Documents pour traduire le 8ème chant du மணிமேகலை [maṇimēkalai] (Version tamoule)

[Arles 2023: 40es Assises de la traduction littéraire : “Quelle épopée !” (10-12 novembre 2023)]

Le texte (en écriture tamoule) du Chant 8 du Maṇimēkalai

மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை
  1. ஈங்கிவ ளின்னண மாக இருங்கடல்
  2. வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடைத்
  3. தத்துநீ ரடைகரைச் சங்குழு தொடுப்பின்
  4. முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு
  5. விரைமர முருட்டுந் திரையுலாப் பரப்பின்
  6. ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்
  7. ஆம்பலுங் குவளையும தாம்புணர்ந்து மயங்கி
  8. வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி
  9. முடக்காற் புன்னையும் மடற்பூந் தாழையும்
  10. வெயில்வர வொழித்த பயில்பூம் பந்தர்
  11. அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித்
  12. துஞ்சுதுயி லெழூஉம் அஞ்சி லோதி

  13. காதற் சுற்றம் மறந்து கடைகொள
  14. வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று
  15. பண்டறி கிளையொடு பதியுங் காணாள்
  16. கண்டறி யாதன கண்ணிற் காணா
  17. நீல மாக்கடல் நெட்டிடை யன்றியுங்
  18. காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப
  19. உவவன மருங்கினில் ஓரிடங் கொல்லிது
  20. சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை
  21. நனவோ கனவோ என்பதை அறியேன்
  22. மனநடுக் குறூஉம் மாற்றந் தாராய்
  23. வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்
  24. எல்வளை வாராய் விட்டகன் றனையோ
  25. விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
  26. வஞ்சஞ் செய்தனள் கொல்லோ அறியேன்
  27. ஒருதனி யஞ்சுவென் திருவே வாவெனத்

  28. திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
  29. எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
  30. அன்னச் சேவல் அரச னாகப்
  31. பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டிப்
  32. பாசறை மன்னர் பாடி போல
  33. வீசுநீர்ப் பரப்பின் எதிரெதி ரிருக்கும்
  34. துறையுந் துறைசூழ் நெடுமணற் குன்றமும்
  35. யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள்

  36. குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழ
  37. அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
  38. வீழ்துய ரெய்திய விழுமக் கிளவியில்
  39. தாழ்துய ருறுவோள் தந்தையை உள்ளி
  40. எம்மிதிற் படுத்தும் வெவ்வினை யுருப்பக்
  41. கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து
  42. வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து
  43. ஐயா வோவென் றழுவோள் முன்னர்

  44. விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
  45. உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
  46. திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று
  47. விதிமா ணாடியின் வட்டங் குயின்று
  48. பதும சதுர மீமிசை விளங்கி
  49. அறவோற் கமைந்த ஆசன மென்றே
  50. நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது
  51. பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது
  52. தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை
  53. பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம்

  54. கீழ்நில மருங்கின் நாகநா டாளும்
  55. இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி
  56. எமதீ தென்றே எடுக்க லாற்றார்
  57. தமபெரும் பற்று நீங்கலும் நீங்கார்
  58. செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத்
  59. தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள்
  60. இருஞ்செரு ஒழிமின் எமதீதென்றே
  61. பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும்
  62. பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும்
  63. தரும பீடிகை தோன்றிய தாங்கென்