமும் முதலாக உடையனவாம். (யா. வி. பக். 491)
தன்னைப் பிரிந்திருக்கும் தலைவனைக் குறித்துத் தலைவி கடற்கரையில் இருந்து புலம்புவதாகப் பாடும் பிரபந்த வகை. (L)
சந்தம் தாண்டகம் என்ற பாக்களின் பல பகுப்புக்களையும் விரித்துக் கூறி விளக்கும் வடமொழியாப்பு நூல்களுள் ஒன்று.
(யா. வி. பக். 486)
இறந்துபட்ட நாடகத்தமிழ்நூல்களுள் ஒன்று. இதன் நூற்பா ஒன்று அடியார்க்குநல்லார் உரையுள் (சிலப். பக். 80) உள்ளது.
பதினோராடற்கு உரிய உறுப்பு ஐம்பத்து மூன்றும் இந்நூலில் விரித்துக் கூறப்பட்டதாக யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது. (யா. வி. பக். 581)
இறந்தவர்மீது இரங்கிப் பாடும் கவி; இரங்கற்பா. (L)
தம் ஆசிரியர் சம்மானம் பெறும்பொருட்டு ஆண்டு முடிவில் பலரிடத்தும் சென்று மாணாக்கர் பாடும் பாட்டு. (W) (L)
சிறப்புப் பாயிரக்கவி. (L)
பாட்டின் இறுதிதோறும் ‘சாம்பராக்கு’ என்று முடியுமாறு பாடப்படும் ஒருவகைப் பாட்டு. (L)
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதிகை நிகண்டு என்ற நிகண்டு நூலை வரைந்த கல்லிடையூர் வேளாண்குலத் திலகரான சாமிகவிராயரால் எண்சீர் ஆசிரிய விருத்த யாப்பில், அந்தாதித் தொடையில், ஒவ்வோரதிகாரமும் மும்மூன்று இயல்களைக் கொண்டதாய், ஐந்து அதிகாரங் களையும் நுவலும் ஐந்திலக்கண நூலாய், பொதுப்பாயிரமும் நூன்மரபும் உட்பட 213 விருத்தச் செய்யுட்களில், நன்னூல், சின்னூல், இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம், நம்பிஅகப்பொருள், புறப்பொருள்வெண்பா மாலை, யாப்பருங்கலம், காரிகை, தண்டியலங்காரம், பாட்டியல் நூல்கள் - என இவற்றை அடியொற்றி, அருகிய சிற்சில மாற்றங்களோடு புனையப்பட்ட நூல் இது. எழுத்து - 33; சொல் 37; பொருள் - 81; யாப்பு - 27; அணி - 24 என்ற எண்ணிக்கை உடைய விருத்தங்களால் மூலம் மாத்திரம் பாடப்பட்ட சாமிநாதம் என்னும் இந்நூல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரால் உரையோடு வெளியிடப்பட் டுள்ளது. உரை மிகவும் செப்பம் செய்யப்படும் நிலையிலுள் ளது. ‘சுவாமிநாதம்’ என நூற்பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
அறம் பொருள் இன்பம் வீடு பற்றிச் சொன்ன நூல்களின் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படல் வேண்டும் என்று யாப்பருங்கல விருத்தியுரை சுட்டுகிறது. (யா. வி. பக். 491)
ஒருவன் கவியிசையில் வேறு ஒரு செய்யுளைப் புணர்க்கும் கவிஞன். இலக்கண விளக்கம் ‘சாத்துக்கவி’ என (பாட். 174) ஓதி, ‘ஒருவன் பா இசைக்கு ஒப்ப மேவி உரைப்போன்’ எனவும் இலக்கணம் கூறும். (வெண்பாப். செய். 482 உரை)
நச்செழுத்து. யரலள என்னும் ஒற்றினை ஊர்ந்த ஆகாரமும் ஓகாரமும் அவ்வொற்றுக்களும் ஆய்தமும் மகரக் குறுக்கமும் அளபெடையும் என்னுமிவை. இவை நூலின் முதற்சீர் முதன் மொழிக்கண் ஆகாதன. மங்கல மொழிக்கண் இவ்வெழுத் துக்கள் வரின் அவை குற்றமில. (இ. வி. பாட். 20)
முன் இரண்டு அடிகள் வினாவாகவும் பின்னிரண்டடிகள் விடையாகவும் அவ்விடையின் இறுதியில் ‘சாழலே’ என்ற சொல் உடை யதாகவும் வரும் 10 பாடல்களையுடைய பிரபந்தமாகக் ‘பெரிய திருமொழியில்’ உள்ளது. (11-5)
திருவாசகத்தில் உள்ள ‘திருச்சாழல்’ 20 பாடல்களையுடைய பிரபந்தமாகச் ‘சாழலோ’ என்று முடிகிறது.
சாழல் என்ற பிரபந்தம் வெண்டளையால் அமைந்த நான்கடித் தரவு கொச்சகக் கலிப்பாக்களால் ஆகிய பிரபந்தமாகும்.
இசைநுணுக்கம் என்ற நூலின் ஆசிரியர்; அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் ஒருவர். (சிலப். உரைச் சிறப்புப். அடியார்க்.)
அரசன் தன் ஓலக்கத்தில் அரியணையில் ஐம்பெருங்குழு புடைசூழக் குறுநிலமன்னர் பரவ, பெருஞ்சிறப்புடன் வீற்றிருக்கும் சிறப்பை விரித்துப் பாடும் பிரபந்தம்.
இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.
(இ. வி. பாட்பக். 505)
கைகளை முடக்கி விலாஎலும்புகளில் பொருந்துமாறு அடித்துக்கொண்டே கூத்தாடும் மகளிர் குழாத்தினர் அத்துணங்கைக் கூத்தின்போது பாடும் பாடல். சிங்கி - துணங்கைக் கூத்து.
இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.
(இ. வி. பாட். பக். 505)
சிந்து, கும்மி, கண்ணி, கீர்த்தனை, வண்ணம், ஆனந்தக் களிப்பு போன்றன.
ஈரடிகள் அளவொத்து அமைவது சிந்து. சித்தர்தம் சிந்துக்கள் பெரும்பான்மையும் ஈரடிச் செய்யுளாய் நிகழ்வன. ஓரடிக்கும் அடுத்த அடிக்கும் இடையே ஓசைநிறுத்தம் அமையுமாறு தனிச்சீர் ஒன்று நிகழ்தலும் காணப்படுகிறது. அடிகள் எதுகை பெற்று, அடிப்பகுதியில் மோனை பெற்று வருதல் இயல்பு. அடிப்பகுதிகள் நாற்சீர் பெற்று நாற்சீர் இரட்டை யாகவும், முச்சீர் பெற்று முச்சீர் இரட்டையாகவும், இன்னோ ரன்னவாகச் சிந்தின் அமைப்புச் சிறிது சிறிது வேறுபடுவன உள. ‘குதம்பாய்’ என விளியாக வரும் ஓரடிச் சிந்தினின்று இவ்வீரடிச் சிந்து கிளைத்தது என்ப.
கும்மியும் அளவொத்த ஈரடி அமைப்பு; வெண்டளை மிக்க எழுசீர் அடி; பாட்டில் அடியெதுகையொடு, பாட்டடியுள் முதலாம் ஐந்தாம் சீர்கள் மோனைத் தொடை அமைய வரும்.
எ-டு : கொங்கணர்தம் வாலைக்கும்மி.
கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பு தனித்த யாப்பும் இசையமைப்பும் உடையது. எதுகையுடைய அளவொத் திராத ஈரடி கொண்டது பல்லவி. 34 சரணங்கள் தொடர் கின்றன. இவை சிந்துக்கு உரிய தொடையமைதி பெற்றுப் பல்லவியொடு சிறிது வேறுபடுகின்றன. சரணங்கள் முடியுந் தோறும் பல்லவி பாடப்பெறும்.
இடைக்காடரின் தாண்டவராயக்கோன் கூற்று கீர்த்தனைத் தோற்றமுடையது. பல்லவி அனுபல்லவியாக எட்டுத் தாழிசைகள் அமைகின்றன; பெரும்பான்மையும் வெண் டளை யாப்பு.
அருணகிரியாரது திருப்புகழ் சந்தக் குழிப்புக்கள் அமைந்த வண்ணக் களஞ்சியம் என்ப. (இலக்கண. முன். பக். 100-103)
இரசவாதிகள் தம் திறமையை ஒரு தலைவனுக்கு எடுத்துக் கூறுவதாகச் செய்யப்படும் செய்யுள்; கலம்பக உறுப்புக் களுள் ஒன்று. இரசவாதமாவது ஓர்உலோகத்தை மற்றோர் உலோகமாக மாற்றுதல். சித்தர் என்பார் இரும்பு முதலிய இழிந்த உலோகங்களைப் பொன் முதலிய உயர்ந்த உலோகங் களாகப் படைக்கும் வல்லமை உடையவர்.
எ-டு : ‘பொற்பாவைக்குக் கஞ்சம் பொன்னாக்கிய சித்தரேம்
திருமாலுக்(கு) இரும்பைப் பொன்னாக்கினேம்
ஈயத்தை வெள்ளியதாக உருக்குவோம்.’
வெண்கலத்தைப் பொன்னாக்கிய சித்தர்: பொற்றாமரை மலரைச் செய்து கொடுத்த சித்தர் யாங்களே என்பது.
இரும்பைப் பொன்னாக்கினேம் - பெரிய காளீயன் என்னும் பாம்பின் படத்தை(க் கண்ணனுக்கு) நடிக்கும் இடமாச் செய் தோம்; ஈயத்தை வெள்ளியது ஆக உருக்குவோம் - ஈயத்தை நல்ல வெண்ணிறமாகுமாறு உருக்குவோம்.
பொற்பாவைக்குக் கஞ்சம் (-வெண்கலத்தைப்) பொன் ஆக்குதல் - திருமகளுக்குப் பொற்றாமரைப் பூவினைக் கொடுத்தல். இவ்வாறு சிலேடையாக மற்றொரு பொருள் அமையப் பாடுதல் சிறப்பு. (திருவரங்கக். 42)
17ஆம் நூற்றாண்டில் தோன்றிய தெய்வ அருள் பெற்ற பெரும் புலவரான குமரகுருபர அடிகளால் பாடப்பட்ட அரியதோர் இலக்கியம். வைணவ மாறன் பாப்பாவினம் என்ற யாப் பிலக்கணத்தை ஒருபுடை ஒத்தது இது. பாடல்கள் சிவபெருமானைப் போற்றுவன. யாப்பருங்கலக் காரிகையுள் சுட்டப்பட்ட பாப் பாவினம் அனைத்திற்கும் இந்நூலுள் காணப்படும் 84 செய்யுளும் சிறந்த எடுத்துக்காட்டாவன. செய்யுள்களின் கீழ்க்குறிப்பு அடிகளே வரைந்தவை என்பர். அக்குறிப்புக்கள் திட்பநுட்பம் சான்றவை.
16ஆம் நூற்றாண்டினரான பரஞ்சோதியாரால் இயற்றப் பட்ட பாட்டியல் இலக்கணநூல்; 47 எண்சீர்விருத்த நூற்பாக் களையுடையது. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொதுவியல், மரபியல் என ஐந்து இயல்களையுடையது. முதல் மூன்று இயல்கட்குக் குறிப்புரை உளது. அவ்வுரை காரர் பெயர் தெரிந்திலது. இந்நூல் பாட்டியல் எனப்படினும் செய்யுளிலக்கணத்தையும் முழுதும் சொல்லுகிறது.
ஆரிடப் போலிப் பாவகை நூல்களுள் ஒன்று. குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்தம், அறிவுடைநம்பி செய்த சிந்தம் என்ற சிந்தநூல்களுள் இரண்டு யாப்பருங்கல விருத்தி யுரையுள் கூறப்பட்டுள. முதலாவது ஆரிடச் செய்யுளாகவும் அடுத்தது உறுப்பழி செய்யுளாகவும் சுட்டப்படுகின்றன. (யா. வி. பக். 369, 372)
திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியின் பாடல் ஒன்று பாதிச்சம விருத்தத்திற்கு எடுத்துக்காட்டாகவும் (பாடல் 1488), கடவுள் வாழ்த்தாகிய முதற்பாடல் நேரசை முதலாய் அடிதோறும் 14 எழுத்துப் பெற்று வண்ணத்தான் வந்த நாலடிச் செய்யுட்கு எடுத்துக்காட்டாகவும் உரையுள் சுட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக். 516,521)
திருத்தக்கதேவர் இயற்றிய விருத்த யாப்பில் அமைந்த சீவகசிந்தாமணி என்ற காப்பியத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தம் 1525, கலிவிருத்தம் 1291, கலித்துறை 255, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, எண்சீர் ஆசிரிய விருத்தம் 16, வஞ்சித் துறை 16, கலித்தாழிசை 2 , ஆசிரியத் தாழிசை 1 என்பன அமைந்துள்ளன. சிந்தாமணியின் கலித்துறை பல மா-மா-கனி-மா-மா-என்ற சீர்அமைப்புடன் காப்பியக் கலித்துறை எனச் சிறப்பிக்கப்படும் நிலையில் உள்ளன.
காந்தருவதத்தையார் இலம்பகப் பேடி வருணனையில் இரண்டு பாடல்கள் ஓரடிமிக்கு வந்த கொச்சக ஒருபோகுகள். அவை ஈற்றடி மிக்கு வந்த கலித்தாழிசையாகக் கொள்ளப்படு கின்றன.
ஆசிரியத்துறை போன்ற ஒரு பாடல் (2578) நிகழ்கிறது.
ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியும் இடையடிகள் மடக்கியும் வரும் இசைப்பாடல்கள் சில காமம் நுதலி வருகின்றன. இவற்றுள் சில கடவுள் வாழ்த்தாகும். (இலக்கணத். முன். பக். 93, 94)
சங்க காலத்தனவாகிய பத்துப்பாட்டு எட்டுத் தொகைபோல ஆசிரியம் வெண்பா கலி வஞ்சி பரிபாடல் என்ற யாப்போடு அமையாமல் சிலப்பதிகாரமானது உரைபெறுகட்டுரை, உரைப்பாட்டு, கருப்பம், கலி ஆசிரிய இணைப்புப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், ஆசிரியத்துறை, ஆசிரியத்தாழிசை, கலித்தாழிசை என்ற பாவினங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆசிரிய விருத்தம் - கானல்வரி, ஆற்றுவரி முதலியன.
கலி விருத்தம் - முரிவரி முதலியன.
ஆசிரியத்துறை - கானல்வரியுள் முகமில்வரி, கானல்வரி முதலியன.
ஆசிரியத் தாழிசை - ஆய்ச்சியர் குரவையுள் ‘கன்றுகுணிலா’ முதலிய மூன்றும்.
தரவு கொச்சகம் - ஆய்ச்சியர் குரவையுள் முன்னிலைப் பரவல், படர்க்கைப்பரவல் முதலியன.
கலித்தாழிசை - குன்றக் குரவையுள், சிறைப்புறம் முதலியன.
உரைநடை போன்ற சீர்வரையறையின்றிப் பொருள் பொதிந்த சொற்களால் இனிய தீவிய நடையில் அமைவது.
எ-டு : ‘அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமை யெய்தி வெப்புநோயும் குருவும் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வி யால் விழவொடு சாந்தி செய்ய, நாடு மலிய மழை பெய்து நோயும் துன்பமும் நீங்கியது’.
உரைநடை போன்று அடிசீர் என்ற வரையறையின்றி வரும் பாடல்களைப் பொருத்தி யமைப்பது.
எ-டு :
‘குருவி யோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி
அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேமுன்
மலைவேங்கை நறுநிழலில் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோ என முனியாதே’ (சிலப். 24 : 1-24)
பின் நிகழ்ச்சிக்குரிய செய்தியைத் தாங்கிவரும் பகுதி இது. கலியடியும் ஆசிரிய அடியும் கொள்ளும் சீர்கள் விரவி உரை போல அடிவரையறை செய்ய இயலாது அமைவதும் உண்டு.
எ-டு :
‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமி லேற்றின்
மடக்கண்ணீர் சோருதலும் உறியில் வெண்ணெயுருகாமையும்
மறிநுடங்கி யாடாமையு மான்மணிநிலத் தற்று வீழ்தலும்
வருவதோர் துன்பமுண்டென மகளைநோக்கி மனமயங்காதே
மண்ணின்மாதர்க் கணியாகிய கண்ணகியும் தான்காண
ஆயர்பாடியி லெருமன்றத்து மாயவனுடன் தம்முனாடிய
வாலசரிதை நாடகங்களில் வேனெடுங்கண் பிஞ்ஞையோடாடிய
குரவை ஆடுதும் யாமென்றாள் கறவைகன்று துயர்நீங்குக என்னவே.’ (சிலப். 17-5)
எ-டு :
‘என்றுதன் மகளைநோக்கி தொன்றுபடு முறையானிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை யுழையிளி விளரி தாரமென,
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப். 17-13)
இதன்கண் முதலீடியும் கலியடி; ஏனைய ஆசிரியஅடி.
முன் இரண்டடிகளும் சிலேடையான் அமைய, பின் இரண் டடிகளிலும் மடக்குப் பயிலப் பாடப்படுவதொரு நேரிசை வெண்பா. பெரும்பான்மையும் இறைவனது திருத்தலம் ஒன்றுபற்றி இப்பாடல் வருணனையாக அமையும். பின் னிரண்டடியும் இறைவனது சிறப்பினைப் பாடி அவனது திருத்தலமாவது இஃது என்னும் பொருள்பட அமைய, முன்னிரண்டடியும் அத்திருத்தலத்தின் பெயரைச் சுட்டும். இத்தகு வெண்பாக்கள் 40 முதலாக 100 வரை அமையப் பாடும் பிரபந்தமும் அத்திருத்தலப் பெயருடன் புணர்த்து கலசைச் சிலேடை வெண்பா. திருவரங்கச் சிலேடை வெண்பா முதலாகப் பெயர் பெறும்.
எ-டு :
‘ஆவலுடன் பாவலரும் ஆறுகால் வண்டினமும்
காவலரைச் சூழும் கலைசையே - மேவும்
அரிவையம் பாகத்தான் அரண்ஒருமூன் றெய்தோன்
அரிவையம் பாகத்தான் அகம்.’
அரிவை அம் பாகத்தான் அரி வை அம்பு ஆகத் தான் அரண் ஒருமூன்று எய்தோன் அகம் கலைசையே; ஆவலுடன் பாவலர் காவலரைச் சூழ்வதும், ஆறுகால் வண்டினம் கா அலரைச் சூழ்வதும் ஆகிய தலம் கலைசையே.
உமாதேவியை தன் அழகிய வாமபாகமாகக் கொண்டவனும், திருமாலைக் கூரிய அம்பாகக் கொண்டு திரிபுரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிவபெருமானது தலம் கலைசையே. விருப்பத்தொடு கவிஞர்கள் (பரிசில் பெற வேண்டி) அரசரை வந்து சூழ்வதும் (சூழ்தல் - ஆய்ந்து பாடுதல்), அறு கால்களை யுடைய வண்டுகள் சோலைப்பூக்களை(மது அருந்த) வந்து மொய்ப்பதும் ஆகிய தலம் கலைசையே.
இப்பாடற்கண் பின்னிரண்டடிகளும் மடக்கணி. இரண்டா மடிக்கண் ‘காவலரைச் சூழும்’ என்பது பிரிமொழிச் சிலேடை.
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பெரும்புலவர் வடமொழி தென்மொழி இரண்டிலும் மிக்க புலமை சான்றவர். இருமொழியிலும் இலக்கிய இலக்கணங்களை நுணுகிப் பயின்றவர். சைவ சித்தாந்தச் சாத்திரப் பயிற்சியிலும் வல்லுநர். திருநெல்வேலி மாவட்டத்தில் விக்கிரமசிங்க புரத்தே சைவ வேளாளர் குலத்தில் ஆனந்தக் கூத்தர் என் பார்க்கு மயிலம்மையாரிடத்துத் தோன்றிய இவரது பிள்ளைத் திருநாமம் முக்களாலிங்கர் என்பது. திருவாவடு துறையைச் சார்ந்து அங்கு எழுந்தருளியிருந்த வேலப்ப தேசிகராம் ஞானசிரியர்பால் சிவதீட்சையும் சைவத் துறவும் சிவஞானயோகி என்னும் தீட்சா நாமமும் பெற்று, சைவ ஆகம நூல்களைக் கற்றுத் தெளிந்து, மெய்கண்ட சாத்திரங் களையும் பண்டாரச் சாத்திரங்களையும் அவர்பால் ஐயம் திரிபறக் கற்றார்; வடமொழி தென்மொழி யிரண்டிலும் பெரும்புலமை பெற்றுச் சைவசித்தாந்த வாழ்வே தமது உயிராகக் கொண்டு வாழ்ந்தார்.
இலக்கியம் இலக்கணம் தருக்கம் சித்தாந்த சாத்திரம் முதலியன இவர்பால் பாடம்கேட்ட மாணாக்கர் பலராவர். குறிப்பாக அவர்களுள் கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்கணம் சிதம்பர நாதமுனிவர் முதலாகப் பன்னிருவர் புகழ் மிக்கவர் என்பர்.
இப்பெருமானார் இயற்றிய நூல்களும் பண்டை நூல்கள் ஆகியவற்றின் உரைகளும் குறிக்கத்தக்கன: காஞ்சிப் புராணம் முதற்காண்டம். சோமேசர் முதுமொழி வெண்பா, குளத் தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி, இளசைப் பதிற்றுப்பத்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம், திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கலைசைச் செங் கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செப்பறைப்பதி இராசை அகிலாண்டேசு வரி பதிகம், திருவேகம்பர் அந்தாதி, திருமுல்லைவாயில் அந்தாதி, திருத்தொண்டர் திருநாமக் கோவை, பஞ்சாக்கர தேசிகர்மாலை, கம்பராமாயண முதற்செய்யுள் சங்கோத் தரவிருத்தி என்பன இலக்கியங்கள்;
தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, நன்னூல் விருத்தியுரைத் திருத்தமாகிய புத்தம் புத்துரை என்பன இலக்கண நூல் உரைகள்:
தருக்க சங்கிரகமும் அன்னம் பட்டீயமும், திராவிட மாபாடியம் எனப்படும் சிவஞானபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞான சித்திப் பொழிப்புரை - சுபக்கம், சித்தாந்தப் பிரகாசிகை, அரதத்தாசாரியார் சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு, சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனம், ‘என்னை இப்பருவத்தில்’ என்னும் செய்யுட் சிவசமவாத உரைமறுப்பு, ‘எழுத்து’ எனும் சொல்லுக்கு இட்ட வைரக் குப்பாயம் என்பன. சைவமதச் சார்புடைய, இவரால் இயற்றப்பட்ட பிற நூல்கள். (தமிழ் பக். 169 - 172)
சிற்றிற்பருவம் -
ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் பருவம். சிறுமியர் இழைத்த மணற்சிற்றிலைப் பாட்டுடைத் தலைவனாகிய பாலன் சிதைக்க வருவது கண்டு அச்சிறுமியர் ‘சிறியேம் சிற்றில் சிதையேலே!’ என்று வேண்டுவதாகப் பத்துச் சந்த விருத்தங்களாற் பாடுவது.
சிற்றெட்டகம் -
அகப்பொருள் பற்றிய ஓர் இலக்கியம். இதன் செய்யுள்கள் ஆசிரியப்பாவான் இயன்றன. பண்டையுரையாசிரியர்களால் மேற்கோளாக இதன் பாடல்கள் காட்டப்பட்டுள்ளன.
சிறுகாக்கைபாடினியம் -
இவ்யாப்புநூலினின்று 34 சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட் டப்பட்டுள்ளன. சில தொடை வகைகள், சில பாவகைகள், சில இன வகைகள் நீங்கலாக எஞ்சிய செய்திகள் பலவும் இம்முப்பத்து நான்கு நூற்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் சிறுகாக்கைபாடினியார் பெருங்காக்கைபா டினியார்க்குப் பிற்பட்ட யாப்பு நூலாசிரியர். இவர் காலத்தே தெலுங்குநாடு தமிழகத்தின் வடஎல்லையாயிற்று.
சிறுகாக்கைபாடினியார் -
‘சிறுகாக்கைபாடினியம்’ காண்க.
சிறுதேர்ப் பருவம் -
ஆண்பாற் பிள்ளைத்தமிழில் நிகழும் இறுதிப்பருவம், பாட்டுடைத் தலைவனாம் பாலன் சிறியதேரை உருட்டி விளையாடும் நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தினால் ‘சிறுதேர் உருட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு 10 பாடல்கள் பாடப்படும்.
சிறுபறைப் பருவம் -
ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் பத்தனுள் ஒன்று. (-எட்டாவது). பாட்டுடைத் தலைவனாம் பாலன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும் நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் பருவம்; ஆசிரியச் சந்த விருத்தத்தால் ‘சிறுபறை கொட்டியருளே’ போன்ற வாய்பாட்டால் முடியுமாறு பத்துப் பாடல்கள் பாடப்பெறும்.
சின்னப்பூ -
அரசனுடைய சின்னங்களை விரித்துக் கூறுதலால் சின்னப்பூ ஆயிற்று. தகுதி பெற்ற தசாங்கத்தினை (மலை, ஆறு, நாடு, ஊர், பறை, பரி, களிறு, தார், பெயர், கொடி என்னும் இவற்றை)ச் சிறந்த நேரிசை வெண்பாவினால் நூறு, தொண் ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னும் எண்படப் பாடின் அது சின்னப்பூவாம். (இ. வி. பாட். 86)
வண்ணக ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைகட்கும் சுரிதகத்திற் கும் இடையே வரும் உறுப்பு ‘எண்’ எனப்படும். ஈரடி இரண்டான் வரும் எண். பேரெண்; ஓரடி நான்கான் வருவது சிற்றெண்; இருசீர் எட்டான் வருவது இடையெண்; ஒருசீர் பதினாறான் வருவது அளவெண் எனப்பட்டன. ஆகவே, ஒரு சீராகிய முடிவிற்கு எல்லையாக நிற்கும் அளவெண் ‘சின்னம்’ எனப் பெயர் பெறும். (தொ. செய். 145 நச்.)
சின்னூல் -
1. சிறுநூல்; ‘சின்மையைச் சின்னூல் என்றது போல ஈண்டுச் சிறுமையாகக் கொள்க’ (பதிற். 76 உரை)
2. நேமிநாதம்; “சின்னூல் உரைத்த குணவீர பண்டிதன்”
(தொண்டை. சத. 32) (L)
புலவன் ஒருவன் தன்னைப் பலவாறு புகழ்ந்து கூறி வள்ளலை யும் புகழ்ந்து கூறி இறுதியில் தான் வேண்டும் பரிசிலைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ சுட்டி எழுதிவிடுக்கும் ஓலைப் பாசுரம். ‘ஓலைத் தூக்கு’ என்பதும் அது.
எ-டு :
‘ஏடாயி ரங்கோடி எழுதாமல் தன்மனத்
தெழுதிப் படித்தவிரகன்
இமசேது பரியந்தம் எதிரிலாக் கவிவீர
இராகவன் விடுக்குமோலை
சேடாதி பன்சிரம சைத்திடும் புகழ்பெற்ற
திரிபதகைக் குலசேகரன்
தென்பாலை சேலம்பு ரந்துதா கந்தீர்த்த
செழிய னெதிர் கொண்டுகாண்க;
பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,
பற்றிக்கோ லாத கோணம்,
பறவாத கொக்கு,அனல் பண்ணாத கோடை, வெம்
படையில்தொ டாதகுந்தம்,
சூடாத பாடலம், பூவாத மாவொடு,
தொடுத்துமுடி யாத சடிலம்,
சொன்ன சொற் சொல்லாத கிள்ளையொன் றெங்கும்
துதிக்கவர விடல் வேண்டுமே!’
அந்தகக் கவி வீரராகவ முதலியார் விடுத்த சீட்டுக் கவி இது. 12 சீர்ச் சந்த விருத்தம். இதன்கண், முதலடியில் தம்மைப் புகழ்ந்து கொண்டார்; இரண்டாம் அடியில் வள்ளலைப் புகழ்ந்தார்; ஈற்றடிகளில் தாம் விழைந்த பரிசிலைக் கல்வியறி வுடைய வள்ளற்குப் புலப்படுமாறு குறிப்பாற் பாடினர். வெளிப்படை என்னும் இலக்கணத்தால், வினை யெதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்தும் ‘விபாவனை’ அணிநயம் தோன்றக் கவி அமைந் துள்ளது. குதிரையின் பரியாயப் பெயர்கள் வந்துள்ளமை மற்றோர் அணிநயம். புலவர் விழையும் பரிசில் குதிரை என்பது.
யாப்பருங்கலத்துள் சீரினைப் பற்றி விளக்கும் பகுதி. முதலாவதாகிய உறுப்பியலுள் மூன்றாவது. இதன்கண் மூவகைச் சீர்கள், இயற்சீரின் திறம், தொகை, உரிச்சீரின் திறம், வகை, பொதுச்சீராவன, ஓரசைச்சீர், நால்வகைச் சீரும் செய்யுளுள் நிற்கும் முறை, கலியினும் ஆசிரியத்தினும் வரும் தனிச்சீர்கள் என்னும் செய்திகள் இடம் பெறுவன. இவ் வோத்தின்கண் ஏழு நூற்பாக்கள் உள்ளன.
‘சிந்தாமணி யாப்பு’க் காண்க.
சுத்தானந்தப் பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்ட கூத்து நூல். கூத்து வகைகளைப் பதினொன்று என இந்நூல் கூறு கிறது. பரத சேனாபதியம் 13 என்கின்றது. இந்நூலில் முதலி லும் இறுதியிலும் வடமொழிப் பாடல்கள் காணப்படுகின் றன. இது
செங்காட்டங்குடி எல்லாம் ஆனந்தம் ஆனந்தம்
சிறுத்தொண்டர் மாமடமெல்லாம் ஆனந்தம் ஆனந்தம்
பண்காட்டி நடந்ததொர் ஆனந்தம் ஆனந்தம்
பாணிக்குள் நடந்ததும் ஆனந்தம் ஆனந்தம் - என முடிகின்றது.
கலிவிருத்தம், ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, ஆசிரியத் துறை, கொச்சகக் கலி என்பன. (இலக்கணத். முன். பக். 85)
பிரயோக விவேகம் என்ற சொல்லிலக்கண நூலை இயற்றி யவர். 17ஆம் நூற்றாண்டினர்.
இந்திர கணம்; நூல் முதற்சீருக்குப் பொருத்தமான தேமாங் காய் என்னும் சீரைக் குறிப்பது. இதற்குரிய நாள் பரணி; பயன் பெருக்கம். இந்திரகணம் என்பதும் யமானகணம் என்பதும் அது. (இ. வி. பாட். 40)
18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த, திருவாவடுதுறை ஆதீனத்துச் சைவத் துறவியார்; வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமை மிக்கவர். சைவ சித்தாந்தி; இலக்கணக் கொத்து, தசகாரியம் முதலியன இயற்றியவர். சங்கரநமச்சிவாயர் இவருடைய மாணாக்கருள் ஒருவரே.
16ஆம் நூற்றாண்டினரான மண்டல புருடர் என்ற சமண ஆசிரியரால் விருத்தச் செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு. இதன்கண் சிறப்புப் பாயிரம் (8 விருத்தங்கள்) நீங்கலாக, தெய்வப் பெயர்த் தொகுதி (93), மக்கட் பெயர்த்தொகுதி (106), விலங்கின் பெயர்த்தொகுதி (78), மரப்பெயர்த்தொகுதி (68), இடப்பெயர்த் தொகுதி (68), பல்பொருட் பெயர்த் தொகுதி (35), செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி (76), பண்பு பற்றிய பெயர்த்தொகுதி (82), செயல் பற்றிய பெயர்த் தொகுதி (67), ஒலி பற்றிய பெயர்த் தொகுதி (53) எனப் பத்துத் தொகுதிகள் உள்ளன. (பிறைவளைவுக் குறியுளிடப்பட்டவை சூத்திர மாகிய விருத்தங்களது எண்ணிக்கை.)
தொல்காப்பியம் முதற்சூத்திரத்திற்குச் சிவஞான முனிவர் எழுதிய விரிவுரை.
செய்யுட் கருத்தை விளக்கி நிற்கும் இனிய சொற்றொடர். இங்ஙனம் நிற்கும் சூர்ணிகையைப் பின்பற்றி வார்த்திகமும், வார்த்திகத்தைப் பின்பற்றி அதிகரணங்களும் பகுக்கப் பட்டுள்ளன. (சி.போ. பாண்டிப்.) இது சூரணிகை, சூரணை எனவும் படும். (L)
இரண்டு முதலாக வரும் சூர்ணிகைத் தொகுதி; அஃதாவது செய்யுட் கருத்தை இனிது விளக்கி நிற்கும் சொற்றொ டர்களின் தொகுப்பு. (L)
நூலின் முதற் செய்யுட்கண் முதற்சீராக அமைதல் கூடாது என்று நீக்கப்பட்ட கூவிளங்காய் என்னும் வாய்பாடு சூரிய கணமாம். இதற்குரிய நாள் பூசம்; பயன் வீரியம் போக்கல். (இ. வி. பாட். 40)
தோலாமொழித்தேவர் இயற்றிய சூளாமணி என்னும் இச்சிறு காப்பியச் செய்யுள் சில பாதிச் சமவிருத்தம், சம விருத்தம், அளவழிப் பையுட் சந்தம், எறும்பிடைச் சந்தம், பாதிச்சமப் பையுட் சந்தம், அளவழிச் சந்தப்பையுள், நேரசை முதலாய் அடிதோறும் 12 எழுத்தும் 14 எழுத்தும் பெற்று வரும் சந்தச் செய்யுள் என்பனவற்றிற்கு யாப்பருங்கல விருத்தியுள் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக். 516-518; 520-522 உரை)
12 சருக்கங்களையும் அவற்றுள் 2131 பாடல்களையும் உடைய இந்நூலுள் கலிவிருத்தம் 1210, அறுசீர் ஆசிரிய விருத்தம் 735, பலவகைக் கலித்துறைகள் 92, எழுசீர் ஆசிரிய விருத்தம் 40, வஞ்சி விருத்தம் 31, எண்சீர் ஆசிரிய விருத்தம் 14, தரவு கொச்சகம் 8, வஞ்சித்துறை 1 வந்துள்ளன. ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிய பாடல் 24 உள்ளன. இவை வஞ்சி விருத்தம், கலி விருத்தம், கலித்துறை, அறுசீர் விருத்தம் என்ற யாப்பைச் சார்ந்தன. (இலக்கணத். முன். பக். 98, 99)
ஏனைய பல பாவினங்களொடு, முதலடியாக நான்காம் அடியாகும். இரட்டையாப்பு விசேடமாயதோர் யாப்பு.
‘ஓடு மேமன மோடுமே
கூடு மோதணி கோதையாய்
காடு சேர்களி காண்டொறும்
ஓடு மேமன மோடுமே’ என்பது. (1619)
மற்று, முதற்சீர் ஒத்து வருதல், முதல் இருசீர் ஒத்து வருதல், இரண்டாம் நான்காம் சீர் அடிதோறும் ஒத்துவருதல், இடையடி மடக்கி வருதல், அவை அந்தாதியாக வருதல் போன்ற பிற நயமான வேறுபாடுகளையும் ஆங்காங்குக் காண்டல் கூடும்.
பிள்ளைத்தமிழாகிய பிரபந்தத்துள் ஆண்பால் பெண்பால் ஆகிய இருபாலுக்கும் பொதுவான பருவங்கள் ஏழனுள்ளும் இரண்டாவது பருவம். குழந்தை பிறந்து ஐந்தாம் திங்களில் தன் தலையை நிமிர்த்தி முகத்தை இங்குமங்கும் அசைத்தாடு வதைச் சிறப்பித்துப் பாடும் பகுதி. ஆசிரியச் சந்தவிருத்தம் பத்து அமையும். (இ. வி. பாட். 46)
வீரமா முனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ் பற்றிய இலக்க ணம். இது 1730-இல் இலத்தீன் மொழியில் யாக்கப்பட்டது. செந்தமிழ் கற்கும் புறநாட்டு மாணாக்கர்க்குப் பயன்படவே எழுதப்பட்டது. ஆங்கில மொழியிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது,
யாதொரு பொருளைப் பற்றியேனும் 27 வகையாகப் பாடுவ தொரு பிரபந்தம். “பாவானும் பாவினத்தானும் பாடுவாரு முளர்: நான்கு முதற்பாவானாதல் ஒரு பாவினத்தானாதல் பாடுக என்பாரும் உளர்” என்பது பண்டைய குறிப்பு. (பன். பாட். 306)
செம்பூட் சேய் -
அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர் (பா.வி. பக். 104) கூற்றியல் என்னும் நூலாசிரியரும் இவரே என்ப.
(இறை. அ. 56 உரை)
செய்யுட்கணம் -
பிரபந்தத்தை இயற்றத் தொடங்கும் கவிஞன் செய்யுள் முதற்கண் மேற்கொள்ளத் தரும் நற்கணம் நான்கும், நீக்கத் தகும் தீக்கணம் நான்கும் ஆகிய எட்டும் ஆம். அவை முறையே நிலக்கணம், நீர்க்கணம், மதிக்கணம் (சந்திரகணம்), இயமான (சுவர்க்க, இந்திர) கணம் எனவும், சூரியகணம், தீக்கணம், வாயு (மாருத) கணம், அந்தர (ஆகாய) கணம் எனவும் பெயர் பெறும். (திவா. பக். 299; பிங். 1333; இ.வி. பாட். 40)
செய்யுட் கலம்பகம் -
பலவகைப் பாடல் திரட்டு. (L)
செய்யுட் கோவை -
எ-டு : சிதம்பரச் செய்யுட் கோவை. நால்வகைப் பாவும் பாவினங்களும் நிரலே அமைக்கப்பட்டு அமைந்த பிரபந்தம். (L)
செய்யுள் இயல் -
ஐந்து இலக்கணங்களும் கூறும் நூல்களுள் யாப்பிலக்கணம் கூறும் பகுதி. தொல்காப்பியத்துள் பொருளதிகாரத்தில் எட்டாவதாக இவ்வியல் இடம் பெறும். இச்செய்யுளியலின் தலைமையும் சூத்திரப் பன்மையும் பற்றித் தொல்காப்பி யனாரை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் முதலியோர் ‘செய்யுளியலுடையார்’ என்று குறிப்பர். (யா. வி. பக். 125, 205). யாப்பு நூல்களிலும் சிதம்பரம் பாட்டியலிலும் செய்யுளியல் நால்வகைச் செய்யுள்களையும் அவற்றின் இனங்களையும் கூறும் பகுதியின் பெயராக அமைகிறது.
செய்யுள் பொருத்தம் -
‘செய்யுள் முதல்மொழிப் பொருத்தம்’ காண்க.
செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் -
மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், எழுத்து, நாள், கதி, கணம் எனக் காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியில் பார்க்கும் பொருத்தம் பத்தாம். அவை மங்கலப் பொருத்தம் முதலாகப் பெயர் பெறும். (இ. வி. பாட். 10)
பலரானும் உடன்பட்ட வழக்கொடு நூற்பயன் கொடுக்கும் இன்பத்தினை விட்டு மறுதலையால் புணர்த்தலும், வட வெழுத்தே மிகப்புணர்த்தலும், பழையோர் கூறிய இலக் கணச் சொற்களை விடுத்துக் காலத்திற்கு ஏற்றவாறு கூறும் வழூஉச்சொல் புணர்த்தலும், பொருள் மயக்கமுறக் கூறுத லும் என இவை. (இ. வி. பாட். 126)
பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவு கூறுதல் பற்றி எழுந்த நூல் இது. “கலியுறுப்புக்கு அளவை, செயல்முறையில் கண்டுகொள்க” (யா.வி. பக். 298) முதலாயின வந்தவாறு காண்க. தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாப் பெருந்தேவபாணி ஆறடித் தரவு, நான்கடித் தாழிசை மூன்று, இரண்டடி அராகம் ஒன்று, பேரெண் இரண்டு, இடையெண் நான்கு, சிற்றெண்எட்டு, தனிச்சொல், ஆறடிச் சுரிதகம் என்ற அமைப்பில் பாடப்படு வது செயல்முறையில் சொல்லப்பட்ட தொரு செய்தியாகும். (யா. வி. பக். 310)
பலவகைச் செய்யுள்களுக்கும் அவற்றின் உறுப்புக்களுக்கும் அளவைகள் கூறப்பட்டுள்ள நூல் இது. (யா. வி. பக். 310) இந் நூல் அகத்தியத்தின் வழியில் சிறிதும் முரணாமல் தோன்றிய இலக்கணமாம். செயிற்றியம் மெய்ப்பாடு பற்றியும் நுவல்வ தாகப் பேராசிரியரும் (தொ.பொ. 249 பேரா.) இளம்பூரணரும் (தொ.பொ. 245, 249) குறிப்பிடுகின்றனர்.
போர்க்களத்தினைச் சிறப்பித்துக் கூறும் தனிநிலைச் செய்யுள் வகை. இதன் யாப்பு ஆசிரியம் வஞ்சி என்னும் இவற்றால் அமையும் என்னும் பிரபந்த மரபியல் (39). போர்க்களத்திலே அட்ட மனிதர் உடலையும், யானை குதிரை உடலையும், பேயும் பிசாசும் கழுகும் பருந்தும் காகமும் தின்று களித்து ஆரவாரமாயிருக்க, பூதமும் பேயும் பாடி ஆட, இங்ஙனம் இருந்த சிறப்பினைப் பாடும் இதனைப் ‘பறந்தலைச் சிறப்புப்பாட்டு’ எனவும் கூறுவர் என்பது சதுரகராதி. அந்நூல் ஆசிரியப் பாவால் செருக்களத்தைப் பாடுவது என்னும் (இ. வி. பாட். 109.)
பாட்டுடைத் தலைமகன் புகழ் நிலைபெறக் காரணமாகப் போர்க்களத்தே ஆற்றிய வீரச்செயல்களை நேரிசை இன் னிசை பஃறொடை வெண்பாக்களால் புனையும் தொடர் நிலைச் செய்யுள். இது மறக்களவழி எனவும்படும். (பன்.பாட். 315, 316).
நிகண்டுகளுள் காலத்தால் முற்பட்ட இந்நிகண்டினை இயற்றியவர் திவாகரர் என்பதும், சேந்தன் என்னும் சிற்றர சனால் இவர் உபகரிக்கப்பட்டார் என்பதும் துணியப்பட்ட செய்திகள். திவாகரர் விநாயகனை வணங்கிப் பாடி நூல் செய்தமையின் சைவசமயத்தராதல் ஒருதலை. தம்மை ஆதரித்த வள்ளலை நூலின் பன்னிரு தொகுதியிலும் இறுதி தோறும் புகழ்ந்து பாடியுள்ளமையும் நூற்பெயரின் முன் மொழியாக அவன்பெயர் வைத்தமையும் இவருடைய செய்ந் நன்றியறிதலைப் புலப்படுத்துவன. சோழநாட்டில் காவிரிக் கரைக்கண் அமைந்த அம்பர் நகரை ஆண்டு வந்த அக்குறு நில மன்னன் வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமை சான்றிருந்தமையும், ஒளவையாரால் போற்றப்பட்டமையும், கோதண்டம் காண்டீபம் காளியின் முத்தலைச் சூலம் இவற்றைக் கவிபாடிப் போற்றியுள்ளமையும் போன்ற செய்திகள் ஒவ்வொரு தொகுதியிலும் இறுதிச்செய்யுளால் போதருவன.
இதன் காலம் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகல் கூடும். இதன்வழியாகவே அடுத்துப் பிங்கலந்தையும் அடுத்துச் சூடாமணி நிகண்டும் அவற்றை அடுத்தே பிற நிகண்டுகளும் தோன்றின. இதன் சூத்திரம் நூற்பா யாப்பிற்று. தெய்வப் பெயர்த்தொகுதி முதலாகப் பல்பொருள் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி யீறாகப் பன்னிரு பாகுபாடுகள் இதன் உட்பிரிவுகள்.
முருகப்பெருமானுடைய கொடி ஊர்தி ஆகிய கோழிச் சேவலையும், திருமால் ஊர்தி கொடி ஆகிய கருடச் சேவலையும் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம். இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.
வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர் தொல் காப்பியம் சொல்லதிகாரத்திற்கு எழுதியவுரை. அவர் பெய ரால் சேனாவரையம் என வழங்கப்படும். இலக்கியத்திற்குத் திருக்குறட் பரிமேலழகரது உரைபோல, இலக்கணத்திற்கு இவ் வுரை பெரிதும் பாராட்டப்பெறும். சொற்சுருக்கமும் பொருள் ஆழமும் மிக்க இவ்வுரை, தனித்தவொரு நடைச் சிறப்புடை யது; ஆங்காங்கு வடநூலார் கருத்தை எடுத்துக்காட்டுவது; ஏற்றவிடத்துத் தமிழிலக்கண நெறியைப் பிறழாது எடுத்து ஓதுவது; சூத்திரங்கள் சிலவற்றுக்குப் பொழிப்புரை கூறாது கருத்துரையே கூறிச் செய்வது; ‘இனி ஓருரை’ எனச் சூத்திரத்துக்கு மற்றொரு பொருள் உரைப்பதும், ‘இதுவும் ஓர் நயம்’ எனச் சிறப்பினை எடுத்துச் சுட்டு வதும் பிறவும் இவ்வுரையின் தனிச் சிறப்புக்கள். சேனாவரையரது காலம் 14ஆம் நூற்றாண்டின் முற்பட்டது என்பது துணிவு.
தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்குப் பிறரினும் சிறக்க உரைவகுத்த உரையாசிரியர். தமிழ் வடமொழி இரண்டிலும் பெரும்புலமை வாய்ந்தவர். ‘வடநூற்கடலை நிலைகண்டு ணர்ந்த சேனாவரையர்’ என்று இவரை மாதவச் சிவஞான முனிவர் தமது சூத்திர விருத்தியுள் பாராட்டுவர். இவர்காலம் பரிமேலழகர் காலமாகிய 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பர் மு.இராகவையங்கார் அவர்கள்.
பூருவ மீமாஞ்சையின் ஆசிரியராம் முனிவர். ‘அக்கபாதன் கணாதன் சைமினி’ (மணி. 27:82) (L)
பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்கு நல்லுரை கண்ட சான்றவர் சொக்கப்ப நாவலர். இவர் காலம் புலப்பட்டிலது. குறிப்பிடும் கனவுக்கால நான்களும் அவற்றின் நிகழ்ச்சிகளும் பின்வருமாறு:
இயற்கைப் புணர்ச்சி - முதல் நாள் : இடந்தலைப்பாடு இரண் டாம் நாள்; பாங்கற் கூட்டம் - மூன்றாம் நாள்; பாங்கிமதி உடன்பாடு - மூன்றாம் நாள்; பாங்கியிற் கூட்டம் - நாலாவது நாள்; ஒரு சார்ப்பகற்குறி - ஐந்தாம் நாள்; பகற்குறி - ஆறாம் நாள்; இரவுக்குறி - ஏழாம் நாள்; இரவுக்குறி - இடையீடு - எட்டாம்நாள்; வரைதல் வேட்கை - 9, 10, 11 ஆம் நாள்; வரைவுகடாதல் - 12, 13, 14 ஆம் நாள்; ஒருவழித் தணத்தல் - 12, 13, 14, 15 ஆம் நாள்; வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் - 16ஆம் நாள் தொடங்கி 50ஆம் நாள் முடிய; வரைவிடை வைத்துப் பிரிந்து மீண்டு வருதல் - 51 ஆம் நாள்; வரைவுமலிவு - 51ஆம் நாள்; அறத்தொடு நிற்றல் - 52ஆம் நாள்; உடன்போக்கும் கற்பொடு புணர்ந்த கவ்வையும் - 53ஆம் நாள்; மீபசி - 54ஆம் நாள்; உடன்போக்கு இடையீடு - 55ஆம் நாள்; தன்மனை வரைதல் - 56ஆம் நாள்.
எனவே, களவொழுக்கம் தொடங்கியபின் 56ஆம் நாளில் திருமணம் நிகழும் என்பது சொக்கப்பநாவலரது கருத்தாகும்.
சொகினம் -
சகுனம்; அறம் பொருள் இன்பம் வீடு சொன்ன நூல்களைச் சார்ந்து தோன்றிய இந்நூல் குறிப்பிடும் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படும் என்பது உரை. (யா.வி. பக். 491)
சொல்லகத்தியம் -
கால வெள்ளத்தில் இறந்துபட்ட ஓர் இசைநூல். (சிலப். 8:24 அரும்.) (L)
சொற்கட்டு -
பண்டைய இலக்கியங்களுள் ஒன்றான இதன் பாடலடிகள் சொற்சீரடியின் பாற்படுவன. (யா.வி. பக். 373)
சொற்பொருத்தம் -
செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் இரண்டா வது; செய்யுள் முதற்கண் எடுத்த மங்கலச்சொல் விழுமிய பொருள் தன்னிடம் தோன்ற நிற்றலோடே, பல்வேறு பொருள் படக் கூறுதலும் வகையுளியுறுதலும் ஈறுதிரிதலுமாகிய குற்றம் மூன்றும் இன்றி, புலவரால் செய்யப்படுவது. ஏற்புழிக் கோடலால், மங்கலச் சொல்லிற்கு ஏனைய பொருத்தங்கள் கருதி அடைமொழியை முன் புணர்ப்பின் மங்கலச்சொல் சீரின் இடையே வரும்; அவ்வாறு வருவழி அடையடுத்த மங்கலச் சொல்லாகிய முதற்சீர் ஈறு திரிதலும் உண்டு; ஆண்டும் திரியாமையே சிறப்புடையதாவது. (இ. வி. பாட். 12)
சோதிடம் -
அறம் பொருள் இன்பம் வீடு ஆமாறு சொன்ன நூல்களின் சார்பாக வந்த சோதிடம் என்ற நூலின் மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படும். (யா.வி. பக். 491)
சோபனம் - மங்கலம். சோபன வாழ்த்தாவது மங்கலப் பாட்டு. (W) (L)
ஒருவன் பாடிய பாடலைத் தான் பாடியதாகக் கொண்டு மற்றவனிடம் கூறி வருபவன்; ‘கள்ளக்கவி’ எனவும்படும்.
(இ.வி. பாட். 174)
ஞ
வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் பலவகை யான சந்தச்செய்யுள் இலக்கணமும் தாண்டகச்செய்யுள் இலக்கணமும் கூறப்பட்டன. (யா.வி. பக். 486)
த
இஃது இடைச்சொல் உரிச்சொற்களைத் தொல்காப்பியம் - அவிநயம் - நல்லாறன் மொழிவரி - என்ற நூல்கள் போல விளக்கிக் கூறிய பண்டைய இயற்றமிழ் நூல். (யா. வி.பக். 579)
பத்துச் செய்யுட்களைக் கொண்ட பிரபந்தம்.
அரச உறுப்புப் பத்தினை, ஆசிரியப்பா பதினான்கால் பாடும் பிரபந்தம். (பி. தீ. 24)
அரசனுடைய தசாங்கத்தை ஆசிரிய விருத்தத்தால் பத்துச் செய்யுள் கூறுவது. (மு. வீ. யா. ஒ. 141)
பாட்டுடைத் தலைவனுக்குப் பொருந்திய தசாங்கத்தினை ஒருசீராலே முடிவுபெறப் பாடுவது இலக்கணமாம். பிரித்து வேறு சொல்முடிபு கொடுத்துக் கூறல் குற்றமாம். பிரித்தவழிப் புணர்மொழிப் பெயர் இறுதிக்கண் தொகைச்சொல் கொடுத்து நச்செழுத்து அகற்றிக் கூறின் குற்றமாகாது. (கந்தர் கலிவெண்பாவுள் கண்ணி 64 - 74 காண்க)
எ-டு : ‘ஐந்தொழிலும் ஓவா(து) அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்த நவநாத மணிமுரசும்’ (70) (இ. வி. பாட். 43)
நேரிசை வெண்பாவால் சிறப்புத் தோன்ற அரசன் படைத்த மலை நதி நாடு ஊர் முதலிய தசாங்கத்தினைப் பத்துக் கவியால் கூறும் பிரபந்தம். (இ. வி. பாட். 80)
வேந்தனுடைய மலை, நதி, நாடு, ஊர், புனையும் தார்
(-மார்பிலணியும் மாலை), குதிரை, மதவேழம், கொடி, முரசு, ஆணை
(-ஆக்கினை) ஆகிய இவைபத்தும். இவற்றைப்பாடும்
பிரபந்தமும் இப்பெயர்த்து. (இ. வி. பாட்.
22)
முந்நூறு வெண்பாக்களால் இயன்ற பிரபந்த வகை. இது வெண்புகழ்ச்சி மாலை எனவும்படும். (தொ. வி. 283 உரை)
வேந்தனுடைய படையினைப் புகழ்ந்து இசைக்கும் பாடல்.
தண்டு - படை;
இசை - புகழ்ச்சி. பிற்காலச் செய்யுள் வகையுள்
இதுவும் ஒன்று. (இ. வி. பாட். பிற்.
7)
தமிழில் அணியிலக்கணத்தை அழகுற எடுத்தியம்பும் இலக்கணம். வடமொழியில் தண்டி என்ற பெருங்கவிஞர் காவியாதரிசம் என்ற அணியிலக்கணம் செய்தார். அதனை வீரசோழியம் தமிழில் மொழிபெயர்த்துப் பாடுகிறது. காவியாதரிசத்தோடு ஒருபுடை ஒத்தும் ஒவ்வாதும் தமிழில் தண்டியலங்காரம் பாடப்பெற்றது. வடமொழித் தண்டியின் இலக்கணச் செய்தியைப் பெரும்பாலும் தழுவ இயற்றப்பட் டமையால், இவ்வழிநூலும் முதல்நூல் ஆசிரியர் பெய ராலே தமிழில் தண்டியலங்காரம் எனப்பட்டது; அன்றி, இத்தமிழ்நூல் ஆசிரியர்தம் பெயர் தண்டி என்றும் இருத்தல் கூடும். இத்தண்டியாசிரியர் கம்பர் மகனாம் அம்பிகாபதியின் புதல்வர் என்ற வரலாறும் உண்டு.
இவ்வணி நூலகத்தே பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்ற மூன்று இயல்களும், அவற்றுள் முறையே 25, 64, 35 நூற்பாக்களும் உள. இவை நீங்கலாகத் தற்சிறப்புப்பாயிரமும் நாமகள் வாழ்த்துப் பாடலும் எனச் செய்யுள் இரண்டாம்.
நூலாசிரியரே எடுத்துக்காட்டுப் பாடல்களையும் வரைந்தார். இவற்றுள் வெண்பாப் பாடலே பெரும்பான்மை.
இரண்டாங் குலோத்துங்கன் அவைக்களத்தே இந்நூல் அரங்கேறியது என்ப. இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனலாம். மிக்க வழக்குப் பயிற்சியுடைய இவ்வணியிலக்கணம் உவமை முதல் பாவிகம் ஈறாக முப்பத்தைந்து அணிகளை மொழிகிறது. சொல்லணியுள் சித்திரகவிகள் பன்னிரண்டு சொல்லப்பெறுவன; மேலும் எட்டு உரையுள் கொள்ளப் பட்டன. பொதுவணியியல் பத்துக் குணங்களைப் பாரிக் கிறது. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணவிளக்கம் தனது அணியியலுள் தண்டியலங்காரத்தையே தழுவி யுரைத்துள்ளமை இவ்வணி நூலின் பெருமையைப் பறை சாற்றுவது.
பண்டைய தருக்க நூல்களுள் ஒன்று; செய்யுள் வடிவில் அமைந்தது. (யா. வி. பக். 583)
நகைச்சுவை தோற்றும் ஒரு பழைய தமிழ் நூல்.
(தொ. பொ. 485 பேரா.)
இறையனார் அகப்பொருளுக்குப் பின்னர்த் தோன்றிய அகப்பொருள் நூல்களில் ஒன்று. இந்நூலின் பொருளியல் என்ற பகுதியே கிடைத்துள்ளது. அதுவும் முழுமையாகக் கிட்டவில்லை. அகப்பொருளின் பெரும்பான்மையான பகுதி கிட்டியுள்ளது. அகப்பொருளின் முதல் கரு உரிப் பொருள் களைக் கூறிக் கைக்கிளையை விடுத்து ஆசிரியர் களவினைத் தொடங்கியுள்ளார். அறத்தொடு நிலையும் உடன்போக்கும் இந்நூலுள் கற்பியலுள் அடக்கப்பட்டுள. தலைவனுடைய நற்றாய் கூற்று ஒன்றும் இதன்கண் காணப்படுவது புதிய தொரு செய்தியாம். நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார் போலும். இந்நூல் உதாரணப் பாடல்கள் பல களவியற் காரிகையில் மேற்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவர், பொருளியலை அகம், புறம், அகப்புறம் என மூன்றாகப் பிரித்து விளக்கியுள்ளார். இப்பொழுது கிட்டியுள்ள நூற்பகுதி அகத்தைப் பற்றியதே. இவர் ஓதல் தூது முதலிய கற்புக்காலப் பிரிவுகளைச் ‘சேயிடைப்பிரிவு’ எனவும், பரத்தையிற் பிரிவை ‘ஆயிடைப் பிரிவு’ எனவும் குறிப்பிடுகிறார். இந்நூலுள் 25 நூற்பாக்களும், உரையில் 173 எடுத்துக்காட்டுப் பாடல்களும் உள்ளன.
தருக்க சங்கிரகம் -
வடமொழியில் அன்னம்பட்டர் வரைந்த தர்க்க சங்கிரகத்தை சிவஞானமுனிவர் தமிழாக்கம் செய்த நூல். (L)
தருக்க சங்கிரக தீபிகை -
வடமொழியில் அன்னம்பட்டர் தாம் வரைந்த தருக்க சங்கிர நூலுக்குத் தாமே எழுதிய உரை இது. தமிழில் சிவஞான முனிவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (L)
தருக்க சாத்திரம் -
நியாய வாத நூல். (L)
தருக்க பரிபாஷை -
கேசவமிசிரர் வடமொழியில் யாத்த தர்க்க பரிபாஷா என்னும் நூலினின்று சிவப்பிரகாச முனிவர் இயற்றிய தமிழ் மொழிபெயர்ப்பு நூல். (L)
தவம் -
தவம் செய்வார்க்கு உளதாம் சிறப்பினை எடுத்துக் கூறி அத்தவம் செய்யும் உடல் துன்பமின்றியே பக்தியினால் எளிதில் இறைவனை அடையலாம் என்றாற் போலக் கூறும், கலம்பக உறுப்புக்கள் பதினெட்டனுள் ஒன்று.
“காய்களையும் இலைகளையும் உணவுக்காகத் தின்றும், காட்டில் தங்கியும், நற்கதியை அடைதலை வேண்டி ஐந்தீ நாப்பண் நின்றும், உலகினைச் சுற்றியும் தவம் செய்து திரியும் சான்றோர்களே! நீயிர் அரிதின் முயன்று தவம் செய்து பெறக் கூடிய பயனைப் பாம்பு அணையான் ஆகிய திருவரங்கன் திருக்கோயிலைப் பணிந்து தொழுவதனாலேயே எளிதில் எய்திவிடலாம்” என்பது போன்ற கூற்று. (திருவரங்கக். 18)
தனிநிலைச் செய்யுள்வகைப் பெயர் -
வளமடல், உலாமடல், உலா, அநுராகமாலை, மெய்க்கீர்த்தி, புகழ்ச்சி மாலை, நாமமாலை, தாரகைமாலை, உற்பவமாலை, தானைமாலை வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி, பல பொருள் வஞ்சி, நிலைபெறு குழமகன், பாதாதி கேசம், கேசாதிபாதம், உவாத்தொழில், (கூத்தர் முதலியோர் தம்மை ஆற்றுப்படுத்தும்) ஆற்றுப்படை, தூது, மஞ்சரி- என்னும் பெயர் வேற்றுமையால் தனிநிலைச் செய்யுள் இருபத் திரண்டாம். (இ. வி. பாட். 95)
தனியன் -
(1) ஒரு நூலினை அல்லது அதனை ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச்செய்யுள் (திவ்.) (2) குருவைத் தோத்திரம் செய்யும் ஒற்றைச் சுலோகம். (L)
தாப்புலி -
ஒரு வகையான பழைய பா. (செங்கோன் தரைச்செலவு) (L)
தாயுமானவர் பாடல் யாப்பு -
நேரிசை வெண்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்துறை, சிந்து, எளிய சந்த அமைப் பினை உடைய வண்ணம் என்பனவாம். குறள் வெண்செந் துறை எனப்படும் பாக்கள், தாழிசை எனவும் கண்ணி எனவும் இருவகைப்படும். அவை எண்சீர் அடி இரண்டாயும், நாற் சீரடி இரண்டாயும் நிகழ்வன. (இலக்கணத் முன். பக். 107)
தாரகை மாலை -
அருந்ததி போன்ற கற்புடை மகளிர்க்கு உள்ள இயற்கைக் குணங்களை வகுப்பினால் பாடும் பிரபந்தவகை. ‘வகுப்பு’த் தனியே காண்க. (இ. வி. பாட். 107)
தாலப்பருவம் -
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் மூன்றாவதாக வரும் பருவம் பாட்டுடைத் தலைவனாகிய குழந்தையைத் தொட்டிலி லிட்டுத் தாய் நாவினை யசைத்துப் பாடிப் பாராட்டுவது. பத்து ஆசிரிய விருத்தத்தான் சந்தவின்பம் தோன்றப் பாடப் பெறும். (தால் - நாவு)
தாலாட்டு -
(1) குழந்தைகளை உறங்கச் செய்யப் பாட்டுப் பாடுதல்; ‘தாலாட்டு நலம்பல பாராட்டினார்’ (பெரியபு. திருஞான.44)
(2) ‘தாலே லோ’ என்று முடியும் ஒருவகைப் பாட்டு
(3) தாலாட்டுதற்குரியதாய்ப் பிரபந்தத் தலைவனுடைய சிறந்த செயல்களைத் தெரிவிக்கும் பல கண்ணிகளை யுடையதொரு பிரபந்தம் எ-டு: சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு. (L)
தாள ஓத்து -
108 தாளங்களை விவரிக்கும் ஒரு பழையநூல் (L)
பரத சூடாமணி என்ற அரசன் இயற்றிய தாள வகையைக் கூறும் பண்டைய நூல். சிலப். முகவுரை (உ. வே. சா.)
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத் தலைமக னையோ தலைமகளையோ எட்டாம் மாதத்தில் தாலாட்டு வதாகக் கூறும் மூன்றாம் பருவம். தாலப் பருவம் என்பதும் அது. தால் - நாவு; தாய் பிள்ளையைத் தொட்டிலிலிட்டு நாவசைத்துப் பாடுதலின், இப்பருவம் இப்பெயர்த்தாயிற்று. ஆசிரிய விருத்தம் பத்துப் பாடல்கள் சந்தவின்பம் பெற இது பாடப்பெறும்.
அகலக்கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள் ஒன்று. உயிர் எழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என ஐந்து இனங்களாகப் பகுத்துப் பாட்டுடைத் தலைவனது பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பால(த்தான)ப் பொருத்தம் எனக் கொண்டு தொடங்கி, மேல் குமாரப் பொருத்தம், இராசப் பொருத்தம், மூப்புப் பொருத்தம், மரணப் பொருத்தம், என உயிரினங்களை எண்ணி மூப்புத்தானப் பொருத்தமும் மரணத் தானப் பொருத்தமும் ஆகிய எழுத்துக்களை நீக்கி, பிற தானங்களி லுள்ள எழுத்துக்களால் நூலைத் தொடங்கும் செய்யுள் முதல்மொழிப் பொருத்தமாம்.
தலைவனது இயற்பெயர் முதலெழுத்து அஆ வருக்கத்தினது ஆயின் அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள- என்பனவற்றுள் ஒன்று முதற்கண்வரும் முதற்சீரே ஏற்றது.
தலைவனது இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தின தாயின் இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ என்பன வற்றுள்ஒன்று முதற்கண் வரும் முதற்சீரே ஏற்றது.
பிறவும் இவ்வாறே இயைத்துக் கொள்ளப்படும். (இ. வி. பாட். 23)
ஆசிரியப்பாவால் அரசரது தூசிப்படையினைப் பாடும் பிரபந்தவகை. தூசிப்படை - முன்னர் எடுத்துச் செல்லும் கொடிப்படை (இ. வி. பாட். 109)
திக்குவிசயம் -
அரசனுடைய நாற்றிசை வெற்றியைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்தம். இது 96 வகையான பிரபந்தத்தின் வேறுபட்டது. (இ. வி. பாட். பக். 505; சாமி. 171)
திண்டிம கவி -
திண்டிமம் முழக்கிக் கொண்டு வாதம் செய்யும் கவி. திண்டிமம் - ஓர் இசைக்கருவி. (திருச்செந். பிள். சப்பாணி 2) (L)
திணை நூல் -
பிற்காலப் பாட்டியல் நூல்கள் போலப் பாக்களுக்கு நிறமும் திணையும் பூவும் சாந்தும் புகையும் பண்ணும் திறனும் இருதுவும் திங்களும் நாளும் பக்கமும் கிழமையும் பொழுதும் கோளும் இராசியும் தெய்வமும் திசையும் மந்திரமும் மண்டிலமும் பொறியும் - போல்வனவற்றை விளக்கிக் கூறும் பழைய இலக்கணநூல். (யா. வி. பக். 488)
திரிபந்தாதி -
ஒவ்வோரடி முதற்சீரிலும் முதலெழுத்து மாத்திரம் திரிய இரண்டு முதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிப் பொருள் வேறுபட வரும் செய்யுளாகிய அந்தாதிப் பிரபந்தம்.
எ-டு : திருவேங்கடத்தந்தாதி திரிபந்தாதியாக அமைந்துள்ள வாறு காண்க.
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் -
மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருக்குருகா மான்மியம் முதலிய நூல்கள் இயற்றிவர்; ஆழ்வார் திருநகரி என்னும் ஊரினர். இவர்காலம் 16 ஆம் நூற்றாண்டு.
திருக்குறுந்தாண்டகம் -
திருமங்கையாழ்வார் இயற்றியதும், நாலாயிர திவ்விய பிரபந்தத்துள் அடங்கியதுமான பிரபந்தம்.
அறுசீர்த் தாண்டகங்களாலாகிய தேவாரப் பதிகங்கள். (L)
திருக்கோலக் கவிதை -
தலைவன் தன்னை ஒப்பனை செய்து கொள்ளும் திறத்தைச் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம். இது 96 வகைப் பிரபந்தங் களின் வேறுபட்டது. (இ.வி. பக். 505)
1. சோர கவி; ‘திருட்டுக் கவிப்புலவரை’ (தமிழ் நா. 221). பிறர் கவியைத் திருடித் தன்னுடையதாகப் பாடுபவன்; ‘கள்ளக் கவி’ எனவும்படும். (L)
இயற்றியவர் பெயர், பயன் முதலியன கூறும் பதிக இறுதிப் பாடல்.
1. நாலாயிர திவ்விய பிரபந்தத்துள் திருமங்கையாழ்வார் அருளிய ஒரு பகுதி; 30 பாசுரங்களை உடையது.
2. எண்சீர்த் தாண்டகத்தால் ஆகிய தேவாரப் பதிகங்கள். அப்பர் அருளிய ஆறாம் திருமுறை எடுத்துக்காட்டாம்.
கோயில் திருப்பணிகளைக் கூறும் பாடல்நூல்.
1. பெரும்பாலும் பத்து அல்லது பதினொன்று (மிக அருகியே பன்னிரு பாடல்கள் வரும்) பாசுரங்களைக் கொண்டதாய்த் தேவாரத்தில் உள்ளது போலத் தெய்வத் தைப் புகழ்ந்துபாடும் பாடல் தொகை.
2. புத்தன் அருமை பெருமைகளைப் பாராட்டும் ஒரு நூல். (சி. சி.பா. சௌத். 2, ஞானம்.) (L)
1. நாலாயிர திவ்ய பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய ஒரு பிரபந்தம்.
2. சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம். (L)
1. கடவுளைப் பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம்; ‘இவ் விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தம்’ (கோவை. 86 உரை)
2. தேவாரம் (தொ. செய். 149 நச்.)
3. வசைச்சொல். (L)
முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கண நூற்குப் பாயிரம் செய்தவர். “தன்னாசிரியன் முதலாம் ஐவருள் இந்நூற் (சிறப்புப்) பாயிரம் செய்தார் தகும் உரைகாரராகிய திரு நெல்வேலி மகாவித்துவானாகிய திருப்பாற் கடல்நாதன் கவி ராயர்” - என வருதலின், இவரே இந்நூற்கு உரையாசிரியரும் ஆவார். இவரது காலம் 19ஆம் நூற்றாண்டு.
1. தெய்வப் புகழ்ச்சியான பாடல்; ‘தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி’ (திவ். பெருமாள். 1-9)
2. அருணகிரிநாதர் முருகக்கடவுள் மேல் பாடிய சந்தக் கவிகளால் ஆகிய நூல். (L)
மகளிர் பூக்கொய்தல் பற்றிக் கூறுகின்ற திருவாசகப்பகுதி; 20 பாடல்களையுடைய பதின்மூன்றாம் பகுதி. (L)
கோயில் திருமூர்த்திகளின் அபிடேகக் காலத்திற் சொல்லும் கவி. (கோயிலொ. 68) (L)
1. சிவன், திருமால் இவர்களுக்கு உரியவான பஞ்சாக்கர அட்டாக்கரங்கள்; ‘திருமந்திரமில்லை சங்காழி இல்லை’ (திருவேங்கடத்தந். 99)
2. திருமூலநாயனார் அருளிச்செய்த மூவாயிரம் பாடல் களைக் கொண்டதொரு நூல். சைவத் திருமுறைகளில் பத்தாவதாக உள்ளது. (L)
1. தான் அரசன் முதலியோரிடம் பரிசு வேண்டிப் புலவன் அவர்களிடம் எழுதி விடுக்கும் ஓலைப்பாட்டு; சீட்டுக்கவி, ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் எனவும்படும். ‘சீட்டுக் கவி’ காண்க.
2. மதுரை ஆலவாயின் அவிர்சடைக் கடவுள், சேரமான் பெரு மாள் நாயனாருக்கு, பாணபத்திரன் வறுமையைப் போக்கிப் பெருநிதியம் கொடுக்கவேண்டும் என வரைந்த பாடல். இது பதினோராம் திருமுறையில் முதற்கண் உள்ளது. (L)
1. பெரியோர் விடுக்கும் முடங்கல்; ‘உலகு தொழுதிறைஞ் சும், திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி’ (சிலப். 8 - 53)
2. அரசனது சாசனம்; ‘திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச் சொல்வது’ (ஈடு. 1-4-4)
3. தெய்வ சந்நிதி. (L)
மூவர் தேவாரம்; திருவாசகம், திருக்கோவையார்; திரு விசைப்பா, திருப்பல்லாண்டு; திருமந்திரம்; திருமுகப்பாசுரம் முதலியன; பெரியபுராணம் - என்னும் இச்சைவநூல்களது வைப்பு முறை. மூவர் தேவாரமும் முதல் ஏழு திருமுறையுள் அடங்கும். பிற, முறையே எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, பதினோராவது, பன்னிரண்டாவது திருமுறை யாம். மூவர் தேவாரத்துள் சம்பந்தர் அருளியவை முதல் மூன்று திருமுறையாம்; திருநாவுக்கரசர் அருளியவை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறையாம்; சுந்தரர் அருளியவை ஏழாம் திருமுறையாம்.
சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள் வகை;
எ-டு : ‘அருணகிரி நாதர் திருவகுப்பு’. ‘வகுப்பு’க் காண்க. (L)
19ஆம் நூற்றாண்டினராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய தோத்திரப் பாடல்கள் ஆறு திருமுறையாக அடங் கிய நூல். இறைவன் திருவருளால் பாடப் பெற்றமையின் சுவாமிகள் தம் நூற்கு இப்பெயர் இட்டார்.
பாம்பன் சுவாமிகள் என்னும் குமரகுருதாச சுவாமிகளின் படைப்பாகிய பல பாடல்களின் தொகுப்புநூல் இது. இஃது இறைவழிபாட்டுச் செய்யுள்கள் பலவற்றைக் கொண்டது, இரண்டு காண்டங்களாக உள்ளது. இதன் இரண்டாம் காண்டம் ‘பல் சந்தப் பரிமளம்’ என்ற பெயரொடு முருகப் பெருமானைப் பாடும் பாக்கள் பாவினங்கள் சித்திரகவிகள் இவற்றைக்கொண்டு 532 செய்யுள்களில் அமைந்துள்ளது. சிதம்பரச் செய்யுள்கோவை, மாறன் பாப்பாவினம் போல யாப்புநூல்களின் செய்யுள்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் பாடல்களை யுடையது இந்நூல்.
வெண்பா, விருத்தம் இவற்றால் செய்திகளை உய்த்துணர நிரல்நிறையாக அமைத்துப் பாடப்பட்ட கோள்கள் பற்றிய பழையநூல். (யா. வி. பக். 386)
இதுபோது வழங்கும் தமிழ்நிகண்டுகளில் மிக்க தொன்மை யுடையது, அம்பர்ச் சேந்தன் என்பானது ஆதரவால், திவாகர முனிவர் இயற்றியது; ஆக்கியோனால் பெயர் பெற்றது. தெய்வப்பெயர்த் தொகுதி முதலாகப் பலபொருட் கூட்டத் தொரு பெயர்த்தொகுதி ஈறாக இதனகத்துப் பன்னிரண்டு தொகுதிகள் உள. நூல் தொடக்கத்திலுள்ள காப்பு விநாயகனைத் தொழுவது. நூற்பா யாப்பாக நூல் நிகழ்கிறது.
1. அரசன் திருவோலக்க மண்டபத்தில் அமரும் போதும், அங்குநின்று எழும்போதும் இசைக்கப்படும் பாட்டு. (L)
2. நாட்கவி பாடுவோன்.
கணப்பொருத்தம் மூவசைச் சீர்க்கே சிறப்பாகக் கொள்ளப் படும். ‘புளிமாங்கனி’ தீக்கணம் ஆம். இதற்குரிய நாள் கார்த்திகை; இதன் பயன் நோய். ஆதலின், அகலக் கவிக்கு முதற்கண் நின்ற சீர்க்குப் பார்க்கும் பொருத்தம் பத்தனுள், இத்தீக்கணம் ஆகாதது என்று விலக்கப்படுவது. (இ. வி. பாட். 40)
செய்யுள் முதற்சீராக அமைக்கத் தகாததும் ‘நிரை நேர் நிரை’ என வருவதும் ஆகிய செய்யுட்கணம். (திவா. பக். 299)
பிரபந்தத்தின் முதற்பாடல் முதல் சீர்க்கு ஓதிய பத்துப் பொருத்தங்களில் ஏற்பனகொண்டு சான்றோர் வகுத்த வழியின் வழுவாமல் பாடும் கவி நற்கவியாகும். அல்லாதன எல்லாம் தீக்கவியாகும். தீக்கவியினைப் பெற்றவனுக்குச் செல்வம் போம்; நோயாம்; சுற்றம் அறும்; மரணம் உறும்; கால்கள் சோரும். தீக்கவியைத் தெய்வங்கள் பற்றிப் பாடிய புலவனுக்கும் இத்தீங்கு உண்டாகும். (சிதம். பாட். மர. 20)
சீட்டுக்கவி; ‘அந்தத் தீட்டுக்கவி காட்டுக்கு எறித்த நிலவாகிப் போம்’ (தமிழ்நா. 255) (L)
தலைவனது இயற்பெயரின் நான்கு ஐந்தாம் எழுத்துக்கள் பிரபந்த முதலில் வரப் பாடுதலாகிய கேடு விளைக்கும் செய்யுள்தானம். (பிங். 1347)
அவையினது திறத்தை அறியாதவர், ஆராய்ந்து பொருந்த அமைதியாகச் சொல்லாதவர், குற்றமின்றிச் சொல்லமாட் டாதவர், அவ்வாறு கூற நாணாதவர், சொற் பொருட்சுவை யுணரமாட்டாதவர், கலைநுட்பத்தைத் தெரியாதவர், அஞ்சாதவர், செருக்குடையோர் இன்னோர் குழீஇயுள்ள அவை தீய அவையாம். (வெண்பாப். பாட். பொ. 11)
குறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் அவை குறைஅவையும் தீஅவையுமாம். (இ. வி. பாட். 176 உரை)
வண்டினை விளித்தலை ஈற்றில் கொண்டு அமையும் ‘கோத் தும்பி’ என்ற தலைப்பில் அமைந்த இப்பாடல்கள் கலிப்பாக் களைப் போலக் குறில் அகவல் ஏந்திசை வண்ணத்தில் அமைவனவாம். இப்பாடல்களது தொகையாக அமைந்த ‘தும்பிப்பாட்டு’ இறந்துபட்டதொரு பண்டைய நூல். (யா. வி. பக். 417)
மகளிரது விளையாட்டு வகை; உந்தி பறத்தல் போல்வது. மகளிர் பாடிக்கொண்டே அயரும் இவ்விளையாட்டில், அவர் பாடுவனவாக வரும் பாடல்கள் ‘தும்பி பற’ என ஈற்றடி இரண்டும் முடிவு பெறுவவாக அமையும். (திருவாசகத்துள் 14ஆம் பகுதியுள் இப்பாடல்களைக் காணலாம்.)
தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து பாடும் பிரபந்த வகை. (தொ. வி. 283)
பாணரும் விறலியும் முதலியோர் அரசர் துயிலெழப் பாடும் மங்கலப் பாட்டு. (கோவை. 375 பேரா.)
இதனைத் துயிலெடை நிலை என்னும் தொல்காப்பியம். (பொ. 91 நச்.)
அரசர் முதலியோரைத் துயிலெடுத்தல் பற்றிப் பாடும் பிரபந்த விசேடம். (சது.) (L)
இடைச்சங்கப்புலவருள் ஒருவர். (இறை. அ. 1 உரை)
துறைக்கவி -
அகப்பொருள் துறைகளேயன்றிக் கலம்பகம் முதலிய சிறு பிரபந்தங்களில் அமையும் மறம், களி, தூது, வயிரபம், சம்பிரதம், தவசு, குறம், கணிகம் முதலிய செய்திகள் பற்றிய பாடல்கள் எல்லாம் புறப்பொருள் பற்றிய துறைகளாதலின் இவை துறைக்கவி என்று கொள்ளப்படுகின்றன.
வயிரபம் - வலிமை வாய்ந்த புயங்களின் சிறப்புக் கூறும் ‘புயவகுப்பு’ என்ற கலம்பகத் துறை போலும்.
கணிகம் - மிகக் குறுகிய நேரத்தில் தம் சித்துக் களால் புதுமை தோற்றுவித்தலைக் கூறும் ‘சித்து’ என்ற கலம்பக உறுப்பு.
ஏனைய மறம் போல்வன கலம்பகங்களில் பெருவரவினவாக உணர்த்தப்படும் துறைகளாம். (வீ. சோ. 183)
துறைச் சுவடி -
நீர்த்துறைகளில் இருந்து படிக்கப்படும் புராண ஏடு. ‘ஸ்ரீ கஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலே எழுதியிட்டு வைத்தும்’ (ஈடு. 6 - 10 - 10) (L)
துறைப்பாட்டு -
அகப்பொருள் புறப்பொருள் துறைகளைக் குறித்து வரும் செய்யுள். (இ. வி. 603 உரை)
தாம் சொல்ல விரும்பும் கருத்தை நேரிடையாகக் கூறாமல் அகப்பொருள் புறப்பொருள் செய்திகள் அமைந்த பாடல் களாக இயற்றி அவற்றின் வாயிலாகத் தாம் கருதுவதைக் கவிஞர்கள் பெறப்படவைக்கும் வகையில் அமையும் பாடல்கள்.
இத்தகைய துறைப்பாடல்கள் நாலாயிர திவ்விய பிரபந் தத்துள் நிரம்ப வந்துள்ளன.
தூது -
கலிவெண்பாவினாலே, பாணன் முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணை இருபாலினையும், கேளா மரபின வற்றைக் கேட்பனவாகக் கூறிவிடுக்கும் அன்னம் கிளி வண்டு மயில் குயில் முதலிய அஃறிணைப் பொருள்களையும் இளைய கலாம் முதிய கலாம் இவற்றின் துனி நீக்குதற்கு வாயிலாக விடுத்தல் தூது என்னும் பிரபந்தத்தின் இலக்கண மாம். (இ. வி. பாட். 114)
தேம் பாங்கு எனவும்படும்; தென்னாட்டில் நாட்டுப்புறத்தவர் வயல் முதலியவற்றில் பணியாற்றும்போது அப்பணியிடைக் களைப்புத் தோற்றாமலிருக்கப் பாடுவதோர் இசைப் பாட்டுவகை. (L)
பாட்டுடைத் தலைவனைத் திருமால் முதலாகிய தெய்வங்கள் காக்குமாறு பாடும், பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்துள் முதலாக நிகழும் பகுதி. பத்துப் பாடல்களுக்குக் குறையாது ஆசிரியச்சந்த விருத்தத்தால் இக்காப்புப்பருவம் நிகழும். (திவா. பக். 309)
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரையிட்ட உரை யாசிரியருள் ஒருவர். சில நூற்பாக்களுக்கும் அவற்றுட் சில சொற்களுக்கும் இவர் காணும் உரை, பிறர் உரையினும் நுட்பம் வாய்ந்தமை அறிந்தின்புறத்தகும். எடுத்துக் காட்டாக ‘காலம் உலகம்’ (சொல். 55) என்னும் சூத்திரத்துள் இவர் சொற்களுக்கு விளக்கம் கூறும் நயம் காண்க. ‘எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய’ என்றதனான், இரண்டு சொல்லே தொகையாயினவாறு தோன்ற, ‘உலகம் உவப்ப... கணவன்’ (முருகு. 1 - 6) என்பதனை ஒரு சொல் நடை ஆக்கிக் காட்டும் உரை (சொல். 407) நயமுடையது. ‘கடிசொல் இல்லை’ (441) போன்ற சூத்திரங்களுக்கு இவர் உரை பிறர் உரையின் வேறுபட்டுச் சிறந்தமை தெளிவு. ‘முன்னத்தின் உணரும்’ (448) என்றற்கு இவர் எடுத்துக்காட்டுவது தெளி வானதொன்று. இன்ன நயம்பல இவருரையிற் காணலாம். இவர் காலம் நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது; என்ப 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆதல் கூடும். ஆனால் இவர் உரை நச்சினார்க்கினியருக்குக் கிட்டவில்லை.
நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து. ‘தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்’. (யா. க. பாயிரம். 1 உரை) (L)
கைகொட்டிப் பாடி ஆடும் மகளிர் விளையாட்டு வகை. ‘நாம் தெள்ளேணம் கொட்டாமோ’ (திருவா. 11 - 1) (L)
அந்தாதித் தொடையால் பன்மணிமாலை, மும்மணிக் கோவை, உதயணன் காதை என்பன போல அமைந்த பழந்தமிழ்த்தொடர்நிலைச் செய்யுள் தொகுப்பாம் இது. (யா. வி. பக். 196)
‘கணம்’ காண்க. அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அநுடம், திருவோணம், ரேவதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள்.
நால்வகைக் கதிகளுள் ஒன்று (சீவக. 2800).
றகர ஒற்று அல்லாத ஏனைய வல்லொற்று ஐந்தும், ஒ என்னும் குற்றுயிர் அல்லாத ஏனை நாற்குற்றுயிரும் தேவகதியின் கூறாம். ஆ, ஈ, ஊ, ஏ என்னும் நான்கெழுத்தும், னகர ஒற்றல் லாத ஏனைய ஐந்து மெல்லொற்றும் மக்கள் கதிக்குரிய எழுத்துக்களாம். இவ்விரு கதியும் முதல் மொழிக்குப் பொருந்தும். (மெய் ஈண்டு உயிர்மெய்யையே குறிக்கும்.) (இ.வி. 798)
க ச ட த ப, அ இ உ எ என்பன தேவகதி எழுத்துக்கள். மக்கட் கதி எழுத்துக்கள் : ஆ ஈ ஊ ஏ, ங ஞ ண ந ம என்பன.
இவற்றுள்ளும் மொழி முதற்கண் வரும் ஆற்றல் உடையன ஙகர, டகர ணகரங்கள் அல்லாத 15 எழுத்துக்களே ஆம் எனக் கொள்ளப்படும். (இ. வி. பாட். 38.)
பிள்ளைத்தமிழ், கலம்பகம், பன்மணிமாலை, மும்மணிக் கோவை, அகப்பொருட் கோவை, தொகைச்செய்யுள், இணைமணிமாலை, இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, நான்மணிமாலை, இருபா இருபஃது, ஒருபா ஒருபஃது, ஒலி அந்தாதி, இன்னிசை, வருக்கமாலை, கைக்கிiள, மங்கல வள்ளை (வேறுவகை), இரட்டைமணிமாலை, நேரிசை, மெய்க்கீர்த்தி மாலை, காப்புமாலை, வேனில்மாலை, பல்சந்த மாலை, அங்கமாலை, வசந்தமாலை, நவமணிமாலை, பரணி, தசாங்கப்பத்து, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, அட்டமங்கலம், அலங்காரப் பஞ்சகம், ஊசல், சின்னப்பூ, சதகம், எண் செய்யுள், ஐந்திணைச் செய்யுள், நாழிகை வெண்பா, நானாற் பது, முலைப்பத்து, நயனப்பத்து, வில் வாள் வேல் கோல் வேழம் குதிரை நாடு ஊர் கொடை என்னுமிவ் ஒன்பதனையும் தனித்தனியே பப்பத்தாகக் கூறும் ஒன்பது வகை விருத்த மாகிய வில் விருத்தம் முதலியன, பெருங்காப்பியமும் காப்பியமும் எனப்பட்ட இருவகைக் காப்பியம் எனச் சொல் லப்பட்ட ஐம்பத்தைந்தும் தொகை பெற வகுத்த அகலக்கவி வேறுபாடும், அவை போல்வன பிறவும் தொடர்நிலைச் செய்யுளாம். (பல அடிகளான் அமைந்த பொருள் தொடர் புடைய வளமடல், உலாமடல், உலா முதலியன தனிநிலைச் செய்யுளாம்.) (இ.வி.பாட். 45) சதுரகராதியும் பிரபந்த மரபியலும் தொடர்நிலை தனிநிலைச் செய்யுள் வகைகளைப் பிரபந்தமென 96 ஆகக் கூறும். தொடை அகராதி - வீரமா முனிவரின் சதுரகராதியின் தொடை பற்றிய பகுதி.
இந்நூலுள் ஒரு சூத்திரம் “புறப்புறப் பொருளாவன வாகை யும் பாடாணும் பொதுவியல்திணையும்” என்று சுட்டுவதை யாப்பருங்கல விருத்தி குறிப்பிடுகிறது. இந்நூல் பொரு ளிலக்கணம் பற்றியிருக்கலாம் போலும். (யா. வி. பக். 571).
தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற்சூத்திரத்திற்கும் 18 ஆம் நூற்றாண்டினராகிய திருவாவடுதுறையைச் சார்ந்த மாதவச் சிவஞான முனிவரால் இயற்றப்பட்ட விருத்தியுரை. இவ் விருத்தி யுரைக்கு, சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தே வாழ்ந்த பெரும்புலவர் சண்முகனார் மறுப்பு எழுதிய நூல் ‘சண்முகனார் பாயிர விருத்தி’ எனப்படும். சண்முகனார், சிவஞான முனிவரது பாயிர விருத்தியுரையை மாத்திரம் மறுத்துள்ளார்; முதற்சூத்திர விருத்தியுரையை மறுத்து அவர் எழுதிய மறுப்புரை இந்நாள் கிடைத்திலது. சண்முக னாரது இப்பாயிர விருத்தியை மறுத்துச் சிவஞான முனிவ ருரையை அரண்செய்து ‘செப்பறை விருத்தி’ என்பதொன் றும் சென்ற நூற்றாண்டுத் தொடக்ககாலத்தில் சண்முகனார் மறைவிற்குப் பின்னர்த் தோன்றியது.
ஆதிநூலாகிய இசைநுணுக்கமும், அகத்தியமும், அதற்கு இணைநூலாகிய தேவஇருடி நாரதன் முதலியோர் செய்த நூல்களும், என இவை முதலாய (செயற்கை) முதல்நூல்களும், அவற்றின் வழிநூல் எனப்பட்ட மாபுராணம் பூதபுராணம் இசை நூல் ஆகிய இசைநுணுக்கம் முதலாய நூல்களும் எனப்பட்ட தலைச்சங்கத்து நூல்கள். (பா. வி. பக்.174)
முழுமையாகக் கிடைக்கப்பெற்ற இடைச்சங்ககாலத்துத் தமிழ்இலக்கண நூல். இதன்கண், எழுத்து சொல் பொருள் என மூன்று அதிகாரங்களும், அதிகாரம்தோறும் ஒன்பது ஒன்பது இயல்களும், மூன்றதிகாரத்திலும் முறையே 483, 463, 665 என நூற்பாக்களும், அமைந்துள. நூற்பாக்களின் எண்ணிக்கை உரையாசிரி யன்மார்தம் உரை அமைதிக் கேற்பச் சிறிது வேறுபடும். மூன்றுறுப்பு அடக்கிய பிண்டமாகத் தமிழில் தனித்து இயங்கும் சிறப்புடைய இந்நூற்கு இளம் பூரணஅடிகள் உரை முழுதும் உள்ளது. நச்சினார்க்கினியர் உரை பொருளதிகாரத்துள் மெய்ப்பாட்டியல், உவமஇயல், மரபியல், இம்மூன்றற்கும் கிடைத்திலது. சொல்லதிகாரத் திற்குச் சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார் இவர்கள்தம் உரைகள் உள. பேராசிரியர் என்பார் உரை பொருளதிகாரத்துள், மெய்பாட்டியல் உவம இயல், செய்யுளியல், மரபியல் இந்நான்கற்கும் அமைந்துள்ளது.
கடைச்சங்க இலக்கியங்கட் கெல்லாம் தொல்காப்பியமே இலக்கணமாவது. இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்ப. வடமொழியாசிரியர் பாணினிக்கும் தொல்காப்பிய னார் காலம் முற்பட்டமை துணிபு. ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ எனப் பாயிரம் கூறுதலின், இவர் பாணீ னியத்திற்கு முற்பட்ட காலத்ததாகிய ஐந்திரத்தில் புலமை மிக்கிருந்தமை தேற்றம். அது பற்றியே, இவர் விளிவேற்று மையைத் தழுவிக் கொண்டார் என்ப. வடமொழி வழக்கில் ஏற்பனவே கொண்டு, தமிழின் தனித்தன்மைகளை வலியுறுத் திச் செல்லும் இந்நூலே. இன்றுகாறும் கண்ட தமிழ்ப்பனு வல்களில் காலத்தால் முற்பட்டது. இதன் முதனூல் எனப்படும் அகத்தியம் இயலிசைநாடகம் எனும் முத்திறமும் விரவ இயற்றப்பட்ட தெனவும், அவற்றுள் இவர் இயற்ற மிழையே முப்படலமாக விரித்து நூல்யாத்தனர் எனவும் உரைகாரர்கள் கருதுப. இந்நூலுள் அமைந்த பொருள திகாரம் பிறமொழிகளில் காணலாகாப் பலதிறச் சிறப்பும் ஒருங்கமைந்து பண்டைத் தமிழரின் நாகரிகமேம்பாட்டைப் புலப்படுத்த வல்லது. இத்திறம் மேலும் விரிக்கின் பெருகும்.
துயிலெடை நிலை, கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, பெருமங்கலம், மண்ணுமங்கலம், குடைநிழல் மரபு, வாள்மங்கலம், எயில் அழித்த மண்ணு மங்கலம், கடைக்கூட்டு நிலை, இருவகை விடை, காலம் கண்ணிய ஓம்படை, ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பு - எனத்தொல்காப்பியனார் அகலக் கவியை விதந்து கூறுவனவாக வரும் இவையெல்லாம் (தொ. பொ. 91 நச்.) அவர் கூறும் பிரபந்த வகைகளாம்.
இனி, ‘அகன்று பொருள் கிடப்பினும்’ எனவும், ‘மாட்டும் எச்சமும்’ எனவும் (தொ. பொ. 522, 523 பேரா.) அவர் செய்யு ளியலுள் கூறுவனவற்றால், முறையே பொருள் தொடர் நிலைச் செய்யுளும் சொல் தொடர்நிலைச் செய்யுளும் பெறப்படும் என்பது.
இவ்வாற்றான் பல அடியால் நடக்கும் தனிநிலைப் பாட்டு எனவும், தொடர்நிலைப் பாட்டு எனவும் சொல்லப்பட்ட அகலக்கவி யாகிய பிரபந்தங்களின் வகை சிலவற்றைத் தொல்காப்பியம் கூறிற்று என்பது. (இ.வி.பாட். 7 உரை).
காப்பியக்குடியிற் பிறந்தவரும், அகத்தியனார்க்கு மாணாக் கரும், தொல்காப்பியம் இயற்றியவருமாகிய ஆசிரியர்; இவர் இடைச் சங்க மிருந்தவர் என்னும் இறை. அ. உரை.
வீரமாமுனிவர் இயற்றிய ஐந்திலக்கண நூல். 18ஆம் நூற்றாண்டு.
தோள் நோக்கம்: மகளிரது விளையாட்டுவகை. ‘குழலினீர் தோணோக்கம் ஆடாமோ’ (திருவா. 15-2)
ஆற்றல் மிக்க களிற்றை வயப்படுத்தி அடக்கியவருக்கும், எதிர்ப் போரிடும் யானையை எதிர்த்துப் பொருது வெட்டி அடக்கியவருக்கும், மதகளிற்றை அதட்டிப் பிடித்து வயப் படுத்தியவருக்கும் இப்பிரபந்தம் பாடப்பெறும். வஞ்சிப்பாவி னால் இஃது யாக்கப்படுவது. ‘வாதோரண மஞ்சரி’ எனவும் இது பெயர்பெறும்.
இப்பிரபந்தத்தை முத்துவீரியமும், பிரபந்த தீபிகையுமே குறிக்கின்றன. (மு. வீ. யா. ஒ. 118)
ந
‘அடிநூல்’ காண்க. (யா. வி. பக். 367, 437)
நச்சினார்க்கினியர்
14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்; பேருரை யாசிரியர். பத்துபாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி, தொல்காப்பியம் இவையெல்லாவற்றுக்கும், குறுந்தொகை யுள் பேராசிரியர் உரை வரையாது விடுத்த இருபது செய்யுட் கும் இவர் உரையியற்றியுள்ளார். குறுந்தொகையுரையும், தொல்காப்பியத்துள் மெய்ப்பாடு, உவமம், மரபு என்னும் மூன்று இயல்கட்கு இவர் வரைந்த உரையும் இதுபோது காணப்பட்டில. மிக்க நினைவாற்றலோடு இவர் வரைந்த உரைநயம் பெரும்பான்மையும் ஆன்றோரான் போற்றப் படுவன. பண்டை இலக்கணத்துள் பிற்கால இலக்கியங்களை அடக்கிக் காட்ட வேண்டுமெனப் பெரிதும் முயன்று இவர் இயற்றிய உரையுள் கொண்டுகூட்டுப் பயிலும். ஆராய்ச்சியும் நுணுக்கமும் நனி பேரிலக்கியப் புலமையும் தொல்காப்பியத் துள் திளைத்த தமிழ்ப்புலமையும் சீர்த்த இவ்வுரையாளரை ‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்ப. இவர் அந்தணர்; பாரத்துவாசி; மதுரையில் வாழ்ந்த ஆசிரியர்.
நச்சுச் சொல் -
1. செய்யுளில் வழங்கக் கூடாத தீய சொல். 2. கொடுஞ்சொல். (L)
நச்செழுத்து -
பாடப்படும் பிரபந்தத்தினது முதற்சொல் மங்கலமொழியாக இல்லாதவிடத்து, ஆதிமொழிக்கு ஆகாதன என்று கடியப் பட்ட எழுத்துக்கள். அவை யா ரா லா ளா, யோ ரோ லோ ளோ, ய்ர்ல்ள், ஆய்தம், மகரக்குறுக்கம், அளபெடை என்பன வாம். எடுத்த மங்கல மொழிக்கண் இவ்வெழுத்து வரின், அவை குற்றமுடைய அல்ல என்பது. (இ. வி. பாட். 20)
நட்சத்திரமாலை -
1. நட்சத்திரங்களைப் பற்றிக் கூறும் ஒரு சோதிட நூல். 2. இருபத்தேழ் பாடல் கொண்டதொரு பிரபந்த வகை. (பன். பாட். 305)
நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருளிலக்கணம். அகப் பொருள் விளக்கம் என்பது நூற்பெயர். சிறப்புப் பாயிரமாகிய ஒன்று நீங்கலாக இந்நூலில் 252 நூற்பாக்கள் அமைந்துள. அகத்திணையியல் களவியல் வரைவியல் கற்பியல் ஒழிபியல் என இதன்கண் ஐந்து இயல்கள் உள. அகத்திணையியலுள் முதல் கரு உரிப்பொருள்கள் பற்றிய செய்திகளும், களவு கற்பெனும் இருவகைக் கைகோள் பற்றிய பொதுச்செய்தி களும், கைக்கிளை பற்றிய குறிப்புக்களும், பிறவும் கூறப்பட் டுள. களவியல், கைக்கிளை வகை நான்கனொடு, களவிற்குரிய பதினேழ் கிளவிகளையும் வகையும் விரியும் கூறி விளக்குகிறது. வரைவியலுள், வரைவு மலிவும் அறத்தொடு நிற்றலும் பற்றிய துறைகள் விளக்கப்பட்டுள. புணர்தலும் ஊடலும் ஊட லுணர்த்தலும் பற்றிய செய்திகள் கற்பியலுள் இடம் பெறு வன. இனி, ஒழிபியல் அகப்பாட்டுறுப்புக்கள் பன்னிரண் டனையும் விளக்குகிறது. அவ்வியலுள், அகப்புறக் கைக்கிளை பற்றியும் அகப்பொருட்பெருந்திணை பற்றியும் அகப்பாட் டுள் வருந் தலைமக்களைப் பற்றியும் பல செய்திகள் சில இயைபு பற்றிக் கூறப்பட்டுள.
இதற்கொரு பழைய சிறந்த உரை உண்டு. இதன் துறை களுக்குப் பெரும்பான்மையும் தஞ்சைவாணன் கோவை எடுத்துக் காட்டாகும். இந்நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.
‘நம்பியப்பொருள்’ என்றே நூற்பெயர் நிலவுகிறது.
‘நம்பியகப்பொருள்’ காண்க.
தலைவனுடைய கண்களைப் பத்துப்பாடல்களால் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. பாடல் ஆசிரியவிருத்தம் அன்றிக் கலித்துறையால் அமைதல் வேண்டும் எனச் சில பாட்டியல் நூல்கள் கூறும். (வெண்பாப்.செய்.25) (இ. வி. பாட்.92)
காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் என்னும் உட்பகை ஆறனையும் அடக்கி, அருங்கலை அறுபத்து நான்கனையும் ஐயம் திரிபற ஆராய்ந்து, அதனால் புவியில் பிறவிப்பயனாம் கீர்த்தி பெற்றோர் இருக்கலுறும் அவை நன்மையையுடைய அவையாம். (அவை - சபை)
கல்வியான் நிறைந்த, அடக்கம் வாய்மை நடுவுநிலைமை - இவற்றையுடையோர் குழுமி, மாட்டாதார் தம் கவிகளை அரங்கேற்றுகையில் அவர்களது குற்றத்தை நினையாது குணங்களையே மேற்கொண்டு, அவர்களை வல்லமையுடைய ராக்கி வினவிக் கேட்போர் இருக்கலுறும் அவை நிறைஅவை யாம்.
இவ்விரண்டு அவைகட்கும் மறுதலையாகக் குறையவையும் தீயவையும் முறையே குறைந்த கல்வியும் நிறைந்த அழுக்காறும் உடையோர் குழீஇய அவை என்பது பெறப்படும். (இ. வி. பாட். 176)
நல்லாதனார் யாத்த பண்டைய யாப்பு நூல். இதன் செய்தி வரையறை பற்றிய சூத்திரம் இரண்டு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. (யா. வி. பக். 215)
பழைய யாப்பு நூல்களுள் ஒன்று. இதன் நூற்பா ஒன்று இனமாக வரும் அனுஎழுத்துக்களுக்கும், மற்றொன்று செய்தி வரையறைக்கும், ஏனையதொன்று சீர் அமைப்புக்கும் மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இந்நூல் நல்லாறனாரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக். 206, 372, 454)
இஃது இடைச்சொல் உரிச்சொல் என்னும் இவைபற்றியும் விளக்கி வரையப்பட்ட சொல்லிலக்கண நூல் என்பது அறியப்படுகிறது. (யா. வி. பக். 579)
மாத்திரை முதலாகிய இருபத்தாறு உறுப்புக்களும் குறை யாமல் செய்யப்படுவன நல்லிசைப்புலவர் செய்யுள் என்பது. பாட்டு நூல் உரை முதலாகிய எழுநிலத்து எழுந்த செய்யு ளுள்ளும் அடி வரையறையுடைய பாட்டுக்கே இக்கூறிய இருபத்தாறு உறுப்புமுள என்பதனையும், ஏனைய நூல் உரை முதலிய செய்யுளுக்குத் திணை கைகோள் முதலாகக் கூறும் உறுப்புக்களெல்லாம் உறுப்பாகா என்பதனையும், அவை ஒழிந்த உறுப்பில் ஏற்பன பெறுமாயினும் வரையறையுடை யன அல்ல என்பதனையும், அவை செய்தார் நல்லிசைப் புலவர் எனக் கொள்ளத்தகார் என்பதனையும், இவ்விலக் கணத்தில் பிறழ்ந்தும் குன்றியும் வருவன எல்லாம் வழு என்பதனையும், ‘நல்லிசைப்புலவர் செய்யுள்’ என்ற தொடர் புலப்படுத்துவது. (தொ. பொ. 313 பேரா)
மணமக்களை ஊசலில் அமர்த்திப் பாடும் ஒருவகை இசைப் பாட்டு; நடை பற்றிக் கருதாது இசையையே சிறப்பாகக் கொண்டமைவது. (L)
நாமதாரணை, அக்கரத்தாரணை, செய்யுட்டாரணை, சதுரங் கத் தாரணை, சித்திரத்தாரணை, வயிரத்தாரணை, வாயுத்தா ரணை, நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணை, வத்துத்தாரணை யென்னும் ஒன்பது அவதான வகைகள். (யா. வி. பக். 555).
கட்டளைக் கலித்துறையால் இயன்றமையின் ‘கலித்துறைப் பாட்டியல்’ எனவும்படும். இந்நூலினை நவநீத நடன் என்ற வைணவப் புலவர் இயற்றினார். காலம் 14 ஆம் நுற்றாண்டின் முற்பகுதி. இதன்கண் பொருத்த இயல், செய்யுள்மொழி இயல், பொதுமொழி இயல் என்ற மூன்று பாகுபாடுகளும், அவற்றுள் 108 காரிகைச் சூத்திரங்களும் உள. மிகையாகச் சில காரிகைகளும் காணப்படுகின்றன. பிற பாட்டியல்கள் உணர்த்தாத செய்திகள் சில இதன்கண் இறுதியியலுள் காணப்படும்.
வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமும் ஒன்பது உற அந்தாதியாகப் பாடப்படும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 77)
செய்யுளின் தொடக்கத்தில் வருமாறு அமைத்தற்குரிய சுவர்க்கம், மதி, நிலன், நீர் என்ற நான்கு கணமும் நற்கணமாம். இவற்றுக்குரிய வாய்பாடுகள் முறையே தேமா, தேமாங்காய்; புளிமா, புளிமாங்காய்; கருவிளம் கருவிளங்கனி; கூவிளம் கூவிளங்கனி என்பனவாம்.
இவற்றுக்குரிய தெய்வங்கள் முறையே பிரமன், திருமகள், சுரபி, கருடன் என்ப. (இவி.பாட்.42) சுவர்க்க கணத்தை இயமான கணம் என்னும் பிங்கலந்தை (1333).
ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்று சொல்லப்படும் நால் வகைக் கவியும் ‘நற்கவி’ எனப்படும். கவிப்புலவன் இந்நற் கவி பாடும் இயல்பினனாயிருத்தல் வேண்டும் என்பது, அவனுக்குச் சொல்லிய இலக்கணத்துள் ஒன்று. (இ. வி. பாட். 178)
யாப்பிலக்கணம் பற்றிய பல நூல்கள் பெயர் தொல்காப்பியம் செய்யுளியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீர சோழியம் முதலியவற்றின் உரையில் உரிய சூத்திரங்களொடு காணப்படுகின்றன. இவற்றுள் மிகுதியும் காணப்படுவன யாப்பருங்கல விருத்தியுரைக்கண்ணேயே. இவ்வியாப்பு நூல்களிடை நத்தத்தம் எனவும் வழங்கப்படும் நற்றத்தமும் ஒன்று.இந்நூலிற் காணப்படும் (கிடைத்துள்ள) நூற்பாக்கள் 24. அவற்றான்,
யாப்பு என்பது தூக்கு-தொடை-அடி- இம் மூன்றனையும் நோக்கி நிற்குமாறும், நேரசை நிரையசை ஆமாறும், அசை ஒரோவழிச் சீராக நிற்குமாறும், நேரடியாவது யாதென்ப தும், அவ்வடி பெறும் பாக்களாவன இவை என்பதும், முரண்-இயைபு-அளபெடை-இரட்டைத் தொடைகள் ஆமாறும், செந்தொடை ஆமாறும், பல தொடைகளையுடைய செய்யுட் குத் தொடையால் பெயரிடுமாறும், பாக்கள் தம்முள் மயங்குமாறும், பாக்களின் அடிவரையறையும், மோனை எதுகை ஆமாறும்,அவ்விருதொடைக்கும் கிளை யெழுத் துக்கள் உரியவாமாறும், கூன் நிகழுமாறும், வகையுளி ஆமாறும், அடிவரை யில்லன இவை என்பதும் குறிக்கப் பெற்றுள. (இ. வி. செய்யுளியல் பிற்சேர்க்கை பக். 430-432)
தலைவியை ஈன்ற தாய்.
தலைவனது இயற்பெயரின் முதல் மூன்று எழுத்துக்களும் பிரபந்த முதலில் வரப் பாடுதலாகிய நன்மைவிளைக்கும் செய்யுள்தானம்.
இனி, இலக்கண விளக்கம் (பாட்.23) சொல்லுவது வருமாறு:
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து அஆ வருக்கத்தினதா யின், அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஒள என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து இ ஈ ஐ வருக்கத்தினதா யின், இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து உ ஊ ஒள வருக்கத்தின தாயின், உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து எ ஏ வருக்கத்தினதா யின், எ ஏ, ஒ ஓ, அ ஆ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.
தலைவன் இயற்பெயர் முதலெழுத்து ஒ ஓ வருக்கத்தினதா யின், ஒ ஓ, அ ஆ, இ ஈ ஐ என்பனவற்றுள் ஒன்று முதலாகிய முதற்சீரே ஏற்றது.
அ ஆ இயற்பெயர் முதலெழுத்தாயின், அ ஆ - பாலப் பொருத்தம்; இ ஈ ஐ - குமாரப் பொருத்தம்; உ ஊ ஒள - இராசப் பொருத்தம். (எ ஏ - விருத்தப் பொருத்தம்; ஒ ஓ மரணப் பொருத்தம்.)
பிற இ ஈ ஐ, உ ஊ ஒள, எ ஏ, ஒ ஓ என்பனவற்றையும் இவ்வாறே இயைத்துக் காண்க.
பாலப்பொருத்தம் முதலிய மூன்றையும் முறையே நட்பு அரண் எதி என்று பெயரிட்டார் மாமூலனார். (இம்மூன்றும் நற்குணம் எனப்படும்) (பிங். 1347)
கால வகை ஆறனுள் ஒன்று. அவையாவன நன்னற் காலம், நற்காலம், தீநற்காலம், தீக்காலம், நற்றீக்காலம், தீத்தீக்காலம் என்பன.
குறிப்பிட்ட நேரத்தின் முற்பகுதி நன்றாகவும் பிற்பகுதி தீதாகவும் அமையும் காலம் நற்றீக்காலமாம். (யா. வி. பக். 573)
தொல்காப்பியத்திற்குப் பின்னர் இயற்றப்பெற்ற இலக்கண நூல்களுள் நன்னூற்கு இணை வேறு எந்நூலும் இல்லை என்பது பெரியோர் பலர்தம் துணிபு. இதன் சூத்திரம் நூற்பா ஆகிய அகவலால் யாக்கப்பெற்றது. சிறப்புப்பாயிரம் பொதுப் பாயிரம் இவற்றோடு, எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என் னும் இரண்டதிகாரங்களையுடைய இந்நூலின் நூற்பாக்கள் எண் 462. தொல்காப்பியத்திற்கு இது வழிநூல்; தொல்காப் பியத்தின் முந்து நூலாம் அகத்தியத்திற்குச் சார்பு நூல். இந் நூலாசிரியர் சமண முனிவராகிய பவணந்தி என்பார். இவர் மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178-1216) காலத்துச் சிற்றரசனாகிய சீயகங்கன் வேண்டுகோட்கு இணங்க இந் நூலை இயற்றினர் ஆதலின், இந்நூல் தோன்றிய காலமும் அக்கால அளவிலேயாம்; உரையாசிரியராம் இளம்பூரணர் காலத்துக்குப் பிற்பட்டது; நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது.
சூத்திரங்களின் திட்ப நுட்பமும் கிடக்கை முறையும் இயற் பாகுபாடும் இந்நூலது பெருமையைப் புலப்படுத்துவன. தொல்காப்பியனார் விரிவாகக் கூறிய குற்றியலுகரப் புணரி யற் செய்தியை இவர் தொகுத்து உயிரீற்றுப் புணரியலுள் கூறினார்; அவர் இரண்டு சூத்திரங்களால் தொகுத்துக் கூறிய வடமொழி ஆக்கத்தை இவர் பதவியல் இறுதியில் விரித்துக் கூறினார். பழையன கழித்துப் புதியன புகுத்திப் படைக்கப் பட்ட இந்நூல், தொல்காப்பியர் காலத்தினின்று இவர் காலம் வரை மொழித் துறையில் நேர்ந்துள்ள மாறுதல் களைப் புலப்படுத்த வல்லது.
இந்நூற்கு மயிலைநாதர் என்ற சமணப்புலவரது காண்டிகை யுரை பழமையானது; அடுத்து ஆறுமுக நாவலர், இராமா நுசக் கவிராயர் முதலாகப் பலரும் காண்டிகையுரைத்தனர். சங்கர நமச்சிவாயர் இந்நூற்கு விருத்தியுரை வரைந்தார். அதனைச் சற்றே புதுக்கினார் மாதவச் சிவஞான முனிவர்.
இடைக்காலத் தமிழிலக்கிய வளர்ச்சியை மனம்கொண்டு பவணந்தி இயற்றிய இந்நூல் காலத்திற்கு ஏற்ப வேண்டப் பட்ட தமிழிலக்கணம். இவ்வாசிரியர் ஏனைய பொருள் யாப்பு அணி அதிகாரங்களும் இயற்றியிருக்கக் கூடும்; அவை கால வெள்ளத்தில் அழிந்தன என்பது ஒருசாரார் கருத்து. ‘அரும்பொருள் ஐந்தையும் தருகென’ என்பது சிறப்புப் பாயிரம்.
நாள்தோறும் அரசனைப் புகழ்ந்து பாடும் பாடல். ‘நாமே நாட்கவி பாடுநாட் போல’ (ஈட்டியெழுபது - 2) (L)
பாட்டுடைத்தலைவன் பெயரின் முதலெழுத்திற்கு உரிய நாள் தொடங்கி வருகின்ற இருபத்தேழு நாளினையும் ஒன்பது ஒன்பதாகப் பகுத்துச் சென்மம்-அநுசென்மம்-உபசென்மம்-என்று கூறப்பட்ட முப்பகுதியின்கண்ணும் ஒன்று மூன்று ஐந்து ஏழ் என்னும் எண்ணின் வந்த நாள்கள் பொருத்தம் உடைய அல்ல எனக்கொண்டு, இரண்டு நான்கு ஆறு எட்டு என்னும் எண்ணின் வந்த நாள்களைப் பொருத்தம் உடையன வாக முதற்சீரை எடுத்துச் சொல்லுவர். ‘பிற நூல் முடிந்தது தான் உடன்படுதல்’ என்னும் நியாயநூல் வழக்கால், இறை வன் பெயர் நாளுக்கு மூன்றாம் பரியாயத்தில் (உபசென்மம்) நின்ற மூன்று ஐந்து ஏழ் என்பன பொருத்தம் உடையன என்று கோடலும், சென்ம நாள் தொடங்கி முன் கூறியவாறு பொருத்தம் கோடலும் கொள்ளப் படும்.
இது நாட்பொருத்தம் கொள்ளும் வகை.
மொழி முதலாகும் எழுத்துக்களுக்கு நாட்பொருத்தம் ஆமாறு :
அ ஆ இ ஈ - கார்த்திகை; உ ஊ எ ஏ ஐ - பூராடம்; ஒ ஓ ஒள - உத்தராடம்; க கா கி கீ - திருவோணம்; கு கூ - திருவாதிரை; கெ கே கை - புனர்பூசம்; கொ கோ கௌ - பூசம்; ச சா சி சீ - ரேவதி; சு சூ செ சே சை - அசுவனி; சொ சோ சௌ - பரணி; ஞா ஞி ஞெ ஞொ - அவிட்டம்; த தா - சுவாதி; தி தீ து தூ தெ தே தை - விசாகம்; தொ தோ தௌ - சதயம்; ந நா நி நீ நு நூ - அனுடம்; நெ நே நை - கேட்டை; நொ நோ நௌ - பூரட்டாதி; ப பா பி பீ - உத்தரம்; பு பூ - அத்தம்; பெ பே பை பொ போ பௌ - சித்திரை; ம மா மி மீ மு மூ - மகம்; மெ மே மை - ஆயில்யம்; மொ மோ மௌ - பூரம்; யா - உத்தரட் டாதி; யூ யோ - மூலம்; வ வா வி வீ - உரோகிணி; வெ வே வை வெள - மிருக சீரிடம்; இவ்வாறு மொழிமுதலாகும் எழுத்துக்குரிய நாட்பொருத்தம் சொல்லப்பட்டுள்ளது. (இ.வி. பாட் 25-36) செய்யுள் முதல்மொழிக்குரிய பொருத்தம் பத்தனுள் எட்டாவது நாட்பொருத்தம் ஆம்.
அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் ஆண்மகனைப் புகழ்ந்து பாடும் பிரபந்தவகை. (இ.வி.பாட். 106)
அவையாவன இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாய அறநூலும், இம்மை மறுமை என்னும் இரண்ட னையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மையே பயப்பதா கிய இன்ப நூலும், அம்மூவகை நூலின் சொல்லையும் பொருளையும் உள்ளவாறு அளந்து காட்டும் கருவிநூலும் என்பன. (பா. வி. பக். 62, 63)
இஃது அவிநயர் யாப்பிற்கு அங்கமாய் அமைந்த நூலாகும். இதன் நூற்பாக்களில் நான்கு வெண்பாக்களும், ஒரு கட்டளைக் கலித்துறையும் மேற்கோள்களாகக் கிடைத்துள் ளன. அதனால், இவ்விருவகை யாப்பாலும் இந்நூல் அமைந்தமை தெரிகிறது. இது நாற்பது நூற்பாக்களைக் கொண்டிருந்தது போலும். கட்டளைக் கலித்துறை இந் நூலைச் சேர்ந்தது அன்று என்பாரும் உளர். இந்நூலின் மேற்கோள் நூற்பாக்கள் அசைக்கு உறுப்பாவன பற்றியும் அடிமயக்கம் பற்றியும் குறிப்பிடும். (யா. வி. பக்.30,31, 129)
நேரிசைவெண்பா, நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, கலிவெண்பா, தரவு கொச்சகம், ஆசிரியத்துறை, அறுசீர் எழுசீர் எண்சீர் ஆசிரிய விருத்தங்கள், கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம்; வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம், இரண்டாம் நான்காம் அடிகள் ஏனைய முதலாம் மூன்றாம் அடிகளைவிடச் சீர்கள் குறைந்து வரும் சவலை விருத்தம் - ஆகிய பாவும் பாவினமும் ஆம். (இலக்கணத். முன்னுரை பக். 77)
அரசரும் கடவுளரும் நாழிகைதோறும் செய்யும் செயல்களை முப்பது நேரிசை வெண்பாவாற் பாடும் பிரபந்தவகை. (பன். பாட். 292, 293 )
தேவரிடத்தும் அரசரிடத்தும் நிகழும் காரியம் நாழிகை அளவில் தோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு வெண்பாக் கூறும் பிரபந்த வகை. (இ. வி. பாட்.90)
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்ற நால்வகைக் கவி. (திவா. பக். 286) (வெண்பாப். 24)
ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள். (வெண்பாப். 25-28)
பட்டினத்தடிகள் கழுமரம் எரியப்பாடியது போன்ற கவியினம் ஆசுகவியாம். பாண்டியன் குலசேகரன் பாடிய அம்பிகைமாலை போல்வன மதுரகவியாம். கொங்கு மன்னன் கொடுத்த கொடுவாள் அருணையூர்ப் புரவலனது அரண்மனையைச் சேருமாறு பாடிய நூல் முதலாயின சித்திரகவியாம். ஓராயிரம் முதலாக நூறாயிரம் வரை செய்யுள் தொகைபெறும் வகையால் பலவகைப் பொருள் களையும் பாடும் பனுவல்எல்லாம் வித்தார கவியாம்; அகவல் பஃறொடைவெண்பா இவற்றால் 32, 64 எனப்படும் கலை களை வகுத்துரைக்கும் விரிவான செய்திகளைக் கொண்ட பல பாடல்கள் கொண்டவையும் வித்தாரகவி ஆகும் தன்மைய. (அறுவகை. நாற்கவி இயல்பு 1-4)
நாற்கவிராச நம்பி -
அகப்பொருள் விளக்கம் இயற்றிய சைன ஆசிரியர். அவரது பெயரொடு நூல் நம்பி அகப்பொருள் என்று வழங்கும்.
நாற்பயன் -
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் என்பன. (யா. வி. பக். 426; நன்; 10)
நான்மணிக்கோவை -
பத்து வெண்பா, பத்து அகவல், பத்துக்கலிப்பா, பத்து வஞ்சிப்பா இந்நாற்பதனையும் வெண்பா அகவல் கலி வஞ்சி என்ற முறையால் அந்தாதியாகத் தொடுத்து மண்டலித்து வரப்பாடும் பிரபந்தம். (சாமி. 169)
வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் ஆசிரிய விருத்தமும் அகவலும் என இந் நால்வகை யாப்புச் செய்யுளும் அந்தாதி யால் நாற்பது வருமாறு, முதலும் இறுதியும் மண்டலித்து வரப் பாடும் பிரபந்தம். இந்நால்வகையுள் விருத்தம் அகவல் என்பன இடம் மாறியும் வரலாம். (இ.வி.பாட். 61, மு.வீ.யா.ஒ. 91, பி.தீ. 11)
நானாற்பது -
காலமும் இடமும் பொருளும் பற்றி நாற்பது வெண்பா பொருந்த உரைப்பதாகிய பிரபந்த விசேடம். இன்னாமையும் இனிமையும் எனப் பொருள் இரண்டு என்பது. காலம் பற்றி வருவது கார் நாற்பது; இடம்பற்றி வருவது களவழி நாற்பது; பொருள்பற்றி வருவன இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்பன. (இ.வி.பாட். 91)
நிகண்டு -
1. ஒருபொருட் பலசொல் தொகுதியையும், பலபொருள் ஒரு சொல் தொகுதியையும் பாவில் அமைத்துக் கூறும் நூல். நிகண்டு - கூட்டம்;
2. வைதிகச் சொற்களின் ஒரு பொருட் பல சொல் தொகுதியை யும், பலபொருள் ஒருசொல் தொகுதியையும் உணர்த்தும் நூல்;
3. அகராதி; 4. படலம்.
தமிழில் தோன்றிய நிகண்டு நூல்கள் பலவாம். அவற்றுள் சில பின் வருமாறு:
திவாகரர் இயற்றிய திவாகரம் தோன்றிய காலம் 8ஆம் நூற்றாண்டு என்ப.
பிங்கலர் இயற்றிய பிங்கலந்தை தோன்றிய காலம் 9ஆம் நூற்றாண்டு.
காங்கேயர் இயற்றிய உரிச்சொல் நிகண்டு தோன்றியகாலம் 11ஆம் நூற்றாண்டு என்ப.
இரேவண சித்தர் இயற்றிய அகராதி நிகண்டு தோன்றிய காலம் 16ஆம் நூண்றாண்டு என்ப.
மண்டல புருடர் இயற்றிய சூடாமணிநிகண்டு தோன்றிய காலம் 16ஆம் நூற்றாண்டு என்ப.
ஈசுர பாரதியார் இயற்றிய வடமலைநிகண்டு தோன்றிய காலம் 17ஆம் நூற்றாண்டு என்ப.
வீரமாமுனிவர் இயற்றிய சதுர அகராதி தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டு என்ப.
அருமந்தைய தேசிகர் இயற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டு தோன்றிய காலம் 18ஆம் நாற்றாண்டு.
ஆண்டிப்புலவர் இயற்றிய ஆசிரிய நிகண்டு தோன்றிய காலம் 18ஆம் நூற்றாண்டு என்ப.
கயாதரர் இயற்றிய கயாதர நிகண்டு தோன்றிய காலம் 18 ஆம் நூற்றாண்டு என்ப.
திருவேங்கட பாரதி இயற்றிய பாரதி தீபம் தோன்றிய காலம் 18ஆம் நூற்றாண்டு என்ப.
அண்ணாசாமி பிள்ளை இயற்றிய ஒருசொல் பலபொருள் விளக்கம் தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு என்ப.
சுப்பிரமணிய தீக்ஷிதர் இயற்றிய கந்தசுவாமியம் தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு என்ப.
வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றிய சிந்தாமணி நிகண்டு தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.
வேதகிரி முதலியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.
வேதகிரியார் இயற்றிய மற்றொன்று தொகைப்பெயர் விளக்கம் 19ஆம் நூற்றாண்டு என்ப.
முத்துசாமிபிள்ளை இயற்றிய நானார்த்த தீபிகை தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.
அருணாசல கவிராயர் இயற்றிய விரிவு நிகண்டு தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.
அரசஞ் சண்முகனார் இயற்றிய அந்தாதித்தொகை நிகண்டும், நவமணிக் காரிகை நிகண்டும் தோன்றிய காலம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி.
சிவசுப்பிரமணிய கவிராயர் இயற்றிய நாமதீப நிகண்டு தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு.
கைலாசம் என்பார் இயற்றிய கைலாச நிகண்டு சூடாமணி தோன்றிய காலம் 19ஆம் நூற்றாண்டு; ஏகபாத நிகண்டும் அக்காலத்ததே.
இனி, இராம சுப்பிரமணிய நாவலர் இயற்றிய தமிழ் உரிச் சொல் பனுவல் அந்நூற்றாண்டில் தோன்றியது.
நியாய சூடாமணி -
ஒரு தருக்க நூல். (வீ. சோ. 181 உரை இறுதிப்பகுதி)
நிலக்கணம் -
பூமிகணம்; மூன்றும் நிரையசையாக வரும் மூவசைச்சீர் செய்யுள் தொடக்கத்தில் முதற்சீராக அமைவது பொருத்த முடையதொரு செய்யுட்கணம். இது பூகணம் எனப்படும். ‘நிலக்கணம் தானே மலர்த்திரு விளங்கும்’ என்றார் மாமூலர். நீர்க்கணம், இந்திர கணம், சந்திரகணம், நிலக்கணம் என்பன நான்கும் நன்மை செய்யும் பொருந்திய கணங்களாம். (இ. வி. பாட். 40 உரை)
நிருத்தம் -
நிருக்தம்; இடையாய ஓத்து எனப்பட்ட ஆறங்கங்களுள் ஒன்று; உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் அங்கம். (ஏனையன வியாகரணமும், கற்பமும், கணிதமும், பிரமமும், சந்தமும் ஆம்.) (தொ. பொ. 75 நச்.)
யாஸ்கர் என்பவரால் இஃது இயற்றப்பட்டது.
நிலத்து நூல் -
அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நூல்களின் சார்பாக அமைந்த நூல்களில் ஒன்றாகிய இதன்கண் உள்ள மறைப் பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரப்படும். (யா. வி. பக். 491)
எல்லாப் பொருளையும் அறிந்து மனம்கொண்டு வாதுபோர் புரிவோர், கருதி விடுப்போர்தம் எதிர்வருமொழிகளை ஏற்றவாறு ஆன்றோர் உளம் ஏற்கும் வண்ணம், எடுத்துரைக் கும் வல்லவர்கள் குழுமிய அவை.
‘ நல்லவை நிறையவை’ காண்க. (யா. வி. பக். 554)
ஒன்பதாம் நூற்றாண்டில் தர்மகீர்த்தி என்பவர் இயற்றிய வடமொழி இலக்கண நூலாம் உரூபாவதாரத்திற்கு அமைந் துள்ள முதல்நினைப்புச் சூத்திரம் இது. (யா. கா. 1 உரை)
செய்யுள் முதற்கண் மங்கலமாக அமைக்கத் தகும் கூவிளங் கனிச்சீர். இதற்குரிய நாள் சதயம். “இதன் பயன் பாட்டுடைத் தலைவன் சீர் சிறப்பு எய்துதல்” என்றார் மாமூலர். இக்கணம் நிலைபேற்றினைத் தருவது என்று இந்திரகாளியர் பலன் கூறினார். (இ. வி. பாட். 40)
பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள் ஒன்று; பாட்டுடைத் தலைவியாம் சிறுமி தோழியர் புடைசூழக் குதூகலம் கொண்டு வாசனை கமழும் நறுநீரில் திளைத்துக் குளித்தலைப் பாடுவது. இதற்கு ஒப்பாக, கழற்சிக்காய் ஆடும் கழங்குப் பருவத்தைக் கொள்வாரும் உளர். சந்த விருத்தமாகப் பத்துப்பாடல் இடம்பெறும் (இ. வி. பாட். 47).
ஐஞ்சிறு காப்பியம் எனப்படுவனவற்றுள் ஒன்று; நீலகேசி என்பாளைப் பற்றி எழுந்தமையால் இப்பெயர்த்தாயிற்று இதன் முதற்பாடல் வண்ணத்தான் நேரசை முதலாக வந்து அடிதோறும் 14 எழுத்துக்களையுடைய நான்கடிப் பாடல் ஆயிற்று. (யா. வி. பக். 39, 521).
16ஆம் நூற்றாண்டுப் புலவரான காரிரத்தின கவிராயர் என்பார், தொல்காப்பியப் பொருளதிகாரம் நச்சினார்க்கினி யர் உரை, திருக்குறள் பரிமேலழகர் உரை என்னும் இரண்டற் கும் நுண்பொருள் வரைந்த பனுவல். இதுபோது திருக்குறள் பரி மேலழகருரைக்கு விளக்கமாக அவர்வரைந்துள்ள நுண்பொருள் மாலையே கிட்டியுள்ளது.
பரிமேலழகரது உரை நுட்பத்தினையும் திருக்குறள் சொல் லாட்சி மாண்பினையும் ஒரு சேர அதன்கண் காணலாம்.
நூற்றந்தாதி -
வெண்பா நூறு அல்லது கலித்துறை நூறு அந்தாதித் தொடை யமைய மண்டலித்துப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 82)
முதல் திருவந்தாதி முதலியன வெண்பாவான் இயன்றன. இராமாநுச நூற்றந்தாதி போல்வன கட்டளைக் கலித்துறை யான் இயன்றன.
நெஞ்சுவிடு தூது -
1. தலைவி தன் மனத்தைக் காதலன்பால் தூது விடுவதாக அதனை விளித்துப் பாடும் பிரபந்த வகை. இறைவனை நாயகனாகக் கொண்டு தம்மைத் தலைவி நிலையில் பாவித்துக் கவிஞர் இப்பிரபந்தம் பாடுவது இயல்பு.
2. மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்று; உமாபதி சிவம் இயற்றியது. காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. (L)
நொண்டிச்சிந்து -
நொண்டி நாடகம், கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றனைக் களவாட முயல்கையில் கால் வெட்டப்பட்டுப் பின்னர் நற்கதி பெற்ற வரலாற்றைச் சிந்துச்செய்யுளால் புனைந்து பாடும் நாடக நூல். சிந்து என்பது ஒருவகை இசைப்பா. (L)
நொண்டி நாடகம் -
‘நொண்டிச் சிந்து’ காண்க; எடுத்துக்காட்டு : சீதக்காதி நொண்டி நாடகம். (L).
நொச்சிமாலை -
வீரர் எயில் காத்தலைச் சிறப்பித்துக் கூறும் பிரபந்த வகை. (யாழ். அக.) (L)
ப
செய்யுட் பொருத்தத்தில் பொருத்தமற்ற நாள்கள்; அவை யாவன; பாட்டுடைத் தலைவனது பெயர்க்குரிய நாள் தொடங்கி எட்டாவது இராசிக்கண் உற்ற இரண்டேகால் நாளும், எண்பத் தெட்டாம் கால் பொருந்திய வைநாசிக நாளும் முதலாயின. தலைவனது பெயர்க்கு முதற்சீர் எடுத்துக் கூறற்கு இவை பொருத்தமற்றனவாம். (இ. வி. பாட். 36, 37)
‘நாள் பொருத்தம்’ காண்க.
ஒரு பொருளைப் பற்றிப் பாடும் ஐந்து பாடல்களின் தொகுதி. (L)
இது பெரும்பாலும் தெய்வங்களைப் பற்றிப் பாடிய பாடல் தொகுதியாக இருக்கும். சிறுபான்மை மக்களுள் மேம் பட்டாரைப் பற்றியும் இது பாடப்பெறும். ஐந்து பாடல் களும் வெவ்வேறு பாவும் பாவினமுமாக வரும்.
எ-டு : காந்தி பஞ்சகம்.
இசைத்தமிழ் இலக்கணநூல்; தேவஇருடி நாரதனால் செய்யப்பட்டது. இது போன்ற தொன்னூல்கள் இறந்தன. (சிலப். அடியார்க். உரைப்பாயிரம்)
நாடக இலக்கணநூல்; அறிவனாரால் இயற்றப்பட்டது. தமது உரைக்கு உதவிய நாடக இலக்கணநூல் ஐந்தனுள் இதனை யும் ஒன்றாகக் குறிப்பிடுவர் அடியார்க்கு நல்லார். (சிலப். உரைப் பாயிரம்) இந்நூல் அண்மைக் காலத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ளது.
ஐந்து செய்யுள் கொண்ட பிரபந்தம் (L) இசைப்பாடல்கள் ஐந்து வெவ்வேறு இராகத்தில் அமைந்தவற்றது தொகுதியும் இப்பெயர் பெறும். தியாகய்யரது ‘பஞ்சரத்ன கீர்த்தனம்” எனப்படுமாறு காண்க.
பத்துப்பாட்டுள் ஒன்பதாவதாகிய இது வஞ்சி நெடும் பாட்டு எனப் பெயர் பெறும். இதனுள் ஆசிரிய அடியொடு, கலியடியும் இயற்சீர் வெள்ளடியும் மயங்கி வந்தன. (யா. வி. பக். 127)
இவ்வஞ்சி நெடும்பாட்டு ஆசிரியஅடி விரவிவந்த ஏந்திசைத் தூங்கல் விரவியல் குறளடி வஞ்சிப்பா. (யா. வி. பக். 357)
திருமூலர் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாம்.
இதன்கண் பாடல்கள் நாற்சீரடி நான்கால் நிகழ்வன. பெரும்- பாலும் வெண்டளையே பயிலும் கொச்சகக் கலி யாப்பின இவை. தளைகள் விரவி வரும் கலிவிருத்தப் பாடல்களும் சில வாக உள. நாலாம் தந்திரத்துப் பகுதி பதின்மூன்றும் அந்தா தித் தொடையால் நிகழ்வன. (இலக்கணத். முன். பக். 88, 89)
ஆரிடப் போலியாக அமைந்த ‘கண்டகம் பற்றி’ என்று தொடங்கும் வெண்பா இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள் பெற்று வெண்பா யாப்பில் சிறிது திரிந்து பத்தினிச் செய்யுள் என்ற குறிப்பொடு காணப்படுகிறது. (யா. வி. பக். 370)
ஆடைநூல் போல்வது. அது காண்க. (யா. வி. பக். 491)
1. தெய்வத்தைப் பற்றிப் பெரும்பான்மையும் பத்துச் செய்யு ளாற் பாடப்படும் பிரபந்தம். தேவாரம் திவ்விய பிரபந்தங் களுள் காண்க.
2. பாயிரம் (நன். 1 ) (L)
பத்து வெண்பா அல்லது பத்துக் கலித்துறை இவற்றால் அந்தாதித் தொடையாக மண்டலித்துப் பாடப்படும் பிரபந்தம். (இவ்விரண்டு யாப்பினாலும் அடுத்தடுத்து இருபது பாடலாக அந்தாதித்துப் பாடுவதே இரட்டைமணிமாலையாம் என்க.) இவை வெண்பாப் பதிற்றந்தாதி, கலித்துறைப் பதிற்றந்தாதி எனப் பெயர் பெறும். (இ. வி. பாட். 81)
பெரும்பான்மையும் பத்துப் பாடற்கு ஒருவகைச் சந்தமாகப் பத்து வேறுபட்ட சந்தங்களால் நூறு செய்யுள் அந்தாதித் தொடையாக மண்டலித்துப் பாடும் பிரபந்தம். சந்த விருத்தம்
எ-டு : மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி. (L)
பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியத்துள், ஒவ்வொரு பத்துப்பாட்டும் ஒரு மன்னன்மேல் பாடப்பட்டவற்றின் இறுதியில், அப்பத்துப்பாடல்களின் கருத்தையுட் கொண்டு பாடப்பட்ட பாடல்; கிடைத்துள்ள (முதலும் இறுதியும் நீங்கலான) எட்டுப் பத்துப்பாடல்கட்கும் எட்டுப் பதிகங்கள் காணப்படுகின்றன. பதிகத்தின் இறுதியில் உரைநடையால் புலவர் பாடிப் பெற்ற பரிசில்கள் உரையாசிரியரால் குறிக்கப் பட்டுள. பத்துப்பாடல்கட்கும் அமைந்த சிறப்புப் பெயர் களும் வரையப்பெற்றுள. இப்பதிகம் நூலாசிரியரால் பாடப் பட்டன அல்ல எனவும் உரையாசிரியர்தாமே பாடின என்றும் கூறுவர்.
சிலப்பதிகாரம் அரும்பதவுரையாசிரியரால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டதோர் இசைத்தமிழ் நூல் (சிலப். 7 : 12 - 16). வார்தல் முதலாகப் பட்டடை ஈறாகக் கிடந்த எட்டு வகை இசைக் கரணங்களின் இலக்கணத்தைப் பதினாறு படலத்துள் கரணவோத்திற் காணுமாறு குறிப்புரை பணிக்கிறது.
ஆசிரியர் பன்னிருவரால் பாடப்பெற்ற நாற்பது பிரபந்தங் களது தொகுப்புப் பதினோராம் திருமுறை. திருவாலவா யுடையார் அருளிய திருமுகப்பாசுரம் நேரிசை ஆசிரியப் பாவாம். நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையும் அது. இரட்டைமணிமாலை நான்கும் மும்மணிக்கோவை மூன்றும், கோயில் நான்மணிமாலை ஒன்றும் என்னுமிவை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பால் இயன்றன. எழு கூற்றிருக்கை ஆசிரியப் பாவாம். உலா ஒன்றும் கலிவெண்பா யாப்பிற்று. கலம்பகம் ஒன்றும் பலவகைப் பாவும் பாவினமும் விரவ இயன்றது. காரைக்காலம்மையார் அருளிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் ஆசிரியவிருத்த யாப்பின; பண்ணோடு பாடப்படும் நடையின. அவர் அருளிய அற்புதத் திருவந்தாதி 101 வெண்பாக்களால் மண்டலித்தமைய இயன்றது. ஐயடிகள் காடவர் கோன் அருளிய க்ஷேத்திரக் கோவை தற்போது 24 வெண்பாக்களாகவே எஞ்சியுள்ளது. சேரமான்பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதிக் கட்டளைக் கலித்துறை நூறு கொண்டு அமைந்தது. நக்கீரர் அருளிய வற்றுள் கைலை பாதி காளத்திபாதி அந்தாதி 100 வெண்பாக் களால் அமைந்தது; திரு ஈங்கோய் எழுபது, எழுபது வெண் பாக்களால் இயன்றது; பெருந்தேவபாணி 67 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கோபப் பிரசாதம் 91 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா; கார் எட்டு எட்டு வெண்பாக்களான் இயன்றது; திருக்கண்ணப்ப தேவர் திருமறம் 157 அடிகளான் இயன்ற ஆசிரியப்பா. இனிக் கல்லாட தேவ நாயனார் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடினார்; 38 அடிகளால் அமைந்த ஆசிரியப்பா அது. கபிலதேவ நாயனார் இயற்றிய சிவபெருமான் திருவந்தாதி ‘ஒன்று, முதலாகத் தொடங்கி ‘ஒன்று’ என முடியும் 100 வெண்பாக்களால் இயன்றது. பரணதேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதி யும் 100 வெண்பாக்களால் ஆயது. பட்டினத்துப் பிள்ளை யார் அருளிய திரு ஏகம்ப முடையார் திருவந்தாதி கட்டளைக் கலித்துறை நூறு கொண்டு அமைந்தது; திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது பத்து ஆசிரியப்பாவால் அந்தாதித் தொடை பெற அமைந்தது. நம்பியாண்டார் நம்பி அருளிய கோயில் திருப்பண்ணியர் விருத்தம் எழுபது கட்டளைக் கலித்துறையான் அந்தாதித்து அமைந்தது; திருத்தொண்டர் திருவந்தாதி 89 கட்டளைக் கலித்துறைப் பாடலால் அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 100 கட்டளைக்கலித்துறையான் இயன்றது; ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 10 கட்டளைக் கலித்துறையான் அமைந்தது; ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை பேதை முதலாகிய ஏழு பருவத்து மகளிரைத் தனியே பிரித்துக் கூறாது, பொதுவாக, மகளிர் காமுறாநிற்கத் திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருஉலாப் போந்த தன்மையைச் சுட்டிக் கலிவெண்பா யாப்பால் இயன்றது (மாலை-தன்மை); ஆளுடைய பிள்ளை யார் திருத்தொகை 65 அடிகளான் இயன்ற கலிவெண்பா; திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதச மாலை 11 ஆசிரிய விருத்தப் பாக்களான் இயன்றது.
பிற பிரபந்தங்கள் தத்தம் பெயராலே யாப்புத் தோன்ற நின்றன. (இலக்கணத். முன். பக். 89-92)
விளையாட்டுப் பருவத்துச் சிறுமியர் பந்தடித்து விளையாடு கையில் பாடும் பாட்டு விசேடம். சிலப்பதிகாரத்துள் ‘கந்துக வரி’ என்ற பெயர் பெற்ற சந்த விருத்தப்பாடல் மூன்றும் பந்தடிப் பாட்டே யாம். (L)
நங்கை நகிலினைப் பத்துப்பாடல் ஆசிரிய விருத்தத்தாலோ கட்டளைக் கலித்துறையாலோ பாடும் பிரபந்தம். (நவ. பாட். 49)
இருடிகள் அல்லாத ஏனையோராய், மனத்தது பாடவும், சாவவும் கெடவும் பாடல் தரவும் வல்ல கபிலர் கல்லாடர் மாமூலர் பெருந்தலைச்சாத்தனார் முதலானாரோடு ஒப்ப எண்ணப்பட்டவர் பரணர். இவரால் இயற்றப்பட்ட பாட்டியல் நூல் ஒன்றிருந்ததாக அறிகிறோம். (யா.வி. பக். 371) (தொ.சொல். 81 நச்.)
போர்முகத்தில் ஆயிரம் யானைகளை அழித்து வென்ற வீரனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிரபந்த வகை. (இ. வி. பாட். 78)
கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை கூறல், காளி கோயில் பாடுதல், பேய்களைப் பாடுதல், காளிக்குக் கூளி கூறல், கூளிக்குக் காளி கூறல், தலைவன் புகழ் பாடுதல், போர் பாடுதல், களவேள்வி என்பன. (இ. வி. பாட். 79)
இந்நூல் நாட்டிய சாத்திரமாகிய பரதத்தின் இலக்கணத்தைத் தொகுத்துச் சுருங்க உரைப்பது. பாயிரத்துள் இதன் பெயர் பரதசார சங்கிரகம் என்று சுட்டப்பெற்றுள்ளது. இந்த நூற்பொருள் முத்தமிழொடும் தொடர்புடையதாக இருக் கிறது. இயற்றமிழ்க் குறிப்புக்களும் இசைத்தமிழ் இலக்கணங் களும் பரதநாட்டியத்தின் இயல்பினை விரித்துரைக்கும் முகத்தால் இடம் பெற்றுள. இந்நூலிற் காணப்படும் சூத்தி ரங்கள் 262. அவற்றின் யாப்புவகைகள் வெண்பா, ஆசிரிய விருத்தம், கலித்துறை, நூற்பா என்பன. வெண்பாக்களே மிகுதியாக உள. இந்நூற்குப் பண்டைய உரையொன்று காணப்படுகிறது. தெளிவான சுருக்கவுரை அது.
இந்நூலாசிரியர் பெயர் அறம்வளர்த்தான் என்பது. காலம் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்ப.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பெரும்புலவர் க. வெள்ளைவாரணனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் 1954ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிப் பில் இந்நூலோடு, அறம் வளர்த்தான் இயற்றிய ஆசிரிய நடையான் அமைந்த (தேவதைரூப அவினயத்தை விளக்கும்) அவினயக் கிரந்தம் என்ற நூலும் இடம் பெற்றுள்ளது.
ஆதிவாயிலார் என்பாரால் இயற்றப்பட்ட நாடகத்தமிழ் நூல். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் தாம் வரைந்த உரைக்கு ஆதாரமாக மேற்கொண்ட நாடகத்தமிழ் நூல் ஐந்தனுள் ஒன்று. (சிலப். உரைச் சிறப்புப்.)
நாடகத்தமிழ் நூலாகிய தொன்னூல்களில் முற்றும் அழிந்து பட்ட ஒன்று. (சிலப். உரைச்சிறப்புப்.)
அத்தியாயம்; நூலினது பெரும்பாகுபாடு; படலம், இலம்பகம், சருக்கம், காண்டம் என்பனவும் அது. (பிங். 2068)
பரிசில் வழங்காதவன்மேல் முன் முறையாகப் பாடியதற்கு மாறுபட வழுக்களால் முன்மொழி எடுத்து இயற்பெயர் தோறும் அழிவுண்டாகுமாறு செய்யுள் பெயர்த்தெழுதி அப்பிரபந்தத்தைச் செந்நூல் சுற்றிச் செம்மலர் சார்த்திக் கவர்தெரு, காளிகோயில், பாழ்மனை, மயானம் முதலிய இடங்கட்கு எடுத்துச் சென்று, அப்பரிசில் வழங்காதானை நினைந்து பழுத்த இரும்பினால் அகம் நொந்து அச் சுவடியைப் புலவன் சுடுவானாயின், அப்பாடப்பட்டான் ஓராண்டில் மாய்வான்; இவ்வாறு ஒன்றும் செய்யாமல் இதயம் நொந்துகொண்டு புலவன் இருக்குமாயினும், அவன் தன் கிளைஞரோடு இறுதியாவான் என்று அகத்தியரது உண்மை நூல் நெறி கூறுகிறது. (பி. ம. 58)
சிதம். பாட். மரபியல் 19 சூத்திரமும் இக்கருத்துக்களையே கூறுகிறது.
புரவலன் குற்றமுடைய பாடல்களைக் கொண்டால் அவன் செல்வம் அகலும்; தீரா நோய் கூடும்; சுற்றமும் புகழும் சூனியமாகும்; காலமிருத்து கடுகி வந்திடும். (பி. ம. 60)
பரிமாணனார் என்பவரால் யாப்புப் பற்றி வரையப்பட்ட இதன் நூற்பாக்களில் ஏழு யாப்பருங்கல விருத்தி முதலிய நூல்களில் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. அந்நூற் பாக்கள் தொடை விகற்பம், இரட்டைத் தொடை, வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா அடி வரையறை என்பன பற்றி அமைந்துள்ளன. (யா. வி. பக். 134, 182).
பரிமாணனார் -
பரிமாணம் (1) காண்க.
பரிமேலழகர் -
திருக்குறட்கு அமைந்த பண்டையுரையாசிரியர்களுள் தலை சிறந்தவர். நுண்மாண் நுழை புலம் காட்டும் இவருரை என்றும் அறிஞருலகத்தே போற்றப்படுதல் ஒருதலை. இவர் காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப. எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடற்கும் இவருரை காணப்படுகிறது.அதுவும் நுணுக்கம் வாய்ந்தது; ஆயின் குறிப்புரையாகவே உள்ளது. அவ்வுரையின்றேல் பரிபாடற்கு மெய்ப்பொருள் காண்டல் அரிது. வண்துவரைப் பெருமாள் என்ற இயற்பெயருடைய வைணவ அந்தணப் பெருமகனாராம் இவர் வடமொழி தென்மொழி இரண்டிலும் பெரும்புலமை மிக்கார். இவரது திருக்குறளுரை ‘தண்டமிழின் மேலாம் தரம்’ எனப்படுகிறது.
பல்காப்பியம் -
பல்காப்பியனாரால் இயற்றப்பட்ட ஓர் யாப்பிலக்கணநூல் (தொ. மர. 95 பேரா. உரை) இதன் நூற்பாக்கள் இரண்டு, சீர் வரையறை பற்றியன இக்காலத்துக் கிட்டியுள்ளன. இது தொல்காப்பியத்தில் விரிக்கப்பட்ட செய்தியை வகுத்துக் கூறிய நூலாகும்.
பல்காயம் -
யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்ற பண்டைய யாப்புநூல்களுள் ஒன்று. இதன் நூற்பாக் களுள் 26 மேற்கோளாகக் காட்டப்பெற்றுள. அவை யாப்புறுப்புக்கள், அசை, சீர், தொடை, விட்டிசை, சீர் மயக்கம், அடிவரையறை, கூன், அடி வரையறை இல்லன-என்பன பற்றியனவாம். (யா. வி. பக். 17 முதலியன)
பல்காயனார் -
பல்காயம் எனத் தம் பெயரால் ஓர் யாப்பிலக்கண நூல் இயற்றியவர். (தொ. மர. 95 பேரா. உரை)
பல்சந்தமாலை -
பத்துக் கவி முதலாக நூறுகவி ஈறாகச் சந்தம் பத்துவகை யாகப் பாடப்படுவதொரு பிரபந்தவகை. (இ. வி. பாட். 74)
பல்லாண்டு -
பெரியாழ்வாரால் அருளப்பட்ட பிரபந்தம்; பாட்டுடைத் தலைவனாம் நாராயணனைப் “பல ஆண்டு வாழ்க!” என ஏனை மக்களை வாழ்த்துவது போல வாழ்த்துவது.திவ்விய பிரபந் தத்தின் தொடக்கமாக அமையும் பன்னிரண்டு பாசுரம் அடங்கிய பதிகம் இது. சேந்தனார் அருளிய பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையுள் உள்ளது. (L)
பலவாகச் சிதர்ந்து கிடக்கும் பலதிறச் செய்திகளைத் திரட்டிக் கூறும் தொகை நூல். (யாழ். அக.)
(‘பள்’ உகரச்சாரியை பெற்றுப் ‘பள்ளு’ என வரும்.)
1. நாடகப் பிரபந்தவகை. எ-டு: ‘முக்கூடற்பள்ளு’
2. காளி முதலிய தெய்வங்கட்குப் பலி கொடுக்குங் காலத்துப் பாடப்படும் ஒரு பண். (L)
அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் பிரபந்தம். (L)
‘பள்’ காண்க.
1. மாறன் பாப்பாவினம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16ஆம் நூற்றாண்டு
2. சிதம்பரச் செய்யுட் கோவை - குமரகுருபர சுவாமிகள் 17ஆம் நூற்றாண்டு
3. திருஅலங்கல்திரட்டு - குமரகுருதாச சுவாமிகள் 20ஆம் நூற்றாண்டு முற்பகுதி
4. அரங்கன்துதி அமுதம் - சக்திசரணன் 20ஆம் நூற்றாண்டு பிற்பகுதி
5. யாப்பும் பாட்டும் - அரங்க. நடராசன் (புதுவை) 21ஆம் நூற்றாண்டு
1. ஒருவகைப் பிரபந்தம். 2. வரிக்கூத்து வகை. (சிலப். 3:13 அடி. உரை) 3. ஐவகை நிலத்திலும் முழக்கப்படும் தோற்கருவி. (L)
அந்தாதித் தொடையாய் அமைந்த தொடர்நிலைச் செய்யுள் களுள் ஒன்று. இதன்கண் இறுதி எழுத்தும் சொல்லும் இடை யிட்டுத் தொடுத்த செய்யுள் அந்தாதிவிகற்பத்தைக் காணலாம். (யா. வி. பக். 196, 205)
கலம்பகம்தான், அதன் உறுப்புக்களுள் ஒருபோகும் அம்மானை யும் ஊசலும் இன்றி ஏனைய உறுப்புக்களெல்லாம் வரப் பாடும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 54)
திருத்தொண்டர் புராணம் ஆம் பெரியபுராணம் பன்னிரண் டாம் திருமுறையாக அமைவது. கொச்சகக் கலிப்பா, பலவகைப்படும் அறுசீர் விருத்தங்கள்,எழு சீர் விருத்தங்கள், எண்சீர் விருத்தங்கள், சந்தம் வாய்ந்த எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், கலித்துறை, கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் எனப் பலவகை யாப்புக்கள் இத்திருமுறையில் பயில்கின்றன. (இலக்கணத். முன். பக். 98)
அகத்தியருடைய மாணாக்கர் பன்னிருவராலும் தனித்தனி ஒவ்வொருவரும் ஓரோரு படலம் யாக்கப் பன்னிரண்டு படலங்களாக அமைந்த புறப்பொருள் நூல். வஞ்சிப்பாவினுள் ஆசிரிய அடி மயங்கி வருவது பெரும்பாலும் அகத்திணைப் பாடற்கண் இல்லை என்பதற்குப் பன்னிருபடலப் பெருந் திணைச் சூத்திரம் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. வெட்சி கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி-என்ற திணைகள் தம்முள் மறுதலைப்பட்டன என்பதனை விளக்கவும் பன்னிரு படலச் சூத்திரங்கள் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. (யா. வி. பக். 128, 571)
அகத்தியன்பால் தமிழிலக்கணத்தைக் குற்ற மற உணர்ந்த தொல்காப்பியன் முதலான பன்னிருவராலும் பாங்குறப் பகரப்பட்டதாகப் பன்னிருபடலம் சொல்லப்படுகிறது, புறப்பொருள்வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்துள்.
செய்யுள் வகைகளைப் பற்றிக் கூறும் பாட்டியல் நூல்களில் மிக்க தொன்மையானது. இந்நூல் ஒருவரால் இயற்றப்பட் டது என்றும், பன்னிருவரால் இயற்றப்பட்டது என்றும் கூறுவர். இதன்காலம் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலம்; காலம் துணியக் கூடவில்லை. இதன்கண், பாயிரம் நீங்கலாக 231 நூற்பாக்கள் உள. மேற்கோளாக வந்த நூற்பாக் களையும் கூட்டி யுரைப்பர் ஒருசாரார். எழுத்தியல், சொல் லியல், இன இயல் என்பன இந்நூற்பாகுபாடுகள். இனவிய லுள் பிரபந்த வகைகள் விரிவாகப் பேசப்படுகின்றன. எழுத்தியலும் சொல்லியலும் முறையே எழுத்தும் சொல்லும் பற்றிய பன்னிரு பொருத்த நிலைகளைப் பேசுவதால், இந்நூற்குப் பெயர் அத்தொகைப்பெயரால் அமைந்தது என்றும் கூறுவர்.
தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணக்கராகிய பனம்பார னார் இயற்றிய இலக்கண நூல்; அவர் பெயராலேயே அப்பெயர் பெற்றது. அகத்திணை அல்லாதவழி வஞ்சியடி யொடு சொற்சீரடி மயங்கும் என்பதற்குப் பனம்பாரச் சூத்திரம் ஒன்று மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. (யா. வி. பக். 125)
அகத்தியனார் மாணாக்கருள் ஒருவர்; இவரியற்றிய இலக் கண நூல் பனம்பாரம் என இவர் பெயராலேயே வழங்கியது. இவர் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரமும் இயற்றி யுள்ளார்.
அறம் பொருள் இன்பம் வீடுபேறு ஆமாறு சொன்ன நூல் களுள்ளும், அவை சார்பாக வந்த சோதிடமும் சொகினமும், வக்கின கிரந்தமும், மந்திரவாதமும், மருத்துவ நூலும், சாமுத் திரியமும், நிலத்து நூலும், ஆயுத நூலும், பத்துவிச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கலநூலும் முதலாய வற்றுள்ளும் உள்ள மறைப்பொருள் உபதேசிக்க வல்லராய், கவிப்பெருமையோடு, சாவவும் கெடவும் பாடுமாறும் மனத்தது பாடுமாறும் பாடப்படுவோருக்கு வரும் நன்மையும் தீமையும் அறியுமாறும் வல்லராய், உரைக்கவல்ல சான்றோர்கள். அவ்வல்லோராவர். (யா. வி. பக். 491)
வைதிக சமயத்தின் மாறுபட்ட புறச்சமயக் கொள்கைகளைக் குறிப்பிடும் நூல்கள். இவற்றின் அடிகள் சொற்சீரடியின் பாற்படும். (யா. வி. பக். 373)
பிரபந்த இலக்கணம் கூறும் நூல். பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல் முதலாயின காண்க.
வெண்பா முதலிய நால்வகைப் பாவிற்கும் அவற்றின் இனங்களுக்கும் நிறம், திணை, பூ, சாந்து, புகை, பண், திறன், இருது, திங்கள், நாள், பக்கம், கிழமை, பொழுது, கோள், இராசி, தெய்வம், திசை, மந்திரம், மண்டிலம், பொறி, எழுத்து முதலாகிய பண்புகள் கூறப்படும். இவற்றை அறிந்து ஆராதிப்ப, இவை யாவர்க்கும் கல்வியும் புலமையுமாக்கி நன்மை பயக்கும். இவை யெல்லாம் திணைநூலுள் விரிக்கப் படும். (யா. வி. பக். 488)
பாட்டு, நூல், உரை, பிசி, முதுசொல், மந்திரம், குறிப்புரை, வழக்கு மரபு, செய்யுள் மரபு, வருண மரபு, நாற்புலவர், அவை, அகலக்கவியைச் செய்து கொடுப்போர், அகலக்கவி கொள் வோர் இப் பதினான்கு திறத்த இலக்கணமும் ஆம். (இ. வி. பாட். 1 )
இந்நூல் இறந்துபட்டதொரு பாட்டியல் பற்றிய நூல். இது ‘தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்’ என்னும் குற்றத்திற்கு இலக்கியமாகப் பேராசிரியரால் (தொ. பொ. 663) குறிப்பிடப் பட்டுள்ளது. பாட்டியல் கூறும் பத்துவகைப் பொருத்தம் போல்வன அவருக்கு உடன்பாடல்ல.
இந்நூலின் 3 நூற்பாக்கள் ஆரிடச் செய்யுளுக்கும் அச் செய்யுள் பாடுவோருக்கும் உரிய இலக்கணங்களை உணர்த்து வனவாக யாப்பருங்கல விருத்தியில் (பக். 370, 371) மேற் கோளாகக் காட்டப்பட்டுள்ளன.
பா உறுப்பான் எழுந்து ஒலிக்கும் பாட்டின் வகையாவன - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, அகலக்கவி என்பன. (இ.வி.பாட். 3)
பாடலனார் என்பாரால் உரைக்கப்பட்ட இலக்கணநூல். இதன்கண், நூல், நூல்வகை, நாற்பயன், எழுமதம், பத்து வகைக் குற்றம், பத்துவகை வனப்பு, முப்பத்திருவகை உத்தி என்பன விளக்கப்பட்டுள்ளன. (யா. வி. பக். 427)
பாணினீயத்தின் பேருரையாசிரியரான பதஞ்சலி. (பி.வி. 1 உரை) (L)
பாஷ்யம்; விருத்தியுரையாகிய பேருரை. (L)
1) புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை; ‘பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே’ (புறநா. 21 )
2) தத்துவராயர் பாடிய பல (வேதாந்தி பனுவல். (L)
பாணினியால் இயற்றப்பட்ட இலக்கணத்தின் பெயர் பாணி னீயம். பாணினி பாரத நாட்டின் வடமேற்குக் கோடிப் பகுதி யில் வாழ்ந்தவர். இவரது காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டியது. ஏறத்தாழ 4000 சூத்திரங்களைக் கொண்ட வடமொழி இலக்கணநூலைப் பாணினி இயற்றினார். இவர் தமக்கு முன் வாழ்ந்த இலக்கணம் வல்லார் அறுபத்து நால்வர் இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளனர். தம் காலத்துக்கு முற்பட்ட நூல்கள் ஆகிய தாதுபதம், கணபதம் என்ற இரண்டனையும் பாணினி குறித்துள்ளார். தாது மஞ்சரி, பதமஞ்சரி எனப் பிற் காலத்தெழுந்தவை அவற்றை அடியொற்றியனவே. பாணி னியே உத்திவகைளை முதன் முதலாகக் கையாண்டவர். அவ்வுத்தி வகைகள் ‘பாஷேந்து சேகரம்’ என்ற நூலாகச் 18ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள.
பாணினியால் மிகுதியும் குறிப்பிடப்பட்டவர் சாகடாயநர், கார்க்கியர், சாகல்யர் முதலானோர். பெயர்ச்சொற்கள் யாவும் வினைப்பகுதியாகிய தாதுக்களிலிருந்து தோன்றிய னவே என்ற சாகடாயநர் கொள்கையைப் பாணினி தம் நூலில் முழுதும் அடியொற்றியுள்ளார்.
பாணினீயம் தோன்றிய பின்னர் ஏனைய இலக்கணங்கள் மறைந்துவிட்ட செய்தியொன்றே இதன் பெருஞ்சிறப்பினைக் காட்டும்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாணினீயத்தில் 1245 சூத்திரங் களுக்குக் காத்தியாயனர் என்ற வரருசி வார்த்திகம் (-காண் டிகை) ஒன்று வரைந்தார். அடுத்துக் குணிவிருத்தி முதலிய உரைகள் தோன்றின. கி.மு. முதல் நூற்றாண்டில் பதஞ்சலி யால் வரையப் பட்ட மாபாடியம் என்ற பேருரை இப்போது 1713 சூத்திரங்களுக்கே கிடைத்துள்ளது.
பாணினீயம் முழுமைக்கும் கி.பி. 650-ஐ ஒட்டிய காலத்தில் காசி நகரில் வாழ்ந்த ஜயாதித்யர், வாமநர் என்ற பெருமக்க ளால் காசிகாவிருத்தி என்ற விளக்கவுரை இயற்றப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டில் பர்த்ருஹரி என்பவரால் மாபாடிய விளக்கமான வாக்கியபதீயம் என்ற நூலும், 13ஆம் நூற்றாண் டில் கையடர் என்பவரால் கையடம் என்ற நூலும் இயற்றப் பட்டன. 15ஆம் நூற்றாண்டில் இராமபத்திரர் என்பவரால் பிரகிரியா கௌமுதி என்ற நூல் இயற்றப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் பட்டோஜீ என்பவரால் சித்தாந்த கௌமுதி இயற்றப்பட்டது; அஃது இன்னும் எளிமையாக்கப்பட்டு 19ஆம் நூற்றாண்டில் வரதாசர் என்பவரால் லகு கௌமுதி என்று சுருக்கி வரையப்பட்டது. (பி. வி. பக் 434-436)
தலைமக்களைச் சிறப்பித்துக் கலிவெண்பாவால் பாதம் முதல் முடி அளவும் கூறும் பிரபந்தம். சிறப்பாகத் தெய்வங்களை அவ்வாறு பாடுப. (இ. வி. பாட். 111)
பெரும்பான்மையும் இறைவனைப் பற்றிய துதிப்பாடல்க ளாகிய பதிகம், இரட்டை மணிமாலை, நான்மணிமாலை முதலாயின. ‘மாலை’ என்றமையால் அந்தாதியாக வரத் தொடுப்பது சிறப்புடைத்து. (L)
தொல்காப்பியப் பாயிரத்துக்கு வரையப்பட்ட விருத்தியுரை. அரசஞ்சண்முகனார் இயற்றிய ‘பாயிர விருத்தி’ சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட விழுமிய தொரு விருத்தி. அவருக்கு முன்னர் மாதவச் சிவஞான முனிவர் பாயிரவிருத்தி எழுதியுள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடிய கவிதைகளுள் வசன கவிதைகளும் இன்ன என்று யாப்பு வரையறுக்க இயலாத பாடல்களும் நீங்கலான பிறவெல்லாம் வெண்பா, குறள்வெண் செந்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா, கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சித் துறை, கண்ணி, சிந்து, தாழிசை, கீர்த்தனை, தரவு கொச்சகக்கலிப்பா என்னும் யாப்புள் அடங்குவன. அறுசீர், எழுசீர், எண்சீர் ஆசிரிய விருத்தங்களே மிக்குப் பயில்கின்றன. கட்டளைக் கலித்துறை, வஞ்சித்துறை என்பன அருகியே நிகழ்கின்றன. ‘புதிய ஆத்திசூடி’ சொற்சீரடி யாப்பிற்று. கலிவெண்பா யாப்பும் ஆண்டாண்டு நிகழ்கின்றமை காணலாம். (இலக்கணத். முன்.பக். 110, 111 )
பாலர்க்குக் கற்பிக்கும் ஆசிரியன். மதுரைப்பாலாசிரியர் நற்றாமனார் (அகநா. 92) பாடியுள்ளமை காண்க.
முல்லைத்திணைக்கு வெண்பாவும், குறிஞ்சித்திணைக்கு ஆசிரியப்பாவும், மருதத்திணைக்குக் கலிப்பாவும், நெய்தல் திணைக்கு வஞ்சிப்பாவும் உரியனவாம். (இ. வி. பாட். 118)
வெண்பாவிற்கு நிறம் வெண்மை, ஆசிரியப்பாவிற்கு நிறம் செம்மை; கலிப்பாவிற்கு நிறம் கருமை; வஞ்சிப்பாவிற்கு நிறம் பொன்மை ஆகும். (இ. வி. பாட். 119)
வெண்பா அந்தணர்க்குரிய பா; அகவல் அரசர்க்குரிய பா; கலிப்பா வணிகர்க்குரிய பா; வஞ்சிப்பா வேளாளர்க்குரிய பா ஆகும். (இ. வி. பாட். 117)
“ஆசிரியங்களும் பாவைப்பாட்டும் அன்ன பிறவும் குறில் அகவல் தூங்கிசை வண்ணம் உடையன” என்பது. (யா. வி. உரை. பக். 415)
திருப்பாவை, திருவெம்பாவை பாவைப்பாட்டுக்கு நூலாக அமைந்த எடுத்துக்காட்டாம். இவை (பெரும்பான்மையும்) வெண்டளை பிறழாமல் அளவடியால் நிகழும் எட்டடிப் பாடல்கள்; பாடல்கள் ஒத்த அடி எதுகையால் ஒரு விகற்பம்பட நிகழ்ந்து ‘ஏலோரெம்பாவாய் என முடியும். ‘கோழியும் கூவின’ என்னும் பாவைப்பாட்டு ஐந்தடியால் நிகழ்ந்தது. (யா. வி. பக். 363)
ஈரசை, மூவசைச் சீர்களான் இயன்ற நாற்சீரடி எட்டான் அமைந்து, வெண்பா யாப்பால், இசையொடு பொருந்தி, பாவை நோன்பு மேற்கொள்ளும் கன்னியரால், வைகறையில் நன்னீராடற் பொருட்டு ஏனைய மகளிரைத் தம்மோடு உடன் வருமாறு துயிலெடைநிலையாக, பாடப்பெறுவதே பாவைப்பாட்டாம்.
எ-டு : ஆண்டாள் அருளிய திருப்பாவை, மணிவாசகர் அருளிய திருவெம்பாவை. (தென். இசைப். 16)
(ஓரடியின் இறுதிச் சீர்க்கும் அடுத்த அடியின் முதற்சீர்க்கும் இடையே தளை இழுக்கினும் அமையும்)
பாவைப்பாடல்கள் ஒரே விகற்பத்தனவாகிய நாற்சீரடி எட்டுக் கொண்ட பாடல்களாம். இவை வெண்டளையே பெற்று வருவன. பாடல் நிரையசையில் தொடங்கின், மிக அருகி ஈற்றுச்சீர் அடுத்த அடி முதற்சீரோடு இணையு மிடத்தே கலித்தளை வருதலுமுண்டு. நேரசையில் தொடங்குவன வெண்டளை பிறழாமல் வரும். இவை உண்மையில் ஈற்றடி அளவடியாக்கப்பட்ட பஃறொடை வெண்பாக்களே எனலாம். வெண்பாக்களின் ஈற்றடியும் நாற்சீரடியாக்கப்படும் மரபு தொல்காப்பியத்தில் குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது (செய். 72 நச்.) பிற்காலத்தார் முழுதும் வெண்டளையாக வரும் இப்பாவைப்பாடலைத் தரவு கொச்சகம் என்று கூறுவா ராயினர். திருவாசகத்தில் வரும் அம்மானைப் பாடல்களும் பாவைப்பாடல் போன்றனவே. நேரசையில் தொடங்கும் அம்மானைப் பாடல் ஈற்றடியும் அளவடியாக நிரம்பிய ஆறடிப் பஃறொடை வெண்பாவே. அதனையும் பிற்காலத் தார் தரவு கொச்சகம் என்ப.
பாவைப்பாடல் ‘ஏலோர் எம்பாவாய்’ என முடிதலும், அம்மானைப்பாடல் ‘அம்மானாய்’ என முடிதலும் மரபு.
பெண்பாற்பிள்ளைத் தமிழின் உறுப்புக்களுள் ஒன்று; பாட்டுடைத் தலைவி பாவையை வைத்துக்கொண்டு விளை யாடுதல். (திவா. பக். 310)
பிராகிருத மொழிகளில் ஒருவகையாகிய பாளி மொழிக்கு அமைந்த இலக்கணம் கூறும் நூல். யாப்பருங்கலக்காரிகை இப்பாளித்தியம் போலக் காரிகை யாப்பிற்றாக இருத்தலை அதன் உரையாசிரியர் குணசாகரர் சுட்டுகிறார். (யா. கா. பாயிர உரை)
செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் ஒன்று. குற்றெழுத்து ஐந்தும் ஆண்பாலாம்; நெட்டெழுத்து ஏழும் பெண்பாலாம்; ஒற்றும் ஆய்தமும் பேடாம். ஆண்பாலைக் கூறுமிடத்து ஆண்பால் எழுத்துக்கள் அமையும். பெண் பாலைக் கூறுமிடத்துப் பெண்பால் எழுத்துக்கள் அமையும். இம்முறை மயங்கினும் அமையும். (இ. வி. பாட். 13)
பொன்னிறமான மயிர்முடியை உடையாளொரு தலைவி யினுடைய பிறப்பு பண்பு வரலாறு ஆகியவை கூறும் தொடர் நிலைச் செய்யுளும் அவள் பெயரால் அப்பெயர்த் தாயிற்று.
பிங்கலகேசியின் முதற்பாட்டின் இரண்டாமடி ஓரெழுத்து மிகுத்துப் புரிக்காகப் புணர்க்கப்பட்டது. (யா. வி. பக். 39, 520)
பிங்கலம் வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன்கண் விருத்தசாதி விகற்பங்கள் பலவும் விரித்துக் கூறப் பட்டுள்ளன. நான்கடியும் ஒத்தும் ஒவ்வாதும் பருவனவும், இரண்டடி ஒத்து நான்கடியால் வருவனவும், பிறவாற்றான் வருவனவும், மாராச்சையும் மிச்சாகிருதி முதலாகிய சாதியும், ஆரிடமும் பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும் பிங்கலம் முதலிய வடமொழி யாப்புநூல்களில் விரித்துக் கூறப்பட் டுள்ளன. (யா. வி. பக். 370, 486)
கலம்பக உறுப்புப் பதினெட்டனுள் ஒன்று; சைவத்தவக் கோலத்தில் பிச்சை யிரந்து நிற்பாளொருத்தியைக் காமுகன் ஒருவன் காமுற்றுப் பாடுவது.
தவ வேடத்தில், நெற்றியில் திருநீறு அணிந்து கையில் சூலம் ஏந்தி இல்லம்தோறும் பிச்சை ஏற்றுச் செல்லும் இளம்பெண் ணின் வடிவழகு தன் உள்ளத்தைப் பிணித்த செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக்கூறுவதாக அமைந்த அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல் இது. (மதுரைக்கல. 33)
19ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாட்டியல் நூல். ஆசிரியர் முத்துவேங்கட சுப்பையர் என்பார். இந்நூல் பி. பாஸ்கர ஐயரவர்களால் செந்தமிழில் (1918-19) வெளியிடப் பெற்றது. பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக அமைந்த இதன் பாடல்கள் 26 கிடைத்துள. 26 ஆம் பாடலின் ஈற்றடி கிடைத்திலது. இன்னும் நான்கு பாடல்கள் இருந் திருக்கலாம். கிடைக்கப்பெற்றவற்றுள் 80 பிரபந்த இலக் கணங்கள் சொல்லப்பட்டுள. எஞ்சிய பாடல்கள் நான்கும் கிடைத்திருப்பின் 96 பிரபந்தங்களின் இலக்கணமும் முழுமை யாகப் பெறும் வாய்ப்புப் பெற்றிருப்போம். இலக்கண விளக்கம் - பாட்டியல் தஞ்சை சரசுவதி மகால் பதிப்பில் பிற்சேர்க்கையாக இந்நூல் சொற் பிரிப்போடு பொருள் புலப்படுவகையில் தரப்பட்டுள்ளது.
தொடர்நிலைச் செய்யுளாகிய பிள்ளைத்தமிழ் கலம்பகம் பன்மணிமாலை மும்மணிக்கோவை முதலாயினவும், தனி நிலைச் செய்யுளாகிய வளமடல் உலாமடல் உலா அநுராக மாலை முதலாயினவும் பிரபந்தம் என்னும் பெயரால் பிற்காலத்தே வழங்கப்பட்டன. இப்பிரபந்தம் 96 வகைப்படும் என்ப. இவற்றின் இலக்கணம் கூறும் நூல் பாட்டியல் எனப்படும்
பிரபந்தமானது சாதகத்தின் நிலையையும், திதி நிலை, வார நிலை, நாண்மீன் நிலை, யோக நிலை, கரண நிலை, ஓரை நிலை, கிரகநிலை ஆகிய இவ்வேழ்வகை உறுப்புக்களின் நிலையையும் சோதிட நூலால் நன்குணர்ந்து அவற்றால் தலைவற்குறுவன கூறுவது என்னும் தொகையகராதி.
16ஆம் நூற்றாண்டில் இது தோன்றியது என்ப. இதன்கண் நூற்பாக்கள் 35 உள. முதல் 21 நூற்பாக்களில் 96 பிரபந்த இலக்கணங்கள் குறிக்கப்பட்டுள. இந்நூலாசிரியர் பற்றிய செய்தி தெரியவில்லை.
சின்னூல் (-நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, இலக்கணவிளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச் செய்யப்படினும், ஆசிரி யனது கருத்துணராமல் மரபுநிலை திரியச் செய்யப்பட்ட மையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம். (பிரமாணம்-நூல்நெறிக்குச் சான்றாக எடுத்துக்காட்டாகத் திகழும் வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர் அரசஞ்சண்முகனார். (பா.வி. பக். 104, 105)
17ஆம் நூற்றாண்டில் தோன்றிய, தமிழால் அமைந்த இலக்கண நூல். இதன் ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர். தமிழின் சொல்லிலக்கணத்தை வடமொழியின் சொல் லிலக்கணத்தோடு ஆய்ந்து உணர்த்தும் இந்நூற்கண் காரக படலம், சமாச படலம், தத்தித படலம், திங்ஙுப்படலம் என்னும் நான்கு இயல்களும் அவற்றுள் 51 காரிகைச் சூத்திரங்களும் உள. நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார். மிக நுண்ணிய திட்பம் வாய்ந்த உரை அது. வடமொழிக்கே உரிய செய்திகளொடு தமிழிற்கே உரிய செய்திகளும் பல இடங்களில் வரையறுத்து உரைக்கப்பட்டுள. இருமொழிக் கும் பெரும்பான்மையும் இலக்கணம் ஒன்றே என்ற கருத்தினர் இவ்வாசிரியர். இலக்கணத்கொத்து இயற்றிய சுவாமிநாத தேசிகரும் இக்கருத்தினர். ஏற்ற வடமொழி இலக்கணச் சொற் களுக்கு விளக்கமாக உரைச்சூத்திரம் பல இவ்வாசிரியர் ஆண்டாண்டு இயற்றியுள்ளமை இவ்வுரையின் தனிச்சிறப்பு.
தற்சிறப்புப் பாயிரம் முதற்சூத்திரமாக அமைய, நூல் அரங்கேற்றம் இறுதிச்சூத்திரமாக அமைகிறது.
1973 இல் வெளியிடப்பெற்ற தஞ்சை சரசுவதி மகால் பதிப்பு விரிவான விளக்க உரையொடு நூலாசிரியர் கருத்தைத் தெளிவிக்க வல்லது.
1. பிள்ளைத்தமிழ் எனப்படும் பிரபந்தம்.
2. முன்னோர் பாடிய செய்யுளடிகள் பலவற்றை எடுத்துக் கொண்டு, தான் சிறிதளவு இயற்றிப் பாடல் அமைப்பவன். (இ. வி. பாட். 45, 175)
ஆண்பாற் பிள்ளைத்தமிழாயின் ஆண்பாற்குப் பதினாறாண் டும், பெண்பாற்பிள்ளைத் தமிழாயின் பெண்பாற்குப் பூப்புப் பருவமும், எல்லை என்கிறது இந்திரகாளியம். மூன்று முதல் இருபத்தொரு திங்கள் அளவும் என எல்லை வகுக்கிறது. பன்னிரு பாட்டியல். அந்நூற் கருத்துப்படி ஆண்பாற்கு ஏழு, ஐந்து, மூன்று ஆண்டுகள் எனக் கொண்டு பாடுதலும், பன்னீ ராண்டு எல்லையாகக் கொண்டு பாடுதலும் உண்டு. பெண் ணுக்குப் பன்னீராண்டு என்பது வெண்பாப் பாட்டியல் செய்தி. அரசற்கு முடிகவித்தல் பருவம் எல்லை என்னும், நவநீதப் பாட்டியல். பிரபந்த தீபிகை பருவந்தோறும் திங்கள் அல்லது ஆண்டு எல்லை வகுக்கிறது. காப்பு - 2 திங்கள்; செங்கீரை 5 திங்கள்; தால் - 7 திங்கள்; சப்பாணி - 9 திங்கள்; முத்தம் - 11 திங்கள்; வருகை - ஓர் ஆண்டு நிறைவு; அம்புலி - ஒன்றரை ஆண்டு; சிற்றில் 2 ஆண்டு; பறை முழக்கல் - 3 ஆண்டு; இரதம் ஊர்தல் - 4 ஆண்டு. மூன்று முதல் 21 திங்கள் வரை ஒற்றைப்படைத் திங்களில் இப்பருவங்கள் கொள்ளப் படும் என்று சிதம்பரப் பாட்டியல், இ.வி. பாட்டியல், தொ.வி. செய்யுளியல் என்பன கூறுகின்றன.
இந்திரகாளியம் பல பருவங்களைக் கூறுகிறது. பிறப்பு, ஓகை, காப்பு, வளர்ச்சி, அச்சமுறுத்தல், செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், குழமகன், ஊசல் முதலியன அவை.
பிற பாட்டியல்கள் ஆண்பாற்பருவம் எனவும், பெண்பாற் பருவம் எனவும், பத்தாக வகுத்துத் தனியே வரையறுக்கின் றன. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற்பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள். ஆண்பாற்கே சிறப்பாக உரிய இறுதி மூன்று பருவங்கள் சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன. இனிப் பெண்பாற்கே உரிய இறுதிப்பருவங்கள் கழங்கு, அம்மானை, ஊசல் எனவும், சிற்றிலிழைத்தல், சிறுசோறாக்கல், குழமகன், ஊசல், காமன் நோன்பு எனவும் வெவ்வேறு பாட்டியல்களில் சொல்லப்பட்டுள்ளன. பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குப் பல பருவங்கள் இறுதியில் கூறப்படினும், பொதுவான அவ்வே ழோடே சிறப்பான எவையேனும் மூன்றே கூட்டிப் பத்துப் பருவமாகப் பாடுதலே மரபு. இந்நூல்கள் குறிப்பிடாத நீராடற்பருவம் மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழில் பாடப் பட்டுள்ளது.
இனி, யாப்புப் பற்றிய கருத்து; இந்திரகாளியம், பருவ மொன்றுக்கு 1, 3, 5, 7, 9 அல்லது 11 எனக் கொச்சகக்கலி, 12 அடியின் மிகாத நெடுவெண்பாட்டு ஆகிய இவ்யாப்பில் பாடப்படும் என்று கூறும். பிறப்பு, ஓகை, வளர்ச்சி, அச்சம் ஆகிய நான்கும் 1, 3, 5 அல்லது 7 எனச் செய்யுள் பாடப் பெறும் எனவும் அந்நூல் கூறுகிறது. பன்னிருபாட்டியல், அகவல் விருத்தம் கலிவிருத்தம் கட்டளை ஒலி நெடுவெண் பாட்டு இவற்றால் பிள்ளைக்கவி பாடப்படும் எனவும்; வெண்பாப் பாட்டியல் சிதம்பரப்பாட்டியல் இலக்கண விளக்கப் பாட்டியல் தொன்னூல் விளக்கச் செய்யுளியல் சுவாமி நாதம் என்பன, வகுப்பு அகவல்விருத்தம் இவற்றால் பாடப்படும் எனவும்; நவநீதப்பாட்டியல், மன்ன விருத்தம் ஈரெண்கலை வண்ணச் செய்யுள் இவற்றால் பாடப்படும் எனவும்; முத்து வீரியம் அகவல்விருத்தத்தால் பாடப்படும் எனவும் கூறுகின்றன.
பருவத்திற்குப் பத்துப்பாடல் என்பது பெரும்பான்மையான பாட்டியல்களது வரையறை. காப்புப் பருவத்துக்கு பாடல்கள் 9 அல்லது 11 என வரவேண்டும் என நவநீதப் பாட்டியலும் இ.வி. பாட்டியலும் குறிக்கின்றன.
காப்புப்பருவத்தில் பாடப்படும் கடவுளர் இன்னார் என்பதும், அவர்களுள் முதற்கண் பாடப்படுபவர் திருமாலே என்பதும், இப்பருவத்துள் பாடப்படும் அக்கடவுளர் பற்றிய செய்தியில் கொலைத் தொழில் தவிர்க்கப்படும் என்பதும் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், இலக்கண விளக்கப்பாட்டியல் - என இவை கூறும் சிறப்புச் செய்தி.
பிள்ளைத் தமிழ் -
பிள்ளைக் கவி; இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும், பெண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும் இருவகைப்படும். இதன் பருவங்கள் முதலியன ‘பிள்ளைக்கவி’ யுள் காண்க.
பிள்ளைத்தமிழ் கொள்ளும் காலம், அதன் புறநடை -
(பாட்டுடைத் தலைவனோ, தலைவியோ) பிறந்து மூன்றாம் திங்கள் முதல் இருபத்தொரு திங்கள்காறும் ஒற்றித்த திங்களில் நிறைமதிப் பக்கத்தில் பிள்ளைக்கவி கொள்ளப் படும்.
பிள்ளைப்பருவம் கழியும் முன்னரே பாடுதல் வேண்டும் என்பது குறிப்பு. முதியோரைப் பிள்ளையாகக் கருதிப் பாடு மிடத்தும் இப்பிள்ளைப்பருவத்தினராகவே கொண்டு பாடவேண்டும். ஒற்றைப்படை மங்கலம் தருவது; நிறைமதிப் பக்கம் (-சுக்கில பக்கம்) வளர்ச்சி தருவது).
இனி, பிள்ளைக்கவி, மேற்கூறிய திங்களெல்லையில் பாட முடியாக்கால், மூன்று, ஐந்து, ஏழ் ஆகிய ஒற்றை பெற்ற ஆண்டிலும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 49, 50)
பிள்ளைத்தமிழின் பருவங்கள் -
காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற் பிள்ளைத்தமிழ்க்கும் பொதுவான பருவங்கள். ஆண்பாற்கேயுரியன. சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பன; இனிப் பெண்பாற்கேயுரியன : கழங்கு, அம்மானை, ஊசல் என்பன. (இ. வி. பாட். 46)
வகுப்பும் ஆசிரியவிருத்தமும் பிள்ளைத்தமிழ் பாடும் யாப்பு. பிற பாட்டியல்கள் கூறுவன ‘பிள்ளைக்கவி’ எனும் தலைப்புள் காண்க. (இ. வி. பாட். 47)
பிள்ளைத்தமிழ்; அது காண்க.
அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப்பாவால் வியத்தகும் மகளிரது சிறப்பினைக் கூறும் பிரபந்தம்.
(இ. வி. பாட். 106)
‘எழுத்துக் குறி வெண்பா’ - காண்க. (யா. வி. பக். 371)
தண்டக மாலை (சங். அக); வெண்பா முந்நூறு கவியால் அமைந்த பிரபந்தம். (பி. தீ. 14)
சக்கரக் கவியாகிய மிறைக்கவி விசேடங்களைக் கூறும் பண்டைய நூல்; இதுபோது வழக்கற்றது. (யா. வி. பக். 533)
வீரசோழிய நூலாசிரியர். இவர்காலம் 11ஆம் நூற்றாண்டு என்ப. வீரசோழியம் என்ற தலைப்பைக் காண்க.
ஒரு தருக்க நூல் (வீ. சோ. 179 உரை)
பாட்டுடைத்தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பக உறுப்பு. (மதுரைக். 11)
சிறந்த தலைவனொருவனுடைய புயங்கள் செய்துள்ள வீரம் கொடை முதலிய செய்கைகளைப் பாராட்டி அப்புயங்களின் உருவ அமைப்பினையும் வருணித்தல். (இது கலம்பகத்தில் புய வகுப்பு என்ற பெயரிற் காணப்படும் கலம்பக உறுப்பாம்.) இது பாடாண்துறைகளுள் ஒன்று.
காப்பியத் தலைவனுடைய திருப்புயங்கள் அடியவரை அளிக்கும் திறனையும், பகைவர்களை அழிக்கும் திறனையும் புனைந்து கூறும் துறை. (திருவரங்கக் . 7)
‘பரிசில் வழங்காதவன் அழிவு’ காண்க.
பல அடியான் வந்த பஃறொடை வெண்பாக்களையும் கொண்டு அமைந்த தொரு பழைய தொடர்நிலைச் செய்யுள்.
(யா. வி. பக். 250)
கவி, கமகன், வாதி, வாக்கி என்று புகழப்படும் நால்வகை. ‘கவி’ முதலியவற்றின் விளக்கம் தனித்தனித் தலைப்புள் காண்க.
(இ. வி. பாட். 169)
அகரம் வல்லூறு; இகரம் ஆந்தை; உகரம் காக்கை; எகரம் கோழி; ஒகரம் மயில். (பிங். 1354)
புறப்பொருள் தலைவனைக் கிளவித்தலைவனாகக் கொண்டு பாடப்படும் ஒரு பிரபந்தம் போலும்.
எ-டு : திருவிருத்தம் முதலியன. (சாமி. 165)
புறநானூற்றுக்குத் துறை வகுத்தவர் அனைவரும் புறப் பொருள் வெண்பாமாலை, பன்னிரு படலம் முதலிய புதுநூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும், அகத்திய மும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அந்நூல்களைத் துணைக் கொண்டே புறநானூற்றுக்குத் துறை கோடல் வேண்டும். இப்பொழுது வகுக்கப்பட்ட துறைகள் அவ்வளவு பொருத்தமுடையன அல்ல என்பது நச்சினார்க் கினியர் கருத்து. (தொ. பொ. 90 நச்.)
1. 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; “நீ வணங்கும் தெய்வம் நின்னைப் புறங்காப்ப நின் மரபு சிறப்பதாகுக!” என்று பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து பாடுவது.
2. சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப். 8-41 உரை)
அகமல்லாத புறப்பொருட் செய்திகள் பற்றி அமைந்த புறநானூறு, பதிற்றுப்பத்து முதலியவற்றுப் பாடல்கள். புற நானூற்றுக்கே ‘புறப்பாட்டு’ என்ற பெயரும் உண்டு.
‘மீனுண் கொக்கின் (227) என்ற புறப்பாட்டும் அது’ என வரும் நச்சினார்க்கினியருரையுள் காண்க.(தொ. செய். 79 நச்.)
புறப்பொருள்மேல் வருவன புறப்பொருட் கோவை.
(சாமி. 167)
ஆரிடப் போலிக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டப்படுவது.
“கறைப்பல் பெருமோட்டுக் காடு கிழவோட்(கு)
அரைத்திருந்த சாந்துதொட்(டு) அப்பேய்
மறைக்குமா காணாது மற்றைத்தன் கையைக்
குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு”
இது பூதத்தாரும் காரைக்காற் பேயாரும் பாடியது. இவ் வெண்பாவுள் இரண்டாமடி குறைந்து வந்து, ஆரிடப் போலியாதலின் அமைந்தது. (யா. வி. பக். 371)
தொல்காப்பியத்துக்கு முந்துநூல்களுள் ஒன்று. பூத புராணம் முதலாகிய அவையெல்லாம் சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழங்குநூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்றுகாறும் உளதாயிற்றெனக் கொள்க. (தொ. பொ. 652 பேரா. உரை)
வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்னும் நாற்பாவுக்கும், சூடுவன பூவும், பூசுவன சாந்தும், உடுப்பன கலையும், அலங்கரிப்பன அணியும் முறையே வெள்ளையும் சிவப்பும் கருமையும் பொன்மை நிறமும் ஆம். (மருட்பாவிற்கு வெண் சிவப்பு நிறமாம்) (இ. வி. பாட். 124)
வேதத்தில் கரும காண்ட ஆராய்ச்சி பற்றி iஜம்நி முனிவர் இயற்றிய சாத்திரம்.
1. உயிர்மெய் (பிங். 1359). 2. நெட்டெழுத்து. (வெண்பா. முதன் மொ. 6)
பேதை (வயது 6, 7), பெதும்பை (11), மங்கை (12), மடந்தை (13) அரிவை (25), தெரிவை (31), பேரிளம் பெண் (40) என்பன.
வாலை (5), தருணி (11), பிரவுடை (40), விருத்தை (40க்கு மேல்) என்றும் சில பருவம் கூறுப. (பிங். 939) பேதை முதலிய பருவ மகளிர்க்கு வயது பிறவாறும் கூறுப. (இ.வி.பாட். 99 - 103)
(ஆ. நி. 72, பிங். 941. நா. நி. 118, பொ.நி. 97)
பெண்ணெழுத்து, நெட்டெழுத்து ஏழும் ஆம்.
(இ. வி. பாட். 13)
பெண்பாற் பிள்ளைத் தமிழ்; அது காண்க.
இருபாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாக உரிய காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்னும் ஏழு பருவங்களோடே, பெண்பாற்கே சிறப்ப உரியவான கழங்கு, அம்மானை, ஊசல் என்னும் பருவங்கள் அமைய, சந்த விருத்தத்தாலும் பிற ஆசிரிய விருத்தத்தாலும் பாடப்படும் பிரபந்தம். அம்மானை, நீராடல், ஊசல் என இறுதிப் பருவங்கள் அமையப் பெறுவனவும் உள. ‘பிள்ளைத் தமிழ்’ காண்க. (இ. வி. பாட். 47)
‘பெண்பாற் பிள்ளைத் தமிழ்’ காண்க.
எட்டு முதலாகப் பதினொன்று காறும் ஆண்டு நிகழும் பெண்பாற் பருவம்; உலாமகளின் பருவமேழனுள்ளும் இஃது இரண்டாவது. (இ. வி. பாட். 100)
பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சாருமாறு இன்னிசை வெண்பாவால் 90,70, 50 என்ற எண்ணிக்கைப்படப் பாடுவ தொரு பிரபந்தம். (இ. வி. பாட். 65)
பாட்டுடைத்தலைவன் பெயரையும் ஊரையும் சார்ந்து வருமாறு தொண்ணூறும் எழுபதும் ஐம்பதும் நேரிசை வெண்பாவால் கவிகள் பாடின், அவை பெயர்நேரிசை எனவும் ஊர்நேரிசை எனவும் வழங்கப்படும். ஈண்டுப் பாட்டுடைத் தலைவனது பெயரைச் சார்ந்துவரப் பாடப் படும் 90, 70, 50 ஆகிய நேரிசை வெண்பாவாலமைந்த பிரபந்தம். (இ. வி. பாட். 70)
‘நாம மாலை’ என்பதன் பரியாயப் பெயர். அது காண்க.
பழைய யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. அசைக்கு உறுப் பாகும் எழுத்துக்கள் பதினைந்து என்பதற்கு இந்நூல் சூத்தி ரம் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
(யா. வி. பக். 31)
பாட்டியல் மரபு கூறுவதொரு பண்டையிலக்கண நூல்.
(யா. வி. பக். 555)
13ஆம் நூற்றாண்டினராகிய வைணவ ஆசாரியார்; திருப் பனந்தாளை யடுத்த சேய்ஞலூரில் தோன்றியவர்; ஸ்மார்த்தச் சோழியர்; பின் வைணவர் ஆகியவர்; திவ்ய பிரபந்தம் முழுமைக்கும் வியாக்யானம் வரைந்துள்ளார். பெரியாழ்வார் திருமொழியின் பெரும்பகுதிக்கு இவர் வரைந்த வியாக்யானம் கிட்டவில்லை. திருவாய்மொழிக்கு இவர் வரைந்த இருபத்து நாலாயிரப்படி மிகச் சிறந்தது என்ப. நம்பிள்ளையினது ஈடு இதனைப் பெரும்பாலும் விளக்குவதாக அமைந்துள்ளது.
இறந்துபட்ட இடைச்சங்கத்து நூல்களிடையே ஒன்று என்ப; ‘இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகையொடு’ (சிலப். உரைப் பாயிரம் அடிக்குறிப்பு)
பெருங்காக்கைபாடினியாரால் இயற்றப்பட்டதோர் யாப்பிலக்கண நூல். இவர் தொல்காப்பியனார் காலத்தவர் என்பது பேராசிரியர் கருத்து. இவருடைய நூலிலிருந்து 73 நூற்பாக்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இலக் கண விளக்கம் செய்யுளியல் பிற்சேர்க்கை காண்க.
பெருங்காக்கை பாடினியம் எனத் தம் பெயரால் ஓர் யாப் பிலக்கண நூலியற்றிய புலவர். இவர் காலத்தில் ‘வேங்கடம் குமரி தீம்புனல் பௌவம்’ என, வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் தமிழகஎல்லைகளாக இவை இருந்தன என்பது இவர் இயற்றிய தற்சிறப்புப் பாயிரச் சூத்திரத்தால் போதருகிறது.
தலைச் சங்கத்தே வழக்கிலிருந்த ஓர் இசைத்தமிழிலக்கண நூல். (சிலப். உரைப் பாயிரம்)
பத்துப்பாட்டுள் ஒன்றாகிய, கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு, ‘கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியிலும்’ (பரி. 19-77 உரை)
இவர் பாடல்களில் சில, பாடல்கட்கு என்று வரையறுக் கப்பட்ட இலக்கணங்களின் மிக்கும் குறைந்தும் அமைந்தiவ; ஆரிடப்போலி எனவும் ஆரிட வாசகம் எனவும் அவை கூறப்படும். (யா. வி. பக். 370, 371)
‘பெருஞ்சித்திரனார் பாடல்’ என்பதற்குரிய குறிப்பு ஈண்டும் கொள்க. (யா. வி. பக். 370, 371)
1. கடவுளரைத் துதிக்கும் இசைப்பா வகை. (சிலப். 6 : 35 உரை)
2. பதினோராம் திருமுறையைச் சார்ந்த, நக்கீரரால் பாடப் பெற்ற ஒரு சைவப் பிரபந்தம்.
1. பாரதம் பாடிய சங்கப் புலவர். (தொ. பொ. 72 நச்.)
2. ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பாப் பாடிய புலவர்
3. பதினோராம் நூற்றாண்டினரான வீரசோழிய உரை யாசிரியர்.
தலைச்சங்கத்து வழக்குப் பெற்றிருந்த இசை இலக்கண நூல்களுள் ஒன்று. (சிலப் உரைப்.)
பொருட் பகுதி பற்றியதொரு விரிவான நூல் (சீவக. 187 நச். உரை). இது பெரும்பொருள் விளக்கம் எனவும் பெயர் பெறும். இதன் பாடல்கள் பல புறத்திணையியல் உரையிலும் புறத்திரட்டிலும் உள.
கற்புடைப் பெண்டிருடைய பெருமைகளைக் கூறுவதொரு பிரபந்தம். (சது.)
பாவினங்களுள் நவக்கிரகமும் வேற்றுப்பாடையும் விரவி வந்தால், அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் நிலைச் செய்யுள் குறிப்பிடப்பட்டுள்ளது. (யா. வி. பக். 491)
ஆய்த எழுத்து. (இ. வி. பாட். 13)
எழுவகைப் பருவமாகப் பிரிக்கப் பெற்ற மகளிரில், முதற் பருவத்தினள்; வயது வரையறை ஐந்து முதல் ஏழாண்டு அளவும். (இ. வி. பாட். 99)
அகத்தியரால் இயற்றப்பட்டதோர் இலக்கணநூல்; அளவிற் பெரியதாயிருந்தமை ‘சிற்றகத்தியம்’ என்ற பெயரை நோக்கப் புலனாம். இஃது இறந்துபட்டது. இஃது இயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலக்கணமும் கூறிய மகா பிண்டமாக இருந்தது. (மா. அ. பாயிரம். 20)
தொல்காப்பிய உரையாசிரியர்; நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர். காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப. இவர் பொரு ளதிகாரத்தில் நச்சினார்க்கினியரால் மூன்று இடங்களில் போற்றப்பட்டுள்ளார். மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் பொருளதிகார நான்கு இயல்கட்கும் இவர் உரை உள்ளது. திருக்கோவையார் உரையாசிரியரொருவர்க்கும் பேராசிரியர் என்ற பெயர் உண்டு. இவ்விருவர் உரையும் திட்ப நுட்பம் வாய்ந்தவை; தமிழுக்குப் பெருமை கூட்டுவன.
எழுவகைப் பருவ மகளிருள் இறுதிப் பருவத்தவள்; நாற்பது வயதினள்; என்றது முப்பத்திரண்டு முதல் நாற்பதுகாறும் நிகழும் ஆண்டினள். (இ. வி. பாட். 103)
போரில் தோற்றவர் - ஆடிக்கொண்டு கூறும் அபயக்குரல் (திவ். பெரியதி 10 - 2-1 வியாக்)
இப்பழம்புலவர் பாடிய வெண்பாக்களுள் மூன்று, ‘ஒற்றுப் பெயர்த்தல்’ என்ற சித்திரகவிக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள. (யா. வி. பக். 542)
‘ஆழி யிழைப்பப் பகல்போம்’ என்ற எழுத்தானந்த எடுத்துக் காட்டு வெண்பா பொய்கையார் என்ற பழம்புலவரால் இயற்றப்பட்டது. (யா. வி. பக். 558, 45) மூன்றாமெழுத்து ஒன்று எதுகைக்கும் (பக். 143), முற்றியலுகரத்தான் இற்ற பிறப்பு எனும் வாய்பாட்டு ஈற்றுச்சீர் அமைந்த பாடற்கும் (பக். 231), வெண்பா இலக்கணத்தில் திரிந்து ஆரிடப் போலியாய் அமையும் பாடல்களுக்கும் (பக். 369, 371) இவருடைய பாடல்கள் எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள.
அகலக்கவிக்கும், அதனைக் கொள்ளும் பாட்டுடைத் தலை மகனுக்கும் பத்துப் பொருத்தங்கள் குறைவின்றி அமைதல் இன்றியமையாதது. புலவன் இயற்றிய அகலக் கவியைப் பாட்டுடைத் தலைமகன் கொள்வது என்பது பாமகளை அவன் மணம் செய்துகொள்ளுதலேயாம் என்ற மரபு ஏற்பட் டமையால், இவ்வாறு பொருத்தம் இருப்பதும் இன்றியமை யாதது எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.
அப்பத்துப் பொருத்தங்களாவன மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், அக்கரம், நாள், கதி, கணம் என்பன. (இ. வி. பாட். 9,10)
அகம் புறம் முதலியவற்றைக் கூறும் தொல்காப்பியம். (திவா. பக். 232.)
இலக்கணவிளக்கம் என்ற நூலின் மூன்றாம்பகுதி. சொல்லதி காரத்தை அடுத்து நிகழ்வது இது.
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களுள் ஐந்தாவது.
இருதிணை ஐம்பால் மூவிடங்களில் அமையும் சொற்கள் தம் பொருள் வேறுபட்டிசைப்பினும் அப்பொருள்களைக் கொள்ளவேண்டும் எனவும், அகத்திணையியல் களவியல் கற்பியல் ஆகிய இயல்களில் கூறப்பட்ட பொருள்களில் சற்று வேறுபட்டு வருவனவும் பொருளாகக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைத்து, சொல் உணர்த்தும் பொரு ளையும் தொடர்மொழிப் பொருளையும் ஒருங்கே தொகுத் துச் சொற்பொருளின் வழுவமைதியினையும் பொருளின் வழுவமைதியினையும் ஒருங்கே கூறும் இப்பொருளியல் 54 சூத்திரங்களை (நச். உரைப்படி) உடையது.
இருதிணை ஐம்பாற்பொருள்களின் பண்பும் செயலுமாகிய வற்றை உணர்த்தற்குச் சொல்லதிகாரத்துள் ஓதப்பெற்ற விதிகளான் ஆக்கமுற்றமைந்த சொற்கள், பொருளதிகாரத் துள் தலைவன் தலைவி முதலானோர் கூற்றுக்களுள் அமைந்து வருங்கால், அவை சொல்லிலக்கண நெறிபற்றி யமைந்த பொருளினின்றும் வேறுபட்டுத் தலைவன் தலைவி முதலானோர் கருதிய பொருளைப் பயந்து நிற்கும் எனவும், அங்ஙனம் பொருள் பயத்தற்கும் அச்சொற்களே கருவியாக உள்ளமையான் அப்பொருளும் அவற்றிற்குரிய பொருளே எனவும், பொருளதிகாரத்துள் சொற்பொருளை அறியும் முறைமை கூறுதல் பற்றி இவ்வியல் பொருளியல் எனப்பட் டது. (தொ. பொரு. பாயிரம்)
புலவர் தாம் எடுத்துக்கொண்ட பொருளைப் புனைந்துரை வகையால் கூறுமாறு போல, அதனைக் கூறுதற்குக் கருவி யாகிய சொற்களைப் புனையுங்காலும், குறிப்பாற் பொருள் தரும் சொற்களைப் பெருக அமைத்தலும், வெளிப்படைச் சொற்களுக்குக் குறிப்புப்பொருளை ஏற்றி அமைத்தலும் நல்லிலக்கியங்களைச் செய்யும் மரபாகும். அங்ஙனம் வெளிப் படைச் சொற்களும் குறிப்புப்பொருளை உள்ளடக்கி நிற்கும் முறைமையைத் தெரிந்து அதனைப் படைத்த ஆசிரியன் கருதிய பொருளை உணர்ந்துகொள்ளும் பாங்கினை அறிவித்தலே பொருளியலின் கோட்பாடு. (தொ. பொரு. பாயிரம் ச. பால)
அகம், புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கண நூல். மெய்ப்பாடு, அணி, யாப்பு, மரபு என்பனவும் பொருளிலக் கணத்துள் அடங்கும்.
அறுவடை முடிவில் களத்தே தலைவனை வாழ்த்தி உழவர் பாடும் பாட்டு. ‘பொலிப்பாட்டுப் பாடப் புகுந்தாள்’ (விறலி. 785)
களத்திற் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப் பாடுதல்.
பகைமன்னனது நாட்டினைக் கவரப் புறப்படும் மன்னன் தன் குடும்ப அடையாளப் பூவினொடு வஞ்சிப்பூவினையும் சூடும் ஆதலின், அவனால் சூட்டிக்கொள்ளப்பட்ட வஞ்சிப்பூச் சூடுதலைப் புகழும் பிரபந்த வகை.
இது ‘வரலாற்று வஞ்சி’ என்று பாட்டியல் நூல்களில் கூறப்படும். அது காண்க.
ம
ஆ ஈ ஊ ஏ என்ற நெடிலும், ங் ஞ் ண் ந் ம் என்ற ஐந்து மெல்லொற்றும் ஆம். ஒற்றெழுத்து என்பது ஈண்டு உயிர் மெய்யினையே குறிக்கும். ஙகரம் ணகர மிரண்டும் மொழி முதலாகாமையின் ஏனைய மூன்றும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 38)
1. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் எழுவகைப் பெண் பருவம். (திவா. பக். 38)
2. வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம். (பிங். 939)
சீர், பொன், பூ, மணி, திங்கள், பரிதி, கார், திரு, எழுத்து, கங்கை, யானை, கடல், நிலை, மா, உலகம், சொல், நீர், தேர், அமுதம், புகழ், நிலம், ஆரணம், கடவுள், திகிரி என்பனவும் பிறவும் அகலக்கவியின் முதற்கண் நிற்கும் மங்கலச் சொற் களாம்.
‘பிற’ என்றதனால், வாழி, மாலை, சங்கு, தார், விசும்பு, கவி, கயல், சுடர், முரசு, கவரி, தோகை, நன்று, தாமரை, விளக்கு, மலர், பழனம், இடபம் என்பனவும், செல்வம், சீர்த்தி, கீர்த்தி, ஞாயிறு, புயல், புனம், வேழம், களிறு, பரி, மதியம், தீபம் முதலிய பரியாயச் சொற்களும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 11)
எவ்வெம் மங்கலச்சொற்கள் எவ்வெம் முதலெழுத்துக்களை யுடைய சொற்களுக்கு உரிய என்பது வரையறுத்த பாட்டியல் குறிப்பிடும்.
க, கா, கி, கீ, சொ, சோ, ந, நா, நி, நீ, யா, வ, வா, வி, வீ - என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘சீர்’ என்பது. நு, நூ, யூ - இவற்றை முதலாகக் கொண்ட தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘எழுத்து’ என்பது. (சூ. 4).
கு, கூ, சௌ, து, தூ, தெ, தே, நெ, நே, பு, பூ, மெ, மே, மொ, மோ, மௌ- என்னும் எழுத்துக்களை முதலாகக் கொண்ட பாட்டுடைத் தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச் சொல் ‘பொன்’ என்பது. கௌ, சை, ம, மா, மி, மீ, மு, மூ, வை, வெள - இவற்றை முதலாகக் கொண்ட தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல் ‘பூ’ என்பது (சூ. 5).
கொ, கோ - எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர்களுக்குத் ‘திரு’ என்பதும் ‘திங்கள்’ என்பதும், கெ, கே, எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர்களுக்கு ‘மணி’ என்பதும், கை, சி, சீ, தி, தீ, தை, நொ, பை - எனும் எழுத்தால் தொடங்கும் பெயர்களுக்கு ‘நீர்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 6).
ஓள, சு, சூ, செ, சே, தௌ, நௌ - எனும் எழுத்தால் தொடங் கும் தலைவர் பெயர்களுக்குக் ‘கங்கை’ என்பதும், ஞெ, ஞொ எனும் எழுத்தால் தொடங்குவனவற்றிற்கு ‘வாரணம்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 7)
இ, ஈ, ஞா - எனும் எழுத்தால் தொடங்கும் தலைவர் பெயர் களுக்குக் ‘குஞ்சரம்’ என்பதும், ப, பா எனும் எழுத்தால் தொடங்குவனவற்றிற்கு ‘உலகு’ என்பதும், ச, சா, பெ, பே, பொ, போ, வெ, வே எனும் எழுத்தால் தொடங்குவனவற் றிற்குப் ‘பார்’ என்பதும் மங்கலச் சொற்களாம். (சூ. 8)
உ, ஊ, எ, ஏ, ஐ, நை, மை - எனும் எழுத்தால்
தொடங்கும் தலைவர் பெயர்களுக்கு ஏற்ற மங்கலச்சொல்
‘தேர்’ என்பது
(சூ. 9).
சீர், மணி, பரிதி, யானை, திரு, நிலம், உலகு, திங்கள், கார், மலை, சொல், எழுத்து, கங்கை, நீர், கடல், பூ, தேர், பொன் என்னும் இவை பதினெட்டும் இவற்றின் பரியாயப் பெயர்களும் ஆம். (ஆ.நி. xii - 18)
மங்கலச் சொற்குச் சிறப்பு விதி -
தலைவன் இயற்பெயரைக் குறித்து மங்கலச் சொற்குக் குற்றப்பாடு உளதாயின், அம்மங்கலச்சொற்கு அடை கொடுத் துக் கூறுதலும் பரியாயச் சொற் கூறுதலும் உரியனவாம். அம்மங்கலச் சொல் முதற்கண் அன்றி நடுவிலும் இறுதி யிலும் நிற்கவும் பெறும். (இ. வி. பாட். 41)
மங்கலப் பாடல் -
திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சியின்போது இசைக்கப் படும் இன்னிசை (‘(இ) லாலி’ என்று வழங்குப.) மங்கலப் பாட்டு, மங்கல கீதம் எனவும் வழங்கப் பெறும்.
மங்கலப் பொருத்தம் -
செய்யுள் முதல்மொழிப் பொருத்தம் பத்தனுள் முதலாவது; சொற்பொருத்தம் எழுத்துப்பொருத்தம் உண்டிப் பொருத் தம் என்னும் இவற்றினும் சிறந்தது. மங்கலத்தைக் குறித்துச் சொல் முதலிய மூன்றும் வேறுபடினும் அமையும். (இ. வி. பாட். 10)
மங்கல வள்ளை -
உயர்குலத்து உதித்த மடவரலை வெண்பா ஒன்பதனால் வகுப்புறப் பாடுவதொரு பிரபந்தம். (வகுப்பு - சந்தப் பொலிவு.)
(இ. வி. பாட். 68)
வெண்பா ஒன்பதனாலும் வகுப்பு ஒன்பதனாலும் என இரு வகையாகப் பாடுதலைச் சதுரகராதி சுட்டுகிறது. அக்கருத் துக்கு வகுப்புச் சந்தவிருத்தத்தைக் குறித்தல் அமையும். (இ. வி. பாட். 68)
மங்கல வெள்ளை -
சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலாவது, ஒருகலி வெண்பாவாலாவது, ஒன்பது வெண்பாக்களா லாவது, ஒன்பது சந்தங்களாலாவது உயர்குடிப் பிறந்த கற்புடைய மடவரலைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம். (பன்.பாட். 302 - 304)
பன்னிரண்டு பதின்மூன்று வயதுடைய பெண்; எழுவகைப் பருவமகளிருள் மூன்றாவது பருவத்தவள். (இ. வி.பாட். 101)
பிரபந்த விசேடம். (தொண்டை. சத. 95)
பதினான்கு முதல் பத்தொன்பது வரை வயதுடைய பெண்; எழுவகைப் பருவமகளிருள் நான்காம் பருவத்தவள்.
(இ. வி. பாட். 102)
96 பிரபந்தங்களுள் ஒன்று; வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரப் பாடப்பெறுவது. (சது.)
கலம்பகம் என்னும் பிரபந்தத்துள் குறிப்பிடப்படும் அகத் துறைகளுள் ஒன்று. மதங்கர் என்பார் இசைக்கும் கூத்திற்கும் உரிய ஒரு சாதியார். அச்சாதியைச் சார்ந்த பெண் ஒருத்தி இரு கைகளிலும் இரண்டு வாள்களை ஏந்தி வீசிப் பாடி ஆடும் அக்காட்சியைக் கண்ட காமுகன் ஒருவன் அவளது பேரழகில் ஈடுபட்டு மனத்தைப் பறிகொடுத்து அவள்அழகு தன்னை வருத்திற்றாகக் கூறும் செய்தி அமைந்த அகப்புறக் கைக்கிளைத்துறைப் பாடல் இது.
(மதங்கி - ஆடல் பாடல்களில் வல்ல பதினாறு வயதுப் பெண்) (மதுரைக் கல. 16)
நூலின் முதற்சீர்க்குக் கொள்ளப்படும் பொருந்திய கணங் களுள் ஒன்று; சந்திரகணம் எனவும் படும். இதற்கமைந்த சீர் புளிமாங்காய்; நாள் மிருகசீரிடம்; பயன் வாழ்நாள் தருதல். (இ. வி. பாட். 40 உரை)
இடைச்சங்க காலத்தவராகக் கருதப்படும் இப்புலவர் இயற்றிய நாடக நூல், இவர் பெயரால் மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் எனப்படும். அடியார்க்கு நல்லார் உரையியற்ற உதவிய நாடகநூல்களுள் இதுவும் ஒன்று. (சிலப். உரைப்பாயிரம்)
1. ஆசு முதலிய நால்வகைக் கவியுள் ஒன்று; சொல்லும் பொருளும் ஆகிய இலக்கணத்திற் சிதையாமல், மெய்ப்பாடு தோன்றக் கூறி, தொடையும் விகற்பத் தொடையும் செறிந்து, உய்த்துணர்வோர் மனத்தினுள் ஊறும் அமுதம் போல, தன்மை உவமை உருவகம் முதலிய அணிகளால் அலங்கரிக் கப்பட்டுக் கேட்போர் செவிக்கு இனிய ஓசை பொலிவுறப் பாடுவது. (இ. வி. பாட். 5)
2. இன்கவி பாடும் புலவன்.
3. திவ்விய பிரபந்தத்துள் ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்ற பாசுரப்பதிகம் அருளிய ஆழ்வார்; நம்மாழ்வாரைத் தம் வழிபடு ஆசானாகக் கொண்டவர்.
அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய நூல்களுக்குச் சார்பாக வந்த நூல்களுள் ஒன்று. இதன்கண் உள்ள மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டே உணரப்படும்.
(யா. வி. பக். 491)
முருகப்பெருமான் வாகனமாகிய மயிலைச் சிறப்பித்துப் பாடும் பிரபந்தம்.
இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறானது. (இ. வி. பாட். பக். 506)
நன்னூற்குக் காண்டிகையுரை முதற்கண் வரைந்த சமண சமயப் புலவர். இவர் இளம்பூரணர், அவிநயவுரையாசிரியர், அமிதசாகரர் இவர்கள்தம் காலத்திற்குப் பிற்பட்டவர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, முத்தொள்ளாயிரம், ஐந்திணை ஐம்பது, ஐந்திணையெழுபது, களவழி நாற்பது, கார் நாற்பது, திணை மாலை நூற்றைம்பது, திரிகடுகம், திருக்குறள், பழமொழி, முதுமொழிக்காஞ்சி, சூளாமணி முதலிய இலக்கியங்களை யும், அகத்தியம், தொல்காப்பியம், பனம்பாரம், அவிநயம், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கணங்களையும் இவர் தம்முரையில் எடுத் தாண்டுள்ளார். இவர்காலம் 13ஆம் நூற்றாண்டாயிருத்தல் கூடும். இவரது உரை பல அரிய நுணுக்கங்களையுடையது.
வடமொழியில் பண்டிருந்த யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இது பலவகை விருத்த வகைகளையும் அவ்விருத்த வகை இலக்கணங்களுள் சிறிது திரிந்த செய்யுள்களையும் எடுத்தியம்பியது. (யா. வி. பக். 486)
பண்டை யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் மயேச்சுரனார். இவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரிய ரால் பெரிதும் புகழப்படுபவர். இந்நூற் சூத்திரங்களாக இதுபோது 64 கிட்டியுள. தொடைகள் சில, வெண்செந்துறை, குறட்டாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா, வஞ்சிவிருத்தம் எஞ்சிய யாப்பிலக்கணச் செய்திகள்யாவும் இந்த 64 சூத்திரங்களில் சுட்டப்பட்டுள. இலக்கணங்களுக்கு உதாரணங்களும் இவ்வாசிரியராலேயே எடுத்தோதப்பட் டிருந்தன. (யா. வி. பக். 45 முதலியன)
1. பிறை நெடுமுடிக் கறைமிடற்று அரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 2. நீர் மலிந்த வார்சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர், 3. வாமமேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர், 4. உயரும் புரம் நகரச் செற்றவன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 5. திரிபுரம் எரித்த விரிசடை நிருத்தர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 6. பெண்ணொரு பாகர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர், 7. காமவேளைக் கறுத்த புத்தேள் நாமம் தாங்கிய நல்லாசிரியர், 8. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளின் திருப்பெயர் மகிழ்ந்த தொன்னூற் கவிஞர் - முதலியன. (யா. வி. பக். 117 முதலியன)
அறம் பொருள் இன்பம் வீடு இவற்றைக் குறிப்பிடும் நூல் களின் சார்பாகத் தோன்றி, மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டு உணரத்தக்கனவாய் அமைந்த நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 491)
இது கடைச்சங்கத் தொகுப்பாகிய பத்துப்பாட்டில் இறுதிப் பாடல். இதன்கண், பாட்டுடைத்தலைவனது நாட்டின் யாதானு மொன்றனைச் சிறப்பித்துச் சொல்லலுற்ற இடத்தே அத்திணைக்குரிய இறைச்சிப்பொருளை ஊறுபடச் சாவவும் கெடவும் சொல்லுவதும் (313, 314 ஆம் அடிகள்), புகழ்தலுற்ற இடத்தே ஆகாத பெற்றியின் மங்கலம் அழியச் சொல்லுவ தும் (44 - 46ஆம் அடிகள்) இறப்பஇழிந்த பொருளுக்கு இறப்ப உயர்ந்த பொருளை உவமமாகக் குறிப்பிடும் இறப்ப உயர்ந்த ஆனந்தஉவமை கூறுவதும் (99-101ஆம் அடிகள்), கருப் பொருள் செயல்களில் நினைந்தது கிட்டாமையைக் குறிப்பி டும் பரிசிற்பொருள் ஆனந்தம் கூறுவதும் (145 - 150ஆம் அடிகள்) ஆகிய ‘பொருளானந்தம்’ என்ற குற்றங்கள் அமைந் திருக்கின்றன என்று யாப்பருங்கல விருத்தியுரை குறிப் பிடுகிறது. (யா. வி. பக். 559 - 561)
தமது குடும்பத்தில் தோன்றிய மகளை மணம் பேசும்படி அரசனால் விடுக்கப்பட்ட தூதனை நோக்கி மறவர்கள் மகட் கொடுக்க மறுத்து அவ்வரசனை இகழ்ந்து பேசியதாக அமையும் செய்யுளாகிய ‘மறம்’ என்பது கலம்பகம் என்னும் பிரபந்த உறுப்புகளுள் ஒன்று.
“அரிச்சந்திரன் மனைவியை விற்றான். நளன் தன் மனை யாளை நடுக்காட்டில் பாதியாடையொடு நீத்துச் சென்றான். இராமன் சீதையைச் சிறை புகுமாறு விட்டான். பாண்டவர் திரௌபதியை மாற்றார் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டு வாளா இருந்தனர். இத்தகையவர் தோன்றிய மன்னர் பரம்பரையினர், மறவராகிய எம் இல்லத்துப் பெண்ணை மணம் பேச வரலாமா? ‘மணம் என்ற சொன்ன வாயெச்சிலை உமிழ்; மணவோலையைக் கிழித்துக் காற்றில் பறக்க விடு. முத்தி கொடுக்கும் திருவெங்கை நாதர்தம் மலை வேடுவர் யாம். சிவபெருமான் எமை அன்போடு அடுத்து எம் மூதாதையான கண்ணப்பன் எச்சிலையும் உண்டதனால், இரக்கப்பட்டு யாங்கள் வளர்த்த பெண்ணை அவன்மகன் வேலனுக்கு மணம் செய்வித்தோம். பெற்ற பெண்ணை அரசனுக்கு ஒருகாலும் கொடுக்க மாட்டோம்”. என்று மறவர் மணவோலை கொண்டு வந்த தூதுவனிடம் கூறியது (‘விற்றதார்’ எனத்தொடங்கும் பாடல்) (வெங்கைக். - பிற்சேர்க்கைப் பாடல்)
இக்குவலயானந்த அணிநூலை இயற்றியவர் மாணிக்க வாசகர் என்ற சைவர். இவர் அகத்தியர் வரைந்த சிவவியா கரணம் என்ற நூலை முதனூலாகக் கொண்டு இந்நூலை இயற்றினார் என்று இதன் சிறப்புப்பாயிரம் குறிக்கிறது. நூலாசிரியரே வரைந்ததோர் உரையும் இந்நூற்கு உள்ளது. நூலைப் பதிப்பித்தவர் அதனை உரையுடன் பதிப்பிக்க வில்லை. இந்நூல் உறுப்பியல் அணியியல் சித்திரவியல் என்ற மூன்று பகுப்புக்களையும், அவற்றுள் முறையே 150 120 29 நூற்பாக்களையும் கொண்டு அமைந்து உள்ளது. இந்நூலின் இறுதியில் சில பகுதிகள் கிட்டாமல் போயிருக்கலாம் என்பது உணரப்படுகிறது. உறுப்பியலில் சொல்லிலக்கணம் சொல்லப்பட்டுள்ளது; அவ்வியலின் இறுதியில் யாப்புப் பற்றிய சில செய்திகள் உள்ளன. அணியியலில் 87 அணிகள் கூறப்பட்டுள. இறுதியியலில் சித்திரகவிகள், நூற்குற்றங்கள் முதலியன குறிக்கப்பட்டுள்ளன.
இந்நூல் குறிப்பிடும் சில அணிகள் உண்மையில் அணிகள் தாமா என்றே ஐயம் எழுகிறது. பேராசிரியர், பிற்காலத்தார் தாம்தாம் நினைத்தவற்றை யெல்லாம் அணியென்று பெய ரிட்டு வழங்கத் தலைப்பட்டனர் என்றுரைத்த செய்திக்கு இந்நூல் இலக்கியமாக உள்ளது. எனலாம்!
இந்நூல் குறிப்பிடும் 87 அணிகளுள் ஏறத்தாழ 40 அணிகள் இவ்வாசிரியரே படைத்துக் கூறுவன. அவற்றுட் பல உவமை, அதிசயம், தற்குறிப்பேற்றம் என்பவற்றுள் அடங்கிவிடுவன.
இந்நூலின் மூலத்தை டாக்டர் உ.வே.சா. நூல் நிலையத்தி னின்று பெற்று அம்மூலமாத்திரமே வெளியிட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை), உரையையும் சேர்த்து வெளியிட்டிருப்பின் இதனை நன்குணரலாம்.
பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை; கி.மு. முதல் நூற்றாண்டில் வரையப்பட்ட இப்பேருரை இப்பொழுது 1713 சூத்திரங்கட்கே கிடைத்துள்ளது. (பி.வி. பிற்சேர்க்கை பக். 435)
வடமொழி யாப்பிலக்கண நூல்களுள் ஒன்று. பல வகை யாகத் திரிந்த நான்கடி விருத்த விகற்பங்களும் மாராச்சையும் மித்தியா விருத்தியும் முதலாகிய சாதியும், ஆரிடமும், பிரத் தாரம் முதலிய அறுவகைப் பிரத்தியமும் இதன்கண் குறிப் பிடப்பட்டுள்ளன. (யா. வி. பக்.)
தமிழில் அகத்தியத்தின் பின்னர்த்தோன்றிய பேரிலக்கண நூல். இதன் சூத்திரங்கள் ஆசிரியத்தானும் வெண்பாவானும் ஆகியவை. இவை இக்காலத்து மிகச் சிலவே கிட்டியுள. இந் நூலில் மகரக்குறுக்கத்தின் பயனை எடுத்தோதிய நூற்பா ஒன்று யாப்பருங்கல விருத்தியுள் மேற்கோளாக இடம் பெறு கிறது. (பக். 33) வஞ்சிப்பா அகப்பொருள் பற்றிய பாடல்களில் சிறுபான்மை வரினும் சிறப்பின்று என்பது குறிக்கப் பெற்றுள் ளது (பக். 128). உயிரளபெடையும் மகரக் குறுக்கமும் தலைவன் பெயருக்கும் அவன் பெயருக்கு அடையாகிய சொற்கும் புணர்ப்பது குற்றம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. (பக். 564)
இடைச்சங்க காலத்து வழங்கிய இலக்கண நூலாக இதனை இறையனார் களவியலுரை (சூத்திரம் 1) குறிக்கிறது.
(யா. வி. பக். 564)
மார்க்கண்டேயனார் என்ற பழம்புலவர் நிலையாமையாகிய காஞ்சித் திணையைப் பற்றிப் பாடிய ஆசிரியப்பா ஒன்று இழுமென் மொழியால் விழுமியது நுவல்வதாகிய ‘தோல்’ என்ற வனப்புக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பெற்றுள்ளது. (யா. வி. பக். 399)
தேமாங்கனி எனும் வாய்பாடு பற்றி வருவதும், நூல் முதற் பாடல் முதற்சீராக அன்றிச் சொல்லாக வருதலாகாது என விலக்கப்பட்ட அமங்கலமானதுமான செய்யுட் கணம். இதனை வாயுகணம் என இலக்கண விளக்கம் கூறுமாறு காண்க (இ. வி. பாட். 40). மாமூலனார் ‘மாருத கணம்’ என்றார் என்பதும் அவ்வுரைச் செய்தி. இதற்குரிய நாள் சுவாதி; இதன் பயன் சீர்சிறப்பு நீக்கம் எனச் சொல்லப்பட்டுள்ளது.
பிரபந்த வகை. இது கட்டளைக் கலித்துறையாகவோ, வெண்பாவாகவோ நூறுபாடல்கள் அந்தாதித் தொடையில் மண்டலித்து வருதல் சிறப்பு.
எ-டு : திருவரங்கத்து மாலை. இது கட்டளைக் கலித்துறை யால் வந்தது.
இந்நூல் 16ஆம் நூற்றாண்டில் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த திருக்குருகைப்பெருமாள் கவிராயர் குடும்பத்தில் தோன்றிய சடையன் என்பவரால் இயற்றப்பட்டது. இவரே மாறன் அலங்காரம், திருக்குருகாமான்மியம் முதலியவற்றை இயற் றியவர். மாறனகப் பொருள் அகத்திணை இயலும் ஒழிபிய லும் விரிவாக உள்ளன. அவை தொல்காப்பியத்தையும் நச்சினார்க்கினியர் உரையையும் உட்கொண்டு அகப் பொருட்குச் சிறந்த விளக்கமாக அமைந்தவை. இக்காலத்துக் கிட்டும் களவியல் வரைவியல் கற்பியல்களில் நம்பியகப் பொருளில் கூறப்படாத 30 துறைகள் காணப்படுகின்றன. களவு வெளிப்படற்குரிய கிளவித்தொகைகளில் வரைந்து கோடல் என்ற கிளவியை அமைத்து ஒன்பது துறைகளில் விளக்கியுள்ள இந்நூலில் காணப்படும் சிறப்புச் செய்தியாம். இதற்கு இலக்கியமான 527 பாடல்கள் கொண்ட திருப்பதிக் கோவை அமைந்துள்ளது. அண்மையில் நூல் முழுவதும் உரையுடன் வெளிவந்து உள்ளது. புதுவை ஃபிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியின் பதிப்பு அது.
பாக்களையும் பாவினங்களையும் நூற்பாக்களால் விளக்கா மல் இலக்கியங்களைக் கூறியே இந்நூல் விரிவாக விளக்கு கிறது. (குமர குருபரர் அருளிய சிதம்பர செய்யுட் கோவை யை இஃது இவ்வகையால் ஒக்கும் எனலாம்.)
வெண்பா முதலான நூற்பாக்களும் அவற்றின் பாவினங் களும், மருட்பாவும், பரிபாடலும் இதன்கண் இலக்கியமாகத் தரப்பட்டுள. நூலுள் 140 பாடல்கள் உள.
இந் நூலாசிரியர் 16ஆம் நூற்றாண்டுப் புலவரான திருக்குரு கைப் பெருமாள் கவிராயர் என்ப. பாடல்கள் இன்ன யாப்பின என்று திட்ப நுட்பமுற விளக்கும் சிறு குறிப்புக்கள் திருப் பேரைக் காரிரத்தினக் கவிராயரால் இயற்றப்பட்டன என்ப.
தண்டிஅலங்காரம் குறிப்பிடும் அணிகளுள் நுட்பம் என்பதனைக் குறைத்து, பிற முதனூல்களில் கூறப்பட்ட அணிகளையும் திரட்டி, முந்து நூல்களுள் கூறப்பெறாத பூட்டுவில் அணி - இறைச்சிப் பொருள்கோளணி - பொருள் மொழி அணி - என்பவற்றொடு வகைமுதல் அடுக்கணி - இணைஎதுகை அணி - உபாய அணி - உறுசுவை அணி - புகழ்வதின் இகழ்தல் அணி என்னும் அணிகளையும் கூட்டிப் பொருளணிகளை 64 ஆக மிகுத்து இந்நூல் கூறும். நுட்ப அணி ‘பரிகரம்’ என்ற அணியுள் அடக்கப்பட்டது. அடுத்த மூன்றும் சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத் திணையியலிலும் கூறியபடியே செய்யுட்கு அழகாதலின் கொள்ளப்பட்டன. ஏனைய ஐந்தும் அழகு எய்துவதால் இலக்கியம் கண்டு இவ்வணியிலக்கணத்துள் கொள்ளப் பட்டன. (மா.அ. 87)
பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்ட அணியிலக்கணநூல். இவ்வரும்பேரணிநூற்கு விருத்தியுரையருளிச் செய்தவர் தென்திருப்பேரைக் காரிரத்தின கவிராயர். இந்நூலுள் பாயிரமாக அமைந்த நூற்பாக்கள் - 64; பொதுவணியியல் நூற்பாக்கள் 21; பொருளணியியல் நூற்பாக்கள் - 166; சொல் லணியியல் நூற்பாக்கள் 48; எச்சவியல் நூற்பாக்கள் - 28. உதாரணப் பாடல் என். 844.
இதன்கண், வைதருப்பம் கௌடம் என்னும் இருநடைக்கும் இடைப்பட்டதாகப் பாஞ்சாலம் என, மூவகைச் செய்யுள் நெறி சொல்லப்படும். பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமும் நன்னூல் போன்ற பிறநூல்கள் கூறுவதினும் சிறப்ப உள. 64 பொருளணிகள் விளக்கப்பட்டுள. மடக்கணியின் (சொல் லணி) விரிவான திறங்கள் 18 நூற்பாக்களால் பல எடுத்துக் காட்டுக்களுடன் திகழ்கின்றன. வல்லினப்பாட்டு முதலாக எழுகூற்றிருக்கையீறாக இருப்பத்தாறு சித்திரகவிகள் சிறப்புற இடம் பெற்றுள.
சூத்திரங்கள், பாயிரத்திலும் பொதுவணியியலிலும் வெண்பhக் களாகவே நிகழ்கின்றன. பிறவற்றில் ஆசிரிய நடையாக இயலுகின்றன.
மானிடப் பாடலையே மறக்குமாறு வழிபடுதெய்வத்தை ஏத்துதலால், செங்கண்மால் கோயில் கொண்டருளிய திருப்பதிகளைப் பற்றியும், மாறன் எனப்படும் நம்மாழ்வாரைப் பற்றியும் நூலாசிரியர் உதாரணப் பாடல்களைத் தாமே புனைந்து சடகோபராம் மாறன் பெயரால் இவ்வலங்கார நூலை அருளினார். இன்று நிலவும் அணியிலக்கண நூல்க ளிடை இதனை ஒப்பதும் மிக்கது மில்லை. ஆயின் பயிலுதற் கண் கடுமை நோக்கி இவ்வரிய நூலை விரும்பிப் பயில்வார் அருகியே உளர்.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரைத் தமிழ்ச்சங்கம் பெருமுயற்சியால் அரிதாகப் பதிப்பித்த இந்நூற்கு இன்று காறும் மறுபதிப்பில்லை. என்ற குறை நல்க அண்மையில் புதுவை-பிரஞ்சுப்பள்ளி விளக்கங்களுடன் வெளியிட் டுள்ளது. இது திருவரங்க ஆண்டவன் ஆசிரம வெளியீடு.
களத்தில் நெற்சூடுகள்மீது கடாவிட்டு நெல்லைப் பிரிக்கும் போது அவ்வினைஞர் பாடும் பொலிப்பாட்டு. (சிலப். 10 : 136, 137)
பிள்ளைத் தமிழாகிய பிரபந்தத்துள் ஐந்தாவது பருவம்;
குழந்தையைத் தனக்கு முத்தம் தருமாறு தாய் கேட்ப அமைத்துப் பாடுவது. செங்கீரை போன்ற பிற பருவம் போல, இதன்கண்ணும் பத்துப் பாடல்கள் வரும். ‘கனிவாய் முத்தம் தருகவே’ போன்ற வாய்பாட்டால் பாடல் முடியும்.
கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்பெறும் அகத்துறை களுள் ஒன்று. தலைவன் தோழியிடம் தலைவிக்கு அளிப்ப தற்குக் கையுறையாகக் கொண்டு சென்ற முத்தினைத் தோழி தன் நயமான பேச்சினால் கையுறையாகக் கொள்வதை மறுத்துக் கூறுவதாக இவ்வகத்துறைப் பாடல் அமையும். (திருவரங்கக். 61)
19ஆம் நூற்றாண்டினர்; தம்பெயரால் முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கண நூல் இயற்றியுள்ளார். இதன் சூத்திரங்கள் ‘நூற்பா’ எனப்படும் ஆசிரியயாப்பின. திருப்பாற்கடல்நாதன் கவிராயர் இந்நூற்கு உரை எழுதியுள்ளார். நூலாசிரியர் தச்சமரபினர்.
முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப்பட்ட ஐந்திலக்கண நூல்; 19ஆம் நூற்றாண்டினது.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்ததி காரங்களிலும் முறையே எழுத்தியல் மொழியியல் புணரியல் எனவும், பெயரியல் வினையியல் ஒழிபியல் எனவும், அகவொழுக்கவியல் கள ஒழுக்கவியல் கற்பொழுக்கவியல் எனவும், உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் எனவும், சொல் லணியியல், பொருளணியியல் செய்யுளணியியல் எனவும் அதிகாரம்தோறும் மும்மூன்று இயல்கள் உள. அதிகாரம் தோறும் தற்சிறப்புப் பாயிரம் ஒன்று பரம்பொருளை வாழ்த்தி அதிகாரத்தை நுதலிப் புகுகிறது. இவை நீங்கலாக ஒன்பது இயல்களிலும் முறையே 114, 44, 297; 135, 48, 125; 59, 24, 9; 38, 61, 167; 25, 104, 31 எனும் எண்ணிக்கைப்பட நூற்பாக்கள் நிகழ் கின்றன.
“சுப்பிரமணிய தேசிகன் கவிப்பெருமாள் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, உறந்தையகத் தெழுந்தருளிய முத்துவீரமா முனிவன், அகத்திய நூல்வழியே இந்நூலைத் தன் பெயர் நிறுவி வகுத்தனன்” என்கின்றது சிறப்புப்பாயிரம்.
திருப்பாற்கடல்நாதன் என்ற பெயரினர் இதன் உரையாசிரியர்.
அ ஆ இ ஈ என்னும் நான்கும் கார்த்திகை நாளாம்; உ ஊ எ ஏ ஐ என்னும் ஐந்தும் பூராட நாளாம். (இ. வி. பாட். 25)
பாடப்படும் தலைமகனது பெயர்நாள் தொடங்கி எட்டாம் இராசிக்கண் உற்ற இரண்டே கால் நாளும், எண்பத்தெட் டாம் கால் பொருந்திய வைநாசிக நாளும் தள்ளிப் பொருத்த முடைய நாள்களைக் கொண்டு தலைவன் பெயர்க்கு முதற்சீர் எடுத்துக் கூறுதல் மரபு.
இனிக் கணநாள்களில் விலக்கியன ஒழித்தே பொருத்த முடைய நாள்களே கொள்ளப்படும் என்பதும் உரையிற் கொள்ளப்படும். விளக்கம் வருமாறு :
பாட்டுடைத் தலைவன் இராமன் என்க. அவன் பெயர் நாள் கார்த்திகை; அதற்குரிய இராசி இடபம்; அதனுடைய எட்டாம் இராசி தனு; அதற்குரிய நாள்கள் மூலம், பூராடம், உத்தராடம் முதற்கால்; அவற்றுக்குரிய எழுத்துக்கள் யூயோ - மூலம்; உ ஊ எ ஏ ஐ - பூராடம் ; ஓ உத்தராடம் முதல் கால்; இவ்வெழுத்துக்களால் முதல்சீர் முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.
இனி, விநாசத்தை (-அழிவினை) த் தரும் வைநாசிகம் இயற் பெயருக்குரிய நாளாகிய கார்த்திகைக்கு இருபத்திரண்டாம் நாளாகிய சதயத்தின் நான்காம் கால்; அதற்குரிய எழுத்து தொ என்பது. இதனானும் பாட்டின் முதற்சீர் முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.
இனி, கணநாளில் விலக்கியன தீக்கணம் அந்தரகணம், சூரியக ணம், மாருதகணம் என்பன; தீக்கணம் - கார்த்திகை; அந்தரகணம் - புனர்பூசம்; சூரிய கணம் - பூசம் ; வாயு கணம் - சுவாதி. இவற்றுக்குரிய எழுத்துக்கள் முறையே அ ஆ இ ஈ என்பனவும் ஆம். இவையும் புகுதல் கூடாது என்பது. (இ. வி. பாட். 37)
மாதவச் சிவஞான முனிவரால் ‘வடவேங்கடம்’ என்ற சிறப்புப் பாயிரத்திற்கும் ‘எழுத்தெனப் படுப’ எனும் தொல்காப்பிய முதற்சூத்திரத்திற்கும் எழுதப்பட்ட விருத்தியுரை. அவ் வுரையே நூலாகக் கருதப்படும். சிறப்புப் பாயிரப் பகுதிக்குச் சோழ வந்தான் அரசஞ் சண்முகனார் எழுதிய மறுப்பு நூலொன்றுண்டு. அம்மறுப்புக்கு மறுப்பாகச் சூத்திரவிருத் திக்கு அரணாகச் செப்பறை விருத்தி என ஒன்றுண்டு. இவ்வாறு பலரும் கருத்து வேறுபாடும் ஒற்றுமையும் காட்டு மாறு அமைந்த சிறந்த நற்றமிழ் நடையிலமைந்த விருத்தியுரை இம்முதற் சூத்திர விருத்தி. இவ்விருத்தி யுரையுள் தொல் காப்பியச் சொல்லதிகார உரையாசிரியரான சேனாவரை யரும் திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகரும் முனிவரால் பாராட்டப்படுவர். இவ் விருவரையும் அவர் மறுக்கு மிடங்களும் உள. சிவஞானமுனிவர் எடுத்தாண்ட பல வடமொழிக் கருத்துக்கள் பிரயோக விவேகம் எனும் நூலினின்று ஏற்றுக்கொண்டவை; அந்நூற் கருத்துக்களுள் முனிவர் மறுக்குமிடமும் உள. இவ்விருத்தி யுரையுள் முனிவ ருடைய இருமொழிப் புலமையும் கண்டு மகிழலாம்.
தலைச்சங்கத்து இயற்றப்பட்டுக் காலப்போக்கில் இறந்து போன நூல்களுள் ஒன்று. முதுநாரை, முதுகுருகு என எண்ணப்படும் இவை இயற்றமிழ் நூலாயிருத்தல் கூடும். இறையனார் களவியல் உரையுள் (சூ. 1) இடம் பெற்றுள்ளன இவை.
முதுகுருகு போல இதுவும் தலைச்சங்க காலத்து நூலாய், இதுபோது இறந்துபட்டது. (இறை. அ. 1 உரை)
முப்பதுக்கு மேற்பட்ட பிராயமுடையவன். (பன்.பாட். 234)
இவ்விலக்கியத்துள் நான்கடியின் மிக்கு ஆறடியான் வந்த பாடல்களும் உள. அவை கலிவிருத்தத்தின்பாலோ, கொச்சகக் கலியின்பாலோ சார்த்திக் கொள்ளப்படும்.
(யா. வி. பக். 365)
தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்று; ஆசிரியப் பாவும், வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் ஒன்றனை யடுத்து ஒன்றாகத் தொகை முப்பது பெற அந்தாதித் தொடையால் மண்டலித்து வரப் பாடுவது.
எ-டு : குமரகுருபரர் அருளிய சிதம்பர மும்மணிக் கோவை.
(இ. வி. பாட். 55)
இத்தொடர்நிலைச் செய்யுளின் பாடல்கள் இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பத் தொடையால் இணைந்துள்ளன. (யா. வி. பக். 205)
வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அகவலும் முறையே ஒன்றனை அடுத்து ஒன்று வர, முப்பது பாடல்கள் அந்தா தித்து முதலும் இறுதியும் மண்டலித்து வரப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 60.)
அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. ‘கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்’ (பெருங். உஞ்சைக். 36 - 245) (L)
இறந்துபட்டதொரு பண்டை நாடகத்தமிழ்நூல்.
(சிலப். உரைப்.) (L)
இடைக்காடர் செய்ததாகக் கூறப்படுவதும், சிந்தடிச் செய்யுள் முப்பது கொண்டதுமான ஒரு நூல். (தொ. பொ. 548 பேரா.)
சொற்சீரடியால் வேந்தனுடைய புகழ் வரலாற்றினைக் கூறி அவன் தன் தேவியொடு வாழுமாறு வாழ்த்தி, அவனுடைய ஆட்சியாண்டினையும், இயற்பெயரினையும் (பிற சிறப்புப் பெயர்களையும்) குறித்து விளக்கும் பாட்டு வகை. (இச்செய் யுள் நடையில் அவனுடைய போர் கொடை இவற்றின் வெற்றியேயன்றி, ஒரோவழி முன்னோர் வெற்றியும் இடம் பெறக் கூடும்.) (இ. வி. பாட். 71, பன்னிருபாட். 313)
சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்த கீர்த்தியை அழகுற மொழியும் பிரபந்தம். இது வேந்தற்கே சிறந்தது, ‘மெய்க்கீர்த்தி’ வேந்தன் புகழ் சொல்லுவதாதலின். (இ. வி. பாட். 105)
இது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாம் இயலாக உள்ளது. முன் ஐந்தியல்களில் கூறப்பட்ட அகப்புறச் செய்தி களை உடற்குறியால் வெளியிட்டு உவமத்தைப் போலப் பொருளைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு, அவ்வைந்தியல் களையும் அடுத்துச் செய்யுளியலை ஓட்டி அமைந்த உவம இயற்கு முன்னர்தராக ஆறாம் இயலாக அமைந்துள்ளது.
இவ்வியலில் நாடகநூலார் குறிப்பிடும் மெய்ப்பாடுகள், இயற்றமிழ் அகம்புறம் பற்றிய செய்யுள்களுக்கு மிகத் தேவையாகப் பயின்று வரும் மெய்ப்பாடுகள், பயிலாது அருகிவரும் மெய்ப்பாடுகள், களவுக் காலத்தில் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள், களவுக்காலத்திற்கே சிறந்து கற்புக்காலத்தும் கலந்து வரும் மெய்ப்பாடுகள், வரைதல் வேட்கையைப் புலப் படுத்தும் மெய்ப்பாடுகள், கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகள், தலைவன் தலைவியர்க்கு உரிய பத்துவகை ஒப்புமைகள், நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகள் ஆகியவை இறுதிப் புறனடைச் செய்தியோடு 27 நூற்பாக்களால் கூறப்பட்டுள.
மெய்ப்பாடு கூறிய ஓத்து ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் எனப்பட்டது. அகத்திணையியல் முதல் பொருளியல் ஈறாகக் கூறப்பட்ட ஐந்தியல்களிலும் சுட்டப்படும் அகமும் புறமும் பற்றிய ஒழுகலாற்றிற்கும், பொருளியல் இறுதியில் சுட்டப் பட்ட காட்டலாகாப் பொருள் எல்லாவற்றிற்கும் பொது வாகிய மனக்குறிப்பு இவையாகலின், இவற்றை வேறு கொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியல் என வேறோர் இயலாக, முன் கூறப்பட்ட அகப்பொருள் புறப்பொருள் பற்றிய ஐந்தியல் களொடும் தொடர்புடையதாகத் தொல்காப்பியனார் அமைத்துள்ளார். (தொ. பொ. 249 பேரா.)
கூத்தநூலுக்குரிய இம்மெய்ப்பாடுகளை இயற்றமிழ் நூலா கிய தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் ஆராய்வது என்னையெனின், இவ்வியற்றமிழில் அகம் புறம் பற்றிய பாடல்களுக்கு இன்றியமையாத செய்திகளையே கூறினார்; சுவைக்கு ஏதுவாகிய பொருளினை அரங்கினுள் நிறீஇ, அது கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்தும் கூத்தனையும் அரங் கில் தந்து, பின்னர் அவையரங்கினோர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை உணர்வாராக வருகின்ற நாடக நூல் முறைமையெல்லாம் ஈண்டுக் கூறினாரல்லர். (250 பேரா.)
இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக் குறி புணர்ச்சி வழக்காறில்லை. உணர்வோடு உள்ளக்கருத்தை உரைக்கப் பல செயற்கைக் குறி வகுத்துக்கோடல் கூத்த நூல் வழக்காம். (மெய்ப். பாரதி. முன்.)
இம்மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்பொருள் புறப் பொருள் துறைகள் அனைத்திற்கும் அமைய வருவனவும், சிறப்பாக அகத்துறைகளுக்கே ஆவனவும் என இருவகைப் படுதலின், பொதுவியல்புடையனவற்றை முன்னர்க் கூறிச் சிறப்பியல்புடையனவற்றைப் பின்னர்க் குறிப்பிடுகிறார். ஒருவருடைய உள்உணர்வுகளுள், மற்றவர் கண்டும் கேட்டும் அறியப் புற உடற்குறியால் புலப்படுவனவே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்படும். ஆதலின், அவையே இவ்வியலில் விளக்கப்பட்டுள. (மெய்ப். பாரதி. முன்.)
காதலனிடம் மேகத்தைத் தலைவி தூது விடுவதாகப் பாடும் பிரபந்த விசேடம்.
எ-டு : திருநறையூர் நம்பி மேகவிடு தூது. (L)
இது பழைய வடமொழி யாப்பு நூல்களுள் ஒன்று. நான்கடி விருத்த வகைகளில் பிறழ்ந்து வருவனவும், மாராச்சை மிச்சா கிருதி முதலிய சாதியும், ஆரிடமும் பிரத்தாரம் முதலியவும், ஆறு பிரத்தியமும் இந்நூலுள் பரக்கக் கூறப்பட்டுள்ளன. (யா. வி. பக். 486)
பண்ணத்தியாகச் சுட்டப்படுவனவற்றுள் ஒன்று.
(தொ. பொ. 492 பேரா.)
ய
இப்பிரபந்த இலக்கணம் பன்னிருபாட்டியலில் மாத்திரம் காணப்படுகிறது. பல்லாண்டு பாடுவது இப்பிரபந்தத்தின் நோக்கம். பெரும்பான்மை நேரிசைவெண்பாவாலும், சிறுபான்மை அனைத்துப் பாவாலும் “மன்னன் பல்லாண்டு வாழ்க!” என்று ஏத்துவது இது. (பன். பாட். 328)
யாப்பருங்கல ஆசிரியர் அமிதசாகரர் அவ்யாப்பு நூலுக்கு அங்கமாக யாப்பருங்கலக் காரிகை இயற்றினார். அலங்கார முடைத்தாகச் செய்யப்பட்டமையால் இந்நூல் காரிகை எனப்பட்டது. இந்நூலின் சூத்திரங்கள் கட்டளைக் கலித் துறை யாப்பின.
இவ்யாப்பு நூலின்கண் கடவுள் வாழ்த்தும் வருபொரு ளுரைத் தலுமாகிய தற்சிறப்புப் பாயிரம் 1, அவையடக்கம் 2, உறுப்பியல் காரிகைகள் 18, செய்யுளியல் காரிகைகள் 16, ஒழிபியல் காரிகைகள் 10 - ஆக 47 காரிகைகள் காணப்படு கின்றன. முதல் மூன்றும் நீக்கப்படின், அவை 44 ஆம்.
பல காரிகைகள் மகடூஉ முன்னிலை பெற்று நிகழ்கின்றன. சில காரிகைகள் முதல் நினைப்பு உணர்த்துவனவாக உள. ‘தூங்கேந் தடுக்கல்’ என்ற காரிகை ஆசிரியராலே இயற்றப் பட்டது என்பர் சிலர். ஆயின் உரையாசிரியர் குணசாகரர் அக்காரிகையைக் கணக்கிடாமையாலேயே 44 என்ற எண் ணிக்கை கிட்டிற்று. அவர் கருத்துப்படி அக்காரிகையை ஆசிரியர் புனைந்திலாமை தெளிவு.
உரையாசிரியராம் குணசாகரர் அமிதசாகரர்தம் மாணாக் கரே என்பது பெரும்பான்மையோர் கருத்து. உரை இயற்றி யவர் குணசாகரரா அன்றிப் பிறரொருவரா என்பதன்கண் கருத்து வேறுபாடுண்டு. இந்நூலின் காலம் 11ஆம் நூற்றாண் டின் முற்பகுதி என்ப.
யாப்பு என்னும் கடலைக் கடக்க அமைந்த அரிய மரக்கலம் என்ற காரணப் பெயரால் அமைந்த இந்நூல் (‘பெயர்க் காரணம்’ அடுத்துக் காண்க.) அமிதசாகரர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி; என்ப.
இந்நூலுள் பொதுவும் சிறப்புமாகப் பாயிரச் செய்யுள் இரண்டும், உறுப்பியல் முதலாக ஒழிபியல் ஈறாகச் சூத்தி ரங்கள் தொண்ணூற்றாறும் உள்ளன. சூத்திரம் ஆசிரிய நடைத்து.
இதன்கண், உறுப்பியலும் செய்யுளியலும் ஒழிபியலும் என முப்பெரும் பாகுபாடுகள் உள. உறுப்பியலுள் எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்னும் இவ்வகை ஆறனையும் உணர்த்தும் நூற்பாக்கள் எழுத்தோத்து அசையோத்து முதலாகப் பெயர் பெறுகின்றன. பிற இயல்களுள் இவ்வோத் துப் பாகுபாடு பெயர் பெற்றிலது.
இவ்வாசிரியரே யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்க மாக யாத்த பிறிதொரு நூல் யாப்பருங்கலக் காரிகையாம்.
இந்நூற்கு அரிய விருத்தியுரை வரைந்தவர் குணசாகரர் என்ப; மற்றொருவர் எனவும் கூறுப. இவ்வுரையின் பெருமை, இந்நூலே யாப்பருங்கல விருத்தி என உரைப்பெயரொடு பிற்காலத்தே வழங்கப்படும் சிறப்பால் போதரும்.
சுருங்கியும் விரிந்தும் கிடந்த தொன்னூல் யாப்புக்களது துணிவு நோக்கி, அரும்பொருட் பெருங்கேள்வி ஆசிரிய வசனங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு, அருங்கலஅணி ஒருங்கு கோத்தாற்போலவும், அலைகடல் கடைந்து அமுது கொண்டாற்போலவும், ஒருங்கு கோத்து ஒரு கோவைப் படுத்து எல்லார்க்கும் உணர்வு புலன்கொள்ளுமாற்றான் யாப்புச்செய்தியை உணர்த்தும் சார்பு நூலாதலின் யாப்பருங் கலம் என்னும் பெயர்த்தாயிற்று. (யா. க. பாயிர உரை)
இசைத்தமிழ் நூலாசிரியருள் ஒருவர் (சிலப். உரைப்பாயிரம்.)
யானையைப் பற்றிய கிரிசரம் நதிசரம் வனசரம் ஆகிய நிலம், அவயவங்களின் அளவு, ஏழுமுழ உயரம், தருணவயது, பிறந்த நிலத்தான் வீரம் பெறும் குலநன்மை, ஒன்பதுமுழநீளமும் முப்பத்திரண்டு முழச் சுற்றும் உடைத்தாய இலக்கணம், மும்மதம் கோடல், அடுத்த பொழுதிற் கோறல், அரசனை அறிதல் என்னும் இவையிற்றை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடும் பிரபந்தவகை. (இ. வி. பாட். 112)
ல
லக்கின கிரந்தம் -
அறம் பொருள் இன்பம் வீடுபேறு பற்றிய நூல்களுக்குச் சார்பாக அமைந்த நூல்களுள் ஒன்று. இது குறிப்பிடும் மறைபொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுணரப்படும் என்று யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிறது.(யா. வி. பக். 491)
லாலி -
ஒருவகை ஊஞ்சற்பாட்டு. இஃது ஒவ்வொரு பகுதியிலும் ‘லாலி’ என்று முடிவது. தாலாட்டு என்றலுமாம்.
வ
வச்சணந்தி மாலை -
தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர் பெயரால் குணவீர பண்டிதர் என்ற சமணர் வெண்பாயாப்பில் இயற்றிய பாட்டியல் நூல்; வெண்பாப் பாட்டியல் எனவும் பெயர் பெறும். நூல் இயற்றப்பட்ட காலம் 12ஆம் நூற்றாண்டு, முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என மூன் றாகப் பாகுபட்டுள்ள இந்நூலுள் 103 வெண்பாக்கள் உள. இப்பாட்டியற்கண் பத்துப் பொருத்தங்களும், பிரபந்த வகைகளும், பா வருணம் முதலிய பலவும் சொல்லப்பட்டுள. இதன் பண்டையுரையாசிரியர் பெயர் தெரியவில்லை.
வச்சத் தொள்ளாயிரம் -
உரிப்பொருட் செய்தியாகிய அகப்பொருளைப் பாடலுட் பயின்ற கருப்பொருளால் தொகுத்து விளங்கச் சொல்லுவது தொகைமொழியாகிய சுருக்கம் ஆம். வச்சத் தொள்ளாயிரம் முழுதுமே இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால் வந்த தாக உரையாசிரியர் பெருந்தேவனார் குறிப்பர். (வீ. சோ. 153 உரை)
வசந்தமாலை -
தென்றலை வருணித்து அந்தாதியாகப் பாடும் பிரபந்தம்.
(இ. வி. பாட். 76)
வசைக்கவி -
வசையைப் பாடும் கவி. கவி-கவிபாடுவோனையும் குறிக்கும். ‘வசைகவி’ என இயல்பாகக் கூறினும் ஆம்.
செம்பொருள் அங்கதம் கலிப்பாட்டினால் வருவன இந் நூலுள் காணப்படும். இஃது ஒருநாடக நூல் போலும். (தொ. பொ. 437 பேரா.)
வசைப்பாட்டு -
‘வசைக்கவி’ காண்க.
வடுகச் சந்தம் -
சந்தம் என்ற அமைப்புடைய வடமொழி விருத்த வகைகள் தெலுங்கு மொழியில் வாஞ்சியார் என்பவர் இயற்றிய வடுகச் சந்தம் என்ற நூலுள் விளக்கமாகக் கூறப்பட்டுள. (யா. வி. பக். 523)
வண்ணக்களஞ்சியம் -
வண்ணக்கவி பாடுதலில் வல்லுநன்; வண்ணக்களஞ்சியப் புலவன்.
வணிகர் இயல் -
வைசியன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறுமாறு. (இ. வி. பாட். 166)
வணிகர் வருணம் -
லவறன என்னும் நான்கு மெய்யும் வணிகர்க்குரிய எழுத் துக்கள். (வருணம் - எழுத்து). (இ. வி. பாட். 16)
வயிரபம் -
இது துறைக் கவிகளுள் ஒன்றாக வீரசோழியத்தில் கூறப்பட் டுள்ளது. ‘பிச்சியார்’ என்ற கலம்பக உறுப்பைக் குறிப்பது போலும்.
இது ‘பயிரவம்’ என்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ‘பைரவம்’ என்ற ஒருவகைச் சிவவழிபாடு கொண்ட பிச்சியார் பற்றியதாகக் கோடல் பொருந்தலாம்போலும். (வீ. சோ. 183 - 1)
வயிர மேகவிருத்தி -
தக்க யாகப்பரணி (16) உரையிற் குறிக்கப்பட்ட இது, நேமிநாத உரையினைக் குறிப்பது என்பது மு. இராகவையங்கார் ஆராய்ச்சியாற்கண்ட செய்தி. (ஆராய்ச்சித் தொகுதி : கட்டுரையெண் : 32)
கணிதத்தின் பகுதிகளாகிய பதினாறுவரி கருமமும், அறு கலாச வண்ணமும், இரண்டு பிரகரணச் சாதியும், முதகுப்பை யும் ஐங்குப்பையும் என்ற இப்பரிகருமமும், மிச்சிரகம் முதலிய எட்டதிகாரமும் ஆகிய இவற்றைக் குறிப்பிடும் நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 569)
பாணினி வியாகரணத்துக்கு வார்த்திகம் செய்த முனிவர். வார்த்திகம் - காண்டிகையுரை.
அகவல் ஓசையிற் பிறழாது, ஆசிரியப் பாவால், போர்க்களத் திற் செல்லும் படையெழுச்சியைக் கூறும் சிறு பிரபந்தம்.
(இ. வி. பாட். 109)
மொழி முதலில் வரும் எழுத்துக்களை அகர முதலாகக் கிடந்த எழுத்து முறையே அமைத்துக் கலித்துறைப் பாடல்க ளாகப் புனையும் பிரபந்தவகை. (சது.)
எ-டு : நெல்லை வருக்கக் கோவை.
அகப்பொருளில் ஏற்பனவற்றைக் கொண்டு அகர வரிசைப் படி வருக்கத்தால் பாடுவது வருக்கக் கோவை. (சாமி. 167)
மொழிக்கு முதலாம் வருக்கஎழுத்தினுக்கு ஒவ்வொரு கவி கூறுதல் என்னும் பிரபந்தம்; அவ்வெழுத்தை முதலாகக் கொண்டு கூறுதல் என்க. (ஒளவையார் பாடிய ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் போல்வன எனலாம்). இனி, உயிரானும், கதசநபமவ - என்னும் உயிரொடு கூடிய மெய் ஏழானுமாக எட்டு ஆசிரியப்பா வந்தால் அவை வருக்கமாலை எனவும் கூறுவாரு முளர். (அப்பர் பெருமாளது தேவாரத்துள் (V-97) சித்தத் தொகைத் திருக்குறுந்தொகையுள் பாடல்கள். 2 - 13 ஆகிய பன்னிரண்டும் உயிரெழுத்தால் வந்த வருக்க மாலை.) (இ. வி. பாட். 66)
பாட்டியல் நூல்களில் ஒன்றான இதன் நூற்பாவொன்று இலக்கணவிளக்கப் பாட்டியலுரையில் மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளது. ஆதலின், சிறந்த பாட்டியல் நூலாக இது 17ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருத்தல் வேண்டும் என அறிகிறோம்.
பன்னீருயிரும், கஙசஞடண என்னும் ஆறு ஒற்றும் மறையோர் வருணத்திற்குரிய எழுத்தாம். தநபமயர என்னும் ஆறு ஒற்றும் அரசர்க்குரியன. லவறன என்னும் நான்கு ஒற்றும் வணிகர்க் குரியன. ழ, ள என்னும் இரண்டு ஒற்றும் வேளாளர்க் குரியன.
‘ஒற்று’ எனப் பொதுப்படக் கூறினும், உயிரொடு கூடிய மெய் என்றே கொள்ளப்படும். (இ. வி. பாட். 14 - 17)
அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் என நால்வகைப்பட்ட சாதி; நால்வேறு வருணப் பால்வேறு காட்டி’ (மணி. 6 : 56)
இப்பாட்டியல் நூல் மங்கலப் பொருத்தத்தினை மாத்திரம் தனது நூற்பொருளாக வரையறுத்துக் கொண்டமையால் இப்பெயர்த்தாயிற்று. சூத்திரம் கட்டளைக் கலித்துறை யாப்புப் பெறுகிறது. சம்பந்த முனிவரால் இயற்றப்பட்டமை யின் இது சம்பந்தர்பாட்டியல் எனவும் படும். இப்பெயர் பெற்றது என்ப. அன்றி ஞான சம்பந்தப் பெருமான் இவருடைய வழிபாட்டுக் குரவராதலும் கூடும். நூலாசிரியர் பெயர் துணியக் கூடவில்லை. காலம் 14ஆம் நூற்றாண்டு எனலாம். இன்ன இன்ன மங்கலமொழிகள் இன்ன இன்ன முதலெழுத்தில் தொடங்கும் பெயரையுடைய பாட்டுடைத் தலைவனுக்கு உரியன என்ற செய்தியை 9 பாடல் களிலும், ஏனைய பொருத்தங்களைப் பொதுவாக இறுதிப் பாடலாகிய பத்தாம் பாட்டிலும் இந்நூல் குறிப்பிடுகிறது.
இனி, வரையறுத்த பாட்டியல் சுட்டும் மங்கலமொழிகளும், அவற்றுக்கு ஏற்ற, பாட்டுரைத் தலைவனுடைய பெயரின் முதலெழுத்துக்களும் வருமாறு : (கா. 4 - 9)
மங்கலமொழி பெயரின் முதலெழுத்து
சீர் - க, கா, கி, கீ; சொ, சோ;
ந, நா, நி, நீ; யா; வ, வா, வி, வீ.
எழுத்து - நு, நூ; யூ.
பொன் - கு, கூ; சௌ; து, தூ, தெ, தே; நெ, நே; பு, பூ;
மெ, மே, மொ, மோ, மௌ.
பூ - கௌ; சை; ம, மா, மி, மீ, மு, மூ; வை, வெள.
திரு, திங்கள் - கொ, கோ.
மணி - கெ, கே.
நீர் - கை; சி, சீ; தி, தீ, தை; நொ, நோ; பை.
சொல் - ஒள; சு, சூ, செ, சே; தௌ; நௌ.
கங்கை - அ, ஆ, ஒ, ஓ; த, தா, தொ, தோ, யோ.
வாரணம் - ஞெ, ஞொ.
குஞ்சரம் - இ, ஈ; ஞா.
உலகம் - ப, பா.
பார் - ச, சா; பெ, பே, பொ, போ; வெ, வே.
தேர் - உ, ஊ, எ, ஏ, ஐ; நை, மை.
கலம்பகம் என்ற பிரபந்தத்தில் குறிப்பிடப்படும். அகத்துறைப் பாடல்களுள் இஃது ஒன்று. தெருவில் மீன் விற்கும் வலையர் குல மகளின் வனப்புமிகுதி தனது உள்ளத்தை வருத்திய செய்தியைக் காமுகன் ஒருவன் எடுத்துக் கூறுவதாக அமையும் அகப்புறக் கைக்கிளைத் துறைப்பாடல். (மதுரைக் கல. 67)
வழியில் நடந்து செல்லும்போது கண்ட காட்சியை வருணித்துப் பாடும் பாடல். சிலப்பதிகாரத்துள் நாடு காண் காதையுள் இவ்வருணனைப் பகுதி நெடிய ஆசிரியத்தால் பாடப்பட்டுள்ளது.
இராமலிங்க அடிகளார் அருளிய ஆறு திருமுறைப் பாடல்கள் எண்ணிக்கை 5818; பலவகைத் தனிப்பாடல்களின் எண்ணிக்கை 152. வள்ளலாரது ‘அருட் பெருஞ்சோதி அகவல்’ 1596 அடிகளாலியன்ற நிலை மண்டில ஆசிரியம்; இவ்விரண்டடியெதுகையாக இகர ஈற்றால் (ஜோதி என) அமைவது.
‘திருவடிப் புகழ்ச்சி’ என்ற ஆசிரிய விருத்தம் 192 சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம். வள்ளலார் தாண்டவராயத் தம்பிரானார்க்கு வரைந்த ‘திருமுகப் பாசுரம்’ 102 சீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம்.
பிரசாதப் பதிகம் தரிசனப் பதிகம் போன்ற பதிக அமைப்புக் களும், குறையிரந்த பத்து, முறையிட்ட பத்துப் போன்ற பத்துப்பாடல் அமைப்புக்களும் முறையே தேவார திருவாசக மரபுகளைப் பின்பற்றியன. ஒரு பொருள் பற்றிப் பல பாடல்கள் எழும் ‘மாலை’களால் ஐந்தாம் திருமுறை அமைந்துள்ளது.
தேவ ஆசிரியம், போற்றித் திருவிருத்தம், நெஞ்சுறுத்த திருநேரிசை முதலாக அமைந்தவை யாப்பின் பெயரால் எழுந்தவை.
அருட்பாவில் நிகழும் உள்ளப் பஞ்சகம், நாரையும் கிளியும் நாட்டுறு தூது, ஞானசிகாமணி திருச்சீர் அட்டகம் முதலி யன பிரபந்தங்களை யொட்டி எழுந்தவை; நடேசர் கொம்மி, சல்லாப லகரி என்பன நாட்டுப் புற இலக்கியங்களை நினைவூட்டுவன. கண்ணி, தாழிசை, சிந்து, கீர்த்தனை என்ற வடிவு கொண்டு இசைக்கப்படும் பாடல்கள் பல உள; பண் வகுப்புப் பெறுவனவும் உள.
வருக்கமாலை வருக்கக் கோவைப் பிரபந்தங்களையொட்டி, பாங்கிமார் கண்ணி அமைகிறது.
திருவருட்பாவில் குறள் வெண்பா 3, குறள் வெண் செந்துறை 3, குறட்டாழிசை 1, நேரிசை வெண்பா 306, வெண்டுறை 1, நிலைமண்டில ஆசிரியப்பா 3, ஆசிரியத்துறை 5, அறுசீர் விருத்தம் 1034, எழுசீர் விருத்தம் 765, எண்சீர் விருத்தம் 1526, பன்னிருசீர் விருத்தம் 125, பதினான்குசீர் விருத்தம் 10, நாற்பத்தெட்டுச்சீர் விருத்தம் 1, 192 சீர் விருத்தம் 1, 102 சீர்விருத்தம் 1, வண்ணவிருத்தம், 1, சந்தவிருத்தம் 8, கலிவெண்பா 2, கொச்சகக் கலிப்பா 190, கட்டளைக்கலிப்பா 15, கலித்தாழிசை 31, கலித்துறை 23, கலிநிலைத்துறை 16, கலிநிலை வண்ணத்துறை 14, கட்டளைக் கலித்துறை 571, கலிவிருத்தம் 208, வண்ணக்கலிவிருத்தம் 10, வஞ்சித்துறை 11, தாழிசை 191, சிந்து 748 எனப் பாவும் பாவினமும் அமைந்துள. (இலக்கணத். முன். பக். 108 - 110)
அறனும் பொருளும் வீடும் என்று கூறும் இம்மூன்று பகுதி யின் பயனை இகழ்ந்து, மங்கையரைச் சேர்தலான் உளதாகிய மெல்லிய காமவின்பத்தினையே பயன் எனக் கொண்டு, தனிச்சொல்லின்றி, இன்னிசைக்கலிவெண்பாவால் தலைவ னது இயற்பெயரமைந்த அவ்வெதுகையில் அப்பொருள் முற்றப் பாடும் பிரபந்தம். இன்பமடல் எனவும் பெறும். (இ. வி. பாட். 96)
அறமும் பொருளும் இன்பமும் இவற்றின் நிலையின்மையான் எய்தும் வீடும் எனப்பட்ட உறுதிப்பொருள் நான்கனையும் மிகுதி குறைவு கூறாமல், கேட்போர் விரும்ப, செஞ்சொல் இலக்கணச் சொல் குறிப்புச் சொல் என்ற மூன்றனுள் செஞ்சொல் மிகுதி தோன்ற, உலகம் தவம் செய்து வீடுபெற, உயிர்களிடம் கருணை கொண்டு கூறுபவன் வாக்கி ஆவான்.
சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீட்டினை, அதற்கு ஏதுவாகிய கேள்வி விமரிசம் பாவனை என்னும் உபாயங்கள் வாயிலாக வாக்கி கூறுவானாம். ஆகவே, ஞானாசிரியனே வாக்கி எனப்படுவான். (இ. வி. பாட் 173)
இறைவன் வீதி உலா வருங்கால் பயன்படுத்தப்படும் இடபம், கருடன் முதலிய வாகனங்களின் சிறப்பை எடுத்துப் பல பாடல்களில் நுவலும் பிற்காலப் பிரபந்த வகை. (நவ. பாட். பிற்சேர்க்கை)
வீரனது வெற்றியைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம்; ஆசிரியப் பாவால் நிகழ்வது (சது)
குடமூக்கிற் பகவரால் செய்யப்பட்ட பாடல் நூல். இது செய்யுள் இலக்கண மரபுக்குச் சிறிதே அப்பாலமைந்த ஆரிடச் செய்யுள் தொகையாகும். (யா. வி. பக். 369) குடமூக்கிற்பகவர் திருமழிசை யாழ்வார் எனவும், வாசுதேவனார் சிந்தம் அவர் அருளிய திருச்சந்த விருத்தம் எனவும் மு. இராகவஐயங்கார் கருதுகிறார். (ஆழ்வார்கள் கால நிலை பக். 43)
ஏதுவும், ஏதுவினாற் சாதிக்கும் பொருளும் ஆகிய அவ் விரண்டற்கும் எடுத்துக்காட்டு முதலியன கொண்டு தன் கோட்பாட்டினை நிறுவிப் பிறர் கோட்பாட்டினை மறுக்கும் திண்ணிய அறிவுடையோன். (இ. வி. பாட். 172)
கொலை புரி மதயானையை வசப்படுத்தி அடக்கினவர் களுக்கும், பற்றிப் பிடித்துச் சேர்த்தவர்கட்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால் தொடுத்துப் பாடுவது.(சதுரகராதி)
வாய்ப்பியர் என்பவரால் இயற்றப்பட்ட பண்டைய இலக்கண நூல். பாக்களின் வருணம் பற்றிய நூற்பாக்கள் நான்கு இந் நூலினின்று மேற்கோளாக யாப்பருங்கல விருத்தியில் காணப்படுகின்றன. மாவாழ் சுரம், புலிவாழ் சுரம் என்ற வாய் பாடுகள் நேர்நேர்நிரை, நிரைநேர்நிரை என்ற சீர்களுக் குரியன; இவை இருப்பவும், இடையே உயிரள பெடை அமைந்த தூஉமணி, கெழூஉமணி என்ற வேறிரண்டு வாய்பாடு களையும் வாய்ப்பியனார் குறிப்பிட்டுள்ளார்.
சந்தம், தாண்டகம் என்ற விருத்த வகைகளை வாய்ப்பிய நூல் பாவினங்களாகக் குறிப்பிடுகிறது.
’சீரினும் தளையினும் சட்டக மரபினும், பேரா மரபின பாட் டெனப்படும்’ எனவும், ’அவை திரிபாகின் விசாதி யாகும்’ எனவும் வாய்ப்பியம் குறிப்பிடுகிறது.
பண் நால்வகைத்து என்றற்கு வாய்ப்பிய நூற்பா மேற் கோளாகும்.
வாகையும் பாடாணும் பொதுவியலும் (புறப்) புறமாகும் என்பதற்கு வாய்ப்பிய நூற்பா மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. சொல்லானது பெயர், தொழில், இடை,உரி என நால்வகைப்படும் என்பதற்கு வாய்ப்பிய நூற்பாக்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள.
செந்துறை, வெண்டுறை என்பன இவையிவை என வாய்ப்பிய நூற்பாவால் விளங்கச் சுட்டப்பட்டுள்ளன.
இந்நூற்பாக்களை நோக்க, வாய்ப்பியம் என்பது இறந்துபட்ட பண்டைய முத்தமிழிலக்கண நூலோ என்று கருத வேண்டி யுள்ளது. (யா. வி. பக்.219, 358, 226, 486, 488, 567, 571, 578, 579.)
மூவசைச் சீர் இறுதி நிரை வருவது வாயு கணத்தைச்சாரும்; மற்ற இரண்டசையும் நேராக வருதல் வேண்டும் என்க. எனவே,தேமாங்கனி என வரும் சீர் வாயுகணம் ஆம். இந்திர காளியர் இக்கணத்திற்கு நாள் சுவாதி என்றார்; பயன் சீர் சிறப்பு நீக்குதல் என்றார். (இ. வி. பாட். 40)
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்துள் ஆறாவது பருவமாகிய வருகை; பாட்டுடைத் தலைவன் அல்லது தலைமகளாகிய குழந்தையைத் தன்னிடம் வருமாறு தாய் முதலியோர் அழைப்பதாகப் பாடும் பருவம். பாடல்தோறும் ஈற்றடியில் ‘வருகவே’, ‘வருக வருகவே’ என்று முடிதல் மரபு.
செய்யுளிலக்கணம் முதலிய கற்றுக் கவி பாடுவோன்
இடைச்சங்க காலத்து நூல்களுள் ஒன்று. (இறை. அ. 1 உரை)
தன் பாங்கன் முதலானோரிடம் தனது காதல் மயக்கத்தைத் தலைவன் கூறுவது பற்றிப் புனையும் ஒரு பிரபந்தம். சாமி. 168
வித்தார கவி (L)
1855 - 1910 வரை வாழ்ந்த வீர பத்திர முதலியாரால் இயற்றப் பட்ட விருத்த அமைப்புக்களைப் பற்றிய இலக்கணநூல். வடமொழி விருத்தங்களின் இயல்பினைத் தமிழ்மொழி விருத்தச் செய்யுட் கண் பலவற்றில் ஒருபுடை ஒப்புமை கண்டு வகைப்படுத்தி மொழியும் இந்நூலுள், பன்னிரண்டு படலங் களும் அவற்றுள் 83 நூற்பாக்களும் உள. விதியைக் கூறும் நூற்பாவே தாம் நுதலிய விருத்த வகைக்கு எடுத்துக்காட்டா மாறு ஆசிரியர் யாத்துள்ள நயம் வியக்கத்தக்கது. இவ்வாசிரி யர் வடமொழி மாத்திரையையும் அட்சரங்களையும் ஒருபுடை கணக்கிட்டுத் தமிழிலுள்ள ஆசிரிய கலி வஞ்சி விருத்தங்களில் ஒப்பனவற்றிற்கு அவ்வடமொழிப் பெயர் களை வழங்கியுள்ளார். வடமொழி விருத்த இலக்கணம் முழுமையும் அப்பெயரிடப்பட்ட தமிழ் விருத்தச் செய்யுள் களில் இருக்கும் என்று எதிர்பாராது ஒருபுடை ஒப்புமையே கோடல் வேண்டும்.
மாத்ராகணம் 4 மாத்திரை கடவாது. வடமொழியிலுள்ள இப்பாகுபாட்டைத் தமிழில் சீர்களிடைக் காண விரும்பு கிறார் இவ்வாசிரியர். அட்சரம் பற்றி வடமொழியில் எட்டுக் கணங்கள் கூறப்படும். அவற்றையும் ஒருவாறு சீருளடங்கத் தமிழ் விருத்தத்துள் இவர் காட்டுகிறார். (வடமொழியில், இலகு - ஒரு மாத்திரைக் குறில்; எ-டு : அ. குரு இரண்டு மாத்திரை நெடில், இரண்டு மாத்திரை பெறும் குற்றொற்று; எ-டு : கா, கல், நெட்டொற்றுக்கும் இரண்டு மாத்திரையே. (எ-டு : கால்.)
பிரபந்தம் தொண்ணூற்று ஆறனுள் அரசனுடைய வில், வாள், வேல், செங்கோல், யானை, குதிரை, நாடு, ஊர், குடை - இவ்வொன்பதனையும் பப்பத்து விருத்தத்தால் ஒன்பது வகையுறப் புகழும் பிரபந்தம். (சது)
கோடைவிழா முதலியவற்றில் வில்லடித்து ஒருவகைப் பண்ணொடு பாடும் பாட்டு. (L)
ஒஓ ய ர ல ழ ற என்னும் ஏழெழுத்துக்களும் விலங்கின் கதிக்குக் கூறும் எழுத்துக்கள். ஐ ஒள வளன என்பன ஐந்தும் நரகர் கதிக்குக் கூறும் எழுத்துக்கள். இவ்விரு கதியையும் குற்ற முடைய கதியென முதல்மொழிக்கு ஆகா என்பர்.
இவற்றுள் ழ ற ள ன உயிர்மெய்கள் ஒருவாற்றானும் மொழிமுதல் ஆகா. யகர ரகர உயிர்மெய்கள் உயிர்க் குற்றெழுத்து ஒன்றனைச் சார்ந்தே மொழி முதலாகும். ஆகவே, தெளிவாக மொழி முதலாவன ஐ ஒ ஓ ஒள வ என்பனவே. இவை மங்கலச் சொல்லின் முதலெழுத்தாதல் ஐயை, ஒண் கதிர், ஓங்கல், ஒளடதம், வாரிதி முதலியவற்றில் காண்க. (இவ்வைந்தன் பொருள் : திரு, திங்கள், மலை, அமுதம், கடல் என்பன) (இ. வி. பாட். 39 விளக்க உரை)
விளக்கத்தனார் பாடிய பலவகைப் பாடல்கள் தொகுக்கப் பட்டு ‘விளக்கத்தனார் பாடல்’ என்று வழங்கப்பட்டன. அவற்றுள், ‘கெடலரு மாமுனிவர்’ என்ற பாடல், கலிப்பா வாய்ப் புறநிலை வாழ்த்துப் பொருளதாய் வந்து ஆசிரியச் சுரிதகத்தான் முடிந்தது என்று யாப்பருங்கல விருத்தியுரை குறிக்கிறது. (யா. வி. பக். 372)
‘புலன்’ எனப்பட்ட வனப்பின்பாற்படுவதாகிய வழக்கு வீழ்ந்த ஒரு நாடகத் தமிழ்நூல். இது வெண்டுறைச் செய்யுளான் இயன்றது. (தொ. செய். 241 நச்.)
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் ஒன்று; வேலும் அதன் தலையும் நீக்கமின்றி ஓங்கியவாறு போல, மன்னனுடைய செய்கோலொடு விளக்கும் ஒன்றுபட்டு ஓங்குவதாகக் கூறுவது. (சது.)
‘வேலின் ஓக்கிய விளக்குநிலை (தொ. பொ. 90) என்று தொல்காப்பியம் கூறும். அது காண்க.
வில்லுப்பாட்டு; வில் போன்ற இசைக் கருவியை ஒலிக்கச் செய்து கதை தழுவிப் பாடும் பாட்டு. ‘வில்லுப் பாட்டு’க் காண்க.
கழிகாமுகனாய்ப் பரத்தையர் சேரியில் திளைத்துத் திரிந்த ஒருவன், கழிந்ததற்கு இரங்கிப் பின்னர்த் தலைவனொரு வனை அடுத்துப் பரிசில் பெற்று மகிழ்ந்து, தன் மனைவிபால் விறலி யொருத்தியைத் தூது விடுத்தமை பற்றிக் கூறும் பிரபந்தம். கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது எனும் பிரபந்தம் சுப்பிரதீபக் கவிராயரால் பாடப் பெற்றது. காலம் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
மெய் கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றான சைவ சித்தாந்த நூல்; பாடல்கள் வினா வாய்பாட்டில் அமைந்த வெண்பாக்களாதலின் நூல் இப்பெயர்த்தாயிற்று. இதன் ஆசிரியர் உமாபதி சிவம். (L)
வீரசோழியம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றுவித்த பதினோராம் நூற்றாண்டுச் சோழமன்னன் ஆகிய வீர ராசேந்திரன் (கி.பி. 1062 - 1070).
தமிழிலமைந்த ஐந்திலக்கணங்களையும் சுருக்கமாகக் கூறும் நூல்களில் காலத்தால் முற்பட்டது; வீர (ராஜேந்திர) சோழன் காலத்தது (கி.பி. 1062 - 1070); அவன் பெயரால் இயற்றப் பெற்றது. இதன்காலம் 11ஆம் நூற்றாண்டு. பொன்பற்றி என்னும் ஊரினை யாண்டு வந்த சிற்றரசர் புத்தமித்திரனார் இந்நூலாசிரியர். ஆக்குவித்தோன் பெயரால் இந்நூல் பெயர் பெற்றது. இதன் உரையாசிரியர் பெருந்தேவனார். நூலாசிரிய ரும் உரையாசிரிரும் புத்தமதச் சார்பினர். நூல் 183 கட்டளைக் கலித்துறை நூற்பாக்களால் இயன்றது. எழுத்து, சொல், யாப்பின் பிற்பகுதி இம்மூன்றதிகாரங்களும் பெரும்பான்மை யும் வடமொழி மரபினைத் தழுவியன. பொருளதிகாரத்துள் பாடாண்பகுதியுள் நிகழும் உரைப்பகுதி நாடகம் பற்றிய பல வடமொழிச் செய்திகளைத் தருகிறது. அலங்காரப் படலமும் வடமொழி அணிகள் பலவற்றைத் தழுவியது. சுருங்கக் கூறின் வடமொழி இலக்கணநயங்களைத் தமிழிலும் கண்டு மகிழுமாறு இருமொழிப்புலமையும் மிக்க புத்தமித்திரனார் இயற்றிய இந்நூற்கு அவ்வாறே புலமை மிக்க பெருந்தேவ னார் உரை ஒருவாறு விளக்கமாக அமைந்துள்ளது. ஆயின், படியெழுதுவோரால் நேர்ந்த பிழைகள் பலவும் நீங்கத் தூயதொரு பதிப்பு இன்று வெளிவருதல் மிக இன்றியமை யாத ஒன்று. என்று, புதுவை பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளி இந்நூலை விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது. (திருவரங்கம் ஆண்டவன் ஆசிரியப் பதிப்பு.)
எழுத்தும் சொல்லும் யாப்பின் பிற்பகுதியும் வடமொழி இலக்கணங்களைத் தமிழில் வலிந்து புகுத்தியவாகத் தோன்றும்.
பெஸ்கி என்ற இயற்பெயருடைய இத்தாலிய நாட்டுப் பாதிரியார். தமிழ்நாட்டில் கிறித்தவமதம் போதகராய் வந்து, தமிழ்மொழிப் பயிற்சி நிரம்பப் பெற்றுச் சதுரகராதி, தேம்பாவணி, தொன்னூல் விளக்கம் முதலாகிய பல தமிழ் நுல்களைப் பல துறைகளில் இயற்றியுள்ளார். இவர் காலம் கி.பி. 1680 முதல் 1747 வரை.
வீரனைப் புகழ்ந்து பாடும் பாடல் வகை. (L)
96 பிரபந்தங்களுள் ஒன்று; வெட்சிமாலை சூடிப் பகைவர்தம் ஆநிரையைக் கவர்ந்து வந்த வீரனுடைய வெற்றித் திறத் தினைத் தசாங்கத்தொடு புகழ்வது. (சது.)
பொருள் கடைசிநூல் (பக். 291)
இறந்துபட்டனவாகிய இடைச்சங்க நூல்களுள் ஒன்று.
(இறை. அ. 1 உரை)
வெண்டுறைச் செந்துறைப் பாட்டாவன : கலியும், வரியும், சிற்றிசையும், பேரிசையும், சிற்றிசைச் சிற்றிசையும் என்ற இவை முதலாயின வெல்லாம். இவை பாணியும் இயமும் தூக்கும் பொருந்துமாறு இயன்றவை. (யா. வி. பக். 580)
குணவீர பண்டிதர் என்னும் சமணப்புலவர் தம் ஆசிரியரான வச்சணந்தி என்பார் பெயரால் ‘வச்சணந்தி மாலை’ என்று இயற்றிய இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்த பாட்டியல் நூலாதலின், வெண்பாப் பாட்டியல் எனப் பெருவரவிற் றாகப் பெயர் பெற்றது. காலம் 12ஆம் நூற்றாண்டு என்ப. இதன் உரையாசிரியர் பெயர் தெரிந்திலது. இப்பாட்டியல் முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என முப் பாகுபாடுகளைக் கொண்டது. அவற்றுள் 103 வெண்பாக்கள் உள.
புறப்பொருள் வெண்பாமாலை; புறப்பொருளை அழகிய 361 வெண்பா எடுத்துக்காட்டுக்களால் விளக்கும் இலக்கண நூல். இந் நூலாசிரியர் ஐயன் ஆரிதனார் சேரர் பரம்பரையில் தோன்றியவர்; ஆரித கோத்திரத்தினர். சாஸ்தாவாகிய ஐயனாரது பெயராக இப்பெயர் பல விடத்தும் வழங்கு கின்றது. திருவிடைக்கழியைச் சார்ந்த குராஞ்சேரியிலுள்ள சாஸ்தாவின் பெயர் ஐயனாரிதன் என்பது.
பன்னிருபடலத்தை முதனூலாகக் கொண்டு, இந்நூல், வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை பாடாண் பொதுவியல் கைக்கிளை பெருந்திணை எனப் பன்னிரு படலங்களைத் தன் உட்பிரிவாகக் கொண்டு, படலத்துள் சூத்திரம் துறைகளைப் பெயரும் தொகையும் குறிக்க, துறைவிளக்கமாக இவ்விரண்டடியாலமைந்த கொளு அமைய, மேற்கோளாக வெண்பா அப்புறப்பொருள் துறையை விளக்குமாறு யாக்கப்பெற்றுள்ளது. பொதுவிய லுள் பொதுவான துறைகளும், சிறப்பிற் பொதுவியற்பால, காஞ்சிப் பொதுவியற்பால, முல்லைப் பொதுவியற்பால பற்றிய துறைகளும் 4 நூற்பாவால் பெயர் குறிக்கப்பட்டுள. கைக்கிளைப் படலத்துள் ஆண்பாற் கூற்றுக்கு அமைந்த துறைகளும், பெண்பாற் கூற்றுக்கு அமைந்த துறைகளும் 2 நூற்பாவால் பெயர் சுட்டப்பட்டுள. பெருந்திணைப் படலத் துள் பெண்பாற் கூற்றும் இருபாற் கூற்றுமாகிய துறைகள் 2 நூற்பாவால் சொல்லப்பட்டுள. இறுதியாக, ‘ஒழிபு’ என்பது பற்றிய நூற்பாவில் பாடாண் ஒழிபாக வரும் ஒரு துறையும், வாகையொழிபாக வரும் 18 துறையும் இடம் பெற்றுள. இவ்வாற்றால் இந்நூலுள் 9 + 4+ 2 + 2+ 1 = 18 நூற்பாக்கள் உள.
தொல்காப்பிய உரையாசிரியர்களாலும், பரிமேலழகர், அடியார்க்குநல்லார், புறநானூற்றுரையாசிரியர் முதலியோ ராலும் இந்நூல் வெண்பாக்கள் மேற்கோள் காட்டப்பெற் றுள. இலக்கணவிளக்க நூலார் இந்நூலையே தம் புறத்திணை யியலுட் பெரும்பான்மையும் எடுத்தாண்டுள்ளனர். இவை யெல்லாம் இந்நூற் பெருமைக்குச் சான்று பகர்வன. புற நானூற்றுப் பாடல்கட்குத் திணைதுறைகள் இந்நூல்வழியே குறிக்கப்பட்டுள.
தொல்காப்பியம் புறத்திணையியற் செய்திக்கும் இந்நூற் செய்திக்குமிடையே வேற்றுமைகள் சில உள. காஞ்சி என்று தொல்காப்பியனார் குறித்தது நிலையாமையைக் கூறுவது. ‘காஞ்சிப் பொதுவியற்பால’ என இந்நூலுள் வரும் துறைகள் தொல்காப்பியனார் கருத்தைச் சிறுபான்மை சுட்டுவன. இவ்வாசிரியர் வாகை ஒழிபாகக் கூறிய செய்திகள் (18ஆம் சூத்திரம்) தொல்காப்பியத்தில் ‘பால் அறிமரபின் பொருநர் கண்ணும்’ (புறத். 20 : 7 நச்) என்னும் ஓரடிக்கண்ணேயே குறிப்பாக உணர்த்தப்பட்டன. இரண்டு நூல்களிடையேயும் பல செய்திகள் தம்முள் ஒப்புமையுடையன. ஆயின் இந்நூற்கு முதல்நூல் தொல்காப்பியம் அன்று; பன்னிரு படலமே.
நூல் தொடக்கத்தே விநாயக வணக்கமும், சிவபிரான் வணக்க மும் பாடப்பட்டிருத்தலின், ஆசிரியர் சிவ வழிபாடுடை யராதல் தெளிவு. ‘புலவராற்றுப்படை’ முதலான துறைகளில் திருமால் முதலிய பிற கடவுளரையும் சிறப்பப் பாடியுள்ளமை இவரது சமயப் பொறையைப் புலப்படுத்தும்.
12 அடிகளால் ஆசிரியப்பாவான் இயன்ற சிறப்புப் பாயிரம் நூற்கு அணி செய்கிறது. நூற்கு உரை இப்பாடலினின்று தொடங்குகிறது.
இவரது காலம் 10ஆம் நூற்றாண்டு என்ப. வெண்பா அளவடிக்கோதிய எழுத்து வரையறை மிகாது செல்வது இவரது காலத்தின் சேய்மையைப் புலப்படுத்தும். திட்ப நுட்பம் சான்று சிறந்த செய்யுட்சொற்களால் தேர்ந்து யாக்கப்பட்டன இவ்வெண்பாக்கள். குறளடியாகவும் அளவடியாகவும் கொளு நிகழ்கிறது.
இந்நூற்கு உரையாசிரியர் (சயங்கொண்டசோழ மண்டலத்து மேற்காநா(னா)ட்டு மாகறலூர் கிழார்) சாமுண்டி தேவ நாயகர் என்பார். அப்பெயரால் அவர் வேளாண் மரபினர் என்பது தெளிவு. இவ்வழகிய நயமிக்க உரையில்லையேல், இந்நூலின் அருமை பெருமைகள் நமக்குப் போந்திரா. உரை பொழிப்புரையாகச் சொற்கள் கிடந்தபடியே அமைந்துள் ளது; ஒரோவழி இலக்கணக்குறிப்பு இடம் பெறுகிறது. தொல்காப்பிய மேற்கோளொடு, பிற இலக்கிய மேற்கோளும் மிக இன்றியமையாமைப்பட்டவிடத்தே காணப்பெறு கின்றன. உரையில் வடசொற்கள் ஓரளவு பயில்கின்றன.
இதன் முதற்பதிப்பு டாக்டர் ஐயரவர்களால் 1895இல் வெளி வந்தது.
கார்த்திகை முதலாக ஆயிலியம் ஈறாக ஏழு நாள்களும் வெண்பாவிற்குரியன. (கார்த்திகை, உரோகணி, மிருகசீரிடம் திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம் என்பன.)
(இ. வி. பாட். 120)
முந்நூறு வெண்பாக்கள் கொண்ட பிரபந்த வகை.
புன்மையான (- கொச்சையான) சொற்களால் பாடுவோன்.
(இ. வி. பாட். 175)
இனி, பிறரைத் தொடங்கச் செய்து கவிபாடுவோன் எனவும், பிறர் தொடங்கிப் பாடும் துதிக்கவி எனவும் பொருள் சொல்லப் பெறும். (W) (L)
சதுரகராதி கூறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று; பகைவர் கவர்ந்துகொண்ட தம் ஆநிரையை மீட்போர் கரந்தைப்பூமாலை சூடிப் போய் மீட்பதைக் கூறுவது. (சது.)
முதற்சீர்ப் பொருத்தமாகச் சொல்லப்பட்ட பத்தனுள், வருணப் பொருத்தத்தின்கண், வேளாளர் வருணத்திற்குரிய எழுத்துக்களாகச் சொல்லப்பட்டவை ழ ள என்பன. (இவை சீர் முதலாகாமையின் இவற்றைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டா ஆயிற்று.) (இ. வி. பாட். 17)
வேற்றிசைப்பா -
சருக்கம் அல்லது இலம்பகத்தின் முடிவில் வேறுபாடான இசை பெற்று வரும் பா. (திவா. பக். 232)
வேறு வகை இரட்டைமணி மாலை -
வெண்பாப் பத்தும், விருத்தம் பத்தும் அந்தாதித் தொடை யான் பாடுதலும் இரட்டைமணிமாலையாம்.(இ. வி. பாட். 69)
வேனின்மாலை -
இளவேனிலையும் முதிர்வேனிலையும் சிறப்பித்துப் பாடுவ தொரு பிரபந்தம். (இ. வி. பாட். 73)
வைத்தியநாத தேசிகர் -
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர்; குட்டித் தொல்காப்பியம் எனப்படும் இலக்கணவிளக்கம் என்ற இலக்கண நூலை இயற்றியவர்; அதற்குத் தாமே உரை வரைந்துள்ளார். (பொருளதிகாரம் இறுதி இயலாகிய பாட்டியற்கு இவர் மைந்தர் உரை வரைந்தார் என்ப.) திருவாரூர்ப் பன்மணிமாலை, நல்லூர்ப் புராணம், பாச வதைப் பரணி முதலிய இலக்கியங்களும் இவரால் இயற்றப் பெற்றவை. படிக்காசுப் புலவர் இவருடைய மாணாக்கர். இவருடைய வேறு பெயர் வைத்தியநாத நாவலர் என்பது.
வைதாளி -
பொதுவாக அரசரைக் காலையில் துயிலெழுப்புமுன் புகழ்ந்து பாடும் பாட்டு. (மதுரைக். 671 நச்.)
வைநாசிகம் -
பாட்டுடைத்தலைவன் பிறந்த நாள் தொடங்கி எண்பத் தெட்டாங்கால் பொருந்திய நாள்; அஃதாவது இருபத்திரண் டாவது நட்சத்திரத்தின் கடைசிப் பாதம். இது நீக்கப்பட வேண்டிய நாள்களுள் ஒன்று.
பாட்டுடைத் தலைவன் பெயர்க்கு முதற்சீர் அமைக்கும் போது இது நீக்கப்பட வேண்டும். (இ. வி. பாட். 37)
பாயிரம், மரபியல்
அ
பெருக்கத்தைக் குறையாதவாறு செய்யும் வலியுடைத்தாகிய அழுக்காறின்மை. இஃது ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப்பாயிரத்துள் நல்லாசிரியனுக்குரிய பண்புகளிடை ஒன்று. வன்பு, வலி என்பன ஒரு பொருளன.
‘அஃகா அன்பு’ என்றல் பொருந்தாது. அன்பு முதலாயின ஆசிரியனுக்குரிய முதல்உறுப்பு ஆகிய குடிப்பிறப்பின் பொது இயல்பின்கண் அடங்கும். பிற உறுப்பினுள் அழுக்காறாமை கூறப்படவில்லை. அழுக்காறிலாமை இன்றேல், ஏனைய உறுப்பெல்லாம் ஒருங்கு இருப்பினும் பயனின்று. புறப்பொருள் வெண்பா மாலையுள் ‘அவையமுல்லை’ பற்றிய வெண்பா விலும் அன்பு கூறப்படாமல் அழுக்கா றாமையே கூறப்பட் டுள்ளது. ஆதலின் ‘அஃகாவன்பு’ என்பதே நல்லாசிரியன் பண்பினுள் ஒன்றாகும். (பா. வி. பக். 15,16)
அகக்காழ் - மரத்தினுள்ளே உறுதியான (வயிரப்) பகுதி. அகக்காழ் உடையது மரம். அதற்குரிய உறுப்புக்களாவன : இலை, குருத்து, தளிர், மலர், தோடு, கப்பு, கம்பு, கொத்து, கொம்பு, நனை, இதழ், தாது, அல்லி, புல்லி, முளை, கிழங்கு, காய், பழம், தோல், செதில், வீழ் என்பன. (தொகை.)
இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை என்பன. (தொ. பொ. 642 பேரா.)
கோடு, காழ், தழை, கப்பு, வளார், தளிர், முருந்து, முகை, மலர்க் கொத்து, இலை, பயின், மொட்டு, மலர் (தாது, தேன், அகவிதழ், புறவிதழ் என்பன பூவின் உறுப்புக்கள்), முளை, வேர், கிழங்கு, விதை, பிஞ்சு, பசுங்காய், பழம், தோல் முதலாயின. (பிங். 2795-2831)
“அகத்தியன் அருளிச்செய்த சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இருநூலும் தமிழிற்குச் செயற்கை முதல்நூல் ஆயின.”
“நாரதன் முதலியோரும் அகத்தியனை வழிபட்டுத் தலைவர் ஆயினார் ஆவர் ஆகலின், பிறிதொரு செயற்கை நூலின் வழித்தாக நூல் செய்யார் ஆகலானும், நாரதன் இசைத்தமிழ் ஒன்றே முற்றக் கூறினான் எனவும் ஏனையோர் ஒரு தமிழா யினும் முற்றக் கூறாது சிற்சில பகுதியே கூறினார் எனவும் பிறநூல்களான் அறியப்படலானும், அவ்வாசிரியர் செய்த நூலெல்லாம் அகத்தியத்துக்கு இணையாகிய செயற்கை முதல்நூல் எனப்படும்.” (பா. வி. பக். 97)
அகத்தியனுக்கு மாணாக்கர் பன்னிருவர். தொல்காப்பியன் முதலான அவருள்ளே, தொல்காப்பியன், அவிநயன் முதலா யினார் முதல்நூலாகிய அகத்தியத்தினின்று இயற்றமிழை வேறுபிரித்து வழிநூல் செய்தனர். பெருநாரை, பெருங்குருகு முதலாய நூலுடையார் இசைத்தமிழை வேறுபிரித்து வழி நூல் செய்தனர். அவ்வழிநூல்கள் எல்லாவற்றினும் சிறந்தது சிகண்டி செய்த இசை நுணுக்கம். முறுவல், சயந்தம், குண நூல், செயிற்றியம் முதலாய நூலுடையார் நாடகத்தமிழை வேறுபிரித்து வழிநூல் செய்தனர். இசைநுணுக்கம் போலவே, தொல்காப்பியத்தின் முன்னர்த் தோன்றிய வழிநூல்கள் பூதபுராணமும் மாபுராணமும் ஆம். தொல் காப்பியன் முதற் பன்னிருவரும் ஓரொருவர் ஓரொரு படலமாகப் பன்னிருபடலம் என்னும் வழிநூல் ஒன்றும் செய்தனர். (பா. வி. பக். 104.)
முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் இயற்றிய நூல்கள் செயற்கை முதல்நூல் எனப்படுவன. செயற்கை முதல்நூலெல்லhம் முனைவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழி இயற்றப் பட்டமையின், அவற்றுள் முடிந்த நூலாகிய அகத்தியத்திற்கு ஏனையவை இணைநூல் ஆயின. (பா. வி. பக். 98)
அகப்பாட்டெல்லையாவது ஒரு பரப்பின் கிடக்கையினை அகப்படுத்தும் எல்லை. இவ்வாறு அகப்பாட்டெல்லை என்று வேங்கடம் குமரியைச் சுட்டுவது பொருந்தாது என இளம்பூரணரையும் நச்சினார்க்கினியரையும் அரசஞ்சண் முகனார் மறுப்பார். குமரியை யாறு என்றல் பொருந்தாது. வடக்கின்கண் எல்லையாக ஒருமலை கூறினார்க்குத் தெற்கின்கண்ணும் நிலையுடைத்தாய ஒருமலை கூறலே முறையென்று கருதுவார் சண்முகனார்; தொல்காப்பியரும் பிற ஆசிரியரும் அகப்பாட்டெல்லை புறப்பாட்டெல்லை என யாண்டும் கூறாமையைச் சுட்டுவார். குமரியை அவ்விரு வரும் குமரியாறு எனக் கொண்டனர். (பா. வி. பக். 201)
வடவேங்கடம் தென்குமரி : நிலம் கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும் வேங் கடத்தை எல்லையாகக் கூறினார்; குமரியும் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார்; இவ்விரண்டனையும் காலையே ஓதுவார்க்கு நல்வினை உண்டாமென்று கருதி இவற்றையே கூறினார்; இவை இரண்டும் அகப்பாட்டெல்லையாயின. (தொ. சிறப்புப் பாயிரம். நச்.) எனவே, ஒரு நிலப்பரப்பின் வெளி எல்லைகள் அதற்கு அகப்பாட்டு எல்லையாகும்.
உரைவகைகளுள் அகலமும் ஒன்று; இன்றியமையாத யாவையும் விளங்க ஐயம்நீங்கக் கடாவிடைகளால் பரந்துபட உரைப்பது. இவ்வுரை, அகலம் என்றே கூறப்படும். விருத்தி யுரை என்பதும் அது. (தொ. பொ. 659 பேரா.)
நூலுக்கு அழகாம் பத்தனுள் இதுவும் ஒன்று. அஃதாவது சூத்திரம் சில்வகை எழுத்தால் செறிந்து மிகவும் விரிந்து கிடவாத நடையை யுடையது ஆதல். (மா. அ. 24.)
நூலை அணிந்து முன்னர் உரைக்கப்படுதலின், பாயிரம் அணிந்துரை என்னும் பெயர்த்தாயிற்று; புனைந்துரை என்பதும் அது. (நன். 1)
அதங்கோட்டாசானுக்குக் குற்றம் அற ஆராய்ந்து கூறல்.
அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவருள்
அதங்கோட்டா
சிரியரும் ஒருவர்; தொல்காப்பியனார்க்கு ஒருசாலை மாணாக்கர். அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி,
“நீர் தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க”
என்று கூறுதலானும், தொல்காப்பியனாரும் பல்காலும்
சென்று, “யான் செய்த நூலைக் கேட்டல் வேண்டும்” என்று கூறுத லானும், “இவ்விருவரும் வெகுளாமல் இருக்க, இந்நூற்குக் குற்றம் கூறிவிடுவல்” எனக் கருதிப் பல
வினாக்களை எழுப்ப, தொல்காப்பியனார், கூறிய
வினாவிற்கெல்லாம் விடை கூறுதலின் ‘அரில்தப’
என்றார். (தொ. சிறப்புப். நச்.)
அகத்தியனாருடைய மாணாக்கர் பன்னிருவருள் இவரும் ஒருவர்; தொல்காப்பியனார்க்கு ஒருசாலை மாணாக்கர்; நான்மறையும் நன்கு கற்றவர். அதங்கோடு என்கிற ஊரில் தோன்றிய ஆசிரியர் ஆதலின் இப்பெயர் பெற்றார் என்பர் நச்சினார்க்கினியர். இவர் கூறிய வினாவிற்கெல்லாம் தொல் காப்பியனார் குற்றமற விடையிறுத்தார். (தொ. சிறப்புப். நச்.)
‘அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து’ என்பது தொல் காப்பியச் சிறப்புப்பாயிரஅடி. அதங்கோடு இக்காலத் திரு விதாங்கூர் என்ப.
அஃதாவது நெறிப்பட யாத்தல். வழியின்வகை நான்கனுள் ஒன்று ‘மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்’. மொழி பெயர்த்தலாவது பிற பாடையாற் செய்யப்பட்ட பொரு ளினைத் தமிழ்நூலாகச் செய்தல். மொழிபெயர்த்துச் செய்யுமிடத்து அது கிடந்தபடியே செய்யப்பட வேண்டு மன்றித் தொகுத்தும் விரித்தும் தொகைவிரியாகவும் செய்தல் ஆகாது. அவ்வாறு செய்யின் அஃது இருமொழியார்க்கும் பயன்படாது. (தொ. பொ. 652 பேரா.)
நெறிப்படுதல். ‘அதர்ப்பட யாத்தல்’ காண்க.
(தொ. பொ. 652 பேரா.)
அ) அதிகரித்தலாவது அதிகாரம் செலுத்துதல். அஃது இருவகைப்படும். ஒன்று, வேந்தன் இருந்த இடத்தே இருந்து கொண்டு தன் நிலம் முழுதும் தன் ஆணைப்படி நடக்குமாறு செய்வது போல, ஒரு சொல் தன்னிடத்தேயே நின்று கொண்டு பல சூத்திரங்களும் இயல்களும் தன் பொருளையே கருதி வருமாறு செய்வது; மற்றொன்று, சென்று படை நடத்தும் சேனைத்தலைவர் போல, ஓரிடத்தே நின்ற சொல் பல சூத்திரங்களொடும் சென்று இயைந்து தன்பொருளைக் கொடுக்கச் செய்வது. (நன். எழுத். முன்னுரை சிவஞா. )
ஆ) பதினான்கு வகையால் நூலுக்கு உரை உரைக்கப்படுவன வற்றுள் அதிகாரம் என்பதும் ஒன்று. அஃதாவது அதிகாரத் தொடு பொருந்த உரைக்கவேண்டு மிடத்தே உரைத்தல். (நன். 21)
இ) அதிகரித்தலாவது கற்றல், ‘அவைநீ அதிகரித்தற் குரியை’
அரிசமய, பராங்குச. 78 (L)
சூத்திரவகை ஆறனுள் அதிகாரம் என்பதும் ஒன்று. அஃதாவது ஆற்றொழுக்கு, அரிமான் நோக்கு, சார்ச்சிவழி ஒழுகுதல் (பருந்தின் வீழ்வு), தவளைப் பாய்த்து என்னும் நால்வகைச் சூத்திர நிலையுள் ஒன்று ஏற்கும் வகையான் இயைந்து பொருள் விளைப்பது. (யா. க. சிறப்புப். உரை)
அதிகாரவிறுதியிற் கூறும் புறனடைச் சூத்திரம்.
எ-டு : ‘செய்யுள் மருங்கினும்’ (தொ. சொ. 463) என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரப் புறனடை
அதிகாரம் என்னும் சொல் முறைமை, இடம், உரிமை (தொ. பொ. 665 பேரா.) எனவும், தகுதி (வேதா. சூ. 19) எனவும், நூற் பிரிவு எனவும், நூல் எனவும் பொருள்படும்.
‘அதிகரித்தல்’ காண்க.
தொல்காப்பியனார் சுட்டும் உத்திவகைகளுள் இரண்டா வது. முன்நின்ற நூற்பாவின்பொருள் பின் வரும் நூற்பாக்க ளுள் ஒன்றற்கோ பலவற்றிற்கோ தேவைப்பட்ட அளவு தொடர்பு கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)
எ-டு : ‘குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்’ (எ.33) என்ற நூற்பா விலுள்ள ‘நிற்றல் வேண்டும்’ என்ற தொடரைக் குற்றியலுகரம் வல்லா றூரர்ந்தே. (எ. 35) என்ற நூற்பாவிற்கும் கொள்ள வைத்தல்.
எழுத்ததிகாரத்தொடு சொல்லதிகாரத்திற்கும், சொல்லதி காரத்தொடு பொருளதிகாரத்திற்கும் இயைபு கூறுதலும், அதிகாரத்துள் ஓத்துப் பலவாதலின், அவை ஒன்றன்பின் ஒன்று வைக்கப்பட்டதற்கு இயைபு கூறுதலும் போல்வன அதிகார முறைமை என்ற உத்திவகைக்கு இனம் என்று கொள்ளப்படும்.
உடன்பிறந்தாருள் ஒருவர்க்கு உரியது வழித்தோன்றி னாருக்கும் ஒருவழி உரியவாமாறு போல, முன்னர் நின்ற விதி பின்னர் வந்ததற்கும் வேண்டியவழிக் கொள்ளப்படும் என்பது உத்திவகை யாயிற்று. பேரா.
முன்னர்ப் பலபொருள் அதிகரித்தவழிப் பின்னும் அம்முறை யினானே விரித்து உணர்த்துதல். (656 இள.)
எ-டு : ‘உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே’ (சொ.1) என்று கூறியதற் கேற்ப, உயர்திணையவாம் ஆடூஉ அறிசொல், மகடூஉ அறிசொல், பல்லோர் அறிசொல் என்பனவற்றை முன்னர் முறையே கூறிப் பின்னர் ஒன்றறிகிளவி, பலவறிகிளவி என்னும் அஃறிணையவாம் பால்களை அடுத்து நிரலே கூறுதல்.
ஓரிடத்து நின்ற சொல் அடுத்து வரும் நூற்பாக்களோடு இயைதலும் அதிகார முறையாகும் என்பர் மாறனலங்கார உரையாசிரியரும். அது, ‘அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்’ (எ. 203) என்ற நூற்பாவிலுள்ள ‘வேற்றுமை அல்வழிக் கசதபத் தோன்றின்’ என்ற தொடரினை, அடுத்து வரும் ‘வினையெஞ்சு கிளவியும்’ என்ற நூற்பாவின்கண்ணும் கொள்ளுதல் போல்வது.
இதனை நன்னூல் ‘ஓத்து முறை வைப்பு’ எனவும் (14), மாறனலங் காரம் ‘உரைமுறை வைப்பு’ எனவும் (25) கூறும்.
இச்சொல், உரிமையுடையவன், தகுதியுடையவன், கற்றற் குரியவன் எனப் பொருள்படும். (நன். சிறப்புப். சிவஞா. விரு.) (L)
மாட்டெறிந்தொழுகல். பி.வி. 37
1) ஒன்றற்குரியதை மற்றொன்றிற்கு ஏற்றிக் கூறுகை. 2) ஒப்புமையா னுணர்த்துகை. ‘அதிதேச வாக்கியம்’ (தர்க்கபா. 29) (L)
இலக்கிய மல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லும் குற்றம் இது. பசுவுக்குக் கொம்புண்டு எனின், கொம்புடைய மான் முதலிய பிற விலங்கின்மேலும் இவ்விலக்கணம் செல்லுதலின், இஃது அதிவியாப்தி என்னும் குற்றமாம். மிகைபடக்கூறல் என்பதும் அது.
அந்தணர் - அழகிய தண்ணளியை யுடையார் எனப் பரி மேலழகரும் (குறள். 30), அந்தத்தை (வேதாந்த தத்துவத்தை) அணவுவார் (-அறிவார்) என நச்சினார்க்கினியரும் (கலி. கடவுள்.1) பொருளுரைப்பர்.
முந்நூலாகிய முப்புரிப்பூணூலும், குண்டிகையாகிய கமண்டலுவும், முக்கோலாகிய திரிதண்டமும், ஆமையின் மேற்புறம் போன்ற அமைப்பாகச் செய்த ஆமைமணையாகிய மரஇருக்கையும் போல்வன அந்தணர்க்கு உரியன. (இ. வி. பாட். 164)
குடையும் செருப்பும் கூறலும்உண்டு. துறவிகளான ஹம்ஸர், பரமஹம்ஸர் ஆகியோர் ஒருகோலுடையார். அவர்கள் நூல் களிற் கூறப்படார். முக்கோல் கொண்டவர்கள் பஹூதகர், குடீசகர் என்பார். அன்னோர் உலகியலால் துறவாது, பிச்சை கொண்டும் பிற இடத்திருந்து தமது உண்டும் வாழ்வார். அவர்களே ஈண்டுக் கூறப்பட்டாராவார்.
வெண்பாப் பாட்டியல் கூறும் அந்தணர் இயல்.
வேதங்கள் நான்கும் அங்கம் ஆறும் கற்றிருப்பதும், கோவ ணம் உடுத்தலும், ஆஹவநீயம் கார்ஹபத்யம் தக்ஷிணாக்னி என்னும் முத்தீ ஓம்பலும், நல்வேள்வி வேட்டலும், குடை - சமித்து எனும் புரசு அரசு ஆகியவற்றின் சுள்ளிகள் - குண்டிகை - தருப்பை - என்னுமிவற்றை எப்போதும் கையில் வைத்திருத்தலும், தமக்கெனக் கோத்திரம் ஒன்றுடைமையும் போல்வன அந்தணர் இயல்பு. மேலும், எப்போதும் சிவன் சேவடிகளைப் போற்றும் செயலுடையார் அந்தணர். அன்னார்க்கு உவமையாகத் தீயையும் பிரமனையும் கூறுதல் மரபு. அவர்க்கு உரிய தொழில் நான்மறைகளை ஓதலும், பிறர்க்கு அவற்றை ஓதுவித்தலும், பலவகை வேள்வியைத் தாமே வேட்டலும், பிறரை வேட்பித்தலும், பிறர்க்குத் தக்கிணை கொடுத்தலும், தாமும் தானம் முதலியன ஏற்றலும் என ஆறு. (வெண்பாப். பொது. 12, 13)
நவதீதப்பாட்டியலும் இக்கருத்துக்களையே நவிலும். (12) ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல் என ஆறு புரிந்து ஒழுகும் அந்தணர் எனப் பதிற்றுப்பத்துக் கூறும். (பதிற். 24 : 6- 8)
பரிசில்கடாநிலையும் பரிசில்விடையும் போல்வனவும், பாடாண்திணைக்குரிய கைக்கிளைப் பொருள் பற்றியும் கொடைத் தொழில் பற்றியும் பெறும் பெயர்களாகிய காளை, இளையோன், நெடுந்தகை, செம்மல் முதலாயினவும், இன்ன பிறவும், அந்தணர்க்கு இயல்பு வகையான் உரிய அல்ல. புனைந்துரை வகையான் ஒரோவழிக் கூறவும்படும். (தொ. பொ. 628 பேரா.)
அந்தணாளர்க்கு அரசுரிமை எய்தி நிற்றல் விலக்கப்படாது. அரசர் இல்லாத விடத்தே அந்தணரே அவ்வரசியல் பூண்டு ஒழுகலாம் என்பது. (தொ. பொ. 637 பேரா.)
அந்தணர்மாலை - தாமரை; கொடி- வேதம்; பொருள் தருப்பை, முஞ்சிப்புல், சமித்து. (பிங். 730, 731)
ஆண்ஆட்டினை வழங்கும் மரபு பற்றிய பெயர் இது. ஆண்பால் மரபு பற்றிய பெயராகிய இது குரங்கினைக் குறித்தலும் உண்டு என்பர் பேராசிரியர். (தொ. மர. 2, 47)
ஐந்திரம் என்னும் இந்திரனால் இயற்றப்பட்ட வடமொழி இலக்கணநூல். அயிந்திரம் (உத்தர.ரா.அனும.46) ‘ஐந்திரம்’ காண்க. (L)
புதுநூல், நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்கு ஏற்பித்தல். அரங்கேற்று - அரங்கேற்றுதல். (சிலப். 3) அரங் கேற்றுப்படி எனினும் ஒக்கும். (L)
புதுநூல் முதலாயின சபைக்குமுன் அங்கீகாரத்திற்கு வருதல். (அங்கீகாரம் - ஏற்றுக்கோடல்) (L)
படையும், குடையும், கொடியும், முரசும், நடைநவின்ற குதிரையும், யானையும், தேரும், போர்ப்பூ தார்ப்பூ என இருவகைப்பட்ட மாலையும், முடியும், கவரி அரியணை அரண் முதலிய பொருந்துவன பிறவும் அரசர்க்கு உரியன என்பது. (தொல். பொ. 626 பேரா. இ. வி. பாட். 165)
சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. அஃதாவது முன்னும் பின்னும் நோக்கிச் செல்லும் சிங்கம் போல, முன்னரும் பின்னருமாகச் சொல்லப்படும் செய்திகளை நோக்கியவாறு அமைவது, நன்னூலுள் பொதுவியல், முன்சொன்ன பெயர் வினைச் சொற்களுக்கும் பின்சொல்லும் இடை உரிச்சொற்க ளுக்கும் பொதுவான இலக்கணங்களைச் சொல்லுதலின் வினையியல் இடையியல்களுக்கு இடையே வைக்கப்பட் டமை அரிமாநோக்கம் ஆம். (நன். 19)
இஃது இலக்கியத்துள்ளும் பொருந்தும். அறத்துப்பாலிறுதிக் கண் அமைந்த ஊழியல், முற்கூறிய அறத்திற்கும், பிற்கூறும் பொருளின்பங்கட்கும் இன்றியமையாமைப்படுதல் நோக்கி ஆண்டு அமைந்தமை சிங்கநோக்கம் ஆம்.
நூல்முகத்து உரைக்கப்படும் முன்னுரை. இத்தோற்றுவாய் நூலின் உட்பகுதிகளிலும் அமையும். (L)
புலம் வென்ற காட்சியுடையார்க்கு “யாம் வறியம்” என்னும் கருத்தின்மையான் (குறள் 174), ஆசிரியன் திங்களும் ஞாயிறும் போலச் சிறிதும் அவா இல்லாத (வெஃகா) உள்ளம் உடையன். (பா. வி. பக். 70)
பிறன் வேண்டும் பொருளை வெஃகுதலும் (-அவாவுதலும்), பிறன் வேண்டும் உரிமையை வெஃகுதலும், பிறன் செய்யும் பணியை வெஃகுதலும், பிறன் கூறும் முகமன் மொழியை வெஃகுதலும் என, அந்நான்கனது இன்மை பற்றி அவா வின்மை நான்கு வகைப்படும். (பா. வி. பக். 69)
மொழியப்படுவதனை உணரமாட்டாதார், முன்னர் இருந்து கொண்டு காரணம் இல்வழியும் சினப்பார், பொய்ம்மை பல பேசுவார், அடிக்கடி நகுதல் செய்வார், நிலைப்படாது தடுமா றும் மனத்தார், தீயவற்றையே செவிகொடுத்துக் கேட்கும் விருப்பமுடையார் என இவ்வறுவரும் அவையின்கண் நீக்கப் படத்தக்கவராவர். (பா. வி. பக். 136)
மொழிவது உணரும் ஆற்றல் இல்லாவிடத்து மனம் சென்ற வாறே சொல்நிகழ்ந்து இடர் விளைக்கும் ஆதலின், ‘மொழிவ தனை உணரமாட்டாதார்’ முதற்கண் கடியப்பட்டார். அவ்வாற்றல் இருப்பினும், சினம் கொள்வாராயின் மாறுபா டாகிய கலாம் நிகழுமாதலின், ‘முன்னர் இருந்து கொண்டு சினப்பார்’ அடுத்துக் கடியப்பட்டார். அவ்வாறு சினவாராயி னும் பொய் சொல்லின் அவைக்கு இழுக்காம் ஆதலின், ‘பொய்ம்மை பல பேசுவார்’ அடுத்துக் கடியப்பட்டார். அவ்வாறு பொய் கூறாராயினும் அடிக்கடி நகுதல் அவமதிப் பைக் காட்டுமாதலின், ‘நகுதல் செய்வார்’ அடுத்துக் கடியப் பட்டார். நகுதல் செய்யார் ஆயினும் நிலையில்லா மனத்தார் முற்றும் கேளாமல் நடுவேயும் தாம் நினைந்தவாறு சென்று அவையினது கட்டளை கடப்பாராதலின் ‘தடுமாறு மனத் தார்’ அடுத்துக் கடியப்பட்டார். தடுமாறாத மனத்தராயினும் தீயவற்றை எண்ணுவராயின் கேள்வியால் பயனெய்த மாட்டாராதலின் ‘தீயவை செவிகொடுத்துக் கேட்பார்’ இறுதியாகக் கடியப்பட்டார். (கடியப்படுதல் - நீக்கப்படுதல்) (பா. வி. பக். 136, 137)
தவத்தான் மனம் தூய்மை பெறாதோர் எத்துணைக் கல்வி உடையராயினும் ஊழ்வயத்தான் மயங்குவார்; தவமுடை யார் மயங்கார். தவம் உடையரே நூல் செய்தற்கு உரியர் என விதிப்பின் குற்றம் ஆய்வாரைக் கூறல் வேண்டா எனின், அவ்வாறு விதிப்பின் அகத்தே தவவொழுக்கம் முற்றிய காரணத்தால் ஊழ்வயப்பட்டு மயங்காமல் குற்றமின்றி நூல் செய்த வள்ளுவர் முதலாயினார்க்கும் புறத்தே தவவேடம் இல்லாமையால் அவர் போல்வார் செய்த நூலின்கண்ணும் குற்றங்கள் உள என்று தவறாகக் கொள்ளப்படும்; அகத்தே தவவொழுக்கம் முற்றாமையால் ஊழ்வயப்பட்டுக் குற்றம் உளவாக நூல் செய்த பவணந்தி முனிவர் சிவஞானமுனிவர் முதலாயினார்க்குப் புறத்தே தவவேடம் உள்ளமையால் அவர் போல்வார் செய்த நூல் எல்லாம் குற்றம் இல்லாதன என்றும் தவறாகக் கொள்ளப்படும் ஆதலின், யாவர் செய்த நூலாயினும் அறிவுடையார் பலராகிய அவையோர் கேட்டு நூலினது குற்றம் இன்மையை ஆராய்தலே வேண்டப்பட்டது என்பது. (பா. வி. பக். 191)
அழுக்காறின்மைக்குக் காரணமாவது வாய்மையே ஆதலின், ‘ஞாயி றன்ன வாய்மையும், யாவதும் அஃகா வன்பும்’ என வாய்மையை அடுத்து (அஃகா வன்பு ஆகிய) அழுக்கா றின்மை கூறப்பட்டது. (பா. வி. பக். 69)
அழுக்காறிலாமையானது, பிறன் ஆக்கமாகிய செல்வமும் - கல்வியும் - புகழ் முதலாய கனமும் - என இவற்றைப் பேணா மையும், பிறனது கொடை பேணாமையும் என அந்நான்கனது இன்மைபற்றி நான்கு வகைப்படும். (பா. வி. பக். 68)
அளகு என்னும் மரபுப்பெயர் கோழி கோட்டான் மயில் இவற்றது பெண்பாலை யுணர்த்தும்.(தொ. பொ. 610, 611 பேரா.)
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளில் ஒன்று. ஆசிரியன் முற்ற வுணர்ந்த அறிவன் அன்மையின், தான் வரையும் இலக் கணத்தினும் வேறுபட வருவனவும் உளவாகும் என்பதனைத் தெளிவாக மனம்கொண்டு அவற்றையும் நூல் பயில்வோர் நுனித்துக் கொண்டுணருமாறு புறனடை முதலிய நூற்பாக் களை இயற்றுதல். (தொ. பொ. 665 பேரா.)
“கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும், கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே” (தொ. சொ. 119 நச்.) என்றாற் போலப் புறனடை கூறுதல் இதற்கு எடுத்துக்காட்டாம்.
‘இறந்தது காத்தல்’ ஆசிரியன் தான் துணிந்து கொள்ளப் பட்ட பொருளாகும். ஆயின் இது தன்னால் துணியப்படா தாகித் தான் நூல் செய்த காலத்துத் தன்னால் கூறப்படாது விடுக்கப்பட்ட செய்திகள் பற்றியதாகும். (பேரா.)
‘தக்கவழி அறிதல் வழக்கத் தான’ (எ. 270 நச்.) ‘ஒல்வழி அறிதல் வழக்கத்தான’ (எ. 246 நச்.) என்றாற் போல ‘வழக்கு நோக்கி அறிக’ என்ற கருத்தில் கூறுதல் இவ்வுத்தியின் இனம். (பேரா.)
தான் அறியாத பொருளைப் பிறர் கூறியவாற்றான் உடன் படுதல் என்பர் இளம்பூரணர். (656)
ஏழாம் நரகம் இத்தன்மைத்து எனச் சான்றோர் கூறியவழித் தனக்கு அது புலப்படாதாயினும் தான் அதற்கும் உடன்படல் இது. வழிநூலாசிரியர்க்கும் இஃது உரித்து. ‘மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா’ (தொ. சொ. 389) என்றாற் போல்வன கொள்க. (இள.).
ஓரறிவாவது தன்னின் வேறாய பிறிதொன்று மெய் உறலால், வன்மை மென்மை முதலியன அறிதலாம்; இரண்டறிவாவது அதனொடு, வாயால் சுவையறிதலாம்; மூவறிவாவது அவ்விரண்டறிவுடனே, மூக்கால் கந்தத்தினை அறிதலாம்; நான்கறிவாவது அம்மூவகையறிவுடனே; கண்ணால் உருவத் தினை அறிதலாம்; ஐந்தறிவாவது அந்நால்வகையறிவுடன், செவியால் சத்தத்தினை அறிதலாம்; ஆறறிவாவது ஐவகை இந்திரியங்கள் அறியும் அறிவானன்றி, ஞாபக ஏதுக்களான் நுண்ணிய பொருள்களை மனத்தான் உணர்தலாம்.
(இ. வி. பாட் 152; தொ. பொ. 582 பேரா.)
புல்லும் மரனும் ஊற்றுணர்ச்சி ஒன்றே யுடையன. நந்தும் முரளும் நாவுணர்வோடு, ஒன்று தாக்கியபோது அறியும் ஊற்றுணர்வும் உடையன. சிதலும் எறும்பும் உற்றுணர்தல் நாச்சுவை கோடல் இவற்றுடன், மோந்தறிதலாகிய மூக்குணர்வும் உடையன (இவை ஒன்று தாக்கிய வழியல்லது அறியாமையின் கண்ணுணர்வும், உரப்பியபோது ஓடாமை யின் செவியுணர்வும் உடையன அல்ல) நண்டும் தும்பியும் மெய்யுடைமையின் ஊற்றுணர்வும் இரை கோடலின் நாவுணர்வும், நாற்றம் கோடலின் மூக்குணர்வும், கண்ணுடை மையின் கண்ணுணர்வும் உடையன.
மக்களுள் ஐயறிவுடையார் மாக்கள் எனவும், ஆறறிவு உடையோரே மக்கள் எனவும் கூறப்படுவர். மாக்கள் (மா + கள்) எனப்படும் விலங்குகள் ஐயறிவே யுடையன. (இ. வி. பாட். 153)
தும்பி முதலிய உயர்ந்த வண்டுகளுக்குச் செவியறிவும் உண்டு என்பார் நச்சினார்க்கினியர். (சீவக. 892, 893)
அறுவகை அறிவுறும் உயிர்கட்கு உரிய கிளையும் பிறப்பும் அவ்வறிவு பெறும் என்பர் ஆசிரியர்.
ஓரறிவு கிளை - புதலும் கொடியும் போல்வன.
பிறப்பு - மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் ஓரறிவினவாய பருவமும், என்பு இல் புழுவும், முதலியன.
ஈரறிவு கிளை - கிளிஞ்சலும் முற்றிலும் முதலிய கடல்வாழ் சாதியும், பிறவும்.
பிறப்பு - மக்கட் குழவியும் விலங்கின்
குழவியும்
ஈரறிவினவாகிய பருவம்
மூவறிவு கிளை - ஈயல், மூதாய் போல்வன.
பிறப்பு - மக்கட்குழவியும் விலங்கின் குழவியும். மூவறிவினவாகிய பருவம்.
நாலறிவு கிளை - வண்டு, தேனீ, குளவி முதலியன
பிறப்பு - மக்கட் குழவியும், விலங்கின் குழவியும் நாலறிவினவாய பருவம்.
ஐயறிவு கிளை - எண்கால் வருடையும் குரங்கும் போல்வன
பிறப்பு - கிளியும் பாம்பும் முதலாயின.
ஆறறிவு கிளை - தேவர் தானவர் முதலாயினார்
பிறப்பு - குரங்கு முதலியவற்றில் சென்ற பிறப்பின் நல்வினையான் மனவுணர்வுடையன.
(இ.வி. பாட். 54)
ஆ
அஃறிணைப் பெண்பாற் பெயர்களுள் ஒன்று.
இது பெற்றம் எருமை, மரை இவற்றின் பெண்பால் விலங்குகளை உணர்த்து வது.
எ-டு : ‘புனிற்றா பாய்ந்தெனக் கலங்கி’ - அகநா. 56
‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்’ - அகநா. 46
‘மரையா மரல்கவர மாரி வறப்ப’ - கலி. 6
(தொ.பொ. 615 பேரா.)
நூல் செய்தவன் (நன். 47)
நூல் செய்த ஆசிரியனது பெயர்; இது முதலாகிய எட்டுச் செய்தியினையும் வாய்ப்பக் காட்டுவது சிறப்புப் பாயிரத்து இலக்கணம். (நன். 47)
நூல் கேட்பான்புக்க மாணாக்கன் இந்நூல் உயர்ந்தோன் செய்ததோ அன்றோ என ஐயுற்று இடர்ப்படுதலைத் தவிர்க்க வும், அவனைக் கற்றற்கண் ஊக்கவும் ‘ஆக்கியோன் பெயர்’ கூறல் வேண்டும்.
ஆக்கியோன் உயர்ந்தோனாயினும் பிறிதொரு கோட்பாடு பற்றி முனைவன் நூலொடு முரணுமாறு தானே படைத்து நூல் செய்தானோ என்னும் ஐயத்தைக் களைய, இன்ன நூலின் வழித்தாகச் செய்தான் என ‘வழி’ கூறல் வேண்டும்.
ஊழிவிகற்பத்தால் சிற்சில ஊழியில் சில முந்துநூல்கள் மக்கள் அறிந்து பயன் கோடலின்றிக் கிடக்குமாதலின், அங்ஙனம் மக்களால் அறிய முடியாமையில் வழங்கப்படாத நூலோ, அறிந்து பயன் கொள்ளுதலின் வழங்கப்படும் நூலோ என்னும் ஐயத்தைக் களைய, இந்நூல் இன்ன எல்லையுள் நடக்கும் என ‘எல்லை’ கூறல் வேண்டும்.
நூல் செய்தானால் நூல் பெயர் பெறுதலே யன்றிச் செய் வித்தான் முதலாய பிற காரணத்தானும் பெயர் பெறுதல் கூடுமாதலின், அக்காரணம் விளங்க ‘நூற்பெயர்’ கூறல் வேண்டும்.
முந்து நூலிருக்க இவ்வழிநூலை யாது காரணத்தாற் செய்தான் என ஐயுறும் நிலையைக் களைய, அம் முதல் நூற்பொருளையே உணர்தற்கு ஏற்ற வகையால் பயன்படு மாறு, தொகுத்தல் முதலாய வகையினுள் இவ்வகையாற் கூறினான் என ‘யாப்பு’க் கூறல் வேண்டும்.
‘நுதலிய பொருள்’ இன்னதென முன்னர்க் கூறாவிடின், ஆசிரியன் “இந்நூலைக் கற்க” எனக் கூறினும், அந்நூல் எப்பொருள் நுதலிற்றோ, அதன்கண் தான் விரும்பிய பொருள் உளதோ என மாணாக்கன் ஐயுற்று விருப்பத்தொடு முய லான் ஆகலின், அது கூறல் வேண்டும்.
புலமை நிரம்பிய முதியோராயினும் ஊழ்வயத்தால் மயங் கலும் இயற்கை ஆதலான், இந்நூலகத்தும் அவ்வாறு குற்றமுளதோ என ஐயுறும் மாணாக்கற்கு அதனைக் களைய இன்னார் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்தாரென, ‘கேட் போர்’ கூறல் வேண்டும்.
இந்நூல் கற்க இன்ன பயனுண்டு என அறியானாயின் கற்றற்கண் ஊக்கம் செல்லாமையின், ‘பயன்’ கூறல் வேண்டும்.
ஆக்கியோனும் கேட்போரும் எக்காலத்தினர், யாண்டிருந் தனர், யாது காரணத்தால் இந்நூற் செய்தான் என்று அறியுமாறு மாணாக்கர்க்கு விருப்பம் செல்லுதல் இயல்பு; நூல் செய்த காலத்தோ பிற்காலத்தோ அரங்கேற்றப்பட்டது என வினா எழுதலும் இயல்பு; முந்துநூலைத் தொகுத்தல் முதலிய யாப்பின் காரணத்தைத் தவிரப் பிற காரணமும் உண்டோ என்னும் ஐயமும் நிகழும். அவை பற்றி, காலம், களன், காரணம் என்னும் இம்மூன்றும் கூறல் இன்றியமை யாதது என ஒருசார் ஆசிரியர் வேண்டுவாராயினர்.
எல்லை என்பது நூல் இன்ன அளவிற்று என்று கூறுவது என்பாரும் உளர். (பா. வி. பக். 187-192)
கல்வி அளிக்கும் நல்வினை உடைய ஆசாற்கு இன்றியமை யாமல் பொருந்தும் குணங்களாவன. அன்பு ஈனும் ஆர்வம், அவ்வார்வம் ஈனும் நண்பு, அன்பு செய்யப்பட்டாரிடத்துத் துன்பம் கண்டவிடத்தே புன்கணீர் பொழிந்து புறந்தோன் றும் தன்மை, மாணாக்கர்க்கு வேண்டாத செய்கை யுளதாகிய விடத்தே மேற்சென்று இடித்தல் ஆகிய இவற்றை உடைமை. (பா. வி. பக். 84)
ஆசிரிய மதம் ஆவன மறுத்தல், உடன்படுதல், பிறர்தம் மதம் மேற்கொண்டு களைதல், தாஅன் நாட்டித் தனாஅது நிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல், பிறர்நூற் குற்றம் காட்டல், பிறிதொடு படாஅன் தன்மதம் வகுத்தல் - என ஏழும் ஆம். (நூலாசிரியர்தம் கொள்கை ஆசிரியமதம் ஆவது. நன். 11.) (வீ. சோ. 180 உரை)
பாடம் சொல்லும் குணமின்மை, இழிந்த குணங்கள் பலவுடைமை, பிறர்ஆக்கம் கண்டு பொறாமை - பிறர் பொருள் மேற் செல்லும் ஆசை - வஞ்சனை - பிறரை அஞ்சுவித்தல் - போன்ற இயல்புடைமை, கழற்குடம் - மடல் விரிந்த பனை - பஞ்சு அடைத்த குடுக்கை - வளைந்த தெங்கு - என்னும் நான்கனையும் ஒத்த முரண்பட்ட இயல்புடைமை எனப்பட்ட இவை ஆசிரியர் அல்லாதார்தம் இயல்புகள். (நன். 31)
கைம்மாறு கருதாமல் ஒப்புரவு செய்தல்; வறியவர்க்கு இல்லையென்னாது ஈயும் வண்மை; அவர்கள் தாம் தீநெறியை நாடிய விடத்தே கொடுக்காமல், அவர்கள் குறிக்காதவற்றையும் கொடுத்தலன்றி, அறநெறி வழுவாமல் அன்னோர் வேண்டியவற்றையே விரும்பி அளித்தல்; ‘இலன்’ என்னும் அத்துன்பச் சொல்லை அவர் உரையாததன் முன்னரே குறிப்பறிந்து அவர் கொள்ளும் அளவின வாகப் பொருளைக் குறையாது கொடுத்தல் - இந் நான்கும் ஆசார்க்கு இன்றியமையாது இசையத்தகும் அகத்தொழி லாம். (பா. வி. பக். 87)
வாடாக் கற்பகம், மணம் மலி பொற்பூ, கொற்றவன் நிதியறை, வான்சுவை மருந்து, ஆயிரவாய்ச் சேடன் என இவ்வைந்தும் நல்லாசிரியர்க்கு உவமைகள்.
மாணாக்கர்க்கு அவர் வேண்டிய நூற்பொருளை வேண்டி யாங்கு முகமலர்ச்சியொடு வழங்குதலின், வாடாக் கற்பகம் உவமையாயிற்று.
முந்து நூல்களை ஆராய்ந்து, அமைவுடைய கல்வியும் கவிபாடும் ஆற்றலும் வாய்க்கப்பெற்று, அக்கற்றதை உணர விரித்துரைக்கும் ஆற்றலுடைமையின் மணம் நிறைந்த பொற்பூ உவமையாயிற்று.
அறத்தான் ஈட்டிய பல பொருளும் நிறைதல், பிறர் நிதியறை யினும் மிக்க செல்வவளமை, ஒருவரால் அளத்தற்கு அருமை, வறியோர் நாளும் வேண்டுவன கொண்டு செல்லவும் தான் குறைவில்லாமை என்னும் நான்கு இயல்பும் அமைந்த செங்கோல் வேந்தனது நிதியறையானது, அறம் முதலாய நாற்பொருளாம் கல்வி நிறைவுடைமை, பிறரது ஆராய்ச்சியி னும் மேம்பட்ட கல்வி நிறைவுடைமை, ஒருவரால் அளத்தற் கரிய கல்வி மேம்பாடு, பிறர் தம்பால் கல்விச்செல்வம் கொள்ளினும் அக்கொடையால் குறைவுறாத கல்விவளம் - என்னும் இந்நான்கும் அமையப்பெற்ற ஆசிரியர்க்கு உவமை யாயிற்று.
சிறப்புப்பாயிரத்தோடே, பருப்பொருளின்றி நுண் பொருளைக் கூறுவனவாகிய பல் நூற்பொருள்களையும் மாணாக்கர் பலர்க்கும் ஒரு காலத்தே ஒருங்கே இருள் தீர மனம் கொள்ளு மாறு சொல்லுதலின், ஆயிரவாய் ஆதி சேடன் உவமை யாயிற்று. (மா. அ. 29 : 33)
ஆமை தான் எங்குச் செலினும் தன் பார்ப்புக்களை நினைத் துக்கொண்டேயிருத்தலின் அந்நினைப்பாற்றலால் அவை நலனும் வளர்ச்சியும் உறும் என்ப; அதுபோல, நல்லாசிரி யரும் யாண்டிருப்பினும் தம் மாணாக்கர் நலத்தையே நினைவராதலின் அம்மாணாக்கரும் அப்பயன் எய்துவர். அது பற்றியே ஆசார்க்கு ஆமை உவமையாயிற்று. (மா. அ. 39)
தாய்ப்பறவை தன் பார்ப்புக்களைச் சிறகரால் அணைத்துக் கொள்ளுமாறு போல, நல்லாசிரியரும் தம் மாணாக்கரை அருகழைத்து இன்சொலால் தழுவி அன்பு காட்டிப் பாடம் பயிற்றுதலின், அவர்க்குப் பறவை உவமையாயிற்று.(மா.அ. 39)
ஈன்று அணிமைத்தாகிய புனிற்றாவானது தன் புதுக் கன்றினை விட்டகலாமலும், அக்கன்றுள்ள விடத்தே பல முறை தான் செல்வதாயுமிருக்கும். அதுபோலவே, நல்லாசி ரியரும் தம் மாணாக்கரைப் பெரும்பான்மையும் விட்டு நீங்காமையும், ஒரோவழி நீங்கியுறைய வேண்டியவிடத்தே அடிக்கடி அம்மாணாக்கரைத் தாம் சென்று கண்டு உசாவி வருதலும் உடைமை பற்றி, அவர்க்குப் புனிற்றா உவமை யாயிற்று. (மா. அ. 39)
மீன் தன் முட்டைகளைக் கண்ணாற் பார்த்த அளவிலேயே அவற்றினின்று குஞ்சுகளை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது என்ப. அதுபோல, நல்லாசிரியரும் தம்மாணாக்கர் நலத்தில் கண்ணும் கருத்துமாயிருத்தலின், மீன் உவமை ஆயிற்று. (மா. அ. 39)
மேற்கோள். பதினான்கு வகைப்பட்ட உரைகளுள் ஆசிரிய வசனமும் ஒன்று. (நன். 21)
குளிர் காயுமவன் தீயினை மிக விலகுதலும் மிக அணுகுதலு மின்றி இடைநிகர்த்ததாய இடத்தின்கண் இருத்தல் போல, ஆசிரியனை மிக விலகுதலும் மிக அணுகுதலுமின்றி, அவன் பால் பயபக்தி கொண்டு, நிழலைப்போல நீங்காதவனாய், அமைவுற்ற மனத்தோடே, ஆசான் உவக்கும் திறத்தின்வழி அறத்தொடு மாறுபடாவகை ஒழுகுமதே மாணாக்கனுக்கு உரிய ஆசிரியவழிபாடாம். (நன். 46)
நூலாசிரியன்; புலவன் (L)
நூலாசிரியன், உரையாசிரியன், போதகாசிரியன் என்ற மூவர்.
(இலக். கொ. 6)
நல்ல குலனுடைமை, அருளுடைமை, தெய்வ வழிபாடு, தனக்கென உயர்ந்த கொள்கையுடைமை, மானத்தின் இழுக்கா மேம்பாடு, நூல்களைக் கற்றுவல்ல தெளிவு, அவற்றை மாணாக்கர் உணர விரித்துரைக்கும் ஆற்றல், நிலம் - மலை - நிறைகோல் - மலர் - இவற்றைப் போன்ற மாட்சி, உலகியல் அறிவுடைமை என்பனவும் இவைபோன்ற பிற நல்லியல்புகளும் அமைபவன் நூலுரை ஆசிரியன் ஆம். (உரைத்தல் - பாடம் சொல்லுதல்)
தெரிவரிய பெருமையும்-திண்மையும்-அகழ்வாரைத் தாங்கும் பொறையும்-பருவமறிந்து தன்பால் முயலும் அளவிற்கு உழவர்க்கு உதவலும்-உடைய நிலம்போல, ஆசிரியனும் பிறரால் அளத்தற்கரிய கல்விப்பெருமையும், திண்மையும், மாணாக்கர் பிழை செய்தவழிப் பொறுத்தலும், மாணாக் கர்தம் கல்விப் பயிற்சியளவிற்குத் தகத் தான் பயன்படுதலும், உடையான்.
அளக்க முடியாத அளவும்-பொருள்நிறைவும்-அசைக்க முடியாத நிலைபேறும்-தொலைவிற்காணும் தோற்றமும்-ஏனை நிலப்பகுதி வறண்ட வற்கடக் காலத்தும் தான் வளம் சுரத்தலும்-உடைய மலை போல, ஆசிரியனும் பிறரால் வரை யறுக்கக் கூடாத கல்வியளவும், கலைப்பொருள் நிறைவும், வாதுபோரில் மாற்றாரால் வெல்லப்படாத நிலைபேறும், தொலைவிலுள்ளாராலும் தன் கல்விப் பெருமை பற்றி அறியப்படும் நிலைஇய தோற்றமும், தன்பாற் பொருட் செல்வம் வறப்பினும். கல்விச்செல்வத்தைச் சுரக்கும் வண்மையும், உடையான்.
தன்கண் வைத்த பொருளின் பாரத்தை ஐயம் தீர வரை யறுத்தலும்-நடுவாக நிற்றலும் - உடைய துலாக்கோல் போல, மாணாக்கர் தன்பால் வினவிய பொருளை ஐயமற உணர்த்த லும், எஞ்ஞான்றும் நடுவுநிலை கோடாமையும் உடையான் ஆசிரியன்.
மங்கலப் பொருளாய் எக்காலத்தும் இன்றியமையாததாய், யாவரும் மகிழ்ந்து தலைமேற் சூடிக்கொள்ளுமாறு மென்மை யுடைத்தாய், உரிய செவ்வியில் மலர்தலையுடைய பூப்போல, மங்கலமுடையவனாய், எக்காலத்தும் எக்காரணத் துக்கும் தான் இன்றியமையாதவனாய், யாவரும் தன்னை மகிழ்ந்து மதிக்கும் வண்ணம் இன்குணமுடையோனாய், பாடம் சொல்லுங்காலத்தே மனக்கவலை பிற புறத்தே தோன்றாத வாறு முகமலர்ச்சி யுடையனாய், விளங்குவான் ஆசிரியன். (நன். 26 - 30)
‘ஆசிரிய வழிபாடு’ காண்க.
ஆசிரியனுக்குரிய எண்வகை உறுப்பினுள் ஏனைய உறுப்பிற் குக் குடிப்பிறப்பே காரணமாதலின் அது முன்னர்க் கூறப்பட்டது.
மனம்தூய்மை முதலாயவற்றிற்கு இனம்தூய்மை வேண்டும்; அதுதனக்குச் சிற்றினம் அஞ்சல் வேண்டும்; அதுதனக்குக் குடிப்பிறப்புக் காரணம் ஆம். ஆதலின், அம்முறையானே குடிப்பிறப்பின் பின்னர்த் ‘தூய்மை’ கூறப்பட்டது.
ஒழுக்கத்திற்கு இனம்தூய்மையும், அது பற்றுக்கோடாக உளவாகும் பிற தூய்மையும் காரணமாதலின், தூய்மையின் பின் ‘ஒழுக்கம்’ கூறப்பட்டது.
கற்பவை கசடறக் கற்றால்தான் அக்கல்வி பயன்படுதலன்றி, அந்நெறியின் வழுவியவிடத்தே பயன்படாமையின் கல்விப் பயனுக்கு ஒழுக்கம் காரணமாம். ஆகவே, ஒழுக்கத்தின் பின்னர்க் ‘கல்வி’ கூறப்பட்டது.
நன்மை பயப்பின் பொய்யும் மெய்யாகியும் தீமைபயப்பின் மெய்யும் பொய்யாகியும் திரிதலானும், அவ்வேறுபாடுணர் தற்குக் கல்வியே கண்ணாம் ஆதலானும், வாய்மை இலக்கணம் உணர்தற்குக் கல்வி காரணமாதலின், கல்வியின் பின்னர் ‘வாய்மை’ கூறப்பட்டது.
அழுக்காறின்மைக்கு வாய்மையே காரணமாதலின், வாய்மை யின் பின்னர் ‘அழுக்காறிலாமை’ (அஃகா வன்பு) கூறப்பட் டது.
அழுக்காறின்மையை இயல்பாக உடையவனுக்கு, பிறன் பொருள்-உரிமை-பணி-முகமன் - என்னும் நால்வகையுள் யாதாயினும் வெஃகுதல் என்பது குற்றமெனத் தோன்றும் ஆதலின், அழுக்காறிலாமையின் பின்னர் ‘வெஃகா உள்ளம்’ கூறப்பட்டது. (வெஃகாமை - பிறன் பொருளிடத்தில் அவா வின்மை.)
இனி அழுக்காறிலாமையும் அவாவின்மையும் காரணமாக நால்வகைய நடுவுநிலைமையும் உளவாம் ஆதலின், அவற்றின் பின்னர்ச் ‘சமநிலை’ கூறப்பட்டது. (நண்பு-நண்பன்மை, மேல்-மேலன்மை, சுற்றம் - சுற்றமன்மை, கல்வி - கல்லாமை என்னும் பகுதிகள் பற்றி அந்நான்கு வகையின்கண்ணும் வழுவாமல் ஒப்ப நிற்றலால் சமநிலை நால்வகைப்பட்டது.) (பா. வி. பக். 58-73)
ஆட்டின் பொதுப்பெயராவன மறி, உதள், மோத்தை, மேழகம், வருடை, கொறி, தகர், கடா, கொச்சை, மேடம், துருவை, செம்மறி, பள்ளை, வெள்ளை, புருவை, வற்காலி, மை என்பன. (திவா. பக். 54)
இனி, துள்ளல், அசம், வெறி, அருணம், சாகம் என்பனவும் உள. (பிங். 2479)
ஆண் என்பது பொதுப்பெயராயினும் மரீஇ வந்த வழக்கான உயர்திணைக்கே உரியது. (தொ.பொ. 624 பேரா.)
ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கடுவன், கண்டி, என்பனவும் பிறவும் மரபு பற்றி வரும் ஆண்பால் பெயர்கள்.
(தொ. மர. 2)
தோன்றல், புத்திரன், சேய், சுதன், மதலை, ஏயன், மருமான், தனையன், செம்மல், புதல்வன், பாலன், செல்வன், சந்ததி, குட்டன், சிறுவன், காதலன், குமாரன், மைந்தன், நந்தனன் என்பன ஆண் மகனுக்கு உரிய பிள்ளைப் பெயர்கள். (நாம.நி. 195) கான்முளை என்பதும் அது.
இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று. அஃதாவது ஆசிரியன் தன் நூலில் தான் குறிப்பிடும் சில செய்திகளை வேறு காரணம் எதுவும் கூறாது, “இக்கருத்தை எல்லீரும் கொண்மின்; இஃது எம் ஆணை” என்றே கூறி விடுத்தல். (தொ. பொ. 665 பேரா.)
எ-டு : ‘அம்மின் இறுதி கசதக் காலை, தன்மெய் திரிந்து ங ஞ ந ஆகும்’ (தொ. எழுத். நச். 129) என்று கூறி, வருமொழி பகரம் வருவழி இயல்பாகும் எனப் பெறப்பட வைத்துப் பின்னர், ‘அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும்’ (எழுத். நச். 314) என, மகர ஈற்று அல்வழிப் புணர்ச்சிக்கு விதி கூறி, மரம் + பெரிது = மரம் பெரிது என மகரம் திரிபின்றிப் புணர்தலைக் கொள்ள வைப்பது ஆணை கூறல் என்னும் உத்திவகை யாம்.
“வேற்றுமையும் இருவகை எச்சமும் எதிர்மறுத்து மொழியி னும் தத்தம் பொருள் நிலை திரியா” (தொல். சொல். 107, 236 சேனா.) என்று கூறுவதும் ஆணை கூறலாம்.
“பலவகையாகப் பரந்து வரும் உரிச்சொற்களை யாம் கூறியுள்ள வழிகளைக் கடைப்பிடித்து, யாம் கிளவாதவற் றைக் கிளந்தனகொண்டு அறிக என்பது எம் ஆணை” என, ‘ஓம்படை ஆணையின் கிளந்தவற் றியலான், பாங்குற உணர்தல்’ (சொ. 396 சேனா) என்றாற் போலக் கூறுவன இவ்வுத்திவகையின் இனம்.
தன்கோட் கூறல் நூல் செய்யும் பகுதிக்கண்ணது; இது கருவிகளை விளக்கிக் கூறும் இடத்தின்கண்ணது.
வலம்புரிமுத்தினைப் போன்ற நற்குடிப்பிறப்பும், ஆகாய கங்கையைப் போன்ற தூய்மையும், அவ்யாறு நிலவுலகிற்குப் பயன்படுமாறு இழிந்துவந்தது போன்று பிறர்நலம் கருதி நற்கருமம் புரியும் ஒழுகலாறும், பதினாறுகலையும் நிறைந்த முழுமதி போன்ற கல்வியும், திங்களும் ஞாயிறும் காலம் தவறாது தோன்றிச் செயற்படுமாறு போலக் காலம் தவறாது கடனாற்றும் வாய்மையும், அழுக்காறிலாமை என்னும் பண்பும், பிறர்பொருளைக் கள்ளக் கருதா உள்ளமும், துலாக் கோலின் நாவினை ஒத்த நடுவு நிலைமையும் ஆகிய எண்வகை உறுப்பினையும் உடையராகி, உறுதியாகப் பிறர்க்கு உதவும் வாழ்க்கையும், அதற்கு ஏற்ற முயற்சியும், உலகியலை அறிந்து அதற்கேற்றவாறு நடப்பதற்கு உளதாம் அறிவும், கல்விப் பொலிவோடு உருவின்மிக்கதோர் உடம்பும், போற்றாரையும் பொறுக்கும் பொறுமையும், மறை பிறர் அறியாமை நெஞ் சினை நிறுத்தற்கு உளதாம் நிறையும், மறக்கக் கூடாத கல்விச்செய்தியை மறவாமையும், கண்டோர் போற்றத்தக்க அறிவும், வேண்டார் அஞ்சத்தக்க பீடும், பிறர் மதிக்கத்தக்க ஆற்றலும், அதனால் உளதாம் புகழும், சொற்பொருளைக் கேட்டார் உணரத்தக்க வகையால் அரிதாம் பொருளையும் எளிதாக்கி உளம் கொளும்வகை உரைக்கும் நாவன்மையும், தன்னிடம் கற்க வந்த மாணாக்கர் தன்பால் கற்றலையே பெரிதும் விரும்பும்வகை பாடம் சொல்லும் ஆற்றலும் ஆகிய தொன்மை மரபு கூறும் பெருஞ்சிறப்புடைய ஒருவனே நல்லாசிரியன் எனப்படுவான்.
ஆசிரியனுக்குக் கூறிய உறுப்புக்களில் தனக்கும் ஏற்புடைய குடிப்பிறப்பு, தூய்மை, வாய்மை, அழுக்காறின்மை, பிறர் பொருளைக் கள்ளக்கருதாமை என்பவற்றை யுடையனாய், ஆசிரியன் பாடம் சொல்லியவற்றைக் கேட்கும்போது மனத்தைச் சென்ற இடத்தால் செல்ல விடாது பாடத்திலேயே செலுத்திக் கூறியவாறே மனங்கொண்டு பின் சிந்தித்து உள்ளவாறே உணர்தலும், செய்நன்றி அறிதலும், தீயவர் நட்புக் கொள்ளாமையும் போன்ற இயல்புகள் உடையவனே நன்மாணாக்கன் ஆகும்.
கற்பிக்கப்படாதோனுக்குக் காட்டும் உவமங்கள் ஆறனுள் ஆயெருமையும் ஒன்று. ஆயெருமையாவது கன்று ஈன்று இழந்த தாய்எருமை. ஆய் - தாய். (பா. வி. 140, 150)
ஆயெருமை, பல நாள் இரைகொடுத்து ஒருநாள் மறவியால் இரையிடாவிடினும், அஃதொன்றே கருதிக் கட்டுத்தறியினை யும் முறித்துத் தான் நின்ற நிலையை நீங்கிப் பிறிதிடம் செல்ல முயலும்; முன்னை நாள்களில் நொய்யும் நொறுங்கும் தவிடும் முதலாயவற்றுள் ஒன்று அளித்துப் பிறகு ஒருநாள் அது கொடாவிடின், அதனை நினைந்து பால் கறவாமை யுடையது; அதுபோல்வனவற்றைச் சிலநாள் மறவாமையுடை யது.
அவ்வாறே மாணாக்கன் ஆகத் தகாதோன், ஆசிரியன் ஒரோவழி மறவியான் கல்விப்பொருள் புகட்டத் தவறியவழி, தான் மற்றோர் ஆசிரியனை நாட நினைத்து முயல்வான்; கல்விப் பொருள் விசேடமாக வழங்கும் ஆசான் ஒருநாள் அவ்வாறு வழங்கத் தவறியவழி, தான் அதனையே நினைந்து அவனுக்கு வழிபாடு செய்தலில் குறைபாடு காட்டுவான்; அன்று ஆசான் செய்த அதனையே சிலநாள் மறவாமலிருந்து மனத்தில் வேறுபாடு கொள்வான்.
நூலழகு பத்தனுள் இதுவுமொன்று; பொருள் மேற்பட்ட நிலையிற் காணப்படுதலன்றி, ஆழமும் உடைத்தாதல் ஓரழகாம். (நன். 13)
இரட்டுற மொழிதலாக வரும் நூற்பாக்கள் இவ்வழகினை யுடையன.
ஆறு மடங்காது ஒருமுகமாக ஒழுகுமாறுபோல, கிடந்த வரிசையில் சூத்திரங்கள் தொடர்ந்து பொருள் கொள்ள நிற்கும் நிலை; சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. இலக்கண நூல்களில் இங்ஙனம் அமையும் சூத்திரங்களே பெரும்பான் மையன. (நன். 19)
எ-டு : ‘அஇ உஎ ஒக்குறில் ஐந்தே’ (நன். 64)
‘ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில்’ (நன். 65)
போல்வன.
ஐம்பொறியுணர்வொடு மனவுணர்வுமுடைய மக்கள்.
தேவரும் தானவரும் முதலாயினார் ‘கிளை’ யெனப்படுவார்; குரங்கு முதலிய விலங்கினுள் மனவுணர்வுடைய உளவாயின் அவை பிறப்பு எனப்படும்.
நல்லறிவுடையார் என்று கூறற்குச் சிறந்தவர் மக்களே என்பது சூத்திரக் கருத்து. (தொ. பொ. 588 பேரா.)
ஆறு விகற்பமாவன : எடுத்துக் காட்டல், பதம்காட்டல், பதம்விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல் என்பன. (யா. க. பாயிரம் உரை.)
இவை ஆராய்ந்த பின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு.
(நன். சிறப். சிவஞா. விரு.)
ஆனேறாவது இடபம்; மாணாக்கன் செப்ப முடையனாதல் வேண்டும் என்றற்குக் காட்டப்படும் உவமம். ஆனேறு, வெகுளி தோன்றின் கொம்பு முதலியவற்றாலும், உவகை தோன்றின் முக்காரம் முதலியவற்றாலும் அகத்துள்ளவற் றையே புறத்தும் காட்டும் இயல்புடையது. ஆதலின் செப்பம் உடையது. மாணாக்கனும் எண்ணமும் செயலும் ஒத்திருத்தல் ஆகிய செப்பமுடையனாதல் வேண்டும். (பா. வி. பக். 144)
இ
ஈரதிகாரம் கொண்ட நன்னூல் போல்வனவற்றை இடைநூல் என்ப. (பா. வி. பக். 111)
சொன்னதைச் சொல்வதன்றிப் பிற சொல்லல் அறியாத கிளி போல ஆசான் கற்பித்ததைக் கற்பித்த வண்ணமே கூறுத லன்றி அதனைத் தம் நுண்ணுணர்வான் மேலும் இழைத் துணர மாட்டாத இயல்பினர் இடைமாணாக்கர் ஆவர். (நன். 38 உரை)
நிலம் தன்னை உழுவோனுடைய உழைப்பின் அளவு மிகுதியாகவோ குறைவாகவோ பயன் கொடுக்குமாறு போல, ஆசான் தமக்குப் பாடம் பயிற்றிய புலமையளவிற்கேற்பவே தாமும் அக்கல்விப்பயன் பெறுபவராவர் இடைமாணாக்கர். (நன். 38 உரை)
இயற்கை முதல்நூலாவது, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனால் காணப்பட்டதாய்த் தனக்கொரு காரணமின்றித் தானே பிற நூற்குக் காரணமாகிய நூலாம். அதனால் அது தனக்கு ஒரு முதல்நூலையும் இணைநூலை யும் பெறாமல், தானே இணையாய நூல் எனப்படும். அது முனைவன் ஆதியில் கண்டனவாகிய மாகேச்சுர சூத்திரமும் வேதாகமங்களும் முதலாய ஆரிய முதல்நூல்களும், இசை நுணுக்கமும் களவியலும் முதலாய தமிழ் முதல்நூல்களும் போல்வது. (பா. வி. பக். 90)
32 தந்திர உத்தியுள் இதுவும் ஒன்று. அஃதாவது இரண்டு பொருள்பட உரைத்தல்.
எ-டு : ‘ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா’ (நன். 398)
என்புழி, ‘சிறப்பினின்’ என்னும் சொல் செவிக்கின்பம் தந்து சிறத்தலான் எனவும், அப்பொருளைச் சிறப்பித்து நிற்றலான் எனவும் இரட்டுற மொழியப்பட்டது. (நன். 14)
தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்துரைத்தல் என இவை சூத்திரப் பொருளுரைக்கும் உரை வகையுள் இரண்டு கூறாம். (யா. க. பாயிரம் உரை)
மரபு பற்றி வரும் ஆண்பாற் பெயர்களுள் ஒன்று; புல்வாய்க்கு உரியது. புல்வாய் - மான்.
‘புல்வாய் இரலை நெற்றி அன்ன’ (புறநா. 374)
எனவரும் (தொ. பொ. மர.44 பேரா.)
நிலம் வலிது, தீ வெய்து, நீர் தண்ணென்றது, வளி எறிந்தது, ஆகாயம் அகலியது - என அஃறிணை வழக்கின ஆயினும் இவ்வைம்பெரும்பூதங்கள் கலந்தவிடத்தும் அஃறிணை வாய்பாட்டால் வழங்காமல், உயர்திணை வாய்பாடு வேறாக வும் அஃறிணை வாய்பாடு வேறாகவும் அவற்றின் பகுதியவா கிய ஐம்பாற் சொற்களும் வெவ்வேறாகவும் வழங்குகிற வழக்கிற்குக் காரணம் மரபுதானன்றிப் பிறிதில்லை என்பது.
(தொ. பொ. 644 பேரா.)
காண்டிகைஉரையும் விருத்திஉரையும் இருவகைப்பட்ட உரையாம். சூத்திரத்துட்பட்ட இலக்கணம் ஒன்றும் மறையாது முடியச் செய்வது காண்டிகையாம். சூத்திரம் மிகப் பரந்துபட்ட தாயிருப்பின், முதலும் இறுதியும் சொல்லி, “இச்செய்திகளை நுவல்வது இந்நூற்பா” என்று கூறலும் உண்டு. “பலவும் கொள்க” என்று காண்டிகையுரை செய்த லும் உண்டு. முற்காலத்தே இவ்வாறு சுருக்கமாகக் காண் டிகை எழுதி உதாரணங்கூடக் காட்டாத நிலையிலும் மாணாக்கர் உணரும் திறன் இருந்தது. இனிக் “காந்தள் முதலாகக் கூறப்பட்ட இருபத்தொரு துறையும் கரந்தை” என்று கூறுவதும் உண்டு. (தொ. பொ. 656 பேரா.)
இக்காண்டிகை சற்று விரித்துக் கூறப்படுவதும் உண்டு. சொல்லிலக்கணம் தொடரிலக்கணம் முதலியன கூறாமல் சொற்பொருள் மாத்திரம் கூறி, “இச்சூத்திரம் நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம்” என்றாற் போலச் சூத்திர அமைப்பினைச் சுட்டி, அதனை விளக்கக் காரணங்கள் கூறி, அச் சூத்திரம் நன்கு புலனாதற்கு மேற்கோளோ எடுத்துக் காட்டுக்களோ கூறி, ஆசிரியர் கொண்ட கருத்தை விளக்கி வைப்பது அது. (தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் உரைத்த காண்டிகை இவ்வகையினைச் சேர்ந்தது)(657 பேரா.)
விருத்தியுரை தொல்காப்பியத்துள் உரை என்றே குறிப்பிடப் படுகிறது. நூற்பாவில் கூறப்பட்ட பொருளேயன்றி அவ்விடத் துக்கு இன்றியமையாத எல்லாவற்றையும் கூட்டிச் சொல்வது ‘உரை’ எனப்படும்.
எ-டு : ‘இயற்கைப் பொருளை இற்றெனக்கிளத்தல்’ (தொ. சொல். 19-சே)
“தன் தன்மையான் நிகழ் பொருளை இன்ன தன்மைத்தென்று சொல்லுக என்றவாறு. அது நிலம்வலிது, நீர் தண்ணிது, தீவெய்து, வளி உளரும், உயிர் உணரும் என்றாற் போல்வன” என்ற காண்டிகையுரையோடு அமையாது, சூத்திரத்தில் கூறப்படாத போதும், ‘நிலம் வலிதாயிற்று என்பது வழு வமைதி’ என்பதனை விளக்கிக் கூறுதலும் உரையின் அமைப்பாம். (658 பேரா.)
இவ்வுரை இன்னும் விரிவாகவும் அமையும். மறுதலையான செய்திகளை இடை செறித்து, வினாவுதலும், அதற்கு விடை கூறுதலும், தன்நூல் மேற்கோளையும் முதல் நூல் மேற்கோ ளையும் எடுத்துக்காட்டி, ஐயமும் திரிபும் நீக்கிப் பொருள் தெளிவாகக் கவர்த்தல் இன்றி அறியுமாறு செய்யும் விரிவுரை யும் இவ்வுரையின் பகுதியாக அடங்கும். (659 பேரா.)
‘இருவகை உரையுள்’ முதல் இருபத்தி காண்க. இவற்றைக் ‘கரப்பின்றி முடியும் காண்டிகை’, ‘மேவாங்கமைந்த மெய்ந் நெறிக் காண்டிகை’ எனலாம். (தொ. பொ. 656, 657 பேரா.)
மரபுநிலை திரியாமையைத் தமக்குக் குணமாகக் கொண்டு உரைக்கப்படும் நூல் முதல்நூல் எனவும் வழிநூல் எனவும் இருவகைப்பட்ட இலக்கணத்தை யுடையன.
(தொ. பொ. 648 பேரா.)
இருவகைப் பாயிரத்துக்கும் உவமம் ஆவன கொழுவும், வாயில் மாடமும், பாவையும். துன்னூசி நுழைதற்குக் கொழு வழி ஆக்கலுடைத்து; நகர்க்குள் செல்லுதற்கு வாயில்மாடம் வழி ஆக்கலுடையது; பாவை சுவர்க்கு அணி செய்த லுடையது. இவை போலவே பாயிரம் நூலுள் நுழைதற்கு வழியாக்கலும் நூலுட் செல்லுதற்கு வழியாதலுடன் நூற்கு அணி செய்தலும் உடையது. (பா. வி. பக். 3)
பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிரமுமெனப் பாயிரம் இருவகைப்படும் அவற்றுள், பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்முகத்தும் உரைக்கப்படும். சிறப்புப்பாயிரம் என்பது தன்னான் உரைக்கப்படுகின்ற நூலுக்கு இன்றியமை யாதது. நூற்குப் புறமாவன கூறுதலால் புறவுரையாம் என்பது. (பா. வி. பக். 3, 2)
எழுவகை மதங்களுள் ஒன்று; ஒன்றற்கொன்று முரணாக இருவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு செய்திகளுள் ஒன்றை நீக்கி மற்றொன்றைத் துணிந்து தழுவிக் கொள்ளுதல். (நன். 11)
இது 32 உத்திகளுள் ‘ஒருதலை துணிதல்’ எனப்படும். ஏழ் என்ற எண்ணினை ஒற்று ஈற்று மொழியாகக் கொண்டார் (நன். 14) தொல்காப்பியனார் (எ. 388 நச்.); பிறர் ‘ஏழு’ என முற்றுகர ஈற்று மொழியாகக் கொண்டனர். நன்னூலார் ஏழு என முற்றுகர ஈற்று மொழியாகக் கொண்டமை இம்மதம் பற்றியதாம். (நன். 188 சங். உரை)
இலக்கணவிளக்க நூலார் முதலாயினார் ‘பாலும் நீரும் பாற்படப் பிரித்தல், அன்னத்துக் கியல்பு’ என்றார். மதிநுட்பத் தொடு நூலறிவும் வாய்க்கப்பெறாமல் கல்வி கற்கப் புகுந்த மாணாக்கர்க்குக் குணம்குற்றத்தையேனும் பிறவற்றையேனும் பிரித்துணரும் ஆற்றல் உளதாகாமையால் அது பொருந் தாது.
அவர் ‘கிளந்தவா கிளத்தல் கிளியினது இயல்பு’ என்றார். ஆசிரியன் சொல்லிய பொருண்மையைச் சொல்லியவாறு ஆய்ந்துணர்ந்து கோடல் மாணாக்கர் இயல்பு ஆவதன்றி, கிளந்தவாறு கிளத்தலால் பொருளுணர்ந்தார் என்பது பெறப்படாமையானும், பொருள் உணராவிடில் கல்விப் பயன் இன்மையானும் பொருந்தாது.
நன்னீரம் என்னாது நன்னிறம் என்று அவர் பாடமோதி ‘எந்நிறம் தோய்தற்கும் ஏற்றது நன்னிறம்’ என்றார். உவம வியல் நூற்பாக்கட்கு அது பொருந்தாது. நன்னிறம் பண்பும் மாணாக்கன் முதலும் ஆதலின் முதலொடு முதலும் சினையொடு சினையும் என்றாவது முதலொடு சினையும் சினையொடு முதலும் என மாறியாவது உவமமும் பொரு ளும் வருதலின்றிப் பண்பும் முதலும் என அவை மயங்கல் கூடாமையின் தொல்காப்பியர்க்கு அது கருத்தன்று. வெண்மை முதலிய நிறம் நல்லன தீயன எனப் படுதலின்றி, இது நன்னிறம் இது தீய நிறம் என்னும் வழக்கு யாண்டும் இன்று; நன்னிறம் எனப் பொதுமையாகக் கூறி, அஃது எந்நிறமும் தோய்தற்கு ஏற்றல் என்பது ஏலாமையான் அதுவும் பொருந்தாது.
அவர் ‘நல்லவை அகத்திட்டு நவைபுறத்து இடுவது நெய்யரி’ என்றார். நல்லவை, நவை என்பன யாவை எனத் துணிதற் கின்றி மயக்கம் நிகழ்கிறது. நல்லன இவை நவை இவை என உணர்தல் நூலறிவானன்றி, கற்கப் புகுந்த மாணாக்கர்க்கு இயலாது; இத்தன்மையுள் அவர்கூறிய அன்னத்து இயல்பு அடங்குதலின் அதனை வேறாகக் கூறுதலால் பயனின்று. ஆதலின் அது பொருந்தாது.
அவர் ‘குழூஉப் புறந்தருதல் குஞ்சரத்தியல்பு’ என்றார். அஃது இல்வாழ்வான் தன்மையாகிய சுற்றந்தழால் ஆவதன்றி மாணாக்கனது தன்மையாகாமையின் பொருந்தாது.
அவர் ‘பிறந்த ஒலியின் பெற்றி ஓர்ந்துணர்தல் ஆனேற்றின் செய்தி’ என்றார். ஒலியின் பெற்றி உணர ஆனேற்றினும் சிறந்த அசுணம் மான் முதலாய பிறவற்றை விடுத்துச் சிறப் பில்லாத அதனைக் கூறுவது பொருந்தாது.
அவர் ‘குரங்கு எறி விளங்காய்’ எனப்பாடமோதி, ‘கல்லால் எறிந்து கருது பயன் கொள்வோன், குரங்கெறி விளங்காயாம்’ எனத் தன்மையும் கூறினார். குரங்கு எறிகாய் பிறவற்றை நீக்கி விளங்காய் என ஒரே காயினைச் சுட்டற்குச் சிறப்பியல்பு இல்லை; ‘கல்லால் எறிந்து கருதுபயன் கோடல்’ என்றமை யான், அத்தன்மை எக்காய்க்காயினும் ஒப்புமைக் குணம் ஆகாமல், காய் கொள்வோர் குணமாகவே முடிகிறது. அவ்வாறு கொள்வோர் தன்மையை ஒப்புமைக் குணமாக்கல் கூடாமையானும் அது பொருந்தாது.
இன்னும் அவர் ‘விலங்கி வீழ்ந்து வெண்ணீர் உழக்கிக், கலங்கல் செய்து அருந்தல் காரா மேற்றே’ என்றார். சுனைநீர் முதலாயின அவ்வாறு எருமை கலக்கினும் கலங்கா; கலங்கிய நீர் அருந்தினாலும் அதனால் எருமைக்குக் கேடொன்று மின்றி விடாய் தீரும்; ஆசான் தனக்குக் கேடுறினும் அது கருதாமல் மாணாக்கனது நன்மையே கருதுவான். ஆதலின் அது பொருந்தாது.
இன்னும்அவர் ‘ஒன்றிடை ஆர உறினும் குளகு, சென்று அருந்தல் யாட்டின் சீரே’ என்றார். ஆடு சென்றுசென்று அருந்தினும், ஒன்றிடை அருந்தும் ஏனைய விலங்கு போலவே பசி தீர்தல் ஆகிய பயன்பெறுவதன்றி அதனால் அதற் கென்று கேடொன்றுமில்லை; பலர்பால் சென்று வினாதல், வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொள்வது நன்மாணாக்கர் கடனாதலைப் புராண இதிகாசங்களுள் சுகன் அருச்சுனன் முதலியோரிடத்துக் காண்கிறோம். ஆதலின் அதுவும் பொருந்தாது.
இனி அவர் ‘நீரிடையன்றி நிலத்திடை ஓடாச், சீருடையதுவே தோணி’ என்றார் எல்லாத் தன்மையும் முற்ற உடையதொரு பொருள் யாண்டும் இல்லை. அவ்வாறே யாதானும் ஒரு தன்மையின்மை பற்றி மாணாக்கன் ஆகாதான் என்று ஒருவனைத் தள்ளுதல் முடியாது; முடியுமாயினும், தோணி போலவே கடல் ஓடாத நெடுந்தேரும் பிறவும் இருப்பத் தோணி ஒன்றனையே சுட்டுதல் சிறப்பின்று. ஆதலின் அதுவும் பொருந்தாது. (பா. வி. பக். 140, 141; 150 - 152)
வடக்கே எல்லையாக வேங்கடம் என ஒருமலை கூறிய பனம்பாரனார்க்குத் தெற்கேயும் நிலையுடைத்தாகிய ஒருமலை கூறுவதே முறை. ஓரிடத்தில் நிலைபெறாது நெடுகச் செல்லும் யாற்றினைக் கூறுதல் எல்லை ஆகாது. பிற்காலத்தே நூல் செய்த சிறுகாக்கை பாடினியார் முதலாயினார் தெற்கே பிறநாடின்றித் தமிழ்நாடே ஆமாறு கடல் சூழ்ந்தமையான் நிலையுடைய மலையினை விதந்து கூறல் வேண்டாமையால் கடலையே எல்லை கூறினர். தொல்காப்பியரும் பிறரும் அகப்பாட்டெல்லை புறப்பாட்டெல்லை என யாண்டும் கூறி னாரல்லர். தொல்காப்பியர் ‘வண்புகழ்மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயர் எல்லை யகத்தவர்’ எனப் பொதுப் படவே கூறினார். தலைச்சங்கம் இரீஇய தென்மதுரையை அகவெல்லையுட்படுத்தாது புற எல்லையுட்படுத்துதல் கூடாது; அக் காலத்தே குமரியாற்றின் வடக்கே பாண்டியர்க்குத் தலைநகரமும் சங்கமும் இன்றி, பெரும்பான்மை காடாகக் கிடந்த அந்நாட்டினை அகப்பாட்டெல்லை என்றலும் கூடாது. இவ்வாற்றால் வேங்கடங் குமரியை அகப்பாட் டெல்லை யாகக் கூறியமை பொருந்தாது. (பா. வி. பக். 201)
பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்ற ஒன்பதும் இருதிணையிலும் இளமைத் தன்மை யுணர்த்தும் பெயர்கள். (தொ. மர. 1)
மழவு, நவ்வி, சேய், போதகம், மஞ்சு, குழவு, குருளை, கயம், இளை, புருவை, முருகு, கருணம், பீழ், பருவம், சேடு, கொம்மை, வெண்மை, நாகு - (திவா. பக். 189)
மழவு, முருகு, தருணம், மஞ்சு, குழவு, விளர், கொம்மை, புருவை, கோமளம், போதகம் (பிங். 1948)
குருளை, மழவு, வெண்மை, குழவு கோமளம், கொம்மை, புருவை, யௌவனம், நாகு, போதகம், தருணம், நவ்வி, முருகு, கிளை. (சூடா. பக். 151)
சேய், போதகம், மஞ்சு, மீளி, குருளை, மீள், சேடு, கயம், நவ்வி, பருவம், தருணம், மழவு, கொம்மை, குருகு, புரு, கோமளம், முருகு, குழவு. (கயா. நி. 336)
மஞ்சு, கோமளம், முருகு, போதகம், குருளை, பிள்ளை, பருவம், விளரி, விளா, மண்ணை, யௌவனம், விளவு, நவ்வி, குருகு, இளை, சேய், நாகு, தருணம், புருவை, கயம், விளைச்சு, கொம்மை, மழவு குழவு, சேகு, பீரு, விளை, வீண், செவ்வி. (ஆ.நி. 192)
இப்புறனடைச் சூத்திரத்தான் இளமைப் பெயருள் முன் விதந்து கூறப்படாத நாகு என்ற இளமைப் பெயர் ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக வழங்குதல் முதலியன கொள்ளப் படும். (தொ. பொ. 581 பேரா.)
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; முன் நூற்பாவில் கூறிய பொருள்களில் ஒன்றனை வேறொரு நூற்பாவில் நீக்குதல். (தொ. பொ. 665 பேரா.)
முற்கூறப்பட்ட சூத்திரத்தால் பெறப்படாத பொருளைப் பின் வருகின்ற சூத்திரத்தால் அமைத்தல். (656 இள.)
நோயும் இன்பமும் மிகுங்காலத்துத் தலைவனையும் தலைவியையும் போல, கனவு காண்டல் அவரோடு தொடர் புடைய நால்வர்க்கு முரித்து என்ற கருத்தில் ‘பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே’ (பொருளியல் 5) என்று கூறிப் பின் தோழி பாங்கன் இவர்களை விலக்குதற்கு, “நட்பின் நடக்கை ஆங்கலங் கடையே” (பொருளியல் 6) என்ற நூற்பா யாத்தல் இவ்வுத்திவகை. நூற்புறனடையும் ஓத்துப் புறனடை யும் அதன் இனம். (பேரா.)
வழிநூற்குக் கூறிய சூத்திரத்தில் வழிநூலானாகிய பயன் கூறாது, ‘வழியின் நெறியே நால்வகைத் தாகும்’ (தொ. பொ. 651) என்று வகை மாத்திரம் கூறிப் பின் ‘தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து, அதற்பட யாத்தலோ டனைமர பினவே’ (652) என வழிநூலானாகிய பயனை வேறொரு நூற்பாவினுட் கூறல். (இள. மா. அ. 25 உரை.)
ஓரியலுள் கூறியதோர் இலக்கணத்தைப் பிறிதோர் இயலின்கண் கூற நேர்ந்தவிடத்து, முற்கூறிய நெறி தவறாது காத்துரைத்தல். (தொ. மர. 109 ச. பால)
எ-டு : ‘ஐ ஒடு கு இன் அதுகண் என்னும், அவ்வா றென்ப வேற்றுமை யுருபே’ (எழுத். 113) எனக் கூறிய இலக்க ணத்தைக் ‘கூறிய முறையின் உருபு நிலை திரியாது, ஈறு பெயர்க்கு ஆகும்’ (வேற்றுமை - 8) எனக் காத்துரைத் தல்.
(1) இது தொல்காப்பியர் கூறாதொழிய, நன்னூலார் கூறும் 32 உத்திகளுள் ஒன்று. அஃதாவது முன்பு உள்ளதாய்ப் பின்பு வழங்காதாயின் அதனை விலக்கல்.
ஆந்தை பூந்தை முதலாய புணர்ச்சிமுடிவுகளைத் தொல் காப்பியர் கூறியிருப்பவும் (தொ.எழுத். 347, 348 நச்.) நன்னூ லார் கூறாதொழிந்தமை இவ்வுத்தி. (நன். 14)
இது தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் உத்திகளுள் ஒன்று. “யாம் குறிப்பிடுவது இஃதன்று, இதுவே” எனத் தெளிவாகக் கூறுதல்
‘பன்னீ ருயிரும் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈ ரைந்துயிர் மெய்யும் மொழிமுதல்’ நன். 102
மொழி முதற்கண் மெய் வாராது உயிர்மெய்யே வரும் என்று விளக்கிக் கூறுதலின் இதன்கண் இவ்வுத்தி வந்தவாறு. (நன். 14, வீ.சோ. 180 உரை)
மாறனலங்காரம் சுட்டும் பத்துக் குற்றங்களில் ஒன்று. அஃதாவது கேட்டோர்க்கு இன்னா யாப்பிற்றாயிருத்தல்.
(தொ. பொ. 663 பேரா.)
சூத்திரச் செய்யுள் கேட்போர்க்கு இன்னா திசைப்பச் செய் தல் என்னு மிக்குற்றம் நல்லாசிரியர் நூலுள் காணப்படாது. (மா. அ. 23)
ஈ
ஆர்வமுடைமையும், நண்பும், தம்மால் அன்பு செய்யப் பட்டார்கண் துன்பம் கண்டவிடத்தே உளதாகும் வாட்ட மும், நட்டாரது மிகுதி கண்டவிடத்தே இடித்துரைத்தலும் என ஈகைக்கு இன்றியமையாக் குணம் நான்கு வகைப்படும்.
(பா. வி. பக். 83)
ஆசிரியன் பாடமுரைக்கும் முறைமை; அஃதாவது பசியால் இரப்போர்க்கு அவர் பசியளவறிந்து முகமலர்ந்து இன்சொற் கூறி உணவு அளித்தாற்போல மாணாக்கர்க்கு அவன் அளிக்கும் முறைமை. (பா. வி. பக். 5)
மாணாக்கனும், ஆசிரியனும், இருவரும் சில காரணத்தால் பிரிதலின் ஈதலாகிய நூற்பொருளுரைத்தல் அப்பிரிவுக் காலத்தே நிகழாது. வேனிலும் நண்பகலும் முதலாகிய காலத்தே அறிவு கூரியரது சிந்தையும் கூம்பும்; வைகறை எற்பாடு இடையாமம் என்னும் சிறுபொழுதுகள் முறையே நித்த கருமத்திற்கும், உலகியற்கும், உறக்கத்திற்கும் இன்றியமை யாது வேண்டப்படுவன. நூற்பொருள் அளித்தற்குரிய ஏனைய பெரும்பொழுது சிறு பொழுதுகளில் உவா முதலிய காலத்தை நூல் விலக்குகிறது. ஈதல் நிகழாக்காலம் இவை என்பது. (பா. வி. பக். 122)
நூற்பொருள் கொள்வோனாம் மாணாக்கன் உணரும் திறத்தான் பல உபாயங்களைச் சூழ்தல், அவனுள்ளத்தே நூற்பொருட் பரப்பு முதலியவற்றான் உளதாகும் அச்சமுறச் செய்யாமை, பல நாள்களுக்கன்றி அந்நாளுக்குரிய வகையால் அளவறிந்து வழங்கல், ஐயம் திரிபு அறியாமை எனும் முக்குற்றத்துள் அவனுளம் அகப்பட்டலையாவாறு பாடப் பொருளை அவனுளம் கொளுவுதல் என்னும் இவை நான்கும் நூற்பொருளை ஈதல் தொழிலிடத்தே ஆசிரியனுக்கு இயலும் துணைவினையாம். (பா. வி. பக். 79)
மாணாக்கற்கு வழங்குமாறு வாய்த்த பல திறக் கலைச் செல்வமுடைமை, “மாணாக்கனுக்கு யான் ஈவேன்” என்றிருக் கும் மனப்பான்மை, பாடஞ்சொல்லுதற்கண் துணியும் குண முடைமை, அவ்வாறு ஈதற்கண் தடையின்றி வழங்கும் பெற்றி என்னும் இந்நான்கும் ஈதல் பற்றி ஆசிரியனுக்கு இயலும் முதற் காரண வினையாம். (பா. வி. பக். 77)
கொள்வானாம் மாணாக்கனை ஆசிரியன் தன் கீழிருந்து நூற்பொருள் கேட்பித்தல், தன் ஏவலான் அவனை உள்ள மும் உடலும் அசைத்தலின்மை, அவன் தானாகவேனும் அவ்வாறு அசையச் செய்யாமை, தானும் அசைதலின்மை என்னும் நான்கும் ஈதல் பற்றி மாணாக்கனைச் சார்ந்த துணைவினையாம். (பா. வி. பக். 82)
நூற்பொருள் தொகையானும் வகையானும் இத்துணைத்து என வரையறுத்துப் பொருண்மை காட்டலும், சொல்லப் படுமவற்றுள் முன்னரும் பின்னரும் சொல்லிய பொருள் தம்முள் வேறுபடுமாற்றை விளங்கச் சுட்டுதலும், பொதுவாம் தன்மை சிதையாவாறு பல வகைத்தாக உணர்த்தலும், அவற்றது சிறப்பினையும் தனித்தனியே விதந்து புலப்படுத்த லும் என நான்கும் ஈதல் தொழிலிடத்தே செயப்படுபொரு ளில் நிகழும் துணை வினையாம். (பா. வி. பக். 801)
சோம்புதலுடையான், அகந்தையுடையான், மறவிமிக்கான், காமுகன், கள்வன், பிணியாளன், நீங்காத கோபமுடையான், தொன்னூல் பரப்பினை யஞ்சித் தடுமாறு உள்ளத்தான் எனப்படும் எண்மர் ஆசிரியனால் ஈதல் செய்யப்படமாட் டாது நீக்கப்படுவோர். (பா. வி. பக். 137)
அறநூலும் அறத்தொடுபட்ட பொருள்நூலும், அறத் தொடும் பொருளொடும் பட்ட இன்பநூலும், தீயவும் பயனிலவும் ஆகாமல் அறம்பொருளின்பம் பயக்கும் கருவி நூலும் என அவை, ஆசிரியன் மாணாக்கற்கு ஈதற்குரிய நூல்களாம். (பா. வி. பக். 116)
நந்தும் முரளும் ஊற்றுணர்வும் நாவுணர்வுமாகிய ஈரறி வுடைய உயிர்கள்; பிறவும் அக்கிளைப் பிறப்பு உள.
(நந்து - சங்கு; முரள் (ண்) - சிப்பி) இவற்றுக்குக் கிளையாவன கிளிஞ்சிலும் முற்றிலும் முதலாகிய கடல்வாழ்சாதியும் பிறவும் ஆம். (தொ. பொ. 584 பேரா)
ஆசிரியன் இருக்கையிடனும், நூற்பொருள் அளித்தலைப் பொருந்தும் இடனும் நிலையுடையன ஆதல், அவன் முகம் மாணாக்கர் காணுமாறு அமைவதாதல், அவர் முகமும் அவன் காணுமாறு அமைவதாதல் என ஈவோற்பற்றி இசை யும் இடம் நான்காம். (பா. வி. பக். 119)
ஈவோனாகிய ஆசிரியன் தன்மையாவது, ஈதல்தொழில் நடை பெற வேண்டின் இரப்போன் வேண்டும் பொருளுடையனாம் தன்மையும், அதனை ஈதற்குக் காரணமாகிய இரக்கம் முதலிய குணனுடையனாம் தன்மையும் ஈவோற்கு இன்றியமையா திருத்தல் வேண்டுமாதலின், ஆசிரியன் அவற்றை உடைய னாதல். (பா. வி. பக். 5)
ஈவோன் தன்மை பொதுவியல்பெனவும் சிறப்பியல்பெனவும் இருவகைத்து. ஈவோரது தன்மை பலவற்றுக்கும் பொதுவாக நிற்பது பொதுவியல்பு; அப்பலவற்றுள் ஈதல் வினை ஒன்றற்கே உரிமையாக நிற்பது சிறப்பியல்பு.
அவற்றுள் பொதுவியல்பாவது சான்றோரியல்பு எனப்படும் உறுப்பு வகை எட்டும், அவற்றுள் முதலாவதாகிய குடிப்பிறப் பின் வகை எட்டும் ஆம். அவ்வுறுப்பு வகை எட்டாவன: குடிப்பிறப்பு, தூய்மை, ஒழுக்கம், கல்வி, வாய்மை, அழுக்கா றிலாமை, அவாவிலாமை, நடுவுநிலை என இவை. (பா. வி. பக். 13)
குடிப்பிறப்பின்வகை எட்டாவன : ஈகை, நகை, இன்சொல், இகழாமை, அன்பு, பணிவு, செம்மை, நாணம் என இவை.
(பா. வி. பக். 17)
சிறப்பியல்பாவது அக்குடிப்பிறப்பின் முதலாவது வகையுள் முதற்குணமாகிய ஈதல் தொழிலுக்குக் காரணம் எனப்படும் முதல் நிலை வகை எட்டும் அவற்றின் விகற்பமும் ஆம். ஈதற் றொழிலுக்கு முதல்நிலையாவன வினையும், செய்வதும், செயப்படு பொருளும், நிலனும், காலமும், கருவியும், இன்ன தற்கு என்பதும், இது பயன் என்பதும் என எட்டாம். (பா. வி. பக். 76)
ஈவோன் ஆகிய ஆசிரியன் தன்மை, மாணாக்கற்குப் பயன்படு தலும் பயன்படாமையும் பற்றி, கற்கப் புகுதற்குத் தகுதி யுடைத்து ஆகலும் தகுதியுடைத்து ஆகாமையும் ஆகிய காரணத்தான், கற்கப்படு தன்மையும் கற்கப்படாத் தன்மையும் என இருவகைப்படும். (பா. வி. பக். 7)
ஈவோனது தொழில் அகத்தொழிலும் புறத்தொழிலும் உரைத் தொழிலுமென மூவகைப்படும்.
அகத்தொழில் கைம்மாறு வேண்டாக் கடப்பாடும், வறி யார்க்கு ஈகையும், நல்லவற்றுள் அவர் நாடின கொடுத்தலும், கற்கும் அளவிற்குறையாது கொடுத்தலும் என நான்காம்.
(பா. வி. பக். 85)
ஈவோனது புறத்தொழில் பருவமுடையராகி விரும்பின் பகைவராயினும் உடனளித்தல், பருவம் எய்தளவும் தாழ்த்தல், பருவமுடையராகி அறிவறிந்து ஆள்வினையுடையராயிருப் போர்க்கே அவர் பலநாள் பழக்கமில ராயினும் எல்லாம் அளித்தல், செருக்கும் மானமும் இன்றி ஏக்கற்றுக் கற்கும் பணிவுடையார் சேய்மைக்கண் இருப்பினும் அளித்தல் என நான்காம். (பா. வி. பக். 88)
உ
இதனைத் தொல்காப்பிய உத்திவகைகளுள் ஒன்றாக இளம்பூரணர் கூறுகிறார். (பேராசிரியர் ‘உடம்பொடு புணர்த்தல்’ என்ற தொடருக்கு மாறாக ‘முறை பிறழாமை’ என்று பாடம் கொண்டார்.) இலக்கண வகையான் ஓதுத லின்றி ஆசிரியன் சூத்திரத்தின்கண்ணே ஒரு சொல்லை வைப்பானாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் கோடல் இது.
‘ஆரும் அருவும் ஈரொடு சிவணும்’ (தொ. சொல். 138 சேனா.)
‘ஆரும் அரும்’ என, ஆர் அர் என்பவற்றுக்கு உம்மையான் இணைப்புத் தரல் வேண்டும். அர் + உம் = அரும்; ஆயின், அரு + உம் = ‘அருவும்’ என்று நூற்பாவில் அமைத்து, ‘அர்’ என்பதனை உகரம் கொடுத்து ‘அரு’ என்றும் சொல்லலாம் என்பதற்குத் தனியே விதி கூறாது, தம் சூத்திரத்தில் அமைத் துத் தொல்காப்பியனார் பெறப்பட வைத்தது, உடம்பொடு புணர்த்தல் என்ற உத்தி வகையாம். (தொ. பொ. 656 இள.)
சொல்லதிகாரம் 1, 7, 57, 74, 131, 228ஆம் சூத்திரங்கட்கு நச்சினார்க்கினியர் உரையுள் இவ்வுத்திவகை புலப்படுத்தப் பட்டுள்ளமை காண்க.
எழுவகை மதங்களைத் தழுவி நூல் இயற்றப்படும் என்ற அம் மதங்களுள் ஒன்று; அஃதாவது பிறர் மதத்திற்குத் தான் உடன்படுதல்.
‘உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா’ (தொ. எ. 60)
என்ற தொல்காப்பியர் மதத்தை உடன்பட்டு,
‘பன்னீ ருயிரும் கசதந பமவய
ஞஙஈ ரைந்துயிர் மெய்யும் மொழிமுதல்’ (நன். 102)
என்று கூறுதல் போல்வன. (நன். 11)
நூற்செய்திகளைச் செவ்வனம் சொல்லுதல் உத்தி என்பார் பேராசிரியர். சூத்திரச் செய்திகளைச் செவ்வனம் கூறாது தம் நுண்ணறிவு தோன்றவும், கற்பார்க்குச் சுவையும் எளிமையும் பயக்கவும் கையாளப்படும் நுட்பமான வழிகளை உத்தி என்பார் பிறர். பேராசிரியர் அவற்றை ‘உத்திவகை’ என்பர். தொல்காப்பியனாரும் மாறன் அலங்கார ஆசிரியரும் உத்தி வகை என்று குறிப்பிடவும், நன்னூலாரும் இலக்கண விளக்க நூலாரும் உத்தி என்றே குறிப்பிடுவர்.
தொல்காப்பியர் கூறும் உத்திவகை முப்பத்திரண்டாவன :
1. நுதலியது அறிதல், 2. அதிகார முறை,
3. தொகுத்துக் கூறல், 4. வகுத்து மெய்ந் நிறுத்தல்,
5. மொழிந்த பொருளோடு 6. வாராததனான் வந்தது
ஒன்ற அவ்வயின் மொழி முடித்தல்,
யாததனை முட்டின்று
முடித்தல்,
7. வந்ததுகொண்டு வாராதது 8. முந்து மொழிந்ததன்
முடித்தல், தலைதடுமாற்று,
9. ஒப்பக் கூறல், 10. ஒருதலை மொழிதல்,
11. தன்கோள் கூறல், 12. முறை பிறழாமை,
13. பிறன் உடன்பட்டது
தானுடம்படுதல், 14. இறந்தது காத்தல்,
15. எதிரது போற்றல், 16. மொழிவாம் என்றல்,
17. கூறிற்று என்றல், 18. தான் குறியிடுதல்,
19. ஒருதலை அன்மை, 20. முடிந்தது காட்டல்,
21. ஆணை கூறல், 22. பல்பொருட் கேற்பின்
நல்லது கோடல்,
23. தொகுத்த மொழியான் 24. மறுதலை சிதைத்துத் தன்
வகுத்தனர் கோடல், துணிபு உரைத்தல்,
25. பிறன்கோட் கூறல், 26. அறியாது உடன்படல்,
27. பொருளிடையிடுதல், 28. எதிர்பொருள் உணர்த்தல்,
29. சொல்லின் எச்சம் 30. தந்து புணர்த்துரைத்தல்,
சொல்லியாங்குணர்தல்
31. ஞாபகம் கூறல், 32. உய்த்துக் கொண் டுணர்தல்
என்பன. (தொ. பொ. 665 பேரா.)
இவ்வுத்திவகைளுக்கு இனமும் கூறுவர் தொல்காப்பிய உரையாளர் பேராசிரியர். இனித் தொல்காப்பியத்துள் சொல்லப் படாது நன்னூல் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடும் உத்திகள் சில வருமாறு :
நன்னூல் -
1. முடித்துக் காட்டல், 2. முடிவிடம் கூறல், 3. தானெடுத்து மொழிதல், 4. சொற்பொருள் விரித்தல், 5. தொடர்சொற் புணர்த்தல், 6. இரட்டுற மொழிதல், 7. மாட்டெறிந்தொழு கல், 8. முன்மொழிந்து கோடல், 9. பின்னது நிறுத்தல், 10. விகற்பத்தின் முடித்தல், 11. முடிந்தது முடித்தல், 12. எடுத்துக் காட்டல், 13. எடுத்த மொழியின் எய்த வைத்தல், 14. இன்னது அல்லது இதுவென மொழிதல், 15. எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், 16. தன் குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல், 17. ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல் என்பன. (நன். 141)
மாறனலங்காரம் -
1. விரிந்தவை இவையென விழுமிதின் காட்டல், 2. மாட்டுறுப் பினவா மனங்கொளக் கூறல், 3. தீபக வகையால் சிறப்புறக் கூறல் என்பன (மா. அ. 25)
உரையாசிரியர் கொள்வன. (தொ. பொ. 656)
1. யாற்றெழுக்கு, 2. தேரைப் பாய்த்துள், 3. அரிமாநோக்கு, 4. பருந்து விழுக்காடு, 5. ஆதி விளக்கு, 6. மத்திம விளக்கு, 7. இறுதி விளக்கு, 8. உரையிற் கோடல், 9. மாட்டெறிதல், 10. சொற்பொருள் விரித்தல், 11. ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல் என்பன.
நச்சினார்க்கினியர் கொள்வன :
1. ஒன்றென முடித்தல், 2. தன்னினம் முடித்தல், 3. ஏதுவின் முடித்தல், 4. ஒருதலை துணிதல், 5. சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், 6. உடம்பொடு புணர்த்தல், 7. அருத்தாபத்தி, 8. வேண்டாது கூறி வேண்டியது முடித்தல், 9. விரிந்தது தொகுத்தல் என்பன (தொல்காப்பிய உரைப் பகுதிகள்)
ஆண்ஆட்டினைக் குறிக்க மரபாக வழங்கும் பெயர்.
(தொ. பொ. 602 பேரா.)
இது தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று.
ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஓதியவழி அதற்குப் பொருந்தா வகையுளதாகக் தோன்றின் அதற்குப் பொருந்து மாறு விசாரித்துணர்தல். (தொ. பொ. 656 இள.)
ஓரிடத்தில் ஒருபொருள் பற்றி நூற்பா ஒன்று யாத்தவழி, அந்நூற்பாவின் கண்மற்றொரு பொருளையும் கொள்ளுதற்கு வாய்ப்பளித்து நூற்பா யாத்தல். (665 பேரா.)
எ-டு : ‘பனி என்னும் சொற்குச் சாரியைகள் அத்தும் இன்னும்
என்னும் கூறப்பட்டனவேனும், பனியத்துக் கொண்
டான் என ‘அத்து’ வருமிடங்களையும்
பனியிற்சென் றான் என ‘இன்’ வருமிடங்களையும்
வழக்கு நோக்கி உய்த்துணர்ந்து அறிதல் போல்வன
(இள.)
(நச். உரையுள் கண்டுகொள்க. சொல். 11, 460 நச்.)
‘நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும், குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே’ (தொ. எ. 36 நச்.) என்று இடமும் பற்றுக்கோடும் கூறிக் குற்றியலுகரம் அறுவகைப்படுதலைப் பெறப்படவைத்தலும்,
‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின், ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொ.எ. 67 நச்.) என மொழி முதற் குற்றிய லுகரம் கூறும் நூற்பாவிலேயே அதற்கு இடனும் பற்றுக் கோடும் சேர்த்துக் குறிப்பிடுதலும் போல்வன இவ்வுத்தி வகை. (பேரா.)
பெயர் வினைக்கு ஓதிய இலக்கணம் ஒழிந்த இடை உரிக்கும் ஏற்ற பெற்றி கோடல் இவ்வுத்தி வகையின் இனமாம். (பேரா.)
நுதலியது அறிதல், பயனில்லாதது போலக் கூறியநூற்பாவின் கருத்து இன்னதுபோலும் என்று அறிய வைக்கும். உய்த்துக் கொண்டுணர்தல், கூறிய கருத்தின் மேலும் மீண்டும் ஒரு கருத் தினை உணரவைக்கும். உய்த்துக்கொண்டுணர்தலை யுடைய நூற்பா, சில்வகை எழுத்தின் செய்யுட்டாக இருக்கும். ஞாபகங் கூறலையுடைய நூற்பா, அரிதும் பெரிதுமாக அமைந்திருக்கும். (பேரா., நச். உரையுள் கண்டுகொள்க.) (பொ. 213, 226; சொல் 279 நச்.)
சொல் பல்காமல் சுருக்கமாகக் கூறியவழி, அதன் விரிவெல் லாம் உணர்ந்துகொள்ளும்படியாகக் கூறல். (தொ. மர. 109 ச. பால)
எ-டு : ‘நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும்
குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே’ (எழுத். 36)
பின்னர்த் ‘தொடர்மொழி’ என்றதனால், நெட்டெழுத்து என்றது ஈரெழுத்தொருமொழியை என உய்த்துணர்தல்.
நன்னூல் கூறும் முப்பத்திரண்டு உத்திகளுள் இறுதியாகச் சொல்லப்படுவது; சில சூத்திரவிதிகளைக் கொண்டு ஆராய்ந்து அறியும்படி ஒருபொருளை வைத்தல்.
‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும் ’ நன். 96. ஈற்று மகரம் குறுகுதற்குரிய ஈற்றயலெழுத்துக்களாகிய ணகர னகர மெய்கள், உகரஉயிர் கெட்டு நின்ற ஈற்றயலெழுத்துக்களாகிய ளகரலகரங்கள் திரிந்த ணகரனகரங்கள் என்பதனை ‘லள மெய் திரிந்த னணமுன் மகாரம், நைந்து ஈரொற்றாம் செய்யு ளுள்ளே’ (நன். 120) என்ற நூற்பாவைக் கொண்டு தெளிதல் உய்த்துணர வைப்பு என்ற உத்தியாம்.
‘உத்தி’ காண்க.
உரையாசிரியன்; இவனுக்கும் ஒரு நூலுக்குச் சிறப்புப்பாயிரம் வரையும் தகுதி உண்டு என்பர் நன்னூலார். (51) (L)
உரைகாரன் நூல் செய்தோன் காலத்தனாயின் சிறப்புப் பாயிரம் கூறற்கு உரியனாம்; பிற்காலத்தனாயின், ஆக்கி யோன் பெருமை முதலாயின முற்றும் உணரானாகலின் அவனுரிமை சிறப் புடைத்தன்று. (பா. வி. பக். 159)
ஆசிரியன் நூற்குச் சொல்லும் உரையை மனங்கொள்ளுமாறு உணர வல்லோன்; மாணாக்கராதற்கு உரியாருள் இவனும் ஒருவன். (நன். 37) (L)
நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; முன்னே ஒரு நிமித்தத்தினால் சொல்லப்பட்டதைப் பின்னே சொல்ல வேண்டுமிடத்தே இதனை முன்னே சொன்னோம் என்பது தோன்ற, அங்கே மீளவும் சொல்லாது விடுதல். (நன். 14)
‘மூன்று உயிரளபு’ (நன். 99) என்ற நூற்பாவில் உயிர்மெய்க்கு மாத்திரை கூறப்படவில்லை. முன்னர் உயிர்மெய் மாத்தி ரையை ‘உயிர் அளவாய்’ (நன். 89) என்று கூறினமையின், ‘உரைத்தாம்’ என்னும் உத்தி பற்றி அச்சூத்திரத்தில் கூறாதொழிந்தார்.
நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; பின்னே சொல்லப்படுவதை முன்னே ஒரு நிமித்தத்தால் சொல்ல வேண்டின், இதனைப் பின்னே சொல்வோம் என்பது தோன்ற, அங்கே சுருக்கிச் சொல்லுதல். (நன். 14)
சொல்லதிகாரத்துப் பெயரியலில் கூறப்படும் பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் பற்றிய பெயர்களையும், வினையியலில் கூறப்படும் தெரிநிலை வினைகளையும், பகுபதங்களின் பாகுபாடு கூறும் எழுத்ததிகாரப் பதவியலில் ‘பொருளிடம் காலம் சினை குணம் தொழிலின், வருபெயர் பொழுது கொள் வினைபகு பதமே’ (நன். 132) என்று முன்னர் எடுத்துக் கூறியது, ‘உரைத்தும்’ என்றல் என்ற உத்தி பற்றியதாம்.
பொதுப்பாயிரத்தன்மை யுரைத்தல், சிறப்புப்பாயிரத் தன்மை யுரைத்தல், நூல்வகை யுரைத்தல், நூலது உறுப்பின் வகை யுரைத்தல், சூத்திரத்தின் கிடக்கைவகை யுரைத்தல், சூத்திரத் தின் சூத்திரப் பயன் வகை யுரைத்தல் என ஆசிரியனது உரைத்தொழில்வகை அறுவகைப்படும். (பா. வி. பக். 91)
மூலத்திற் சொல்லப்படாததனை உரையில் தழுவிக் கொள் ளுதல். ‘உரையிற் கோடல்’ காண்க.
காண்டிகை உரையில் கூறப்படாததனை விருத்தியுரையில் கொள்க; அல்லது அதற்கு உரையினை நுண்ணறிவால் கண்டு கொள்க என்ற கருத்தும் ஆம். (L)
சூத்திரத்துச் சொல்லப்படாது விடுக்கப்பட்ட இன்றியமை யாச் செய்திகளை உரையாளர் தம் உரையிற் குறிப்பிடுதல். இது தொல்காப்பியனார் சொல்லாத ஓர் உத்திவகையாம். எழுத்ததிகாரத்துள் நச்சினார்க்கினியர் 130 , 227, 382ஆம் சூத்திரத்துள் இதனை ஆள்வர்; சொல். 222 ஆம் சூத்திரத்தும் கொள்வர்.
‘அம்மின் இறுதி க ச த வரும்வழி மகரம் முறையே ங ஞ ந ஆகும்; மென்கணமும் இடைக்கணமும் வருமொழி முதலில் வருவழி மகரம் கெட்டு விடும்’ என்னும் (தொ. எ. 129, 130) நூற்பாக்களையுட் கொண்டு, 130ஆம் நூற்பா உரையில், ” புளியவிலை - என உயிர்வருவழி, ஈறு கெடுதலும், புளியிலை என ‘அம்’ முழுதும் கெடுதலும் கொள்ளப்படும்” என்று வரைந்தார் நச்சினார்க்கினியர்.
மூலபாடம் எடுத்துரைத்தல், கருத்துரை, சொற்களைப் பிரித் துரைத்தல், சொல்லுக்கும் பொருளுரைக்கும் பதவுரை, தொகுப்பாக எழுதும் பொழிப்புரை, உதாரணம் எடுத்தோ தல், வினவிக்கொள்ளுதல், தன் வினாவிற்குத் தானே விடை கூறல், விசேடஉரைகளைத் தந்துரைத்தல், வேண்டுவன எல்லாம் விரித்துரைத்தல், அதிகாரத்தொடு பொருந்தக் காட்டியுரைத்தல், ஐயமுற நின்ற விடத்தே இதற்கு இதுவே பொருளெனத் துணிந்துரைத்தல், இதனால் பயன் இதுவென் றுரைத்தல், ஆன்றோர் நூலினின்று மேற்கோள் காட்டி யுரைத்தல் என உரை பதினான்கு வகைத்தாகச் செய்யப்படும். (நன். 21)
கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டி அகலம் கூறல் என உரைவரையு முறை நான்கு வகைப்படும். கண் ணழித்தல் - பதப்பொருள் கூறல்.
(இறை. அ. 1 உரை, பா. வி. பக். 160)
நூற்குச் சொல்லிய அழகு பத்தனுள் ஒன்று; உயர்ந்தோர் வழக்கத்தொடு மாறுபடச் சொல்லாமை.
‘அம்முதல் ஈராறு ஆவி; கம்முதல்
மெய்மூ வாறுஎன விளம்பினர் புலவர்’ (நன். 63)
சான்றோர் வழக்கத்தொடு சொல்லிய இந்நூற்பா உலக மலையாமை என்ற அழகுடையது. (நன். 121)
ஊ
நால்வகை வருணத்தார்க்கும் அவரவர் பிறந்த ஊர், அவரவர்தம் பெயர், அவரவர் வருணத்திற்கு உரியன என்றற் கேற்ற கருவிகள் என்பன உரியனவாகக் கொள்ளப்படும். ஊரும் பெயரும் எல்லா வருணத்தாருக்கும் ஒப்பச் செல்லும்.
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் அந்தணர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் }
உறையூர்ச் சோழன்
மதுரைப் பாண்டியன் } அரசர்
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் } வணிகர்
அம்பர்கிழான் நாகன்
வல்லங்கிழான் மாறன் } வேளாளர்
நான்கு வருணத்தாருக்கும் ஊர்ப்பெயர் அடைமொழிகள் ஆயினவாறு.
உடைத்தொழிற்கருவி என்பன: அந்தணருக்கு நெய்முகந்து ஓமம் செய்யும் கருவியாகிய சுருவையும், சமிதை குறைக்கும் கருவியும் முதலாயின. அரசருக்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின வணிகருக்கு நாவாயும் இரத்தினங்களும் மருந்துப் பொருள்களும் முதலாயின. வேளாளருக்கு கலப்பையும் சகடமும் முதலாயின.
நான்கு வருணத்தாரையும் தலைமைக்குணங் கூறுங்கால் அந்தணரைப் பிரமனொடு கூறியும், அரசனைத் திருமா லோடு கூறியும், வணிகரை நிதியின் கிழவனாகிய குபேர னொடு கூறியும், வேளாண் மாந்தரை வருணனொடு கூறியும் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும். (தொ. பொ. 629, 630 பேரா.)
எ
சொல்லாது விடப்பட்டவற்றிற்கும் சொல்லியவற்றான் இலக்கணம் பொருந்தச் சொல்லுதல், நன்னூல் குறிக்கும் 32 உத்திகளுள் ஒன்று; தொல்காப்பியம் குறிப்பிடாதது.
‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ (நன். 109)
உயிர்மெய் ஒற்று முன்னும் உயிர் பின்னுமாய் ஒலித்து வரும் முறைக்கேற்ப (நன். 89) அக்கலப்பெழுத்தின் முதற்கண் மெய்யும் அடுத்து உயிரும் வரும் என்று கூறப்படவே, ஏனைய உயிரும் ஒற்றும் ஆய்தம் முதலாய பிற சார்பெழுத்துக்களும் தனித்தனியே ஓர் எழுத்து ஆகலின், அவற்றிற்கு அவையே முதலும் ஈறுமாம் என்று கொள்ள வைத்தமை இவ்வுத்தி. (நன். 14)
இது தொல்காப்பியம் சுட்டாது நன்னூல் சுட்டும் 32 உத்தி களுள் ஒன்று. தான் எடுத்துக் குறிப்பிடும் சொற்களுக்கேயுரிய விதி கூறுதல்.
செம்மை சிறுமை (நன். 135) என்று எடுத்துக் கூறிய ‘பண்பிற் பகாநிலைப் பதங்களுக்கே’ ‘ஈறு போதல்’ (நன். 136) முதலிய விதிகளை எடுத்தோதுவது இவ்வுத்தியாம். (நன். 14)
தொல்காப்பியம் சுட்டாமல் நன்னூலில் இடம் பெறும் 32 உத்திகளில் இஃது ஒன்று. நூற்பாவால் எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவது.
‘செம்மை சிறுமை’ (நன். 135) என்ற நூற்பாவில் பண்பிற் பகா நிலைப் பதங்களுக்குப் பல எடுத்துக்காட்டுத் தந்து விளக்க லின் இதன்கண் இவ்வுத்தி வந்தது. (நன். 14)
தன் கோள் நிறீஇப் பிறன் கோள் மறுக்கும் நூல்.
(இறை. அ. 1 உரை)
முதல்வன் நூலுள் முடிந்த பொருளை ஆசிரியன் ஒருவன் யாதானும் ஒரு காரணத்தால் பிறழ வைத்தால், அதனைக் கருவியால் திரிவு காட்டி ஒருவாமை வைத்தற்கு, ஒள்ளியோ னாகிய புலவன் ஒருவனால் உய்க்கப்படுவது.
(யா. வி. பாயிரம். உரை)
எதிர்நூல் என்பது, முதல் நூலின் முடிந்த பொருளை ஒருவன் யாதானும் ஒருகாரணத்தான் பிறழவைத்தால், அதனை உலகம் மெய்யெனக் கொண்டு மயங்காமைப் பொருட்டுக் கருவியான் திரிவுகாட்டி அவனது கோள்மறுத்து, முதல்நூற் பொருளையே தன் கோளாக நிறுத்தி ஒள்ளியான் ஒருபுலவன் செய்யும் நூல். அதுவும் முதல்நூலை நோக்க வழிநூலாயி னும், பிறன்கோள் மறுக்கும் வேறுபாடு உடைத்தாகலின் எதிர்நூல் எனக் கூறுதல் பொருந்தும். (பா. வி. பக். 102, 103)
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளில் இஃது ஒன்று. முதல்நூல் ஆசிரியன் சொல்லியவற்றுள் சில தன் காலத்துத் திரிந்து வருதலைத் தானே கண்டுணரும் ஆசிரியன், தான் கூறுவனவற்றுள்ளும் சில பிற்காலத்தில் திரிபுபடுதலும் கூடும் என்பதனை உட்கொண்டு, அத்திரிபுகளையும் காலம் நோக்கி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று தெரிவித்தல். (தொ. பொ. 665 பேரா.)
இனிக் கூற வேண்டுவது இதுவென வுணர்த்தல் தான் கூறிய இலக்கணம் காலம் மாறுபடுந்தோறும் திரிபுபடும் என்ப தனை உட்கொண்டு, ‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’ (சொல். 452 சேனா. ) என எதிர்காலத்துப் படைக்கப்படும் சொற்களையும் கொள்ளுதல் போல்வன இவ்வுத்திவகை.
‘பொய்யும்......... என்ப’ (கற்பியல் 4) எனப் பின்நிகழ்ச்சிக்குக் காரணம் கற்பித்துக் கூறல் அதன் இனம். இது தான் அறிந்தே கூறலின், அறியாது உடம்படுதலின் வேறாயிற்று. (பேரா.)
‘இவையும் உளவே அவையலங் கடையே’ (மெய்ப். 12) என முற்கூறிய மெய்ப்பாடுகள் இல்லாதவழி இனிக் கூறப்படும் மெய்ப்பாடுகள் கொள்ளப்படும் என்று கூறல் போல்வன இவ்வுத்தி வகையாம். (இள.)
ஒரு பொருளைக் கிளந்து அதன் பண்பியல்புகள் இவை என இலக்கணம் கூறுதலன்றி, இனி எதிர்நோக்கி வருவதொன்று பற்றிக் கருத்துணர்த்துதல்,
எ-டு : ‘கடிசொல் இல்லைக் காலத்துப் படினே’ (எச்ச. 56) (தொ. மர. 109 ச. பால.)
மாறனலங்காரம் கூறும் பத்துக் குற்றங்களுள் ஒன்று; “பாவம் செய்வான் நிரையம் புகுவான்” எனக் கருதிக் கூறவேண்டி அதனை எதிர்மறுத்துத் “தவம் செய்வான் சுவர்க்கம் புகும்” என்றாற் போன்றதொரு நூற்குற்றம். இவ்வாறு கூறின் கருதிய பொருள் தோன்றாமையின் குற்றமாம் என்பது. (மா. அ. 23)
இது தொல்காப்பியத்தில் குறிக்கப்படாமல் நன்னூல் சுட்டும் உத்தி 32இல் ஒன்று. முன்பு இல்லாததாய்ப் பின்பு வழங்கி வருமாயின் அதனைத் தழுவிக் கொள்ளுதல் இவ்வுத்தி. (நன். 14)
‘அன்’ என்னும் விகுதி படர்க்கை ஆண்பாற்கே உரியதாய்த் தொன்றுதொட்டு வருவது. அவ்விகுதி தன்மை ஒருமைக் கண்ணும் வருதல் தொன்றுதொட்டதன்றிப் பிற்காலத்து இலக்கியங்களிற் பயின்று வருதல் கண்டு அதனை எதிரது போற்றல் என்னும் இவ்வுத்தியால் நன்னூலார் தழுவிக் கொண்டமை தோன்றச் சூத்திரத்துப் பின்னும் வலியுறுத்தி இரண்டாம் முறையாகச் சுட்டினார்.
வருமாறு :
‘அன் ஆன் அள் ஆள் அர் ஆர் பம்மார்
அஆ குடுதுறு என்ஏன் அல்அ ன்’ (நன். 140)
‘குடுதுறு என்னும் குன்றிய லுகரமோடு
அல்அன் என்ஏன் ஆகும் ஈற்ற
இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை’ (நன். 331)
எரி தீமாணாக்கற்கு உவமையாதல் -
எரி கடுஞ்சொல் போலும் சுடும் இயல்பிற்று ஆகலின், இன்சொல் இன்று; உணவாக எதனை இட்டாலும் ஏற்றலின் இகழ்தல் இன்று. ஆதலின் பிண்டஉவமமாகக் கூறப்படும் ஆறனுள், மாணாக்கன் அல்லாதானுக்கு நெருப்பு உவமை யாயிற்று. (பா. வி. பக். 145)
எருமையின் பொதுப்பெயர் -
மேதி, காரான், மயிடம், கவரி என்பன. (திவா. பக். 53)
எல்லை சிறப்புப்பாயிரத்தே இடம்பெறும் இயைபும் காரணமும் -
இந்நூல் உயர்ந்தோனான் முந்துநூல் வழித்தாகச் செய்யப் படினும் ஊழிவிகற்பத்தான் சிற்சில ஊழியில் சில முந்துநூல் மக்கள் அறிந்து பயன்கோடலின்றிக் கிடக்குமாகலின், அங்ஙனம் மக்களான் அறிதற்கு அருமை பற்றி வழங்கப்படாத நூலோ, அறிந்து பயன்கோடலின் வழங்கப்படும் நூலோ என வும் மாணாக்கன் ஐயுறுமாகலின் அதனை நீக்க வேண்டிப் ‘பயன்படுமாற்றான் நூல் இன்ன எல்லையுள் நடக்கும்’ என எல்லை சிறப்புப் பாயிரத்துள் கூறப்படல் வேண்டும் என்பது.
(பா. வி. பக். 188)
இனி எல்லை என்பது நூலமைப்பான் இத்தனைப் பட லங்கள், இயல்கள், சூத்திரங்கள் என்று வரையறுத்துக் கூறுதல் என்ற கருத்தும் உண்டு.
பிறர்மதத்திற்குத் தான் உடன்படுதலும், பிறர்மதத்தை மறுத் தலும், பிறர்மதத்தை ஒருவாறு ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்துவிடுதலும், தானே ஒருபொருளை யெடுத்து நிறுவி அதனை இடம்தோறும் வலியுறுத்தலும், ஒன்றற் கொன்று முரண்பட்ட இருவரால் கொள்ளப்பட்ட இரண்டு செய்திகளுள் ஒன்றை நீக்கி மற்றொன்றைத் துணிந்துகோட லும், பிறர் செய்த நூல்களிலுள்ள குற்றங்களை எடுத்துக் காட்டலும், பிறர் மதத்தொடு தான் கலவாது தன்மதத்தையே கொள்ளுதலும் என இவை.
இவற்றை ஏற்ற பெற்றி தழுவி நூல் இயற்றப்படும்.
(நன் - 11; யா. க. பாயிரவுரை)
நூலுக்கு ஆகா எனப்பட்ட பத்து வகையான குற்றங்களுள் ஒன்று; எவ்வகையானும் கேட்போர் மனம் கொள்ளாதிருக்க கூறுதல் என்ற குற்றம். (தொ. பொ. 663 பேரா. இ. வி. பாட். 137)
ஏ
நன்னூல் குறிக்கும் உத்தி 32இல் இதுவும் ஒன்று; தொல் காப்பியத்தில் இடம் பெறாதது. முன் காரணம் விளங்கப் பெறாத ஒன்றனைப் பின் காரணத்தால் முடிவு செய்தலாகிய உத்தி.
இன எழுத்துக்கள் இதற்கு இது என முன்னர்க் கூறி (நன். 71) அடுத்த சூத்திரத்தான் மேல் இனம் என்றற்குக் காரணம் உணர்த்தியமை (நன். 72) இவ்வுத்தியின் பாற்படும்.
‘ஐ ஒள இஉச் செறிய முதலெழுத்து
இவ்விரண்டு ஓரின மாய்வரல் முறையே’ (நன். 71)
‘தான முயற்சி அளவுபொருள் வடிவு
ஆனஒன்று ஆதிஓர் புடையொப்பு இனமே’ (நன். 22)
தொல்காப்பியம் நன்னூல் இவற்றில் குறிக்கப் பெறாமல் உரையாசிரியர்களால் எடுத்துச் சுட்டப்படும் ஓர் உத்தி.
நன்னூல் 71ஆம் சூத்திரத்துள் இனவெழுத்துக்கள் அடைக் கும் ஆசிரியர் ‘முதலெழுத்து இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே’ என்று சுருங்கச் சொல்லல் என்னும் அழகுபற்றிக் கூறினாரேனும், ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியால், ‘இவ்விரண்டு ஓரினமாய் வரல்’ இடையினம் ஒழிந்த ஏனைய வற்றிற்கே என்பது கொள்ளப்படும். கூறிய இலக்கணத்தை ஏற்ற இடத்திற்கு மட்டுமே கொள்ளுதல் என்பது இவ்வுத்தி யின் பொருள் விளக்கமாகும்.
ஆண்பால் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று. (தொ. பொ. 557 பேரா.) ஆற்றலொடு கூடிய ஆண்பால் உயிரினங்கட் கெல்லாம் பொதுவாய் வருவது.
‘இரும்புலிக் கோள்வல் ஏற்றை’ (நற். 36.)
‘செந்நாய் ஏற்றை’ (அகநா. 111)
‘முதலைக் கோள்வல் ஏற்றை’ (குறுந். 324)
‘பிணர் மோட்டு நந்தின் பேழ்வாய்’ ஏற்றை (அகநா. 246)
‘புன்தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை’ அகநா. 133 - எனப் புலி, நாய், முதலை, நந்து, எலி என்பனவற்றின் ஆற்றலுடைய ஆண்பால்கள் ஏற்றை எனப்பட்டன.(தொல். பொ. 604 பேரா.)
ஆண்பால் மரபு பற்றிய பெயர்களில் ஒன்று. (தொ. மர. 2); பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா இவற்றின் ஆணினத்தைக் குறிப்பது. (தொ. மர. 38, 39, 40) துருவை (பொருந. 103) புலி, சங்கு இவற்றின் ஆணும் ஏறு எனப்படும்.
புலி, உழை, மரை, ஆ, புல்வாய், எருமை, பன்றி சுறா, சங்கம் என்னும் இவற்றின் ஆண்பால் ஏறு எனப்படும். (பிங். 2565)
கவரி, பன்றி, மரை, உழை, புல்வாய், எருமை, எருது, சுறவு என்பனவும், துருவாடும் ஏறெனப்படும். (திவா. பக் : 58)
‘துராய் துற்றிய துருவை’ (பொருந. 103) என, செம்மறியாட்டுக் கிடாய் துருவை எனப்பட்டது.
ஐ
ஐந்திரம் என்பது வடமொழிக்கு இலக்கணம் கூறும் நூல். தமிழேயன்றி வடமொழியும் நிறைந்தான் என்பது விளங்க, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்றார். ‘விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே’ (தொ. சொல். 63) என்று இந்திரன்கோளைத் தன்கோளாகக் கூறியமையான், இவ் வாசிரியனுக்கு ஐந்திரம் அளித்த ஆசிரியன் அகத்தியனாம் என்பது பெறப் பட்டது. தமிழின்கண் உள்ள முந்துநூலே தொல்காப்பியத்திற்கு முதல்நூலாம் என்பது உணர்த்துவதற் பொருட்டு, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என ஐந்திர மாகிய வடமொழி நூலைப் பெயர்க்கு (தொல்காப்பியன் என்ற பெயர்) விசேடணமாக்கி, ‘முந்துநூல் கண்டு’ என அவற்றை முதல்நூல் எனக் கோடற்குச் செயப்படுபொரு ளாக்கிக் கூறினார். (பா. வி. பக். 185, 187, 188)
பரிச உணர்ச்சி, நாவினாற் சுவை கோடல், மூக்கினான் மோந்தறிதல், கண்ணான் பார்த்தல், காதால் கேட்டல் என்னும் ஐந்தறிவினையுடைய விலங்குகளும் பறவைகளும், மனஉணர்வில்லாத மனிதர்களும், பாம்பும் முதலாய உயிர்கள். (தொ. மர. 32 பேரா.)
ஒ
செய்யுளியலுள் சூத்திரத்தின் இலக்கணநெறி பின் வருமாறு கூறப்பட்டது : “சூத்திரமாவது, (கவி) ஆடியின்கண் பரந்த பொருள்கள் குவிந்து நுணுகித் தோன்றும் நிழல் போல, கூறப்படும் பொருளின் பரப்பெல்லாம் அறியும் வண்ணம் தோன்றி, ‘இதுவோ? அதுவோ?’ என்று ஐயுற்று ஆராய்தல் வேண்டுவது இன்றி, பொருளின் கூறுகள் யாவும் நனி விளங்க ஆசிரிய முதலாய யாப்பினுள் யாதாயினும் ஒன்றன் யாப்பு முறை தோன்ற யாக்கப்படுவதாகும்.” (செய். 168) (கவி ஆடி Convex mirror)
இவ்விலக்கணத்தொடு பின் வரும் மரபியல்பும் சூத்திரம் பெற்றிருத்தல் வேண்டும்.
“சூத்திரம் சில்வகை எழுத்தானாகும் செய்கையுடையதாய், எடுத்து விளக்குங்கால் உள்நின்று அகன்ற உரையெல்லாம் அகத்தே செறிந்ததாய், நோக்கநோக்க ஆழ்ந்து செல்லும் நுட்பத்தொடு கூடியதாய், மாறுபடுவார் தம் கடாவினான் அசைத்தற்காகாத திண்மையுடையதாய், இவ்வளவே என வரையறுப்பதற்கு ஆகாத பொருளையுடையதா பல்லாற் றானும் பொருள் விளக்க முடையதாயிருத்தல் வேண்டும்.”
இவ்வியல்புகளுடைமை பற்றியே சூத்திரம் ‘ஒத்த சூத்திரம்’ என விசேடிக்கப் பெற்றது. (தொ. மர. 97 ச. பால)
தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று. ஒரு சொல்லுக்குக் கூறும் விதி இரட்டுற மொழிதலான் இரு சொல்லுக்கு அமையுமாறு கூறுதலும், ஒன்றன் இலக்க ணத்தைப் பிறிதொன்ற னொடு மாட்டெறிதலும் போல்வன. ‘மாட்டெறிந்து ஒழுகல்’ என இதனை நன்னூலார் தனி உத்தியாகக் கூறினர். (தொ. பொ. 665 பேரா.)
ஒரு பொருள் எடுத்து இலக்கணம் கூறியவழி அது போல்வன வற்றையும் இவ்விலக்கணத்தால் முடித்தல்.
(தொ. பொ. 656 இள.)
‘இன்னின் இகர மாவின் இறுதி, முன்னர்க் கெடுதல் உரித்துமாகும்’ என்ற நூற்பாவினை ஆவின் இறுதிக்கும் மாவின் இறுதிக்கும் (தொ.எ. 120 நச்.) கொண்டு, ஆவினை ஆனை மாவினை மானை என்று கொள்வது இவ்வுத்திவகை.
‘வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்
என வென் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே’ (தொ. எ. 204 நச்.)
எனப் புணர்ச்சி இயைபு பற்றி வினைச்சொற்களையும் இடைச்சொற்களையும் இணைத்து நூற்பா யாத்தல் இவ்வுத்தி வகையின் இனம். (665 பேரா.)
‘ஈறு போதல்’ (நன். 136) என்ற நூற்பாச் செய்தியைப் பண்புப் புணர்ச்சியொடு பதப்புணர்ச்சிக்கும் கொள்வது ஒப்பக் கூறலாம். இதனை ஒப்பின் முடித்தல் என்பர் நன்னூலார். 136, 137, 176, 209, 243 ஆம் சூத்திரத்தில் இவ்வுத்தி அமைந்துள்ளது.
இவ்வுத்திவகை இலக்கணம் -
ஒன்றற்கு இலக்கணம் கூறுமிடத்து அதன் பகுதிகளுக்கும் அவ்விலக்கணம் பொருந்தும் வண்ணம் கூறல்.
(தொ. மர. 109 ச. பால)
எ-டு : ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’ (எழுத். 15) என மெய்யெழுத்துக்கள் ஒலிப்புறுங்கால் சாரியை பெற்று நிற்குமிடத்துக் கொண்ட ஒரு மாத்திரை நீங்கி அரைமாத்திரை ஒலிபெறும் என்பதைக் குறிக்கும் புள்ளி என்னும் சொற்குறியீடு வரிவடிவிற்கும் ஏற்பக் கூறியது.
நன்னூலார் கூறும் 32 உத்திகளுள் ஒன்று; அங்கே சொல்லக் கூடாதாயினும் ஒன்றற்குத் தான் சொல்லும் இலக்கணம் வேறொன்றற்கும் ஒத்துவருமாயின், அதற்கும் அதுவே இலக் கணமாக இயைபில்லாததையும் அவ்விடத்து உடன்கூட்டி முடிவு செய்தல். (நன். 14)
எ-டு : ‘ஈறுபோதல்’ (நன். 136) என்னும் சூத்திரம், பண்பு அதி காரப் பட்டமையால் பதப்புணர்ச்சிக்கும் விதி உடன் கூறியது, ‘ஒப்பின் முடித்தல்’ என்னும் உத்தி பற்றி.
மக்கள்யாக்கையிற் பிறந்து ஆறறிவுற்ற உயிரினங்கள் வினை வயத்தான் விலங்காய்ப் பிறந்துழியும் முன்னை ஆறறி வுறுதலும் ஒரோவழியுண்டு என்பார் ஆசிரியர். (இ. வி. பாட். 155. உரை)
எ-டு : கசேந்திரன், சடாயு போல்வார் விலங்காயும் பறவையாயும் தோன்றினரேனும், பண்டைப் பிறப்பின் நினைவால் மனவுணர்வு உடையராயினார் என்பது.
ஆண்பாலைக் குறிக்கும் மரபு பற்றிய பெயர். புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை இவற்றின் ஆணினை இது குறிக்கும்; நவ்வி, கரடி இவற்றின் ஆணினை யும் குறிக்கும் என்ப. (தொ. மர. 35-37 பேரா.)
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று. ஓர் இலக்கணத்தைக் கூறி “இஃது யாண்டும் வாராது; வருமிடம் நோக்கி அறிக” என்று கூறி விதந்து கூறாது வாளா விடுதல்.
(தொ. பொ. 665 பேரா.)
இளம்பூரணர் ‘ஒருதலை அன்மை முடிந்தது காட்டல்’ என இரண்டனை ஒன்றாகக் கொண்டு, ஒரு பொருளை ஓதியவழிச் சொல்லுவதற்கே உரித்தன்றிப் பிறபொருட்கும் பொதுவாக முடிந்தமை காட்டல் என்றுரைப்பர். (656)
‘குறியதன் முன்னர் ஆய்தப்புள்ளி, உயிரொடு புணர்ந்த வல்லாறன்மிசைத்தே’ (தொ. எழுத். 38 நச்.) என, ஆய்தம் குறியதன் முன்னர் வருதல், உயிரொடு புணர்ந்த வல்லாறன் மேலதாய் வருதல் என்பது ஒருதலையன்று; ஆய்தம் வரும் போது குறியதன் முன்னர்த்தாய் உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தாய் வரும் என்று கொள்ளவைத்தல் போல்வன இவ்வுத்தி வகை.
சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட முதல் வேற்றுமையையும், விளி வேற்றுமையையும் எழுத்ததிகாரத்தில் ‘அல்வழி’ என்று கூறுதல் (112 நச்.) போல்வன இவ்வுத்திவகை இனம். (பேரா.)
‘ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம், ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப’ (பொ. 604 பேரா.) என்று கூறியவழி, ‘இடு காட்டுள் ஏற்றைப்பனை’ எனக் காயாப்பனைக்கும் ஏற்றை என்ற சொல் வருமாறு குறிப்பாகக் கொள்ள வைத்தல். (இள.)
நன்னூல் குறிக்கும் 32 உத்திகளுள் ஒன்று; ஆசிரியர் இருவ ரால் ஒன்றற் கொன்று விரோதமாகக் கொள்ளப்பட்ட இரண்டு கொள்கைகளுள் ஒன்றனைத் துணிந்து எடுத்துக் கொள்ளல். ‘இருவர் மாறுகோள் ஒருதலை துணிவு’ (நன். 11) என, எழுவகை மதத்துள் ஒன்றாக இஃது அடங்கும்.
‘ஏழ்’ என மெய்யீறாகத் தொல்காப்பியர் கொண்ட எண்ணுப் பெயரினை நன்னூலார் ‘ஏழு’ என உயிரீறாகக் கொண்டமை (188) போல்வன இவ்வுத்தியாம். (நன். 14)
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று. ஓரதிகாரத் தில் கூறவேண்டிய இலக்கணத்தை வேறோர் அதிகாரத்தில் கூறி, அக்கூறப்பட்டதனையே கூறப்பெறாத அதிகாரத்திற்கும் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)
இஃது ஏகாக்கரம் என்னும் வடமொழிப் பொருண்மை. அஃதாவது சூத்திரத்துக்குப் பொருள் கவர்த்துத் தோன்றின், அதனைத் துணிந்து கூறல். (656 இள.)
‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ (தொ. எழுத். 31 நச்.) ‘ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை’ (எழுத். 303) இவை எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டுச் சொல்லதிகாரத்தும் கொள்ளப்படுதல் இவ்வுத்திவகை.
பெண்பாற் பெயர்களுள் ஆ என்பதனைக் கூறாது பின் ‘பெற்றமும் எருமையும் மரையும் ஆவே’ (பொ. 615) எனச் சிறப்பு நூற்பாவில் குறிப்பிட்டதுகொண்டு ஆ என்பதனை யும் பெண்பாற் பெயராகக் கொள்ளுமாறு உடம்பொடு புணர்த்துக் கூறுதல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம். (பேரா.)
இரண்டு கருத்து உள்வழி ஒன்றனைத் துணிந்து கூறலுக்கு ஏழ், ஏழு என்ற இருவகை வடிவங்களில் நன்னூலார் ஏழு என்ற முற்றியலுகர வடிவத்தைத் தாம் ஏற்றுக் கொண்டு விதி கூறுவது போல்வன (நன். 188) இவ்வுத்திவகை.
‘உயிர் ஒள எஞ்சிய இறுதியாகும்’ (தொ. எ. 69) என்று கூறிய ஒளகாரத்தை மீண்டும் ‘ஈரள பிசைக்கும் இறுதியில் உயிர்’ (தொ. சொல். 283 நச்.) என்று கூறுதல் போல்வனவும் அது. (நச். உரை)
முதல்நூல், சார்பு நூல் வழிநூல்கட்கு ஒருமருங்கு ஒப்ப எடுத்துக் கொண்டு முடிவு ஒன்றாகக் கூறுமாறு வேறுபா டுடையது என்றார். அவ்வேறுபாடுகளுள் ஒன்று ஒரு படலத்தில் கூறும் இலக்கணத்தை மற்றொரு படலத்தில் கூறுதல்.
எ-டு : செய்யுளியலுள் கூற வேண்டும் ஒற்றளபெடையை எழுத்தியலுள் கூறுதல். அஃதாவது பொருளதிகா ரத்துச் செய்தியை எழுத்ததிகாரத்துள் கூறுதல்.
(இ. வி. பாட். 142 உரை.)
ஐந்தவித்தான் விதித்தன செய்தலும், அவன் விலக்கியன ஒழிதலும், உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்றால் ஐந்தவித் தான் சொல்லியவற்றுள் அக்காலத்திற்கு ஏலாதன ஒழிதலும், அவன் சொல்லாதவற்றுள் ஏற்பன கொள்ளலும் என ஒழுக்கம் நால்வகைப்படும். மனம்தூய்மை, இனம்தூய்மை, சொல் தூய்மை, செயல்தூய்மை என்னும் நால்வகைத் தூய்மையும் காரணமாக இடையறாது ஒழுகலான், ஆசிரியன் வான்யாறு நிலம் படர்ந்தாற் போல நலம்படர் நால்வகை ஒழுக்கமும் உடையான் என்பது. (பா. வி. பக். 61, 62)
‘ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம், இழிந்த பிறப்பாய் விடும்’ (குறள். 133) எனவும், ‘குலத்தளவே ஆகும் குணம்’ (மூதுரை 7) எனவும் சான்றோர் கூறினர். ஆதலின் ஒழுக்கத் தின் தவறாது நிற்பின், கீழ்ப்பால் வருணத்தான் ஆயினும் அவ்வருணத்துள் உயர் குலத்தவன் ஆவான்; மேற்பால் வருணத்தான் ஆயினும் ஒழுக்கம் தவறின் கீழ்ப்பால் குலத்த வன் ஆதல் மாத்திரமன்றிக் கீழ்ப்பால் வருணத்தானும் ஆவான் ஆதலின் பிறப்பினும் இழிந்தான் அவன். (பா. வி. பக். 24)
‘ஒழுக்கத்திற்கு வான்யாறு.................. ஆதல்’ காண்க.
விதியால் ஒற்றுமை உடையவற்றை ஒருங்கே சேர்த்து முடித்தல்; அஃதாவது ஒன்றைச் சொல்லுமிடத்தே அதற்கு இனமாகிய மற்றொன்றையும் கூட்டி முடித்தலாம்.
உயிர் பற்றிக் கூறி வரும் அதிகாரத்தில் உயிர்மெய் ஆகிய ‘யா’ வினாவையும், உயிராகிய எ, ஆ, ஓ, ஏ, என்னும் வினாக்க ளோடு உடன்கூறுதல் இவ்வுத்தி. (நன். 67)
தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் முப்பத் திரண்டு உத்திகளுள் இதுவும் ஒன்று. ‘ஒன்றென முடித்தல்’ என்பதனைத் தனி உத்தியாக நச்சினார்க்கினியர் கொள்வார். நூற்பாவுள் கூறிய விதியினை இயைபுடைய பிறவற்றிற்கும் கோடல் இவ்வுத்தியாம். தொல்காப்பிய எழுத்ததிகாரத்துள் 138, 177 சொல்லதிகாரத்துள் 34, 44, 49, 53ஆம் எண்ணுடைய சூத்திரங்களுள் அவரது உரையில் இவ்வுத்தி நயம் காணப் படும்.
‘தன்னினம் முடித்தல்’ என அவர் தனிஉத்தியாகக் கொள் வார். நூற்பாவில் கூறப்பட்ட செய்திக்கு இனமான செய்தி யென உரையில் இணைத்துக் காட்டுதல் இது. எழுத்ததிகாரத் தில் 31, 157, 328, சொல்லதிகாரத்துள் 16, 36, 38, 45, 57, 62, 142, 215, 252, 436, 454 ஆம் எண்ணுடைய சூத்திரங்களுள் அவரது உரையில் இவ்வுத்தி நயம் காணப்படும்.
எ-டு : ‘அ இ உ அம் மூன்றும் சுட்டு’ (தொ. எ. 31) என்னும் சூத்திரத்தே ‘தன்னினம் முடித்தல் என்ற உத்தியால், எகரம் வினாப் பொருள் உணர்த்துதல் உடன்கொள் ளப்பட்டது.’
தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடாத இவ்வுத்தியை நச்சினார்க்கினியர் தம்முரையில் மிகுதியாகப் பயன் கொண்டு உரைவரைந்துள்ளார். ஒரே இலக்கணத்தன என்று, நூற்பாவிற் கூறப்படாதனவற்றையும் உரையில் உடன் இணைத்துக் கோடல் இவ்வுத்தி.
எ-டு : தொ. எ. 138, 177, தொ. சொல் 37, 44, 49, 53 நச்.
‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது
மெய்யொடு சிவணும் அவ்வியல் கெடுத்தே’ (தொ.எ. 138)
என்பதன்கண், இயல்பாய் நின்ற புள்ளியீற்றுமுன் உயிர்முதல் மொழி வரின் புணருமாறு கூறினார். ‘ஒன்றென முடித்தல்’ என்றதனால் இயல்பல்லாத (விதியால் முடிந்த) புள்ளியீற்று முன்னும் இவ்விதி கொள்ளப்பட்டது. (நாழி + உரி > நா + உரி> நாட் + உரி = நாடுரி என வருமாறு.)
ஓ
நன்னூல் குறிப்பிடும் அழகு பத்தனுள் ஒன்று. நூல் (நூற் பாக்கள், செய்யுள்கள்) சந்த இன்பம் உடைய ஆதல். ‘நடவா மடிசீ’ (நன். 137) என்னும் சூத்திரம் ஓசை இனிமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. (நன். 13)
முதல்நூற்கும் வழிநூற்கும் ஒருமருங்கு ஒப்ப எடுத்துக் கொண்டு முடிபு ஒன்றாகக் கூறுமாறு வேறுபாடுடையது சார்பு நூலாம் என்றார். அவ்வேறுபாடுகளுள் ஒன்று இது.
‘மொழி முதற் காரணமாம்’ (இ. வி. 3) எழுத்தியல் இலக்கணம் ஒரு சூத்திரத்தில் கிடந்தது.
‘எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும்’ (38) பதவியலின் இலக்கணம் கிடந்தது.
‘மெய் உயிர் முதலீறு ஆமிரு பதங்களும்’ (58) புணரியலின் இலக்கணம் கிடந்தது.
‘பெயரெனப் படுபவை தெரியுங் காலை’ (176) பெயர்ச் சொல்லியல் இலக்கணம் கிடந்தது.
‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது’ (227) வினைச்சொல்லியல் இலக்கணம் கிடந்தது.
‘வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்’ (251) இடைச் சொல்லியல் இலக்கணம் கிடந்தது.
‘குறிப்பும் பண்பும் இசையும் தோற்றி’ (280) உரிச்சொல்லியல் இலக்கணம் கிடந்தது.
‘அதுவே, கைக்கிளை ஐந்திணை’ (376) அகத்திணையியல் இலக்கணம் கிடந்தது.
‘வெட்சி வஞ்சி உழிஞை தும்பை’ (600) புறத்திணையியல் இலக்கணம் கிடந்தது.
‘அணியெனப் படுவது’ (620) அணியியல் இலக்கணம் கிடந்தது.
‘செய்யு ளென்பது’ (710) செய்யுளியல் இலக்கணம் கிடந்தது.
‘எஞ்சிய இலக்கணம்’ (761) பாட்டியல் இலக்கணம் கிடந்தது.
இவ்வாறு ஒரு சூத்திரத்திலேயே அஃது அமைந்த ஓத்தின் இலக்கணம் கிடந்தமை அறியப்படும். (இ.வி.பாட். 142 உரை)
மணியை நிரல்பட வைத்தாற் போல, ஓரினப் பொருளை யெல்லாம் ஒருவழியே தொகுப்பது; ஒரு சாதியினும் தம்மின் ஒத்தனவே கூறல் வேண்டும். (தொ. செய். 170 நச்.)
ஓத்தும் படலமும் பிண்டமும் ஆவன. விளக்கம் அவ்வத் தலைப்பிற் காண்க. (பா. வி. பக். 111)
ஒரு படலத்துள் இயல்களை முறைப்படி வைத்தல் ஆகிய உத்தி; நன்னூல் கூறும் 32 உத்திகளுள் ஒன்று. (நன். 14)
நன்னூல் எழுத்ததிகாரத்துள் முதற்கண் அடிப்படையாகிய எழுத்துப் பற்றிய எழுத்தியலை வைத்தார்; எழுத்தாலாகியது பதமாகலின் அது பற்றிய பதவியலை அடுத்து வைத்தார்; அப்பதங்கள் தம்மொடு தாமும் பிறவும் புணர்தலைப் பற்றிய புணரியலை மூன்று கூறாகப் பின்னர் வைத்தார்; உயிரும் மெய்யும் ஆகிய முறை பற்றி, உயிரீற்றுச் சொற்கள் புணர் வதைப் பற்றி உயிரீற்றுப் புணரியலின்கண்ணும் மெய்யீற்றுச் சொற்கள் புணர்வதைப் பற்றி மெய்யீற்றுப் புணரியலின்கண் ணும் உயிரீறு மெய்யீறு என இவற்றுள் பொதுப்பட அடங் கும் உருபு புணர்தலைப் உருபுபுணரியலின்கண்ணும் இவ்வாறு முறைப்பட ஓதினார். இவ் வகையான் இயல்களை முறையாக வைத்தமை ஓத்துமுறை வைப்பு என்னும் உத்தியாம்.
ஊற்றுணர்ச்சி ஒன்றுமேயுடைய புறக்காழனவாகிய புல்லும், அகக்காழனவாகிய மரமும் ஆம்; அக்கிளைப் பிறப்பாகியன புதலும் கொடியும் போல்வனவும், விலங்கு மக்கள் ஈன்ற குழவி ஓரறிவின ஆகிய பருவமும், எக்காலத்தும் ஓரறிவின வாகிய என்பில் புழுவும் என இவை. (தொ. பொ. 583 பேரா.)
ஒள
வடநூலார் உசிதமாக (தகவுடைத்தாக) ப் பேசுவதனை ஒளசித்தியம் என்ப. காலமும் இடமும் பிற பொருத்தமும் ஆகிய சூழ்நிலைக்கு ஏற்ப, நன்மை தீமை எனுமிவற்றுள் ஒரு பயன் விளையும் வகை (தனக்கு நன்மை, பிறர்க்குத் தீமை என்க.), சொற்கள் நுண்மையும் உறுதியும் உடையவாமாறு ஒன்று (அவையில்) பேசுவது ஒளசித்தியம் என்னும் தகவுரை ஆம் என்பர் (தென். அயி. 46)
க
ஆட்டின் பெண்ணினத்தை குறிக்கும் மரபு பற்றிய ஒருபெயர்; மூடு என்பதும் அது. (தொ. பொ. 619. பேரா.)
தீக்கடவுள் ஒளித்துப் புக்கமையின் அரசும், இரதத்துக்கு (இரதம் - இரசம், சுவை) இருப்பிடம் என வேதம் புகழ்வதால் அத்தியும், துறக்கத்திலிருந்து, நிலவுலகத்துப் போந்தமையால் புரசும், அக்கடவுளின் குரோதத்தைச் சமம் செய்தலால் சமி எனப்படும் வன்னியும், அக்கடவுளின் ஒளி இருத்தலால் களாவும், மேகத்தின் இயைபான் ஓரொளி தங்கலின் இடிவீழ் மரனும், யாகபதியாகிய மாயோன் இருப்பிடம் ஆதலின் தாமரையிலையும் என அவ்வேழும் அக்கடவுட்கு ஆசன மாதற்கு உரியவாயின. (பா. வி. பக்.25)
கடவுளை வணங்குதலும், இன்னது கூறுவேன் என்று நுதலிப்புகுதலும்.
எ-டு : “பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகற் றொழுதுநன்(கு) இயம்புவன் எழுத்தே” (நன். 56)
இதன்கண், ‘அருகதேவனைத் தொழுது’ என்பது கடவுள் வணக்கம்; ‘எழுத்திலக்கணம் இயம்புவேன்’ என்பது அதிகாரம். இவ்விரண்டும் இதன்கண் ஒருங்கே வந்தன.
‘கந்தமடிவில்’ என்னும் யாப்பருங்கலக் காரிகையது தற்சிறப்புப் பாயிரமும் அது.
குரங்கின் ஆணினை மரபாகக் குறிக்கும் ஒருபெயர். (தொ. பொ. 623 பேரா.)
அடி ஓட்டைபட்ட குடம், ஆடு, எருமை, பன்னாடை இவை நான்கும் போல்வர் கடைமாணாக்கர். எத்துணை நீர் நிறைப் பினும் புறத்தே ஒழுக விடும் இல்லிக்குடம் போல, நல்லாசான் எத்துணை மிகுதிப்பட, காலம்பட நூற்பொருள் உரைப்பி னும், அவற்றை மனம் கொள்ளாமல் அறிவு வெளிறுபடக் கல்வியறிவு இல்லோராகவே முடிவர் கடை மாணாக்கருள் ஒருசாரார்.
ஒரு செடிக்கண் தன் வயிறு ஆர மேயத்தகும் தழைகள் இருந்து வைத்தும் அவற்றை அவ்வொன்றன்கண்ணேயே தொடர்ந்து உண்ணாமல், பல செடிக்கண்ணும் சென்று சிறிது சிறிது முயன்று மேய்ந்து பசிதீராது உழலும் ஆடு போல, தாம் கல்வியறிவு நிரம்புதற்கேற்ற நல்லாசான் ஒருவன்பாலே தொடர்ந்து கல்லாமல் பலரிடத்தும் சென்று சிறுகச் சிறுகப் பயின்று முடிவில் கல்வியறிவு நிரம்பாது முடிவர் கடைமாணாக்கருள் ஒருசாரார்.
தெளிந்த நீரினையும் கலக்கியே பருகும் எருமை போல, தன் வினா முதலியவற்றால் நல்லாசானது மனத்தைக் கலங்கச் செய்து வெறுப்புற்று அவன் பாடம் சொல்ல அதனால் பயன்கொள்வர். கடைமாணாக்கருள் ஒருசாரார்.
இனி நெய்யரியாகிய பன்னாடை தன்மீது பெய்யப்படும் தேன், கள் போன்றவற்றின் தூய இனிய பகுதியைக் கீழே போகட்டுத் தன்பால் கசடுகளையே கொள்ளுமாறு போல, ஆசிரியன் உரைப்பனவற்றுள் வேண்டத்தக்கவற்றை மனம் கொள்ளாது போக்கிவிட்டு, அவன் தாமதகுணவயத்தால் ஒரோவழி மொழிந்த வேண்டத்தகாதவற்றையே தம்மனத்தே இருத்திக் கொள்வர் கடைமாணாக்கருள் ஒருசாரார்.(நன்.38)
குரங்கு, எரி, விலங்கு, ஆயெருமை, யாடு, தோணி என்பன தொல்காப்பியப் பாயிரத்துள் இளம்பூரணர் உரையுள் நன்மாணாக்கர். ஆகாதார்க்கு உவமைகளாக நூற்பாவில் சுட்டப்பட்டுள. எரி-நெருப்பு, விலங்கு - வேந்தனது ஆணை யால் குற்றம் செய்தாரது காலினும் கையினும் புனையும் புனை; ஆய் எருமை - கன்று ஈன்று இழந்த எருமை. (பா. வி. பக். 140)
குரங்கு எறி விளங்காய் போல்வாரும், பந்தினை ஏற்கும் சுவரும் முகவையும் போல்வாரும் மாணாக்கர் ஆகத்தகாதவர் எனச் சில இலக்கணநூலார் கூறுதலின், அவையும் கடைமாணாக்கர்க்கு உவமை சொல்லப்படும். (இ. வி. பொதுப்பாயிர உரை; சாமி-6, மா. அ. 49, 50)
கண்டி -
எருமையுள் ஆணினைக் குறிக்கும் மரபால் வரும் பெயர். (தொ. பொ.6 23 பேரா)
பதம்பதமாகப் பொருளுரைத்தல் (இறை. அ. உரை)
கண்ணழிவு என்பதுமது (L)
பதவுரை, ‘கண்ணழித்துரை பற்றிச் சூத்திரத்துக்குப் பதப் பொருள் கூறுதும்’ (சி. போ., சிற். பக்.12) (L)
1. கண்ணியாவது அந்தணர் அரசர் வணிகர் என்னும் இம்முத்திறத்தாரும் சூடும் பூ; வேந்தர் கொடுப்பின் வேளாண் மாந்தர்க்கும் கண்ணிபெறும் பொருளாகச் சொல்லப்படும். வைசிகருக்கு அவரவர் குடிக்கு (இப்பர், கவிப்பர் பெருங் குடியர்) ஏற்பக் கண்ணிகள் வேறுபடும். அவர்கள் அரசனிடம் பெறாமல் தாமே சூடிக் கொள்ளும் உரிமை உடையர். (தொ. பொ. 634, 636 பேரா.)
2. இனி, செய்யுட்கண் கண்ணி என்பது ஒத்த எதுகைத்தாய் (பெரும்பான்மையும்) வெண்டளை பொருந்தி அளவடியாய் நிகழும் இவ்விரண்டடி. உலா, தூது போன்ற பிரபந்தங்களில் ஒவ்வொரு கண்ணியும் முடிவில் தனிச்சீர் பெற்று வெண் டளை பிறழாமல் வரும். பராபரக்கண்ணி, பரஞ்சுடர்க் கண்ணி போன்றவை கண்ணியமைப்பாகவே (உலா முதலிய வற்றுள் வரும் தனிச்சீர் பெறாது) இவ்விரண்டடியாக நிகழ்வன.
சூத்திரத்துட்பட்ட இலக்கணத்துள் ஒன்றும் மறையாது முடியச் செய்யும் காண்டிகையுரை.
கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டிக் கூறுதலாகிய இம்முப்பகுதியும் காண்டிகையுரையாம். (பா. வி. பக். 162; தொ. பொ. 656. பேரா.)
கருவி - காரணம். பிற காரணமெல்லாம் இருப்பினும் ஈவோ னாகிய ஆசானது அருள் இன்றேல் ஈகையாகிய பாடம் சொல்லுதல் நிகழாமையால், அவ்வருள் அவ்வீகைக்குக் கருவியாம். அதுதான், காரணம் இன்மையானாகிய இயற்கை யருளும், குறிப்பறிந்தொழுகல் முதலாய பணிசெய்தலானும் பொருள் முதலியன கொடுத்தலானும் - இன்சொற் கூறலா னும் ஒன்றற்கொன்று மிகுதல் பலவாகிய மூவகைச் செயற்கை யருளும், என நான்காம். (பா. வி. பக். 123)
மலை, இயற்கையருளான் அருவி நீர் ஈதலுடையது.
நிலன், உழவு முதலாய பணி நன்கு செய்யின் அதற்குத் தக மிகக் கொடுக்கும் செயற்கையருள் உடையது.
பூ, இசைபாடித் தன்னுட் புகும் தும்பிக்கு மிகக் கொடுக்கும் செயற்கையருள் உடையது.
துலாக்கோல், விலைகொடுத்தார்க்குத் தன் பொருளை இனிது நிறுத்து அளிக்கும் செயற்கை அருள் உடையது.
இவ்வாறு காரணமின்மையானாகிய இயற்கையருளுக்கு மலை உவமம்; பணி செய்தல், இன்சொற் கூறல், பொருள் கொடுத்தல் என இவற்றால் ஒன்றற்கொன்று மிகுதல் தன்மையுடையவாகிய செயற்கையருளுக்கு முறையே நிலனும் பூவும் துலாக்கோலும் உவமம். (பா. வி. பக். 124)
பொறிவாயில் ஐந்தவித்தானது பொய்தீர் ஒழுக்க நெறி யின்கண் வழுவாது நிற்றலுமுடைமையே ஆசானது கல்விச் சிறப்பு. அதன் வளர்ச்சிக்குக்குத் தக, அம்மாசறு காட்சி அகத்திருளாகிய அறியாமையை நீக்கி இன்பம் பயத்தலான், கலையது வளர்ச்சிக்குத் தகப் புறத்திருளை நீக்கி இன்பம் பயக்கும் திங்கள் அதற்கு உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 64)
ஒரு நூலை ஒருமுறை பாடம் கேட்டவன் அவ்வளவில் அமையாமல் இரண்டாமுறை கேட்பின், அவன் அந்நூலில் தவறுபடுதல். பெரும்பான்மையும் இலனாவான்; மூன்று முறை கேட் பின், ஆசிரியன் கற்பித்த முறைமையை அறிந்து தான் பிறர்க்குச் சொல்லவல்லனாவான். ஆசிரியன் கற்பித்த நூற்பொருளை மாணாக்கன் தன் அறிவில் நிரம்பக் கற்றுக் கொள்ளினும், ஆசிரியனது புலமைத்திறத்தில் கால் பங்கு பெறுவனேயன்றி அதற்கு மிகுதியாகப் பெறான்; தன்னோடு உடன்பயிலும் மாணாக்கர்களொடு பழகும் வகையால் ஒருகால் பங்கும், தன் மாணாக்கர்க்கும் அவையினர்க்கும் தான் ஒழுங்காகச் சொல்லுதலால் எஞ்சிய அரைப்பங்கும் நிரம்பப் பெறவே, இவ்வாறாகக் குற்ற மற்ற புலமைத் திறம் நிரம்பலுறும். (நன். 42-45.)
கல்விப் பொருளது குற்றமின்மை வகை -
தீயனவும் பயனில்லனவும் ஆகாமல் நன்மை பயத்தல், இனத்தியல்பால் தன்னியல்பு கெடாமை, இனத்தியல்பைத் தன் இயல்பு ஆக்கல், ஈவோனைப் பின்னும் ஈவோன் ஆக்கல் - என அவ்வகை நான்காம். (பா. வி. பக். 116)
கல்வியால் எய்தும் பயன் நான்கு -
கல்வியை மாணாக்கற்கு அளித்த பின் ஆசிரியனது அவ்வீகை எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல், மாணாக்கனால் நன்கு மதிக்கப்படுதல், அதனை அவன் பெற்றடைந்த பயன் காரண மாக ஆசிரியனுக்கு இம்மைக்கண் உளதாகிய பயன், ஈதல் காரணமாக இம்மை மறுமை இரண்டினும் ஆசிரியனுக்குள தாகிய பயன் என அப்பயன் நான்காம். (பா. வி. பக். 126)
கல்வியின் இயல்பு -
தீயவும் பயனில்லனவும் செய்யாது நன்மை செய்தல், தூய அறம் பொருள் இன்பங்களைத் தோற்றுவித்தல், இனத்தியல் பால் தன்னியல்பு நீங்காமை, அவ்வினத்தியல்பைத் தன்னியல்பு ஆக்குதல் - எனக் கல்வியின் இயல்பு நான்காம். (பா. வி. பக். 117)
கல்வியின் வகை -
இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாகிய அற நூலும், இம்மை மறுமை என்னும் இரண்டனையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மை ஒன்றனையே பயப்ப தாகிய இன்பநூலும், அம்மூவகை நூல்களின் சொல்லையும் பொருளை யும் உள்ளவாறு அளந்து காட்டும் கருவிநூலும் எனக் கல்வியின் வகை நான்கு. (பா. வி. பக். 62)
கலை (1) -
ஆண்பாலை மரபினால் குறிக்கும் பெயர்களுள் ஒன்று; புல்வாய், உழை, முசு, குரங்கு இவற்றின் ஆணினைக் குறிக்கும். [குரங்கினை அப்பர் என்றும் கூறுப. 602 பேரா.] (தொ. பொ. 599-601 பேரா.)
தன்னுள்ளே முன்னர் இடப்பட்ட முறையானன்றி, முன்னிடப் பட்டவும் பின்னிடப்பட்டவும் அம்முறை மாறிப்போம் வகை, கீழே உகுக்கும்போது விரைவில் தன்னுள்ளிட்ட கழற்காய் களைக் கொடுக்கின்ற செய்கை கழற்காய் பெய்து வைக்கப் பட்ட குடத்தின் தன்மையாம்.
கழற்குடம் ஆசிரியர் ஆகத்தகார்க்கு அமைந்த உவமமாதலின், தாம் கற்றுக்கொண்ட முறையினான் அன்றி அம்முறை முன்பின்னாக மாறிப் போம்படி பயிற்றுங்காலத்தே தம்முட் கொண்ட நூற்பொருளை விரைவில் தரும் செய்கை, ஆசிரியர் ஆகாதவர்க்கு அமைந்த குற்றம் என்பது.
தன் பழங்களைத் தானே கொடுப்பக் கொண்டாலன்றித் தன்னிடம் ஒருவர் நெருங்கி ஏறிவந்து அவற்றைப் பறித்துக் கொள்ள இடம் கொடாதது, தன் வடிவம் முழுதும் கூரிய கருக்கு வாய்ந்த மடல்கள் விரியப் பெற்ற பனையினது தன்மை யாம். அவ்வாறே, தாமே தம்மிடமுள்ள நூற்பொருளைச் சொல்லப் பிறர் அறிந்து கொள்ளினன்றி, ஒருவர் தம்பால் அணுகி வினவி அறிந்துகொள்ள இடங்கொடாமை, ஆசிரியர் அல்லாதாரது தன்மை.
பஞ்சினைத் தன்பால் கொண்டபோதும் மிக முயன்று சிறிது சிறிதாக உட்செலுத்தக் கொண்டு, அப்பஞ்சினைப் பிறர்க்குக் கொடுக்கும்போதும் எளிதின் ஈயமாட்டாதது பருத்திக் குண்டிகை. அப்பெற்றி போலவே, நூற்பொருளைத் தாம் பயின்ற காலத்தும் வருத்தத்தொடு சிறிது சிறிதாகக் கற்பிக்கக் கொண்டு அதனைப் பிறர்க்குப் பயிற்றும்போதும் எளிதிற் கொடுக்க மாட்டாமை ஆசிரியர் அல்லாதாரது தன்மை.
நீர் அட்டுதல் முதலாய பலவகையாலும் தனக்கு உதவிப் பேணி வளர்க்கும் தன்மையினின்றும் நீங்கிய அயலார்க்குத் தன் காய்களை உதவுவது, வேலிக்குப் புறம்பே வளைந்துள்ள தெங்கினது தன்மை. அதுபோலவே, பொருள் கொடுத்தல் முதலாய பல்லாற்றானும் உதவித் தமக்கு வழிபாடு ஆற்றி வரும் தம் மாணாக்கர்க்குப் பயிற்றாது அல்லாதார்க்குத் தம் கல்வியைப் பயிற்றுதல் ஆசிரியர் அல்லாதாரது தன்மை. (நன். 32-35)
மாணாக்கர்க்கு வேண்டும் ஒழுக்கம் புறத்தோற்றத்தினும் காணப்படாதவர், பொறாமைக்குணம் உடையவர், காரண மின்றிப் பலகாலும் நகுபவர், நாணமின்றி வேண்டாத வொன்றைப் பேசுபவர், ஆசிரியன் கூறுவதைக் கேட்டு அதனால் கல்விப் பயன் சிறிதும் உறாதவர், வாய்ப்புள்ள விடத்தே சூதாடும் களத்தில் இருப்பவர் - என்று இன்னோர், பாடஞ்சொல்லும் இடத்தினின்று நீக்கப்படுவார்.
‘அவையின்கண் கடியப்பட்டார்’ காண்க. (மா. அ. பாயி. 53)
ஆண்பாலை மரபு பற்றிச் சுட்டும் பெயர்களுள் ஒன்று; யானை, பன்றி இவற்றின் ஆணினைக் குறிக்கும். (தொ. பொ. 589 பேரா.)
யானை, பன்றி, சுறா - இவற்றின் ஆணினைக் குறிக்கும்.
(சூடா. பக். 67)
பன்றி, கெளிற்றுமீன், யானை, அ°த நட்சத்திரம், சுறவு இவற்றைக் குறிக்கும். (பொதிகை. 663)
கழற்பெய்குடம், மடற்பனை, முடத்தெங்கு, குண்டிகைப் பருத்தி என்பன நான்கும் ஆம். (பா. வி. பக்.8)
பருவத்தில் மலர்ந்தும் பரிமளம் எய்தாத முருக்கமலர், பாம்பின் வாய் மணி, பொது மகள் நலன், சிறியவன் பாற் செறிதரு பொருள் என்பன நான்கும் ஆம். (மா. அ. 35-38)
காமுகன், கட்குடியன், கடுஞ்சொலன், சினமுடையோன், சோம்புதலுற்றோன், தொன்னூற்கு அஞ்சித் தடுமாறும் உளத்தோன், மறவி மிகவுடையோன், துயிலுவோன், மாறு பாடுடைய மனத்தோன், கள்வன், பொய்யன், மாண்பின் நீங்கிய மானமுடையோன், பிணியன் என்னுமிவர். (மா.அ. 46)
ஆடு, பந்துறுசுவர், பொருளை அளந்தறியும் முகவை, கரை யில்லாத ஏரி - இவை போன்ற இயல்களுடையார் கற்பிக்கப் படாதோர், சிறிது சிறிதாகக் கற்றுக் கல்வி முற்றாமை, ஆசிரிய னால் தம் மனத்தில் பற்ற உரைக்கப்பட்ட கல்வியையும் மனப்பற்றின்றி வறிய மனத்தராதல், ஆசிரியன் உரைத்த வற்றுள் மிகச் சிறிதே தம் மனத்தில் பற்றுதல், ஆசிரியன் அளித்த கல்வியை முற்றப் பற்றாது புறம் போக விட்டுக் கல்வியிற் சிறியராய்த் தமக்கும் பிறர்க்கும் இனிமைப் பயன் நிரம்பாமை - என்பன முறையே அவ்வியல்புகள். (மா. அ. 47)
அன்னம், கிளி, நல்ல நீர், நெய்யரியாகிய பன்னாடை, யானை, ஆன் ஏறு (- இடபம்) என்பன ஆறும் ஆம். (பா. வி. பக். 139)
பளிங்கு, அன்னம், பரவை, மேகம் என்பன நான்கும் ஆம். (மா. அ. 41)
இனி அவை உவமை ஆமாறு :
வெண்ணிறத்தினையுடைய அன்னம் நகையுடையது. கிளி இன்சொல் உடையது. நன்னீர் தன்னிடத்தெய்தியவர் எத்தன்மையராயினும் அவர் மாசு போக்கும் இகழாமை உடையது. யானை பாகற்கு அடங்கி நடத்தலின் பணிவு உடையது. ஆனேறு வெகுளிதோன்றின் தன்கோடு முதலிய வற்றானும், உவகை தோன்றின் முக்காரம் முதலியவற்றானும் அகத்துள்ளவற்றையே புறத்துக் காட்டும் செப்பம் உடையது. இவை போலவே நன்மாணாக்கர் நகை, இன்சொல், இகழாமை, அன்பு, பணிவு, செப்பம் என்னும் ஆறு குணமும் ஒருங்குடையார். இது குடிமை பற்றிய உவமைப் பொருத்தம். (பா. வி. பக். 144) (இனி, தூய்மை முதலாய பிற பொதுவியல்பு பற்றிச் சண்முகனாரது பாயிர விருத்தி பாரித்துச் செல்லும்).
பளிங்கு நின்மலமாய் விளங்குவது; தன்னையடுத்த பொருள் களின் குணங்களைத் தனது குணமாகக் கொண்டு காட்டுவது; அதுபோல, நன் மாணாக்கர் தாம் களங்க மற்று விளங்கிய நுண்ணறிவோடு ஆசிரியன் அளித்த பல்வகைக் கல்விப் பொருளையெல்லாம் தம் உணர்வில் ஊட்டிப் புறத்தே தோற்றுவிப்பர்.
அன்னம் பாலையும் நீரையும் கலந்து வைத்துழி, நீரை நீக்கிப் பாலையே உண்ணும் தன்மைத்து; அதுபோல, நன்மாணாக் கர் ஆசிரியன் சொல்லுவனவற்றுள் அசாரத்தை நீக்கிச் சாரத்தையே உட்கொள்வர்.
பரவை (-கடல்) கங்கை முதலாய பல நதிகள் தன்னுட் புகவும் தான் அவற்றைப் புறத்தே கக்குதலின்றித் தன்னகத்து அடக்கிக் கொள்வது; அதுபோல நன்மாணாக்கர் ஆசிரியன் அறிவித்த அனைத்துக் கல்விப்பொருளையும் புறம் போக விடாது அகத்தே உட்கொள்வர்.
மேகம் தான் படிந்த கடல்நீரை உவர் போக்கி உண்டு அந் நன்னீரைப் பல துளியாகப் பொழிந்து உலகிற்கு உதவும்; அதுபோல, நன்மாணாக்கர் தம் ஆசிரியன் பலவாக மொழிந்த பலதிறப்பட்டவற்றுள்ளும் சாரமான நூற்பொரு ளையே மனங்கொண்டு, அக்கல்வியைப் பலரும் அறிய வழங்கி உதவுவர். (மா. அ. 42 - 45)
இஃது இளமையை மரபு பற்றி யுணர்த்தும் பெயர்களுள் ஒன்று.
யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், மான், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், தாவரம் முதலியவற்றின் இளமைப் பெயராக இது வருகிறது. (தொ. பொ. 570 - 573 பேரா.)
கயந்தலை, களபம் - இவை யானைக் கன்று என்னும் பெயர்க் கொடைக்கு உரியன. (நா. நி. 203)
கடமை, யானை, குதிரை, கழுதை, மரை, எருமை, மான், ஒட்டகம், கவரி, கராம் இவற்றை யுணர்த்தும் இளமைப் பெயர் கன்று. (திவா. பக். 61)
கருத்து, பதப்பொருள், எடுத்துக்காட்டு என்னும் இவற்றா னும், இவற்றொடு வினா எழுப்பி விடை கூறிச் செல்லும் திறத்தானும் இலக்கணச் சூத்திரத்தினது உட்பொருளைத் தோற்றுவிக்கும் உரை. (நன். 22)
‘சூத்திரம் புரைதப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்’ என்னும் தொல்காப்பியம். (பொ. 654 பேரா.)
காண்டிகை - கண்டம்பட நிற்றல். அஃதாவது சூத்திரத்தி லமைந்த சொற்களும் சொற்றொடர்களும் தம் கூறுகள் விளங்க நிற்றல்.
காண்டிகை என்பது சூத்திர அமைப்புப் பற்றியதோர் இலக்கணமேயாம். அக்காண்டிகைப்பகுதிகளுக்கு உரைக்கும் பொருள் காண்டிகையுரை எனப்படும். காண்டிகை என்பதே உரையாகாது என்க.
செய்யுளியலுள் ஓதிய இலக்கணமும் இவ்வியலுள் கூறப் பட்ட மரபுகளும் பற்றிக் குற்றமில்லாத சூத்திரம் நிகழும். இச்சூத்திரம் தான் உணர்த்தக் கருதிய இலக்கணங்களுள் யாதொன்றையும் மறைத்தலின்றிப் பொருள் நனி விளங்கும் சொற்களானும் தொடர்களானும் முடிந்து நிற்பது காண்டிகை.
காண்டிகையானது, நுதலிய பொருள் விடுபட்டுப் போதலும் மிக விரிவுறுதலுமின்றி விளக்கத்தொடு பொருந்தி, யாப்புற அமைத்த சூத்திரம் தன் குறிக்கோளை முடித்தலைக் கருதிய தாக ஏது நடையினும் எடுத்துக்காட்டினும் பொருந்துமாறு அமைந்த பொருள் நெறியினையுடைத்து. (தொ. மர. 97, 98, 100, 101 ச. பால.)
கருத்துரைத்துக் கண்ணழித்து (-பதவுரை கூறி)ப் பொழிப்புத் திரட்டுதலாகிய இலக்கணத்துள் ஒன்றும் கரவாது முடியச் செய்வது காண்டிகையுரையின் ஒருவகை (656). பதம் பிரித்துப் பொருள் கூறலால் அகன்று படாமல், தொடர்மொழிகளை இஃது இன்ன வேற்றுமைத் தொடர் முதலாக விரித்துக் கூறாமல், இது நியமச் சூத்திரம் அதிகாரச் சூத்திரம் என்றாற் போல முதற்கண் சொல்லிய சூத்திரப்பெயரினை அவ்வா றாகி முடிந்த முடிபு சொல்லுதற் பொருட்டாக, காரணம் கூறும் வழக்கினானும் அக்காரணத்திற்கு ஏற்பது ஒன்றாயி னும் உதாரணமாயினும் முதல்நூல் மேற்கோளாயினும் ஒன்று பற்றியும் சூத்திரம் செய்த ஆசிரியன் விரும்பியதே சொல்லிவிடும் பொருள் இலக்கணத்ததாகச் செய்வது காண்டிகையுரையின் மற்றொருவகை. (தொ. பொ. 656, 657 பேரா.)
கருத்து, பதப்பொருள், எடுத்துக்காட்டு, வினா, விடை என்ற ஐந்தும் காண்டிகை உறுப்புக்களாகும். (நன். 23)
கருத்துரைத்தல், கண்ணழித்தல், மொழிப்புத்திரட்டல் என்னும் இம்முப்பகுதியும் காண்டிகை எனப்படும். (பா. வி. பக். 162)
காண்டிகையானது நுதலிய பொருள் விட்டுப் போதலும் மிக விரிவுறுதலுமின்றியிருத்தல் வேண்டும் என்றார். அஃதாவது யாவற்றையும் கூறின் சூத்திரம் நெடிதாகிச் செல்லும் எனக் கருதிச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லாது விடுதலின்றி இருத்தல் வேண்டும்; நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க வேண்டுமென்று கருதிச் சொற்களைப் பெருக்கிக் கூறுதலு மின்றி இருத்தல் வேண்டுமென்றவாறு. (தொ. மர. 101 ச. பால.)
நூலை ஆக்கியோனும் கேட்போரும் எக்காலத்தினர், யாண்டிருந்தனர், யாதுகாரணத்தான் இந்நூல் செய்தான் என்று அறியுமாறு மாணாக்கர்க்கு விருப்பம் செல்லுதல் இயல்பு அன்றியும், நூல்செய்த காலத்தோ அல்லாத பிற்காலத்தோ அஃது அரங்கேற்றப்பட்டது எனக் கடா நிகழ்தல் கூடும். மேலும், முந்து நூலைத் தொகுத்தல் முதலாய யாப்புப் பற்றிய காரணமன்றிப் பிறகாரணமும் உளவோ என்றும் ஐயம் தோன்றலும் உண்டு. ஆதலின் இக்காரணங்கள் பற்றிக் காலம் முதலிய மூன்றும் கூறல் இன்றியமையாதது என ஒருசார் ஆசிரியர் வேண்டினர் என்பது. (பா. வி. பக். 191, 192)
‘வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது’ (தொ. பொ. 188 நச்.) என்பதும் பிறவும் குறித்து மாணாக்கனும், வேள்வியும் பிறவும் குறித்து ஆசிரியனும், நோய் முதலாயின குறித்து இருவரும் பிரிவர். ஆதலின் பாடம் சொல்லுதல் ஒழிதற்பால தாகிய பிரிவு வரைவு என ஒன்று;
வேனிலும் நண்பகலும் முதலாய காலத்துக் கூர்மையுடை யோர் சிந்தையும் கூம்பும் ஆதலானும், வைகறை எற்பாடு இடையாமம் என்னும் சிறுபொழுது மூன்றும் முறையே நித்த கருமத்திற்கும் உலகியற்கும் உறக்கத்திற்கும் இன்றியமை யாது வேண்டப்படும் ஆதலானும், பாடஞ்சொல்லுதல் ஒழிதற் பாலதாகிய பெரும் பொழுது வரைவும் சிறுபொழுது வரைவுமெனப் பொழுது வரைவு இரண்டு;
பாடம் அளித்தற்குரிய காலத்திலும் உவாமுதலிய காலத்தை நூல் விலக்குதலால், அவ்விலக்கு வரைவு என ஒன்று; இவ்வாறு பாடத்தை மாணாக்கற்கு ஈகை ஒழிதற்பாலதாகிய காலவரைவு நான்காம். (பா. வி. பக். 122)
சார்புநூலாவது முதல்நூற்கும் வழிநூற்கும் ஒரு மருங்கு ஒப்ப எடுத்துக்கொண்டு, முடிபு ஒன்றாகக் கூறுமாறு வேறுபாடுடைத்தாய் வருவது என்றார்; அவ்வேறுபாடு களுள் இதுவும் ஒன்று.
எ-டு : அகரத்தொடு கூடிச் சகரம் மொழிக்கு முதலாம் எனக் கூறுதலும்
(இ. வி. 27)
‘சொல் வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்’ (தொ. சொ.463) எனத் தொல்காப்பியனார் பாதீடு இட்ட (பகுத்துக் கூறிய) சொல்லை விகுதிப்புணர்ச்சி என விரித்துக் கூறுதலும்,
அவர் உவமம் ஒன்றனையே கூறவும், இவர் குணவணி என்றும் பொருளணி என்றும் சொல்லணி என்றும் வடநூலார் கூறியவற்றை மொழிபெயர்த்துக் கூறுதலும் என இவை முதலாயின. (இ. வி. பாட். 142 உரை.)
யாற்றது, ஒழுக்கம், தேரைப்பாய்வும், சீயநோக்கும், பருந்தின் வீழ்வும் என நான்கு. (பா. வி. பக். 113)
இது மரபு பற்றி இளமையுணர்த்தும் பெயர்களுள் ஒன்று.
இது மூங்கா, வெருகு, எலி, அணில் (தொ. பொ. 561 பேரா.) நாய், பன்றி, புலி, முயல், நரி (563 பேரா.) குரங்கு (568.பேரா). இவற்றது இளமைப் பெயராக நிகழ்கிறது.
ஆசிரியன், தாய்மரபும் தந்தைமரபும் என்னும் இருவகைக் காரணமும் குற்றமின்றிப் படைப்புக்காலம் தொட்டு மேம் பட்டு வருதலான், அவனது குடிப்பிறப்பிற்கு, வலம்புரியும் மழைத் துளியும் ஆகிய இருவகைக் குற்றமுமின்றி மேம்பட்ட வலம்புரி முத்து உவமையாயிற்று. (பா. வி. பக். 20)
வறியார் சென்றவழி முகம் மலரும் நகை, ஈகை, இன்சொற் சொல்லுதல், இல்லாரை இகழாமை, அன்பு, பணிவு, கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாத செம்மை, இழிந்த கருமம் காரணமாகப் பழிபாவங்களின் மடங்கும் நாணம் - என இவை எட்டு. (பா. வி. பக். 17)
குடிப்பிறப்பின் பொதுஇயல்புகளாகிய நகை ஈகை முதலிய எட்டும் இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உள ஆகுதலானும், பெருக்கம் பற்றியும் அவர் அவ்வியல்பின் வேறுபடார் ஆதலானும், நற்குடிப் பிறவாத பிறர்க்காயின் கற்பித்தவழியும், அவ்வியல்புகள் நெடிது நில்லாமையானும் இவ்வியல்புகள் இயற்கையாம் என்பது அறியப்படும். (பா. வி. பக். 22, 23)
இல்லறநிலைக்கும் துறவறநிலைக்கு முரிய பொதுஇயல்பு எனவும், இல்லறநிலைக்குரிய அந்தணரியல்பு அரசரியல்பு வணிகரியல்பு வேளாளரியல்பு எனவும், துறவற நிலைக்குரிய தவத்தின் இயல்பு யோகத்தின்இயல்பு ஞானத்தின்இயல்பு எனவும் எட்டு. (பா. வி. பக். 17)
குடிப்பிறப்பாவது குடிப்பிறந்தாரது இயல்பு. அவ்வியல்பின் வகை பொதுவியல்பு முதலாக எண்வகைப்படும்.
அக்குடிப்பிறப்பு வகை எட்டனுள், இல்நிலை துறவுநிலை இரண்டற்கும் காரணமாயது பொதுவியல்பு ஆகலின் அது முன்னும் ஏனைய பின்னும், துறவுநிலை வகைக்கு இல்நிலை வகையே காரணம் ஆகலின் இல்நிலைவகை முன்னும் ஏனைய துறவுநிலைவகை பின்னும்,
இல்நிலைவகை நான்கனுள், அந்தணராகிய உயர்ந்தோர் கற்பித்தவழியே ஏனைய மூவகை வருணத்தாரும் நடத்தல் வேண்டும் ஆகலின், அந்தணர் இயல்பு முன்னும் ஏனைய மூன்றும் பின்னும், அரசன் காவலானன்றி ஏனையோரது தொழில் நிலை பெறாமையின் அரசரியல்பு முன்னும் ஏனைய இரண்டும் பின்னும், அரசுகாவலொடு வாணிகமும் உழவும் நடைபெறற்கொரு காரணம் ஆகலின் வணிகரியல்பு முன்னும் ஏனைய வேளாளரியல்பு பின்னும்,
துறவுநிலை மூன்றனுள் யோகத்திற்கும் ஞானத்திற்கும் தவம் காரணம் ஆகலின் தவத்தியல்பு முன்னும் ஏனைய இரண்டும் பின்னும்.
ஞானத்திற்கு யோகம் காரணம் ஆகலின் யோகத்தியல்பின் பின் ஞானத்தியல்பும் இவ்வாறு முறையானே உரைக்கப் பட்டன. (பா. வி. பக். 58)
‘குண்டிகைப் பருத்தி’ என்பது நீர்க்கரகத்துள் பெய்து வைத்த பருத்திக் காயினைக் குறித்தது. இதனை யுணராது நன்னூலார் முதலாயினார் குண்டிகைப் பருத்தி என்பதனைப் ‘பருத்திக் குண்டிகை’ என மாற்றி, பஞ்சு அடைத்ததாகிய மிகச் சிறிய வாயினையுடைய குடுக்கையெனப் பொருள்கொண்டனர்.
குண்டிகை என்பது யாண்டும் வாய் அகன்ற நீர்க்கரகத்தை யன்றி நீர் வறிதாய் பிறிதொன்றனை உணர்த்தாது; ‘குண் டிகைப் பஞ்சு’ எனினும் சூத்திரம் அமைதலின், அங்ஙனம் கூறாமையே அப்பருத்தி பஞ்சினை உணர்த்தாது என்று அறிவிக்கிறது. வழக்கின்கண், குடுக்கையுள் அடைத்தற்பால தாகிய இலவம் பஞ்சினை விலக்கிப் ‘பருத்திப் பஞ்சு’ எனக் கூறுவதால் விளைந்த பயன் பிறிதொன்று இல்லை. இக்கார ணங்களால் குண்டிகை என்பது குடுக்கையைக் குறியாது என்பது. (பா. வி. பக். 11, 12)
‘வடவேங்கடம் தென்குமரி’ என்புழி, வடக்கின்கண் நிலைபே றுடைய மலையைக் கூறினார்க்குத் தெற்கின்கண்ணும் நிலையுடைத்தாகிய ஒருமலையைக் கூறலே முறை; ஓரிடத்தே நிற்றலின்றி நீளச்செல்லும் யாற்றினைக் கூறின் அஃது எல்லையாகாது.
கடல்கொண்ட பிற்காலத்து நூல்கள் செய்த சிறுகாக்கை பாடினியார் முதலாயினார், தெற்கின்கண் பிற நாடின்றித் தமிழ்நாடே ஆமாறு கடல் சூழப்பட்டமையால், நிலை யுடைய மலையை எல்லையாகக் கூறவேண்டாமல் கடலே எல்லை கூறினர்.
தொல்காப்பியனாரும் பிற ஆசிரியரும் அகப்பாட்டெல்லை புற எல்லை என யாண்டும் கூறிற்றிலர்.
தொல்காப்பியனார் செய்யுளியலின்கண், ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின், நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும், யாப்பின் வழியது என்மனார் புலவர்’ எனப் பொதுப்படவே கூறினார்.
தலைச்சங்கம் இரீஇய தென்மதுரையை அகஎல்லையுட் படுத்தாது புறஎல்லையுட் படுத்துதல் பொருந்தாது.
அக்காலத்துக் குமரியாற்றின் வடபால், பாண்டியர்க்குத் தலைநகரமும் சங்கமுமின்றிப் பெரும்பான்மையும் காடாகவே கிடந்த அந்நாட்டினை அகப்பாட்டெல்லை என்றல் பொருந்தாது.
இன்ன காரணங்களால் ‘தென்குமரி’ தெற்கேயுள்ள குமரி மலை ஆதல் வேண்டும் என்பது. (பா. வி. பக். 202)
தொல்காப்பியனார் தம்நூல் இயற்றிய பின்னர்ப் பல யாண்டுகள் கழிந்த பிற்காலத்தே, தென்கடலின் வடபால் பிறமொழிகள் வழங்கிய நாட்டையும், அதன் வடபாலுள்ள குமரிமலையையும், அதன் வடபாலுள்ள பஃறுளியாற்றையும், அதன் வடபாலுள்ள எழுநூற்றுக்காவதப் பரப்புடைய நாற்பத்தொன்பது தமிழ்நாடுகளையும், அவற்றின் தலைநகர மாகிய தென்மதுரையையும், கடல்கொண்டது. பலயாண்டு கழியப் பின் ஓரூழியில் கபாடபுரத்தையும் குமரியாற்றையும் இன்னோரன்ன யாறுமலை பிறவற்றையும் அக்கொடுங் கடலே கொண்டது. இவ்வாறு தொல்காப்பியர் காலத்தின் பின் காலவிகற்பத்தால் குமரிமலை கடலுள் மூழ்கிற்றாதலின், ஆசிரியர் தென்பால் எல்லையாகக் கூறிய குமரிமலை இக்காலத்துத் தோன்றாதாயிற்று. (பா. வி. பக்.165, 166)
குரங்கு வலிமுகத்ததாதலின் நகையின்று; சிறு குரலுடை மையின் இன்சொல் உடைத்து.
தீ கடுஞ்சொல் என்னச் சுடும் இயல்பிற்றாகலின் இன்சொல் இன்று; உணவாக யாது இட்டாலும் ஏற்றலின் இகழலின்று. விலங்கு வேந்தனால் ஒறுக்கப்பட்டாரை இவர்குற்றம் செய் தோர் எனக் காட்டலின் இகழலுடைத்து; பிறர் விலக்கி னன்றித் தானாக நீங்காமையின் அன்புடைத்து.
ஆயெருமை கன்று இழந்தபின்னும் பால் கறக்கும் இயல்பிற் றாகலின் கன்றின்மேல் வைத்த அன்பால் பால் சுரத்தல் இன்மையின் அன்பு இன்று; மேய்ப்போற்கு அடங்கி அவன் குறிப்பின் அடங்கி இரை கோடலின் பணிவுடைத்து.
யாடு மேய்ப்போற்கு அடங்காது தான் நினைத்தாங்குச் சென்று இரை கோடலின் பணிவின்று; அகமும் புறமும் மாறின்மையின் செப்பமுடைத்து.
தோணி கரைச் செல்லும் இயல்பின்றென்னத் தன்னைப் புறத்தே காட்டிச் சமயம் நேர்ந்துழிக் கடலுள் ஆழ்த்தும் இயல்பிற்று ஆகலின் அகமும் புறமும் மாறாய வாற்றால் செப்பமின்று.
இவ்வாற்றான் குரங்கு முதலிய ஆறும் மாணாக்கன் அல்லா தாற்குப் பிண்ட உவமம் ஆகலின், எரி முதலிய ஐந்தும் இன் சொல் முதலாகிய ஐந்து குணத்தையும் களைதலின் நகை யின்மை முதலிய ஆறு குற்றமும் ஒருங்கு உடையான் மாணாக் கன் ஆகாதான் என்பது பெறப்படும். (பா. வி. பக். 145)
குரங்கு - வானரமாகிய விலங்கு. எரி - தீ. விலங்கு - வேந்தன் ஆணையால் குற்றம் செய்தாரது காலினும் கையினும் புனையும் விலங்கு.
ஆய் எருமை - கன்றழிந்த தாயெருமை; ‘கற்றா’ என்றாற் - போல, கன்றொடு புணர்க்காமல் ‘ஆய்எருமை’ என்றதனால், கன்றின்றித் தாய் என்னும் தன்மையொன்றேயுடைய எருமை என்பது பொருள் ஆயிற்று. (பா. வி. பக். 140)
விளமரத்திலிருக்கும் குரங்குமீது கல்லெறிந்து அது மரத்தி னின்று பறித்தெறியும் விளங்காயைப் பெறுவான் போல, ஆசிரியனுடைய அறிவுத்திறத்தில் பல குற்றங்களைக் கூறி, அதனால் துன்புற்று மனம் கிளர்ந்த ஆசிரியன் தன் அறிவு புலப்படும் வகையால் கூறும் அருங்கருத்துக்களைத் தான் விரும்பியவாறு பெறுவோன் மாணாக்கன் ஆகத் தகாதவன்.
தெளிந்த குளத்து நீரையும் தான் அதில் வீழ்ந்து கலக்கியே பருகும் எருமை போல, களங்கமற்ற நல்லாசான் மனத்தையும் தன்னுடைய சொற்செயல்களால் வருத்திக் கலக்கமுறுவித்து அவன்பால்நின்று கல்வியறிவு பெறுவோன் மாணாக்கன் ஆகத் தகாதவன்.
தான் வயிறார மேய்தற்குரிய தழைகளை ஓரிடத்துக் கண்டு வைத்தும் அங்கே நிரம்ப உண்ணாது பலவிடத்தும் திரிந்து சிறிது சிறிதாகக் காணப்படுமவற்றையே மேய்ந்து பசியோடு அலமரும் ஆடு போல, ஆசான் ஒருவன்பால் தான் கல்விச் செல்வம் நிறைதற்கேற்ற புலமை கண்டுவைத்தும் அவன் பாலேயே தங்கிக் கல்வியறிவு பெறாமல் புலமை குறைந்த ஆசார் பலர்பால் சென்று சிறிதே பயின்று முடிவிற் கல்வி யறிவு நிரம்பாதவன் மாணாக்கன் ஆகத்தகாதவன்.
நீரில் அன்றி நிலத்தில் ஓடாத தோணி போலத் தான் செல்லும் வழியிலேயே சென்று கல்விப்பயன் கொள்ளும் இயல்பினைத் தவிர, ஆசிரியன் செலுத்தும் நல்வழியிலெல் லாம் சென்று கல்விப்பயன் கொள்ளும் ஆற்றலில்லாதவனும் மாணாக்கன் ஆகத்தகாதவன். (இ. வி. பொதுப்பாயிரம்.)
மரபு பற்றி இளமையை உணர்த்தும் பெயர்களுள் ஒன்று.
நாய், பன்றி, புலி, முயல், நரி, அரவு, முசு என்பவற்றின் இளமைப் பெயராக இது நிகழ்கிறது. (தொ. பொ. 563, 564, பேரா.உரை)
இஃது மரபுவகையான் இளமையை யுணர்த்தும் பெயர்களுள் ஒன்று.
குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மனிதர், தாவரம் என்ற உயிர்களின் இளமைப்பெயராக வருகிறது.
குழவிவேனில், குழவித்திங்கள், குழவிஞாயிறு என்றாற் போலத் தொடக்க வேனில், உதயசந்திரன், உதயசூரியன் இவற்றைக் குறிக்கவும் இது பயன்படுகிறது. (தொ. பொ. 574-579 பேரா. உரை)
நூற்கு ஆகா என விலக்கப்பட்ட பத்துக் குற்றங்களுள் ஒன்று; அஃதாவது குன்றக் கூறல்; குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களிற் குறைவு படச்சொல்லுதல்.(மா. அ. 23)
இதனை நன்னூல் ‘குன்றக் கூறல்’ என்னும் (12). தொல் காப் பியமும் அவ்வாறே கூறும் (பொ. 663 பேரா.) இஃது அமைக் கப்படாக் குற்றங்களுள் ஒன்று. (தொ. பொ. 663 பேரா.)
நூலிற்கு ஆகா என விலக்கப்பட்ட ஈரைங்குற்றங்களுள் ஒன்று; சொல்லப்புகுந்த பொருளினை ஆசறக் கூறாது ஒழியப் போதல். இஃது ஒரு பயன்படாக் குற்றம். (தொ. பொ. 663 பேரா. நன். 12)
நூற்கு விலக்கப்பட்ட ஈரைங் குற்றங்களுள் ஒன்று; முன்னொருகால் சொல்லிய பொருளைப் பின்னும் ஒருகால் கூறுதல். இது பயன்படும் குற்றம்.
தொல்காப்பியத்தில்
‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே’ (தொ. பொ. 56 நச்.)
என்று கூறி, மீண்டும்
படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி ....
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வந்த ஈரேழ் வகையிற் றாகும்’ (தொ. பொ. 58 நச்.)
என்று கூறுதல் கூறியது கூறலாம்.
இவ்வாறு இருமுறை ‘ஈரேழ் துறைத்து’ என்று கூறி, அதனால் நிரை கொள்ளச் செல்லும் வெட்சியார்க்கும் நிரை மீட்கச் செல்லும் வெட்சியார்க்கும் தனித்தனி இப்பதி னான்கு துறைகளையும் கொள்ளவைப்பதனைப் பெறப்படச் செய்ததனான், இவ்விடத்தே இது, ‘கூறியது கூறல்’ என்னும் குற்றம், வேறொரு பொருள் பயந்து பயன்படுதல் பற்றிக் குற்றமன்றாய்த் தழுவிக் கொள்ளப்பட்டது. (தொ. பொ. 663 பேரா.)
‘தன்மை உவமை உருவகம் தீவகம்’ என்று ஒரு சூத்திரத்தில் அணிகளின் பெயர்களைத் தொகைபடக் கூறி நிறீஇ, மீண்டும் ஒரு முறை ‘தன்மை உவமை உருவகம் தீவகம்’ என்று எடுத்துக்கூறுதல் ‘கூறியது கூறல்’ என்னும் குற்றம் ஆம்; அமைத்துக் கொள்ளப்பட மாட்டாது. (663. பேரா.)
இது தொல்காப்பியர் கூறும் உத்தி வகைகளுள் ஒன்று. அஃதாவது முன் கூறப்பட்டதோர் இலக்கணத்தினை, பின் மற்றொரு பொருளுக்கும் விதிக்க வேண்டியநிலை ஏற்பட்ட விடத்தே, அதனையே மீண்டும் எடுத்துக்கூறாது முன்னரே கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிடுதல். (தொ. பொ. 665 பேரா.)
பலபொருளாய் அதிகரித்தவற்றுள் சில பொருளை மேற் சொல்லப்பட்டன என்றல். (656 இள.)
அகத்திணையியல் மெய்ப்பாட்டியல் இவற்றுள் கூறப்பட்ட செய்திகளைச் செய்யுளியலில் குறிப்பிடும் இன்றியமை யாமை ஏற்பட்டவிடத்தே, ‘கைக்கிளை முதலா எழு பெருந் திணையும். முற்கிளந்தனவே முறைநெறி வகையின்’ (497 பேரா) ‘எண்வகை இயல்நெறி பிழையா தாகி, முன்னுறக் கிளந்த முடிவின ததுவே’ (517 பேரா.) என்று (திணையையும் மெய்ப்பாட்டினையும் பற்றிக்)கூறுவது இவ்வுத்தி வகை.
செய்யுளியலில் செய்யுள் உறுப்புக்களாகிய மாத்திரை எழுத்தியல் இவற்றைக் குறிப்பிடும் இன்றியமையாமை ஏற்பட்டவிடத்தே ‘மாத்திரை அளவும் எழுத்தியல் வகையும், மேற்கிளந்தன்ன என்மனார் புலவர்’ (செய்.2 பேரா.) என முற்கூறிய மாத்திரையும் எழுத்தும் பிறவாற்றான் செய்யுட்குப் பயன்படும் வகையில் வேறுபட்டதல்லது அவை முற்கூறிய மாத்திரையும் எழுத்துமே என்று பெறப்பட வைத்தல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம்.
கேட்போர் (2) - நூல் அரங்கேறும் அவைக்கண் கேட்போர்.
ஒருவன் இருந்து கேட்பின் அவனும் ஊழ்வயத்தால் மயங்கி யாயினும் நட்பு முதலிய பிற காரணத்தானாயினும் குற்றத்தை நன்று எனக் கூறினும் கூறுமாகலின், அறிவுடையோர் பலர் இருந்து கேட்பின் ஊழ்முதலாய காரணத்தால் சிலர் மயங்கினும் ஏனையோர் மயங்காமையின் பலர் கேட்டல் வேண்டும் என்றற்குக் ‘கேட்போர்’ என்று பன்மை கூறினார். (பா. வி. பக். 190)
செவிக்கு இன்னா ஓசையுடையதாகச் சூத்திரம் அமைத்தல். இது பயன்படாக் குற்றங்களுள் ஒன்று. மொழிக்கு முதலாம் எழுத்துக் கூறுமிடத்தே,
‘கதந பமவெனும் ஆவைந் தெழுத்தும்’ (எழுத். 61. நச்.)
என இன்னா ஓசைத்தாக நூற்பா யாத்தல். (தொ. பொ. 663. பேரா.)
கேட்போர் பாயிரம் கூறின், அப்பாயிரத்தை ஆராய்தற்கு அக்கேட்போரது அறிவு பிரமாணம் ஆகாமையின், அப் பாயிரத்தைக் கேட்டற்குப் பிறர் வேண்டும்; ஆதலின் கேட்போர் பாயிரம் கூறார் என்பது. (பா. வி. பக். 244)
கொழு என்பது ஊசித்தொளையின்மேலுள்ள கோலினை. நூல் கோத்த தொளையையுடைய ஊசியின் காதாகிய ‘துன்னூசி’ நுழைதற்குக் கொழு வழியாக்குவது. கொழுவுத லால் கோல் ‘கொழு’ எனப்பட்டது. (பா. வி. பக். 3)
கொள்வோராகிய மாணாக்கரைப் பற்றிக் கொள்ளும் நிலம் நான்கு இயல்களையுடையது. கொள்வோரை வரையாமை (- நீக்காமை), அல்லாதாரை வரைதல், கொள்வோரது உடன்பாடு பெறினும் அல்லாரை வரைதல், கொள்வோரது உடன்பாடு பெறாவிடத்தும் அவருள் யாவரையும் வரை யாமை என்பன அவ்வியல்புகள். (பா. வி. பக். 119,120)
ஆசிரியன் மாணாக்கனிடத்துத் தான் சென்று கற்பித்தால் அவன் விருப்பத்தளவு காண்டல் அரிது ஆகலின் அவனைத் தன்னிடத்து வருவித்தல், அவனை மயங்கச் செய்யாமல் கற்பித்தல், அவன் அக்கற்பித்த பொருளைத் தன் பக்கத்தே யிருந்து சிந்திக்கச் செய்தல், அவனோடு அவ்வினையாளராம் பிறமாணாக்கரும் உடனிருந்து பயிலச்செய்தல் என அப்புறத் தொழில் நான்காம். (பா. வி. பக். 91)
முயற்சியின்மையான் வரைதல் (-நீக்குதல்), காலம் அன்மை யான் வரைதல், தீவினையுடைமையான் வரைதல், அறிவின் மையான் வரைதல் என ஆசிரியன் மாணாக்கரை வரைவு நான்காம். (வரைவு - நீக்குதல்) (பா. வி. பக். 126)
கற்போன் ‘கொள்வோன் கொள்வகை யறிந்து’ (நன். 36) (L)
பகைவராக இருப்பினும் பருவமுடையராய்க் கற்பதில் விருப்ப முடையராயிருப்பின் அவர்க்கு அளித்தலும்; நட்பினராயினும் கற்றற்குரிய பருவம் எய்தும் அளவும் தாழ்த்தலும்; பருவமுடையார் விரும்பினராயினும், நெடுநீர் மறவி மடி துயில் இவற்றை யுடையராய்க் கல்வியைப் போற்றா ராயின் அக்கல்வி பயன் படாமையின், பலநாள் பழகினும் அவர்க்கு ஒன்றும் பயிற்றாமல், பருவமுடையராய் அறி வறிந்து ஆள்வினையுடையவர்க்கே அவர் பன்னாட் பழக்க மிலராயினும் எல்லாம் அளித்தலும்; ‘ஒண்மையுடையேம்’ என்னும் செருக்குளதேல் பயன் எய்தாமையின், அச் செருக்கால் பணியாதவர் அண்மையில் இருப்பினும் அவர்க்கு அளியா மல், செருக்கும் பொய்யாகிய மானமும் இன்றி ஏக்கற்றும் கற்கும் பணிவுடையார் சேய்மையில் இருப்பினும் அவர்க்கு அளித்தலும்; எனக் கோடல் பற்றிய புறத்தொழில் ஆசிரிய னுக்கு நான்காம். (பா. வி. பக். 89)
மாணாக்கன் ஆசிரியன்பால் நூற்பொருள் கேட்டல் மரபு.
கடையாமத்தில் துயிலுணர்ந்து, வைகறைக் கடன்களைக் கழித்து, ஆசிரியனது இல்லத்தின் வாயில் சென்றெய்தி, பயிலும் காலத்தையும் இடத்தையும் கருதிநின்று, ஆசான் நோக்கிய இடத்தை விரைவில் கண்ணுற்று வணக்கஒடுக்கங் ளோடே அயலில் நிற்பவே, அவன் “வருக!” என்று அழைப்ப அருகே சென்று வணங்குதலும், “இருக்க!” என்று சொன்ன பிறகே இருத்தலும் செய்து, ‘உரை’ என்று உரைத்த பிறகே இடையறாது பயின்ற நூற்பொருளை உரைத்து, அறிவு நன்கு புலனாம்படி பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் எனப் பழிப்பின்றாக அவன் நூற்பொருள் உரைப்பவே அவற்றைத் தெளிவுற உணர்ந்துகொண்டு, “இனிப்போக!” என்று. அவன் சொல்லவே எழுந்து, ஆசான் திறத்து ஒல்லும் வகையான் உதவி, அவன் தன்னை ஏவாமலேயே முற்படச் செய்த இன்பம் எய்தி, ஆசான் நடக்குமிடத்தே பகலின் பின்னரும் இரவில் முன்னருமாக அவனை அகலாது உடன்தொடர்ந்து, தன் னுள்ளத்துக் கொண்டு ஆசான் பாதமலர்களை இடைய றாது வழிபட்டு, ஆசான் உவக்கும் திறத்தால் அறத்தொடு மாறுபடாதபடர்ச்சி யுடையனாய், அளவாகத் துயின்று விரைவில் கண்விழிக்கும் கடமையுடையான் மாணாக்கன். (மா. அ. 54)
உரிய காலத்தே போய், ஆசானுக்கு வழிபாடு செய்தலில் விருப்பமுடையவனாய், அவனது குணத்துக் கேற்பப் பழகி, அவன் குறிப்பின்வழியிற் சேர்ந்து, “இரு!” என்று அவன் சொன்ன பின்னரே இருந்து, “வாசி!” என்று சொன்ன பின்னரே வாசித்து, நீர்வேட்கையுடையான் நீரினிடத்துக் கொள்ளும் விருப்பம் போலத் தான் பாடம் கேட்டலில் மிக்க விருப்ப முடையனாய், சித்திரப்பாவைபோல மனமொழி மெய்கள் அடங்கி, செவியே நூற்பொருளைப் பருகும் வாயாகவும் நெஞ்சே அப்பொருள் கொள்ளுமிடமாகிய வயிறாகவும் ஆசான்பால் கேட்ட நூற் பொருளை மறந்து விடாமல் தன் மனத்தே நிரம்ப நிலை பெறுத்திக் கொண்டு, ஆசிரியன் “போ!” என்று பணித்த பின்னரே போகுதல், மாணாக்கன் ஆசான்பால் பாடம் கேட்கும் மரபு. (நன். 40)
விளையாட்டிற் காலம் கழிக்காமல், பசித்தார் உணவை வேட்டவாறு போலக் கல்வியை வேட்டலும், அக்கல்வி வேட்கையொடு கற்றாரைச் சார்ந்து அகலாமையும், ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியா’ மையும், கற்றார்மாட்டும் குற்றம் சில காணப்படுமாயின் அவற்றை நீக்கிக் குணத்தையே மனம் கோடலும், அவர்பால் கேட்டவற்றுள் ஒன்றும் மறவாத இயல்புடையனாதலும், பிறர்க்குத் தான் அறிந்தவற்றை உரைத்தலும் எனக்கோடலது முதற்காரணம் ஆறுவகைப்படும். (பா. வி. பக். 147, 148)
ச
மாறனலங்காரம் கூறிய நூற்குற்றம் பத்தனுள் ஒன்று. எடுத்த யாப்பிற்கு இணங்கும் ஓசையின்றிக் கூறுதல் - இதனைக் ‘கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்’ என்ற சிதைவி-னுள் தொல்காப்பியம் அடக்கும். (தொ. பொ. 663. பேரா. 1, மா. அ. 23)
முதல்நூல் வழிநூல் ஆகிய இரண்டன்கண்ணும் ஒருவழி முடிந்த பொருளை ஆசிரியன் ஒருவன் யாதானும் ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்பட வைப்பது. (யா. வி. பாயிர உரை)
சார்பு நூலாவது, செய்யுளிலக்கணம் அகத்தியத்துள் மிகவும் பரந்து கிடத்தலானும் தொல்காப்பியத்துள் மிகவும் சுருங்கி இருத்தலானும் அவ்விருவர் நூலுள்ளும் ஒருவழி முடிந்த அதனை ஓர் உபகாரம் நோக்கி ஒரு கோவைப்படப் பல்காப் பியனார், பல்காயனார் சிறுகாக்கைபாடினியார் முதலியோர் செய்த நூல் முதலியன போல்வது. (பா. வி. பக். 102)
தொல்காப்பியம் யாப்பினை விரித்துரைக்கிறது என்ற கருத்தும் உண்டு. (வீ. சோ. 152 உரை)
முதல்நூல் வழிநூல் என்னும் இருவகை நூல்கட்கும் பொருள் முடிவு சிறுபான்மை ஒத்து, பிற எல்லாம் ஒவ்வாமை யுடையது சார்பு நூல். (நன். 8)
முதல் நூல் வழிநூல் ஆகிய இரண்டிலிருந்தும் வேறுபட்டுக் காலத்துக்கு ஏற்ற கருத்துக்களையும் தழுவிச் செல்வது சார்பு நூல். (சாமி. 3)
தொல்காப்பியனார் சார்புநூல் என ஒன்றைக் குறிப்பிட்டா ரல்லர் - அவருக்கு முதல்நூல் வழிநூல் என்ற நூற்பகுப்புக் களே உடன்பாடு. சார்புநூல் என்ற பகுப்பு உதவாது என்ப தனைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். (தொ.பொ.648பேரா.)
“மரபுநிலை திரியா மாட்சிய வாகி
யுரைபடு நூல்தாம் இருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின.”
என மரபியலகத்து நூலிரண்டென ஓதியிருப்பச் சார்பு நூலென் ஒன்று கூறியது என்னையெனின்;- ஒன்றன் வழி யாகச் செய்வனவெல்லாம் வழியேயாயினும் அவை முன்னோர் நூலின் முடிபொருங்கொத்தலுந் திரிபுவேறுடைத் தாதலுமென இருவேறுவகைப்பட நிகழ்கின்றமையின், அதுபற்றிச் சார்பு நூலென வேறு கோடலுமமையுமென விடுக்க. அங்ஙனம் திரிபு வேறுடையதூஉம் பொருளான் ஒருங்கொத்தலின், மரபுநிலை திரியாமையின், வழிநூலென்றற்கு ஏற்புடைத்தாதலும் அறிக. (சூ.வி. ப. 7)
சிங்க நோக்கு -
நால்வகைச் சூத்திர நிலையுள் ஒன்று. ‘அரிமா நோக்கு’ எனவும் படும் (நன். 19). இளம்பூரணர் தொல்காப்பியம் மரபியல் இறுதி நூற்பாவுள் (656 இள.) ‘சூத்திரக் கிடக்கை’ என இதனையும் உத்திவகைகளொடு தழுவியுரைப்பர். சூத்திரநிலை என்றே நன்னூலார் குறிப்பர். (19)
சிங்கம் முன்னுள்ள பொருள்களையும் பின்னுள்ள பொருள் களையும் நோக்கி நடக்குமாறு போல. ஒரு நூற்பா தன் முன்னுள்ள நூற்பாக்களொடும் பின்னுள்ள நூற்பாக்க ளொடும் தொடர்புடையதாகி வருதல்.
‘நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே’ (நன். 109)
உயிர்மெய்யெழுத்தில் மெய்முதல் உயிர்ஈறாகச் கோடல் வேண்டும் என்ற செய்தி, அந்நூற்பாவின் முன்னர்க் கூறப் பட்ட முதல்நிலை இறுதிநிலைகளுக்கும், பின்னர்க் கூறப் படும் இடை நிலை மெய்மயக்கத்திற்கும் பொருந்துமாறு இருதிறத்தையும் நோக்கி வருதலின் இச்சூத்திரம் சிங்கநோக்கு ஆயிற்று.
நன்னூலுள் பொதுவியல் அமைப்பும் சிங்கநோக்குடையது. அவ்வியலுள் கூறப்படும் செய்திகள் முன்னர் வந்த பெயரியல் வினையியல் என்னும் இயல்கட்கும், பின்னர் வரும் இடை யியல் உரியியல் என்னும் இயல்கட்கும் உரியவாகி முன்னியல் களையும் பின்னியல்களையும் நோக்கி வந்தவாறு. (நன். 19)
இலக்கண நூலுள் வரப்பெறாக் குற்றங்கள். கூறியது கூறல், மாறு கொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல், என்ன வகையினும் மனங் கோளின்மை; வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயனின்மை, முதல் நூலொடு மாறுகோடல், யாப்பினுட் சிதைதல் போல்வன. (இவற்றுள் முதலன பத்தும் தொல்காப்பியம் கூறுவன; அடுத்த நான்கும் நன்னூல் கூறுவன)
இவற்றுள் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல் என்ற ஐந்தும் பயன்படும் குற்றங்களாகி நூற்பாக்களில் அருகிக் காணப் படும். (தொ. பொ. 663. பேரா; நன். 12)
‘சிதைவு எனப்படுபவை’ காண்க. கூறியது கூறல் முதலாக என்ன வகையினும் மனம் கோளின்மை’ ஈறாய பத்தாம்.
(தொ. பொ. 663 பேரா.)
நூலைச் செய்தவனது பெயர், நூல் வந்த வழி (முதல் நூல்), நூல் வழங்கும் நிலத்தின் எல்லை அல்லது நூல் அமைப் பளவு, நூலினது பெயர், தொகுத்தல் முதலிய நூல் யாப்பு, நூலிற் சொல்லப்பட்ட பொருள், நூல் கேட்டற்குரிய அதிகாரிகள் ஆவார், நூல் கற்றதனால் விளையும் பயன் என்னும் இவ்வெட்டனையும் விளங்க உணர்த்துதல். சிறப்புப் பாயிர இலக்கணம். நூல் செய்த காலம், நூல் அரங்கேறிய அவை, நூல் செய்தற்காம் காரணம் என்ற மூன்றனையும் மேற்கூறிய எட்டனொடு கூட்டிச் சிறப்புப் பாயிரம் இப்பதினொன்றனையும் புலப்படுத்துவது என்பாருமுளர். (நன். 47, 48)
ஆக்கியோனும் முதல்நூலும் அது வழங்கும் எல்லையும் அல்லது அதன் பாடல் அளவும் நூல் செய்யும் முன்னரே, அந்நூலுக்குக் காரணமாக நிற்றலின் இறந்த காலத்தன ஆகிய இம்மூன்றும் முன்வைக்கப்பட்டன. வழிநூலாகிய காரியத் திற்கு இவை மூன்றும் இன்றியமையாத காரணமே ஆயினும், ஆக்கியோன் அக்காரணங்களுள் சிறந்த நிமித்த காரணன் ஆதலின் அவன் பெயர் முன்வைக்கப்பட்டது. முதல்நூல் முதற் காரணம் ஆதலின் ‘வழி’ அதனை அடுத்துப் பின் வைக் கப்பட்டது. அம் முதல்நூற்பொருளினது வழக்குப்பயிற்சியை உணர்த்தலின் ‘எல்லை’ அதன்பின் வைக்கப்பட்டது; அல்லது நூலமைப்பின் அளவு பின்னர் வைக்கப்பட்டது.
நூற்பெயரும் யாப்பும் நுதலிய பொருளும் நூலுடன் ஒற்றுமைப்பட உடன் தோன்றலின், நிகழ் காலத்தனவாகிய இம்மூன்றும் அம்மூன்றனையும் அடுத்து வைக்கப்பட்டன. யாப்பும் நுதலிய பொருளும் அறிதற்கு நூலே இடமாகலின் ‘நூற்பெயர்’ முன்னர் வைக்கப்பட்டது. நூலது வகையே யாப்பு ஆதலின், அஃது அதன்பின் வைக்கப்பட்டது; அவ் யாப்பாற் சொல்லப்பட்ட நூலிடமாக நுதலிய பொருள் அறியப்படுதலின் அஃது அதன்பின் வைக்கப்பட்டது.
கேட்போரும் பயனும் நூல் செய்யப்பட்ட பின்னரே பெறப்படுவன ஆதலின் எதிர்காலத்தன ஆகிய இவ்விரண்டும் மேல் அவற்றுக்குப் பின் அடுத்து வைக்கப்பட்டன. கேட்டற் குரியார் கேட்டு நன்று எனக்கொள்ளின்அன்றி அந்நூலை உலகம் கொள்ளாமையின், நூற் பயனை உலகம் எய்துதற்குக் கேட்போரே காரணமாதலின் ‘கேட்போர்’ முன்னும் ‘பயன்’ பின்னுமாகச் சுட்டப்படலாயின.
இனி, காலம் முதலிய மூன்றனுள், நூல் செய்த காலத்தின் பின்னரே களன் புலப்படுவது; களத்துள் நூல் அரங்கேறிய பின்னரே காரணம் புலப்படுவது ஆகலின் அம்முறையே இவை வைக்கப்பட்டன. (பா. வி. பக். 192, 193)
இவ்வெட்டனுள்ளும் ஆக்கியோன் பெயர் முதலிய நான்கும் ஐயம் நீக்குதற் பொருட்டாகவே வேண்டப்படுவன; ஒருதலை யாக வேண்டப்படுவன அல்ல. முதல்நூலாயின் அதன்கண் ஐயமறுத்தல் இல்லையாதலின், ஐயம் நீக்குதல் என்பது வழிநூலுக்கே வேண்டுவது. வழி என்பது முதல்நூற்கு இல்லை. ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பாயிரத் தின்கண் அன்றி, நூலின் முதல் இடைகடைகளில் எழுதப் படும்; தமது தோற்றத்தாலும் அவை உலகில் அறியப்படும். இனி, நாட்டெல்லையே நூற்கும் எல்லையாதலிற் எல்லை உணரப்படும். யாப்பு முதலியன போல இந் நான்கும் அத்துணை இன்றியமையாத சிறப்புடையன அல்ல. ஆதலின் இந்நான்கனையும் முன்னர் வைத்தார்; இன்றியமையாச் சிறப்பினவாகிய யாப்பு முதலிய நான்கனையும் இறுதிக்கண் வைத்துச் சூத்திரம் செய்தார். இக்கருத்தேபற்றி வடநூலாரும் யாப்பு முதலிய நான்கும் உணர்த்துவதே பாயிரம் என்று கொள்வர். இவற்றுள்ளும் பயன் இன்றியமையாது சிறந்தமை யின் இறுதிக்கண் வைக்கப்பட்டது. (சூ. வி. பக். 13, 14)
யாப்பாவது, நூல் யாப்பு; நூல் யாக்கப்படுமிடத்துத் தொகுத்தும் விரித்தும் தொகைவிரி செய்தும் மொழி பெயர்த்தும் யாக்கப்படும். கேட்போர் ஆவார் நூலைக் கேட்டு அதன்கண் குற்றம் இன்மை ஆராய்வோர். (பா. வி. பக். 6, 7)
“யாப்பாவது இன்ன நூல் கேட்டபின் இது கேட்டற்பாற்று என்னும் இயைபு; கேட்போர் நூல் கேட்டற்குரிய அதிகாரி களாகிய மாணக்கர்” என்பார் சிவஞான முனிவர்.
(சூ. வி. பக். 13, 14)
கரு அமைந்த மாநகர்க்கு உரு அமைந்த வாயில் மாடம், தகை மாண்ட நெடுஞ்சுவர்க்கு வகை மாண்ட பாவை, அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும், நாண் துறவாக் குலமகட்கு மாண்துறவா அணியும் ஆடையும், தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள் என்பன நூலுக்கு இன்றியமையாச் சிறப்பிற்றாய பாயிரத்துக்கு உவமைகளாம்.
சிறப்புப் பாயிரத்துக்கு ஞாயிறும் ஆடையும் கற்புடையாளும் உவமைகளாம். ஞாயிறு எஞ்ஞான்றும் ஒருபடித்தாக ஆகாயத்தை விளக்குமாறுபோல, சிறப்புப் பாயிரம் பெயர் மாத்திரமே உணர்த்தலின் வளர்தலும் தேய்தலுமின்றி எஞ்ஞான்றும் ஒருபடித்தாக நூலினை விளக்கும். ஆடை குலமகட்கு அணியினும் இன்றியமையாதவாறு போல, சிறப்புப்பாயிரம் தான் பிரியாது நூலொடு கூடிநிற்கும். கற்புடையாள் கணவன் கற்பித்தவழி நிற்குமாறு போல, சிறப்புப் பாயிரம், அந்நூலினது குறிப்பின் வண்ணம் தான் ஒழுகும். (பா. வி. பக். 2, 4)
நூல் சொல்லிய பொருளைத் தன்னகத்தே கொண்டு, ஆசிரியப்பா வெண்பா என்னும் இவற்றால் சிறப்புப் பாயிரம் கூறப்படும். நூலாசிரியனுடைய ஆசிரியன் அவனோடு ஒருங்கு பாடம் கேட்டோன். அவனுடைய மாணாக்கன் என்னும் இம்மூவகையாருள் ஒருவனால் அது கூறப்படும். (நன்னூல் ஆசிரியர் தகும் உரைகாரனையும் கூட்டிச் சொல்லுவர்). தோன்றமாட்டாத நுட்பங்களையெல்லாம் புலப்படுத்திப் பலதுறைப்பட நூலை இயற்றினும் நூலாசிரி யன் தன்னைத்தானே புகழ்ந்து கோடல் தக்கது அன்மையின், சிறப்புப்பாயிரம் இம்மூவருள் ஒருவனாற் கூறப்பட வேண்டும் என்பது. (பா. வி. பக். 158)
நூலாசிரியனாகிய தன்னுடைய ஆசிரியன், தன்னோடு ஒரு சாலை மாணாக்கனாய்ப் பாடம் கேட்டோன், தன்னுடைய மாணாக்கன் தான் செய்த நூற்குத் தக்க உரை செய்தோன் என்ற இவர்கள். (நன். 51)
தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன் தன் மாணாக்கன் என் னும் இம்மூவரேயன்றிப் பிறர் சிறப்புப் பாயிரம் கூறற் குரியர்அல்லர். அதன் காரணங்கள் வருமாறு :
1. சிறப்புப் பாயிரம் என்பது ஒரு நூலது பெருமையே கூற வந்ததாம். ஆதலின், அந்நூலது பெருமை விளங்குமாறு, அதனை ஆக்கியோன் பெருமையும், அதனைக் கேட்போர் பெருமையும் அவர்கள் காலத்தே உடனிருந்து பழகினார்க் கல்லது ஏனையோர்க்கு உள்ளவாறு அறிதல் அரிது.
2. தந்தை முதலாயினார் அவ்வாறு அறியினும் சிறப்புப் பாயிரம் செய்தற்குரிய புலமையுடையோராயிருத்தல் என்பது ஒரு தலையன்று.
3. உள்ளவாறு அறிந்துரைக்கும் இயல்பு அம் மூவர்க்கும் ஒருதலையாக உண்டு.
4. தகும் உரைகாரன் நூல் செய்தோன் காலத்தானன்றிப் பிற்காலத்தவன் ஆயின் அவற்றை முற்றும் உணர்ந்து உள்ள வாறு உரைக்கும் ஆற்றல் பெறாமையின் சிறப்புப்பாயிரம் செய்யும் உரிமை அவனுக்குச் சிறவாது. (பா. வி. பக். 158, 159)
சூத்திரத்தான் இயன்றது, ஓத்தினான் இயன்றது, படலத்தான் இயன்றது, பிண்டத்தான் இயன்றது என நூலினை நான்கு வகைத்தாகக் கூறுவர் அரசஞ் சண்முகனார்; இசைநுணுக்கம் போல்வதும், களவியல் போல்வதும், பன்னிரு படலம் போல்வதும், தொல்காப்பியம் போல்வதும் முறையே அவற் றுக்கு எடுத்துக்காட்டாம் என்றும் உரைப்பார். இவ்வாறு நூலினை நால்வகைத்து ஆக்காது சிறுநூல் பெருநூல் இடைநூல் என மூவகைத்தாக்கியுரைத்தல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு மாறாகும் என்பர். சூத்திரம், ஓத்து. படலம் பிண்டம் என இவற்றின் இலக்கணத்தை முறையே ஓதிய ஆசிரியர்க்கு இவ்வாறு நால்வகைத்தாகக் கூறுதலே உடன்பாடாம் என்பது. (பா. வி. பக். 111)
சொற் சுருக்கத்தொடு பொருட்செறிவு உடையதாகக் கூறும் நூலழகு; நன்னூலார் சுட்டும் பத்து அழகுகளில் ஒன்று. (13)
எ-டு : உயிரொடு மொழிக்கு முதலில் வரும் மெய்கள் கசதநபமவயஞங என்பன பத்தும். யரழ என்றும் ஈற்று நிலைமொழிகளின் முன் வருமொழி முதலில் அப்பத்து மெய்களும் உயிரொடு கூடி மெய்ம்மயக் கத்தின்கண் வரும் என்ற கருத்தை.
‘யரழ முன்னர் மொழிமுதல் மெய் வரும்’ (நன். 116) என்று குறிப்பிட்டார். யகரத்துடன் யகரம் மயங்குதல் உடனிலை மெய்ம்மயக்கம் ஆதலின், வேற்றுநிலை மெய்மயக்கம் பற்றிய அதிகாரத்தில் யகரத்தையும் அகப்பட ‘மொழிமுதல் மெய்’ என்று சூத்திரித்தமை ‘சுருங்கச் சொல்லுதல்’ என்னும் அழகு; ‘ஏற்புழிக் கோடல்’ என்னும் உத்தியால் யகரத்தின் முன்னர் வேற்றுநிலை மெய்மயக்கத்துள் யகரம் வருதல் நீக்கிக் கொள்ளப்படும்.
சூத்திரத்தினது இயல்பு. சூத்திரமாவது, கண்ணாடியின் நிழல் போல, படித்த அளவிலே அதனாற் சொல்லப்படுகின்ற பொருள் (சொற்குப் பொருள் இதுவென) ஆராய வேண்டாமல் ஒருங்கு தோன்றுமாறு யாப்பின்கண்ணே தோன்ற யாக்கப்படுவது.
எ-டு :
‘வேற்றுமை தாமே ஏழென மொழிப
விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே’ (தொ. வேற்றுமை. 1)
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப் படயாத்தல் என நால்வகையினும் சொல்லப்பட்ட பொருளொடு, சில எழுத்தினான் இயன்ற செய்கைத்தாய், உரைக்குங் காலத்து அவ்வுரையிற் பொருளெல்லாம் தன்ன கத்து அடக்கி, நுண்ணிய பொருண்மையொடு பொருந்திய விளக்க முடைத்தாகி, கெடுக்கலாகாத துணைச்சூத்திரங் களையுடைத்தாகி, வரையறுக்கப்படாத அரிய பொருளை யுடைத்தாகிப் பலவாற்றானும் பயனை ஆராய்தல் உடையது சூத்திரம். (தொ. பொ. 471, 646. இள.)
யாற்றொழுக்கு, தேரைப்பாய்வு, சீயநோக்கு, பருந்தின் வீழ்வு என்பன. (தொ. பாயிரம் இள. மேற்.)
யாறு இடையறாது ஒழுகுமாறு போலச் சூத்திரங்கள் முன் பின்னாக அன்றித் தொடர்ந்து பொருள் கொள்ள நடப்பது யாற்றொழுக்காம்.
இடையே சிறிது இடம்விட்டுக் குதிக்கும் தேரையைப் போல, சூத்திரம் இடையிட்டுப்போய்ப் பொருள் கொள்ள நடப்பது தேரைப்பாய்வாம்.
சிங்கம் நோக்கும்போது முன்னுள்ள பொருள்களையும் பின்னுள்ள பொருள்களையும் நோக்கி நடக்குமாறு போல, ஒரு சூத்திரம் தனக்கு முன்னும் பின்னுமுள்ள சூத்திரங்க ளொடு தொடர்புடையதாய் நடப்பது சீய நோக்காம்.
பருந்து நடுவே விழுந்து தான் விரும்பிய பொருளை எடுத்துக் கொண்டு போமாறு போல, ஒரு சூத்திரப்பொருள் பல சூத்திரங்களைக் கடந்துவரும் மற்றொரு சூத்திரப் பொருளை முடித்துப் போம் இயல்பு பருந்தின் வீழ்வாம்.
அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க.
ஆரியத்துள் மாகேச்சுர சூத்திரமும், தமிழின்கண் ஆதியில் அகத்தியற்கு மகேச்சுரன் உரைத்த இசைநுணுக்கமும் ஆகியன. (பா. வி. பக். 111)
1. சிறிய கண்ணாடியில் பெரிய பொருளின் நிழல் திரிபின்றிக் காணப்படுதல் போலச் சில சொற்களாலாகிய நூற்பாவில் பரந்த செய்திகள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
2. கண்ணாடியில் காணப்படும் பொய்த் தோற்றமாகிய பிம்பம் பொருளை நேரிற் கண்டாற் போன்ற உணர்ச்சி தருவது போலச் சூத்திரத் தொடரும் எடுத்துக்காட்டு இல்லையாயினும் எடுத்துக் காட்டுத் தந்து விளக்கினாற் போன்ற விளக்கத்தை அச்சூத்திரம் தருதல் வேண்டும்.
3. பாயிரத்துக் கூறப்பட்ட இலக்கணத்தொடு பொருந்தி யிருத்தல் வேண்டும்.
4. சில சொற்களைக் கொண்ட செய்யுளாக இருத்தல் வேண்டும்.
5. பலவகையாகப் பரந்துபட்ட செய்திகளையும் உள்ளடக்கி அமைதல் வேண்டும்.
6. பருப்பொருட்டாகிய பாயிரம் போலாது நுண்ணிய கருத்துக்களை வெளிப்படையாகக் கூறாமல் உள்ளடக்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.
7. முன்னும் பின்னும் கிடந்த நூற்பாக்களொடு பொருளான் இயைந்து அசைக்கமுடியாத இன்றியமையாமை யுடைத் தாதல் வேண்டும்.
8. அளத்தற்கு அரிய பெரும்பொருளை உடையதாதல் வேண்டும்.
9. பலவாற்றானும் பொருள் விளங்க வருவதாதல் வேண்டும். இவ்வியல்புக்கு மாறுபட வருவன சிறந்த நூற்பாக்கள் ஆகா. (தொ. பொ. 481, 655 பேரா.)
‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி
யகரமும் உயிரும் வருவழி இயற்கை’ (தொ. எழுத். 163 நச்.)
1. யகரமும் உயிரும் வருவழி எனவே, உகரமொடு புணரும் புள்ளியிறுதியாகிய நிலைமொழித் தொழில் கூறப்படு கின்றது என்பது கண்ணாடியில் காணும் நிழல்போலத் தெளிவுறக் கூறப்பட்டது.
2. நிலைமொழி வருமொழிகளைப் பகுத்துக் கூறினமையின் ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என்ற பாயிர இலக்கணத்தொடும் பொருந்திற்று.
3. ஞணநமலவளன என்ற எட்டு மெய்களையும் ‘உகரமொடு புணரும் புள்ளியிறுதி’ எனவும், வருமொழிப் பரப்பை யெல்லாம் ‘யகரமும் உயிரும்’ எனவும் கூறலின், இது ‘சில்வகை எழுத்தின் செய்யுளாயிற்று.
4. இவ்வீற்று இம்முதல் பற்றிய சொற்கள் பலவாதலின், ‘சொல்லுங்காலை உரையகத் தடக்கிற்று.
5. இச்சூத்திரப் பொருள் தொகைமரபு, உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்ற இயல்களின் கருத்தை உள்ளடக்கிக் கொண்டமையானும், பொருள் நுட்பமாக இருத்தலானும் ‘நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்’தாயிற்று.
6. ‘ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர்’ (எழுத். 296) முதலிய நூற்பாக்களுக்கு இந்நூற்பா இன்றியமையாதது; அவை யும் இதற்கு இன்றியமையாதன ஆதலின் ‘துளக்கலாகாத் துணைமை எய்தி’ற்று. உயிர் 12, ஞணநமன யரலவழள என்னும் மெய் 11, குற்றியலுகரம் ஆகிய 24 ஈறுகளும் - உயிர் 12, கசதநபமயவஞ என்னும் மெய். 9, குற்றியலுகரம் ஆகிய 22 முதலும் - பற்றி எழுந்த மொழிகளெல்லாம் வேற்று மைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் பெறும் பொருளைத் தொகுத்துக் கூறுதலின் ‘அளக்கலாகா அரும்பொருட்டு ஆகி’ற்று. (தொ. மர. 100 பேரா.)
சூத்திரம் ஆசிரியத்தானும் வெண்பாவானும் வரலாம்; பிற்காலத்தே கட்டளைக்கலித்துறையானும் வருகிறது. நூற் பாவினை ஆசிரியத்துள் அடக்குவாரும் உளர். ஓரடியிலும் நூற்பா வருதலின் நூற்பாவினைத் தனிச்செய்யுளாகக் கூறுவாரும் உளர்.
நூற்பாவில் ஐந்தசைச்சீர் வரலாம்; உதாரண வாய்பாடு ஆகிய ‘தேமாந்தண்பூநலம்’, ‘தேமாந்தண்பூஞ்சீர்’ முதலியன காண்க. (ஏழாம் இலக்கணம் யாப்பு. 3)
சூத்திரத்திலக்கணம் -
கண்ணாடி சிறிதாயினும் அகன்றுபட்ட பொருளைத் தன்னுள் பிம்பமாகக் கொண்டு காட்டினாற்போல, ஒரு பொருளை நுதலி வரும் சூத்திரமும், அப்பொருளை நுதலுங்கால் அறியத் தோன்றி ஆராய்தல் வேண்டாதபடி அவ்வகன்ற பொருளை மிகவும் விளக்குமாற்றால் செய்யுளுள் தோன்றச் செய்து முடிக்கப்படுவது. (தொ. செய். 169 நச்.)
சூத்திரம் மேற்கூறிய இலக்கணம் உடைத்தாய், பொருட்கு வேண்டும் சில சொல்லான் செய்யும் செய்கையுடைத்தாய், பொருளானும் போலியானும் உரைசொல்லுவார் சொல் லுங்கால் அவ்வுரையெல்லாம் தன்னகத்தே அடக்கி, நுண் பொருட்டாகிய நூற்பொருள் கேட்டார்க்கு வெள்ளிதன்றி உட்பொருளுடையதாய், முன்னும் பின்னும் கிடந்த சூத்திரங் களானே தன்னுட் பொருள் இன்றியமையாதது ஆதல் உடைத்தாய், அளத்தற்கு அரிய பெரும்பொருளுடைத்தாய், பலவகையானும் பொருள் விளங்க வருவது. (தொ. பொ. 655 பேரா., மர. 100 பேரா)
பெயர்ச் சூத்திரம், விதிச்சூத்திரம், விலக்கியல் சூத்திரம், நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம், ஞாபகச் சூத்திரம் என்பன. (யா. வி. பாயிர உரை)
பிண்ட சூத்திரம், தொகைச் சூத்திரம், வகைச் சூத்திரம், குறிச் சூத்திரம், செய்கைச் சூத்திரம், புறனடைச் சூத்திரம் என்பன.
(நன். 20)
சூத்திரநிலை -
ஆற்றொழுக்கு, சிங்கநோக்கு, தவளைப்பாய்த்து, பருந்தின் வீழ்வு என்பன. ‘சூத்திரங்களின் கிடக்கை’ முறை காண்க. (நன். 19)
சூத்திரப் பயன்வகை -
பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் என்பன.
பொழிப்பாவது, பதவுரையாக அன்றி, பொருந்திய பொருளைப் பிண்டமாக எடுத்துரைப்பது.
அகலமாவது, கடாவினை எழுப்பித் தன் நூலானும் பிற நூலானும் ஏற்பன விடைகூறி, நூற்பாவின் உட்பொருளே யன்றி ஆண்டைக்கு இன்றியமையா யாவையும் விளங்க விரிவாக உரைப்பது.
நுட்பமாவது தோன்றும் ஐயங்களை எடுத்துக்காட்டி நீக்கியுரைப்பது.
எச்சமாவது, அவ்வாற்றால் போந்த பொருளை யுரைப்பது.
இந்நால் வகையினையும் தொல்காப்பியனார் காண்டிகை வகை இரண்டு, உரைவகை இரண்டு என இருவகையுள் அடக்குவார். (பா. வி. பக். 114)
சூத்திரப்பா -
இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பா அகவல். (L)
சூத்திரப் புறனடை -
முன் சூத்திரங்களால் கூறப்பட்ட செய்திக்கு அடுத்து வரும் சூத்திரத்தால் புறனடை கூறுதல்.
நன்னூலார் எழுத்தியலுள் முன்னர்ச் சூத்திரங்களால் (76-87) முதல் சார்பு எழுத்துக்கட்கு முயற்சிப் பிறப்புக் கூறினார்.
‘எடுத்தல் படுத்தல்’ (88) என்னும் சூத்திரத்தால் எடுத்தல் முதலியவற்றால் எழுத்திற்குரிய ஒலிமுயற்சியால் ஒன்றற் கொன்று பிறப்பு வேறுபாடுகளும் அவ்வவற்றின்கண் சிறிதுளவாம் என்று புறனடை கூறினார். புறனடையை யுணர்த்துஞ் சூத்திரம் புறனடைச் சூத்திரம்; புறனடையாற் செய்தியை உணர்த்துவது சூத்திரப் புறனடை என வேறுபாடு அறியப்படும்.
சூத்திரப் பொருளை முத்திறத்தானும் ஆறு விகற்பத்தானும், பத்து விதத்தானும், பதின்மூன்று திறத்தானும், ஏழு வகை யானும், இரண்டு கூற்றானும், வழுவுகள் நீக்கி, மாண்பொடும் மதத்தொடும் பொருந்த உரைத்தல் வேண்டும்.
1 . முத்திறம் - பொழிப்பு, அகலம், நுட்பம் - என்ற இவை.
2. ஆறுவிகற்பம் - எடுத்துக் காட்டல், பதம் காட்டல், பதம் விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல் - என்ற இவை.
3. பத்துவிதம் - சொல், சொற்பொருள், சோதனை, மறை நிலை, இலேசு, எச்சம், நோக்கு, துணிபு, கருத்து, செலுத்தல் - என்ற இவை.
4. பதின்மூன்று திறம் - சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் காட்டல், ஆசிரியவசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் - என்ற இவை.
5. எழுவகை பொழிப்பு, அகலம், நுட்பம், எச்சம், பதப் பொருள் உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல் - என்ற இவை.
6. இரண்டு கூறு - தொகுத்துக் கண்ணழித்தல், விரித்துக் கொணர்ந்துரைத்தல் என்பன.
வழு - குன்றக் கூறல் முதலிய பத்து.
மா ண்பு - சுருங்கச் சொல்லல் முதலிய பத்து.
எழுவகை மதம் - உடன்படல் முதலியன. (யா. வி. பாயிர. உரை)
சூத்திரம் (1 )
1. நூற்பா - ‘சூத்திரத் திலக்கணம்’ காண்க.
2. சூத்திரவடிவில் இயன்ற நூல்; ‘வேதாந்த சூத்திரம்’ போல்வது.
3. சூத்திரத்தின் வகை; அது காண்க. (L)
சூத்திரம் (2)
ஆடி நிழலின் அறியத் தோன்றி, நாடுதலின்றிப் பொருள் நன்கு விளங்குமாறு (ஓசையற்ற வெண்பா இயலானும் ஆசிரிய இயலானும்) எடுத்துக்கொண்ட பொருளை விளக்கும் யாப்பு.
நூற்பா அகவல் (திவா. பக். 232) (L)
செந்தமிழ் இலக்கணம் முற்றும் நிரம்பிய தலைச்சங்கப்புலவர் இருந்த நிலம். செம்மையாவது எக்காலத்தும் விகாரமின்றி ஒரு தன்மைத்தாகி நிற்கும் மரபு; இயற்கையாவது அநாதி காலம் தொட்டு இயல்பான் அமைந்த இலக்கணம். (பா. வி. பக். 160, 173)
அவையாவன: பருப்பொருளுக்கு நுண்பொருளின் தன்மை யையும், நுண்பொருளுக்குப் பருப்பொருளின் இயல்பையும், உயிரில் பொருளுக்கு உயிர்ப் பொருளின் இயல்பையும், உயிர்ப் பொருளுக்கு உயிரில் பொருளின் இயல்பையும், அஃறிணைப் பொருளுக்கு உயர்திணைப் பொருளின் ஒழுக்கத்தையும், உயர்திணைப் பொருளுக்கு அஃறிணைப் பொருளின் செயலையும் ஏற்றிக் கூறுதலும், இல்பொருளை உள்பொருள் போலவும் உள்பொருளை இல்பொருள் போல வும் புனைந்து கூறுதலும், பிறவுமாம். (தொ. பொரு. பாயிரம். ச. பால.)
ஆக்கியோன் பெயரேயன்றிச் செய்வித்தான் பெயரும் உரை செய்தான் பெயரும் கூறுதலும், தன் நூலுக்கு வழிகூறலே அன்றி அதன்முதல் நூலுக்கும் வழி கூறுதலும், நூலுக்குப் பெயர் கூறலேயன்றிப் படலம் ஓத்துச் சூத்திரங்களுக்கும் பெயர் கூறுதலும், பெயரே அன்றித் தொகை முதலாயின பிறவும் கூறுதலும், ‘இன்னது நுதலிற்று’ என நூலாகிய பிண்டத்திற்குக் கூறலே அன்றி அதற்கு உறுப்பாகிய படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் ‘இன்னது நுதலின’ எனக் கூறுதலும், நூல் கேட்போரைக் கூறலேயன்றி உரை கேட்போரையும் கூறுதலும், நூற்குப் பயன் கூறலே யன்றிப் பயனுக்குப் பயன் கூறுதலும், பாயிரம் கூறினாரது பெயர் கூறலேயன்றிப் பாயிரத்துக்கு இலக்கணம் கூறுதலும், அவை போல்வன பிறவும் பாயிரத்தோடு ஒத்த இலக்கணத்தை உடையனவாகக் கொள்ளப்படும். (பா. வி. பக். 193)
தானே தலைவனாகிய ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனை’ வழிபட்டுத் தலைவர்ஆயினார், அவன் அருளால் அவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழியுடைய தாகப் பிண்டம் படலம் ஓத்து சூத்திரம் எனச் செயற்கைநலம் தோன்றச் செய்த நூல். (பா. வி. பக். 97)
செவ்வனம் தெளிதல், மெய்ந்நோக்கிக் காண வல்லுதல், பல உரையும் கேட்டல், ஆசான்பால் காதலுடைமை, அவனைத் தெய்வத்தைப் போல மதித்தல், எக்காலத்தும் திரிபின்மை - என இவ்வறுவகை மாண்பும் உடையார்க்கே ஆசிரியன் நூலினைக் கற்பித்தல் வேண்டும் என்றல் ஆன்றோர் மரபு.
செவ்வனம் ஆராய்தலே உண்மைப் பொருளைக் கூர்த்து நோக்குதலுக்கும், அந்நோக்குதலே பலதிற உரைகளையும் கேட்டலுக்கும், அவ்வாறு கேட்டலே ஆசான்மாட்டுக் காதலுடைமைக்கும்; அக் காதலே தெய்வத்தைப் போல அவனை மதித்தற்கும், அம்மதிப்பே திரிபில்லாமைக்கும் காரணம் ஆதலின், இம்முறையே இவ்வாறு கூறப்பட்டன. (பா. வி. பக். 136)
நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; நூற்குணங்கள் தொடக்க முதல் இறுதி வரை ஒருபடியவாக இன்றி, வரவரக் குறைந்து கொண்டே அழிதல். (நன். 12)
சே - ஆன்பாலை மரபுவகையான் உணர்த்தும் பெயர்களுள் ஒன்று. இது பெற்றத்தின் ஆண்பாலைக் குறிக்கும். (தொ. பொ. 557 பேரா.)
இப்பெயர் எருமை, புல்வாய் இவற்றின் ஏற்றினைக் குறிக்கும்.
(திவா. பக். 59)
இப்பெயர் குதிரை, எருது, புல்வாய் இவற்றைக் குறிக்கும்.
(பிங். 2562)
இப்பெயர் குதிரை, பெற்றம், புல்வாய் இவற்றைக் குறிக்கும். (சூடா. III. 32)
சேவல் -
மயில் நீங்கலான ஏனைய பறவைகளின் ஆண்பாலினை மரபான் குறிக்க வழங்கப்படும் பெயர். (தொ. பொ. 603 பேரா.) குதிரையின் ஆணினையும் இது குறிக்கும். (623 பேரா.) ‘சேவல்’ என்ற பெயர் தானே, கோழிச்சேவலை (அகநா. 103, குறுந். 107) ஒரோ வழிச் சுட்டும்.
சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல் -
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; நூற்செய்தி களைச் செவ்வனம் கூறுதல் என்பது உத்தி சூத்திரச் செய்தி களைச் செவ்வனம் கூறாது தம் நுண்ணறிவு தோன்றவும், கற்பார்க்குச் சுவையும் எளிமையும் பயக்கவும் கையாளப்படும் நுட்பமான வழிகள் உத்திவகை என்பர் பேராசிரியர். தொல் காப்பியரும் மாறனலங்கார ஆசிரியரும் உத்திவகை என்றே குறிப்பர்.
நேரே வெளிப்படக் கூறாது சொல்லாற்றலால் குறிப்பாகப் பெறப்பட வேண்டிய பொருளினையும், வெளிப்படையாக எடுத்தோதின் எத்தகைய தெளிவு ஏற்படுமோ அத்தகைய தெளிவு புலப்படுமாறு கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)
பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கொண்டு ஆங்குச் சொல்லியவற்றான் பொருள் கோடல். (656 இள.)
எ-டு : மொழிக்கு ஈறாவனவற்றுள் சிலவற்றை எட்டு நூற்பாக்களால் கூறி எஞ்சியுள்ளவற்றை எடுத்துத் தனித்தனி விதவாது, ‘எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இலவே’ (எழுத். 77 நச்.) எனக் கூறியவழியும், அவற்றை எடுத்து ஓதியவற்றைப் போலச் சிறப்பாகக் கொள்க என்று கொள்ளவைக்கும் உத்திவகை இது. (பேரா.)
எச்சவியலுள் கூறிய பொருள், பெயர் வினை இடை உரி இயல்களில் கூறிய பொருளோடு ஒப்ப, ‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ (சொ. 455), ‘உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய (சொ. 456) என்றாற் போலக் கூறுதல் இவ்வுத்திவகை யினமாம். (பேரா.)
நன்னூல் சுட்டும் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று; சொல் முடிந்தவிடத்து அதன் பொருளையும் முடியவைத்தல்.
ஒரே நூற்பாவில் ஒரு சொல்லை எடுத்துக் கூறி அதற்கு விதி கூறுதல் போல்வன இவ்வுத்தியாம்.
“ஙம்முன் கவ்வாம். வம்முன் யவ்வே’ (நன். 111)
என வேற்றுநிலை மெய்ம்மயக்க விதி கூறுதல் போல்வன. (நன். 14)
உலகம் எனப்படும் காட்சிப்பொருளும் கருத்துப்பொருளும் ஆகிய யாவும் நிலமுதலாகிய பூதங்கள் ஐந்தும் தம்முள் வெவ்வேறு அளவைகளான் கலந்துள்ள கூட்டுப்பொருள் களேயாதலின், அவற்றை அவ்வாறே கூறுதும் என்னாது, உலகியல் நடைபெறும் பொருட்டு, இருதிணையாகவும் அவற்றை ஐம்பாலாகவும் இலக்கண நெறியான் சான்றோர் வகுத்து வழங்கிய வழக்குச் சிதையாமற் பொருட்டு அவர் வகுத்தவாறே, திரிபுபடாத சொற்களான் தழுவிக்கூறல் வேண்டும். (தொ. மர. 88 ச. பால.)
இது தொல்காப்பியம் குறிப்பிடாது, நன்னூல் குறிக்கும் உத்திகள் முப்பத்திரண்டனுள் ஒன்று. தொகைச் சொற்களின் பொருள் திரிபின்றிப் புலனாகுமாறு அவற்றின் உருபு முதலியவற்றை விரித்தே நூற்பா யாத்தல்.
‘பண்புப் பகாப்பதம்’ என்னாது ‘பண்பிற்பகாநிலைப்பதம்’ என்று ‘செம்மை சிறுமை சேய்மை தீமை’ முதலான சொற் களைக் குறிப்பிடுதல். (நன். 135) போல்வன இவ்வுத்தியின் பாற்படும். (நன். 14)
ஞ
சூத்திரவகை ஏழனுள் ஒன்று. எளிதும் சிறிதுமாக இயற்றற் பாலதனை அரிதும் பெரிதுமாக இயற்றிப் பிறிது ஒரு பொருள் அறிவிப்பது. ‘ஞாபகம் கூறல்’ என்பதன்கண் எடுத்துக்காட்டுக் காண்க. (யா. வி. பாயிர. உரை)
கூறப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு தொடர் புடைய மற்றொரு செய்தியை அறிதல்.
நாள் முன்வரும் வன்முதல் தொழிற்கு, ஆனின் னகரம் றகரமாகத் திரியும் எனவே, ஞாபகத்தான், தொழிற்கண் இன்னின் னகரம் திரியும் எனவும் பெயர்க்கண் இன்னின் னகரம் திரிந்தும் திரியாமலும் வரும் எனவும் கொள்ளப்படும். (தொ. எ. 124 நச்.)
பல முதலியன தம்முன் தாம் வரின் லகரம் றகர ஒற்று ஆதலும் உடைத்தே என்புழி, லகர உயிர்மெய்யின் கண்ணுள்ள அகரம் கெடுதல் ஞாபகத்தான் பெறப்படும். (தொ. எ. 214 நச்.)
‘மாமரக் கிளவியும் ஆவும் மாவும். அவற்றோரன்ன’ என ஞாபகமாகக் கூறிய அதனால் மாங்கோடு என அகரம் இன்றியும் வரும். (தொ. எ. 231 நச்.)
‘இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய ஈற்றில் நின்றிசைக்கும் பதினோரெழுத்தும்’ (தொ. சொ. 10) என்புழி, ஈற்றின் நின்று இசைத்தல் ன், ன், ர், மார் என்பனவற்றிற்கு ஞாபகமாகக் கொள்ளப்படும். (சேனா) (ஈண்டு ஞாபகமாவது முற்கூறப் படாது இவ்விடத்தேயே அறியப்படுதல்.)
இது தொல்காப்பியம் கூறும் உத்தி வகைகளுள் ஒன்று; நூற்பா இயற்றுங்கால் அதன் அழகுகளாகக் கூறப்பட்டன வற்றை யுட்கொண்டு சில்வகை எழுத்தின் செய்யுட்டாகவும் நாடுதலின்றிப் பொருள் நனி விளங்கவும் இயற்றாது, அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து அதனானே வேறுபல பொரு ளும் அறிதற்கு வாய்ப்பு அளித்துக் கூறல். (தொ. பொ. 665 பேரா.)
இரட்டுற மொழிந்து இரண்டு சொற்கும் பொருள் கோடல்.
(656 இள.)
‘மெய்பெறு மரபின்... உணர்ந்திசினோரே’ (தொ. பொ. 413 பேரா.) எனச் சூத்திரம் செய்து பல பொருண்மை கோடல். (பேரா.)
அகரச் சாரியை என்று எளிமையிற் கூறாது அக்குச் சாரியை எனப் பெயரிட்டு, அது புணரும்போது அகரம் நீங்கலாக ஏனைய கெடும் என்ற கருத்தில் ‘எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி, அக்கின் இறுதிமெய் மிசையொடும் கெடுமே, குற்றிய லுகரம் முற்றத் தோன்றாது’ (தொ.எழுத். 128 நச்.) என்று கூறுதல் போல்வன இவ்வுத்திக்கு இனமாம். (பேரா.)
ஒன்றற்குரிய விதியைப் பிறிதோரிடத்துக் கூறிப் பெறுமாறு வைத்தல். (தொ. மர. 109 ச.பால.)
எ-டு :
‘னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்’ (கிளவி. 5)
‘ளஃகான் ஒன்றே மகடூஉ அறிசொல்’ (க்ஷ. 6)
எனக்கூறி அவை வினைச்சொல்லின் கண் இறுதியாக நின்று பாலுணர்த்தும் என்னும் இலக்கணத்தை 10ஆம் சூத்திரத் தால் பெறப்பட வைத்தல்.
நல்லாசிரியனுக்கு அமைந்த எண்வகை உறுப்புக்களுள் ஒன்று. (இஃது ஆத்திரையன் பேராசிரியன் உரைத்த பாயிரச் செய்தி) ஆசிரியன் நற்புலமையுடையானாதலின் (திங்க ளொடு) ஞாயிறன்ன வாய்மையுடையான்.
நன்மை பயக்கும் உரைக்குத் திங்களும், தீங்கு பயவா உரைக்கு ஞாயிறும் உவமம் ஆதலின், ஆத்திரையன் பேராசிரியன் திங்களொடு ஞாயிறு’ என இரண்டும் உவமம் கூறினான்.
(பா. வி. பக். 66)
த
ஆட்டின் ஆணினை மரபினால் குறிக்க வரும் பெயர். (தொ. மர. 47)
நூல்
நூல் உத்தி; ‘உத்தி’ முதலிய தலைப்புக்களில் காண்க.
இது தொல்காப்பியம் கூறும் உத்தி வகைகளில் ஒன்று, உண்மையாக ஒருபொருண்மையுடையது அன்றாகிய ஒன்றனை ஒருபயன் நோக்கி, அப்பொருண்மையுடையது போலக் கூறுதல். (தொ. பொ. 665 பேரா.)
‘அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே’ (தொ. பொ. 329 பேரா.)
‘குறிலிணை உகரம் அல்வழியான’ (தொ. பொ. 317 பேரா.)
என அளபெடையினை எழுத்துப் போலவும், குற்றிய லுகரத்தைக் குற்றெழுத்துப் போலவும் கூறுதல் இவ்வுத்தி வகை.
‘குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின், தொடர் மொழி எல்லாம் நெட்டெழுத் தியல’ (தொ. எ. 50 நச்.) என்பதே பற்றி, குறிலிணையையும் குறில் நெடிலையும் நெட்டெழுத்துப் போலக் கொண்டு, ‘நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்’ (எ. 160) என்ற விதியைக் கொள்வது இவ்வுத்திவகையின் இனம்
முன்னானும் பின்னாயினும் நின்ற சூத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தும் கொணர்ந்து புணர்த்து உரைத்தல். (656 இள.)
தந்து கொணர்ந்துரைத்தல் என்று பொருள் கொண்டு ‘நெட்டெழுத் திம்பரும் தொடர்மொழி யீற்றும், குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே’ (தொ. எ. 36 நச்.) என்ற சூத்திரத் தோடு அதற்கு முந்தைய நூற்பாவிலுள்ள ‘நிற்றல் வேண்டும்’ (தொ. எ. 34 நச்.) என்ற சொற்றொடரைக் கூட்டிப் பொருள் செய்வர் இளம்பூரணர். இதனை ‘அதிகார முறைமை’ என்பதன்கண் பேராசிரியர் கொண்டார்.
நூலிற் கூறப்படாத பிற சிறப்புச் செய்திகளைத் தந்துரைப்ப தால் பாயிரத்திற்குத் ‘தந்துரை’ என்பதொரு காரணப் பெயர். (நன். 1)
மூலத்தில் கூறப்படாத சொற்பொருள் முதலியவற்றை இடம் நோக்கி வருவித்துரைப்பது.
தலைமாணாக்கர்க்கு அன்னம் உவமம் ஆம். எவ்வாறெனில், பாலையும் நீரையும் கலந்து வைப்பின், அன்னம் பாலினின்று நீரைநீக்கிப் பாலைமாத்திரம் பருகுமாறு போல, ஆசிரியன் ஒரோவழித் தாமதகுணவயத்தான் கூறிய வேண்டத்தகாத பொருளை நீக்கி, அவன் சொல்லிய வேண்டத் தகுவனவற் றையே தலைமாணாக்கன் ஏற்றுக் கொள்வான். (நன். 38)
ஓரிடத்தில் புல் நிறையக் காணின் அவ்விடத்தேயே அதனை வயிறார மேய்ந்து பின் ஓரிடம் சென்று உண்டதனை அசை யிடும் பசு, நல்லாசானொருவனிடத்தே தான் பயிலத்தகும் நூற்பொருள் நிரம்ப உளதாயவழி அவனிடத்தேயிருந்து அவற்றைக் கேட்டு, பின்னர்த் தனியிடம் மீண்டு அக்கேட்ட வற்றையெல்லாம் நினைவிற் கொணர்ந்து சிந்தனை செய்து அறிவு நிரம்பும் நன்மாணாக்கற்கு உவமம் ஆயிற்று. (நன். 38)
அரசருடைய உரிமைப்பண்பு உணர்த்தும் சொற்களை அவரவர்க்கு ஏற்பச் செய்யுளகத்துக் கூறுக என்பர் ஆசிரியர்.
தானைத் தலைவரையும், அரசனால் ஏவல் பெற்றோரையும், வரிசை பெற்றோரையும், குறுநில மன்னரையும், ‘மணிமுடி கவித்த மதிவெண்குடை மன்னர்’ எனப் புகழ்தலும் செய்யுள்மரபு என்பதாம். (இ. வி. பாட். 163)
சூத்திரநிலை நான்கனுள் ஒன்று தவளை பாய்கின்றவிடத்து இடையிடையே நிலம் கிடப்பப் பாய்வது போலச் சூத்திரம் இடையிட்டுப் போய் இயைபு கொள்வது. (நன். 19)
எ-கு : ஆவியும் ஒற்றும் அளவிறந் திசைத்தலும்
மேவும் இசைவிளி பண்டமாற் றாதியின்’ (நன். 101)
மூன்றுயிரளபு’ (நன்.99) என்னும் சூத்திரத்தை அடுத்து அதன் புறனடையாக நிற்க வேண்டும் இச்சூத்திரம் ‘தவளைப் பாய்த்து’ என்னும் சூத்திர நிலையால் இடையே ஒரு சூத்திரம் கிடப்ப மேலதற்குப் புறனடைநுதலிற்று.
இனித் ‘தேரைப்பாய்த்து’ என ஒரு பொருள் கோள் (யா. க. 95) உரையுள் சொல்லப் பெறும். அஃதாவது தவளை நடுவிடத்தை விடுத்துத் தத்திப் பாய்வது போல ஒரு சொல் அடுத்த சொல்லை விடுத்து அதற்கு அப்பால் உள்ள சொல்லொடு பொருள் அமைவது.
வழிபடு தெய்வத்தை வணக்கம் செய்து மங்கலமொழியை முதற்கண் வகுத்துத் தொகைவிரியான் நுதலிப் புகுதற்கு எடுத்துக்கொண்ட பொருளைக் குறிப்பிடுவதாம். (யா. க. சிறப்புப். உரை)
எ-டு:‘உமையுரு உருமடுத்து உலகிளைப்பு ஒழிக்கும்
இமையவன் அடிபணிந்து இயம்புவன் பொருளே’ (இ. வி. பொ. 1)
அரசவைக்கண் விடுக்கும் ஓலைப்பாசுரத்திலும், தன்னுடைய கல்வியாற்றலை உணராதவர் அவையிலும், கற்றோரவைக்கண் தான் வெல்லலுறுகின்ற போதிலும், வாதம் செய்யுமிடத்தே எதிரி தன்னைப் பழித்துப் பேசியவிடத்தும் புலவன் தன்னைத் தான் புகழ்ந்து கோடலும் தகும். (நன். 53)
இது தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் 32 உத்திகளுள் ஒன்று; தான் புதிதாக இட்ட பெயரை ஆசிரியன் பலகாலும் சூத்திரங்களில் எடுத்தாளுதல் என்பது.
நன்னூலார் வடநூல் மேற்கோளாக ஒருமொழிகளை விதந்து, பகாப்பதம் பகுபதம் எனக் காரணப் பெயர் தாமே தந்து, அவற்றை ‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும்’ என்ற நூற்பா (128) முதல் 137ஆம் நூற்பா முடியப் பகாப்பதம் பகுபதம் எனப் பலகாலும் எடுத்துக் கூறுதல் இவ்வுத்தி. (நன். 14)
இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; சொல்லப்படாத செய்திகள் பல உளவாயினும் ஒரு நூற்கண் ஆசிரியன் தான் கூறக் கருதியவற்றையே கூறுதல். (தொ. பொ. 665 பேரா.)
பிற நூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டால் கூறுதல். (தொ. பொ. 656 இள.)
‘அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலாது எழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (தொ. எ. 102 நச்.)
என இந்நூலுக்கு வேண்டும் வைகரிஒலிக்கு மாத்திரம் இலக்கணம் கூறுவதாகச் சொல்வது போல்வன இவ்வுத்தி வகை. (பேரா.)
மெய்யொடு மெய், மெய்யோடு உயிர், மெய்யோடு உயிர்மெய், உயிரோடு உயிர், உயிரொடு மெய், உயிரோடு உயிர்மெய், உயிர்மெய்யோடு உயிர், உயிர்மெய்யொடு மெய், உயிர்மெய்யோடு உயிர்மெய் என்ற ஒன்பதுவகை மயக்கத் துள், மெய்யொடு மெய்ம் மயக்கம் ஒன்றனையே கூறி (தொ. எ. நச்.22) ஏனையவற்றைக் கூறாமையும், புணர்ச்சியுள் வினைத் தொகையும் பண்புத்தொகையும் எடுத்தோதி முடிக்காமை யும் போல்வன இவ்வுத்திவகையின் இனம். (பேரா.)
தான் எடுத்துக்கொண்ட மொழியிலக்கணக் கொள்கை இதுவென விளங்கக் கூறுதல். (தொ. மர. 109 ச.பால.)
எ-டு : ஓரெழுத்துத் தனியே இரண்டு மாத்திரையின் மிக் கொலித்தல் இல்லை எனத் தமிழ் மரபினை உணர்த்துவார்,
‘மூவள பிசைத்தல் ஓரெழுத்தின்றே’
‘நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய
கூட்டி எழூஉதல்’ என்மனார் புலவர்’
(எழுத். 5,6) எனக் குறிப்பிடுதல். (ச. பால.)
ஆசிரியன் நூற்பொருளைத் தன்மகன், ஆசான் மகன், மன்னன் மகன், பொருள் மிகக் கொடுப்போன், வழிபடு வோன், கற்பித்தவற்றை மறவாமல் கொள்வோன் - என்னும் இவ்வறுவர்க்கும் வழங்கற்பாலன்.
‘தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து, முந்தி இருப்பச் செயல்’ (குறள் 67) ஆதலின், தந்தைக்கே முற்றுமுரிய கடப்பாடு மகற்குக் கல்வி பயிற்றல் என்று ‘தன்மகனை’ முற்கூறினார்.
‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந் நன்றி கொன்ற மகற்கு’ (குறள் 110) ஆதலின், தன் ஆசிரியன் செய்த நன்றி மறவாமல் அவன்மகற்கும் கற்பிக்க வேண்டும் ஆதலானும், அக்கடப்பாடு முற்றும் தனக்கே ஆகாமல் தன்னோடு உடன் பயின்ற பிறர்க்கும் உரித்து ஆகலானும், தன்மகற்குப் பின்னர் ‘ஆசான் மகனைக்’ கூறினார்.
‘முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு, இறையென்று வைக்கப்படும்’ (குறள் 388) ஆதலின், அம்மன்னன் கல்லானா யின் முறை செய்து காப்பாற்றல் முடியாது ஆதலானும், அவனைக் கற்பித்தல் கற்றோர்க்கெல்லாம் கடப்பாடாதலா னும், அக்கடப்பாடு தனக்கும் தன்னொடு கற்றோர்க்குமே யன்றிப் பிறர்க்கும் உரித்து ஆகலானும், தன்மகன் ஆசான் மகன் இவர்க்குப்பின் ‘மன்மகனை’க் கூறினார்.
கல்விக்குச் செல்வம் ஒருவகையானும் தினையளவும் நிகரா காது ஆயினும், ‘தினைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக், கொள்வர் பயன் தெரிவார்’ (குறள் 104) ஆதலின், அத்தினையளவாய செல்வத்தையும் பனையளவாகக் கோடல் பெரியோர்க்கு இயல்பு ஆதலானும், வேறு காரியம் மேற்கொண்டிருப்பினும் தன்மகன் முதலிய மூவரையும் மறுத்தல் முடியாமையானும், பொருள் மிகக் கொடுப் போனைத் துரோணன் ஏகலைவனை மறுத்தாற்போல யாதானும் ஒரு காரணம் பற்றி மறுத்தலும் கூடுமாகலானும், அடுத்து, ‘பொருள் நனி கொடுப்போனை’க் கூறினார்.
மேற்சொன்ன நால்வர்க்கும் கற்பித்தல் ஆசாற்குக் கடப்பா டாதல் ஒன்றே அன்றி, அவர்கள் அவனுக்கு முற்ற அறிந்தவ ராதல் ஒருதலை அன்று. வழிபடுவோன் முற்ற அறிந்தவன் ஆதலை உதங்கன், ஏகலைவன் சரிதத்தாலும், உரைகோளா ளன் முற்ற அறிந்தவன் ஆதலை இருக்குவேதத்துள் கூறிய சுவேதகேதுவும் அருச்சுனனும் முதலானோர் சரிதத்தாலும் உணர்கிறோம். இவ்விரு வகையாருள்ளும் வழிபடுவோனுக்கு உரைகோளாளன் நிகராகாமை அருச்சுனஏகலைவர் சரிதத் தால் உணர்கிறோம். கற்பித்தல் இன்றியே வழிபாட்டின் பயனாகக் கல்வி தானே உளதாதல் சிறப்புப் பற்றி, அந்நால் வரை அடுத்து ‘வழிபடுவோனை’க் கூறினார்.
‘சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்’ என்னு முறை பற்றி வழிபடுவோனை அடுத்து இறுதியாக ‘ உரைகோளா ளனை’க் கூறினார். (முன் - இடமுன்) (பா. வி. பக். 135, 136)
முன்னோரால் கூறவும்படாது வழக்கின் உள்ளதுமன்றித் தன்னுள்ளே ஒரு பொருள் படைத்துக் கூறல் என்பார் பேரா சிரியர். நூற்கு ஆகா எனக் கடியப்பட்ட குற்றங்கள் பத்தனுள், வழு அமைக்கப்படாத குற்றம் இது. (தொ. பொ. 663 பேரா., இ. வி. பாட். 137)
மலைபடுகடாத்தில் ‘தீயின் அன்ன ஒண்செங்காந்தள்’ என்னும் அடியை (நன்னன் என்னும் பாட்டுடைத் தலைவ னது இயற்பெயரை முன்னர்ச் சார்ந்து தீ என்னும் இன்னாச் சொல் புணர்தலின்) ஆனந்தக் குற்றம் என்று பிற்காலத்தான் ஒருவன் ஒரு சூத்திரம் காட்டுதலும், பழங்கால மரபுக்கு மாறாகப் பாட்டியல் என்ற இலக்கணம் கொண்டு பத்து வகைப் பொருத்தம் எனச் சில கூறலும் போல்வன இச் சிதைவுக்கு எடுத்துக்காட்டு.
வைசியர் (-வணிகர்) குலம் மூன்றனுள் ஒரு குலத்தினர் தன வைசியர் (ஏனையோர் கோவைசியரும், பூவைசியரும் ஆவர்); இவர்கள் நாய்கர், எட்டியர், வணிகர், பரதர் எனும் பெயர் பெறுவர். (ஆ. நி.56)
ஒற்றைப் பாவாலாகிய காப்பு; தெய்வத்தை வாழ்த்தி, நுவலும் இலக்கியத்தையோ இலக்கணத்தையோ இனிது நிறைவேறக் காக்கும்படி வேண்டும் பாடல்.
இலக்கண ஆசிரியன் தனது நூலுள் மேற்கொள்ளும் எழு வகை மதங்களுள் ஒன்று. தானே ஒரு கருத்தைத் தொடங்கி அதனை வலியுறுத்திப் பல நூற்பாக்கள் வரைதல்.
நன்னூலார் ‘பதவியல்’ என்ற இயல் தொடங்கிப் பகாப்பதம் பகுபதம் எனக் குறிப்பிட்டு அவற்றின் இயல்பினை அவ்விய லுள் முதற் பதினெட்டு நூற்பாக்களால் குறிப்பிடுதல் இதற்கு எடுத்துக்காட்டாம். (நன். 11)
அரசர்களின் அடையாளப்பூ. சோழனுக்கு ஆத்தி, சேரனுக் குப் பனை, பாண்டியனுக்கு வேம்பு என இவை பூவாம்... தார்ப்பூ போர்ப்பூவின் வேறானது. (தொ. பொ. 60 நச்.)
இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; உலக வழக்கில் காணப்படாத பெயர்களை இலக்கண ஆசிரியன் தானே மனங்கொண்டு தன் நூலில் பெயரிட்டு வழங்குதல்.
உயர்திணை அஃறிணை (சொல்.1) எனவும், கைக்கிளை பெருந் திணை (பொ. 1) எனவும் சொல்லிற்கும் பொருளிற்கும் உலகவழக்கில் வழங்கியவாறன்றி ஆசிரியன் தானே பெயரிடுதல் இவ்வுத்திவகை.
‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி’ (சொல். 65 நச்.) எனத் தான் நிறுத்தமுறை உட்கொண்டு வேற்றுமைகளுக்கு
‘இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கம்’ (சொல். 94 நச்.)
‘மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய’ (சொல். 93 நச்.)
‘ஆறன் மருங்கின்.... ஏழும் ஆகும்’ (சொல். 99 நச்.)
‘நான்கன் உருபின், தொன்னெறி மரபின்’ (சொல். 111 நச்.)
என்றாற் போல, இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு என்று பெயரிடுதல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம். (தொ. பொ. 665 பேரா.)
தானெடுத்து மொழிதல் -
தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் உத்தி களுள் ஒன்று; தனக்கு முன்னூலாசிரியருடைய நூற்பாக்களை வழிநூல் சார்புநூல் ஆசிரியன் தன்நூலில் திரிபின்றி எடுத்துக் கொள்ளுதல்.
எ-டு : ‘குறியதன் முன்னர்... மிசைத்தே’ (நன். 90)
இது தொல்காப்பிய நூற்பா; நன்னூலில் எடுத்தாளப் பட்டுள்ளது. 252, 317, 396, 404, 408, 439 என்ற எண்ணுடைய நன்னூல் நூற்பாக்களும் ‘தானெடுத்து மொழிதல்’ என்னும் உத்தி. (நன். 14)
திங்கள் அன்ன கல்வி -
ஆசிரியன் தான் ‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’யின்கண் வழுவாது நிற்பவன். அவ்வாறு நிற்றலது வளர்ச்சிக்குத் தக, அவன் மாணாக்கனது அகத் திருள் (-அறியாமை) நீக்கி இன்பம் பயக்கிறான். ஆதலின், தனது கலையின் வளர்ச்சிக்குத் தகப் புறத்திருளை நீக்கும் திங்கள் அவனது கல்விக்கு உவமையாயிற்று. (பா. வி. பக். 64)
துலாக்கோல் நல்லாசிரியர்க்கு உவமையாதல் -
தன்கண் வைத்த பாரத்தை ஐயம் தீர வரையறுத்துக் காட்டு தலும், முன்னர்த் தான் சமனாக நிற்றலும் உடைய துலாக் கோல் போல, நல்லாசிரியர் மாணாக்கர் தம்மை ஐயுற்று வினவியவற்றை அவ்வையம் தீரத் தெளிய உணர்த்துதலானும் எப்பொழுதும் தாம் நடுவுநிலை பிறழாமையானும். அஃது அவர்க்கு உவமை ஆயிற்று. (நன். 29)
துன்னூசி -
தைத்தல் தொழில் செய்யும் நூல் கோத்த தொளையினை யுடைய ஊசியின் காது. இலக்கண நூற்கு உவமம் துன்னூசி. ஊசித் தொளையின் மேலுள்ள கோல் கொழு எனப்படும். இருவகைப் பாயிரத்துக்கும் உவமம் கொழு. கொழுவானது துன்னூசி நுழைதற்கு வழி ஆக்குதல் உடையது. பாயிரம் நூல் நுழைதற்கு வழி ஆக்குதல் உடையது. ‘கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போலப் பருப் பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்’ என்பது. (பா. வி. பக். 3; இறை. அ. 1 உரை)
தூஷணம்; ‘அவ்வியாத்தி, அதிவியாத்தி, அசம்பவம் என்னும் தூடணங்களும்’. (இ. வி. பாட். 137 உரை) குன்றக் கூறல், மிகை படக் கூறல், மாறுபடக் கூறல் என்னும் குற்றங்கள்.
நல்லாசிரியனது தூய்மைக்கு ஆகாயகங்கை உவமம். ‘சிற்றினம் அஞ்சும் பெருமை; சிறுமைதான், சுற்றமாச் சூழ்ந்து விடும்’ (குறள் 451) என்றாராதலின், தன் குடிப்பிறப்பு இயற்கை யான் நல்லாசிரியன் சிற்றினம் அஞ்சி அக்கீழ்மக்களொடு கூடாமல் பெரியாரைத் துணைக்கோடலின், கீழாய நிலத் துகளொடு கூடாத வான்யாறு, அவனுக்குத் தூய்மை பற்றி உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 60)
‘மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்’. (குறள் 455)
என்றார் ஆதலின், அகந்தூய்மை ஒன்றே இனம்தூயன் ஆதலும், இயற்கையாகிய அறியாமையினின்று நீங்கி விசேட வுணர்வு புலப்படுமாறு மனம்தூயன் ஆதலும், நல்வினை ஆமாறு சொல்தூயன் ஆதலும், நல்வினை ஆமாறு செயல் தூயன் ஆதலும் என நால்வகைப்படும். (பா. வி. பக். 59)
தவளை பாய்த்து (நன். 19); சூத்திரநிலை நான்கனுள் ஒன்று. ‘தவளைப் பாய்த்து’க் காண்க. (தொ. சிறப்புப். நச். உரை)
இது தொல்காப்பியர் கூறும் உத்தி வகையுள் ஒன்று.
தான் ஒரு வாய்பாடே நூற்பா வாயிலாக எடுத்தோதி அவ்வாய்பாடே பற்றாகப் பல வாய்பாடுகளும் அதற்கு வந்து பொருந்துதற்கு வாய்ப்புக் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)
தொகுத்துக் கூறிய சொல் தன்னானே, பிறிதும் ஒரு பொருள் வகுத்துக் காட்டுதல். (656 இள.)
‘செய்யும் செய்த என்னும் சொல்லே’ (சொல். 236 நச்.) எனப் பெயரெச்ச வாய்பாடு கூறித் தமிழில் உள்ள எல்லாப் பெயரெச்சங்களையும் இவ்விரு வாய்பாடுகளுள் அடக்கிக் கோடல் இவ்வுத்திவகை.
‘உருவு என மொழிதல்’ (சொல். 24 நச்.) என்று கூறி உருவு என்பதன் பொருளவாகிய வடிவு பிழம்பு பிண்டம் என்றாற் போல்வனவும் கோடல் இவ்வுத்திவகையின் இனமாம். (பேரா.)
‘குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின்
ஒற்றிய நகரமிசை நகரமொடுமுதலும்’ (எழுத். 67 நச்.)
என்று, நுந்தை என்ற சொல்லமைப்புக் கூறியதனான் தன் மொழிமுதற் குற்றியலுகரமும் கோடல் (இள.).
‘சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்’ என்பதும் அது. (இள.).
நச். சொல். 73, 230 இவற்றுள்ளும் எடுத்துக்காட்டுக் காணப் படும்.
வழிநூலின் வகை நான்கனுள் ஒன்று; முதல் நூலுள் விரி வாகச் சொல்லப்பட்டதனைச் சில்வாழ்நாள் சிற்றறிவினை யுடைய மக்கட்கு அறியுமாறு சுருக்கிச் சொல்லுதல். (தொ. பொ. 652 பேரா.)
வீரசோழிய உரைகாரர் கூறும் தந்திர உத்தி முப்பத்திரண்ட னுள் ஒன்று. செய்திகள் பலவற்றை வெவ்வேறு பயனிலை கொடுத்து ஒரு செய்யுளுள்ளேயே முடித்துக் கூறுவது.
எ-டு : ‘அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல்
பிறவினை எல்லாம் தரும்’ (கு. 321).
இதன்கண் அறவினை, கோறல் என இரண்டு எழுவாய்களும் முறையே கொல்லாமை என்ற பெயரையும், தரும் என்ற வினைமுற்றையும் பயனிலையாகக் கொண்டன. சேர்த்து எண்ணி முடிபு கொடுத்து நிறுத்தல் என்பது ‘தொகுத்துக் காட்டல்’ என்பதன் தொடர்ப்பொருள். ‘கொல்லாமை கோறல்’ தொகுத்து எண்ணப்பட்டன. இவை முறையே முடிக்கும் சொல்லாகவும், முடிக்கப்படும் சொல்லாகவும் முடிபு அமைந்தவாறு. (வீ. சோ. 180 உரை).
தொல்காப்பியம் கூறும் முப்பத்திரண்டு உத்திவகைகளுள் ஒன்று; பின்னர் விரிக்கப்பட வேண்டியவற்றை முதற்கண் தொகுத்துக் கூறுதல். (தொ. பொ. 665 பேரா.)
வகைபெறக் கூறல் வேண்டுமாயினும், அதனைத் தொகுத்துக் கூறுதல். அஃது ‘அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப’ (எழுத்து. 1) என்றாற் போல்வது. பல சூத்திரத்தான் கூறப்பட்ட பொருளை, “இத்துணையும் கூறப்பட்டது இது” என்று கூறுதலும் இதன்கண் அடங்கும். முன் ஆறு நூற்பாக்களில் விளக்கிய தூக்கு என்னும் செய்யுள் உறுப்பினை (தொ. பொ. 386-391 இள.) ‘தூக்கியல் வகையே ஆங்கென மொழிப’ (தொ. பொ. 392) என ஏழாம் நூற்பாவான் குறிப்பிடுதல் போல்வன இவ்வுத்தி வகைக்கண் அடங்கும். (656 இள.)
இனிப் பேராசிரியர் குறிப்பிடுமாறு
- எழுத்து முப்பத்து மூன்று, சொல் இரண்டு, பொருள் இரண்டு என ஆசிரியன் தானே தொகை கூறுதல் போல்வன. ‘னஃகான் ஒற்றே’ (தொ. சொல். 5) முதலிய பல நூற்பாக் களில் கூறப்பட்ட செய்தியை, ‘இருதிணை ... பதினோ ரெழுத்தும்’ (சொல். 10) என விரிந்தன தொகுத்தலும், ஒரு சூத்திரத்திலேயே, ‘அவ்வழி, அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும், என்றாற் போல விரிந்தனவற்றை, ‘ஆ வயின் மூன்றோடு அப் பதினைந்தும்’ (சொல். 162) எனத் தொகுத்துக் கூறலும் இவ்வுத்தியின் இனம் எனப்படும். (தொ.பொ. 665 பேரா.)
தொல்காப்பியம் ‘தொகுத்துக் கூறல்’ என்று குறித்த உத்தி வகையினை நன்னூல் ‘தொகுத்துச் சுட்டல்’ என்று பெயர் குறித்தது.
எ-டு : எழுத்திலக்கணம் இத்துணைத்து என்று தொகுத் துக்கூறும் ‘எண்பெயர் முறைபிறப்பு உருவம் மாத் திரை, முதல்ஈறு இடைநிலை போலி என்றா, பதம் புணர்ப்பு எனப் பன்னிரு பாற்றதுவே’ (நன். 57) என்ற நூற்பாப் போல்வன இத்தந்திர உத்தியின்பாற்படும். எழுத்திலக்கணம் பத்தும் இரண்டும் எனப் பன்னி ரண்டு பகுதித்து எனத் தொகுத்துச் சுட்டியவாறு காண்க. (நன். 14)
நூலுக்கு உரைக்கப்படும் பதினான்கு வகையான உரைகளுள் ஒன்று. தொகுத்துரையாவது சொற்றோறும் கூறும் பதவுரை யின்றிப் பொழிப்பாகத் திரட்டிக் கூறும் பொழிப்புரை. எ.டு. ‘அகர முதல’ என்னும் குறட்கு, “எழுத்துக்களெல்லாம் அகர மாகிய முதலையுடையன; (அது போல) ஆதிபகவனாகிய முதலையுடையது உலகு” என்றுரைப்பது. (நன். 21.)
தொகைச் செய்யுள் -
அளவான் நெடுந்தொகை எனவும் குறுந்தொகை எனவும், பாட்டான் கலித்தொகை எனவும் கூறப்படும் தொகைநிலைச் செய்யுள் பலவாம். ‘பலவாம்’ என்றதனான், வள்ளுவர் முப்பால், நாலடி, நான்மணிக்கடிகை, திரிகடுகம் சிறுபஞ்ச மூலம், ஏலாதி முதலாயின எல்லாம் ஆம் என்பது. (இ. வி. பாட். 57).
தொகைவிரி -
வழிநூலின் வகை நான்கனுள் மூன்றாவது. அஃதாவது முதல் நூலுள் விரிந்து கிடந்ததனைச் சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறலும், முதல் நூலில் தொகுத்துக் கூறப்பட்டு நுண்ணறிவினர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்காது நின்றதனை விளங்கும் ஆற்றான் விரித்துக் கூறலும் ஆகிய அவ்விரண்டு நெறியும் பற்றித் தொகுத்து முன் நிறுத்தி அந்நிறுத்த முறையானே பின் விரித்துக் கூறுதல். (தொ. பொ. 652 பேரா.).
இனி, நூல்யாப்பு நான்கனுள் ஒன்றாக நன்னூலார் இதனைக் குறிப்பர் (நன். 50) சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் வழிநூல் செய்யும் இவ்யாப்பிற்கு, தொல்காப்பியத் தில் ‘குற்றியலுகரப் புணரியல்’ என விரிந்து கிடந்ததனை நன்னூலார் உயிரீற்றுப் புணரியலுள் அடக்கியமையும், அந் நூலுள் சுருங்கச் சொல்லப்பட்ட வடசொல்லினைப் பதவிய லுள் விரிவாகக் கூறியமையும் எடுத்துக் காட்டாம் (நன். 50).
தொடர்ச்சொற் புணர்த்தல் (1) -
தொடர்புடைய சொற்களைச் சேர்த்து வைத்தல். இது நன்னூலார் கூறும் 32 உத்திகளுள் ஒன்று.
எ-டு:மூன்று புணரியலின்கண்ணும் நிகழும் சூத்திரங்கள். (நன். 14)
தொடர்ச்சொற் புணர்த்தல் (2) -
தொல்காப்பியம் குறிப்பிடாது நன்னூல் குறிப்பிடும் உத்திகளுள் ஒன்று; தொடர்பான செய்திகள் வெவ்வேறா யினவற்றை ஒரு நூற்பாவிலேயே இயைத்துக் கூறுதல்.
எ-டு : ‘எண்மூ எழுத்தீற்று ... இயல்பும்’
குறில் வழிய ... மிகலுமாம்’
ணள னல ... திரியும்’. (நன். 158)
இம்மூன்று திறமும் வெவ்வேறு செய்திகளாயினும், பொதுப் புணர்ச்சி என்ற இயைபு பற்றி ஒரு நூற்பாவின் கண்ணேயே கூறப்பட்டிருத்தல் இவ்வுத்தியாம். (நன். 14).
உத்தி - நோக்குக.
பழமையான காப்பியக்குடி; ‘காப்பியத் தொல்குடி கவின் பெற வளர்ந்து’ (சிலப். 30-83) என வருதல் காண்க. காப்பியக் குடியில் தோன்றித் தமிழிலக்கணநூல் இயற்றிய பெருமை தோன்ற, அக்குடிப் பெயராலேயே இவ்வாசிரியர் ‘தொல் காப்பியனார்’ எனப்பட்டார். இவரது இயற்பெயர் பற்றிய கருத்து வேறுபாடு சில உண்மையின், காரணப் பெய ராலேயே இவர் பெயர் வழங்குவது உணரப்படும்.
தொல்காப்பியத்துப் பொருளதிகாரத்து இறுதிஇயலாம் இஃது இருதிணைப் பொருட்குணனாம் இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையை யும், உயர்திணை நான்குசாதி பற்றிய மரபினையும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபினையும், அவை பற்றி வரும் உலகியல் மரபினையும், நூல்மரபினையும் உணர்த்துகிறது.
இரகுமரபில் அவதாரம் செய்த திருமாலுக்கு இராகவன் எனப் பெயர் எய்தியவாறு போல், தொல்காப்பியன் என்பது மரபு பற்றி வந்த பெயர். இவ்வாசிரியர் கவியின் மரபில் உதித்த சமதக்கினி இருடியின் மகனார் ஆகலானும்; அம்மரபில் வந்த இருடிகள் எல்லாருள்ளும் சிறந்தவர் ஆகலானும்; ஆரியமொழிக்கண் காவியன் எனவும், அப் பெயரே தற்பவமாகித் தமிழில் காப்பியன் எனவும் வழங்குதல் பொருந்தும் ஆகலானும்; ஆரிய மொழியுள் கவி என்பது பிரமனையும் அவன்வழி வந்த முனிவர் சிலரையும் பிறரையும் உணர்த்துமாகலின், அவருள் பிரமனை உணர்த்துமாறு ‘தொல்’ எனும் அடை புணர்த்துத் ‘தொல்காப்பியன்’ என வழங்கினமையானும்; ‘தொல்காப்பியன்’ என இவ்விலக்கண ஆசிரியனுக்கும் மரபு பற்றிய பெயராக வந்தது. (பா. வி. பக். 185, 186).
கூறியது கூறல், மாறுகொளக் கூறல், பொருளில கூறல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாகிப் பழித்தமொழியான் இழித்துக்கூறல், தன்னான் ஒருபொருள் கருதிக்கூறல், இன்னாவகையின் மனங்கோளின்மை என்பன வும் பிறவும் ‘தொலைவு’ எனப்படும் நூற்குற்றங்கள் ஆம். தொல்காப்பியம் ‘சிதைவு’ (மர. 108) எனச் சுட்டும் குற்றங்கள் இவை; ‘குன்றக்கூறல்’ (நன்.12) முதலாகிய ஈரைங் குற்றங்களும் இவை. (யா. வி. பக். 554).
ந
ஆசிரியன் அழுக்காறின்மை அவாஇன்மை உடையன். பெருக்கத்திற்குக் காரணம் அழுக்காறின்மையே, கேட்டிற்குக் காரணம் அவாஉடைமையே; இவையன்றி நண்பு பகை முதலிய பகுதிகள் காரணம் ஆகமாட்டா” என்பதனைச் சான்றோர் ஆம் நல்லாசிரியர் நன்கு உணர்வது இயல்பு. ‘கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக் - கோடாமை சான்றோர்க்கு அணி’ என்றார் தெய்வப்புலவர் ஆதலின், கேடு வாராமைப் பொருட்டும் பெருக்கம் வருதற்பொருட்டும் அவர் நெஞ்சம் கோடார்.
துலாக்கோல் ஒரு பக்கம் சாய்தற்குக் காரணம் அதன் தட்டில் வைக்கப்பட்ட பொருளது மிகுதியும் குறையுமே; நண்பு முதலிய பகுதிகள் காரணமாக மாட்டா. அம்மிகை குறைகளை நீக்கிச் சமன்செய்து சீர்தூக்குவதுஅல்லது நண்பு முதலிய பகுதிகள் பற்றித் துலைநா கோட்டம் செய்யாது.
இவை பற்றி நல்லாசிரியற்குத் துலைநா நடுவுநிலை பற்றி வந்த உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 72).
நண்பு நண்பன்மை என்னும் பகுதியும், மேல் மேலன்மை என்னும் பகுதியும், சுற்றமும் சுற்றமன்மை என்னும் பகுதியும், கல்வி கல்லாமை என்னும் பகுதியும் என அந்நான்கு வகையி னும் ஒருவன் வழுவாமல் ஒப்ப நிற்றல், நான்கு வகைப்படும் நடுவுநிலைமை என்பது. (பா. வி. பக். 71).
ஆசிரியன் மாணாக்கர்க்குப் பாடம் ஈதற்கு நால்வகைக் கருவி களாவன:
காரணமின்மையாகிய இயற்கையருள், குறிப்பறிந்தொழுகல் முதலிய பணிசெய்தல் பற்றியும், பொருள் முதலாயின கொடுத்தல் பற்றியும், இன்சொல் கூறுதல் பற்றியும், ஒன்றற்கு ஒன்று மிகும் தன்மையுடையனவாகிய மூவகைச் செயற்கை யருள் - என்பன. (பா. வி. பக். 124)
ஆத்திரையன் பேராசிரியன் கூறிய ‘வலம்புரிமுத்தின்’ என்னும் பொதுப்பாயிரத்தான் அறியப்படுவது.
வலம்புரி முத்தினைப் போன்ற நற்குடிப்பிறப்பும், ஆகாய கங்கையைப் போன்ற தூய்மையும், அவ்வாகாயகங்கை நிலவுலகிற்குப் பயன்படுமாறு இழிந்து வந்தாற்போன்று பிறர்நலம் கருதி நற்கருமம் புரியும் ஒழுகலாறும், பதினாறு கலையும் நிறைந்த முழுமதி போன்ற கல்வியும், திங்களும் ஞாயிறும் காலம் தவறாது உலகத்தார் கண்ணுக்குத் தோன் றிச் செயற்படுமாறு போலக் காலம் தவறாது செயற்படும் வாய்மையும், சிறிதும் குறைவில்லாத அழுக்காறின்மை என்ற பண்பும், பிறர்பொருளைக் கள்ளக் கருதாத உள்ளமும், துலாக்கோலின் நாவினை ஒத்த செம்மை யாகிய நடுவுநிலை மையும் - ஆகிய எண்வகை உறுப்பினையும் உடையனாகி, உறுதியாகப் பிறர்க்கு உதவும் வாழ்க்கையும், அதற்கேற்ற முயற்சியும், உலகியலை அறிந்து அதற்கேற்றவாறு நடப்ப தற்கு உளதாம் அறிவும், கல்விப் பொலிவோடு உருவின் மிக்கதோர் உடம்பும், போற்றாரையும் பொறுக்கும் பொறு மையும், மறை பிறர் அறியாமை நெஞ்சினை நிறுத்தற்கு உளதாம் நிறையும், மறக்கக் கூடாத கல்விச் செய்தியை மறவாமையும், கண்டார் போற்றத்தக்க அறிவும், வேண்டார் அஞ்சத்தக்க பீடும், பிறர் மதிக்கத்தக்க ஆற்றலும், அதனால் உளதாம் புகழும், சொற் பொருளைக் கேட்டார் உணரத்தக்க வகையில் அரிதாம் பொருளையும் எளிதாக்கி உள்ளத்தே பதியுமாறு கூறும் நாவன்மையும், தன்னிடம் கற்க வந்த மாணாக்கர் தன்பால் கற்றலையே பெரிதும் விரும்பும் வகையில் பாடம் சொல்லும் ஆற்றலும் ஆகிய தொன்மை மரபு கூறும் பெருஞ்சிறப்புடைய ஒருவனே நல்லாசிரியன் ஆவான்.
இனி, நல்லாசிரியன் இயல்பாக நன்னூல் கூறுவது வருமாறு:
உயர்குடிப் பிறப்பும், உயிர்களிடத்துக் கருணையும், தெய்வ வழிபாடும், பெருந்தகைமையும், பலவகைக் கலைகளையும் பயின்ற தெளிவும், எடுத்துக்கூறும் ஆற்றலும், நிலம் மலை துலாக்கோல் மலர் - என்னும் நான்கனையும் ஒத்த இயல்பும், உலகநடையை நன்கு தெரிந்துகொண்ட அறிவும், இவை போன்ற பிற நற்குணங்களும் அமையப்பெற்றவனே நூலை மாணாக்கர்க்குக் கற்பிக்கும் தகுதியுடைய நல்லாசிரியன் ஆவான். (நன்.26)
மலையும் நிலமும் பூவும் துலாக்கோலும் என்னும் நான்கும் ஆம்.
அளக்கலாகாத உயரமும் பரப்புமுடையதாய், பொருள் வளமுடையதாய், அசைக்கலாகாத நிலையுடையதாய், நெடுந்தொலைவினின்று காணப்படும் தோற்றமுடையதாய், மழையின்றி நிலமெல்லாம் வறண்டுபோயினும் தன்பாலுள்ள வர்க்கு நீர் தந்து உதவுவதாய் நிற்பது மலை. நல்லாசிரியனும் பிறரால் அளக்கலாகாத கல்விப்பரப்பும் கலைச்செல்வமு முடையனாய், வாதுபோரின்கண் பிறரால் அசைக்கப்படாத புலமை நிலையுடையனாய்,. நெடுந்தொலைவிலுள்ளா ராலும் அறியப்படும் கல்விப்பெருமையால் தோற்றமுடைய னாய், பொருட்செல்வம் வறந்த காலத்தும் தன்பால் பயிலும் மாணாக்கர்க்குக் கல்வித்திருவினை வழங்குதற்கண் சலியாமை யுடையான்.
முழுதும் தெரிதற்கரிய பெருமையுடையதாய், குலமலைகள் காடுகள் முதலியவற்றைத் தாங்கி நிற்கும் திண்மையுடை யதாய், தன்னை அகழ்வாரையும் தாங்கிக் கொள்ளும் பொறை யுடையதாய் பருவம் அறிந்து தன்பால் பயிர்த்தொழில் மேற்கொள்ளும் உழவர்க்கு அவர்தம் முயற்சிக்கு ஏற்பப் பயன் கொடுத்தலுடையதாய்க் கிடப்பது நிலம். நல்லாசிரியனும் பிறரான் வகுத்தறியப்படாத கல்விப் பெருமையுடையானாய், வாதுபோரில் தன்னைக் கல்வியான் வெல்ல வருவார்க்கு உள்ளம் கலங்காத உறுதிப்பாடுடையானாய், தன்னை யடுத் துள்ளோர் செய்த பிழை முதலியவற்றைப் பொறுத்தலுடை யானாய், ஏற்ற காலத்தே மாணாக்கர் மேற்கொள்ளும் முயற்சிக்கேற்பப் பயன் கொடுக்கும் பண்பினனாய்த் திகழ்வான்.
நற்காரியத்திற்கு மங்கலப்பொருளாய், எதற்கும் இன்றி யமையாததாய், யாவரும் விரும்பி மேற்கொள்ளுமாறு மென்மையுடையதாய், உரிய போதின்கண் மலர்ந்து தோன்று வது பூ. நல்லாசிரியனும் நற்காரியத்திற்கு ஏற்ற மங்கலம் புரிபவனாய், எவ்வினைக்கும் மேற்கோளாக இன்றியமையாத வனாய், யாவராலும் மகிழ்ந்து பாராட்டப்படும் வண்ணம் மென்மைக் குணம் மிக்கவனாய், உரிய காலத்தே மாணாக் கர்க்குப் பாடம் சொல்லுவதன்கண் முகமலர்ச்சியுடைய வனாய்க் காணப்படுவான்.
தன்கண் வைத்த பாரத்தை ஐயம் தீர வரையறுத்துக் காட்டுதலும், மெய்ம்மையான நடுநிலைக்கண்ணே நிற்றலும் உடையது துலாக்கோல். நல்லாசிரியனும் தன்பால் மாணாக் கன் வினவிய பொருளையும் தான் பாடம் சொல்லும் நூற்பொருளையும் ஐயம் தீர உணர்த்த வல்லனாய், மனக் கோட்டம் இல்லாது, பகை நண்பு நொதுமல் என்னும் முப்பகுதிதோறும் வழுவாமல் ஒப்ப நிற்கும் நடுவுநிற்றல் உடையனாய் விளங்குவான். (நன். 28, 27, 30, 29).
மாறனலங்காரம் சுட்டும் பத்துவகை அழகுகளுள் ஒன்று; கற்குந்தோறும் புதுவதாய் இன்பம் அளிப்பது. (மா. அ. 24)
பயில்வோர்க்கு இன்பம் பயப்பதாகிய இவ்வழகு, நன்னூல் குறிக்கும் பத்துவகை அழகினுள் ஒன்று. (நன் 13)
நன்னூல் கூறும் நூலழகு பத்தனுள் ஒன்று; நல்ல சொற்களைச் சேர்த்துவைத்தல். ‘செம்மை சிறுமை’ (நன். 135) ஓர் எடுத்துக்காட்டு. (நன். 13)
நல்ல நீர்; நன்மை என்னும் அடை ஈண்டு உவர்நீரை விலக்கி இனிய நீரை யுணர்த்திற்று; கற்பிக்கப்படுவோனாம் நன் மாணாக்கனுக்குச் சொல்லப்படும் ஆறு உவமங்களுள் ஒன்று. நன்னீர் தன்னிடம் எத்தன்மையர் தோய்ந்தாலும் அவர் மாசு நீக்குதலுடையது; நன்மாணாக்கனும் தன் உடன் பயின்றான் மனமாசு நீக்கற்குரியான். ‘நன்னீரம்’ என்றதனை ‘நன்னிறம்’ என்று பாடமோதிய இலக்கணவிளக்க நூலாரைச் சண்முக னார் மறுப்பர். நன்னிறம் என்ற பண்பு மாணாக்கன் என்ற பொருளுக்கு உவமமாதல் இயலாது, நல்ல நிறம் தீய நிறம் என்ற வழக்கு யாண்டும் இல்லையாதலின் என்பர். (பா. வி. பக். 139, 141)
நுதலிப் புகுதல், ஓத்து முறைவைப்பு, தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக் காட்டல், முடிவிடங் கூறல், தானெடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்சொற் புணர்த்தல், இரட்டுற மொழிதல், ஏதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந் தொழுகல், இறந்தது விலக்கல், எதிரது போற்றல், முன் மொழிந்துகோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்தும் என்றல், உரைத் தாம் என்றல், ஒருதலை துணிதல், எடுத்துக்காட்டல், எடுத்த மொழியின் எய்த வைத்தல், இன்னது அல்லது இதுவென மொழிதல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், பிறநூல் முடிந் தது தான் உடன்படுதல், தன்குறிவழக்கம் மிக எடுத்துரைத் தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல், உய்த்துணர வைப்பு என முப்பத்திரண்டாம். (நன். 14)
நன்னூலார், மாணாக்கரைத் தலை இடை கடை என மூவகைப்படுத்தி, அம்மூவகையினர்க்கும் முறையே அன்னம் பசு, மண் கிளி, இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி - என முத்திறங்களையும் உவமை கூறினார். இவ்வுவமை பொருந் தாமைக்குச் சண்முகனார் காட்டும் காரணங்கள் வருமாறு:
நன்னூலார் ஆசிரியனும் ஆசிரியனாகாதானும் என மேல் ஆசிரியரை இருபகுதியாக்கிக் கூறினாற்போலவே, ஈண்டும், மாணாக்கனும் மாணாக்கனாகாதானும் என மாணாக்கரை இருபகுதியாக்கிக் கூறலே முறை; தலை இடை கடை என முப்பகுதியாக்கி மொழிதல் முறையாகாது.
மாணாக்கரை முப்பகுதியாக்கிக் கூறியவர்க்கு, ஆசிரியரையும் அவ்வாறே முப்பாலாக்கிக் கூறலே முறை.
மாணாக்கரை முப்பாலாக்கிக் கூறியவர், மாணாக்கரல்லா தாரையும் முப்பாற்படக் கூறலே முறை; களிமடி மானி எனப் பகுப்பின்றிக் கூறியது முறையாகாது.
ஆசிரியர்க்கு உவமமாகக் கூறிய நிலனையே ஈண்டு ‘மண்’ என இடைமாணாக்கர்க்கு உவமம் கூறுதல் பொருந்தாது.
நிலம் பலதன்மைகளுடையது ஆதலின், தெரிவரும் பெருமை முதலாக அத்தன்மைகளை நல்லாசிரியர்க்கு உவமமாக நிலனுக்குக் கூறியவர், இடைமாணாக்கர்க்கு உவமமான மண்ணுக்கு ஏற்ற தன்மைகளை கூறாது விடுத்தார்; விடுப்பவே, தெரிவரும் பெருமை முதலான தன்மைகளே ஈண்டு மண் ணுக்கும் பொருந்தும் எனப் பயில்வோர்க்குப் பொருள் மயக்கம் நிகழும்.
கிளியினை அன்னத்தினும் சிறப்புடைத்தாக முன்னோர் கூறினார். அதற்கு முரண்பட, ‘கிளந்தவா கிளப்பது’ என்னும் ஒப்புமைக்குணமாகாத ஒன்றனை நன்னூலார் தம் மனத்துள் கொண்டு, அன்னத்தைத் தலைமாணாக்கர்க்கும், கிளியை இடை மாணாக்கர்க்கும் உவமம் ஆக்கியமை பொருந்தாது.
இல்லிக்குடம் எத்தனை முறை நீர்பெய்யினும் நீரை முற்றும் ஒழுக விடுதலால் பயன்படாமையின் அதனை மாணாக்க ரல்லாதார்க்கு உவமமாக்கல் ஒருவாறு பொருந்தின் பொருந்தலாம் அன்றி, கடைமாணாக்கர்க்குப் பெறப்படுவ தொரு குணஒப்புமை இன்றாய் முடியும். ஆகவே ‘இல்லிக் குடம்’ என வாளா கூறியமை உவமம் ஆதற்கு இல்லை.
யாடும் எருமையும் மாணாக்கராகாதவர்க்கு உவமமாம் என முன்னோர் கூறியிருப்பவும், நன்னூலார் அவற்றைக் கடை மாணாக்கர்க்கு உவமமாகக் கூறினார். அது ‘முன்னோர் நூலின் முறையே நன்னூற், பெயரின் வகுத்தனன்’ என்ற சிறப்புப் பாயிரத்திற்கு முரணாம். (பா. வி. பக். 153, 154.)
நாகு -
எருமை, மரை, பெற்றம் என்பவற்றின் பெண்மைமரபு பற்றி வரும் பெயர்; நீர் வாழ்வனவற்றுள் நந்து என்னும் சங்கினத் தின் மரபு பற்றிய பெயராதற்கும் உரியது. (தொ. மர. 62, 63.)
நால்வகை நூல்கள் -
அவையாவன இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயப்பதாய அறநூலும், இம்மை மறுமை என்னும் இரண்ட னையும் பயப்பதாகிய பொருள்நூலும், இம்மையே பயப்பதாகிய இன்ப நூலும், அம்மூவகை நூலின் சொல்லை யும் பொருளையும் உள்ளவாறு அளந்து காட்டும் கருவி நூலும் என்பன. (பா. வி. பக். 62,63)
உற்றுணர்வும், நாவுணர்வும் மூக்குணர்வும், கண்ணுணர்வும் ஆகிய நான்குணர்வும் உடையன நாலறிவுயிர்களாம். அவை நண்டும் தும்பியும், அவற்றுக்குக் கிளையாவன வண்டு தேனீ குளவி போல்வனவும், பிறப்பான் ஒத்த பிறவும் ஆம். (தொ. மர. 31 பேரா).
முன்னர் ஒன்றனால் முடியவைத்துப் பின்னும் அதனையே எடுத்துக்கொண்டு விதிமுகத்தான் விலக்குவதும், விலக்கும் வகையான் விதிப்பதும் செய்யும் சூத்திரம். (யா. க. பாயிர உரை)
எ-டு : ‘உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே
அப்பொருள் இரட்டாது இவணை யான’ (தொ. எ. 80 நச்)
‘உப்ப காரமொடு’ என்று, முன்னர் 76ஆம் நூற்பாவில் கூறியதனொடு ஞகார இறுதியை மாட்டெறிந்தார்; ‘அப் பொருள் இவண் இரட்டாது’ என, உப்பகாரத்திற்கு ஓதியதனை (76), ஈண்டு விலக்கி விதித்தார்.
பெற்றதற்குவத்தல் (- விதிவயத்தால் தான் அடைந்தவற்றுக்கு மகிழ்தல்), பிழம்பு நனி உலர்த்தல் (-நூல் சொல்லியவாறு கிருச்சிர சாந்திராயணம் முதலிய விரதங்களான் உடலை யுலர்த்தி உற்ற நோய் நோன்று தவம்செய்தல்), கற்பன கற்றல் (-கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டு, அதனை ஓர்த்து உள்ளம் உள்ளது உணர்தல்), கழிகடுந்தூய்மை (-மண் முதலானவற் றான் நீரினானே புறம் மாசின்றாக உடலை மண்ணுதலும், ஆசையின்மை என்னும் மண்ணான் அரிய வாய்மைப் புனலினாலே, மாசின்றாக மணத்தை மண்ணுதலும் செய்த லான் வருவது), பூசனைப் பெரும்பயம் ஆசாற்கு அளித்தல் (-பிறர் தனக்கு வழிபாடு செய்தலான் வரும் பயன்களைத் தன் ஆசிரியனுக்குக் கொடுப்பது) என்பனவாம். (பா. வி.பக். 39, 40)
தெரிதற்கரிய பரப்புப்பெருமையும், திண்மையும், பொறுமை யும், உழவர் தன்பால் பருவ மறிந்து முயன்ற முயற்சியின் அளவு பயன் கொடுத்தலும் நிலத்தின் இயல்பாவன. நல்லாசிரியரும் அருங் கல்விப்பரப்புத் தம்பால் உடைமையும், பிறரால் வாதுபோர் செய்து அசைக்க முடியாத புலமைத்திண்மை, மாணாக்கர் பிழையைப் பொறுத்தல், மாணாக்கர் உரிய பருவமறிந்து முயன்றமைக்கு ஏற்பப் பயன் உதவுதல் என்று மிவற்றையுடை மையும் தம் இயல்பாக உடையர். (நன். 27)
நிலத்துக்குச் சொல்லப்பட்ட தெரிவரும் பெருமை முதலா யின மலைக்கும் உரியன; மலைக்குச் சொல்லப்பட்ட அளக்க லாகா அளவு முதலாயின நிலத்துக்கும் உரியன. நிறைகோற்குச் சொல்லிய நடுநிலையே ஐயம் தீர்த்தலாக முடிதலின் இரண்டும் இருவேறு குணம் ஆகா. பூவிற்குச் சொல்லிய இயல்புகளும், பூ மங்கல வினைக்கே அன்றி மங்கலமாகாத பிணவினை முதலாயவற்றிலும் சூட்டப்படுதலாலும், பூ இன்றியே வெற்றிலை பாக்கும் சந்தனமும் மஞ்சளும் முதலா யின கொண்டும் சில மங்கலவினை நடைபெறுதலாலும், துறந்தாரும் அமங்கலியரும் முதலாயினோர் பூவினை மகிழ்ந்து மேற்கோடல் இன்மையானும், பொருந்தமாட்டா. (பா. வி. பக். 132, 132)
‘நிலம் நல்லாசிரியர்க்கு உவமம் ஆதல்’ காண்க. (நன். 27)
தன்னிடத்து வைக்கப்பட்ட பாரத்தை ஐயம்தீர வரையறுத்து உணர்த்துதலும், பாரம் வைக்கப்படாவிடத்துத் தான் முதற்கண் நடுவுநிலையில் நிற்றலும், பாரத்தை வரையறுக்கு மிடத்தும் ஒருபால் கோடாது நடுவு நிற்றலும் எனுமிவை. (நன். 29)
நூற்குற்றம் பத்தனுள் ஒன்றாக நன்னூல் கூறுவது. அஃதாவது சொல் அல்லது சொற்றொடர் பொருட்பேறின்றி நிற்றலா கிய குற்றம். (நன். 12.)
பற்றற்றானை யாதானும் ஓர் உருவத்தாயினும் உருவம் அன்றி யாயினும் உள்ளத்து இருத்தி, யாதாயினும் ஒரு மந்திரத் தாயினும் மந்திரம்அன்றியாயினும் கருதுதல். உருவத்தால் குறித்தல் சகுண தியானம்; அருவத்தால் குறித்தல் நிர்க்குண தியானம்; மந்திரம் கோடல் சகற்பம்; மந்திரமின்மை அகற்பம். (பா. வி. பக். 42.)
நூலுக்கு உரைக்கும் நால்வகை யுரையுள் ஒன்று; நுண்ணிய ஆராய்ச்சி தோன்ற உரைப்பது; மாறுபடத்தோன்றும் கடாவினைக் காரணம் காட்டி மறுக்கும் உரை. (இறை. அ. 1 உரை)
நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு தந்திர உத்திகளுள் ஒன்று; சொல்லப்புகும் செய்தியை முதற்கண் சுட்டிப் பின் விளக்கப் புகுவது. (நன். 14)
எ-டு : ‘பூமலி அசோகின் . . . . . . . . . . . . நன்கியம்புவன் எழுத்தே’ (நன். 56)
இது தொல்காப்பியம் சுட்டும் உத்திவகை முப்பத்தி ரண்டனுள் ஒன்று.
சூத்திரத்தொடரை வெளிப்படையாக நோக்கின் பயனில்லது போலத் தோன்றினும், அதற்கேற்ற வகையான் கருதி உணரப் படும் பொருள் இன்னது எனக் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)
எ-டு : ‘வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்’ (தொ. சொ. 46)
என்பது கிளவியாக்கத்துள் “வழுவற்க” என்பதற்கு எழுந்த நூற்பா என்றறிதல் போல்வன. ஓத்து நுதலியதும், ஓத்துள் சூத்திரம் நுதலியதும் போல்வன நுதலியது அறிதலின் பகுதியாய் அடங்கும். இந்நுதலியது அறிதல் நூலின் வேறாய பாயிரத்தும் வரும் என்பதனான் இது முதற்கண் வைக்கப் பட்ட உத்திவகையாம். (பேரா)
சூத்திரத்தில் சொன்ன பொருள் உணர்த்தலன்றி இதன் கருத்து இது என உணர்த்தல். (656 இள.)
எ-டு : ‘எழுத்தெனப் படுப
அகரமுதல் னகரஇறுவாய்
முப்பஃ தென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே’ (தொ. எ. 1)
என்ற நூற்பா எழுத்து இனைத்து என வரையறுத் துணர்த்தல் நுதலிற்று என்று கருத்துரைத்தல் போல்வன.
(இக்கருத்தைப் பின்பற்றியே நன்னூல் ‘நுதலிப் புகுதல்’ எனவும், மாறனலங்காரம் ‘உள்ளிய துணர்த்தல்’ எனவும் நுதலியது அறிதலைக் குறிப்பிடும்.)
இறைவன் அருளிய நூல்வழி வருவன எல்லாம் வழிநூல்களே யாம். பரம்பொருளாகிய இறைவன் தன்னை வழிபட்டார் வேண்டுவனவற்றை வேண்டியவாறு அருள்பவன் ஆதலின், அவனருளான் செய்ததனையே முதல்வன் கண்ட நூல் என்றும், அங்ஙனம் அவ்வாசிரியனான் செய்தளிக்கப்பெற்ற முதனூற் பொருளைத் தொகுத்தும் வகுத்தும் தொகைவிரி யாகச் செய்தும் அவ்வக்காலத்தார் பயன் கொள்ளும் வண்ணம் வழிவழியாகச் செய்யப்படும் வழிநூல்களுள் ஒன்றனை முன்னதற்கு வழிநூலாகவும் பின்னதற்கு முத னூலாகவும் சொல்லுதற்கு ஏற்றலான், ஒன்று ஒன்றனை நோக்க முதல்நூல் என்றும் வழிநூல் என்றும் கருதிக் கொள்ளப்படும். (தொ. மர. 92 ச. பால)
நூற்பாக்களில் சொல்லப்பட்ட கருத்து. இது சிறப்புப்பாயிரம் நுவலும் செய்திகளுள் ஒன்று. (நன். 47)
நூலைப் பாடம் சொல்லும் ஆசிரியன். (நன். 3)
ஆசிரியன் மாணாக்கற்குப் பாடம் சொல்லும் கூறுபாடு. அவ்விலக்கணம் நன். 36ஆம் நூற்பாவால் விளக்கப்பெறும்.
ஆசிரியன் மாணாக்கர்க்குப் பாடஞ்சொல்லுந்திறமாவது, இரு திறத்தார்க்குமுரிய காலத்தையும் இடத்தையும் நன்கு ஆராய்ந்து கொண்டு, மேம்பட்ட இடத்தே வீற்றிருந்து, தான் வழிபடும் கடவுளைத் துதித்து, தான் பாடம் சொல்லப்புகும் நூற்பொருளை முன்னமேயே மனத்தின் சிந்தித்து முறையே கொண்டு, விரைவுபடாமலும் வெகுளாமலும் முக மலர்ச்சி யுடையனாகி, மாணாக்கன் தான் பாடம் சொல்லுவதை மனத்திற் கொள்ளும் திறத்தினை யுணர்ந்து, அவ்வாறே நல்ல மனத்தோடே நூற்பொருளைக் கற்பித்தலாம். (நன். 36)
இலக்கணம்; ஒத்த சூத்திரத்தினை உரை நடாத்தல் வேண்டிய விடத்துப் பிறந்த காண்டிகையும் அக்காண்டிகை யாலும் விளங்காதவிடத்து அதனையும் விளங்கக் கூறும் விசேடவுரையும் உடைத்தாய், பத்துவகைக் குற்றமும் இன்றி, நுண்பொருளை யுடையனவாகிய முப்பத்திரண்டு உத்தி வகையொடு பொருந்தி வருவது. (தொ. பொ. 653 பேரா.)
நூல் என்று சொல்லப்படுவது முன்னும் பின்னும் மாறு படாது, தொகுத்தும் வகுத்தும் பொருள்காட்டி, அடங்கி நின்ற பொருள் விரித்துச் சொல்லப்பட்டு, பருப்பொருட் டாகாது நுண்பொருட்டாகப் பொருளை விளக்குவது. (தொ. செய். 166 பேரா.)
நூல் என்று சொல்லப்படுவது தான் நுதல எடுத்துக் கொண்ட பொருளை முதற்கண் விளங்கச் சுட்டி, ஓத்துக் களையும் அவற்றுள் சூத்திரங்களையும், முறையாக நிறுத்தி, முதல் வழி சார்பு என மூவகை மரபினையுடையதாய், தொகை வகை விரி என்னும் முறையான் செய்திகளை வசையற ஆராய்ந்து கூறி, ஞாபகத்தானும் செம்பொருளானும் பொருளையுணர்த்தவல்ல யாப்புநெறி யுடைத்தாய், முன்பின் தொடர்பு அமைதியுடைத்தாய், சொல்லப்படும் பொருளை யெஞ்சாமல் தன்னகத்தே கொண்டு, தன்னகத்துச் செய்திக்குப் பிறிதொரு நூலினை அவாவாமல் முற்றுவது. (இறை. அ. 1. உரை)
பத்துக் குற்றமுமின்றி, முன்னோர் வகுத்த முறையானே பிறழ்ச்சியின்றி, ஓத்து-படலம்-சூத்திரம்-காண்டிகை-விருத்தி- முதலாக ஆராயப்பட்ட வகையாகப் புணர்த்து அமைவது நூலாம். (மா. அ. 6)
‘உத்தி’ காண்க.
தன் மகன், தன் ஆசாற்கு மகன், தன் மன்னவற்கு மகன், நிறையப் பொருள் கொடுப்பவன், தன்னை வழிபடுவோன், தான் பாடம் சொல்லியவற்றை மறவாதவனாகிய உரை கோளாளன் என்னும் இவ்வறு வகையாருள் நூலுரைக்கத் தக்க மாணாக்கர் அடங்குப. மேலும், செம்மையாக உணர வல்லான், பொய்யாயவற்றை நீக்கி மெய்ப்பொருளையே காணவல்லான், பலதிறப்பட்டகருத்து வேறுபாடுடைய உரைகளையும் கேட்பான், ஆசானிடத்தும் நூற்கல்வி கேள்வியிடத் தும் தீராத காதலுடையான், ஆசானைத் தெய்வம் போலவே நன்கு மதிப்பான், எக்காலத்தும் தாமத குணவயப்பட்டுத் திரிபுணர்ச்சியில்லாதான் - என இவ் ஆறு மாண்பும் ஒருங்கே யுடையவராயும் நூலுரைக்கத் தக்க மாணாக்கர் அமைப. (பா. வி. பக். 134, 135)
நூல் உரைப்போன் -
பாடம் சொல்லும் ஆசிரியன்.
நூல் உறுப்பின் வகை -
சூத்திரத்தானும், ஓத்தினானும், படலத்தானும், பிண்டத்தா னும் இயலுதல் பற்றி நூல் நான்கு வகைப்படும். (பா.வி.பக். 109)
நூல் எச்சம் -
எழுவகையான் உரைக்கப்படும் சூத்திர உரையுள் ஒன்று; இசையும் குறிப்புமாகிய எச்சங்களைப் புலப்படுத்தி உரைப் பது போலும். நூலுரை வகையாக மயிலைநாதரும் (நன். 20) சுட்டுவர். (யா. க. பாயிரம். உரை)
நூல் எனும் பெயர்க் காரணம் -
பஞ்சு கொண்டு கதிரினால் இழைத்து நூற்கப்படும் நூல் போலச் சொற்கொண்டு மதிவன்மையால் தொகுத்து அமைக்கப்படுவது நூல்.
மரம் முதலியவற்றின் கோட்டத்தைத் தீர்த்துச் செப்பம் செய்யும் எற்று நூல் போல, மனத்தினது கோட்டமாகிய அறியாமையைத் தீர்த்துச் செம்மை செய்வது நூலாம்.
நூல் போலுதலின், இலக்கணம் நூலெனப்பட்டது; உவம ஆகு பெயர். (நன். 24, 25)
“நூல் போறலின் நூலென்ப; பாவை போல்வாளைப் பாவை என்றது போல. என்னை? நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளான் கைவல்மகடூஉத் தனது செய்கைநலம் தோன்ற ஓரிழைப் படுத்தலாம், உலகத்து நூல் நூற்றல் என்பது; அவ்வாறே, சுகிர்ந்து பரந்த சொற்பரவைகளான், பெரும் புலவன், தனது உணர்வு மாட்சியின், பிண்டம் படலம் ஓத்துச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்து நூற்கப்படலின் என்பது. இனி ஒருசாரார், நூல் போலச் செப்பம் செய்தலின் நூல் என்ப. இனி, தந்திரம் என்னும் வடமொழிப் பொருளை நூலென வழங்குதல் தமிழ்வழக்கெனக் கொள்க. இது நூல் என்ற சொற்குப் பொருள்” என்பது இறையனார் அகப் பொருள் உரை.
நூற்பொருள் பற்றிய அறிவு குற்றமற உடையோனாய், முதனூற் செய்தியை உணர்ந்து மனம் கொள்ளும் பயனை ஆராய்ந்து, உலக வழக்கினது திட்பம் தெளிந்து, இருவகை வழக்கினையும் உணர்ந்தோனே அவ்வறிவு தோன்ற நூல் செய்தற்குரியான்.
சூத்திரமும் உரையும் என்று சொல்லப்பட்ட அவ்விரு திறத்தினையும் பகுதிப்படப் படைத்தலும் உரைத்தலும் ஆகிய இவ்விரண்டும் நூல் செய்யுமாறு என்ப, நூற்பயனை நுனித்த நுண்ணறிவுடையார். (பா. வி. பக். 111)
பிறர்க்குத் தோன்ற மாட்டா நுண்பொருள்களையெல்லாம் தான் தோன்றச் செய்து பல துறைகள் அமையப் பெரு நூலைச் செய்து முடிப்பினும், அந்நூலாசிரியன், தனது புகழாகிய சிறப்புப் பாயிரத்தைப் பாடித் தற்புகழ்ந்து கோடல் தக்க தன்றாம். ஆகவே பிறர் அது கூற வேண்டும். நன். 52 (தொ. எ. 1. இள)
பாவை போல்வாளைப் பாவை என்றாற்போல, நூல் போல் வதனை நூல் என்ப. நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளான் கைவன் மகடூத் தன் செய்கை நலம் தோன்ற மாண்பினான் ஓரிழைப்படுத்தலே நூல் நூற்றலாம். அவ்வாறே பிளவு பட்டுப் பரந்த சொற்கடல்களான் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியினான் சூத்திரம் - ஓத்து - படலம் - பிண்டம் - என்னும் யாப்பு நடைபடக் கோத்து அமைப்பது நூலாம்.
1. நூலின் அழகு, 2. கல்விநயம். (யா.க. பாயிரம். உரை).(L)
சில நூற்பாக்களை வாசித்த அளவில் பொருள் புலனாகா ஆயின், முன்னும் பின்னுமுள்ள நூற்பாக்களின் துணை கொண்டு அவற்றின் பொருளைத் துணிக. வெளிப்படாத விதிகளை, கூறியது கொண்டு அதனொடு தொடர்புடைய கூறாததனையும் கொள்ளும் வாய்ப்பாகிய உபலக்கணத்தால் ஆய்ந்து உணர்க. ஒரு நூலில் சுட்டப்படும் விதி தான் கற்ற நூல்களில் காணப்படும் விதிக்கு மாறாக இருப்பின், இவ்விதி வேறொரு நூற்கருத்தினை உட்கொண்டு சொல்லப்பட்ட தாக மாணாக்கன் கருதுக. சில நாள் பழகின் கூரிய அறி வுடையராயினும் பலியா; பல நாள் பழகின் மந்தராயினும் பலிக்கும். விரைந்து வாசித்துக்கொண்டேபோயின், செய்திகள் அறிவு கூரியோருக்கும் தெளிவாகப் புலனாகா; நிதானித்து வாசிப்பின் அவை மந்தருக்கும் புலனாகாமல் போகா. இனிக் கற்க வேண்டியதன்கண் உள்ளத்தை மிகச் செல்லவிடாது, கற்றதன்கண் செலுத்திச் செய்திகளை நன்கு உளம் கொள்க. நூலினை உரையொடு பலகாலும் விரைந்து கற்பதனைவிட, நூற்பாவினைப் பலமுறை பார்த்துப் பொருளை வரம்பு செய்தல் மிக்க தெளிவைத் தரும். ஆசிரி யற்கேயாயினும் வேற்றுச் செய்திகளில் மனம் ஈடுபட்ட விடத்தே அது கல்விக்கண் அழுந்தாது ஆதலின், அவன் அச்செய்தியில் ஈடுபாடு தீர்ந்த பின்னரே கல்விக்கண் ஈடுபடு தல் வேண்டும். (ஆசிரியற்கே இந்நிலை என்றபின், மாணாக் கற்குச் சொல்ல வேண்டுமோ என்பது) உடலோடு அழியும் சாதி செல்வம் முதலியவற்றது உயர்ச்சியினும் உயிரொடு செல்லும் கல்வியது உயர்ச்சி மேம்பட்டது ஆதலின், அதற்கு இன்றியமையாததாகிய ஆசிரியனை வழிபட்டு அவன் கருத்தின்வழி ஒழுகுதல் மாணாக்கற்கு மிகவும் வேண்டற் பாலது.
உரையில் பழகுதலைக் காட்டிலும் சூத்திரத்தில் மிகவும் பழகுதலும், தனக்குரிய நாட்டை விட்டுக் கற்றற்கு மறு நாட்டிற் செல்லுதலும் முதலாக, இன்னும், நூல் கற்றற்குரிய கருவிகள் பல உள. (இ. கொ. 8, 9).
நூல் பயிலத்தக்க நன் மாணாக்கர், “எம்மினும் கடையார் இலர்” என்று கருதி, இறுமாப்பு இன்றி, நற்குலம். நற்குணம் நற்கலை நற்றவம் உடையவர்களை இகழாது பணிந்து ஒழுகி, பழி பாவங்களை அஞ்சி, புண்ணியம் புகழ் அறங்களைப் போற்றி, பிறப்பு இறப்புக்களில் இனி அகப்படாது அஞ்சித் தப்பி ஓடி, பசு தன்னை இரை அருத்தியவர்க்குப் பயன் கொடுப்பது போலத் தாமும் கல்விப்பயன் கொடுப்பார் ஆவர். (இ. கொ. 10)
நூல் பயிலத்தகாத தீ மாணாக்கர். “எம்மினும் உயர்ந்தோர் இலர்” என்று கருதி, இறுமாப்பு மேற்கொண்டு, நற்குலம் நற்குணம் நற்கலை நற்றவம் உடையவர்களை இகழ்ந்து பணியாது ஒழுகி, பழிபாவங்களைத்தேடி, புண்ணியம் புகழ் அறங்களைப் போக்கி, பிறப்பு இறப்புக்களில் மீண்டும் உழலுதற்கு ஏதுவான தீவினை செய்து, பாம்பு தன்னை இரை அருத்தியவர்க்கு விடம் கொடுப்பது போலத் தாமும் செய்ந் நன்றி கொன்று, கொடுமையே புரிந்து வாழ்வார் ஆவார், நூல் பயிலத் தகாதோர். (இ. கொ. 10)
நூற்பயிற்சி செய்யும் தன்மைகளாவன: உலகவழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இருவகை வழக்கினையும் அறிதல், மூலபாடங் களை மறவாமை, ஆசானிடத்துக் கேட்ட நூற்பொருளைப் பலகால் சிந்தித்தல், ஆசானை அடுத்து முன் பாடம் கேட்ட வற்றைக் குறைவு தீர மனத்தில் படியுமாறு மீண்டும் கேட்டல், ஏனைய மாணாக்கரொடு பழகுதல், தான் ஐயுற்ற பொருள் களை அவர்களை வினவி அறிதல், அவர்கள் தன்பால் வினவியவற்றிற்குத் தான் விடை கூறுதல் என்பனவாம். இவற்றை மாணாக்கன் தனக்கு முறைமையாகக் கொள்ளின் அவனது அறியாமை மிகவும் நீங்கும். (நன். 41)
நூல் யாக்கப்படும் அமைப்பு; விரிந்து கிடந்த முதல்நூற் செய்திகளைத் தொகுத்துக் கூறுதல், ஆண்டுத் தொக்குக் கிடந்த செய்திகளை விரித்துக் கூறுதல், சிலவற்றைத் தொகுத்தும் சிலவற்றை விரித்தும் கூறுதல், ஒருமொழியி லுள்ள நூலை மற்றொரு மொழியிற் பெயர்த்துக் கூறுதல் என இது நான்கு வகைப்படும். நூல்+யாப்பு - இடையே இகரச் சாரியை பெற்று ‘நூலியாப்பு’ எனப் புணரும்.(நன். 50)
1. செய்யுள் வழக்கு 2. சாத்திரமுறை. (சீவக. 214 உரை) (L)
சுருங்கச் சொல்லுதல், சொற்கள் சுருங்கச் சொல்லினும் பொருள் நன்கு விளங்க வைத்தல், படிப்பவர்க்கு இன்பம் தருதல், நல்ல சொற்களைப் புணர்த்தல், சந்த இன்பம் உடையதாதல், ஆழ்ந்த கருத்துக்களையுடையதாதல், படலம் ஓத்து சூத்திரம் என்னு மிவற்றை ஏற்ற முறைப்படி வைத்தல், உயர்ந்தோர் வழக்கத்தொடு மாறுபடச் சொல்லாமை, சிறந்த பொருளைப் பயத்தல், எளிதில் விளங்கத்தக்க உதாரணங் களை உடையதாதல் - என்னும் இவை. (நன். 13)
இலக்கணநூலை இயற்றியோன். (அதனைப் பாடம் சொல்லு வோன் நூலுரை ஆசிரியன்) (L)
‘நூல்’ காண்க.
ஒரு நூலினை ஒருமுறை பாடம் கேட்ட மாணாக்கன், மீண்டும் ஒரு முறை கேட்பானாயின், அவன் அந்நூற்கண் பிழைபடுதல் மிகவும் இலன் ஆவன். (மூன்றாம் முறையும் கேட்பானேல், தான் முறை அறிந்து பிறர்க்குச் சொல்ல வல்லனாம்.) (நன். 42)
மரபு நிலையில் திரியாதவாறு எல்லாரானும் உரைக்கப்படும் நூல். முதல்நூல் எனவும் வழிநூல் எனவும் கருதிக் கொள் ளும் அடிப்பாட்டான் இருவகைப்படும். (தொ. பொ. 648 பேரா.)
ஒரு பொருள் நுதலிய சூத்திரம், இனமொழி கிளந்த ஓத்து, பொதுமொழி கிளந்த படலம், மூன்று உறுப்பு அடக்கிய பிண்டம் என நூலின் பகுதிகள் கூறப்படும். பிண்டத்தை உள்ளடக்கிய பிண்டி என்பதும் உண்டு.
சூத்திரம் மாத்திரம் அமைந்த நூல் - இறையனார் அகப்பொருள்
சூத்திரமும் ஓத்தும் அமைந்த நூல் - யாப்பருங்கலம்.
சூத்திரம், ஓத்து, படலம் மூன்றும் அமைந்த நூல் - தொல் காப்பியம், நன்னூல்.
பிண்டத்தை அடக்கிய பிண்டி - அகத்தியம் (இயல், இசை, நாடகம் என்ற மூன்று பின்டத்தையும் அடக்கியது.) (தொ. செய். 168).
‘நூலின் இருவகை’ காண்க. சார்பு நூல் என மூன்றாம் வகை கூறப்படுவது தொல்காப்பியர்க்கு உடன்பாடன்று என்பது பேராசிரியர் உரை. (தொ. மர. 648).
பிற்காலத்தார் முதல்நூல் வழிநூல் சார்புநூல் என மூன்றாகக் கூறுப. (நன். 5)
இலக்கணம் என்று பொருள்படும் நூல், முதல் வழி சார்பு என மூவகைப்படும். (யா. க. பாயிரம் உரை)
நூல் பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரங்களையும் முன்னேயுடையதாய், முதல் வழி சார்பு என மூவகையுள் ஒன்றாய், நால்வகை உறுதிப்பொருள்களாகிய பயனைத் தருவதாய், எழுவகை மதங்களையும் தழுவி, பத்து வகைக் குற்றங்களையும் நீக்கிப் பத்துவகை அழகுடன் அமைந்து, முப்பத்திரண்டு உத்திகளைக் கொண்டு, ஓத்து படலம் என்னும் உறுப்புக்களோடு, அவற்றுள் சூத்திரங்களைக் கொண்டு, காண்டிகையும் விருத்தியும் ஆகிய வேறுபட்ட நடைகளைப் பெற்று வரும். (நன். 4)
‘நூல் உரைக்கத் தக்கார்’ காண்க.
ஒரு நூற்கு, அந்நூற்கு முதனூலும், அந்நூல் செய்தோனும், அந்நூலின் அளவும், அந்நூலுள் சொல்லப்பட்ட மிகுதி யான பொருளும், முழுமைப் பொருளும், அந்நூலாசிரியற் குப் பொருளுதவி செய்தல் முதலியவற்றால் அதனைச் செய்வித் தோனும், அந்நூலின் தன்மையும் (-குணமும்) இவை முதலாகிய காரணங்களானும், காரணம் கருதாது இடுகுறி யானும் பெயர் எய்தும்; நூலின் தொடக்கமாகிய முதற்குறிப் பினாற் பெயர் எய்துதலும் சிறுபான்மை.
இவற்றுக்கு எடுத்துக்காட்டாக முறையே தமிழிலுள்ள இராமாயணம், பாரதம்; அகத்தியம், திருவள்ளுவர்; பன்னிருபடலம், நாலடி நானூறு; (இறையனார்) களவியல்; அகப்பொருள்; இளந்திரையம்; சிந்தாமணி, நன்னூல்; கலைக்கோட்டுத்தண்டு - எனக் காண்க. ஆத்திசூடி, கண்ணி நுண் சிறுத்தாம்பு முதலியன முதற்குறிப்பினாற் போந்த பெயர்கள். (நன். 49)
குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களின் குறைவு படக் கூறுதல், அவற்றின் மிகுதிப்படக் கூறுதல், பயனின்றி முற் கூறியதனையே மீண்டும் கூறுதல், முன் கூறியதற்குப் பிற்கூறியது மாறுபடக் கூறுதல், குற்றமுடைய சொற்களைப் புணர்த்தல், பொருள் இதுவென துணியக் கூடாதவாறு மயங்கக் கூறுதல், பொருளாகிய கருக்கொள் ளாது வெளிறு படக் கூறுதல், சொல்லப்புகுந்ததனைச் சுருங்க வுரைத்துவிட்டு இடையே தொடர்பில்லாததனை விரித்துக் கூறுதல், நூல்தொடக்கம் முதல் முடிவுகாறும் சொற்செறிவு பொருட் பொலிவு தொடரப் பெறாது செல்லச்செல்லத் தேய்ந்து முடியக் கூறுதல், பயனில சொற்களைப் பெய்து கூறுதல் - என இவை. (நன். 12)
நூல் கேட்டு விளங்கிய நுண்ணுணர்வினோன், அபாயம் இல்லாததோர் உபாயத்தினால் அறம் பொருள் இன்பம் வீடு என இவற்றை நிரம்புமாறு அறிந்து நிகழ்த்துமாற்றான், அந்நான்கனையும் முறையானே நூல் பயப்பதாம். (யா.க. பாயிர உரை)
அறம் முதலிய உறுதிப்பொருள் நான்கனையும் நூல் பயின்றோன் அடைதல் நூற்பயனாம். (நன். 10 )
பயனாவது இது கற்க இன்னது பயக்கும் என்பது. (பா. வி. பக். 7)
சொற்குற்றம் பொருட்குற்றம் இன்றி அமைதல், சுருங்கச் சொல்லல் என்னும் வனப்போடு அமைதல், முறை பிறழாமல் செய்திகள் அமைதல், நுட்பமான கருத்துக்களைக் கொண்டு அமைந்து பல நூற்பாக்களுக்கும் உதவுதல், தனது இன்றிய மையாமையால் தான் நீக்கப்படாத சிறப்புடன் திகழ்தல், சுருங்கச் சொன்னாலும் அளவுபடாத அரும்பொருளை அடக்கியிருத்தல் என்பன நூற்பாவின் அழகாம்.
சூத்திரத்திற்குப் பாயிரமாகக் கூறவேண்டும் செய்திகளைச் சூத்திரமாகச் செய்தல், சூத்திரத்தின் காண்டிகையுரையைச் சூத்திரமாகச் செய்தல், சூத்திரத்தின் கருத்துப்பொருளை எடுத்துக் கூறுதல், போலியான் எய்திய உரையை நீக்கி உண்மையுரையைக் கூறுதல் - என உரைநிலை நால்வகை யாகச் செய்யப்படும் திறத்துடனே குற்றமற நாடிப் புணர்க்கப் படுதலும் அழகாக எண்ணப்பட்டது. (இ. வி. பாட். 133)
நிறுத்த முறையானே கூறும் யாற்றது ஒழுக்கு, இடைவிட்டுக் கூறும் தேரைப்பாய்வு, முன்னும் பின்னும் பொருள் எய்தக் கூறும் சீயநோக்கு, நடுக்கொண்டு கூறும் பருந்தின் வீழ்வு என நான்காம். ‘சூத்திரநிலை’ காண்க. (இ. வி. பாட். 132)
தந்திரஉத்தி; ‘இதுயோக விபாகம் என்னும் நூற்புணர்ப்பு’ (தொ. சொ. 11. சேனா.) (L)
‘நூலுக்குப் பெயரிடும் வகை’ காண்க.
நூல் பெயர் பெறுமிடத்து, செய்தான் செய்வித்தான் இடு குறி அளவு சிறப்பு முதலான பல விகற்பத்தாலும் நிகழும். அகத்தியம், தொல்காப்பியம் - சாதவாகனம், இளந்திரையம் - நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு - பன்னிருபடலம் - களவியல் - என்பன முதலாக இவற்றுக்கு உதாரணம் முறையே காண்க. (பா. வி. பக். 6)
1. நூலிற் கூறப்படும் பொருள். 2. நூல் அட்டவணை (L)
1. பாயிரம் (திவா. பக் 231) 2. நூலினது தொடக்கம். 3. நூற் றுறை (யாழ். அக) (L)
கற்பிக்கப்படுவோனாகிய நன்மாணாக்கற்கு அமைந்த உவமை ஆறனுள் ஒன்று (நன்னூலார் கடைமாணாக்கர்க்கு இவ் வுவமை காட்டியமை பொருந்தாது என்பர் அரசஞ்சண் முகனார்.)
நெய்யரி என்பது வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை.நெய்தல்-மயிர்போல்வனவாகிய பல மென்மைப் பொருள்களை இணைத்தல். அரி-ஐம்மை (-மென்மை) யுடைய பொருள்களை உணர்த்தலான் ஆகு பெயர். நெய்த அரியினை யுடையது நெய்யரி எனப்பட்டது. நெய்யரி யாவது பன்னாடை; பன்னியதாகிய ஆடை என இருபெயரொட்டு. பன்னுதல்-பின்னுதல், நெய்தல்; ஆடை-உவம ஆகுபெயரால், ஆடை போல மரத்தின் அரையினைச் சுற்றும் பொருளை உணர்த்திற்று. தேன் முதலாய நற் பொருளைக் கொண்டு கோதினைத் தள்ளுதற்கு நெய்யரி கருவியாகப் பயன்படுதலின், ஆசிரியன் சொல்லியவற்றுள் நற்பொருளையே கொண்டு அல்லவற்றை நீக்கக் கடவ நன் மாணாக்கற்கு அதனை உவமை கூறினார்.(பா.வி.பக். 139, 154)
‘நேர் இன மணி’ எனவே, ஒரு சாதியின்கண்ணும் தம்மில் ஒத்தனவே ஓத்தின்கண் கூறல் வேண்டும் என்பது. (தொ. செய். 170 நச்)
ப
சார்புநூலின் வேறுபாடுகளுள் இதுவும் ஒன்று.
எ-டு :
எழுத்ததிகாரத்தின் இலக்கணங்களை ‘எண் பெயர் முறை பிறப்பு’ (இ.வி. 8) எனவும்,
சொல்லதிகாரத்தின் இலக்கணங்களைத் ‘தனிமொழி தொடர் மொழி’ (160) எனவும்,
பொருளதிகாரத்தின் இலக்கணங்களைப் ‘போக்கறு மரபின் பொருளெனப் படுவது’ (374) எனவும் கூறுதலாம். (இ. வி. பாட். 142 உரை)
சார்புநூற்குச் சொல்லப்பட்ட ‘திரிபு’ எனப்பட்டவற்றுள் ஒன்று. அஃதாவது ஆசிரியர் தொல்காப்பியனார் எழுத்ததி காரத்தில் கூறிய பொதுவகையான் புணரும் இயல்பும், விரிந்த சூத்திரப் பொருள அன்றித் தொக்குப் புணரும் இயல்பும், குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் நின்று புணரும் இயல்பும் இந்நூலுள் உயிரீற்றுப்புணரியலில் கூறப்படுதலும்;
சொல்லதிகாரத்தில் கூறிய வேற்றுமையியலும் வேற்றுமை மயங்கியலும் விளிமரபும் இந்நூலுள் பெயரியலில் கூறப் படுதலும்;
பொருளதிகாரத்தில் களவியலும் கற்பியலும் பொருளியலும் மெய்ப்பாட்டியலும் அகத்திணையியலில் கூறப்படுதலும் ஆம். (இ. வி. பாட். 142 உரை)
சார்புநூற்குச் சொல்லப்பட்ட ‘திரிபு’ எனப்பட்டவற்றுள் ஒன்று. அஃதாவது, பாட்டியலுள் கூறப்படும் பாட்டின் இயல் முதலிய ஏழும் (பாட். 1) படலத்து ஒழிபு எனவும், மரபு முதலிய ஏழும் (பாட்.1) பிண்டத்து ஒழிபு எனவும் சேர்ந்து நிற்றலாம். (இ. வி. பாட். 142 உரை)
பெற்றம், எருமை, மரை, இம்மூன்றற்கும் பசு என்னும் பெண் பாற்பெயர்(ஆ) பொதுப்பெயராம். புனிற்றா, செங்கட் காரான், மரைஆ எனக் காண்க. (தொ. மர. 60. பேரா.)
சிதைவு எனக் கூறப்பட்ட பத்தனையும் எதிர்மறுத்துணரின் அழகு பத்தும் பெறப்படும் என்றார் தொல்காப்பியனார். அவை யாவன கூறியது கூறாமை, மாறுகொளக் கூறாமை, குன்றக் கூறாமை, மிகைப்படக் கூறாமை, பொருளில மொழியாமை, மயங்கக் கூறாமை, கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆகாமை, பழித்த மொழியான் இழுக்கம் கூறாமை, தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறாமை, என்ன வகையினும் மனங்கோள் உடைமை என்பன. (தொ. மர. 109 பேரா.)
சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழ முடைத்து ஆதல், முறையின்வைப்பு, உலக மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தது ஆகுதல் என இவை. இவை ‘மாண்பு’ எனவும் குணம் எனவும்படும். (நன். 13)
சூத்திரம் சில்வகை எழுத்தால் செறிந்து அகலாத நடைத்து ஆதல், ஆழ்ந்த பொருளுடைத்தாதல், இலக்கண வல்லுநர்க் குப் பொருள் புலப்படுவதாதல், பொருள்நலம் உடைத்தாதல், சொல்நலன் உடைத்தாதல், ஓசையினிமை யுடைத்தாதல், கற்றோர்க்குப் பயன் தருவதாதல், உலகத்தொடு மாறு படாமை, உதாரணம் புணர்ப்பதாதல், கற்குந்தோறும் புதுவதாய் இன்பம் பயத்தல் என இவை. (மா.அ. 24) (ஈண்டு அழகுபத்தும் காண்க.)
கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கம் கூறல், தன்னால் ஒரு பொருள் கருதிக் கூறல், என்ன வகையினும் மனம் கோளின்மை என இவை. இவை ‘சிதைவு’ எனப்படும். இவற்றுள் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில மொழிதல், மயங்கக் கூறல் என்ற ஐந்தும் வழுவமைதியாகத் தழுவிக்கொள்ளப்படும். (தொ. மர. 108 உரை)
குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூச்சொல் புணர்த்தல், மயங்கவைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயனின்மை என இவை. (நன். 12)
பொருளில கூறல், கேட்போர்க்குப் பொருள் விளங்காமல் மருளுதற்கு இடனாதல், கேட்போர்க்கு இன்னா யாப்பிற்றா தல், குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், எடுத்த யாப்பிற்கு இணங்கும் ஓசையின்றிக் கூறுதல், எதிர் மறுத் துணர்த்துதல் என இவை. (மா. அ. 23)
பத்து விதங்கள் -
சொல், சொற்பொருள், சோதனை, மறைநிலை, இலேசு, எச்சம், நோக்கு, துணிபு, கருத்து, செலுத்துதல் எனப் பத்து வகைப்படும் இலக்கண உரை. (யா. க. பாயிரம் உரை)
பதின்மாசு -
பத்துவகைக் குற்றம். (சாமி. 3)
பதின்மூன்று திறம் -
சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத் தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் நாட்டல், ஆசிரியவசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் - என இவை. (யா. க. பாயிரஉரை.)
பதின்மூன்றுவகை உரை -
சூத்திரம் தோன்றல் முதலாகிய பதின்மூன்று திறம்; அது காண்க.
பயன் கூறற்குக் காரணம் -
“இன்னார் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்தமையான் இஃது உயர்வுடைய நூலாம்” என மாணாக்கன் அறிந்தானாயினும், “இந்நூல் கற்க இன்ன பயக்கும்” என அறியானாயின் கற்ற லின்கண் ஊக்கம் செல்லாமையான், பயன் கூறல் வேண்டும் என்பது. (பா. வி. பக். 191)
சிறப்புப் பாயிரம் கூறுவனவற்றுள் இதுவும் ஒன்று.
ஈகை எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதலும், கொள்வோ னான் நன்கு மதிக்கப்படுதலும், அதனை அவன் பெற்றடைந்த பயன் காரணமாக ஈவோனுக்கு இம்மையில் உளதாகிய பயனும், ஈதல் காரணமாக இம்மை மறுமை யிரண்டிலும் உளதாகிய பயனும்’ - எனப் பயன் நான்கு வகைப்படும். (பா. வி. பக். 126)
ஒருவன் எழுத்து அறியவே, அவனது இழிதகைமை நீங்கும். அவன் அது நீங்கப்பெறின், மொழித்துறைக்கண் இடர்ப்பாடு களைக் களைந்து தெளிவு பெறுவான்; அத்தெளிவு பெறின், முதல்வன் இயற்றிய நூற்பொருளையுணர்ந்து அவா அறுத்து மெய்யுணர்வால் வீடு பெறுவான். இது பயனுக்குப் பயனாம். (பா. வி. பக். 198)
தந்திரஉத்தியுள்ளேபட்டு அடங்குமாறு செய்திகளைக் கூறும் சூத்திரம். (யா. க. பாயிர உரை.)
பஞ்சினை உள்ளே அடைக்கக் கொண்டபோதும் அரிதா கவே உட்கொண்டு, வெளிப்படுத்தும்போதும் இன்னும் அரிதாக மிகச் சிறுகச் சிறுகவே கொடுக்கும் இயல்பிற்றுப் பருத்திக் குடுக்கை.
நல்லாசிரியன் அல்லாதானும் தான் பாடம் கற்ற காலத்தும் ஆசிரியன் மிக முயன்று கற்பிக்கச் சிறிது சிறிதாக அக்கல்விப் பொருளை ஏற்று, பின்னர் மாணாக்கற்கு ஈயும் காலத்தும் இன்னும் அரிதாக மிகவும் சிறுகச் சிறுகவே ஈயும் இயல் பினன் ஆவான்.
இவ்வாற்றால் நல்லாசிரியன் அல்லாதானுக்குப் பருத்திக் குன்டிகை உவமையாம். (நன். 34)
நல்லாசிரியர் அல்லாதார்க்குப் பருத்திக் குண்டிகை உவம மாமாறு ‘பருத்திக் குண்டிகை இயல்பு’ என்பதன்கண் காண்க.
பருந்தின் வீழ்வு என்னும் சூத்திர நிலை; பருந்து நடுவேயிருந்து தான் கருதும் பொருளை எடுத்துக்கொண்டு போவது போலப் பல சூத்திரங்களின் தொடர்பால் முடிக்கப்படும் பொருளை முடித்துப் போம் இயல்பினது இது. (இறை. அ. 4 உரை)
மகரக்குறுக்கம் கூறும் சூத்திரம் ‘ணன முன்னும் வஃகான் மிசையும் மக் குறுகும்’ (நன். 96) என்பது, ‘லள மெய்திரிந்த’ (120) என்ற நூற்பாச் செய்தியின் தொடர்பால் முடிக்கப்பட்ட வாறு காண்க.
சூத்திர நிலை நான்கனுள், முன்பின் சூத்திரங்களோடு இயைபில்லாது சேய்மையிலுள்ள சூத்திரத்தினோடு இயைபு பட்டு நிற்பது. (நன். 19)
நூலின் பிண்டப்பொருள். ‘பருப்பொருட்டாகிய ‘பாயிரம்’. (இறை. அ. 1 உரை) (L)
பல்புகழையும் மாயாமல் நிறுத்திய தவ ஒழுக்கத்தை யுடையோன் (தொல்காப்பியன்) என்றவாறு. பல் புகழாவன; இயற்கையாகிய நுண்ணறிவானும் செயற்கையாகிய கல்வி அறிவானும் வந்த புகழும், அவ்வறிவானே நூல் இயற்றி நமக்கும் பயன்பட அளித்த புகழும், தவ வொழுக்கத்தான் வந்த புகழும், அவ்வொழுக்கத்தான் ‘ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்’ ‘கூற்றம் குதித்தலும்’ முதலாயினவும் ஞானமும் அமைதலான் வந்த புகழும் - என இவை. (பா. வி. பக். 186)
பல்புகழாவன: ஐந்திரம் நிறைதலும், அகத்தியத்தின்பின் இந்நூல் வழங்கச் செய்தலும், அகத்தியனாரைச் சபித்த பெருந்தவத் தன்மையும், ஐந்தீநாப்பண் நிற்றலும், நீர்நிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் மிகுதலும், பிறவுமாம். (தொ. சிறப்புப். நச்.)
தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; ஒரு நூற்பாவின் அமைப்புப் பல பொருள்களும் கொள்ளுதற் கேற்ற சொற்றொடரைப் பெற்றிருப்பினும், தெளிவு கருதி அதனை ஒரு பொருளையே தருவதாக மாற்றி அமைக்காது, பயில்வோர் அந்நூற்பாவின் பல பொருள்களில் நல்ல பொருளையே கொண்டு பயனுறுவார் என்று விடுத்தல்.
எ-டு :
ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கு முரித்தே சுட்டுங் காலை (தொ. சொல். 193 நச்.)
என்புழி, ஒருவர் என்ற சொல் இருபாலாரையும் தழுவி நிற்கும், அச்சொல்லான் இருபாலாரும் சொல்லப்படுவர் என இரு வகையாகப் பொருள் கொள்ளலாம். ஆயின், அடுத்த நூற்பா அது பன்மைவினையைக் கொண்டு முடியும் என,
‘தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும்’ (194)
என்றமைவதால், “அஃது இருபாலாரையும் தன்கண் தழுவி நிற்கும்” என்று பொருள்செய்வதே அது பன்மைவினை கோடற்கு ஏற்றது எனக் கொள்ள உதவும் உத்திவகை இது.
நீயிர் என்று எழுவாய்வேற்றுமையாகத் திரியும் நும் என்ற சொல் உருபேற்கும் போது சாரியை பெறாது என்ற கருத்தை.
‘நும் என் இறுதி இயற்கை யாகும்.’ (தொ. எ. 187 நச்.) என்ற நூற்பாவிற் கொண்டு, ‘நுங்கண்’ என்புழி (சாரியைபெறாமல்) மகரம் ஙகரமாகத் திரிதலைக் கோடல் இதன் இனமாகும். (தொ. பொ. 665 பேரா.)
இவ்வுத்திவகை ஒருபுடைச்சேறல் எனவும் ஏற்புழிக் கோடல் எனவும் பெயர் பெற்றது.
நூற்குப் பயன்படாக் குற்றங்களுள் ஒன்று; தவறான கொச்சைச் சொற்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் புணர்ச்சி முதலிய வற்றிற்கு விதி கூறுதல் போல்வன.
‘விள’ என்பதே இயல்பான சொல். அதனை விடுத்து ‘விளாம்’ என்பதனை இயல்பான சொல்லாகக் கொண்டு அது ‘பழம்’ என்ற சொல்லொடு ‘விளாம்பழம்’ என இயல் பாகப் புணரும் என்று கூறுதல் போல்வன இதற்கு எடுத்துக்காட்டு.
விளாமென் இறுதி பழமொடு புணரின்
தளாவியற் றன்றி இயற்கை யாகும்
என்று சூத்திரம் செய்தல் போல்வன பழித்த மொழியான் இழுக்கம் கூறலாம். (தொ. பொ. 663 பேரா.)
இஃது இளமைமரபு பற்றிய பெயர்களுள் ஒன்று; மூங்கா, வெருகு, எலி, அணில், குரங்கு, நாய், பன்றி, புலி, முயல், நரி - இவற்றின் இளமையைக் குறிக்க நிகழும். (தொ. மர. 1, 7, 10 )
1. பெண்பாலையுணர்த்தும் இம்மரபு பற்றிய பெயர் பன்றி, நாய், நரி என்னும் மூன்றற்கும் உரித்து. (தொ. மர. 65. 66 பேரா)
2. பாடல்மகள்; ‘பாணர் வருக பாட்டியர் வருக’ (மதுரைக். 749) (L)
பாடங்கேட்கும் முறை -
கோடல் மரபு - நோக்குக.
பாடம் சொல்லுதல் வரலாறு -
ஆசிரியன் தனக்கும் தன் மாணாக்கர்க்கும் உரிய காலத்தையும் இடத்iதையும் நன்றாக ஆய்ந்துபார்த்து, மேம்பட்ட இடத்தில் வீற்றிருந்து, தான் வழிபடும் கடவுளைத் துதித்து, தான் பாடம் சொல்லப்படும் பொருள்களைத் தன் மனத்தே முறையே கொண்டு, விரைவின்றி, கோபமின்றி, முகம் இனிய னாய், மாணாக்கன் பாடத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அறிந்துகொண்டு அவன் உள்ளத்தில் கொள்ளுமாறு அந் நூற்பொருள்களைக் கற்பித்தலே அவன் பாடம் சொல்லும் வரலாறாம். (நன். 36)
பாயிர இலக்கணம் -
பொது எனவும், சிறப்பு எனவும் பாயிரம் இருவகைத்து. பாயிரமாவது வரலாறு. நூலினது வரலாறு, நூலைக் கற்பிக்கும் ஆசிரியனது வரலாறு, அவன் மாணாக்கனுக்கு நூலைப் பாடம் சொல்லும் வரலாறு, மாணாக்கனது வரலாறு, அவன் பாடம் கேட்டலினது வரலாறு - என்னும் இவற்றை விளங்கச் சொல்வது பொதுப்பாயிரமாம். நூலைச் செய்தவனது பெயர், நூல், வந்தவழி, நூல் வழங்கும் நிலத்து எல்லை, நூற்பெயர், தொகுத்தல் முதலிய நூல் யாப்பு, நூலிற் சொல்லப்பட்ட பொருள், நூல் கேட்டற் குரிய அதிகாரிக ளாவார் இவர் என்பது, நூல் கற்றதன் பயன் என்னும் எட்டனையும் நூல் செய்த காலம், நூல் அரங்கேறிய சபை, நூல் செய்த காரணம் என்ற மூன்றனொடும் சேர விளங்க உணர்த்துவது சிறப்புப் பாயிரமாம். (நன். 2, 3; 47, 48).
பாயிரத்தின் இன்றியமையாமை -
கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போலப் பருப்பொருட்டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும். ‘ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிரமில்லது பனுவ லன்றே’ என்றமையானும் பாயிரம் இன்றியமையாதது என்பது. (தொ.பாயிரம்.இள.)
முகவுரை (-நூற்கு முன் சொல்லப்படுவது), பதிகம் (ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள் களையும் தொகுத்துச் சொல்வது), அணிந்துரை (-நூலின் பெருமை முதலியவற்றை அலங்கரித்துச் சொல்வது), நூன்முகம் (நூற்கு முகம் போல முற்பட்டிருப்பது), புறவுரை (-நூலிற் சொல்லிய பொருளல்லாதவற்றை நூலின் புறத்தே சொல்வது), தந்துரை (-அப்பொருள்களைத் தந்துரைப்பது), புனைந்துரை - என்னும் பெயர்கள். (நன். 1)
பொதுவும் சிறப்புமாகிய பாயிரத்துக்கு உவமம் கொழுவும், வாயில் மாடமும், பாவையும் ஆம். நூற்கு உவமம் துன்னூசியும், நகரும், சுவரும் ஆம். கொழு, நூலினைச் செலுத்தும் ஊசியின் கூரிய பகுதியாகிய ஊசித்தொளை மேலுள்ள பகுதி; துன்னூசி - நூல் கோத்த காது.
கொழுவானது துன்னூசி நுழைதற்கு வழியாக்குகிறது; பாயிரம் மாணாக்கன் நூலுள் நுழைதற்கு வழியாக்குகிறது. வாயில்மாடம் நகருட் செல்லுதற்கு வழியாக்குவதோடு அழகு செய்தலையு முடையது; பாயிரம் நூலுட் செல்லுதற்கு அவனுக்கு வழியாக்குவதொடு நூலுக்கு அழகு செய்தலையு முடையது. பாவை சுவர்க்கு அணி செய்தலுடையது; பாயிரம் நூற்கு அணிசெய்தலுடையது. (பா. வி. பக். 3, 4)
துன்னூசி நுழைதற்கு வாயிலாக்கும் கொழு, நகருட் செல்ல வழியாக்குதலும் அணிசெய்தலுமுடைய வாயில் மாடம், சுவர்க்கு அழகு செய்ய வரையப்படும் பாவை என இம் மூன்றும் இரு வகைப்பாயிரத்துக்கும் உவமங்கள்.
தனது கலையின் வளர்ச்சிக்குத் தகப் புறத்திருளை நீக்கி ஆகாயத்தை விளக்கும் திங்கள், நாண் துறவாக் குலமகட்கு அழகு செய்யும் அணி, அடங்கா யானையை அடக்கித் தன் குறிப்பின்வழி நடத்தும் பாகன் என இம்மூன்றும் பொதுப் பாயிரத்திற்கு உவமங்கள்.
எஞ்ஞான்றும் ஒருபடித்தாக ஆகாயத்தை விளக்கும் ஞாயிறு, நாண் துறவாக் குலமகட்கு அணியினும் இன்றியமையாததாகிய ஆடை, தன் கணவன் கற்பித்தவழி நிற்றலுடையளாகிய கற்புடைய மனைவி என இம்மூன்றும் சிறப்புப் பாயிரத்திற்கு உவமங்கள். (பா. வி. பக். 3, 4)
பாயிரம் ஈண்டுச் சிறப்புப்பாயிரம் என்க. ஆக்கியோன் பெயரன்றிச் செய்வித்தோன் பெயரும் உரைசெய்தான் பெயரும் கூறுதலும், தன் நூலுக்கே யன்றி அதன் முதல் நூலுக்கும் வழி கூறுதலும், நூலுக்கே அன்றிப் படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் பெயர் கூறுதலும், பெயரே அன்றித் தொகை முதலாய பிறவும் கூறுதலும், நூலது பிண்டத்திற்கே அன்றி அதற்கு உறுப்பாகிய படலம் ஓத்துச் சூத்திரங்கட்கும் இன்னது நுதலின எனக்கூறுதலும், பயனே அன்றிப் பயனுக் குப் பயன் கூறுதலும், பாயிரம் கூறினார் பெயர் கூறுதலும், பாயிரத்துக்கு இலக்கணம் கூறுதலும், அவை போல்வன பிறவும் ஆம். (பா. வி. பக். 193)
பனுவலின் முகத்துத் திலகம் போல்வது பாயிரம். பொதுப் பாயிரம்தான் தெய்வக் காப்பும், கொள்வார் செயலும், நூல் நுவன்ற காரணமும், நூல் கேட்ட பயனும், பிறவும் கூறும். சிறப்புப்பாயிரம்தான் நூலாசிரியன் பெயரும், அரங்கேற்றிய நல்லரங்கமும், நூலினது புகழும், பிறவும் கூறும். பாயிரத்தி னும் நூறு மடங்கு உறுவது தெய்வ வணக்கம். இழிந்த நூல் பாயிரத்தால் உயர்வுறாது; நல்ல நூல் பாயிரமின்றியும் இழிவுறாது. ஆயினும் தெய்வத்துதியொடு நூற்பெயர் மாத்திரமாவது பகர்ந்து நூல் தொடங்குவது அழகாம். (அறுவகை. பனுவலியல்பு. 7-11)
1. முகவுரை, 2. பொருளடக்கம், 3. வரலாறு. (L)
நுட்பமான செய்திகள் பிறர்க்குப் புலப்படாதவற்றையெல் லாம் தோற்றுவித்து, பல துறைகள் அமையப் பெரிய நூலைச் செய்து முடித்தாலும், தானே தற்புகழ்ந்து கொள்ளுதல் தக்கதன்றாம். (ஆகவே, நூல் செய்தவனுடைய புகழைப் பிறர் சிறப்புப் பாயிரமாகக் கூறல். வேண்டும்). (நன். 52)
மிகப்பலவாகிய வகைகளால் விரிந்த நூலாயினும் பாயிர மில்லாதது நூல் அன்றாம். (தொ. பாயிரம் இள.)
பொதுப்பாயிரமும் சிறப்புப் பாயிரமும் எனப் பாயிரம் இருவகைத்து. (நன். 2)
பறப்பனவற்றுக்குரிய இளமைமரபு பற்றியதொரு பெயர். (தொ. மர. 4)
பெருங்காப்பியம். ‘பாரகாவிய மெலா மீரிரு தினத்தினிற் பகர’ (தமிழ்நா. 221) (L)
யானைக்குரிய பெண்பால் மரபு பற்றிய பெயர்; பெண்யாiன என்றவாறு. (தொ. மர. 51)
பதங்கள் நீங்க உரைமாத்திரம் திரட்டிச் சொல்லப்படும் பொழிப்புரை. (L)
தலைமைப் பொருளைப் பொதுப்படக் கூறும் சூத்திரம். ‘நன்கியம்புவன் எழுத்தே’ (நன். 56) போல்வன. (நன். 20)
சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கிய பிண்டத்தான் இயன்ற நூல்; தொல்காப்பியம் போல்வது. (பா.வி. பக். 111). இயல், இசை, நாடகம் என்ற முக்கூற்றினையும் குறிப்பிட்ட அகத்தியம் ‘மகா பிண்டம்’ எனவும், ‘பிண்டி’ எனவும் கூறப்படும். (மா. அ. பாயிர. 20)
பிண்டத்தினை அடக்கி நிற்பது ‘பிண்டி’ எனப்படும். அது முதனூலாகிய அகத்தியம், இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத் தமிழ் என மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். (தொ. செய். 172 நச்)
இதனை மாறன் அலங்காரம் ‘மகா பிண்டம்’ என்னும் . (மா. அ. பாயிர. 20).
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தையுமடக்கிய (பிண்டியாக அமைந்த) அகத்தியம், அவிநயம் முதலாயின (பா.வி.பக். 111), பிண்டத்தினை அடக் கிய வேறொரு பிண்டம் என்று (தொ.செய். 172) நச்சினார்க் கினியர் உரைத்ததாகச் சண்முகனார் குறிப்பிடுகிறார்.
பன்றி, புல்வாய் (-மான்), நாய் என்பவற்றின் பெண்ணைக் குறிக்கும் பெண்பால்மரபு பற்றிய பெயர். (தொ. மர. 59 பேரா.)
பிணவல் போலவே, பிணவு என்பதும் பன்றி, மான், நாய் என்பவற்றின் பெண்மைமரபு பற்றிய பெயர்; புலிக்கும் உரையிற் கொள்ளப்படும். (தொ. மர. 58 பேரா)
உயர்திணைப் பெண்மைக்குரிய மரபு பற்றிய பெயர். (தொ. மர. 61)
புல்வாய், நவ்வி, உழை, கவரி என்பன நான்கற்கும் உரிய பெண்பாலினை யுணர்த்தும் மரபு பற்றிய பெயர். (தொ. மர. 57 பேரா.)
பறப்பன, தவழ்வன, பாம்பு, வெருகு, மூங்கா, பன்றி, புலி, முயல், நரி, குரங்கு, மனிதன், தாவரம் ஆகியவற்றுக்குரிய இளமைமரபு பற்றிய பெயர்; கீரி, நாவி என்பனவும் பிள்ளை என இளமைமரபு பற்றிய பெயரால் வழங்கப்படும். (தொ. மர. 6 பேரா.) (தொ. மர. 4,5, 11, 13, 23, 24 பேரா.)
பிற நூலில் சொல்லப்பட்ட கொள்கையைத்தான் ஏற்றுக் கொள்ளுதல் என்னும் உத்தி. ‘பிறனுடன் பட்டது தானுடன் படுதல்’ என்பது தொல்காப்பியம் கூறும் உத்திவகை.
இராகத்தில் அளவிறந்து ஒலிக்கும் போது உயிர் பன்னிரண்டு மாத்திரை வரையிலும், ஒற்றுப் பதினொரு மாத்திரை வரையிலும் ஒலிக்கும் என்ற இசைநூலார் கொள்கைக்கு நன்னூலார் உடன்பட்டமை இவ்வுத்தி. (நன். 101)
வீரசோழிய உரையாசிரியரும் இவ்வுத்தியைப் பெயர் சுட்டி யுள்ளார், (கா. 180 உரை). இது தந்திர உத்திகள் முப்பத்தி ரண்டனுள் ஒன்று. (நன். 14)
நன்னூல் கூறும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிறர் கருத்தை ஒருபுடை ஏற்றுக்கொண்டு எஞ்சியதை விடுத்தல்.
ஙகரம் மொழி முதலாதலை ஏற்று, அது மற்ற எழுத்துக்கள் போல முதலாகும் என்ற கருத்தை விடுத்து, சுட்டிடைச் சொற்கள் யா - எ - என்னும் வினாஇடைச்சொற்கள் ஆகிய இவற்றின் வழியே அகரத்தொடு கூடிவரும் என்றமை இம்மதம். (நன். 106) (நன். 11)
நன்னூலார் கூறும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிறர் செய்த நூல்களில் குற்றத்தை எடுத்துக்காட்டுதல்.
தொல்காப்பியனார், ஈரெழுத்தொருமொழி தொடர்மொழி என இரு கூறாக்கி, இரண்டற்கு மேற்பட்ட எழுத்துடைய மொழியே தொடர்மொழி என்றார்.
நன்னூலார் இரண்டெழுத்து மொழியும் தொடர் மொழியே என்று கூறுவது பிறர்நூலிற் கூறப்பட்ட செய்தியின்கண் குற்றம் கண்டு அதனை மறுத்துக் கூறியதாம்.
‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரின்
பதமாம்’
(நன். 128) (நன். 11)
நன்னூல் குறிக்கும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிற நூலாசிரியர் கருத்தை உடன்பட்டு ஏற்றுக்கோடல்.
ஙகரம் மொழி முதலாகும் என்பார் கருத்தைத் தாமும் உடன்பட்டு ‘ஙனம்’ என்ற சொல்லில் ஙகரம் முதற்கண் வருதலைச் சுட்டினார் நன்னூலார் (106) இஃது உடன்படல்.
‘நெடிலோ டாய்தம்’ (நன். 94) என்ற நூற்பாவில், தொல் காப்பியனார் குறிப்பிடும் அறுவகைக் குற்றியலுகரங் களையும் தாமும் ஏற்றுக் கொண்டமையும் அது. (நன். 11)
நன்னூலார் குறிக்கும் எழுவகை மதங்களுள் ஒன்று; முன்னுள்ளவர் கருத்தை மறுத்துரைப்பது (அல்லது ஏற்றுக் கொள்ளாமை.)
‘நுந்தை’ என மொழிமுதற்கண் குற்றியலுகரம் வரும் என்று தொல்காப்பியனார் குறிப்பிட்டது நன்னூலாருக்கு உடன்பா டன்று; ஆதலால் அதனை அவர் விலக்கியமை, மறுத்தல் என்னும் மதமாம். (நன். 11)
தொல்காப்பியனார் சுட்டும் முப்பத்திரண்டு உத்தி வகையுள் ஒன்று; இயற்கையாக மனம் கொள்ளத்தக்க வாய்ப்பு இன்றாயினும், தொன்றுதொட்டு வந்த வழக்குநெறியான் இது கொள்ளத்தக்க பொருள் என்று கூறி விடுத்தல். (தொ. பொ. 665 பேரா.)
பிற நூலாசிரியன் உடம்பட்ட பொருளுக்குத் தானும் உடம்படுதல். (656 இள.)
பிண்டத்துக்கு முதல்சினை என்று பிரித்துப் பகுத்துரைக்கத் தக்க வேறுபாடு இன்றெனினும், அதனையும் முதல் சினைப் பொருள்களைப் போலக்கொண்டு வேற்றுமை யுருபுகளை இணைத்து,
‘பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
பண்டியல் மருங்கின் மரீஇய மரபே’ (தொ. சொ. 91 நச்.)
என வழக்குநெறியைப் பின்பற்றிக் கூறுதல் இவ்வுத்தி வகை.
முதல்நூலுள் ‘மேல்’ என்பது ‘மீ’ என மரீஇயிற்று என்று கூறப்பட்டது போலத் தாம் கூறாது, ‘மீ என மரீஇய இடம் வரை கிளவி’ (தொ. எ. 250 நச்.) என ‘மீ’ என்பது மருவிய சொல் என்பது மாத்திரம் கூறி, அஃது எச் சொல்லின் மரூஉ என்று கூறாமை விடுத்தது இவ்வுத்தி வகையின் இனம். (பேரா.)
தாம் கொண்ட பொருளுக்கேற்ப இளம்பூரணர் கூறும் எடுத்துக்காட்டு.
இரண்டாம் வேற்றுமை செயப்படு பொருட்கண் வரும் என்றார் பாணினியார். அது தமக்கும் உடன்பாடு என்ப தனைத் தொல்காப்பியனார், ‘இரண்டாகுவதே.............. அதுவே’ (சொல். 72 நச்.) எனக் கூறியமை.
நன்னூல் கூறும் 32 உத்திகளுள் ஒன்று; பிறன் கொண்ட கொள்கையைத் தனது நூலிற்சொல்லுதல்.
எ-டு : சொல்லின் இடையே சிலவிடத்து ஐகாரத்தின் பின்னரும் யகரமெய்யின் பின்னரும் நகரமெய்க்கு ஞகரமெய் போலியாக வரும் என்று சொல்லுவாரும் உளர். (நன். 124) என்பது. (நன். 14)
நன்னூலாசிரியர் சுட்டும் எழுவகை மதங்களுள் ஒன்று; பிறர் மதத்தொடு கலவாதவனாய்த் தன்மதத்தையே தான் கொள்ளுதல்.
செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணம் என்றார் நன்னூலார் (58). பிறர் கூறும் மாயையைக் கூறாது, செவிப்புலனாம் அணுத்திரளைக் கூறியது அருகதேவனது சத்தநூல் பற்றியே என்பது. இது பிறிதொடு படாஅன் தன் மதம் கொண்டு நூல் இயற்றியவாறு. (நன். 11)
முன் வைக்கவேண்டிய தொன்றனை அம்முறை தவறப் பின்னே வைத்தல் என்னும் உத்தி; நன்னூலார் சுட்டும் 32 உத்திகளுள் ஒன்று.
மாத்திரையின் இலக்கணம் பற்றிய சூத்திரத்தை (100), எழுத்துக்கட்குரிய மாத்திரையளவு கூறிய சூத்திரத்தின் (99) முன்னர்க் கூறவேண்டும்; அம்முறை பிறழப் பின்னே கூறியது இவ்வுத்தியின் பாற்படும். (நன். 14)
சார்பு நூல்; அது காண்க. (நன். 8)
சொல் வழக்கு முதலாயின புதியவாகப் புகுதல். இது கால வேறுபாட்டிற்கு ஏற்ப மொழித்துறையுள் நிகழ்வதொரு மாற்றம். (நன். 462)
புரத்தல் - மாணாக்கற்கு ஆசிரியன் நூலினைப் பாடஞ் சொல்லுதல். அதன் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, கல்வி தொடங்கற்கேற்ற ஐந்தாண்டு ஏழாண்டு என்னும் பருவத்தின் நற்காலத்தொடு, மதி திதி வாரம் நாள் என்னும் நாற்காலமும் இடமும் என்னுமிவற்றைத் திடமாகக் குறித்து, கிழக்கு வடக்கு என்னும் மங்கலத்திசைகளை நோக்கியிருந்து, வழிபடு கடவுளை, வாழ்த்தி, ‘கல்வி கற்கும் இயல்பு நினக்கு இவை’ என அவன் கருத்துறக் கொள்வித்து, ஒன்றிய மனத்தோடே முகம் மலர்ந்து, பாடம் சொல்லத்தகும் நூல் நுதலிய திறத்தினை முதற்கண் தன் உள்ளங் கொள்ளக் கொண்டு, வெகுளி விரைவு இவையிலனாய், மாணவன் உள்ளம் கொளத்தகும் அக் குறிப்பினையு முணர்ந்து, பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் என்னும் உரைநடையால் நாளும் நாளும் விடாது பாடம் சொல்லுந்தோறும், பறவை போல் அணைத்துத் தழுவியும், மீன் போல் நோக்கியும், விட்டு நீங்கிய காலத்தும் ஆமைபோன்று உளத்தால் நினைந்தும், ஈன்று அணிமைப்பட்ட காலத்தே பசுப்போல அவன் இருக்கும் இடத்துச் சென்றும், தான் என்றும் சொல்லப்படுவ தாகிய அத்தகைமையைக் கண்டு, “வேட்டை வாளி போல இவன் சிறந்தோன்” என்று பெரியோர் கூறும்படியாக, அழுக்காறின்றிக் கொடுப்பதாம். வேட்டைவாளி குறித்த இலக்கினைத் தவறாது சென்று தைத்தலையுடைய அம்பு; அதுபோலவே, இம்மாணாக்கனும் பாடம் சொல்லிய வற்றைத் தவறாது உளம் கொள்ள வல்லனாவான் என்பது. வேட்டைவாளி குளவியுமாம். (மா. அ. 39)
புரப்போன் - நூல் பாடம் சொல்வோன் ஆகிய ஆசிரியன். அவனுடைய இயல்பினைக் கூறுமிடத்தே, குலம் - குணம் - குரவரைப் போற்றும் நலம் - கடவுளை வழிபடுதல் - கருணை - புலனடக்கம் - பொறுமை - நிலைஇய தோற்றம் - உலகிய லறிந்து உயிர்க்கு உறுதி கொள்ளுதல் - கற்றவர் விரும்ப வாழ்தல் - ஒளிமதியினை நிகர்த்த கல்வி - ஞாயிற்றை நிகர்த்த வாய்மை தூய்மைகள் என்னுமிப்பதினான்கனுள் ஒன்றும் வழுவுதல் இலனாய், வாடாத மணமிக்க கற்பகப்பூ - கோடாத செங்கோல் செய்யும் கொற்றவனது நிதியறை - மிக்க சுவை யினையுடைய அமிழ்தம் - ஆயிரம் வாயினையுடைய சேடன் என்னும் இந்நான்கினையும் ஒப்பவனாய், கற்றனவற்றைக் கழகத்தில் சொல்லி உதவும் தன்மை - பிறன்பழி மறந்தும் கூறாமை - தற்புகழாமை - என்னும் மூன்றும் உடையனாய், முந்துநூல் கூறியவாறே இலக்கண இலக்கியம் இரண்டும் புதுமொழியாகப் புணர்க்கும் அறிவுநலமுடையோனாவான். (மா. அ. 29)
புறத்தே மாத்திரம் காழ் (-உறுதி) பெற்று அகத்தே வெளி றுடையன புல் எனப்படும். அகத்தே காழ் (-வயிரம்) பற்றியன மரமாம். தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை என்பனவும் பிறவும் (- குரும்பை, நுங்கு, நுகும்பு எனப்படும் சுருண்ட குருத்தாகிய இளமடல் போல்வன) புல்லின் உறுப்புக்களாம்.
இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை, உள்ளிட்ட அவையெல்லாம் மரத்தின் உறுப்புக்களாம்; காய், பழம், தோல், செதிள், வீழ் என்பனவும் அவை; புல்லும் தழையும் பொங்கரும் முதலாயினவும் கொள்ளப்படும்.
ஊகம்புல்லும் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும் புல் எனப்பட்டடங்கி, ஊகந்தோடு சீழ்கந்தோடு முதலாகப் புல்லுறுப்பின் பெயர் பெறும். பிடா, காயா முதலிய புதலும், பிரம்பு முதலிய கொடியும் மரம் எனப்பட்டடங்கிப் பிட இலை காயாம்பூ முல்லைப்பூ என மரத்துறுப்பின் பெயர் பெறும்.
இனி விதிவிலக்காகப் புல்லினுள் ஒருசாரன இலை எனவும் பூ எனவும் படும். தெங்கங்காய் தெங்கம்பழம், பனந்தோல், பனஞ்செதிள், தாழைவீழ், இத்திவீழ், வேப்பங்காய், பலாப் பழம், வேப்பந்தோல், வேப்பஞ் செதிள் எனக்காய் முதலியன முறையே புல்லிற்கும் மரத்திற்கும் ஒப்ப உரியவாய் வருமாறும் கொள்ளப்படும். (இ. வி. பாட். 158 - 162)
(தொ. பொ. 640 - 643 பேரா.)
‘புல் , மரன் இவற்றின் உறுப்புக்கள்’ காண்க.
அரசவைக்கு விடுக்கும் சீட்டுக்கவியிலும், தம்முடைய கல்வி வலிமையை அறியாதோரிடத்தும், அவையிற் பிறரை வாதிட்டு வெல்லும்போதும், எதிரிப் புலவன் தம்மை இழித்துப் பேசுமிடத்தும் என இந்நான்கிடத்தும் புலவர் தம்மைப் புகழ்ந்து கொள்ளுதலும் ஏற்கும். (நன். 53)
புறத்தே உறுதியைக் கொண்டு அகத்தே வெளிறுடையவை யாகிய புல் இனத்தவை. ‘புல் மரன் இவற்றின் உறுப்புக்கள்’ காண்க. (தொ. மா. 85 பேரா.)
சூத்திரவகை ஆறனுள் ஒன்று. கிளந்தோதப்பட்ட முன்னர்க் கூறிய சூத்திரங்களின் புறத்தே நடத்தலையுடையது என்பது பொருள். புறன் அடை புறனடை எனவும் (புறத்தே அடுத்து வருதலையுடையது), புறன் நடை புறனடை எனவும், புறம் நடை புறநடை எனவும் இம்மூவகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளப்படும். ‘சூத்திர வகை’ காண்க. (இ.சொ. 86)
பாயிரம்; ‘பாயிரம் என்ற சொற்குப் பொருள் யாதோ எனின், புறவுரை என்றவாறு’ (இறை. அ. 1 உரை)
‘புறம்’ புறன் எனவும் வருதலின் ‘புறநடை’ புறனடை எனவும் எழுதப்பெறும். ‘புறநடை’ காண்க. (இ.சொ. 86)
எ-டு : எடுத்தும் படுத்தும் நலிந்தும் உச்சரிப்பதாகிய ஒலி முயற்சி வேறுபாட்டால், ஒன்றற்கு ஒன்று பிறப்பு வேறுபாடுகளும் எழுத்துக்களிடையே சிறிது சிறிது உளவாம். (நன். 88)
பல எழுத்துக்களுக்குப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட் டுள்ளன. ஓர் எழுத்தே வெவ்வேறு வகையால் ஒலித்தலை யுணர்த்த வேண்டும் இன்றியமையாமையை, மேலைப் பிறப்புச் சூத்திரங்களின் புறத்தே அவற்றை அடுத்து நடை பெறும் இச்சூத்திரம் உணர்த்தியவாறு. ‘தந்ததனை’ என்னும் சொல்லை யுச்சரித்து மூன்று தகரங்களும் ஒலிக்குமாற்றைக் காண்க. அவை முறையே எடுத்தல் படுத்தல் நலிதல் ஓசைப்பட வந்தவாறு. (நன். 20)
1. மிகைப்படுத்தி அழகுறச் சொல்லும் வாசகம். 2. பாயிரம். (L)
உலகியலை ஒட்டியும் ஒட்டாதும் கற்பனை செய்து கூறுவது புனைந்துரை. அஃது உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும், உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்த லும், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும் இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலும் என நான்கு வகைப்படும்.
இப்புனைந்துரை நாடகத்துக்குப் பயன்படுவது; நாடக உறுப்புப் பதினான்கனுள் ஒன்றாகிய ‘யோனி’ என்னும் உறுப்பால் குறிப்பிடப்படும் செய்தியாகும்.(தொ. பொ. 3 நச்.)
(கணேசய்யர் அடிக்.)
புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கத்திற்குப் புனைந் துரை பற்றிய செய்திகளை இணைத்துக் கொள்வதும் இன்றி யமையாதது.
மங்கல காரியங்கட்கு உரியதாகி, தானின்றி யாதொரு செயலும் அமையாதாக, கண்டோரெல்லாம் விரும்பி மேலாகத் தன்னைச் சூடிக்கொள்ள, மென்மைத் தன்மையுடையதாய், மலர்தற்குரிய காலத்தில் முகம் மலர்ச்சியுடையது பூவின் குணம். அதுபோலவே, நல்லாசிரியனும் மங்கல காரியங்கட்கு உரியனாய், தான் எல்லாக் காரியங்கட்கும் இன்றியமையாத வனாய், கண்டோரெல்லாம் விரும்பித் தன்னை மேலாக மதிக்க, மென்மைக் குணமுடையனாய், பாடஞ் சொல்லுங் காலத்தே முகமலர்ச்சி யுடையனாய் இருப்பான். (நன். 30)
பெண்பாலை யுணர்த்தும் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று; ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான், பறவைகள் இவற்றின் பெண்பாலைக்குறிக்கப் ‘பெட்டை’ நிகழும். (சிறுபான்மை ‘சீயம் பெட்டைமேல் இவர்ந்து நின்றால்’ (சிந். 752) எனச் சிங்கத்திற்கும் பெட்டை கூறப்படும்.)(தொ.மர. 3, 52, 53 பேரா.)
பெண்பாலை யுணர்த்தும் மரபு பற்றிய ஒரு பெயர்; (‘பேடை’ போலவே, ‘பெடை’ என்பதும் நிகழும்.) பறவைகளின் பெண்பாலைக் குறிக்கவே வரும்.
எ-டு : அன்னப்பெடை (அன்னப் பேடை) (தொ. மர. 3, 54 பேரா.)
இது பெண்பாற் பொதுப்பெயராய் உயிரினங்களின் பெய ருக்கு அடையாக வரும். பெண்யானை, பெண் குரங்கு, பெண்பனை முதலாக வரும். அடையின்றி, வாளா ‘பெண்’ என இருப்பின் மக்கட் பெண்பாலையே சுட்டும். (தொ. மர. 3, 50, 61, 69 பேரா.)
பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பன; மற்றுஆ என்பதும் (தொ.மர. 60) ஆம். (தொ. மர. 3)
சூத்திரவகை ஆறனுள் ஒன்று; இடுகுறியானும் காரணக் குறியானும் பொதுவகையானும் இலக்கணங்களுக்கு ஓர் உபகாரம் நோக்கி இஃது இதற்குப் பெயர் என இடுவது. (யா. வி. பாயிர உரை)
பெண்மையை உணர்த்தும் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று. எல்லாப் புள்ளின் பெண்பாற்கும் உரியதாக வருவது.
எ-டு : அன்னப் பெடை. (தொ. மர. 3, 54 பேரா.)
பொது இலக்கணம் கூறும் சூத்திரம்.
எ-டு : ‘நிறையுயிர் முயற்சியின்’ (நன். 74) என்பது எழுத்துக்க ளது பிறப்பின் பொதுவிலக்கணம் கூறும் சூத்திரம்.
நூலினது வரலாறு, பாடஞ் சொல்லும் ஆசிரியனது வரலாறு, அவன் பாடம் சொல்லும் வரலாறு, பாடத்தை ஏற்றுக் கொள்ளும் மாணாக்கனது வரலாறு, அவன் பாடம் கொள்ளும் வரலாறு என இவ்வைந்தும் எல்லா நூற்கும் பொதுவுறச் சொல்லப்படும் - பொதுப்பாயிர இலக்கணமாம். (நன். 3)
நன்னூலார் பொதுப்பாயிரம் ‘நூலியல்பு’ கூறும் என்றார். அது பொருந்தாது என அரசஞ் சண்முகனார் தமது பாயிர விருத்தியுள் மறுக்கிறார்: ஒன்றன் பெருமை முதலியவற்றைப் பிறர்க்கு உணர்த்துதலே புறவுரையாகிய பாயிரம் என்பது. அப்புறவுரை இருவகைத்தாய், நூல் செய்தானே கூறின் தற்புகழ்ச்சியாக முடிதலின் பிறரால் கூறப்படும் இயல்பிற்று. இன்னின்ன இலக்கணமுடைய ஆசிரியன், இன்னவாறு நூலைக் கூற, இன்னின்ன இலக்கணமுடைய மாணாக்கன், இன்னின்னவாறு கேட்டல் வேண்டும் என்ற செய்தி எல்லா நூற்கும் பொதுவாகி முடிதலின் பொதுப்பாயிரமாம். இன்ன பெயருடைய ஆசிரியன், இன்ன எல்லையுள் நடக்கும் இன்ன நூலின் வழித்தாக இன்ன பெயரிட்டு, இன்ன யாப்பால், இன்ன பொருளை அமைத்து, இன்ன பயனுடைத்தாக நூல் செய்ய, அதனை இன்னின்ன பெயருடைய ஆசிரியர் கேட்டுக் குற்றமின்மை ஆராய்ந்து நன்றெனக் கொண்டார் என்ற செய்தி ஒரு நூற்கே பெருமையாக முடிதலின் சிறப்புப் பாயிரமாம். இவ்வாறிருத்தலின், நூலியல்பு பாயிரமாகிய புறவுரையோ, நூலிலக்கணமாகிய அகவுரையோ எனில், ஆசிரியர் செய்யுளியலில், ‘பாட்டுரை நூலே......’ என்று ஏழ் நிலம் கூறி அவற்றுக்கெல்லாம் இலக்கணம் கூறினாராதலின், அவற்றுள் ஒன்றாகிய நூலின் இயல்பு அகவுரையாகிய இலக்கணமாதலன்றிப் பாயிரமாகிய புறவுரையாகாது. நூலினது இயல்பு கூறுதல் பாயிரம் எனில், ஏனைய பாட்டு உரை முதலிய ஆறனது இலக்கணமும் பாயிரம் கூறல் வேண்டும். நன்னூலார், ‘நூலின் இயல்பே நுவலின் ஓரிரு, பாயிரம் தோற்றி’ என்றதனால், பொதுப்பாயிர வகையுள் அவர் ஒன்றாகக் கூறிய நூலினது இயல்பு அப்பொதுப்பாயிர வகை ஐந்தனையும் சிறப்புப் பாயிரத்தையும் தோற்றுதல் பொருந்தாது. (பொதுப்பாயிரத்துள் அங்கமாக நூலினது இயல்பு கூறினால் அவ்வங்கம் பொதுப் பாயிரமாகிய அங்கியையும் புலப்படுத்தும் என்றல் வழுவாம்.) இன்ன காரணங்களால் பொதுப்பாயிர இலக்கணத்துள் நூலினது இயல்பு கூறுதல் பொருந்தாது என்பது. (பா. வி. பக். 156)
ஆயிர முகமாக நூல் அகலமுடைய தாயினும், பாயிரம் இல்லையேல் அது நூலாகாது. கொழுச் சென்றவிடத்தே துன்னூசி இனிது செல்லுமாறு போல, பருப்பொருளை யுடையதாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருளை யுடைய நூல் இனிது விளங்கும். அப்பாயிரம் கேளாவிடில், குன்று முட்டிய குருவி போலவும், குறிச்சி புகுந்த மான் போல வும் மாணாக்கன் பெரிதும் இடர்ப்படும். அப்பாயிரம் நூலுக்குப் புறத்தே இருந்துவைத்தும், கரு அமைந்த மாநகர்க்கு உரு அமைந்த வாயில்மாடம் போலவும், தகை மாண்ட நெடுஞ்சுவர்க்கு வகை மாண்ட பாவை போலவும் அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களே போலவும், நாண்துறவாக் குலமகட்கு மாண்துறவா அணியே போலவும், தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போலவும், நூலுக்கு இன்றியமையாத சிறப்பினையுடையது என்று முந்து நூல்கள் உரைக்கின்றன. (பா. வி. பக். 2)
இனி நன்னூலார் இருவகைப் பாயிரமும் மாடத்துக்குச் சித்திரம் போலவும், மாநகர்க்குக் கோபுர வாயில் போலவும், நாட்டியமாதர்க்கு அணிகலன் போலவும் நூற்கு இன்றி யமையாச் சிறப்பின என்றார் (நன். 55) அது பொருந்தாமை யைச் சண்முகனார் மறுப்பர். (பா. வி. பக். 4)
பாவிற்கு அணி போல், சான்றோர் நாவுக்கு வாய்மை போல், திருமாலுக்கு அருள்போல், நூலுக்குப் பொதுப்பாயிரம் அமைந்துள்ளது என்னும், மாறன் அலங்காரம். (மா. அ. பாயிர. 64)
‘பொதுப்பாயிரத்தின் இன்றியமையாமை’ காண்க. விளக்கம் வருமாறு: கொழுவானது தைக்கும் ஊசி நுழைவதற்கு வழியாக்குவது; பாயிரம் நுலுள் நுழைவதற்கு வழியாக்குவது. வாயில்மாடம் நகர்க்குள் செல்வதற்கு வழியாக்குவது. பாயிரம் நூலுள் செல்வதற்கு வழியாக்குவது. பாவை சுவர்க்கு அணி செய்வது; பாயிரம் நூற்கு அணிசெய்வது. திங்கள் தனது கலையின் வளர்ச்சிக்குத் தகப் புறத்திருள் நீக்கி ஆகாயத்தை விளக்கும். பொதுப் பாயிரம் தன்னை அறிவதன் வளர்ச்சிக்குத் தக இடர்ப்பாடு (என்னும் இருளை) நீக்கி நூலினை விளக்கும். அணி குலமகட்கு அழகு செய்யும்; பொதுப் பாயிரம் அந்நூற்கு அழகு செய்யும். பாகன் அடங்காத யானையை அடக்கித் தன் குறிப்பின்வழி நடத்துவான்; பொதுப்பாயிரம், மாணாக்கர் அறிவுக்குப் பொருளான் அடங்காது தோன்றும் நூலினைத் தன் குறிப்பான் அடங்குமாறு காட்டி நடத்தும். (பா. வி. பக். 2, 3)
இன்னின்ன இலக்கணமுடைய ஆசிரியன், இன்னவாறு நூலைக் கூற, இன்னின்ன இலக்கணமுடைய மாணாக்கன், இன்னவாறு கேட்டல் வேண்டும் என்ற புறவுரை எல்லா நூலுக்கும் பொதுவாக அமைதலின் பொதுப்பாயிரம் எனப்பட்டது. ‘பொதுப்பாயிர இலக்கணம்’ (நன். 2) காண்க.
(பா. வி. பக். 156)
ஆசிரியன் மாணாக்கன் என்னும் இருவர்க்கும் பொதுமை குறித்துக் கொள்ளும் இட (-நில)த் தினது இயல்பு நான்காம். அவை அந்நிலன் தூய்மை, மரச்செறிவு, நற்காற்று, வெப்ப மின்மை, தட்பமுடைமை இவற்றைப் பெற்றிருத்தலும்; நான்கு பக்கமும் அடைப்பினைப் பெற்றிருத்தலும்; ஆசான் தான் உரைக்கும் பொருளைத் தன் உள்ளத்தே அமைத்தற்கும், தாம் கேட்ட பொருளை மாணாக்கர் சிந்தனை செய்தற்கும் வேறுவேறு இடம், அவ்விருவர்க்கும் வருதல் போதல் நிகழ்த்தற்கு வேறு வேறு வழிகள் என இவற்றைப் பெற்றிருத் தலும்; நூல் வைத்தற்கு ஏற்ற பீடமும், வெயில் மழை தடுப்பதற்கேற்ற விதானம் தாங்கி நிற்கும் கால்களும் என இவற்றைப் பெற்றிருத்தலும் என்பன. (பா. வி. பக். 121)
பாடற் பொருளில் தோன்றும் ஒன்பான் சுவையாகிய இன்பம்; மாறனலங்காரம் கூறும் பத்து அழகினுள் ஒன்று.
(மா. அ. 24)
தொல்காப்பியம் கூறும் உத்திவகை முப்பத்திரண்டனுள் ஒன்று.
ஆசிரியன் தான் கூறி வருகின்ற பொருளுக்கு இடையே வேற்றுப்பொருளொன்றனை இயைபு பற்றி இணைத்துக் கூறுதலும், சொல்லும் பொருளுக்குத் தொடர்புடையது ஒன்றனை ஆண்டே கூறாது அவ்விடம் விடுத்துப் பிறிதோரி டத்தில் கூறுதலும் போல்வன.
எ-டு : விளிமரபில், உயர்திணைப்பெயர்
விளியேற்கும் அதிகாரத்தில் விரவுப்பெயர் விளியேற்குமாற்றை,
‘முறைப் பெயர் மருங்கின்’ (சொல். 128 நச்.), முறைப்
பெயர்க்கிளவி’ (138) ‘முறைப் பெயர்க்
கிளவி’ (149) என்ற மூன்ற நூற்பாக்களால் இடையே
அமைத்தல்.
உயர்திணைப்பெயர் விளி ஏலா எனக் கூறும் அதிகாரத்தே தான் நீயிர் - என்ற விரவுப்பெயர்கள் விளி ஏலா (139, 145) என்று கூறுதல் இவ்வுத்திவகை இனம்.
(தொ. பொ. 665 பேரா; சொல். 442, 453, 461 நச்.)
ஒரு பொருளை ஓதியவழி, அதற்கு இனமாகிய பொருளைச் சேரக் கூறாது இடையீடுபடக் கூறுதல்.
எ-டு : ‘பெண்மை சுட்டிய’ (சொல். 180 சேனா) என்னும் சூத்திரம் ஓதி, அதன் பகுதியாகிய ‘ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி’ (சொல். 194) என்பதனை இடை யிட்டு வைத்தல் போல்வன. (தொ. பொ. 656 இள.)
விதிக்கப்பட்ட இலக்கணம் இப்பொருளுடைய சொல்லைப் பற்றியது என எடுத்துக்காட்டிக் கூறுதல்.
(தொ. மர. 109 ச. பால)
எ-டு : ‘பனையென் அளவும் கா என் நிறையும்’ (எழுத். 169)
‘சாவ என்னும் செய என் எச்சம்’ (எழுத். 209)
நூலின்கண் வரப்பெறா எனப்படும் சிதைவு எனப்படும் பத்துக் குற்றங்களுள் ஒன்று. ஆயினும் இது பயன்படும் குற்றம் ஐந்தனுள் ஒன்றாய் வழுவமைதியாக அருகிவரப் பெறும்.
எ-டு : ‘ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும்;’ (தொ. எ. 269 நச்.)
‘அக்கென் சாரியை பெறுதலு முரித்தே
தக்கவழி அறிதல் வழக்கத் தான.’ (தொ. எ. 270 நச்.)
இவை ‘ஊ’ என்ற பெயர் ‘ஆ’ என்ற பெயர் போல னகரச் சாரியை பெற்று ஊன் என்று ஆகும்; அவ் ‘ஊ’ எனும் சொல் னகரச் சாரியையோடு அக்குச் சாரியையும் பெறும் என்று குறிப்பிடுவனவாம். ‘தக்க...... தான’ என்பது அத்துணை இன்றியமையாச் சூத்திரச் செய்தி கூறுவதன்று ஆதலின், ‘பொருளில மொழிதல்’ ஆம் ஆயினும் “அக்குச் சாரியை பெற்றவழி, முன்பு கூறிய னகரச் சாரியை விலக்குண்ணும் என்று கருதற்க; னகரச் சாரியையோடு அக்குச் சாரியையும் பெறும்; ஊகார இறுதிக்குரிய வல்லெழுத்து மிகுதலு முண்டு என்று கொள்க.” என்ற கருத்தைத் ‘தக்க .............. தான’ என்ற சொற்றொடர் தெரிவித்து, ஊ + குறை ஊன் + குறை ஊனக் குறை என்ற கருத்தைப் பெறப்பட வைத்தலின், இவ்விடத்து இப்பொருளில மொழிதல் பயன் தருவதால் வழுவமைதி யாயிற்று. (தொ. பொ. 663 பேரா.)
‘தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய்
மரபே இயன்றும் மயங்கியும் வந்தன வாங்கமைத்தோன்
அரவே ரகலல்குல் அம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்
குரவே கமழ்குழ லாய்கொண்ட வான்பெயர் கொச்சகமே’. (யா. கா. 33)
இக்காரிகையுள், மகடூஉ முன்னிலையாக வந்த தொடர்கள் ‘பொருளில மொழிதல்’ என்ற வழுவாம்.
‘பொழிப்புரை’ காண்க. ‘பொழிப்பகலம் நுட்பம் நூலெச் சம்’ (நாலடி. 319)
பதங்கட்கு உரையெனக் கூறாது, உரையினை மாத்திரம் கூறுதல்; பிண்டப் பொருள் கூறுதல். (இறை. அ. 1 உரை)
பதவுரையாக அன்றி, பதங்கள் நீங்க அவற்றின் பொருளை மாத்திரம் தொகுத்துச் சொல்லும் உரை. ‘தொகுத்துரை’ எனவும்படும். (நன். 21) ‘பொழிப்புத் திரட்டல்’ என்பதும் அது.
‘பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளை
பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே.’ (நேமி. உரை மேற்.)
குற்றமற்ற செல்வம்; அறநிலை அறத்தான் வந்த திருவும், மறநிலை அறத்தான் வந்த திருவும், பனுவல் ஆராய்ச்சியான் வந்த கல்வி திருவும், ஞானத்திருவும், மாற்றார் நிலத்தைத் தன்னை அடுத்தார்க்கு நல்குகின்ற கொடைத்திருவும் அவை யெல்லா வற்றானும் எய்திய புகழ்த்திருவும் எனப் பலவகைத் திருக்களையும் குறிக்கும். (பா. வி. பக். 178)
குற்ற மற்ற நூல்; அஃதாவது நூற்கு ஆகா என்ற பத்துக் குற்றமும் இன்றி, முப்பத்திருவகை உத்தியொடு புணர்ந்த நூல்.
(பா. வி. பக். 178)
போக்கறு பனுவல், நிலம் தரு திருவின் பாண்டியன் அவை யத்து, அறம் கரை நாவின் நான்மறை முற்றிய, அதங் கோட்டாசாற்குக் காட்டி : இத்தொடர்களின் இயைபு -
தொல்காப்பியமாம் இந்நூல் இயல்பானே குற்றமில்லாத தாயினும், பெரியோர் கேட்டு நன்று என்று கூறாவிடில் பயன்படாமையின், ‘அறம் கரை............... ஆசான்’ இன்றியமை யாமையுடையான்.
அவ்ஆசானும் ஒருவனாய்க் கூறின் பயன்படாமையின், ‘அவையம்’ வேண்டிற்று.
அவையும் பாண்டியனை யன்றிக் கூடாமையின், ‘பாண்டியன்’ இன்றியமையாமையுடையான்.
பாண்டியனும் திரு இல்லாமல் அவையைப் பேணல் முடியா மையின் ‘திரு’ வேண்டிற்று.
அத்திருவும் ஈகையொடு கூடாவிடத்தே பயனின்மையான் அதற்குத் ‘தருகை’ வேண்டிற்று.
அத்தருகையும் ஆற்றல் இல்வழி மாற்றாரான் அழியும் ஆகலின், ‘நிலம்தரு மாற்றல்’ வேண்டிற்று.
அப்பனுவலும் குற்றமுளதாயின் கொள்ளப்படாமையான் அதற்குப் போக்கறுதல் வேண்டிற்று.
இவ்வாறு இவையெல்லாம் ஒன்றற்கொன்று தொடர்பாக முடிதலின் அம்முறையே ‘போக்கறு பனுவல்.............. ஆசாற்குக் காட்டி’ என்றார். (பா. வி. பக். 184)
பெற்றம் (-ஆ), எருமை, புலி, மரை, புல்வாய் என்னும் விலங்கு களும், நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு எனப்படுவனவாகிய சுறா, முதலை, இடங்கர், கராம், வரால், வாளை என்பனவும் ஆகிய இவற்றின் ஆண்பாலைக் குறிக்கும் மரபு பற்றிய பெயர்; நாரை முதலிய பறவைக்கும் இப்பெயர் ஆண்பாலைக் குறிக்க வருதலுண்டு. (தொ. மர. 2, 41, 42, பேரா.)
நூல் பயிற்றும் ஆசிரியன். (இ. கொ. பாயிரம்)
ம
குரங்குக்கும் மக்களுக்கும் சொல்லப்படும் இளமைமரபு பற்றிய பெயர்களுள் ஒன்று.
வருமாறு : ‘மகவுடை மந்தி போல’ (குறுந். 29)
‘மான்தோல் பள்ளி மகவொடு முடங்கி’ (பெரும்பாண். 89)
(தொ. மர. 1, 14, 23)
மிகவும் முற்பட்டதாகிய நூல்களை ஆராய்ந்து தெளிந்த கேள்வியையுடைய அகத்தியனால் கூறப்பட்ட அகத்தியம் என்னும் நூல் போல, இயல் இசை நாடகம் என்னும் மூன்று பிண்டத்தினையும் தனக்குறுப்பாகப் பொருந்துமாறு உட்கொண்டு நிற்றலையுடைய நூல். (மா. அ. 20)
பிரபந்தத்தின் முதல் அல்லது இறுதியிற் செய்யப்படும் துதி.
வாழ்த்து, வணக்கம், வத்து நிர்த்தேசம் என்ற முப்பகுதியுடைய நூன்முகம். (வேதா. சூ. 8) (L)
‘வண்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த (மஞ்சள் முன்றில்)’ (பெரும். 354)
‘நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழிமடல் விறகின் கழிமீன் சுட்டு’ (புறநா. 29)
இவ்வடிகளில் ‘மடல்’ என்னும் சொல் நிகழ்கிறது.
உலர்ந்த தென்னம்பாளையை வார்போலக் கிழித்து, தெங்கின் ஓலை பனையோலை ஈத்திலை முதலியவற்றைப் பிணிக்கும் நாராகக் கொண்டு, குடில் முதலியன வேய்தலின் ‘வாடுமடல்’ என்பது பழுத்த ஓலையைக் குறியாது பாளை நாரினைக் குறிக்கிறது.
புள்ளோப்பும் சிறாரும் சிறுமியரும் பனங் கருக்கினைக் கொள்ளாமல், தானே வீழ்ந்த பனம் பூவாகிய மடலையே கொண்டு அதில் கனல் கொளுத்தி அக்கனலில் மீன் சுடுதல் இயல்பு. ஆதலின் ‘ஓழிமடல்’ என்பது தானே வீழ்வதாகிய பனம்பூவையே குறிக்கும்.
‘ஒழிமடல்’ என்றமையால், தானே கழிவதாகிய பனம் பூவாகியமடல் குறிக்கப்படுவதன்றி, பனங்கருக்குத் தானே கழிதலின்மையின் அது குறிக்கப்படுவதாகாது. மீன் சுடுதற்குப் பனங்கருக்கினைக் கொள்ளின் அது மிக்கெரியுமாதலின், மீன் சுடுபதம் நன்கு அறியப்படாது; பனம்பூவாயின், அது பொற்கொல்லரது ஊதுலைக்கண் கரித்துகள் எரியுமாறு போலச் சீராக எரிந்து மீன் சுடுதற்கு மிகவும் ஏற்றதாம்.
இன்ன காரணங்களால் மடல் இவ்வீரிடத்தும் ஓலையைக் குறிக்காமல் பாளையையே குறித்தல் புலப்படும்.
‘மடல் ஓச்சி’ என்னுமிடத்து, மடல் ஆகுபெயராலேயே மட்டையை உணர்த்திற்று. (பா. வி. பக். 129)
தானே தன் பழங்களைக் கீழே உதிரக் கொடுத்தாலல்லாமல், பிறர் தன்பால் ஏறிவந்து அவற்றைப் பறித்துக்கொள்ள இடங் கொடாது, பனங்கருக்கினையுடைய பனை. இவ்வியல்பு, தானே இசைந்து பாடம் சொல்லினல்லாமல், பிறர் தன்பால் வந்து வினவிக் கேட்டறிய வாய்ப்புக் கொடாத நல்லாசிரிய னல்லாதானது இயல்புக்கு உவமையாக வந்தது. (நன். 33)
மடல் மட்டையாகாது என்பது -
“மடல் - பாளை; அஃது ஆகுபெயரான் மட்டையை உணர்த் திற்று” என்றல் பொருந்தாது. மடல் - மட்டை என்று பொருள் கொள்ளின். மட்டையின்றியே காய்க்கும் பனை ஒன்றிருப் பின் அப்பெண்பனையை ‘மடற்பனை’ என்பது இனம் சுட்டுதல் கூடும்; ஆயின் அவ்வாறு காய்க்கும் பனை யாண் டும் இல்லையாதலின், அவ்வடை இனம் சுட்டாது; ஆதலின் அப்பொருள் பொருந்தாது. (மடற்பனை - ஆண்பனை) (பா. வி. பக். 10)
குரங்கு முசு ஊகம் இவை மூன்றன் பெண்பாலும் மந்தி என்னும் பெயர் பெறும். (தொ. மர. 67 பேரா.)
தொல்காப்பியனார் சுட்டும் ‘சிதைவு’ எனப்படும் நூற் குற்றங்களுள் ஒன்று; தெளிவுறாமல் கவர்படு மொழியால் மயங்கக் கூறுவது.
எ-டு : ‘இன்னின் இகர மாவி னிறுதி
முன்னர்க் கெடுதல் உரித்து மாகும்.’ (தொ. எ. 120 நச்.)
இன் சாரியையின் இகரம் ஆ என்ற சொல்லின் முன் வரும் போது கெடுதலும் உண்டு. ஆ + இன் + ஐ = ஆவினை, ஆனை - என்று கூற வந்தவர், அச்சொல்லை ஆவின் இறுதி, மாவின் இறுதி என இருவகையாகவும் பிரித்துப் பொருள் செய்யு மாறு வைத்து, மா + இன் + ஐ = மாவினை, மானை என்ற சொல்லையும் கொள்ளுமாறு வைத்தல் மயங்கக் கூறலாம். ஆயினும் ஆ, மா என்ற இரண்டு சொற்களுக்கும் பொருந்தும் இலக்கணம் இச்சூத்திரத்தில் அமைந்ததால் இது பயனுடைத் தாய் வழுவமைதியாயிற்று.
(ஒப்பக் கூறல் என்ற உத்திவகை பற்றிப் பேராசிரியர் உரைத்தது இது.) (தொ. பொ. 665)
“வழக்கு நூலே கூறுவன்” எனப் புகுந்தவன், அதனொடு தத்துவச் செய்திகளை இணைத்துக் கூறுதலும், தமிழ்மரபு பற்றிக் கூறவந்தவன் அதனொடு வடமொழி வழக்கையும் இணைத்து உடன் ஆராய்தலும் போல்வன பயன்படா மயங்கக் கூறல் என்ற குற்றமாகும். (தொ. பொ. 663 பேரா.)
நன்னூலார் சுட்டும் பத்துக் குற்றங்களுள் ஒன்று; குறித்த ஒரு பொருளை இன்னதென்று துணியக் கூடாத வகையால் கூறுவதொரு குற்றம். (நன். 12)
முன்னோர் வழங்கிய மரபு பற்றிய சொல்வழக்கையும், நூல் மரபையும், அவற்று உரைமரபையும் கூறும் இலக்கணப் பகுதி; தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் இறுதி இயல். ஓரறிவுயிர் முதலாகிய ஆறும் இவ்வியலுள்ளேயே கூறப் படும். இவ்வியற்குப் பேராசிரியர் உரை மிகச் சிறந்த தொன்று.
பாட்டு முதலாய செய்யுட்கண் இருதிணைப் பொருள்களது தன்மையியல்புகளையும் ஒழுகலாறுகளையும் பற்றிக் கிளக்கு மிடத்து, அப்பொருள்களின் பண்போடமைந்த தன்மைகள் தெற்றெனப் புலப்படுமாறு சான்றோரான் வழிவழியாக வழங்கப்பட்டு வரும் மரபுகளையும் இருவகையாய நூலாக்க மரபுகளையும் பற்றிக் கூறுதலின், தொல்காப்பியத்தின் ஈற்றியல் மரபியல் என்னும் பெயர்த்தாயிற்று (தொ. மர. பாயிரம் ச. பால)
இவ்வியலுள் ஒதப்பெறும் மரபுகளாவன : இருதிணைப் பொருள்கட்கும் இயற்கையாக அமைந்த இளமை ஆண்மை பெண்மை பற்றி வழங்கும் பெயர்க் குறியீட்டு மரபுகளும், ஓரறிவுயிர் முதலாக உயிர்களைப் பற்றிய மரபுகளும், உயர் திணைக்கண் பண்பும் செயலும் பற்றிய குடிமைவகையான் அமைந்த நால்வகைக் குலம் பற்றிய வெளிப்பாட்டு மரபுகளும், உலக வழக்கினுடைய சில மரபுகளும், மரபு பிறழக்கூடாது என்றற்குக் காரணமும், முதலும் வழியுமாகிய நூல்களைப் பற்றிய மரபுகளும், அவற்றொடு தொடர்புடைய பிறவுமாம். (தொ. மர. பாயிரம். ச.பால)
இனிச்
“சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே”
எனவும்,
“சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றும்”
எனவும், வரையறுத்து ஓதியவாறே சார்பெழுத்து மூன்று என்னாது சில உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக் களையும் உடன்சேர்த்து எண்ணுதலும், தன்மைச் சொல்லை உயர்திணையென்னாது விரவுத் திணையெனச் சாதித்தலும்,
“நடுவணைந்திணை”
என்னுஞ் சூத்திரத்தின் விதியொடு மாறுகொளப் பாலைக்கு நிலம் பகுத்துக்கோடலும், இன்னும் இவை போல்வனவும், மரபுநிலைதிரிதலின், வழிநூல் சார்புநூல் ஆதற்கு ஏலாவாய் இழுக்குப்படுமென்பது. அற்றேல், ஒன்றன்வழியேயன்றியுந் தாந்தாம் அறிந்தவாற்றானே நூல்செய்யப்பெறாரோ வெனின்;- அது மரபன்று என்பது நோக்கியன்றே ஆசிரியர்
“மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்”
என்னுஞ் சூத்திரவிதி நூலிற்கும் எய்துவித்து, நூலின் மரபு கூறப் புகுந்தாரென்க. காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின், அதுபற்றிச் செய்யும்நூலும் வேறுபட அமையும் பிறவெனின், முற்காலத்து வழக்கு வீழ்ந்ததனை வழுவென்று களையப் படுமாயினன்றே பிற்காலத்து வேறுபடப் பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழுவிக்கொள்வது? தொல்லாசிரியர் வழக்கே வழக்குப் பிற்காலத்து வேறுபட வழங்கப்படுமாயின் அவ்வழக்கு இலக்கணத்தொடு பொருந்தாதென விலக்குதற் கன்றே
“வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட் டாக லான”
என்றாராகலின், அமையாதென்க. புதியன புணர்த்தல் பழைய வற்றோடு முரணாதவழியேயென உணர்க. (சூ.வி. ப. 8,9)
திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன யாவையெனின்: - செய்யுளியலுட் கூறிய ஒற்றளபெடையை அளபெடை அதிகாரப்பட்டமை நோக்கி உயிரளபெடையைச் சார வைத்துக் கூறுதலும், தனிநிலை முதனிலை இடைநிலை ஈறெனு நால்வகையிடத்தை மூன்றிடமென அடக்குதலும்,
“மெல்லெழுத்து மிகுத லாவயி னான”
என்றவாறே தங்கை நங்கை எங்கை செவி தலை புறம் என மகாரங்கெட்டு இனமெல்லெழுத்து மிகுமென்னாது மகரமே இனமெல்லெழுத்தாய்த் திரியும் என்றலும்,
“அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெட்டு”
மெல்லெழுத்து மிகும் என்னாது அங்கையென்புழிக் ககரவகரங்கெட்டு மகரந்திரிந்து முடியுமென்றலும்,
“முதலீ ரெண்ணி னொற்று ரகரமாகும்.”
“இடைநிலை ரகர மிரண்டெனெண் ணிற்கு
நடை மருங்கின்று”
என்றவாறே கூறாது இரண்டனொற்றுயிரேக நின்ற ரகர வொற்றின்மேல் உகரம் வந்து செய்கைப்பட்டு முடியுமென்ற லும், நாகியாதென யகரம் வரும்வழி உகரம் கெட்டு இகரம் தோன்றும் என்னாது உகரமே இகரமாய்த் திரியும் என்றலும், நெடுமுதல் குறுகும் மொழிகளின்முன் பொதுப்பட ஆறன் உருபிற்கும் நான்கன் உருபிற்கும் அகரநிலையுமெனக் கூறி
“ஆற னுருபி னகரக் கிளவி
யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும்”
என்னாது,
‘குவ்வின் அவ்வரும்’
என்றொழிதலும், ஆடிக்குக் கொண்டான் என்புழி இக்குச் சாரியையென்னாது குச்சாரியை என்றலும், வற்றுச் சாரியை வகரங்கெட்டு அற்றென நிற்குமென்னாது அற்றுச் சாரியை யென்றே கோடலும், இன்னென்சாரியை இற்றெனத் திரியுமென்னாது இற்று என்பது வேறு சாரியை எனக் கோடலும், அக்கென் சாரியை மெய் மிசையொடுங்கெடும் என்னாது அகரச் சாரியையெனக் கோடலும், அ ஆ வ என மூன்றும் பலவறிசொல்லென்னாது உண்குவ உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து இடைநிலை எனக் கொண்டு அகர விகுதி என்றொழிதலும், அகம்புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடு நோக்கி அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்தலும், வெட்சித்திணை உழிஞைத்திணைகளின் மறுதலை வினையை வீற்று வினையாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடு பற்றி வேறு திணையாகவைத்து எண்ணுதலும், இன்னோ ரன்னவை பிறவுமாம். இவை இங்ஙனம் வேறுபடினும், புணர்ச்சிமுடிபும் சொன்முடிபும் பொருண்முடிபும் வேறுபடாமையின், மரபு நிலை திரியாவாயின. இவ்வுண்மையுணராதார் பன்னிருபடல முதலிய நூல்களை வழீஇயினவென்று இகழ்ந்து, பன்னிரு படலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியனார் கூறி தன்று எனவும், தொல்லாசிரியர் வழக்கொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறுப. (சூ.வி. ப. 7,8)
வழக்கிடத்துளவாகிய வழக்குமரபு, செய்யுளிடத்துளவாகிய செய்யுள்மரபு என்பன. வழக்கிற்கே உளவாகிச் செய்யுட்கு ஏலாதனவும், செய்யுட்கே உளவாகி வழக்கிற்கு ஏலாதனவும், இரண்டற்கும் பொதுவாவனவும் என அவை குறித்துணரப் படும் என்பது. (இ. வி. பாட். 148)
நூற்கு விலக்கிய ஈரைங் குற்றங்களுள் ஒன்று; கேட்போர்க்குப் பொருள் விளங்காமல் மயங்குதற்கு இடனாதல். இதனை நன்னூல் ‘மயங்க வைத்தல்’ என்னும்; தொல்காப்பியம் ‘மயங்கக் கூறல்’ என்னும். (மா. அ. 23)
மங்கலவினைகட்கு உரியதாய், இன்றியமையாததாய், யாவரும் தன்னை விரும்பிச் சூடிக் கொள்ளுமாறு மென்மைக் குணம் உடையதாய், உரிய காலத்தில் தன் முகம் மலரப் பெறுவது பூவினது மாண்பு. நல்லாசிரியனும் மங்கலவினை கட்கு உரியவனாய், எவ்வினைக்கும் தான் இன்றியமையாத வனாய், தன்னை யாவரும் மதிக்குமாறு மென்மைக்குணம் உடையனாய், பாடம் சொல்லும் காலத்தில் மாணாக்கர்முன் முகமலர்ச்சி யுடையனாய்த் திகழ்வான். ஆகவே நல்லாசிரி யனுக்கு மலர் உவமை கூறப்படுவதாயிற்று. (நன். 30)
அளக்கப்படலாகாத அளவும், தன்னிடத்துப் பொருளும், அசைக்க முடியாத நிலையும், நெடுந்தொலைவினின்றும் காணப்படும் தோற்றமும், பிறவிடமெல்லாம் வறண்டு போயினும் மழைக்கண் உண்ட நீரால் அருவியாக நீர்வளம் சுரத்தலும் மலையினுடைய மாண்புகள். நல்லாசிரியனும், தனது கல்விப்பரப்பும் அப்பொருளும் பிறரால் வரையறுத்து அளக்கப்படாதவனாய், வாதுபோர் செய்வோரால் துளக்கப் படாத கல்விநிலையுடையவனாய், பலராலும் அறியப்படும் கல்வியால் வந்த உயர்ச்சியும், தனக்குப் பொருள் வருவாய் குன்றினும் மாணாக்கர்க்குக் கல்விவளம் வழங்கும் கொடையு முடையனாய்த் திகழ்வான். ஆதலின் நல்லாசிரியனுக்கு மலை உவமை ஆயிற்று. (நன். 28)
குடிப்பிறப்புக்குரிய பொதுவியல்பாவன நகை, ஈகை, இன்சொல், இகழாமை, அன்பு, பணிவு, செப்பம், நாணம் என்னும் எட்டும் ஆம்.
மலையானது உயர்பிறப்புடைமையால் அதற்குரிய எட்ட னுள் ஈகையும் நகையும் உடையது; இன்சொல் இன்மையும் இகழ்தலுமுடையது.
நிலமானது அவ்விரண்டு குற்றங்களுமுடையதன்று; ஆயின் அன்பின்மையும் பணிவின்மையும் உடையது.
பூவானது அவ்விரண்டு குற்றங்களுமுடையதன்று; ஆயின் செப்ப மின்மையும் நாணின்மையும் உடையது.
துலாக்கோல் அவ்விரண்டு குற்றங்களுமுடையதன்று.
இவ்வாற்றால் மலை முதலிய நான்காலும் நல்லாசிரி யனுக்குரிய குடிப்பிறப்பியல் எட்டும் எஞ்சாமல் உணரப் படுதலின், அவனுக்குரிய இயல்பினைப் புலப்படுத்த வல்ல பிண்ட உவமையாக அவற்றை அம்முறையே ஓதினார். (பா. வி. பக். 17, 21)
‘மலை நல்லாசிரியருக்கு உவமை ஆதல்’ காண்க. (நன். 28)
நன்னூல் சுட்டும் நூற்கு ஆகாத குற்றம் பத்தனுள் ஒன்று; சொல்லப் புகுந்த செய்தியோடு இயைபில்லாத பிறிதொன் றனை விளக்கிக் கூறுதல் (நன். 12)
இளமையைக் குறிக்கும் மரபு பற்றிய பெயர்களுள் ஒன்று; யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய், வருடை இவற்றின் இளமையை உணர்த்தும். (தொ. மர. 12 பேரா.)
ஆடு, மான், குதிரை, அழுங்கு இவற்றின் இளமை மறி யெனப்படும். (திவா. பக். 61)
இலக்கண நூலாசிரியர் மேற்கொள்ளும் எழுவகை மதங் களுள் ஒன்று. பிறர்தம் நூற்கொள்கையை மறுத்தல். ‘நுந்தை’ என்னும் முறைப்பெயரில் முதலில் நகர மூர்ந்து குற்றியலுகரம் வரும் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியது (எ. 67 நச்.) நன்னூலார்க்கு உடன்பாடன்று; அதனை அவர் கூறாதொழிந்தமை ‘மறுத்தல்’ எனும் மதம் (நன். 94) (நன்.11)
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று. ஒரு செய்தியை ஆசிரியன் கருத்துக்கு மாறாகக் கூறுவான் பிறன் உளனாயின், அக்கருத்திற்கே இடன் ஏற்படாத வகையில் அதனை மறுத்து நீக்கி, ஆசிரியன் தான் கொண்ட கருத்தினை வலியுறுத்தி வெளியிடுதல்.
வடமொழியில் அளபெடை மூன்று மாத்திரை ஒலியிற்று என்ற கருத்தினைத் தம் நூலுக்கு ஒவ்வாது என்று கொண்டு, ‘மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே’ (எழுத். 5), ‘நீட்டம் வேண்டின் அவ்வள புடைய, கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்’ (எழுத். 6) என்று, மற்றவர் கருத்தைத் தாம் மறுத்துத் தம் முடிபை நிறுத்தல் இவ்வுத்தி வகை.
‘எழுத்துத் தனித்திசைக்குங்கால் அதன் ஒலிவேறு; ஒரு சொல்லிடைப் படுத்திசைக்குங்கால், அதன் ஒலி வேறு’ என்ற கருத்தை மறுத்து,
‘மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்து வேறு இசைப்பினும் எழுத்தியல் திரியா என்மனார் புலவர்’ (எழுத். 53 நச்.) என்று கூறுதல் போல்வன இவ்வுத்தி வகையின் இனம். (தொ. பொ. 665 பேரா.)
குதிரை, யானை, பன்றி இவற்றை மா எனும் பெயர் குறிக்கும். (விலங்கின் பொதுப்பெயராகவும் மா வரும்.) (திவா.பக். 58)
மாறன்அலங்காரம் சுட்டும் உத்திவகை முப்பத்திரண்டனுள் இருபத்தொன்பதாவதாகக் கிடந்தது; ஒரு சூத்திரத்துக்குப் பொருள் கொள்ளுமிடத்தே அகன்று பொருள் கிடப்பனவும் அணுகிக் கிடப்பனவுமான இருவகையையும் பொருள் முடியும் வகையால் கொணர்ந்து உரைப்பச் செய்வது. அது கேட்டோர் மனத்துட் கொள்ளுமாற்றால் இருத்தல் வேண் டும் என்பது. (அதற்கு, இளம்பூரணர் உரையன்றி நச்சினார்க் கினியர் எழுதின உரையைக் கண்டுகொள்க என்பது அவ்வுரையாசிரியர் உரை.) (மா. அ. 25)
மாட்டு எனவும், மாட்டெறிந் தொழுகல் எனவும் படும். ‘மாட்டு’க் காண்க.
நன்னூலாசிரியர் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; ஒரு சூத்திரத்திற் கூறப்பட்டதனை அதனை யொத்த பிற சூத்திரத்திலும் கொண்டு உய்த்துரைப்பது.
மேற்புணரியலுள், அல்வழிவேற்றுமைப் புணர்ச்சிக்கு விதித்த தோன்றல் திரிதல் கெடுதல் என்பனவற்றையும், செய்யுட்கு விதித்த வலித்தல் மெலித்தல் முதலிய ஒன்பது விகாரத்தை யும், பதவியலில், பகுபதம் பெறும் என மாட்டுதலின் இது மாட்டெறிந்தொழுகல் என்னும் உத்தி. (நன். 133)
இவ்வுத்தி வீரசோழியத்துள் 180ஆம் காரிகை உரையுள் குறிக்கப்பட்டுள்ளது. (நன். 14)
மாட்டெறிந் தொழுகல்; அது காண்க.
சுருங்கச் சொல்லல் முதலிய பத்து நலன்கள். (நன். 13) (யா. க. பாயிர உரை)
கட்குடியன், சோம்புதலுடையான், அகங்காரமுடையான். காமமுடையான், கள்வன், நோயாளி, அறிவில்லாதான், மாறுபாடுடையான், கோபமுடையான், மிகத்தூங்குவான், மந்தபுத்தியுடையான், நூற்பரப்பைக் கண்டு பயில அச்ச முற்றுக் கலங்கும் உள்ளத்தான், அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சாதான், பாவத்தொழில் புரிவான், பொய்ம்மையே யுடையான் என இத்தன்மையுடையார். (நன். 39)
தன்மகன், தன்னுடைய ஆசிரியன் மகன், அரசனுடைய மகன், செல்வம் மிகுதியாகக் கொடுப்போன், தனக்கு வழிபாடு செய்வோன், தான் சொல்லும் நூற்பொருளை விரைய மனத்திற்கொண்டு மறவாத அறிவு மாட்சியுடையோன் என இவர் ஆசிரியனால் பாடம் கற்பித்தற்குரியார். (நன். 37)
‘மாணாக்கர் வகை’ காண்க. தலை மாணாக்கர், நீரினின்று பாலைப் பிரித்துண்ணும் அன்னம்போல, ஆசிரியன் சொல்லு மவற்றுள் கொள்ளத்தக்கவற்றையே கொள்வர். ஓரிடத்தேயே முளைத்த புல்லை நிரம்பவுண்டு அசையிடும் பசுப்போல, கலைவல்ல ஆசிரிய னொருவனிடத்தேயே வேண்டுவன நிறையக் கற்றுக் கற்றவற்றைச் சிந்தித்துத் தெளிவர். இனி, இடைமாணாக்கர் உழவனது உழைப்பிற்கேற்ற அளவே பயன் தரும் நிலம் போல, ஆசிரியனது பாடம் பயிற்று முயற்சி யளவே தாமும் கல்வி வல்லராவர்; சொன்னதையே சொல்வ தல்லது பிற சொல்ல மாட்டாத கிளி போல, ஆசிரியன் பாடம் சொன்னவற்றை யன்றிப் பிறவற்றை உய்த்துணர்ந்து தேர்ந்து அறியமாட்டாராவர். ஏனைக் கடை மாணாக்கர் மாணாக்கர்க்குரிய இலக்கணம் பெறாதவர் ஆதலின் ஈண்டுக் குறிக்கப் பெறார். (நன். 38)
தலைமாணாக்கர், இடை மாணாக்கர், கடை மாணக்கர், இவர்கட்கு உவமையாவன முறையே அன்னமும் ஆவும், நிலமும் கிளியும், இல்லிக்குடமும் ஆடு எருமை நெய்யரி என்பனவும் ஆம். (நன். 38)
கற்பிக்கப்படுவோன்; கல்வியால் தன்னை மாண்புடையோ னாக்கிக் கொள்ளுதலுடையான் என்று பொருள் கூறுப. ஆடவர் கல்வி பெறுதலே பண்டு மிகுதியும் நிலவியமையின் ஆண்பாற் சொல்லாக அன் விகுதி பெற்றது. ‘மாணாக்கி’ பெண்பாற் சொல்லாகக் கோடல் ஆம்; இச்சொல் பெருங் கதையுள் பல இடங்களிலும் வந்துள்ளது.
நூற் பொதுப்பாயிரம் சுட்டும் ஐந்து செய்திகளுள் நான்காவ தாகக் கிடந்தது. இதன்கண் மாணாக்கர் ஆதற்குரியார் இன்னார் என்பதும், அவர்கள்தம் வகையும், கடைமாணாக் கரேயன்றி மாணாக்கர் ஆகத்தகாதவர் இன்னார் என்பதும் நுவலப் பெறும். (நன். 37-39)
1) அகலா நடைத்தாதல், 2) பொருள் புலப்பாடு, 3) பொருள் நலன், 4) சொல் நலன், 5) ஓசை இனிமை, 6) ஊதியம் பயத்தல், 7) நவில் தொறும் புதுவதுவாய் நலனளிப்பது என்னுமிவை இந்நூலுள் சிறப்பாகக் கூறப்படும் அழகுகள். (ஏனைய ஆழமுடைமை, உலக மலையாமை, உதாரணம் புணர்த்தல் இவை பிறவற்றிலும் சொல்லப்படும் பொதுவானவை.)
(மா. அ. 24)
பிற நூலுட் சொல்லப்படாது சிறந்த அம்மூன்றாவன : விரிந்தவை இவை என விழுமிதின் காட்டல், மாட்டுறுப் பினவா மனக்கொளக் கூறல், தீபக வகையால் சிறப்புறக் கூறல் என்பன. (மா. அ. 25)
பொருளில கூறல், மருள் நிலைத்தாதல், இன்னாச்சொல் பெறல், வெளிறுபட்டழிதல், மொழிந்ததை மொழிதல், முரண்கொள மொழிதல், குறைபடக் கூறல், மிகைபட விளம்பல், சந்த இன்பம் தழுவுதலின்மை, எதிர்மறுத்துணர்த் தல் என்னுமிவை. (மா. அ. 23)
நன்னூல் நூற்கு ஆகா என விலக்கும் பத்துவகைக்குற்றங் களுள் ஒன்று; முன்சொன்னதற்கு மாறுபடுமாறு பின்னர் ஒரு செய்தியைக் கூறுதல். (நன். 12)
இஃது அமைத்துக் கொள்ளத்தக்க சிதைவாகும் ‘மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை’ (தொ. எ. 415) என்ற நூற்பாக் கருத்தினை தெங்கங்காய், கீழ்கம்புல் என்றாற் போலப் புல்லிற்கும் கோடல் மாறுகொளக் கூறல் எனத் தழீஇக் கொள்ளப்பட்ட சிதைவாகும். (நச்.) (தொ. பொ. 663 பேரா.)
நன்னூல் குறிக்கும் நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; ஒரு செய்தியை விளக்க வேண்டும் அளவின் மிகுமாறு சொற்கள் பல்கக் கூறுவது. (நன். 12)
மாறனலங்காரம் சுட்டும் நூற்குற்றம் பத்தனுள்ஒன்று; மிகைபடக் கூறல். (மா. அ. 23)
நூல்முகத்தே அதன் பெருமையை முன்னுரைக்கும் பாயிரம்; பாயிரத்திற்குரிய பரியாயமாக வரும் காரணப் பெயர்களுள் ஒன்று. (நன். 1)
பலவகையாகத் தனக்கு நீர் பாய்ச்சுதல் முதலியன செய்து உதவித் தன்னைப் பேணிக் காத்த உடைமையாளனுக்கு உதவாமல், அல்லாதவனுக்கு உதவும் இயல்பினையுடையது வளைந்த தெங்கு. இவ்வளைந்த தெங்கு போல்வான், நல்லாசிரியன் அல்லாதான் தனக்குத் தொண்டாற்றி வழிபாடு செய்து வரும் மாணாக்கனுக்குப் பாடம் கற்பியாமல், அவ்வியல்புகளில்லாத வேற்று மாணாக்கனுக்குத் தான் வலியச் சென்று பாடம் சொல்லும் இயல்பினனாதலின், அவ்வாசிரியனுக்கு முடத்தெங்கு உவமையாயிற்று; பயன்பற்றி வந்த உவமை. (நன். 35)
‘முடத்தெங்கின் இயல்பு’ காண்க. (நன். 35)
நன்னூலார் கூறும் உத்தி; மேலோர் முடித்தவாறே தானும் முடித்துக் காட்டுதல். ‘ பகுதி விகுதி’ என்னும் சூத்திரம் (133) முதல், ‘றவ்வொடு உகர உம்மை’ என்னும் சூத்திரம் (145) முடியப் பகுபதங்களை நன்னூலார் மேலோர் முடித்தவாறு முடித்துக் காட்டியமையால் இப்பதின்மூன்று சூத்திரமும் முடித்துக் காட்டல் என்னும் உத்தியின்பாற் படுவன. (நன். 14)
இது தொல்காப்பியம் கூறும் முப்பத்திரண்டு உத்தி வகையுள் ஒன்று.
ஒரு பொருளை விளக்க வேண்டியஇடத்து, ஆசிரியன் தானே விளக்கம் கூறிப் புலப்பட வையாது, இது சான்றோர் அறுதியிட்டு உறுதி செய்த கருத்து என்றே கூறிவிடுத்தல்.
எ-டு : ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை பட்டியல் தந்து அப்பட்டியல் தான் வகுத்தது அன்று, ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்திய’ செய்தி என்று கூறுதல் (582) போல்வன இவ்வுத்தி வகை.
மாத்திரைக்கு அளவு கண்ணிமைப் பொழுதும், கைந்நொடிப் பொழுதும் என்று தான் குறிப்பிட்டது பண்டையோர் கொண்ட அளவு என்பதனைக் ‘கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே’ (தொ.எ. 7) என்று கூறுதல் போல்வன அதன் இனம். (தொ. பொ. 665 பேரா.)
நன்னூலார் கூறும் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று; சிறப்பு வாய்பாட்டால் முடிந்ததைப் புலப்படவேண்டிப் பொது வாய்பாட்டால் தொகுத்து முடித்தல்.
எ-டு : ‘மெய்கள் அகரமும்’ (நன். 126) என்னும் சூத்திரம் இவ்வுத்தியாம், எழுத்தியலில் விரிந்து முடிந்து கிடந்தவற்றைப் புலப்படவேண்டித் தொகுத்து முடித்தலால் என்பது.
‘நட வா மடி சீ’ (நன். 137) என்னும் சூத்திரம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள; ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், குற்றுகரம் என இருபத்து மூன்று ஈறுடையனவாக விகற்பித்து எடுத்துக்காட்டும் வாய்பாடுகள் எல்லாம், ‘செய்’ என்னும் பொதுவாய்பாட்டில் அடங்கும் எனக் கூறுதலின், முடிந்தது முடித்தல் என்னும் உத்தியாம். (நன். 14)
எஞ்சாது முற்றும் கூறும் நூல். (இறை. அ. 1 உரை)
ஆண்குரங்கினைக் கடுவன் என்றலும், மரப்பொதும்பினுள் வாழும் கூகையைக் கோட்டான் என்றலும், செவ்வாயினை யுடைய கிளியைத் தத்தை என்றலும், வெருகினைப் பூசை என்றலும் (வெருகு - காட்டுப்பூனை), ஆண்குதிரையைச் சேவல் என்றலும், இருள் நிறத்தினையுடைய பன்றியை ஏனம் என்றலும், எருமையேற்றினைக் கண்டி என்றலும், வழக்கிலும் செய்யுளிலும் வந்தமையால் முறைமையறிந்த நூலோரான் அவை நீக்கப்படலாகா. (கோழியை வாரணம் என்றலும், வெருகினை விடை என்றலும் உரையில் கொள்ளப்பட்டன.)
தத்தை என்பது பெருங்கிளி; சிறு கிளியும் தத்தை என்றே வழங்கப்படுதலையும் கொள்க.
பெண், ஆண், பிள்ளை என்பன அடையின்றி வாளா கூறிய விடத்தே, உயர்திணைக்கேற்ப மருவி வந்த மரபு பற்றிய பெயர்களாம். பெண் பிறந்தது, ஆண் பிறந்தது, பிள்ளை பிறந்தது என அடை கொடாது கூறின், அவை, உயர் திணைக்கே உரியன. (அஃறிணையாயின், ‘பெண் குரங்கு’ என்றாற் போலக் கிளந்து சொல்ல வேண்டும்) (தொ. பொ. 623, 624 பேரா.)
நன்னூல் சுட்டும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; ஆசிரியன் தான் சொல்லும் இலக்கணத்திற்கு விதி தோன்று மிடத்தைக் கூறுதல்.
எ-டு : ‘ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்’ (நன். 97) என்பது முடிவிடம் கூறல்; ‘குறில்வழி லளத்தவ் அணையின் ஆய்தம், ஆகவும் பெறூஉம் அல்வழி யானே’ (228) என்ற விதியுள்ள விடத்தைக் கருதிக் கூறுவதால் என்பது. (நன். 14)
பொழிப்பு, அகலம், நுட்பம் என மூவகையுரை.
(யா. க. பாயிரம் உரை)
செய்வினையின் பயனை நுகராது மெய்யுணர்வுடையனாகிய முன்னோனால் செய்யப்பட்டதே ஒருதலையாக முதல்நூல் ஆவது.
தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்தில ராகலின், தலைவர்வழி நின்று தலைவனாகிய அகத்தியனால் செய்யப்பட்டதும் முதல்நூலாம். பிற்காலத்துப் பெருமா னடிகள் (- இறையனார்) களவியல் செய்தவாறே செய்யினும் பிற்காலத்தின்கண்ணும் அது முதல்நூலாவதேயாம். அகத்தி யம் முதல்நூல், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் வழிநூல் என்றவாறு. (தொ. பொ. 649 பேரா.)
இயற்கை முதல்நூலும், செயற்கை முதல்நூலும் எனமுதல் நூல் இருவகைப்படும். முனைவனாம் இறைவன் தமருகத்தி னின்று ஆரியத்திற்கு முதல்நூலாக மாகேச்சுர சூத்திரம் தோன்றினாற் போல, அக்காலத்தில்தானே அவன் வாயி னின்று தமிழிற்கு முதல்நூலாக முப்பத்துமூன்று சொற்கள் தோன்றின. அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டன. அவை. நுணுகி ஆராய்ந்தவழி, இயல் இசை நாடக மென்னும் முத்தமிழ் இலக்கணமும் முப்பொருளும் முற்றத்தோன்றும் இயல்பினவாதலின், அச்சூத்திரங்கட்கு இசை நுணுக்கம் எனப் பெயர் வழங்கிற்று. இசையென்பது சொல். அதுவே தமிழிற்கு இயற்கை முதல்நூல் எனப்படும்.
இனிச் செயற்கை முதல்நூலாவது, தானே தலைவனாகிய அம்முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் அவன் அருளால் அவன் கண்ட இயற்கை முதல்நூலின் வழித்தாகப் பிண்டம் படலம் ஓத்துச் சூத்திரம் எனச் செயற்கைநலம் தோன்றச் செய்த நூலாம். அத்தலைவர் அமரமுனிவராகிய அகத்தியனும், நாரதனும், ஏனைய முனிவராகிய மார்க்கண் டேயனும், வான்மீகியும் முதலாகப் பலர்.
அவருள் கலசயோனியாகிய ஆசிரியன் அகத்தியன் சிவபெரு மானிடத்துத் தமிழின் இயற்கை முதல்நூலினையுணர்ந்து பின்னர் அதன் பொருளை முருகவேளிடத்துக் கேட்டுத் தெளிந்து முத்தமிழிலக்கணமும் முப்பொருளும் ஆதியில் முற்றக் கூறினான் ஆதலின், அவன் அருளிச் செய்த சிற்றகத் தியம் பேரகத்தியம் என்னும் இரண்டு நூலும் தமிழிற்குச் செயற்கை முதல்நூலாயின. நாரதன் முதலாயினாரும் அம் முனைவனை வழிபட்டுத் தலைவராயினார் ஆதலின், அவர்கள் பிறிதொரு செயற்கை நூலின் வழித்தாக நூல் செய்யார்;
மரபியலோடு ஒத்த சூத்திரம் (தன்னுள் அமைந்த உரையினை விரிக்க வேண்டின) காண்டிகையினது பொருள் தோன்றக் கிளக்கப்பட்ட வகையினையுடையதாகி, பத்து வகைக் குற்றங் களுமின்றி, பொருந்துமாற்றான் 32 வகை உத்தியொடு பொருந்தி வருமாயின், புலவோர் அதனை நூல் என்பர்.
மேற்கூறிய நூலின்கண் சூத்திரங்களை உரை தோன்ற யாக்கு மிடத்தும், குற்றமறக் காண்டிகை ஒருங்கு தோன்றப் புணர்க்கு மிடத்தும், உணர்த்தப்படும் பொருளை உடன்பாட்டு முறையான் விதித்தல் - எதிர்மறை முறையான் விலக்கல் - என இருவகையான் குற்றமற ஆராய்ந்து புணர்க்கவும் படும்.
விதித்தல் பெரும்பான்மையும் விலக்கல் சிறுபான்மையுமாக நிகழும். இவை தனித்தனி வருதலன்றி, ஒரு சூத்திரத்தின் கண்ணே ஒருங்கு நிகழ்தலும் கூடும். (தொ. மர. 97, 98 ச. பால.)
நாரதன் இசைத்தமிழ் ஒன்றே முற்றக் கூறினான் எனவும், ஏனையோர் ஒரு தமிழாயினும் முற்றக் கூறாது சிற்சில பகுதியே கூறினார் எனவும் பிற நூல்களான் அறியப்படுகிறது. ஆதலின், அவர்கள் செய்த நூலெல்லாம் அகத்தியத்துக்கு இணையாகிய செயற்கை முதல்நூல் எனப்படும். (பா. வி.பக். 96,97)
சூத்திரம் காண்டிகை உரை என்று சொல்லப்பட்ட இலக் கணங்கள் எல்லாம் சிதையாது மாட்சிமைப்படினும், முதனூலொடு மாறுகொள்ளின் அது வழிநூல் எனப் போற்றப் படாது குற்றமுடையதாகவே கருதப்படும்.
எனவே பொருளமைப்பில் வழிநூல் முதல்நூலொடு மாறு கொள்ளுவது அமைக்க முடியாத குற்றமாம். அத்தகைய குற்றமுடையது வழிநூல் ஆகாது என்பது. (தொ. பொ. 660 பேரா.)
‘முதன் மாணாக்கர், காண்க.’
தலை இடை கடை என மூவகைப்பட்ட மாணாக்கரிடையே முதல் நின்ற தலைமாணாக்கர். இவர்கட்கு, நீரொழியப் பாலையே பிரித்துண்ணும் அன்னமும், பலவாக ஓரிடத்துக் கண்ட இரையை வெவ்வேறிடம் திரியாதே ஆண்டேயே வயிறார உண்டு பின்னர் ஓரிடத்தே கிடந்து அசையிடும் பசுவும், உவமை சொல்லப்படுவன. அவை போலவே, இம்முதல் மாணாக்கரும், ஆசிரியன் சொல்லியவற்றுள், தாமதகுணத்தால் அவன் மொழிந்த வேண்டத்தகாதவற்றை நீக்கி, வேண்டுமவற்றையே மனங்கொள்வர்; கல்விச் செல்வம் நிறைந்த ஓராசிரியர்பாலேயே நிறையப் பாடங்கேட்டு, அக்கேட்டவற்றைத் தனித்துச் சிந்தித்து மனத்தே இருத்திக் கொள்வர். (நன். 38)
‘முதல்நூல்’ காண்க.
முந்து நூல் எனப் பொதுப்படக் கூறியமையால், ஆதி நூலா கிய இசைநுணுக்கமும் அகத்தியமும் அதற்கு இணை நூலாகிய தேவஇருடி நாரதன் முதலியோர் செய்த நூல் களும் என இத்தொடக்கத்தன முதல்நூல்களும், அவற்றின் வழிநூல் எனப்பட்ட மாபுராணம் பூதபுராணம், இசை நூலாகிய இசைநுணுக்கம் முதலான நூல்களும் என, தொல்காப்பியத்துக்கு முன் உளவாகிய தலைச்சங்கத்து நூல்களெல்லாம் கொள்ளப்படும். மாபுராணம் முதலியன தலைச்சங்கத்தே தோன்றினும், அவை அச்சங்கத்தார்க்கு நூலாகாமல் இடைச் சங்கத்தார் முதலாயினார்க்கே நூலானமையின் அவை ஈண்டு முந்துநூலுள் அடங்கா என்ப. (பா. வி. பக். 174)
இது தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; முன் ஒருகால் பின்பற்றிய முறையை விடுத்து வேறு ஒருகால் தலைதடுமாற்றமாக முறை மாற்றிக் கூறி அதனால் சில கருத்துக்கள் பெறப்பட வைத்தல்.
“பன்னீருயிரும் மொழிமுத லாகும்” (தொ. எழுத். 89), ‘உயிர் மெய் அல்லன மொழிமுத லாகா’ (எழுத். 60) என உயிரை முன்னரும் மெய்யைப் பின்னரும் கூறிய முறையை மாற்றி, ‘க த ந ப ம எனும் ஆவைந் தெழுத்தும், எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (தொ. எழுத். 61) என மெய் பற்றி வரையறை கூறுதல் இவ்வுத்திவகை.
உயிர்மெய் பற்றிய நூற்பாவில் ‘புள்ளி யில்லா எல்லா மெய்யும்’ (தொ. எழுத். 17) என மெய்யை முற்கூறுவது இவ் வுத்திவகையின் இனமாகும்.
மயங்கக் கூறல், நிறுத்த முறையாற் கூறாது மற்று அதுவே பற்றாக மற்றொரு பொருள் கூறப்படும். இது தெளிவு கருதி முன்னைய முறை மாற்றிக் கூறப்படுதலின் மயங்கக் கூறல் என்னும் வழுவன்று. (தொ. சொல். 418 நச்., தொ.பொ. 665 பேரா.)
உத்தி - நோக்குக.
யாப்பருங்கல விருத்தியுரையும் வீரசோழிய உரையும் இவற்றையே உத்திகளின் பெயராகக் குறிப்பன. மாறனலங் காரம் வேறு பெயர் கூறும். (நன். 14)
உத்தி - நோக்குக. (தொ. பொ. 665 பேரா. இ. வி. பாட். 138)
நூற்கு ஆகா என விலக்கப்பட்ட பத்துக் குற்றங்களுள் ஒன்று. முன்னே கூறிய பொருளொடு மாறுகொள்ளுமாறு பின்னர்க் கூறுதல். ‘மாறுகொளக் கூறல்’ என்பதும் அது. (மா. அ. 23)
செய்யுட் குற்றங்களுள் ஒன்று; மாறுபட்டமொழியாவது. முன்னர்க் கூறிய தொன்றற்கு மாறுபட்ட மொழியாம்; அன்றி, நல்லோர் வகுத்த சாத்திரங்கட்கு மலைவாக மொழி வதுமாம். (யா. வி. பக். 565.)
இவ்வுத்திவகை இலக்கணம் - தான் எடுத்துக்கொண்ட அதிகாரத்திற்கும் இயலிற்கும் உரியவற்றைப் பிறழாமல் கூறுதலும், இதனை ‘இந்நிரலாகக் கூறுவல்’ என நிறுத்திய முறை பிறழாமல் கூறுதலுமாம்.
எ-டு : நூல் மரபிற் கூறியவற்றைப் பிற இயல்களுள் கூறாமை யும், பிற இயல்கட்குரியவற்றை நூல்மரபிற் கூறாமை யும். (தொ. மர. 109 ச. பால)
நன்னூல் சுட்டும் நூலழகு பத்தனுள் ஒன்று; சொல்லப் புகுந்தவற்றை முன் நிறுத்திய முறைமைக்கு ஏற்பப் பிறழாது சொல்லுதல். நன்னூலுள் காணப்படும் தொகை வகை விரியாக அமைந்த நூற்பாக்கள் எடுத்துக்காட்டாவன.
சொல் பொருள் இயல் அதிகாரம் முதலியவற்றை யாதானும் ஏற்ற ஒரு வரிசைப்பட வைத்தல் எனினும் ஆம். (நன். 13)
நன்னூல் கூறும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று. முன்னர் ஓரிடத்து ஒன்று சொல்லிப் பின்னர் அதனை வேண்டுமிடம் தோறும் எடுத்துக் கொள்ளுதல்.
பின் உயிரீற்றுப் புணரியலில் குற்றியலுகரப் புணர்ச்சியில் எடுத்தாளப் பயன்படுதல் நோக்கி, எழுத்தியலுள் குற்றிய லுகரத்தை ‘நெடிலோ டாய்தம்’ (94) என அறுவகையாகப் பாகுபடுத்தமை இவ்வுத்திக்கு எடுத்துக்காட்டாவது. (நன். 14)
1. இறைவன் (தொ. பொ. 649 பேரா.) 2. தலைவன். 3. முன்னோன். (கோவை. கொளு 329) (L)
மரபு பற்றி வரும் பெண்பாற்பெயர்களுள் ஒன்று. ஆட்டின் பெண்பாலை மூடு (கடமை என்னும் இரண்டு பெயரும்) குறிக்கும். இச்சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. பண்டைச் செய்யுளுள்ளும் மேற்கோள் காணப்பட்டிலது. (தொ. பொ. 558, 619 பேரா.)
நூலின் மூன்று வகையாகிய தந்திரம் சூத்திரம் விருத்தி எனுமிவற்றை நடத்தும் ஆசிரியர் மூவர் ஆவர். அவர் நூலா சிரியர் போதகாசிரியர் உரையாசிரியர் என்போர். (யா. வி. பக். 426)
உற்றுணர்தல், நாச்சுவை கோடல், மோந்தறிதல் என இம்மூவறிவினை யுடைய உயிர்கள். அவை சிதலும் எறும்பும், அவற்றின் கிளையாகிய ஈயல், மூதாய் (-தம்பலப் பூச்சி) போல் வனவும், பிறப்பு ஆகிய மக்கட்குழவியும் விலங்கின்கன்றும் இம்மூவறிவுப் பருவத்தையுடை யனவும் அட்டை போல்வன வும் கொள்ளப்படும். (சிதல்-கறையான்).
(தொ. பொ. 585 பேரா.)
சூத்திரத்தில் அமைந்த சொற்பொருளை விட்டு நீங்குதலின்றி விரிவொடு பொருந்தி, குறித்த சூத்திரம் முடித்தற்காக ஏது நெறியானும் எடுத்துக்காட்டானும் பொருந்தியவாறு அமை யும் பொருள்நெறியை யுடைய காண்டிகையுரை.
அஃதாவது உரை மிக அகலலாகாது என்பது. “இம்மலை நெருப்புடையது” என்ற சூத்திரப் பொருட்கு, “புகையுடைத்து ஆதலின்” என்பது ஏது; “அடுக்களை போல” என்பது எடுத்துக்காட்டு. இவ்வாறு ஏது வகையாலும் எடுத்துக்காட் டாலும் சூத்திரப்பொருளை மிக அகலாதவாறு உரைக்க என்பது. (தொ. பொ. 648 இள.)
மாறனலங்காரம் கூறும் பத்துக் குற்றங்களுள் ஒன்று; ‘கூறியது கூறல்’ என்று நன்னூல் இதனைக் கூறும். (மா. அ. 23)
தொல்காப்பியம் சுட்டும் உத்திவகைகளுள் ஒன்று; சொல் லப்பட்ட செய்திகளை மனங்கொண்டு, முன்சொல்லப்படாத அவற்றிற்கு இனமாகியவற்றின் செய்திகளையும் கொள்ள வைத்தல். (தொ. பொ. 665 பேரா.)
சூத்திரத்துட் பொருள் பலபடத் தோன்றுமாயின், முற்பட்ட சூத்திரத்துக்கு ஒக்கும் பொருளுரைத்தல்; அன்றியும் முற் பட்ட சூத்திரத்தினான் ஒரு பொருள் ஓதியவழிப் பிற்பட்ட சூத்திரமும் பொருளோடு ஒன்ற வைத்தலுமாம். (656 இள.)
மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தல், மொழியாததனை முட்டின்று முடித்தல் என இரண்டாக்கி, இரண்டாவதனை உரையிற்கோடல் என்பர் இளம்பூரணர்.
தொ. எ. 32, 101, 258 நச். உரையில் இவ்வுத்தி காணப்படும்.
எடுத்து ஓதாததும் எடுத்து ஓதியதனோடு ஒத்த சிறப்பிற்றாம்.
‘தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா’. (தொ. பொ. 367) வெண்சீர்க்கு, வரும் சீரும் வெண்சீரேயாகியவழித் தளை வகை நிலைமை கொள்ளப்படமாட்டாது. எனவே, வெண்சீர் நிற்ப, இயற்சீர் வந்து ஒன்றின் தளை கொள்ளப்படும் என்றறிதல் இவ்வுத்தி வகையாம்.
‘னஃகான் ஒற்றே’ (சொல். 5) ‘ளஃகான் ஒற்றே’ (சொல். 6) ‘ரஃகான் ஒற்றும் பகர இறுதியும், மாரைக் கிளவியும் உளப்பட’ (சொல். 7) என்ற நூற்பாக்கண் ‘பகர இறுதி’ என்று கூறியதனை உட்கொண்டு, னஃகான் ளஃகான் ரஃகான் மார் என்பனவும் ஈற்றில் நிற்கும் என்று கோடலும், ‘ஆ ஏ ஓ அம் மூன்றும் வினாஅ (எழுத். 32) என்றவழி, யகர ஆகாரமும் கோடலும் போல்வன இவ்வுத்திக்கு இனம். (பேரா.)
மொழிந்த பொருளோடு ஒன்ற வைத்தலாவது சூத்திரத்துள் பொருள்பல தோன்றுமாயின், முற்பட்ட சூத்திரத்திற்கு ஒக்கும் பொருளுணர்த்தல். ‘இலனென்னும் எவ்வம் உரை யாமை ஈதல்’ என்ற குறளுக்கு (223) ‘நல்லாறெனினும் கொளல் தீது’ என்ற குறளின் (222) பொருட்கு ஒன்ற, ‘இலன் என்னும் எவ்வம் உரையாமையும் ஈகையும் குலனுடையான் கண்ணே உள’ என்று உம்மை விரித்துப் பொருள் கூறுதல் போல்வன. (மா. அ. 25)
மொழியாததனை முட்டின்றி முடித்தலாவது ‘அரையளவு குறுகல் மகரம் உடைத்து... காலை’ (தொ. எ. 13) என்பதற்கு, அரைஅளவிற் குறுகிக் கால்அளவு பெறும் என்று கோடல். இஃது உரையிற்கோடல் எனவும் படும். (மா. அ. 25)
தமிழக எல்லைக்கு அப்பால் வாழ்நரும் செந்தமிழ்ப் பனுவலின் திறனறிந்து பயன்கொள்ள முதனூலை அவர்தம் மொழியிற் பெயர்த்து நெறிவிளங்க யாத்துச் செய்தல்.
“பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ் நூலாகச் செய்வது இஃது” எனப் பேராசிரியர் உரை கூறுவார். அது பொருந்தாது.
தொகுத்தல் முதலிய மூன்றும் எந்த ஒரு முதனூலை நோக்கி நின்றனவோ, மொழிபெயர்த்தல் என்பதும் அந்த நூலை நோக்கி நிற்றலே முறையாகலானும், பிற பாடைப்பொருளை மொழிபெயர்த்து அமைப்பின் அது பிற பாடையார்க்கு வழிநூலும் பெயர்க்கப்பட்ட மொழியினர்க்கு முதனூலும் ஆவதன்றி வழிநூலாகாமையானும் பேராசிரியர் கருத்துப் பொருந்தாது. பிற பாடையினின்று மொழிபெயர்க்கப் பெற்ற பொருள் பெயர்க்கப்பட்ட மொழியாளர்க்குப் புதிதாகலின் வழிநூலாகாமை அறிக. அவ்வாறே தமிழினின்று பிறிது மொழியிற் பெயர்க்கப்பட்ட நூல் தமிழிற்கு வழிநூலாத லும், பெயர்க்கப்பட்ட மொழிக்கு முதனூலாதலும் பொருந் தும். (தொ. மர. 96 ச.பால.)
இது தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; ஓரிடத்தில் கூறப்பட வேண்டிய பொருண்மை ஒன்றனை ஒரு காரணம் பற்றிப் பின் ஓரிடத்தில் குறிப்பிடுவோம் என்றல். (தொ. பொ. 665 பேரா.)
சில பொருளைக் கூறி, அவற்றுள் ஒன்றனை இன்ன இடத்துக் கூறுவாம் என உரைத்தல். (656 இள.)
தொடர்மொழிக் குற்றியலிகரம் பற்றிச் சுட்டி அதனைப் பற்றிய செய்தி குற்றியலுகரப் புணரியலில் கூறப்படும் என்ப தனை மொழிமரபில்,
‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே, உணரக்கூறின் முன்னர்த் தோன்றும்’ (எழுத். 35 நச்.) என்று கூறுவது இவ்வுத்திவகை. (பேரா.)
பின்னர் மெல்லினம் மிகுதலை உயிர்மயங்கியல் முதலிய வற்றில் குறிப்பிடப்போகும் ஆசிரியர், தொகை மரபிலேயே க ச த ப என்ற வல்லினமெய் வருமொழி முதற்கண் வரின், அவற்றிற்கு உரிய மெல்லின மெய்களாகிய ங ஞ ந ம என்பனவே முறையாக மிகுதல் நிகழும் (எழுத். 143 நச்.) என முன்கூட்டிக் கூறுதல் போல்வன அதன் இனம். (பேரா.)
ஒருமொழிக் குற்றியலிகரத்தை மொழிமரபு முதற்பாவில் (எழுத். 34) கூறிப் புணர்மொழிக் குற்றியலிகரத்தைச் சுட்டி, அது குற்றியலுகரப் புணரியலுள் விளக்கப்பெறும் என்ற கருத்தில், ‘புணரியல் நிலையிடைக் குறுதலு முரித்தே, உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்’ (எழுத். 35) என்று கூறுதல் போல்வன. (மா. அ. 25)
ஆட்டினது ஆண்பாலை யுணர்த்தும் மரபு பற்றிய பெயர்.
(தொ. மர. 47 பேரா.)
ய
முதல்நூலின் வழிநூல் செய்பவன், இழிந்தோர் வழக்கும் வழக்கன்றோ எனக் கூட்டி விரித்துச் செய்தல்; அழான் புழான் போல்வன இக்காலத்து இல என்று களைந்து தொகுத்துச் செய்தல்; தொகையும் விரியும் மயங்குமாறு ‘விரிந்தது தொகுத்தல்’ என்னும் உத்தியைப் பிறழ வுணர்ந்து, தொகை விரி என வேண்டா விடத்தே தொகுத்தே செய்தல். மொழிபெயர்த்தலைத் தன் மனம் பட்டவாற்றால் இதுவே மெய்யென மயங்கிக் கூறுதல் என்பன நான்கும் ஆம். (தொ. பொ. 662 பேரா.)
நூல் சூத்திரம் ஓத்து படலம் பிண்டம் ஆமாறும், அடியின்றி நடப்பனவும், ஓரடியாய் நடப்பனவும், புனைந்துரையாய் நடப்பனவும் ஆம். (யா. க. 95 உரை பக். 95)
1. செய்யுள் (சூடா. X - 29) 2. யாழ்ப்பத்தரில் குறுக்கே வலியுறச் செய்யும் கட்டு (மலைபடு. 28) 3. சிறப்புப்பாயிர இலக்கணம் பதினொன்றனுள் ஒன்று; ‘இவை ஆய்ந்த பின்னர் இது கேட்கற்பாற்று, என்ற இயைபு (நன். 47; சிறப்புப்பாயிரம் சிவஞானமுனிவர் உரை) (L)
யாப்பாவது தொகுத்தல், விரித்தல், தொகை விரி, மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்பன. “இவை ஆய்ந்த பின்னர் இது கேட்கற்பாற்று என்ற இயைபே யாப்பாவது” என்று உனரத்த சிவஞான முனிவரை அரசஞ் சண்முகனார் பின் வரும் காரணங்களைக் காட்டி மறுப்பர்.
சிறப்புப்பாயிரம், ஆக்கியோன் பெயர் இது, முதல் நூல் இது, நூல் வழங்கும் எல்லை இது, நூற்பெயர் இது, நூல் நுதலிய பொருள் இது முதலாக ஏனைய ஆறும் பெயர் அறியக் கூறுவது போல், நூல் யாப்பின் பெயர் இது என்று பெயர் கூறுதலே முறையாவது; இஃதன்றி, மாணாக்கரது செயற்கை யறிவாகிய யாப்பைக் கூறுவதற்கு ஓரியைபும் இல்லை; இயைபின்றிக் கூறினும் அமையும் எனின், யாப்பு என்ற இவர் கூறும் செய்தி ‘கோடல் மரபு’ ஆகிய பொதுப்பாயிரத்துள் பெறப்படுதலால் ஈண்டும் கூறின் கூறியது கூறல் என்னும் குற்றமாம். “கூறியது கூறலாகாது; கோடல் மரபுள் கூறியது பொதுச்செய்தி. ஈண்டுக் கூறுவது சிறப்புச்செய்தி” என்று கூறின், அவ்வாறு பொதுப்பாயிரத்துள் ஆசிரியனுக்குக் கூறியது பொதுவியல்பு எனப்படும்; பின்னர்ச் சிறப்பியல்பு கூறாமை குன்றக் கூறலாய் முடியுமாதலின், பொருந்தாது என்பது. (பா. வி. பக். 239, 240)
இன்ன நூலின் வழியதாகச் செய்யப்பட்டது என ‘வழி’ கூறுதலால், முந்துநூல் பொருளே வழிநூலிலும் உள்ளது என்பதே பெறப்படும் அன்றி, அம்முந்துநூல் இருக்க இவ் வழிநூலை யாது காரணத்தால் செய்தான் எனவும், அம் முந்துநூலில் வழுக்கள் இருத்தல் பற்றி அவை களைதற் பொருட்டுச் செய்தானோ எனவும் ஐயம் எழும். அவ்வையம் களைதற்பொருட்டு, முந்துநூலிற் கூறிய பொருள்கள் உணர்தற்கு அரியவாகத் தொக்குநின்றமையாலோ விரிந்து நின்றமையாலோ தொகைவிரியாக நின்றமையாலோ பிறிதொரு மொழிக்கண் நின்றமையாலோ, அப்பொரு ளையே உணர்தற்கு எளியவாகப் பயன்படுமாறு தொகுத்தல் முதலாகிய நால்வகைகளுள் இவ்வகையாற் கூறினான் என்று யாப்பும் கூறவேண்டும்; ‘வழி’ மாத்திரம் கூறின் சாலாது. (பா. வி. பக். 189)
‘வழியின் நெறியே நால்வகைத் தாகும்’ என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறலின் முதல்நூலுக்கு யாப்பு இன்று என்பது பெறப்படுதலின், வழிநூலுக்கு யாப்புக் கூறல் அமையும்; களவியலாகிய முதல்நூலுக்குக் கூறல் அமையாது எனின், ஆசிரியர் ‘வழியின் நெறியே’ எனப் பிரித்தமையின், முதல்நூல் நால்வகை யாப்பும் உடைத்தன்று என்பது பெறப்படுவதே யன்றி அவற்றுள் ஒரு வகையும் உடைத்தன்று என்பது பெறப்படாது; முனைவன் முற்றுணர்வினன் ஆதலின், மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்ற ஒன்று தவிர, ஏனைய தொகுத்தல் விரித்தல் தொகைவிரி என்ற மூவகை யாப்பும் ஏனைய நூலை நோக்கு மிடத்து அமையும் என்பது. (பா. வி. பக். 189).
வ
நன்னூல் கூறும் 32 உத்திகளுள் ஒன்று; தொகுத்துச் சொல்லியவற்றை வெவ்வேறாக விரித்துச் சொல்லுதல் ‘எண் பெயர்’ (நன். 57) என்று தொகுத்துச் சுட்டியதனை மேல் வரும் சூத்திரங்கள் வகுத்துக் காட்டியவாறு. (நன். 14)
தொல்காப்பியனார் கூறும் 32 உத்திவகைகளுள் ஒன்று. முன்னர்த் தொகுத்துக் கூறிய செய்தியைப் பின்னர் விளக்கம் வேண்டிப் பகுத்துக் கூறுதல்.
எழுத்து முப்பத்து மூன்று (எழுத். 1) என்று தொகுத்ததனை, நெடில் குறில் உயிர் உயிர்மெய் வல்லினம் மெல்லினம் இடையினம் என்றாற் போலவும், உயர்திணை அஃறிணை என்று தொகுத்ததனை (சொல். 1) ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்றாற் போலவும் வகுத்துக் கூறுதல்.
இரு திணை எனக் கூறிப் பெயர் வினைகள் உயர்திணை அஃறிணை விரவுத்திணை என மும்மூன்றாகக் கோடலும், அகமும் புறமும் கூறி, அகப்புறம் என மூன்றாகக் கோடலும் போல்வன வகுத்து மெய்ந்நிறுத்துதற்கு இனமாகும்.
இயற்சீர் பத்து எனவும் ஆசிரிய உரிச்சீர் ஆறு எனவும் வகுத்தவற்றையே (தொ. பொ. 325 - 328 பேரா.) மீண்டும் இயலசை மயக்கமாகிய நான்கனையே சிறப்பான இயற்சீர் எனவும், உரியசைமயக்கமாகிய நான்கனையே சிறப்பான ஆசிரிய உரிச்சீர் எனவும் (325) கோடலும் இதற்கு இனமாம். (தொ. பொ. 665 பேரா.)
தொகுத்துச் சொல்லப்பட்டதனை வேறுவேறாக வகுத்து உரைக்கும் சூத்திரம். (நன். 20)
‘எண் பெயர் முறை பிறப்பு’ (நன். 57) போல்வன.
வடக்கு - எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையுணர்தற்குத் தானே காரணமாகி நிற்கும் மங்கலத்திசை யாதலின், இச்சிறப்புப் பாயிரமும் நூலும் என்றும் நின்று நிலவுதல் வேண்டி, ‘வடவேங்கடம்’ என வடக்கு முற்கூறப்பட்டது, முதற்கண் மங்கலம் கூறல் ஆன்றோர் மரபு ஆகலின். (பா. வி. பக். 164)
மங்களாசரணை மூன்றனுள் நூலின் முகப்பில் தெய்வம் குரு முதலியவர்க்கு வணக்கம் கூறுதல். (சி. போ. பா. பக். 1) (L)
தொல்காப்பியம் கூறும் உத்திவகைகளுள் ஒன்று; பின் ஒரு நூற்பாவில் கூறப்பட்ட செய்தியைக் கொண்டு, முன் கூறப்படாத செய்தி ஒன்றனை உணரச் செய்தல்.
‘அகர இறுதி...... தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே’ (எழுத். 203) என்று கூறி அடுத்த நூற்பாவில் ‘ஞாங்கர்க் கிளந்த வல் லெழுத்து மிகுமே’ (எழுத். 204) என்றதால், “மிகுகின்ற ஒத்த ஒற்று வல்லொற்று” என்று பெறப்படவைத்தல் போல்வன இவ்வுத்திவகை.
‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே” (சொல். 1) என்றவழி, உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் திணை என்ற பெயர் எய்துவித்தல் இவ்வுத்திக்கு இனம். (தொ. பொ. 665 பேரா.)
ஒருங்கு எண்ணப்பட்டவற்றுள் ஒன்றனைப் பகுத்துக் கூறிய வழி, வாராததன்கண்ணும் அவ்விலக்கணத்தைக் கூட்டி முடித்தல். (656 இள.)
‘அறமுதல் நான்கினும்................ கருதப்படுமே’ (தண்டி. 10)
என்பது கொண்டு அறமுதலாகிய நாற்பொருள் குறைந்து வருவது சிறுகாப்பியம் என்பதனொடு, முன் பெருங் காப்பியத்துக்குக் கூறிய ‘கூறிய உறுப்பின் .......................... புலவர்’ (தண்டி.9) என்ற கருத்தையும் கூட்டி, சிறுகாப்பியம் வருணனை களிற் சில குறைந்தும் வரலாம் என்று கோடல். (மா. அ. 25 உரை)
நல்லாசிரியனுக்கோதிய எண்வகை உறுப்புக்களில் முதலா வது ஆகிய பிறப்பு. தாய்மரபு தந்தைமரபு என்னும் இரு வகைக் காரணமும் குற்றமின்றிப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருவது ஆதலின் அதற்கு வலம்புரியும் மழைத் துளியுமாகிய இருவகையும் குற்றமின்றி மேம்பட்ட வலம்புரி முத்து உவமாயிற்று. (பா. வி. பக். 20)
“வழக்கு என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது உயர்ந்தோர் இடத்ததாம், தோன்றுதல் அவரிடத்து ஆகலான் என்றவாறு. உயர்ந்தோராவார் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் தலைச்சங்கத்தாரும் முதலியோர்.” (இ. வி. பாட். 149)
“உயர்ந்தோர் ஆணையால் உலகநிகழ்ச்சி செல்கின்றது. என்றவாறு; எனவே, உயர்ந்தோர் எனப்படுவார் அந்தணரும் அவர் போலும் அறிவுடையோரும் ஆயினார். (தொ. பொ. 647 பேரா.)
“வழக்கெனப் படுவது” என்ற மரபியல் சூத்திரத்தான் வழக்கு உயர்ந்தோர்கண்ணதாயிற்று; அவர் அகத்தியன் முதலியோர் என்பது பாயிரத்துள் கூறினாம்” (தொ. பொ. 217 நச்.)
வழி என்பது இந்நூல் இன்ன நூலின் வழித்தாகச் செய்யப் பட்டது என்பது.
முனைவனை வழிபட்டுத் தலைவராயினாரால் முதல்வன் கண்ட இயற்கை முதல்நூலின் வழியே செயற்கைநலம் தோன்றச் செய்யப்படுவன ஆதலின், அவை செயற்கை முதல்நூல் எனப்படும். செயற்கை முதல்நூலுக்கு இணைநூல் உண்டாதலின், அதன்வழித்தாகத் தோன்றும் நூலுள் ஆசிரிய மதவிகற்பம் உறுதல் இயல்பாயிற்று. அவ் வழிநூலும் அதன் வழித்தாக ஒரு நூலுளதாயின் அந்நூலுக்கு முதல் நூலாம். இவ்வாற்றான், ஒருவற்குத் தந்தையாயினும் பிறனொரு வனுக்கு மகனும் ஆயினாற் போல, முனைவன் கண்ட இயற்கை முதல்நூல் நீங்கலான ஏனைய நூலெல்லாம் முதல்நூலும் வழிநூலும் என ஈரியல்புடையன. (பா. வி. புக். 6, 98, 102.)
வழிநூல்களாவன முதல்நூல்களிற் கூறிய பொருள்களொடு வேறுபடாமல் பின் தோன்றுவனவாகி, முதல்நூலாகிய அகத்தியத்தில் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் மயங்கக் கூறினாற் போலக் கூறாது, ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என வேறோர் அதிகாரமாகத் தொகுத்துக் கூறுதலும், விரிந்த சூத்திரப் பொருளைத் தொகைமரபால் தொகுத்துக் கூறுதலும், எழுவாய் வேற்று மையின் பயனிலைகளாக ‘வினை வினா பெயர்’ என்று அகத்தியனார் தொகுத்துக் கூறியதனைப் ‘பொருண்மை சுட்டல்’ முதலிய ஆறாக (சொல். 67) விரித்துக் கூறுதலும், ‘எழுத்தெனப் படுப..... கடையே’ (எ.1) எனத் தொகையும் விரியுமாகக் கூறுதலும், வட சொல்லாற் கூறிய அறநூற் பொருளைத் தமிழ்மொழியால் தொகுத்தோ விரித்தோ கூறாமல் உள்ளது உள்ளவாறே மொழிபெயர்த்துக் கூறுத லும் ஆகிய இலக்கணங்களை யுடையனவாம். (இ. வி. 901)
வழிநூல் என்றற்குச் சிறப்புடையது முதல்நூல்வழிப் பிறந்த வழிநூல் என்றவாறு. அது தொல்காப்பியம்.
அகத்தியம் முதல்நூல்: தொல்காப்பியம் வழிநூல். தொல் காப்பியம் முதல்நூல்; பல்காயம் வழிநூல். ஆதி முதல்நூல் ஒழிய, ஏனை நூல்கள் ஒன்றற்கு வழிநூலாகவும் மற்றொன் றற்கு முதல்நூலாகவும் அமையும் ஆதலின், நூல்வகை முதலும் வழியுமென இரண்டே என்பது தொல்காப்பியனார் கருத்து. (தொ. பொ. 650 பேரா.)
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்பன நான்கும் ஆம். தொகுத்தலாவது முதல்நூலுள் விரிந்து கிடந்தவற்றைச் சில்வாழ் நாட்சிற்றறி வின் மாக்கட்கு அறியத் தொகுத்துக் கூறுதல். விரித்தலாவது முதல்நூலில் தொகுத்துக் கூறப்பட்டு விளங்காது நின்ற-தனை விளங்குமாற்றான் விரித்துக் கூறுதல். தொகைவிரி யாவது அவ்விரு வகையும் பற்றித் தொகுத்து முன் நிறுத்தி, அந்நிறுத்த முறையானே பின் விரித்துக் கூறுதல். மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தலாவது பிறபாடையாற் செய்யப் பெற்ற பொருளினைத் தமிழ்நூலாக, தொகுத்தும் விரித்தும் தொகைவிரியாகவும் செய்யாமல், கிடந்தவாற்றானே பொருள் பிறழாமல் செய்தல். (அதர்ப்பட - நெறிப்பட) (தொ. பொ. 652 பேரா.)
முன்னோராம் முதல்நூல் ஆசிரியர் சொன்ன பொருள் களையே பெரும்பான்மையாகவோ சிறுபான்மையாகவோ ஒத்திருக்க எடுத்துச் சொல்வதேயன்றி, அவரது சொல்லை யும் பொன்னே போலப் போற்றிக் கொள்ள வேண்டும் என்னும் கொள்கைக்கு அடையாளமாகவும், அம்முன்னோர் நூலையே பெயர்த்தும் செய்யாமல் அந்நூலினின்றும் வழிநூலும் சார்புநூலும் என வேறாக நூல்களைச் செய்தன ராயினும் “இந்நூலுள் ஆசிரியவசனம் இல்லையே” என்று பிறர் சொல்லும் குற்றத்தை நீக்க வேண்டுதற்காகவும், அம் முதனூலாசிரியர் மொழிந்த சில சூத்திரங்களை ஒரோவழித் தம் நூலுள் எடுத்து மொழியக்கடவர், வழிநூல் சார்பு நூலாசிரியர்கள். (நன். 9)
நன்னூல் சுட்டும் குற்றம் பத்தனுள் ஒன்று; குற்றமுடைய சொற்களைச் சேர்த்துவைத்தல்.
‘விளாம்என் கிளவி பழமொடு புணரின்
தளாஇயற் றன்றி இயற்கை யாகும்’ (தொ. பொ. 663 பேரா)
என்றாற் போல்வன. (‘விள’ என்பதனை ‘விளாம்’ என்றது வழுஉச் சொல்.) (நன். 12)
எழுத்துக்களின் முதனிலை இறுதிநிலை இடைநிலை பற்றிய தொன்றுதொட்டு வரும் நெறி. (வீ. சோ. 181 உரை)
ஆசிரியன் நற்புலமையுடையோனாதலின், ‘திங்களொடு ஞாயிறு அன்ன வாய்மை’யுடையன். திங்கள் நன்மை பயத்த லின் நிகழ்ந்ததாகிய தன் உருக்காட்டுதலேயன்றி நிகழாத தாகிய களங்கமும் காட்டலான், வாய்மையுடைத்து. ஞாயிறு தீங்கு பயத்தலின் நிகழாததேயன்றி நிகழ்ந்த தாகிய தன் உருக் காட்டலும் இன்மையான், வாய்மையுடைத்து. நன்மை பயக்கும் உரைக்குத் திங்களும் தீங்கு பயவா உரைக்கு ஞாயிறும் உவமம் ஆதலின், ‘திங்களொடு ஞாயிறு’ என இரண்டும் கூறப்பட்டன. இவை வாய்மைக்கு உவமம்.
(திங்களின் ஒளியுடைய பரப்பு நன்மை பயப்பது, நிகழ்ந்தது; ஒளியில்லாக் களங்கமான பரப்பும் கலைவளரும்தோறும் தானும் உடன் வளர்ந்து, தேயும்தோறும் தானும் உடன் தேய்ந்து கலையொளியைக் கெடாது வருதலின், நன்மை பயப்பது; ஒளிக்கு உதவுதலின்மையின் நிகழாதது. இனி, ஞாயிறு தன் ஒளிப்பிழம்பாகிய நிகழ்ந்ததும் அதனகத்துப் புள்ளிகளாம் களங்கம் போல்வன இருத்தலாகிய நிகழாததும் கண்களைக் கூச வைக்கும் வெப்பமிக்க ஒளியுடையன வாதலின் அவையிற்றைக் காட்டாமையுடையது.) (பா. வி. பக். 66)
தொல்காப்பியம் கூறும் உத்திவகையுள் ஒன்று; ஒரு நூற்பாவில் ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் முழுதும் கூறப்படவில்லை யாயினும், கூறப்படாததனையும் அந்நூற்பாவிலேயே அடக்கிக் கொள்ளுதல்.
எ-டு : ‘தொடரல் இறுதித் தம்முன் தாம்வரின்
லகரம் றகரஒற்று ஆதலு முரித்தே’ (எழுத். 214)
பல + பல = பற்பல; சில + சில = சிற்சில. நூற்பாவில் லகரம் றகர ஒற்று ஆகும் எனக் கூறப்பட்டதன்றி, அகரக்கேடு கூறப்படவில்லை; கூறப்படாத அகரக் கேட்டினைக் கொள்ளுதல் இவ்வுத்தி வகையாம்.
முதலில் ஆண்டுப் பின்னர்க் குறியிடுதலும், ஆட்சியும் குறியீடும் ஒருங்கு நிகழ்தலும், பின்னர் ஆட்சிக்கண் வாராமையும் போல்வன இதன் இனம்.
‘அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி’ என வினை யியலில் (சொல் 230) கூறிப் பின் எச்சவியலில் ‘நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி’ (சொல். 430) எனக் குறியிடுதலும், ‘அடைசினை முதல்.... வண்ணச் சினைச் சொல்’ (சொல். 26) என ஆட்சியும் குறியீடும் ஒருங்கு நிகழ்தலும், பின்னர் ‘வண்ணச்சினைச் சொல்’ என்பது யாண் டும் ஆளப்படாமையும் போல்வன இவ்வுத்தியினத்திற்கு எடுத்துக்காட்டு.
எதிரது போற்றல் பொருட்படைக்கண்ணது; வாராததனால் வந்தது முடித்தல் ஆட்சியும் குறியீடும் பற்றியது என்ற வேறுபாடு உணரப்படல் வேண்டும். (தொ. பொ. 665 பேரா.)
ஒருங்கு எண்ணப்பட்ட பொருள் ஒன்றனைப் பகுத்துக் கூறியவழி, ஆண்டு வாராததற்கு ஓதிய இலக்கணத்தை இதன் கண்ணும் வருவித்து உணர்த்தல். (656 இள.)
‘அற முதல் நான்கின்.... படுமே’ (தண்டி.10) என்ற பின் சூத்திரத்தை உட்கொண்டு, ‘கூறிய உறுப்பிற் சில குறைந்திய லினும், வேறுபாடின் றென விளம்பினர் புலவர்’ (தண்டி. 9) என்பதற்கு, அற முதல் நான்கும் அல்லாத ஏனைய உறுப் புக்களே என்று பொருள் செய்தல். மா. அ. (பக். 16) 25 உரை
வகுத்தமைத்தவற்றுள் ’ஒரு கூறு இதன்கண் வாராது’ என்று விலக்கியதைக் கொண்டு’ மறுகூறு வரும்’ என ஓர்ந்து கூறப்பட்ட விதியை முடித்துக் காட்டல். (தொ. மர. 109 ச.பால.)
எ-டு : பன்மைசுட்டிய பெயர், ஒன்று பல ஒருவன் ஒருத்தி என்னும் நான்கன் பாலும் வரும் என்றார்(பெயரியல் 28). பன்மை இருதிணைக்கண்ணும் உள எனினும், விரவுப்பெயர் இருதிணைக்கண்ணும் விரவுங்கால், பல்லோர்க் குறித்த பெயர் உயர்திணைக்கே வரும் எனவும் (பெய. 11)கள் என்னும் ஈற்றோடுவரின் அவை அஃறிணைக்கே ஆகும் எனவும்(பெய.15). மேல் வரையறை செய்தமையான், அவை விரவி வாரா என முடிந்தது. எனவே, அர் ஆர் ப என்னும் ஈறுகளையும் கள் என்னும் ஈற்றையும் உடையவற்றை நீக்கி, ஈற்றிடைச் சொல் இன்றி வரும் அஃறிணை இயற் பெயர் மாத்திரமே விரவிவரும் என முடித்தலாம்.
எ-டு : யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள்,’யானை’ ஈண்டுப் பன்மை சுட்டிய பெயர். (தொ. மர. 109 ச. பால)
தன் குடிப்பிறப்பியற்கையால் ‘சிற்றினம் அஞ்சும் பெருமை’ (குறள் 171) என்ப ஆதலின், சிற்றினம் சேர்தலை அஞ்சி அக்கீழ்களொடு கூடாமல் பெரியாரைத் துணைகோடலின், கீழாகிய நிலத்துத் துகளொடு கூடாத வான்யாறு (-தேவ கங்கை) போன்ற தூய்மையுடையான், நல்லாசிரியன். (பா. வி. பக்.60)
விளங்குதல் வேண்டி பல வேறுபாடுகளின் சிறப்பு வாய்பாட் டாலே முடித்தல் என்னும் உத்தி; இது நன்னூல் குறிக்கும் உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்று.
‘றவ்வொடு உகரஉம்மை’ (நன். 145) என்னும் நூற்பாவுள், “றவ்வொடு உகர உம்மையும், தவ்வொடு உகர உம்மையும், பாந்தமும் இறந்த காலமும் எதிர்காலமும் ஏற்கும்” எனத் தொகுத்துக் கூறாது, அவற்றைத் தனித்தனியே கூறியது ‘விகற்பத்தின் முடித்தல்’ என்னும் உத்தி. (நன். 14)
இதற்கு இதுவே விதி என்று முன் கூறப்படாத தொன்றை ஆணையிட்டுக் கூறுவது; அறுவகைச் சூத்திரங்களுள் ஒன்று:
எ-டு: தொடை பல தொடுப்பினும் தளை பல விரவினும்
முதல்வந் ததனால் மொழிந்திசின் பெயரே’ (யா. க. 53)
ஒரு செய்யுட்கண் தொடை பல தொடுத்து வரினும் தளை பல விரவி வரினும், அவற்றை முதற்கண் வந்த தொடை யானும் முதற்கண் வந்த தளையானும் பெயர் கூறுக என்று விதிக்கும் இது விதிச்சூத்திரமாம். (யா. க. பாயிர உரை.)
நச்சினார்க்கினியர் எடுத்தாளும் ஓர் உத்தி : ‘விரித்துத் தொகுத்தல்’ என்பர் இளம்பூரணர்.
எ-டு : முன்னர் (சொ. 204 - 209) ஆறு சூத்திரங்களான் உயர் திணைப் பன்மைத் தன்மை, உயர்திணை யொருமைத் தன்மை, செய்கு என்னும் தன்மை யொருமை வாய்பாடு, ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல், பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல், மாரைக் கிளவி என்பனவற்றை விரித்துக் கூறி, ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த, அந்நா லைந்தும் மூன்று தலையிட்ட, முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே’ (210) என அவ்விருபத்து மூன்றனையும் உயர்திணை வினைமுற்று ஆகும் எனத் தொகுத்துக் கூறுதல்.
அஃறிணை வினைமுற்றுக்களையும் அவ்வாறே விரித்து (218, 219) முன்னர்க் கூறி அடுத்துப் ‘பன்மையும் ஒருமையும் பாலறி வந்த, அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே’ (220) என்று தொகுத்துக் கூறியதும் விரிந்தது தொகுத்தலாம். (தொ. சொ. 210 நச்.)
மாறன் அலங்காரம் குறிக்கும் முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று; தொகுத்தும் விரித்தும் காட்டியவற்றை மிகவும் விரிக்காமல் விழுமியனவாக விரித்து முடித்தல்.
எ-டு : ‘உயிர்மெய் ஆய்தம்.............. சார்பெழுத்தாகும்’ (நன். 60)
என்பதனுள், ‘சார்பெழுத்து’ எனத் தொகையால் ஒன்றும் வகையால் பத்தும் ஆகியவற்றை, ‘உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு’ என்னும் சூத்திரத்தான் (நன். 61) ‘ஒன்றொழி முந்நூற்றெழுபான் என்ப’ என விரித்ததன்மேலும், உயிர் மெய்க் குறில் உயிர்மெய் நெடில் உயிர்மெய் அகரம் எனவும் வல்லினம் மெல்லினம் இடையினம் எனவும் இறப்ப விரியாமல் விழுமிதாய்க் காட்டல். (மா. அ. 25)
விருத்தி (3) -
சூத்திரத்தில் உள்ள பொருள் மாத்திரமே யன்றி, அவ்விடத் திற்கு இன்றியமையாத எல்லாப் பொருளும் விளங்குமாறு தான் உரைக்கும் உரையானும், ஆசிரிய வசனமாகிய மேற்கோளானும், கருத்து பதப்பொருள் எடுத்துக்காட்டு வினா விடை என்னும் காண்டிகை யுறுப்பு ஐந்தனாலும், ஐயமற மெய்யான செய்தியைக் குறைவற விரித்துரைக்கும் உரை. (நன். 23)
விலக்கியல் சூத்திரம் -
சூத்திரவகை ஆறனுள் ஒன்று; பொதுவகையான் விதிக்கப் பட்ட தொன்றனை இன்னதற்கு ஆகாது என்று நீக்கிக் கூறுவது. (யா. க. பாயிர உரை)
எ-டு : ஓரெழுத்தொரு மொழியாகிய ஊகாரஇறுதி எழுத்துப் பேறாகிய உகரம் பெற்று நிற்கும் (எ-டு : தூஉக்குறை) என முன் சூத்திரத்துட் கூறியதனை அடுத்த சூத்திரத்தால் (தொ.எ. 268 நச்.) பூ என்னும் பெயர் அவ்வெழுத்துப்பேறளபெடை பெறாது, மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி வல் லெழுத்து மிக்கு முடிதலுமுடைத்து (வருமாறு : பூங்கொடி, பூக்கொடி) என்று விலக்கிக் கூறுவது. இவ்வாறு பொதுவாக விதிக்கப்பட்டதனை விலக்கும் இயல்புடைய சூத்திரம் இது.
விலங்கு உவமமாதல் -
விலங்கு - வேந்தன் ஆணையால், குற்றம் செய்தாரது காலினும் கையினும் இடப்படும் புனை. இவ்விலங்கு, வேந்தனான் ஒறுக்கப்பட்டாரை “இவர் குற்றம் செய்தார்” எனக் காட்டுதலின் வாய்மையின்மையும், சிறைப்பட்டோர் தப்பியோட முயலின் விடாது தடுத்தலின் உற்றுழி உதவாமை யும், அவருடைய பசி முதலியன கண்டு போக்காமையின் உறு பொருள் கொடுத்துதவாமையும் என இக்குற்றங்களுடைய காரணத்தான் மாணாக்கர் அல்லாதார்க்கு உவமம் ஆயிற்று. (பா. வி. பக். 140 முதலியன)
விழுமியது பயத்தல் -
நூலழகு பத்தனுள் ஒன்று; சிறந்த பொருளைத் தருதல். (நன். 131)
விளங்க வைத்தல் -
நூலழகு பத்தனுள் ஒன்று; சுருங்கச் சொல்லுமிடத்தும், சொல்ல விரும்பிய பொருள் ஐயமறப் புலப்படுமாறு தோன்ற உரைத்தல். (நன். 13)
விளங்கு உதாரணத்தது ஆகுதல் -
நூலழகு பத்தனுள் ஒன்று; எளிதில் விளங்கத்தக்க உதாரணங் களை யுடையதாதல். (நன். 131)
வெளிறுபட்டு இழிதல் -
நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; குறிப்புமொழி சிறிதுமின்றி வெளிப்படக் கூறல். எனவே, உய்த்துணரும் வகை சொல்லப் படாது வெளிப்படையாக நூல் யாக்கப்படுவதும் ஒரு குற்றம் என்றார். (மா. அ. 23)
வெற்றெனத் தொடுத்தல் -
நூற்குற்றம் பத்தனுள் ஒன்று; சொற்களைப் பொருளிலவாகப் பயனின்றித் தொடர்படக் கூறுதல். சூத்திரயாப்புள் மகடூஉ முன்னிலை வருதல் வெற்றெனத் தொடுத்தலாம் என்ப.
(நன். 12)
வேண்டாது கூறி வேண்டியது முடித்தல் -
தொல்காப்பியத்துள் சொல்லப்படாமல், உரையாசிரியர்க ளான் குறிப்பிடப்படும் ஓர் உத்தி; தேவையற்றது போன்ற செய்தி ஒன்று கூறி, அதனால் இன்றியமையாத செய்தி ஒன்றனைப் பெறப்பட வைப்பது.
எ-டு : விளிமரபில் உயர்திணையில் ‘இ உ ஐ ஓ’ என்ற நூற்பா முதல் (தொ. சொ. 120) இவ்வுயிரீறுகள் விளிபெறுமாறு விளக்கி, ‘ஏனை உயிரே உயர்திணை மருங்கின், தாம்விளி கொள்ளா என்மனார் புலவர்’ (124) என்ற நூற்பாவினைத் தேவையற்றது என்று கருதுமாறு கூறி, அதனால் இந்நான்கு ஈறுகளும் முன்னர் நூற்பாக்களில் குறிப்பிட்ட முறையன்றிப் பிறவாற்றானும் விளியேற்கும் என்று கொள்ள வைத்தல்.
(தொ. சொ. 124 சேனா.)
பாட்டியல்
1
2
15
14
3
4
13
12
5
6
11
10
7
8
9
32
17
18
31
30
19
20
29
28
21
22
27
26
23
24
25
48
33
34
47
46
35
36
45
44
37
38
43
42
39
40
41
64
49
50
63
62
51
52
61
60
53
54
59
58
55
56
57
80
65
66
79
78
67
68
77
76
69
70
75
74
71
72
73
96
81
82
95
94
83
84
93
92
85
86
91
90
87
88
89
112
97
98
111
110
99
100
109
108
101
102
107
106
103
104
105
128
113
114
127
126
115
116
125
124
117
118
123
122
119
120
121
144
129
130
143
142
131
132
141
140
133
134
139
138
135
136
137
160
145
146
159
158
147
148
157
156
149
150
155
154
151
152
153
176
161
162
175
174
163
164
173
172
165
166
171
170
167
168
169
192
177
178
191
190
179
180
189
188
181
182
187
186
183
184
185
208
193
194
207
206
195
196
205
204
197
198
203
202
199
200
201
224
209
210
223
222
211
212
221
220
213
214
219
218
215
216
217
240
225
226
239
238
227
228
237
236
229
230
235
234
231
232
233
256
241
242
255
254
243
244
253
252
245
246
251
250
247
248
249
272
257
258
271
270
259
260
269
268
261
262
267
266
263
264
265
288
273
274
287
286
275
276
285
284
277
278
283
282
279
280
281
304
289
290
303
302
291
292
301
300
293
294
299
298
295
296
297
320
305
306
319
318
307
308
317
316
309
310
315
314
311
312
313
336
321
322
335
334
323
324
333
332
325
326
331
330
327
328
329
352
337
338
351
350
339
340
349
348
341
342
347
346
343
344
345
368
353
354
367
366
355
356
365
364
357
358
363
362
359
360
361
376
369
370
375
374
371
372
373